Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ-9

அத்தியாயம் – 9

 

அன்று

 

“ஹாய் ஜெனி… என்ன உன்னை ஆளையே பார்க்க முடியவில்லை…” என்று புகழ் நிரஞ்சனிக்கு முன் வந்து அமர்ந்தான்.

 

மதிய உணவை ஒரு வாய் எடுத்து வைத்த நிரஞ்சனிக்கு உணவு தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது. ‘இப்போது தான் வீட்டில் ஒரு பூகம்பம் வெடித்து அடங்கியிருக்கிறது… இப்போது இவன் ஏன் என் பக்கத்தில் வந்து அமர்கிறான்…?’

 

“கொஞ்சம் உடம்பு சரியில்ல சார்…”

 

“அது தான் உன்னை பார்த்தாலே தெரியுதே… ஏன் இப்படி பஞ்சத்துல அடிபட்ட மாதிரி வந்திருக்க… உடம்புக்கு என்ன…?” அவன் சாவதானமாக கேள்விகளை கேட்டுக் கொண்டே அவனுடைய சாப்பாட்டை சுவைத்துக் கொண்டிருந்தான்.

 

“காய்ச்சல் சார்…” என்று சொல்லிவிட்டு பாதி உணவிலேயே எழுந்து சென்றுவிட்டாள் நிரஞ்சனி.

 

பொதுவாக அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்ற அலுவலர்களுடன் சகஜமாக பழக மாட்டார்கள். ஆனால் புகழ் கேண்டீனில் அத்தனை பேர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சாதாரணமாக நிரஞ்சனியோடு அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டான்.

 

அது நிரஞ்சனிக்கு நடுக்கமாக இருந்தது. ‘எதுவுமே செய்யாமலே ஒரு முறை கெட்ட பேர் வாங்கியாகிவிட்டது. இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

புகழேந்தியின் நடவடிக்கை சாதரணமாக இல்லை என்று நிரஞ்சனிக்கு நன்றாக தெரிந்தது. அவன் நிரஞ்சனியிடம் அதிகம் ஆர்வம் எடுத்துக் கொள்வதை அவள் உணர்ந்தாள். அதனால் அவனிடமிருந்து கொஞ்சம் விலகியே இருந்தாள். மத்திய உணவிற்கு கேண்டீன் போவதை சுத்தமாக தவிர்த்துவிட்டாள். அதாவது மத்திய உணவையே தவிர்த்துவிட்டாள்.

 

புகழேந்திக்கு அவளை எந்தவிதத்திலும் நெருங்க முடியவில்லை. அவளுடன் நட்பாக பழக நினைத்து இவன் ஒரு அடி எடுத்து வைத்தால் அவள் பத்து அடி விலகி ஓடினாள்.

 

இந்த நிலையில் மருத்துவமனையில் ஒரு விழா வந்தது. ஆண்டுக்கு ஒரு நாள் மருத்துவமனை ஊழியர்களுக்கு நிர்வாகம் விருந்து கொடுக்கும். அந்த விருந்து தஞ்சாவூரில் ஒரு பெரிய ஹோட்டலில் நடந்தது.

 

ஊழியர்கள் அனைவரும் மருத்துவமனை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்கள். ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் அல்லது இரண்டு பேர் மருத்துவமனையிலேயே இருந்தார்கள். ஹோட்டலுக்கு சென்றவர்களில் கொஞ்சம் பேர் திரும்பி வந்ததும் எஞ்சியிருப்பவர்களை அனுப்பி வைப்பார்கள்.

 

அப்படி மருத்துவமனையிலேயே தங்கிவிட்டவர்களில் நிரஞ்சனியும் ஒருத்தி. மருத்துவர்களில் புகழேந்தியும் இன்னும் இரண்டு மருத்துவர்களும் இருந்தார்கள்.

 

ஒரு செட் திரும்பி வந்ததும், மருத்துவமனையில் இருந்த அடுத்த செட் ஹோட்டலுக்கு செல்ல தயாராகி மருத்துவமனை வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். மருத்துவமனை வாசலை தாண்டுவதற்கு முன் மருத்துவமனை வாகனம் ஏதோ பிரச்சனையாகி நின்றுவிட்டது.

 

“என்ன சாமி…” டாக்டர் சுரேந்திரன் டிரைவர் சாமியிடம் கேட்டார்.

 

“வண்டி நின்னுடுச்சு டாக்டர்…”

 

“அடுத்தவண்டி எப்போ வரும்…”

 

“அடுத்த  செட்ட ஹோட்டல்லிருந்து  ஏத்திகிட்டு தான் வரணும்… டாக்டர்…”

 

“எத்தனை பேர் இந்த செட்ல இருக்காங்க…?”

 

“அஞ்சு பேர் டாக்டர்…”

 

“சரி நா என்னோட கார்ல அழைச்சுகிட்டு வர்றேன்… நீ போ… வண்டிக்கு என்னான்னு பார்..”

 

“அந்த நேரம் மருத்துவமனை கட்டிடத்திலிருந்து பார்க்கிங் ஏரியாவுக்கு வந்த புகழேந்திக்கு அவர்களின் பேச்சின் சாராம்சம் புரிந்துவிட.. அவன் எப்படியும் நிரஞ்சனியை அவனுடைய காரில் அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவுசெய்து, அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

 

“என்ன ஜெனி… நீ இன்னும் ஹோட்டலுக்கு போகலையா…?”

 

“இல்ல சார்… இனி தான்…”அவள் பதில் சொன்னாள்.

 

அதற்குள் சுரேந்திரனின் காரில் முன்று பேர் ஏறிவிட நான்காவது பெண் ஏற முயற்சித்தாள்.

 

“சிஸ்டர்… ஏன் எல்லோரும் அந்த கார்லயே கஷ்டப்பட்டு உக்காரணும்… நானும் ஹோட்டலுக்கு தான் போறேன்… ரெண்டு பேர் என்னோட கார்ல உக்காருங்க…”என்று சொன்னான்.

 

அந்த நர்ஸ்…”தேங்க் யு சார்…” என்று சொல்லிவிட்டு அவனுடைய காரில் ஏறி அமர்ந்தாள். நிரஞ்சனியும் வேறு வழியின்றி அந்த பெண்ணை தொடர்ந்து அவனுடைய காரில் ஏறினாள்.

 

இன்று

 

மறு நாள் சொன்னது போலவே இராஜசேகர் வந்துவிட்டான்.

 

“என்ன மாமா முடிவு பண்ணியிருக்கீங்க…? உங்க இரண்டாவது பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாமா…? இல்லை உங்க முதல் பொண்ணு விவாகரத்துக்கு நல்ல வக்கீல் பாக்கலாமா…?” அவன் அரசுவிடம் கேட்டான்.

 

அரசு தன் மனைவி தன்னிடம் சொல்லி அவனிடம் சொல்ல சொன்ன பதிலை சரியாக சொன்னார்.

 

“அவ கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாருங்க மாப்ள…”

 

“பின்னாடி பேச்சு மாற மாட்டீங்களே…?”

 

“அதெல்லாம் இல்ல மாப்ள… நீங்க பாருங்க…” என்று தெளிவாக சொன்னார்.

 

அவன் திருப்தியடைந்தவனாக மனைவியையும் மகனையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றான். அவன் வெளியே சென்றதும் நிரஞ்சனி பொங்கினாள்.

 

“அப்பா… நா எப்ப கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்… எதுக்கு அவர்கிட்ட அப்படி சொன்னீங்க…?”

 

“ஏய்… பொட்ட புள்ளையா அடங்கி இருடி…” அப்பா அரசு சீறினார்.

 

“நீ என்னடி சொல்றது… நாந்தா அப்புடி சொல்ல சொன்னேன். அதுக்கு என்னா இப்ப…? ”

 

“நீ யார மாப்ள பார்த்தாலும் நா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்…” அழுத்தமாக சொன்னாள்.

 

“கல்யாணம் பண்ணிக்க மாட்டியா…? நாங்க சொல்றத கேட்டு அடங்கி இருக்காதா இருந்தா இரு… இல்லையா இப்பவே போயி ஒரு பால்டாயல் பாட்டுலு வாங்கிகிட்டு வர சொல்றேன்… குடிச்சுட்டு சாவு… ரெண்டுல ஒண்ணுதான்…” திருத்தமாக தாமரை சொன்னாள்.

 

“நா சாகனுமா….? நானா சாகனும்? எதுக்கு… நா என்ன தப்பு செஞ்சேன்…?” நேற்று இரவே இதே மாதிரியான தாமரையின் பேச்சை கேட்டுவிட்டதால் நிரஞ்சனிக்கு அதன் பாதிப்பு கொஞ்சம் கம்மியாக இருந்தது.

 

“என்னடி செய்யல… எங்க மானத்த வாங்கிட்டு உக்காதுருக்கியே… அது பத்தாது…? ஜாதிகெட்ட பயல காதலிக்கிறாளாம் காதலு…   ”

 

“சும்மா அதையே சொல்லாத… உம் பொண்ணு பொண்ணுன்னு தலையில தூக்கி வச்சுக்குறியே… அவ லவ் பண்ணலையா…? படிக்காத பட்டிக்காடு உனக்கு உயர்வு… மருத்துவம் படிச்சுட்டு உயிரை காப்பாத்துற டாக்டர் உனக்கு கேவலமா…? கேட்டா ‘ஜாதி’ன்னு சொல்லுவ… என்ன பெரிய ஜாதி… ஜாதி… சொல்லப்போனா உன்னைவிட அவங்க உயர் ஜாதிதான்… தெரிஞ்சுக்கோ…” பொறுத்து பொறுத்து போன நிரஞ்சனி பொங்கி விட்டாள்.

 

“ஒசந்த குலமா… எந்த ஒசந்த குலமா இருந்தாலும் இந்த மண்ணுல அதுக்கு மதிப்பு இல்ல… நா பொறந்த ‘—–‘ குலந்தான் இங்க ஒசந்த குளம்.”

 

“இந்த ஊர் காரனுங்க எல்லாம் அவங்க சொந்தக்காரவங்க முன்னால நிக்க முடியுமா…? நீயெல்லாம் அவங்க பக்கத்துல நின்னா பஞ்சத்துல அடிபட்ட மாதிரி தெரியிவ… நீ அடுத்தவங்கள பத்தி பேசாத…”  ஆண்கள் வெளியேறிவிட்டதால் நிரஞ்சனி தயக்கமே இல்லாமல் பேசினாள்.

 

“ஏய்… என்னடி அம்மாவை மரியாத இல்லாம பேசுற…” அல்லி நிரஞ்சனியை கண்டித்தாள்.

 

“எனக்கு அம்மாவெல்லாம் இல்ல சித்தி… நா இப்ப யாருமே இல்லாத அனாதை… அதனால தானே என்ன எல்லாரும் பந்தாட்றாங்க…?”

 

“அனாத சிறுக்கி இங்க எதுக்குடி உக்காந்துருக்க… ஒடுடீ எந்திரிச்சு… போடி போ…” என்று தாமரை நிரஞ்சனியை கையில் கிடைத்ததை எடுத்து அடிக்க… சிவரஞ்சனியும் அல்லியும் நிரஞ்சனியை தாமரையிடமிருந்து விடுவிக்க போராடினார்கள்.

 

தாமரையின் பிடியிலிருந்து விடுபட்ட நிரஞ்சனி தனிமையை தேடி வீட்டின் கொள்ளை பக்கம் வந்து மரத்தடியில் அமர்ந்தாள். வாழ்க்கையே பயங்கர போர்க்களமாக தோன்றியது. தன்னுடைய சம்மதம் இல்லாமலே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இனி எப்படி தன்னை காத்துக் கொள்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

 

அந்த நேரம் கொள்ளை பக்கம் வந்த தாமரை மீண்டும் ஆரம்பித்தாள்.

 

“என்னடி இங்க உக்காந்து கனவு காணுற… அந்த பயல நெனச்சுகிட்டு இருக்கியா…? வெக்கங் கெட்டவளே… உக்காந்து சாப்பபிட இது என்ன உங்க அப்பன் வீடுன்னு நெனச்சியா… அங்க என் தங்கச்சி வேல செஞ்சுகிட்டு இருக்காடி… போ… போயி வீட்டு வேலைய பாரு… அப்பயிலேருந்து உன்ன அடுப்பங்கரையிலேயே போட்டுருந்தா இன்னைக்கு எனக்கு இந்த கேவலம் வந்துருக்காது….” என்று ஆரம்பிக்க… நிரஞ்சனி சமயலறைக்கு ஓடினாள்.

 

அவளால் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை. நின்றால் குற்றம் நடந்தால் குற்றம்… என்று அவள் எது செய்தாலும் அவளுடைய தாய்க்கு குற்றமாகவே பட்டது. பெற்று அருமையாக வளர்த்த தாயே எதிரியை பார்ப்பது போல  பார்க்கிறாள். நிரஞ்சனி மெளனமாக உள்ளுக்குள் அழுதாள்.

 




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    இந்த ராஜசேகருக்கு இப்போ என்ன பிரச்சனை ,ஏன் ரஞ்சனி வாழ்வில் இப்படி கும்மியடிக்கின்றார்,போதாக்குறைக்கு ரஞ்சனி அக்காவை விவாகரத்து பண்ணிவிடுவேன் என்ற மிரட்டல் வேறு.

    நன்றி

You cannot copy content of this page