Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ-11

அத்தியாயம் – 11

 

அன்று

 

அன்றைய விருந்து முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும் புகழேந்தி நிரஞ்சனியை கட்டாயப்படுத்தி தன்னுடைய காரில் புதிய பேருந்துநிலையம் வரை அழைத்துக்கொண்டு வந்து பஸ் ஏற்றி விட்டான்.

 

அந்த பயணத்தின் போது நிரஞ்சனியிடம் பேச்சுக்கொடுத்து பிரசன்னா பற்றிய எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டான். நிரஞ்சனிக்கு ‘அவளுடைய சொந்த விஷயங்களை அவனிடம் சொல்ல வேண்டாம்’ என்று தோன்றினாலும் அவளுடைய வாய் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்துவிட்டது.

 

ஒரு விஷயம் புகழேந்திக்கு நன்றாக புரிந்தது. நிரஞ்சனியை பிரசன்னா தொல்லை செய்து கொண்டே தான் இருக்கப் போகிறான். இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

 

ஒரு வாரம் பிரச்சனை இன்றி கழிந்தது. அந்த ஒரு வாரமும் புகழேந்தி நிரஞ்சனியை அவளுக்கு தெரியாமலே தொடர்ந்து கொண்டிருந்தான். அவள் வேலை முடிந்து வெளியே கிளம்பியவுடனே இவனும் எத்தனை பேஷன்ட் காத்திருந்தாலும் கிளம்பிவிடுவான். அவனுக்கு அது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் வேறு வழி இல்லை.

 

அப்படி அவன் நிரஞ்சனியை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் போதுதான் அது நடந்தது.

 

பிரசன்னா நிரஞ்சனியை நெருங்கி, “என்னடி பாக்குற… இன்னிக்கு அந்த டாக்டர் பய வரலையா…? நீ இன்னிக்கு ஒழுங்கா எப்படி வீட்டுக்கு போறன்னு பாக்குறேண்டி…” என்று சொல்லிக் கொண்டே அவளுடைய கையைப் பிடித்தான்.

 

பஸ் ஸ்டாண்டில் அவ்வளவு பேர் முன்னிலையிலும் அவளை இழுத்து அருகில் இருந்த காருக்குள் தள்ள முயன்றான். ஆனால் நிரஞ்சனி கூச்சலிட்டாள்.

 

“ஏய்… விடுடா… பொறுக்கி ராஸ்கல்… விடு…”

 

அருகில் இருந்த பெரியவர் “ஹலோ சார்… யார் நீங்க…? எதுக்கு இந்த பொண்ண இழுக்குறீங்க…?” என்று கேட்கவும்

 

“இது எங்க சொந்த விஷயம்… இவ என்னோட பொண்டாட்டி…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகமாக அங்கே வந்த புகழ் பிரசன்னாவின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

 

அவன் ஆரம்பித்து வைத்ததை பொதுமக்கள் சிறப்பாக முடித்து வைத்தார்கள். பொதுமக்களின் பிடியிலிருந்து தப்பித்து அங்கு நிறுத்திவைக்கப் பட்டிருந்த காரில் ஏறி ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான் பிரசன்னா.

 

அதிர்ச்சியில் நடுங்கிக் கொடிருந்த நிரஞ்சனியை புகழ் அவனுடைய தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். தன்னிலையில் இல்லாத நிரஞ்சனியும் கோழிக்குஞ்சை போல் அவனுடன் ஒட்டிக் கொண்டாள். கைத்தாங்கலாக அழைத்துக் சென்று காரில் அமரவைத்து அவனுடைய வீட்டிற்கு அழைத்துக் சென்றான்.

 

எங்கு செல்கிறோம் என்ற தெளிவே இல்லாமல் நிரஞ்சனி புகழேந்தியின் வீட்டிற்கு சென்றாள்.

 

“என்ன ஆச்சு புகழ்… ஏன் இந்த பொண்ணு இப்படி நடுங்கிக்கிட்டு இருக்கு…?” என்று சோபாவில் ஒரு மூலையில் அமர்ந்து, தன்னுடைய கைபையை இறுக்கமாக கட்டிக்கொண்டு நடுங்கி கொண்டிருந்த நிரஞ்சனியை பார்த்து புகழேந்தியின் அண்ணி நயந்தி கேட்டாள்.

 

அவன் நடந்ததை சொன்னான். அவன் அவனுடைய அண்ணியிடம் நல்ல நட்புடன் பழகுவான். அதனால் புகழ் நிரஞ்சனியை நேசிக்கும் விஷயம் நயந்திக்கு தெரியும். அவள் நிரஞ்சனிக்கு அருகில் போய் அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டு அவளுடைய நடுக்கத்தை குறைக்க முயற்சித்தாள்.

 

“என்ன ஜெனி… இனி ஒன்னும் இல்ல.. அவன் இனி இங்க வரமாட்டான்” என்று ஆறுதல் சொல்ல முயன்றாள்.

 

“நம்ப தஞ்சாவூர்ல கூட இந்த மாதிரியெல்லாம் நடக்குதா…? நாடு ரொம்ப மோசமாயிடுச்சுடா…”  என்று அவனுடைய அண்ணன் அங்காளாய்த்தான்.

 

“ஜெனி உன்னோட பைய குடு…” என்று வாங்கி அவளுடைய கைபேசியை எடுத்து அவளுடைய வீட்டிற்கு விபரம் சொன்னான் புகழ்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் மூன்று புல்லெட் புகழேந்தியின் அண்ணன் வீட்டிற்கு முன் நின்றது.

 

சுந்தர், இராஜசேகர், கோபாலன், அரசு மற்றும் இரண்டு வேம்பங்குடி ஆட்கள் வந்து ‘திமு திமு’ வென இறங்கிவிட்டார்கள். விபரம் அறிந்து கொண்டவர்களுக்கு இரத்தம் கொதித்தது.

 

“நம்ப பொண்ணு மேல ஒருத்தன் கைய வச்சிருக்கான்… அவன சும்மா விடுறதா… அவங்கைய எடுக்கனு மாப்ள…” என்று சுந்தர் இராஜசேகரிடம் சொல்ல

 

“அவ(ன்) உசுரையே எடுக்கனு மச்சா(ன்)… நீ என்ன கையின்னு சொல்லிக்கிட்டு இருக்க…” என்று இராஜசேகர்  கொதித்தான்.

 

“ரொம்ப நன்றிங்க டாக்டர் சார்… நீங்க மட்டும் உதவி பண்ணலன்னா எங்க பொண்ணு மானத்துக்கு பங்கம் வந்திருக்கும்… ” என்று அரசு புகழேந்தியிடம் நன்றி தெரிவித்தார்.

 

“பரவால்லங்க… இந்த பொண்ணு கொஞ்சம் பயந்துடுச்சு… கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா வேலைக்கு வந்தால் போதும்… நான் ஹாஸ்பிட்டல்-ல சொல்லிக்கிறேன்…” என்றான் புகழ்.

 

“அட என்ன டாக்டர் சார் நீங்க…. யாருக்கு யாரு பயப்படறது… அதெல்லாம் முடியாது… ரஞ்சி… நாளையிலேருந்து நீ எப்பவும் வந்த நேரத்துக்கே வேலைக்கு வா… உன்னை யாரு என்ன பண்றான்னு நா பார்க்குறேன்’ என்று இராஜசேகர் சொல்ல வேம்பங்குடி ஆட்கள் அனைவரும் அதை வழிமொழிந்தார்கள்.

 

அன்றிலிருந்து பத்தாவது நாள் நிரஞ்சனியின் மீது ஆசைப்பட்ட இருவரும் மருத்துவமனையில் கட்டோடு படுத்துகிடந்தார்கள்.

 

இன்று

 

நிரஞ்சனிக்கு ஒரு டாக்டர் மாப்பிள்ளையை பார்த்துவிட்டார்கள். ஜாதகம் பார்த்து மாப்பிள்ளை வீட்டோடு பேசிவிட்டார்கள்.  மாப்பிள்ளைக்கும் பெண்ணின் புகைப்படம் பார்த்து பிடித்துவிட்டது.

 

“மாமா… நாளைக்கு பொண்ணு பாக்க வர சொல்லியிருக்கேன்… அவள ரெடியா இருக்க சொல்லுங்க…” அல்லியின் கணவர் வேணுவிடம் இராஜசேகர் சொன்னான்.

 

“சரி மாப்ள நா சொல்லிடறேன்… அல்லி… மாப்ளைக்கு காப்பி கொண்டா…” சமயலறையில் இருந்த மனைவியிடம் சத்தமாக சொன்னார்.

 

அல்லி காபியை கொண்டு வந்து இராஜசேகரிடம் கொடுத்துவிட்டு ஓரமாக நின்றாள்.

 

“மாப்ள வீட்டுக்கு நம்ப ரஞ்சி விஷயமெல்லாம் தெரியுமா?” பாட்டி பாக்கியத்தம்மாள் விபரமாக கேட்டார்.

 

“எந்த  மூஞ்சிய வச்சுகிட்டு நா அதெல்லாம் சொல்றது… அந்த தரகர்கிட்ட சொல்ல சொன்னேன்… அவன் சொல்லியிருப்பான்…” ராஜசேகர் அலுத்துக் கொண்டு பதில் சொன்னான்.

 

“அத்த…. அவளுக்கு நல்ல துணியெல்லாம் இங்க இருக்கா… இல்ல வேம்பங்குடியில வச்சிருக்காளா…. வேணுன்னா… நா போயி எடுத்துகிட்டு வந்து கொடுத்துட்டு போறேன்…”

 

“அதெல்லாம் அக்கா நேத்தே கொண்டு வந்துட்டு மாப்ள…”

 

“சரி நாளைக்கு வரும்போது நீருவோட நகைய கொண்டு வர்றேன்… கல்யாணம் கூடிட்டுன்னா அந்த நகை எல்லாமே ரஞ்சிக்கே கொடுத்துடுறேன்… மேல தேவைன்னா புதுசு வாங்கி கொடுக்கிறேன்…” என்றான்.

 

“சரி மாப்ள…”

 

“அப்போ நா கெளம்புறேன் மாமா… வர்றேன் பாட்டி.. வரேன் அத்த…” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.

 

அவன் சென்றதும் “சித்தி… எனக்கு கல்யாணம் வேண்டாம் சித்தி…. நீங்களாவது சொல்லுகளேன்…” என்று நிரஞ்சனி கெஞ்சினாள்.

 

“என்ன ரஞ்சி இப்படி சொல்ற… நாளைக்கு நீ பிரச்சன பண்ணினா சித்தப்பா மானம் போயிடும்… அந்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்… உனக்கு நல்லதுதான் நாங்க செய்வோம்… எங்கள நம்பி இந்த கல்யாணத்துக்கு சம்மதிடி…”

 

“சித்தி… என்னால முடியல சித்தி… எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்திடுங்க…” அவள் கையெடுத்து கும்பிட்டாள்.

 

“சரி… நா நிறுத்த முயற்சி செய்றேன்… நீ நாளைக்கு பிரச்சன செய்யாம சபைல வந்து நில்லு…”

 

நிரஞ்சனிக்கு வேறு வழி இல்லை. அவள் கலங்கிய கண்களுடன் மொட்டை மாடியை தஞ்சம் அடைந்தாள்.

 

‘கடவுளே… என்ன காப்பாத்த நீ வர மாட்டியா…? என்னால இந்த நரங்கத்துல இருக்க முடியலையே… எனக்கு ஏதாவது தீராத நோயை கொடுத்து சாகடிச்சுடேன்….” என்று இருளை கடவுளாக நினைத்து மனதிற்குள் கதறினாள்.

 

“ரஞ்சி… ஏண்டி இருட்ல நிக்கிற…?”

 

“என்ன ரஞ்சி… நீ எதுக்கு இப்போ இங்க வந்த… பனியா இருக்கு நீ போ…”

 

“நீயும் வாடி… ”

 

“ப்ச்… ”

 

“ரஞ்சி… ஏண்டி இப்படி விரக்தியா இருக்க…. உனக்கு நிச்சயமா நல்லது நடக்கும்டி….”

 

“நல்லதா… இப்போதைக்கு சாவு ஒன்னு தான் எனக்கு நல்லது…”

 

“சீ… சீ…என்னடி பேச்சு இது… சாவுதான் பிரச்னைக்கு தீர்வுன்னா, இன்னைக்கு யாருமே உயிரோட இருக்க முடியாது. பைத்தியம் மாதிரி பேசாத…”

 

“அடி போடி… அணுவணுவா சாகுறதுக்கு ஒரேடியா சாகுறது மேல். உங்க பெரியம்மாவும் பெரியப்பாவும் பண்ணுறது சரின்னு உனக்கு தோணுதா…? பெத்த பொண்ணுக்கு அடுத்தவன கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்காங்க… எனக்குன்னு ஒரு மனசு இருக்குன்னு யாருக்குமே தோன மாட்டேங்குதே…  இது நியாயமா…? ”

 

“என்ன செய்றது ரஞ்சி… நம்ப குடும்ப சூழ்நிலை அப்படி…”

 

“சரி நான் இவங்களுக்கு பொண்ணா பிறந்துவிட்ட பாவத்துக்கு இந்த வேதனையை அனுபவிக்கலாம். ஆனால் எந்த பாவமும் பண்ணாத என் புகழ் எதுக்கு கஷ்டப்படனும்….? உனக்கு தெரியுமா ரஞ்சி… அந்த பிரசன்னா பிரச்சனை பண்ணினப்ப யாருமே என்னை நம்பள… ஒருத்தர் கூட நம்பள… என்னோட புகழ் மட்டும் தான்… ” அவளுக்கு மேல பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

 

“ரஞ்சி… எனக்காக இல்லைன்னாலும் புகழ்க்காக நானும் அவரும் சேரனும்டி… நான் இல்லைன்னா அவர் இல்லைடி… எனக்கு தெரியும்…. நல்லா தெரியும்…”

 

அவள் முகத்தை மூடிக்கொண்டு இருளில் கைப்பிடி சுவர் ஓரம் சரிந்து அமர்ந்து அழுதாள். தேம்பி தேம்பி அழுதாள். அவள் இவ்வளவு நாள் முயன்று தனக்குள் வைத்திருந்த தைரியம் அந்த கண்ணீரோடு கரைந்தது.

 




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    இப்பகுதி நன்றாக இருந்தது .

    நன்றி

You cannot copy content of this page