Vedanthangal epi 15
1482
0
ராஜன் அமைதியாக ஸ்ரீ அருகே வந்தான். அவள் கைகளைப் பிடித்து “ஏய் உனக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு? உன்னை நம்ப நான் மடையனா? ”
ஏட்டையா முன்பாக தலையைக் குனிந்த ஸ்ரீ அவர் முகத்தைப் பார்க்காமல் ராஜன் முகத்தை நேராகப் பார்த்துச் சொன்னாள்.. “கௌன்சிலர் உங்களுக்கு கொடுப்பதைவிட கம்மிதான்.. ”
ராஜனின் பொறுமை காற்றில் பறந்தது..
“ஏட்டையா F.I.R போடுங்க.. இன்று இவள் கான்ஸ்டபிள் பத்மாவின் கஸ்டடி. நாளை மறுநாள் கோர்டில் ஆஜர் பண்றேன்.. நாலு நாள் லாக் அப்பில் இருந்தா சரியாகிடும்.. உண்மை தானாக வந்திட்டுப் போகுது.. ஜட்ஜ் நாலு நாள் காவலில் வைத்து விசாரிக்கச் சொல்வாங்க.. ஜட்ஜ் ரிமான்ட் செய்யட்டும் அப்புறம் நான் பார்த்துக்கிறேன். ”
ஸ்ரீக்கு சப்த நாடியும் அடங்கிப் போனது.. விரக்தியின் எல்லைக்கே போனாள். பாறையின் இறுக்கம் அவள் உடல் முழுதும் பரவியது. மேஜை மேல் ஒரு சிறு கத்திரியும் பால்பாயின்ட் பேனாவும் இருந்தது.. ஸ்ரீ கத்திரியை எடுத்தாள். ராஜனோ ஏட்டையாவோ சுதாரிக்கும் முன்.. கத்திரியை தனது தொண்டைக்குள் குத்தினாள்…
கழுத்திலிருந்து இரத்தம் வழிந்து ஓட அதிர்ச்சியிலிருந்து மீண்ட ராஜன் கத்திரியை தொண்டைக்குள் இருந்து வெளியே எடுத்தான்.. சிரித்துக்கொண்டே ஸ்ரீ சரிய.. ராஜன் உறைந்தான்.
மருத்துவமனையில்
மருத்துவமனை வெயிட்டிங் ரூமில் ராஜனும் ஏட்டையாவும் இருந்தனர். ஸ்ரீயைக் காண மசூத் வந்தான். வில் ஸ்ரீ யைப் பார்த்துவிட்டு ஒரு செவிலியரிடம் விபரம் கேட்டான்..
“அந்த கேஸா? ஜஸ்ட் மிஸ் தம்பி. கத்திரி தொண்டையில் உணவுக்குழாய்க்கு பக்கத்திலே மூன்று இன்ச் வரை உள்ளே போயிருக்கு. பேச நாள் ஆகும். பி.பி வேற ஒரே ஃப்ளக்சுவேஷன்ல்ல இருக்கு. லேடீஸ் யாரும் வரவில்லையா? இது ஜி.ஹச். துணைக்கு ஒரு ஆளை வைங்க.” என்று சிடு சிடுத்துவிட்டுப் போனவரிடம் பதில் சொல்ல முடியாமல் இருந்தான் மசூத்.
மசூத் குழம்பினான்.. தனுவும் மோகனாவும் இப்ப எங்கே என்பதே ஸ்ரீக்குதான் தெரியும். பிறகு யாரை துணைக்கு வரச்சொல்ல முடியும்? என்று குழம்பினான்.
மசூத் யோசிக்கவும் ராஜன் ஏட்டையாவைப் பார்த்தார். அந்த பார்வையின் அர்த்தம் புரிந்து ஏட்டையா சொன்னார் “நான் பார்த்துக்கிறேன் தம்பி. ஆர்டர்லி லேடி போலிஸ் வரச் சொல்றேன். நீ போய் உட்காருப்பா. ”
மசூத் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டான்.. “சார் ஏழு மாசத்திலே எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் சார். இப்படிப் பண்ணிட்டீங்களே சார்? ”
மசூத் பேசி முடிக்கும்முன் ராஜன் விறு விறுவென்று வெளியே சென்றுவிட்டான். தனது கோபம் அனைத்தையும் பைக்கில் காட்டினான். வண்டியை தாறுமாறாக உதைத்துக் கிளப்பியவன் இரண்டு நிமிடத்தில் நிதானத்திற்கு வந்தான். அவன் தன்னை அமைதிப்படுத்தி கவனத்தை சாலையில் வைத்து ஒருவழியாக நிதானத்தில் போனபோது அவனை தாண்டிச் சென்ற ஒரு பைக்கின் ஹார்ன் நாய் குரைப்பதுபோல இருந்தது. ராஜன் பைக்காரனை நிறுத்தினான்.
“என்ன ஹார்ன் இது? உன் பக்கத்தில் போறவன் அப்பதான் பயந்து கீழே விழுவான் இல்ல? ”
“சார்.. சும்மா நாய் குரைப்பது போல.. ”
ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தான். ஸ்ரீயை அறைந்தது ஞாபகம் வரவே அடுத்த அடியில் இருந்து பைக்காரன் தப்பித்தான்.
“முதலில் போய் ஹார்ன் மாத்து.. ”
“கண்டிப்பா சார். ”
ஒரு மணி நேரம் கழித்து ஹாஸ்பிட்டல் சென்றான். வாசலில் ஒரு பத்து ஜனம் இருந்தது.. ஆனால் இருபது கேமிரா இருந்தது.
ராஜனைப் பார்த்ததும் பிரஸ் சூழ்ந்து கொண்டது. இடைவெளியின்றி கேள்விகள் கேட்கப்பட்டது. ராஜன் யாருக்கும் பதில் சொல்லாமல் உள்ளே சென்றான்.
“ஏட்டையா ஏட்டையா.. பிரஸ் எப்படி வந்திச்சு? ”
“யாரோ தகவல் தந்திருக்காங்க.. சார். இப்ப கிளியர் பண்றேன்.” என்று மசூதைப் பார்த்துக்கொண்டே கூறியவர் வெளியே நகர்ந்தார். ஸ்ரீ படுத்திருந்த கட்டிலைத் தாண்டிச் செல்லப்போனவரை ராஜன் நிறுத்தினான். “அந்தப் பொண்ணு எப்படி இருக்கு? ”
“இரத்த அழுத்தம் ரொம்ப குறைஞ்சிருக்கு.. ஏதாவது ஆகுறதுக்குள்ள வாக்குமூலம் வாங்க மாஜிஸ்ரேட் வர்றாங்க. நமக்கு சஸ்பென்ஷன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். டைமே சரியில்லை ராஜன் சார். சஸ்பென்ஷன் ஒரு மாதம் இருக்குமா? இரண்டு மாதம் இருக்குமா? ”
ஏட்டையா வேலையைப் பற்றிக்கூறியது ஒன்றுமே ராஜனுக்கு காதில் எட்டவில்லை. அவனுக்கு தேவையானது ஒரே ஒரு கேள்விக்கு பதில்தான். அதனால் அவசரமாக ஏட்டையாவை பேசவிடாமல் கேட்டான் “பொண்ணு பிழைப்பதற்கு… ” அந்த வார்த்தையை சொல்லப் பிடிக்கவில்லை ராஜனுக்கு. எனவே மீண்டும் சொன்னான் “பொண்ணு.. ”
ஏட்டையா அவனைப் புரிந்து கொண்டு சொன்னார் “ஆமாம் சார் கொஞ்சம் ரிஸ்க் தான்.. பொண்ணு பிழைப்பது தெரிய இன்னும் ஒரு மணிநேரமாவது ஆகும். பொழச்சாலும் நம்ம மேல கம்ப்ளைன்ட் கொடுத்தா இரண்டு பேரும் ஒரு மாதம் சஸ்பன்ட் ஆகலாம். நம்ம வேலைகூட போனாலும் போகலாம். ஏன் ராஜன் சார் அவ்வளவு ஹார்ஷா நடந்துகிட்டீங்க? ” என்று ஏட்டையா தமது பிரச்சனை பற்றியே
மீண்டும் பேச்சை திருப்ப ராஜன் அவரது கேள்விக்கு பட்டாசுபோல பதிலை பட பட வென்று தந்தான். அவனுக்கு யாரிடமாவது கொட்டவேண்டும் என்று இருந்தது.
“இல்லை ஏட்டையா அந்தப் பணம் இவகிட்டதான் இருக்கு. அவள் பொய் சொல்றா.. கௌன்சிலருக்கு கூட தெரியாது நான் அவளை விசாரிக்கிறது. கல்லால அடிச்சிருக்கா கௌன்சிலரை. அவனுங்க கையில கொடுத்தா பிச்சி எறிஞ்சிடுவானுங்க. அவரிடம் ஸ்ரீயைக் கண்டுபிடிக்க முடியல்ல என்றுதான் சொல்லிகிட்டுருக்கேன். நானே கண்டுபிடிச்சிடுவேன் நீங்க தலையிடக்கூடாதுன்னு சொன்னதால் அவனுங்க இவளை தேடவில்லை. இவள் கிடைத்தால் சாகடிக்க மாட்டாங்க. உயிரோட வச்சிருந்து அதை விடுங்க என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும். நீங்களே சொல்லுங்க.. நான் எவ்வளவு பொறுமையாக விசாரிச்சேன்? நானும் ஏழு நாள் எவ்வளவு பொறுமையா விசாரிச்சேன்? திரும்பத் திரும்ப பொய்.. மனப்பாடம் செய்த மாதிரி ஒரே பதில். எதைக் கேட்டாலும் பொய்.. எனக்குத் தெரியுது அவள் பொய் சொல்றது.. அப்புறம் என்னை மட்டம் தட்டிப்பேசினது எல்லாம் ரொம்ப கோபப்படுத்திடுச்சு. அதான் F.I.R ன்னு பயமுறுத்திப் பார்த்தேன். ஆனா ரொம்ப பயந்துடுச்சு..”
“அவ்வளவு பணம் கையில் வச்சிருக்கும் பொண்ணு ஏன் சாக நினைக்கணும்? ”
“அதான் ஏட்டையா எனக்கே புரியல. நானும் அதைத்தான் யோசிச்சிக்கிட்டே இருக்கேன். ஒண்ணும் புரியமாட்டிங்குது. ஒண்ணும் ஆகாதுல? காப்பாத்திடலாம் தான?” என்று கட்டிலில் கிடந்த ஸ்ரீ யைப் பார்த்து கேட்டான் ராஜன்.
“நம்ம நேரம் நல்லா இருந்தா எல்லாம் நல்லா இருக்கும்.. இந்த மாத சம்பளத்தில்தான் மினரல் வாட்டர்காரனுக்கு செட்டில் பண்ணணும் சார். இந்த கண்டத்திலிருந்து தப்பிச்சா.. பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கணும் ராஜன் சார். ”
இப்போது தான் ஏட்டையாவின் கவலை ராஜனுக்கு விளங்கியது. ‘ஒரு மாதம் சஸ்பன்ட் ஆனா என்ன செய்யணும் என்று யோசிக்கவேயில்லையே. என்ன செய்யலாம்?’ என்று மனதிடம் யோசனை கேட்டான்.
‘பேசாமல் கிராமத்துக்கு போயிடணும். அங்கதான் பிரஸ்காரன்கள் தொந்தரவு இருக்காது. ‘மதுரை ஏ.எஸ்.ஐ சஸ்பன்ட்’ என்று கொட்டை எழுத்தில் பேப்பரில் போடுவான். பத்து நாளுக்கு நியுஸ்பேப்பர் வாங்கக்கூடாது. அப்பதான் நம்ம பி.பி கன்ட்ரோல்ல இருக்கும். ’ என்று ஒரு வழியாக மனதில் ஒரு டைரியின் பக்கத்தை நிரப்பியவன் தனது முஷ்டிகளை மடக்கி விரித்து தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டான்.
Comments are closed here.