Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ-10

அத்தியாயம் – 10

 

அன்று

 

புகழேந்தி மிக மிக மெதுவாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான். நிரஞ்சனியோடு காரில் செல்வது அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்ததோ என்னவோ…! Dr.சுரேந்திரன் ஹோட்டலை அடைந்து பத்து நிமிடத்திற்கு பிறகு தான் புகழேந்தியின் கார் ஹோட்டலை அடைந்தது.

 

இவன் காரை விட்டு இறங்கியதும் அதற்காகவே காத்திருந்தவன் போல் பிரசன்னா அவன் முன் வந்து நின்றான். நிரஞ்சனி காரிலிருந்து இறங்கியதும் அவளை நெருங்கியவன்..

 

“ஏய்… உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால் இவனுடைய கார்ல வருவ…?” என்று அவளிடம் சீறினான்.

 

“நீங்க உள்ளே போங்க சிஸ்டர்…” என்று அவன் அழைத்து வந்த மற்றொரு பெண்ணான நர்ஸ்சை பார்த்து புகழேந்தி சொன்னான்.

 

அவள் மறுப் பேச்சின்றி உள்ளே சென்றாள். அவளோடு உள்ளே செல்ல எத்தனித்த நிரஞ்சனியை தடுத்து தன்னோடு நிறுத்திக் கொண்டான்.

 

“சொல்லு… எதுக்கு எங்கள ஃபாலோ பண்ணி வந்த…?” புகழேந்தி நிதானமாக பிரசன்னாவை பார்த்துக் கேட்டான்.

 

“ஏய்… இவள ஏண்டா.. நீ உன்னோட கார்ல அழைச்சிகிட்டு வந்த…?”

 

“அதை நீ ஏன் கேட்கிற…?”

 

“ஏன்னா அவ என்னோட பொண்டாட்டி…”

 

“ச்சீ… பொய் சொல்லாத…” என்று நிரஞ்சனி சீறினாள்.

 

“யார்டி பொய் சொல்றது…? இத்தினி நாளும் என்னோட சுத்திட்டு… எல்லா தப்பையும் செஞ்சுட்டு இப்போ இன்னொருத்தனோட சுத்த ஆரம்பிச்சுட்டியா…?” அவன் அசிங்கமாக பேசினான்.

 

நிரஞ்சனிக்கு அவமானமாக இருந்தது.

 

“ஏய்… வாய மூடு… எப்படா உங்களுக்கு கல்யயணம் ஆச்சு…? எங்க கல்யாணம் பண்ணிகிட்டீங்க…?” என்று பற்களை கடித்துக்கொண்டு அடி குரலில்  உறுமினான் புகழேந்தி.

 

“கல்யாணம் பண்ணினாதானா…” என்று நிரஞ்சனியை ஒரு மாதிரியாக பார்த்தான்.

 

அவளுக்கு கூசியது. தலை குனிந்து கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

 

“ஏய்.. மரியாதையா பேசு… ”

 

“ஏய்… என்னடா மரியாதை…. நீ என்னடி இவன பேசவிட்டுட்டு பார்த்துகிட்டு இருக்க… நீ யாரையும் கல்யாணம் செய்ய முடியாது. உனக்கு நான் எப்பவும் கொடச்சல் கொடுத்துகிட்டே தான் இருப்பேன்… மரியாதையா நான் சொல்ற படி கேட்டு நடந்துக்கோ…” என்று நிரஞ்சனியை எச்சரித்தான்.

 

“நல்ல ஆண்பிள்ளையா இருந்தா என்கிட்ட பேசுடா.. நீ சொல்றபடி அவ கேட்க மாட்டா… அவ கல்யாணம் செஞ்சா… என்னத்தடா கிழிப்ப நீ…?”

 

“நீ எதுக்குடா எங்க விஷயத்துல தலையிடுற… இது எங்க வாழ்க்கை பிரச்சனை…”

 

“இது என்னோட வாழ்க்கை பிரச்சனைடா… நா தான் இவள கல்யாணம் செஞ்சுக்க போறேன்… நீ எதையோ கிழிப்பென்னு சொன்னியே… அதை என்கிட்ட கிழி…” என்றான் புகழேந்தி.

 

“ஏய்… நீ அவளுக்கு ரூட் போடுறது எனக்கு தெரியும்டா… ஏன்டா அடுத்தவன் சாப்பிட்ட எச்சி இலைக்கு ஆசை பட்ர…? இவ என்னோட பொண்டாட்டியா வாழ்ந்துட்டாடா..” என்று கூச்சலிட்டான்.

 

நிரஞ்சனி காதை மூடிக்கொள்ள, புகழேந்தி அவன் சட்டையை கொத்தாக பிடித்துவிட்டான்.

 

“போலீஸ்காரன் மேலையே கை வைக்கிறியா… உன்ன என்ன செய்றேன் பார்… டீசன்ட்டான டாக்டரா இருக்கியே… சொன்னா புரிஞ்சுக்குவன்னு நினைத்தேன். உனக்கு சொல்ற படி சொன்னாதான் புரியும் போல…” அவன் புகழேந்தியின் கையை அவன் சட்டையிலிருந்து விடுவிக்க முயன்றுகொண்டே சொன்னான்.

 

“ஏய்… நான் முதல்ல ஒரு கிராமத்தான்டா… அப்புறம் தான் டாக்டர்… இனிமே என்னோட விஷயத்துல தலையிட்ட அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்…” என்று அவனை பின்னுக்கு தள்ளிவிட்டுவிட்டு நிரஞ்சனியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

 

நிரஞ்சனிக்கு அவனுடைய செய்கை ஆறுதலாக இருந்தது. பெற்றவர்களும் வளர்த்தவர்களும், மற்ற உறவினர்களும் அவளை நம்பவில்லை. மூன்றே மாதங்களுக்கு முன்பு அறிமுகமானவன் நம்புகிறான். அவனுடைய துடிப்பும் பேச்சும் நிச்சயமாக நடிப்பில்லை. பிரசன்னாவிற்கும் இவனுக்கும் உள்ள வேறுபாடுகளை அவளால் நன்றாகவே அறிய முடிகிறது. அவனுடைய தோழமையையும் அருகாமையையும் அவளுடைய மனம் விரும்புகிறது. ஆனால் அவனுடன் சகஜமாக பழக அவளால் எப்படி முடியும்…?

 

இன்று

 

காலை ஆறு மணி… பாக்கியத்தம்மாள் கையில் தடியை  ஊன்றிக் கொண்டு ஆற்றங்கரை ஓரமாக மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். ஆற்றங்கரையோர சிலு சிலு தென்றல் காற்று அவருக்கு அந்த வயதிலும் உற்சாகமாக நடக்கும் சக்தியை கொடுத்தது.

 

ஆற்றங்கரையோரம் அரசு இடத்தில் ஏழை மக்கள்  வரிசையாக வீடுகட்டிக்கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தாள் அந்த மூதாட்டி…

 

“எலேய் வீரா…. அந்த மரத்துலேருந்து ரெண்டு முருங்கக்கா பரி…” வீரன் வீட்டு மரத்தில் கொத்து கொத்தாக காய்த்திருக்கும் முருங்கைக்காயை பார்த்துவிட்டு ஆசைப்பட்டு கேட்டார்.

 

“எத்தா… அது இப்பதாந்த்தா பிஞ்சுவுட்ருக்கு… அத என்னத்தத்தா பறிக்கிறது…?” அவன் தன் மரத்து முருங்கைக்காயை காப்பாற்றிவிட எண்ணி எதையோ சொன்னான்.

 

“சரி போவுது போ… அடுத்த மாச(ம்) சீட்டெடுத்து உனக்கு தான் கொடுக்கலாமுன்னு நெனச்சேன்.. அந்த சீட்டுகாரி அலயவுடுரா…” என்று சொல்லிக் கொண்டே பாட்டி நகர எத்தனிக்க, வீரன் “யாத்தா.. யாத்தா… நின்னுத்தா.. மேல ரெண்டு கா நல்ல காயா இருக்கு… இரு பறிச்சு தாரேன்…” என்று சொல்லிக் கொண்டே இரண்டு காயை பறித்து பாட்டியிடம் கொடுத்தான்.

 

“அடுத்த மாசம் சீட்டு பணம் எனக்குதான்… மறந்துறாத…”

 

‘அப்படி வா வழிக்கு….’ என்று நினைத்துக் கொண்டே “வட்டியெல்லா(ம்) கரக்கெட்டா வந்துரனும் சொல்லிபுட்டேன்…” என்று அவனை ஒரு மிரட்டு மிரட்டிவிட்டு இரண்டு முருங்கைக்காயையும் வாங்கிக் கொண்டு நடையை தொடர்ந்தார்.

 

“வவ்…. வ்…வவ்… வவ்வவ்…”

 

“ச்சீ… எடிச்சீ…” என்று தன்னை பார்த்து குரைத்த நாயை தன்னிடம் இருந்த தடியை கொண்டு விரட்ட முயன்றார்.

 

“எத்தோவ்… என்னத்தா… எதுக்கு இந்த வாயில்லா சீவன அடிக்க வர்ற…?” என்று நாயின் உரிமையாளன் ஓடிவர…

 

“வாடா…. இது வாயில்லா சீவனாடா… இன்னமுட்டு(ம்) என்னா கொல கொலச்சுது… இதுக்கா வாயில்ல…. சரி அதவிடு…. அந்த சங்கெலயில நாளுது பறிச்சு இந்த ஜவ்வு பையில போட்டு குடு…”

 

“எத்தா…. இப்ப முடியாதுத்தா… வேலைக்கு நேரமாயிட்டு… சாயங்காலமா பறிச்சு வைக்கிறேன் வா…”

 

“எனக்கு நெனச்ச நேரத்துக்கு நடக்குற வயசாடா… இப்பவே மூச்சு வாங்குது…” என்று இல்லாத களைப்பை முகத்தில் காட்டி மூச்சு வாங்கினார்.

 

‘கெழவி என்னா நடிப்பு நடிக்குது…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு “ஒடம்ப பாத்துக்கத்தா…” என்றான் முருகன் என்ற அந்த ஆள்.

 

“அதுக்குதாண்டா… இந்த சங்கெல… ஒடம்புக்கு நல்லது… பரி…” என்றார்.

 

‘கெழவி கிட்ட வாய கொடுத்து மீளமுடியாதே…’ “எத்தா அதுல முள்ளு இருக்குத்தா… பொறுமையா பரிக்கனம்…” என்று அழுதுவிடுபவன் போல்  இழுத்தான்.

 

“சரி விடு… இந்த சங்கத்துல பணங் கேட்டியேடா…. ” என்று பாட்டி ஆரம்பிக்கவும் முருகன் பாட்டியின் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு இலை பறிக்க முனைந்துவிட்டான்.

 

‘அது…’ என்று நினைத்துக் கொண்டார் பாட்டி.

 

“இந்தாத்தா…” அவன் சங்கெலையை கொண்டு வந்து பாட்டியிடம் கொடுத்தான்.

 

அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டு “இந்த நாய இனி கட்டி போட்டு வையிடா… யாரு என்னான்னு தெரியாம கொலக்கிது…”

 

“எத்தா… எத்தா… ராசான்னு சொல்லுத்தா… என்னா நாயிங்குற…? ”

 

“இது ராசான்னா அப்புறம்… அந்த வீரம்மொவன் பேரு என்ன நாயாடா…? அவன நாயின்னு அழைக்கவா…” பாட்டி நக்கலாக கேட்க

 

“அது எனக்கு தெரியாது… என்னோட ராசாவ ராசான்னு கூப்பிடு… ”

 

“எலேய் வீரா… ஒம்மோவ(ன்)  நாயி இருக்கானாடா… ” என்று குரலை உயர்த்தி அடுத்த வீட்டு வீரனிடம் கேட்க

 

“என்னது நாயா…?”

 

“ஆமா… அவம்பேரு நாயி தானே… என்ன முருகா… நாயின்னு தானே சொன்ன…?” என்று வீரனிடம் ஆரம்பித்து முருகனிடம் சந்தேகம் கேட்டு முடிக்க…

 

“எத்தா… இங்க ஏதும் வெட்டுகுத்து ஆரம்பிச்சு வைக்காம கெளம்புத்தா… எனக்கு வேலைக்கு நேரமாச்சு…” என்று பாக்கியத்தம்மாளை கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைத்தான்.

 

அவரும் தொடர்ந்து ஒவ்வொருவராக பேசி வம்பிழுத்து இலை தழைகளை  பறித்துக் கொண்டு தன் மகள் அல்லியின் வீட்டை எட்டு மணிக்கு அடைந்தார்.

 

“ஆயி… என்னா சேதி…?” என்று கேட்டுக் கொண்டே மகள் வீட்டு திண்ணையில் அமர்ந்தார்.

 

“என்னம்மா… பத்து நாளா உன்ன ஆளையே காணும்… ”

 

“ஆமா… வாக்கிங்க வயக்காட்டு பக்கம் கொஞ்ச நாளைக்கு வச்சுகிட்டேன். அது சேரி… என்னடி நீங்க செஞ்சுகிட்டு இருக்கீங்க… உங்க அண்ணே அங்க ஒரே டெஞ்சனா இருக்கானே…”

 

“ஆத்தா அது  ‘டெஞ்சன்’ இல்ல டென்ஷன்…” சிவரஞ்சனி இடையில் புகுந்து சொல்ல..

 

“தெரியுந் தெரியும்… ‘டெஞ்சன்’ தானே… போயி அந்த ஜேர… கொண்டுவா… திண்ணையில உக்காந்து இடுப்ப புடிக்கிது…” என்றார் பாட்டி.

 

“அதுசேரி… என்ன ஆயி இது… நம்ப குடும்பத்துல இதெல்லாமா நடக்கணு… யாரு அந்த பய… அண்ணன வேற… அந்த பயல போயி பாக்க சொல்லியிருந்தா  அக்கா. இப்ப அவனுகிட்ட ஒண்ணுமே சொல்லைன்னு கோவமா இருக்கானே…  இப்ப தாமர எங்க…?”

 

“அக்கா இப்பதான் வயலுக்கு போயிட்டு வர்றேனுட்டு போனா…. ரஞ்சி கல்யாணத்த பேசி முடிக்க மாப்ள பாக்குற… இவ ஒத்துக்க மாட்டேன்னு ஒத்த கால்ல நிக்கிறா… தெனமும் கொலபாதமா இருக்கு வீடு…”

 

“அய்யோ கடவளே… எம்பேத்திக்கு எப்புடி ஆயி இப்புடி புத்தி போனுச்சு…?”

 

“அவள பாத்தா பாவமாதா(ன்)  இருக்கு… ஒடம்புல ஒன்னு இல்ல அவளுக்கு… எளச்சு ஓடா போயிட்டா… என்ன ஆவப்போவுதோ… நீ இங்கயே இரும்மா… ரஞ்சிய அக்கா பேசுற பேச்சு தாங்க முடியல…  பேசிபுட்டு கொள்ள பக்கம் போயி ஒப்பாரி வக்கிரா…” என்று தனக்கு துணையாக தாமரையை சமாதானம் செய்ய தன் தாயையும் இருக்க சொன்னாள் அல்லி…

 




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    இப்பகுதி நன்றாக இருந்தது .

    நன்றி

You cannot copy content of this page