மனதில் தீ-8
3923
1
அத்தியாயம் – 8
அன்று
அன்றோடு நிரஞ்சனியை வீட்டிற்குள் அடைந்து ஒருவாரம் ஆகிவிட்டது. பெற்றவர்களே பிள்ளையை நம்பாத போது மற்றவர்களுக்கு என்ன வந்தது. எல்லோரும் துக்கம் விசாரிப்பது போல் வீட்டிற்குவந்து ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று இலவசமாக ஆலோசனையையும் வழங்கிவிட்டு போனார்கள்.
நிரஞ்சனியோடு யாரும் பேசுவதில்லை. அவள் ‘உண்டாளா…?, உறங்கினாளா…?’ என்று யாரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அவள் தனிமைப் படுத்தப்பட்டாள்.
இவ்வளவு நாளும் தங்கத் தாம்புலத்தில் வைத்து தாங்கிய தாய் ஒரே நாளில் போட்டு உடைத்துவிட்டாள். அவள் என்ன செய்வாள் பாவம்… அவளால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்க்கிற பார்வையும், பேசுகிற ஜாடையையும் சகிக்க முடியவில்லை.
தாமரைக்கு அறிவுப்பூர்வமாக யோசித்து என்ன நடந்திருக்கும் என்று ஊகித்து ஒரு முடிவெடுக்கத் தெரியாமல், உணர்வுகள் அடித்துச் செல்லும் வழியில் சென்று மகளையும் துன்புறுத்தி தன்னையும் துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.
அரசு எப்போதும் போல இப்போதும் தன்னுடைய கவலையை மறக்க போதையை தஞ்சம் அடைந்து மற்ற விஷயங்களை யோசிக்க மறந்துவிட்டார்.
அந்த நேரத்தில் எல்லோரையும் போல இராஜசேகரும் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு, நிரஞ்சனியின் பதிவு திருமண விஷயம் உண்மையா அல்லது வதந்தியா என்பதை பற்றி விசாரிக்க மாமனார் வீட்டிற்கு வந்தான். அவன் வெளியில் மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த மாமனார் அரசுவை பார்த்துவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு நின்றுவிட்டான்.
நீரஜா நிரஞ்சனியை தேடி வீட்டிற்குள் வந்தாள். நிரஞ்சனி நீரஜாவை பார்த்துவிட்டு கட்டிப்பிடுத்துக் கொண்டு அழுதாள். தனக்கென்று… தன்னை புரிந்து கொள்ள இவளால் முடியும் என்று நினைத்து அனைத்தையும் மறைக்காமல் சொன்னாள்.
நீரஜா நிரஞ்சனியை முழுவதுமாக நம்பிவிடவில்லை. ஆனால் அவள் சொல்வதிலும் உண்மை இருக்கலாம் என்று நம்பினாள். அவளுடைய கணவனிடம் விஷயத்தை சொன்னாள். பிரசன்னாவை பற்றி முழுவதுமாக சொல்லவில்லை.
‘இவன் ஒரு முரடன்… இவனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால்… நிரஞ்சனி மீது தவறு இல்லை என்று தெரியும் போது பிரசன்னாவின் உயிர் இராஜசேகரின் கையால் போய்விடும். அப்புறம் இவன் கம்பிக்கு பின்னாடி போய்விடுவான்…’ என்று நினைத்து அவனிடம் எதையெதை சொல்லலாமோ அதை மட்டும் சொன்னாள். இராஜசேகரும் நிரஞ்சனியின் பேச்சில் உண்மை இருக்கலாம் என்று நினைத்தான்.
அதனால் நிரஞ்சனி மீது தவறு இருக்காது என்று நம்பிக்கை வைத்து, ‘அவர்களுக்கு ரிஜிஸ்டர் கல்யாணம் எங்கு நடந்தது’ என்று அனைவரும் பேசிக் கொள்கிறார்களோ அந்த ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று விசாரித்தான். அப்படி எந்த திருமணமும் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
அவன் விஷயத்தை அனைவருக்கும் சொன்னான். ஆனால் நிரஞ்சனி எதிர்ப்பார்த்த அளவு யாரும் ‘தாங்கள் அவசரப்பட்டு நிரஞ்சனியை தவறாக நினைத்து பேசிவிட்டோம்’ என்று வருத்தப்படவில்லை. மாறாக அனைவரும் “இவ மேல கொஞ்சம் கூட தப்பே இல்லாமல் எப்படி இப்படி ஒரு புரளி கிளம்பும்… எல்லா பொண்ணுங்க மேலையும் இப்படியா பழி சொல்லிக்கிட்டு திரியிறாங்க… இவகிட்டேயும் ஏதோ தப்பு இருக்கு…” என்று தான் பேசினார்கள்.
இந்த பழி சொற்களை நிரஞ்சனியால் தாங்க முடியவில்லை. அவளால் இந்த நிலையில் வீட்டில் அடைந்து இருக்க முடியவில்லை. அவளுக்கு மூச்சு முட்டியது. எல்லோரும் அவளை குறுகுறுப்பாக பார்ப்பது போலவே இருந்தது. அதனால் இராஜசேகரிடம் கேட்டாள்…
“மாமா… நா வேலைக்கு போறேன் மாமா.. இப்போதான் உங்களுக்கு என் மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்சிடுச்சுல்ல… நீங்க என்னை அனுப்பி வைங்க மாமா…” என்று கேட்டுக் கொண்டாள்.
“ஒம்மேல தப்பு இல்ல ரஞ்சி… ஆனா ஒரு முறை உன்னோட பேரு கெட்டுப் போச்சு. திரும்ப ஏதாவது தப்பு நடந்தா அசிங்கமா போயிடும்….” என்று தயங்கினான்.
“அப்படியெல்லாம் ஆகாது மாமா… நான் எச்சரிக்கையா இருப்பேன். மாமா… ப்ளீஸ் மாமா…” என்று கெஞ்சினாள்.
“சரி நான் உன்னை வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யிறேன். ஆனா நீ என்னோட பேர காப்பாத்துற மாதிரி நடந்துக்கணும். சரின்னா சொல்லு… செய்றேன்…” என்றான்.
“சரி மாமா… என்னால உங்களுக்கு எந்த கெட்ட பேரும் வராது மாமா…” என்று உறுதி கொடுத்தாள்.
அவனுக்கும் சரி என்று தோன்றியது. நிரஞ்சனிக்கு ஆதரவாக அனைவரிடமும் பேசினான். தாமரை, அரசு, சுந்தர் அனைவரிடமும் தனித்தனியாக பேசினான்.
அனைவரும் கேட்ட ஒரே கேள்வி. “பின்னாடி ஏதாவது தப்பு நடந்தா நீங்கதான் பொறுப்பு… இதுக்கு சம்மதமா…?” என்பதுதான்.
அனைவருக்கும் அவன் பத்திரத்தில் எழுதிக் கொடுக்காத குறையாக உத்தரவாதம் கொடுத்து நிரஞ்சனியை மறுபடி வேலைக்கு அனுப்பினான்.
இன்று
நிரஞ்சனியும் சிவரஞ்சனியும் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே மெல்ல நீரஜாவும் வந்தாள். காலடி சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
“என்ன ரஞ்சி சொல்றா…?” என்று சிவரஞ்சனியை பார்த்து நீரஜா கேட்டாள்.
“ஏன்… நீ கேட்க மாட்டியா…? நிரஞ்சனி நேரடியாக நீரஜாவிடம் பேசினாள்.
“நானே கேட்கிறேன்… சொல்லு… கல்யாணத்துக்கு சம்மதிக்கிறியா இல்லையா..?”
“இரண்டு வருஷத்துக்கு முன்னாடி உனக்கு அம்மா மாப்பிள்ளை பார்த்தப்ப நீ என்ன சொன்ன நீரு… அப்ப நீ ஒத்துகிட்டியா?”
நீரஜாவிற்கு பதில் சொல்ல முடியவில்லை. ஒரு நிமிடம் யோசித்து பிறகு பேசினாள்.
“அப்போ என்னால யாருக்கும் பிரச்சனை இல்ல ரஞ்சி… இப்போ உன்னோட விஷயம் அப்படியா…? நீ கல்யாணத்துக்கு சம்மதிக்காட்டி மாமா என்னை வெட்டிவிட்டுவாறு…”
“இப்படி பாதியிலேயே விட்டுட்டு போயிடுவேன்னு மிரட்டுறவருக்காக தான் அன்னைக்கு நீ ‘செத்து போய்டுவேன்னு’ அம்மா அப்பாவ மிரட்டி கல்யாணம் செஞ்சுகிட்ட நீரு… உங்களோட காதல் உண்மையா இருந்தா அவர் உன்ன எந்த காலத்திலேயும் கைவிட மாட்டார்… அப்படி இல்லைன்னா… இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் அவர் உன்னை விட்டுடுவார். அதனால இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்….” நிரஞ்சனி தெளிவாக சொன்னாள்.
“கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பேசுறியேடி… அவரோட காதல் உண்மையானது தான். ஆனா அவரோட வீம்பு பத்தி உனக்கு தெரியும் தானே… அப்புறம் ஏண்டி பிடிவாதம் பிடிக்கிற….?”
“அவரோட குணத்த பத்தி எனக்கு கவலை இல்ல… வேணுன்னா நா உனக்கு தங்கச்சியே இல்லைன்னு சொல்லி தலைமுழுகிட்டு போய் அவரோட சந்தோஷமா குடும்பம் நடத்து…”
“ச்சே… எங்களையெல்லாம் விட உனக்கு அந்த புகழேந்தி தான் முக்கியமா போயிட்டான்ல…. அப்படி என்னடி உன்ன காதல் பேய் புடிச்சு ஆட்டுது….?”
“ஏன்… உன்ன அந்த பேய் புடிச்சு ஆட்டும் போது உனக்கு தெரியலையா…?”
“இன்னிக்கு இவ்வளவு பேசுறியே… அன்னைக்கு நீ வேலைக்கு போக முடியாம வீட்டுக்குள்ள அடைஞ்சு கெடந்தப்ப, அவரு இல்லன்னா நீ வேலைக்கு போயிருக்க முடியுமா…? அப்படி அவரு உன்ன அனுப்புனதால தானே இன்னைக்கு இவரு வெளிய தல காட்ட முடியாம தவிக்கிறாரு. ஒவ்வொருத்தனும் என்னென்ன பேசுறான்னு உனக்கு தெரியுமா…? ”
“…………….” நிரஞ்சனிக்கு எதுவும் பேச முடியவில்லை.
“அன்னிக்கு நீ இவருகிட்ட வந்து நிக்கலைன்னா இன்னிக்கு என்னோட வாழ்க்கை இப்படி ஊஞ்சலாடாது… எல்லாம் என் தலையெழுத்து.” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
“நீரு… நான் சொல்றத கேளு நீரு… நா மாமாவுக்கு கொடுத்த வாக்க காப்பாத்தாதது தப்பு தான். இல்லன்னு சொல்லல. ஆனா என்னை அறியாமலே காதல் எனக்குள்ள வந்துடுச்சு… நான் என்ன செய்வேன். இப்பவும் உங்களையெல்லாம் மீறி நான் புகழை கல்யாணம் செஞ்சுக்க நினைக்கல. அவர அங்க விட்டுட்டு நான் இங்க உங்களோட தானே இருக்கேன். என்ன இப்படியே விட்டுட தானே சொல்றேன்….”
“நீரு… நீயும் காதலிச்சவதானே… என்னோட தவிப்பு உனக்கு புரியலையா… என்னால வேற யாரையும் நினைக்க கூட முடியாது நீரு… ப்ளீஸ்…டி புரிஞ்சுக்க…” என்று கெஞ்சினாள்.
“நீ இப்படியே பேசி பேசி ஒவ்வொரு காரியத்தையும் சாதிச்சுக்குவடி… உன்ன பத்தி எனக்கு தெரியாதா…? பாவி… என்னோட வாழ்க்கையை அழிச்சுட்டு நீ மட்டும் சந்தோசமா இருடீ…” என்று தங்கையிடம் வெறுப்பாக பேசிவிட்டு அழுது கொண்டே கீழே சென்றுவிட்டாள் நீரஜா…
நீரஜாவின் சுயநலமான பேச்சு நிரஞ்சனியை சோர்வடைய செய்தது. அவளுக்கு ஊக்கம் கிடைக்க புகழேந்தியை பற்றி சிவரஞ்சனியிடம் பேசினாள். அவனுடைய காதல்… பாசம்… பயம்… ஆர்வம்… எல்லாவற்றையும் சொன்னாள். அவள் மனதில் பழைய நினைவுகள் மேலோங்கி தற்போதுள்ள இக்கட்டான நிலைமையை கொஞ்சம் மறக்கச் செய்தது.
கீழே சென்ற நீரஜாவை தாமரையும் அல்லியும் விசாரித்தார்கள்.
“என்ன சொன்னா… ஒத்துகிட்டாளா…?”
“இல்லம்மா… பிடிவாதமா இருக்கா… நாளைக்கு அவருக்கு என்ன பதில் சொல்றது…?” நீரஜா கலங்கினாள்.
“இங்க பாரு நீரு… உம் புருஷன் ரொம்ப அவசரப் படறாரு… நீ தான் அவருக்கு எடுத்து சொல்லணும். ரஞ்சியும் பாவம் தானே… அவள ரொம்ப படுத்தக் கூடாது…”
அல்லி நிரஞ்சனியின் காதலுக்கு ஆதரவாக இல்லை என்றாலும் அவளை உடனே கல்யாணத்துக்கு கட்டாயப் படுத்துவதை தடுக்க முயற்சித்தார்.
“நா சொல்லிட்டேன் சித்தி அவர் கேட்க மாட்டேங்கிறார். என்ன செய்றது…? ”
அல்லிக்கு கோவம் வந்துவிட்டது. “ஏண்டி… இது நீயா தேடிக்கிட்ட வாழ்க்கைதானே… அப்புறம் எதுக்கு எங்ககிட்ட கேட்கிற… நீ பாட்டுக்கு உம் புருஷனோட உன்னோட வாழ்க்கைய பார்க்கிற வேலைய பாரு… அவரு எதுக்கு ரஞ்சி விஷயத்துல மூக்க நுழைக்கிறாரு…”
“என்ன சித்தி இப்படி சொல்றீங்க… அன்னைக்கு ரஞ்சிக்கு பிரச்சனை வந்தப்ப இவரு போகலையா… இப்ப மட்டும் பிரிச்சு பேசுறீங்க…?”
“பாத்தாருதான். இல்லன்னு சொல்லல… ஆனா அதுக்காக ஒரு பொண்ண கொல்ல முடியுமா…? அவ நொந்து போயி கெடக்கிறா… இப்ப போயி கல்யாணத்துக்கு சம்மதி சம்மதின்னா அவ தப்பா ஏதாவது முடிவெடுத்துட்டான்னா என்னடி பண்ணுவீங்க… அப்புறம் ‘அப்பான்னா தான் வருமா…. இல்ல ஆயான்னா தான் வருமா…?'” என்று ஒரு போடு போட்டார்.
அதில் நீரஜா அரண்டுவிட்டாள். ஆனால் தாமரை அசரவில்லை.
“தப்பான முடிவு எடுப்பாளா…? எடுத்தா எடுக்கட்டுமே…என்னா முடிவு எடுப்பா….? சாவுற முடிவுதானே… சாவட்டுமே… எம்மவளோட வாழ்க்கையும் அழிச்சு… அவளும் சீரழியிரதுக்கு அவ மட்டும் போனா போவட்டுமே… ஒரே நாள்ல அழுது-புழுது அள்ளி போட்டுட்டு போயிரலாமே… இதுமாரி அல்லோலப்பட வேண்டியதில்லையே…” என்று இரக்கமின்றி சொன்னாள் தாமரை. அவளது தாய் பாசம் அப்போது எங்கு போனதோ தெரியவில்லை. அல்லது எந்த மாயை அவளது தாய் பாசத்திற்கு திரையிட்டதோ தெரியவில்லை.
அவர்களின் பேச்சை மாடியிலிருந்து கீழே இறங்கி வீட்டிற்குள் நுழைந்த இரண்டு ரஞ்சிகளும் தெளிவாக கேட்டார்கள். நிரஞ்சனி அந்த பேச்சில் அடிபட்ட மானாக துடித்தாள்.
‘அம்மாவா…! என்னோட அம்மாவா…! என்னோட அம்மாவா என்ன சாக சொல்றா….? என்னோட அம்மா இப்படி மாறிவிட்டாளே… திரும்ப அந்த பழைய அம்மா எனக்கு கிடைக்கவே மாட்டாளோ…!’ நிரஞ்சனிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அழக் கூடாது என்ற பிடிவாதத்துடன் தன்னுடைய சிந்தனையை வேறு திசைக்கு திருப்பி அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு படுக்கைக்கு சென்றாள்.
மறுநாள் இராஜசேகரன் வந்து கேட்கும் போது என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டே மற்றவர்களும் படுக்கைக்கு சென்றார்கள்.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
ஒரு பெண்ணின் வாழ்க்கைக்காக இன்னொரு பெண்ணின் காதலை வஞ்சிக்கும் தாய் என்ன சொல்ல.
நன்றி