காஃபி வித் கிளாசிக் கதாசிரியர் – ரமணிசந்திரன் live interview
3949
2
ரமணிசந்திரன் – காதல், குடும்ப கதைகள் என்றாலே இந்த பெயரை ஒதுக்கி நம்மால் யோசிக்கக் கூட முடியாது. தமிழ் வாசகர்கள் மத்தியில் அவ்வளவு பிரபலமான இந்த பெயருக்கு சொந்தக்காரர் ஆணா பெண்ணா என்பது கூட பலருக்கும் தெரியாது. எந்தக் கட்டத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்பாத பெண்மணி இன்று சகாப்தத்தின் மூலம் வாசகர்களோடு உரையாடுகிறார். அவரிடம் நம் வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே…
வணக்கம் மேடம், நீங்கள் எழுதியதில் உங்களுக்கு பிடித்த கதை எது?
வணக்கம்மா, எல்லா கதைகளையுமே பிடிச்சு தான் எழுதறேன். ஒரு கதையை மட்டும் குறிப்பிட்டு சொல்றது கஷ்டம்.
உங்கள் கதாநாயகிகள் உடற்பயிற்சி, நடைபயிற்சியை எல்லாம் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். நீங்களும் அப்படித்தானா?
ஆரம்பத்துல அதோட முக்கியத்துவம் தெரியில. ஆனா இப்பல்லாம் யோகா, மெடிடேஷன் உடற்பயிற்சி எதையும் விடறதில்ல. முடிஞ்ச அளவு உடம்பை கவனிச்சுக்கணும் இல்லையா?
பாரதியாரின் பாடல் வரிகளே பெரும்பாலும் உங்கள் கதைகளின் தலைப்பாக உள்ளதன் காரணம் என்ன?
பாரதியார் கவிதைகள் ரொம்ப பிடிக்கும். அந்த தலைப்புகள் எல்லாமே ரொம்ப மெலோடியஸா இருக்கு.
நீங்கள் மிகவும் சிரமப்பட்டு எழுதிய கதை எது? அதை எந்த மாதிரி சூழ்நிலையில் எழுதினீர்கள் என்பது நினைவில் உள்ளாதா?
ஒவ்வொரு கதையுமே ரொம்ப சிரத்தை எடுத்து எழுதறது தான். ஒரு குழந்தையை பெற்றெடுப்பது போல. குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாதும்மா.
‘லிவிங் டு கெதர் ஸ்டைல்’ இன்று நமது சமுதாயத்தில் பரவி வருகிறது. அதை எதிர்த்து பலர் குரல்கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் என்பதுகளிலேயே ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்வது போல் எழுதியிருக்கிறீர்கள். அந்த தைரியம் எப்படி வந்தது?
நான் கேள்விப்பட்ட விஷயத்தை தான் எழுதினேன். உண்மையை எழுதறதுக்கு தனியா தைரியம் ஒன்னும் தேவையில்ல.
ஒரு எழுத்தாளர் தன்னுடைய சொந்த பெயர் பாதிக்கப்படும் என்பதற்காக கதையில் எழுத வேண்டிய சம்பவத்தை அல்லது கருத்தை சமரசம் செய்வது(sacrifice) சரியா?
சமரசம் செய்யக் கூடாது. உண்மையை எழுதணும். ஆனா சில சமயத்துல உண்மையை எழுதாமலும் இருக்கணும். அதாவது ஒருத்தர் தப்பு பண்ணராங்கன்னா அவங்களை பற்றி எழுதி அசிங்கப்படுத்தக் கூடாது. மக்களுக்கும் தப்பான விஷயங்களை சொல்லிடக் கூடாது. சரியான விஷயங்களை மட்டுமே சொல்லணும்.
ரமணிசந்திரன் ஒரு ஆண் எழுத்தாளர் என்கிற தவறான எண்ணம் இன்றும் சிலருக்கு உண்டு. அப்படி நீங்கள் ஆண் என்று நினைத்து உங்களை தேடி வந்த ரசிகைகள் யாரேனும் உள்ளார்களா?
என்னுடைய பெயரையும் என் கணவர் பெயரையும் இணைத்து ரமணிசந்திரன் என்கிற பெயர்ல எழுதினேன். என் பெயர் ரமணி. என் கணவர் பெயர் பாலச்சந்திரன். என்னை தேடி யாரும் வர்றதுக்கான வாய்ப்பு இல்ல. ஏன்னா என்னுடைய முகவரி யாருக்கும் தெரியாது.
எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் நேர்மை தவறாமை என்கிற குணம் உங்கள் கதாநாயகிகளிடம் இருக்கும். உங்கள் கதையைப் படித்து அந்த குணம் தனக்கும் கிடைத்ததாக யாரேனும் கூறியிருக்கிறார்களா?
என்னுடைய தங்கை என் கதைகள்ல வர்ற நாயகிகளோடு கொஞ்சம் ஒத்துப் போவாங்க.
உங்கள் கதாநாயகன் பெண்ணை அடிக்க மாட்டார். ஆனால் அவளை தண்டிக்க ஆண் பலத்தை பிரயோகிப்பார். அது எந்த விதத்தில் சரி?
அந்த தண்டனைக்கு பெண்களும் பதில் கொடுக்க இயலும்.
உங்களுடைய ஏதோ ஒரு கதையில் உங்களுடைய நாயகி மிகவும் கஷ்ட்டப்படுவது போல் எழுதியிருந்ததாகவும், அந்த கதையைப் படித்த உங்கள் மகள் இது போல் இனி நீங்கள் எழுதக் கூடாது என்று உங்களிடம் ரிக்வஸ்ட் பண்ணியதாகவும் நீங்கள் ஒரு பேட்டியில் கூறியிருந்தீர்கள். அன்றிலிருந்தே அது எந்த கதை என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ப்ளீஸ் மேடம்… அந்த கதை பேர் என்ன?
வெண்மையில் எத்தனை நிறங்கள்.
எத்தனையோ லட்சகணக்கான வாசகிகளுக்கு உங்களுடைய கதைகள் ஊக்க மருந்தாகவும் சில நேரங்களில் கவலைகளை மறக்கும் போதை மருந்தாகவும் உள்ளதை நீங்கள் அறிவீர்களா?
போதை மருந்தா! அப்படி இருக்கக் கூடாதே! அளவோட படிங்க. ஒவ்வொன்னுக்குமே கால நேரம் வரையறுக்கப் பட்டிருக்கணும்.
உங்களுடைய பழைய கதைகள் அளவுக்கு இப்போ வர்ற கதைகள் இல்லையே மேம். காரணம் என்ன?
வயசுதான் காரணம். சில விஷயங்களை இந்த வயசுல எழுத முடியில. சரியா சொல்லனும்னா எழுதக் கூடாதுன்னு வச்சிருக்கேன்.
லட்சகணக்கான ரசிகைகளின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் உங்களுக்கு உரிய நேரத்தில் உரிய அங்கீகாரம் கிடைத்ததா?
இல்லை. தடைகள் எல்லா இடத்துளையுமே இருக்கும். அதை பற்றி கவலைப் படக் கூடாது. நம்ம வேலையை செய்துட்டே இருக்கணும். Growing pain இருக்கத்தானே செய்யும். அதை தவிற்க முடியாது.
உங்கள் கதைகளில் வரும் கற்பனை சம்பவங்களை, நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் நடக்க சாத்தியமில்லாத சம்பவங்களை எப்படி உண்மை சம்பவம் போலவே சித்தரிக்கிறீர்கள்?
கற்பனைதான் காரணம். கதையில வர்ற சம்பவங்களை தொடர்ந்து கற்பனை பண்ணிட்டு இருந்தோம்னா உண்மை சம்பவம் மாதிரியே வெளிப்படும்.
உங்க கதைகள்ல வர்ற ஹீரோ எப்பவுமே ரொம்ப பணக்காரராவும் அழகானவராவும் இருக்காரே… அதை பற்றி சொல்லுங்க மேம்.
பணக்காரனா இருந்துட்டா எல்லாத்துக்குமே வசதி. பணத்துக்கு கஷ்ட்டப்பட்டு காதலை கவனிக்காம விட தேவையில்ல. என்னன்னா… வெளி நாடுகளையெல்லாம் கிளைமெட் சில்லுன்னு இருக்கும். டென்ஷன் கம்மி. ஆனா இங்க ஹாட் கிளைமேட். வேர்க்க விருவிருக்க வந்து ஒருத்தன் ஐ லவ் யு னு சொல்லிட்டு இருக்க முடியாது. சொன்னாலும் உடனே லவ் வந்துடாது. அதுக்கு ஒரு சூழ்நிலை வேணும். அந்த சூழ்நிலைக்கு பணக்காரனா இருந்துட்டா வசதி. அதே மாதிரி ஹீரோன்னா ஹான்சமா தான் இருக்கணும். அப்படி இருந்தாதான் ஹீரோ இல்லையா? – குறும்புப் புன்னகையுடன் கூறுகிறார்.
உங்க கதைகள் காலத்தை கடந்து நிக்குது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறை பெண்கள் உங்கள் கதைகளை ரொம்பவே விரும்பி படிக்கிறாங்க… என்ன மந்திரத்துக்குள்ள அவங்களை கட்டி வச்சிருக்கீங்க மேம்?
காலத்துக்கு ஏத்த மாதிரி என்னை நான் மாத்திக்கிறேன். அதோடு, பணம், தங்க நகை விலை போன்ற காலத்தால் வரையறுக்கக் கூடிய விஷயங்களை என்னுடைய பழைய கதைகள் சிலவற்றில் எழுதியிருக்கேன். அதை இப்போ படிக்கும் பொழுது சிரிப்பு வருது. அதனால இப்போல்லாம் அந்த மாதிரி விஷயங்களை கவனமா தவிர்த்து விடுகிறேன்.
சுதந்திர போராட்ட காலத்தை களமா வச்சு நீங்க ஒரு கதை எழுதிக்கிட்டு இருக்கறதா கேள்விப்பட்டோம். அந்த கதை எந்த அளவுல இருக்கு மேம்?
பாதி முடிஞ்சிருக்கு. இப்போ நிறுத்தி வச்சிருக்கேன். அதனால எப்போ முடியும்னு சொல்ல முடியாது.
உங்க கதைகளுக்கு வந்த விமர்சனங்கள்ல உங்களை பாதிச்ச விமர்சனம் ஏதாவது இருந்தா சொல்லுங்க மேம்… நேர்மறை எதிர்மறை ரெண்டுமே…
முதல் கதையிலேயே நல்ல வரவேற்பு இருந்தது. ராணி வார இதழ்ல வந்தது. இதுவரைக்கும் எதிர்மறை கருத்துக்களே வந்தது இல்ல… நாயகியும் நாயகனும் பிரிஞ்சு போற மாதிரி எதாவது எழுதினா விமர்சனங்கள் வரும். மத்தபடி பெருசா எதுவும் எதிர்மறை கருத்துக்கள் வந்ததில்ல. வாசகர்களோட கடிதங்கள் வந்திருக்கு… ஆனா இப்போ என்னால ஞபகப்படுத்தி சொல்ல முடியில.
எந்த மாதிரி விமர்சனமா இருந்தாலும் எனக்கு மிகவும் அரிதாகத்தான் கிடைக்கும். ஒரே ஒரு முறை ஆர்மி பற்றி எழுதும் போது ஆர்மில வேலை செய்றவங்களோட லீவ் தப்பா கணக்கு போட்டு எழுதிட்டேன். அதை உடனே ஒருத்தர் எனக்கு கடிதம் எழுதி சுட்டிக்காட்டினாங்க. அது மாதிரி ஒண்ணு ரெண்டு நடந்திருக்கு. எல்லா விதமான விமர்சனங்களையும் ஒரே மாதிரிதான் எடுத்துக்கணும். நான் அப்படித்தான் எடுத்துக்குவேன்.
நீங்க எழுத வேண்டும் என்று நினைத்து முடியாம போன கதைகள் ஏதாவது இருக்கா மேம்?
வேளாண்மை பற்றி எழுத நினச்சேன். ஆனா டீடைல்ஸ் கிடைக்காம எழுத முடியில. அப்புறம் அந்த சுதந்திர போராட்ட களத்துல எழுதிட்டு இருக்க கதையும் முடிக்க முடியாம இருக்கு.
உண்மை சம்பவங்களுக்கு உங்க கதைகள்ல இடம் இருந்திருக்கா மேம்?
நிஜ வாழ்க்கையில நடக்கற உண்மை சம்பவத்தை எழுதறதே இல்லை. காரணம் ஒரு சமயத்துல சண்டை போட்டுக்கரவங்க திரும்ப சேர்ந்துடலாம். அவங்க சேர்ந்த பிறகு முன்பு நடந்த விஷயங்களை நியாபகப் படுத்தற மாதிரி என்னுடைய கதை இருக்கக் கூடாதுன்னு நினைப்பேன்.
எழுத்தாளருக்கும் வாசகர்களுக்குமான இடைவெளி எவ்வளவு முக்கியமானது?
அது அந்தந்த எழுத்தாளரை பொருத்தது தான். என்னை பொருத்தவரை எனக்கும் வாசகர்களுக்குமான இடைவெளி எப்பவுமே இருந்துட்டுதான் இருக்கு. எனக்கு அந்த இடைவெளி தேவைப்படுது.. ஏன்னா வாசகர்களோடு ரொம்ப நெருங்கும் போது அவங்களுடைய பிரச்சனைகளை சொல்லி அதற்கான தீர்வை எழுத சொல்லி என்கிட்ட கேட்க ஆரம்பிச்சிடறாங்க. அது எல்லா நேரத்துலயும் முடியாது இல்லையா?
வளரும் எழுத்தாளர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?
தவறான விஷயங்களை எழுதாதிங்க. உண்மையை எழுதணும். white lies are acceptable. – புன்னகையுடன் கூறி முடிக்கிறார்.
வாசகர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகவும் நிதானமாகவும் புன்னகை மாறா முகத்தோடு பதிலளித்த திருமதி இரமணிச்சந்திரன் அம்மா அவர்களுக்கு சகாப்த்தம் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றி.
– இந்திராசெல்வம் மற்றும் கமலக்கண்ணன்.
2 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Aneesh says:
Admin avanga address kudungalae kaipada oru kaditham podanum. Illana mail id ya Chu kudungalae please
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
தளசீரமைப்பு பணியில் நடந்த குளறுபடியால் எந்த கேள்வி எந்த வாசகரால் கேட்கப்பட்டது என்பதை சரியாக தொகுக்க முடியவில்லை. எனவே வாசகர்களின் பெயர்களை குறிப்பிட முடியவில்லை. மன்னிக்கவும்…