Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ-7

அத்தியாயம் – 7

 

அன்று

 

அன்று வேலை முடிந்து சோர்வாக அம்மா கொடுக்கும் சூடான சுண்ட  காய்ச்சிய பாலுக்கு ஆசையாக வந்த நிரஞ்சனிக்கு மிக பெரிய குண்டு காத்திருந்தது.

 

வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் பார்த்தது அவளுடைய பெரியப்பா மகன் சுந்தரை தான். அவளுடைய வீட்டில்(தந்தை வழியில்) ஆண் வாரிசு சுந்தர் தான். அவன் தான் அந்த குடும்பத்திற்கு நல்லது கெட்டது செய்பவன் என்று தாமரையும் அரசுவும் அவனை தலையில் வைத்து கொண்டாடுவார்கள். அவனும் பாசமாக இருப்பான்.

 

அவனுடைய பெற்றோருக்கு அவன் ஒரே மகன். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அவனுடைய மனைவி நிர்மலா பார்க்க கொஞ்சம் சுமாராகத்தான் இருப்பாள். அவளுக்கு நீரஜாவின் மீதும் நிரஞ்சனியின் மீதும் பயங்கர பொறாமை. ‘ என்னத்த தான் திங்கிதுகளோ… இப்படி வெள்ளக்காரிச்சி மாதிரி இருக்காளுவோ…’ என்று கருவுவாள்.

 

உள்ளே நுழைந்த நிரஞ்சனி அவளுடைய அண்ணனை பார்த்ததும்..

 

“ஹேய்… சுந்தரண்ணே…! எப்ப வந்த…?” என்று சிரித்த முகமாக கேட்டுக் கொண்டே வந்தாள்.

 

அவன் பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.

 

அவளுக்கு வித்தியாசமாக இருந்தது. அம்மா அழுது வீங்கிய முகத்துடன் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். அண்ணி சமயலறையில் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள். அப்பா எப்பவும் போல திண்ணையில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தார்.

 

‘ஏதோ சண்டை போல… அப்பா குடிச்சுட்டு அம்மாவ அடிச்சிருப்பாரோ…! அதுதான் அண்ணன் வந்திருக்கோ…?’ என்று யோசித்துக் கொண்டே அந்த வீட்டில் இருந்த மற்றொரு அறையில் தன்னுடைய பையை வைத்துவிட்டு நைட்டியை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.

 

‘யாரிடம் பால் கேட்பது…? அம்மா அழுது கொண்டிருக்கிறாள். பசிக்கிறது.. நாமே போய் எடுத்துக்கலாம்’ என்று சமையலறைக்குள் நுழைந்தாள். அண்ணி நிர்மலாவை பார்த்து புன்னகைத்தாள். அவளும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

“அண்ணி கொஞ்சம் பால்…” என்று அவள் ஆரம்பிக்கும் முன்

 

“ஆமா… இப்படி பாலும் தேனும் ஊட்டி ஊட்டி வளர்த்துத்தான்… அக்காவும் தங்கச்சியும் எங்க முகத்துல கரிய பூசுறீங்க…. பாலாம்… பாலு…” என்று முகத்திலடித்த மாதிரி பேசிவிட்டு ஒரு டம்ளர் டீயை எடுத்துச் சென்று தாமரையிடம் கொடுத்து,

 

“குடிங்கத்த… இவளுகள நீங்க வைக்கிற எடத்துல வச்சிருதா இப்படி நம்பள மோசம் பண்ணியிருப்பாளுவளா…?” என்று  சொன்னாள்.

 

நிரஞ்சனிக்கு எதுவும் புரியவில்லை. அவள் நீரஜாவையும் சேர்த்து பேசியதால், ‘நீரஜா தான் ஏதோ தவறு செய்துவிட்டால் போல…’    என்று நினைத்து, அவளுடைய அம்மாவிற்கு அருகில் போய் அமர்ந்து “என்னாம்மா…?” என்று தன்னுடைய பசியை மறந்துவிட்டு ஆறுதலாக கேட்டாள்.

 

தாமரை என்ன நினைத்தாரோ, மகளின் கன்னத்தில் பட்டென அறைந்துவிட்டாள்.

 

“என்னடி என்னம்மா… நொன்னம்மா…. யாருடி அவ(ன்)…?” என்று வார்த்தைகளை விஷமாக கக்கினார்.

 

கன்னத்தை பிடித்துக் கொண்டு அமர்ந்த நிரஞ்சனிக்கு உலகமே சுற்றுவது  போல் இருந்தது. காலையிலிருந்து மருத்துவமனையில் உக்கார நேரமில்லாமல் உழைத்துவிட்டு வீட்டிற்கு வந்தவளுக்கு வீட்டிலும் ஓய்வெடுக்க முடியாமல் ஒரு பாறையை தலை மேல் தூக்கி போட்டால் அவள் என்ன செய்வாள்.

 

“என்னடி முட்ட கண்ண வச்சுகிட்டு பாக்குற…? ஊர் உலகத்துலயும் பொண்ணுங்க படிச்சிட்டு வேலைக்கு தான் போறாங்க… ஆனா நீங்க என்னோட மானத்த வாங்குறதுக்குன்னே எனக்கு வந்து பொறந்து தொலச்சிங்கலாடி…?”

 

“எவன்டி அவன்…? பெத்தவங்க இல்லாம கல்யாணம் செஞ்சுக்கிற அளவுக்கு துணிஞ்சவ இன்னும் எதுக்குடி இங்க வர்ற…? அவனோடவே ஓடிட வேண்டியது தானே…?” என்று கத்தினாள்.

 

‘என்னது கல்யாணமா…? யாரோட ஓடனும்…? என்ன ஆச்சு அம்மாவுக்கு…?’ என்று எதுவும் புரியாமல் நிரஞ்சனி விழித்தாள்.

 

“ஐயோ… அருமை அருமையா வளத்ததுக்கு எந்தலையில கல்ல போட்டுட்டாளே… பாவி சிறுக்கி… நாசமா போறவளே… நீ வாழவேமாட்டடி…  என்னோட வயித்தெரிச்சல் உன்ன வாழவிடாதுடி…” என்று தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள்.

 

நிரஞ்சனி நிலைகுலைந்து போனாள்… ‘இது என்ன அபாண்டம்… இங்க என்ன நடக்குது…’ எதுவும் புரியாமல் தவித்தாள். யாரிடம் கேட்பது… யாரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. எல்லோரும் இவள் வாயை திறந்தாள் கொன்றுவிடுபவரகள் போல் உஷ்ணமாக இருந்தார்கள்.

 

நிரஞ்சனி கண்களில் கண்ணீர் கொட்டியது…

 

“ஏய்… இப்போ எதுக்குடி அழுவுற… ரோட்டல போனா ஒருத்தன் பாக்கியில்லாம கேட்கிறான்டி… யார்டி அந்த போலீஸ்காரன்… போலீஸ்காரன்னா விட்டுடுவோமா… அவனுக்கு இன்னும் பத்தே    நாள்ல கருமாதிடி… அப்புறம் உனக்கு மொட்டையடிச்சி வெள்ளே சீல கொடுத்து மூலையில உக்கார வைக்க வேண்டியதுதான் பாக்கி..” என்று உறுமினான் சுந்தர்.

 

நிரஞ்சனிக்கு போலீஸ் என்றதும் பாதி விபரம் புரிந்துவிட்டது.

 

“அண்ணா… எனக்கு எதுவும் தெரியாதுண்ணா… அவன் ரொம்பநாளா எனக்கு தொல்லை கொடுத்துக்கிட்டு இருந்தான். இப்போ என்னவோ எம்மேல பழியை தூக்கி போட்டிருக்கான்.” என்று அழுதாள்.

 

“சீ… உன்னோட நடிப்பெல்லாம் வேற யார்கிட்டையாவது வச்சுக்க… எங்கிட்ட வேண்டாம்…” என்றான் சுந்தர் அருவருப்பாக முகத்தை சுழித்துக் கொண்டு.

 

நிரஞ்சனிக்கு இந்த அவமானத்தில் உயிரே போய் விடும் போல இருந்தது. ஆனால் ‘இந்த நேரத்தில் இறந்துவிட்டால் கெட்ட பெயரோடு தான் சாக வேண்டும். அது கூடாது..’ என்று முடிவு செய்து நடந்ததை சுந்தருக்கு விளக்கினாள்.

 

ஆனால் அவன் இவளை ஒரு துளி கூட நம்பவில்லை. ஒரு விஷ ஜந்துவை பார்ப்பது போல் பார்த்துவிட்டு

 

“சின்னம்மா… நாளையிலிருந்து இவ வேலைக்கு போக வேண்டாம்…” என்று சொல்லிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு சென்றான்.

 

இன்று

 

அன்று இரவு நிரஞ்சனி மொட்டை மாடிக்கு சென்று தனிமையில் நிலவை வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

‘கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னால் தான் நீரஜவுக்கு அவனோடு சேர்ந்து வாழ்க்கை’ என்று இராஜசேகர் சொல்லிவிட்டு சென்றுவிட்டான். அது நிரஞ்சனியை கலங்கடித்துவிட்டது.

 

யாரும் இல்லாத கைவிடப்பட்ட குழந்தை போல் அவள் நின்ற தோற்றம் அவளை தேடி அங்கு வந்த சிவரஞ்சனியை என்னவோ செய்தது.

 

“ரஞ்சி… ஏண்டி இப்படி தனியா நிக்குற…? ” சிவரஞ்சனி கரிசனமாக கேட்டாள்.

 

சிவரஞ்சனியின் குரல் கேட்டு திரும்பிப்பார்த்த நிரஞ்சனியின் கண்கள் கலங்கியிருந்தன.

 

“நான் தனிதானே ரஞ்சி… அதுதான் தனியா நிக்குறேன்…”

 

“என்ன ரஞ்சி… எல்லாம் சரியாயிடும் டீ… கவலைப்படாத… சாப்பிட வா…”

 

“எல்லாரும் சாப்பிட்டாங்களா…?”

 

“ஆச்சு… நீயும் நானும் தான் பாக்கி… வா… அம்மா உன்ன தேடுறாங்க…”

 

நிரஞ்சனி எதற்குமே பிடிவாதம் பிடிப்பதில்லை. சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டாள். அவளுடைய குறி ஒன்றில் மட்டும் தான் இருந்தது. ‘எப்படியாவது புகழை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்’ என்பதில் மட்டும் கவனமாக இருந்தாள். சிவரஞ்சனி சாப்பிட அழைத்ததும் அவளுடன் சாப்பிட சென்றாள். ஆனால் அவள் சாப்பிட்டாளா அல்லது சாப்பிடுவது போல் கொறித்துவிட்டு வந்தாளா என்பது யாருக்கும் தெரியாது.

 

சிறிது நேரத்தில் மீண்டும் மாடிக்கு சென்றுவிட்டாள். அவளுக்கு யாரையும் பார்க்க முடியவில்லை. அது வெறுப்பா… பயமா… என்னவென்று அவளுக்கே புரியவில்லை.

 

“என்ன ரஞ்சி மாடிக்கே வந்துடற… கீழ டிவி பார்த்தா கொஞ்சம் மனசு மாற்றமா இருக்குமே…” சிவரஞ்சனி நிரஞ்சனியிடம் கேட்டாள்.

 

“என்னால முடியல ரஞ்சி… மூச்சு முட்டி செத்து போய்டுவேனோன்னு தோணுது… நா என்ன ரஞ்சி தப்பு செஞ்சேன். எதுக்கு எனக்கு மட்டும் இப்படி நடக்குது….?”

 

“நீ எதுக்கு ரஞ்சி இந்த காதல் கன்றாவியெல்லாம் பண்ணி தொலைச்ச…   அதெல்லாம் நம்ப குடும்பத்துக்கு ஒத்துவருமான்னு யோசிச்சியா…?”

 

“நீருவும் காதல் கல்யாணம் தானே பண்ணிகிட்டா…?” நிரஞ்சனி கேட்டாள்.

 

“ஆனா அவர் நம்ப ஜாதியாச்சே…” சிவரஞ்சனி குரல் எழும்பாமல் சொன்னாள்

 

“ப்ச்… நீயும் ஜாதிய பெருசா பாக்குறியா ரஞ்சி…”

 

“அதெல்லாம் இல்லடி… உனக்கு ஒன்னு சொல்லவா… நீ உன்னோட காதல்ல ஜெயிக்கணும் என்று தான் நானும் நினைக்கிறேன்… ஆனா அது முடியாது. நம்ப வீட்ல அதை நடக்க விட மாட்டாங்க…”

 

“யாரு ரஞ்சி…? இதுல பிடிவாதமா இருக்கிறது யாருன்னு சொல்லு…”

 

“இராஜசேகர் மாமா…”

 

“கரெக்ட்… அவர் ஏண்டி இப்படி இருக்காரு… அவரும் காதலிச்சவர் தானே… அவருக்கு என்னோட உணர்வுகள ஏண்டி புரிஞ்சுக்க முடியல…? ஒருவேளை அவர் காதலிச்ச பொண்ணு வேற ஜாதியா இருந்திருந்தால் அவரோட காதல் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறியா…?”

 

“தெரியலடி… ஆனா நீ அவரோட நிலையிலிருந்து கொஞ்சம் யோசிச்சு பார்… நம்ப ஊர் ஆளுங்க சாதாரணமானவங்க இல்ல… அவர எல்லாரும் கிண்டலா பாக்குறதா சொல்றாரு… அது உண்மைதானே.. அதனால தானே உங்க சுந்தர் அண்ணன் கூட பெரியப்பா பெரியம்மாவோட பேசுறது இல்ல….”

 

“அவனுக்கு அவனோட மனைவி சொல்றதுதான் வேதம்டி… அவன் பிரச்சனையே வேண்டாம் என்று ஒதுங்கினதும் நல்லதுதான். இங்க ஒரு ஆளோட சாமியாட்டத்தையே சமாளிக்க முடியல… இதுல அவனும் சேர்ந்தா என் கதி என்ன ஆகியிருக்குமோ…”

 

“நாளைக்கு இராஜசேகர் மாமா வந்து கேட்கும் போது என்ன சொல்ல போற ரஞ்சி… ”

 

“என்னால புகழை தவிர வேறு யாரையுமே நினைக்கக் கூட முடியாது ரஞ்சி…” நிரஞ்சனி தெளிவாக சொன்னாள்.

 

 




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pavithra Murali says:

    Super, but endha caste problem eppo mudiyum?

You cannot copy content of this page