Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ-13

அத்தியாயம் – 13

 

அன்று

 

புகழேந்தியை பிரசன்னாவும் அவனுடைய கையாட்களும் தாக்கிவிட்டார்கள். அதனால் புகழேந்தி அவன் வேலைப் பார்க்கும் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப் பட்டிருந்தான். தலையிலும் கையிலும் கட்டுடன் கண் மூடி சோர்வாக படுத்திருக்கும் புகழேந்தியை பார்க்கும் போது நிரஞ்சனிக்கு தாங்க முடியவில்லை.

 

‘யார் இவன்…? எந்த ஊரில் பிறந்தவன்…? இவன் படிப்பு என்ன…. வேலை என்ன… வசதி என்ன…? இவனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்…? எனக்காக இப்படி அடிப்பட்டு கிடக்கிறானே…!’ என்று நிரஞ்சனியின் மனம் உருகியது. கண் மூடி படுத்திருப்பவனை தொல்லை செய்யாமல் அவன் காலடியில் ஒரு நாற்காலி போட்டு தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

 

காலில் வெதுவெதுப்பாக எதுவோ படுவதை உணர்ந்து கண்விழித்து பார்த்த புகழேந்திக்கு இன்ப அதிர்ச்சி. நிரஞ்சனி…..

 

“ஹேய்… ஜெனி…” அவன் உற்சாகமாகவே அவளை அழைத்தான்.

 

அவனுடைய குரல் கேட்டு கண்களை துடைத்து கொண்டு நிரஞ்சனி நிமிர்ந்து பார்த்தாள்.

 

“எப்போ வந்த… ஏன் என்னை எழுப்பல…?”

 

“இல்ல… தொல்லை செய்ய வேண்டாமே என்று தான்…. சாரி சார்… என்னால தான்… உங்களுக்கு… சாரி சார்…”

 

“உனக்கு யார் சொன்னது…?”

 

“அண்ணி இன்னிக்கு காலையில என்னை ‘லேப்ல’ வந்து பார்த்தாங்க…. எல்லாத்தையும் சொன்னாங்க…” அவள் வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்

 

“அவங்க எனக்கு தான் அண்ணி… உனக்கு அக்கா…” அவன் கண்களில் சிரிப்புடன் அவளிடம் சொன்னான்.

 

“சாரி சார்… அக்கா தான் சொன்னாங்க…”

 

அவன் எதற்காக அவளை அக்கா என்று அழைக்க சொல்கிறான் என்று யோசிக்காமலே, அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு நயந்தியை அக்கா என்று குறிப்பிட்டாள்.

 

புகழேந்தி லேசாக சிரித்துக் கொண்டான்.

 

“உன்னோட பிரச்சனை என்னோட பிரச்சனை ஜெனி… அதை நீ ஏன் பிரிச்சு பார்க்குற…?” என்று கேட்டான். நிரஞ்சனி விழித்தாள்.

 

“சார் நீங்க என்ன சொல்றீங்க… என்னோட பிரச்சனை எப்படி உங்களோடதுன்னு ஆகும்…?” அவள் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரியாதது போல் கேட்டாள்.

 

“அதுதான் அன்னிக்கே சொன்னேனே…!” என்று சொல்லி ஒரு நிமிடம் இடைவெளிவிட்டு பின் சொன்னான்.

 

“உன்னை நான் கல்யாணம் செய்து கொள்ள விரும்புறேன் ஜெனி…” அவனுடைய குரல் காதலால் உருகியது.

 

“சார் ப்ளீஸ்… இதெல்லாம் நடக்காது… உங்களோட தகுதி வேற… என்னோடது வேற….” அவள் குரல் படபடப்பில் நடுங்கியது.

 

“என்ன தகுதி… மண்ணாங்கட்டி… ஏன் நடக்காது…” அவன் சற்று கோவமாக கேட்டான்.

 

“சார்… இப்போ நீங்களும் அந்த போலீஸ்காரன் மாதிரி தான் நடந்துக்குறீங்க…”

 

புகழ் அவளைப் பார்த்து முறைத்தான். பின், “அப்போ நானும் அவனும் உனக்கு ஒன்னு தானா…?” என்று கேட்டான்.

 

“நீங்க அப்படிதானே நடந்துக்குறீங்க…?”

 

புகழேந்தி அவளை ஒருமுறை ஆழமாக பார்த்துவிட்டு, எதுவும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். நிரஞ்சனிக்கு தவிப்பாக இருந்தது. அவனை சமாதானம் செய்ய வேண்டும் போல் இருந்தது. ஆனால் அப்படி செய்தால் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும்…?

 

அதைப் பற்றி மேலே யோசிக்க முடியாமல் அந்த அறையிலிருந்து வெளியேறிவிட்டாள். அவள் வெளியேறிவிட்டது தெரிந்த பின் கண்களை திறந்து பார்த்த புகழேந்தியின் கண்களில் அடிபட்ட வலி தெரிந்தது.

 

அடுத்த மூன்று நாட்கள் புகழ் மருத்துவமனையில் தான் இருந்தான். ஆனால் நிரஞ்சனி அவனை பார்க்க வரும் போதெல்லாம் அவளை கண்டுகொள்ளாமல் தவிக்கவிட்டான். அங்கிருந்த மூன்று நாட்களும் அவன் நிரஞ்சனியுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

 

அவன் வீட்டிற்கு செல்லும் நாள் அவனுடைய உடைமைகளை எல்லாம் எடுத்துவைக்க அவனுடைய அண்ணி நயந்திக்கு நிரஞ்சனி உதவி செய்தாள். அவனுடைய அறையில் இருந்த ஒவ்வொரு நொடியும் அவன் ஏதாவது ஒரு வார்த்தை அவளிடம் பேசுவான்… ஒரு பார்வை பார்ப்பான் என்று எதிர் பார்த்த நிரஞ்சனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வீட்டிற்கு கிளம்பும் போது கூட அவளிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் கிளம்பி போய்விட்டான்.

 

நிரஞ்சனிக்கு தான் அவன் மருத்துவமனையிலிருந்து சென்றதும் மருத்துவமனையே காலியாகிவிட்டது போல் ஆனது. வாழ்க்கையில் எதுவுமே இல்லாதது போல் வெறுமையாக இருந்தது.

 

 

இன்று

 

சிவரஞ்சனியின் கைபேசிக்கு புகழ் தொடர்ந்து தொடர்புகொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் சிவரஞ்சனி அவனுடைய அழைப்பை துண்டித்துக் கொண்டே இருந்தாள். அவளுக்கு அது புகழேந்தியின் நம்பர் என்று தெரிந்துவிட்டது. நேற்று நடந்தது வீட்டில் அனைவரையுமே நன்றாக பாதித்துவிட்டது.

 

பெண் பார்க்க அவர்கள் வந்துவிட்டு பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தாலும் அது ஒருவிதமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும். ஆனால் அவர்கள் வராமலே இருந்துவிட்டது அக்கம் பக்கத்தில் காட்டுத் தீயாக பரவியது. எல்லோருக்கும் நிரஞ்சனியின் விஷயம் கண் காது மூக்கு வைத்து பேசப்பட்டு நாடகமாக மேடை போட்டு காட்டப்பட்டுவிட்டது.

 

இந்த நேரத்தில் புகழேந்தியின் அழைப்பை சிவரஞ்சனி எடுத்து அது யாருக்காவது தெரிந்துவிட்டால், அவ்வளவுதான். வீட்டில் பெரிய பூகம்பமே வெடிக்கும். அதில் நிரஞ்சனி தான் முதல் பலி. ‘எதற்கு வம்பு’ என்று அவள் கைபேசியை அணைத்து கைபையில் போட்டு பீரோவில் வைத்துவிட்டாள்.

 

ஆனால் புகழேந்தி விடவில்லை. முயற்சி செய்து கொண்டே இருந்தான். அவனுடைய நண்பனுடைய நண்பன்  வளநாடாம். அவன் மூலமாக நிரஞ்சனியின் சித்தியின் வீட்டை தெரிந்து கொண்டவன் அந்த பையன் மூலமாகவே அல்லியின் வீட்டை கண்காணித்தான். அப்படி செய்ததில் நேற்று நடந்த சம்பவங்கள் அவனுக்கு எட்டிவிட்டது. அதை பற்றி அவனுக்கு நிரஞ்சனியிடம் பேச வேண்டியிருந்தது.

 

நீண்ட நேரம் முயற்சி செய்து பார்த்த புகழ் நிரஞ்சனியை தொடர்புகொள்ள முடியாததால் வளநாடு நோக்கி புறப்பட்ட முடிவுசெய்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் நிரஞ்சனியின் சித்தி வீட்டின் முன் காரை நிறுத்தினான்.

 

கார் சத்தம் கேட்டு வாசல் பக்கம் எட்டிப் பார்த்த நிரஞ்சனி அங்கு புகழேந்தியின் காரை பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்தாள். வேகமாக வெளிப்பக்கம் ஓடிவந்தாள். சிவரஞ்சனி பின் பக்கம் அவளுடைய குழந்தையை குளிக்க வைத்துக் கொண்டிருதாள். சித்தப்பா வயலுக்கு சென்றுவிட்டார். சித்தி கோவிலுக்கு சென்றுவிட்டாள்.

 

யாரும் பார்க்கும் முன் புகழேந்தியை அங்கிருந்து அனுப்பிவிட எண்ணி நிரஞ்சனி வாசல் பக்கம் வேகமாக ஓடிவந்தாள்.

 

காரிலிருந்து இறங்கிய புகழ் திண்ணைக்கு வந்துவிட்டான். திணைக்கு ஓடிவந்த நிரஞ்சனி அப்போதுதான் பார்த்தாள்… அவளுடைய பாட்டி திண்ணையில் ஒரு மூலையில் கண்களை மூடி கட்டிலில் படுத்திருந்தார்.

 

எதுவும் பேச முடியாத நிரஞ்சனி அவனையும் எதுவும் பேசவேண்டாம் என்று வாயில் விரல் வைத்துக் காட்டி எச்சரித்தாள். ‘ஏன் இங்க வந்தீங்க… போயிடுங்க…’ என்று கைகளை கூப்பி சத்தம் வராமல் கெஞ்சினாள்.

 

அவளை பார்த்து பலநாட்கள் கழித்து இன்று தான் பார்க்கிறான் புகழ். அவள் உடல் மெலிந்து லேசாக கருத்து இருந்தது. அவளுடைய உருமாற்றமே அவள் எப்படி  இருக்கிறாள் என்று சொன்னது.

 

புகழ் பேச வாயெடுக்கும் போது, உள்ளே நுழைந்த அல்லி “யார் நீங்க…? என்ன வேணும்?” என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

 

நிரஞ்சனிக்கு இதயம் வேகமாக துடித்தது. பயத்தில் உடல் தொப்பலாக வியர்த்துவிட்டது. ‘இவன் எதுவும் சொல்லி வில்லங்கம் ஆகிவிடக் கூடாதே…’ என்று அவள் மனம் வேகமாக சிந்தித்தது.

 

புகழ் அவளுக்குள் நிகழும் மாற்றங்களை கவனித்தான். அவளை ஆழமாக பார்த்தான்.

 

அவர்கள் இருவரின் நிலையையும் பார்த்த அல்லிக்கு அவன் யார் என்று கண்டுபிடிக்க வெகு நேரம் ஆகவில்லை. நிரஞ்சனியின் படபடப்பும்… புதியவனுடைய நிரஞ்சனி மீதான பார்வையும் அவன் தான் புகழேந்தி என சொன்னது. ஆனால் தனக்கு தெரிந்ததை காட்டிக் கொள்ளாமல் புதியவனின் பதிலுக்காக காத்திருப்பதை போல் காட்டிக் கொண்டாள் அல்லி.

 

புகழ் பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டு “அட்ரஸ் கேட்டு வந்தாங்க சித்தி…” என்றாள் நிரஞ்சனி.

 

“யார் அட்ரஸ்…?”

 

அதற்கும் நிரஞ்சனியே பதில் சொன்னாள். “அது வந்து… இராமானுஜமாமே…. ” என்று திணறினாள்.

 

“எந்த ராமானுஜம்…?”  சித்தி விடாமல் விசாரிக்க, புகழ் நிரஞ்சனிக்கு உதவினான்.

 

“EB -ல வேலை செய்ற ராமானுஜம் வீடு எங்க இருக்குன்னு தெரியுமா…?”

 

“இல்லங்க… அப்படி யாரும் இந்த பக்கம் இல்ல… நீங்க வேற யார்கிட்டையாவது கேட்டுக்கோங்க…” என்று அவனிடம் சொல்லிவிட்டு “ரஞ்சி உள்ள போ…” என்று நிரஞ்சனிக்கு உத்தரவு பிறப்பித்தாள்.

 

புகழேந்தி நிரஞ்சனியின் வீட்டில் நேரடியாக பேசிவிடத்தான் வந்தான். ஆனால் நிரஞ்சனியின் கெஞ்சும் பார்வை அவளை மீறி அவனை எதுவும் செய்யவிடாமல் தடுத்தது. அவன் வந்த வழியே திரும்பிவிட்டான்.

 

அவன் காரில் ஏறி அல்லியின் வீட்டை கடக்கும் போது எதிரில் இராஜசேகர் அல்லியின் வீட்டை நோக்கி வந்தான். எதிரெதிர் திசையில் பயணம் செய்து கொண்டிருந்த இருவர் மனத்திலும் தீ…! ஒருவன் மனதில் காதல் தீ… மற்றொருவன் மனதில் ஜாதி வெறி என்னும் தீ…

 

இதில் யார் யாரை வெல்வார்கள் என்று பார்ப்போம்…




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    நன்றாக இருந்தது இப்பகுதி.

    நன்றி

You cannot copy content of this page