Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ-15

 அத்தியாயம் – 15

 

அன்று

 

நிரஞ்சனியையும் புகழேந்தியையும் பற்றி மருத்துவமனையில் ‘கிசு கிசு’ பரவிவிட்டது. அதை தெரிந்து கொண்ட புகழேந்தியின் நண்பன் டாக்டர் ஷங்கர் அதை பற்றி அவனிடம் கேட்டான்.

 

“என்னடா புகழ் இது…?   யாருக்காவது மனிதாபிமானத்தோட உதவி செஞ்சா கெட்ட பேர் தான் கிடைக்கும் போல…” ஷங்கர் அலுத்துக் கொண்டான்.

 

“என்னடா ஷங்கர்…? ஏன் டென்ஷனா இருக்க…” புகழேந்தி புரியாமல் கேட்டான்.

 

“ஒரு டாக்டர் ஒரு நர்ஸ்சோடா ஒரு வார்த்தை அதிகமா பேசினாலே அந்த டாக்டரை பற்றி மருத்துவமனையில் வதந்தி பரவ ஆரம்பிச்சிடும்…  இதுல நீ அந்த பொண்ணு நிரஞ்சனிக்கு அவ்வளவு உதவி செஞ்ச… அது கடைசீல உனக்கே பிரச்சனையா போச்சு… போ… ” என்று வருத்தமாக சொன்னான்.

 

“என்ன பிரச்சனை….?” புகழ் உண்மையாகவே புரியாமல் கேட்டான். அதற்கு ஷங்கர், மருத்துவமனையில் தற்போது பேசப்படும் ‘கிசு கிசு’ -வை பற்றி சொன்னான்.

 

“ஹேய்… நிஜமாவா சொல்ற….? ஹப்பாடா… இனி பிரச்சனை இல்ல… இவ்வளவு நாளும் ஜெனியோட பேசுறதுக்கு யோசிச்சு யோசிச்சு பேச வேண்டியிருந்தது… இனி அந்த பிரச்சனை இல்ல…” என்றான்.

 

ஷங்கர் வாயை ‘ஆ’ வென திறந்துக்கொண்டு விழித்தான். பின் சுதாரித்துக்  கொண்டு சொன்னான்….

 

“என்னடா சொல்ற நீ…?”

 

“எஸ்… ஐ லவ் ஹர்….” புகழ் நிரஞ்சனியிடமே தன்னுடைய காதலை சொல்வது போல் உணர்வுபூர்வமாக  சொன்னான்.

 

“ஏய்… அந்த பொண்ணு வேம்பங்குடி தானே…? வேண்டாம் புகழ்… அந்த ஊர் பெண்ணை காதலித்து அவ்வளவு சுலபமா நீ கல்யாணம் செய்துகொள்ள முடியாது. உன்னுடைய காதல் கல்யாணத்தில் முடிவது ரொம்பக் கஷ்டம்டா… சொன்னா கேளு…” என்று ஆரம்பத்திலேயே நண்பனை தடுத்துவிடும் எண்ணத்தில் அவனுக்கு அறிவுரை சொன்னான். ஆனால் அவனுக்கு தெரியவில்லை… அவனுடைய நண்பன் திரும்ப முடியாத அளவிற்கு தன்னுடைய காதலில் ஆழமாக மூழ்கிவிட்டான் என்று…

 

காலில் பட்ட அடி குணமாக நான்கு நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு இன்று தான்  நிரஞ்சனி மருத்துவமனைக்கு வந்தாள். அவளுக்கு இலைமறை காய்மறையாக விஷயம் தெரிந்தது. அவளையும் புகழேந்தியையும் பற்றி மருத்துவமனையில் சக ஊழியர்கள் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று புரிந்ததும் அவள் புகழேந்தியை விட்டு விலகிப் போனாள்.

 

புகழேந்திக்கு அவளுடைய செயல் ஏமாற்றமாக இருந்தது. அவள் மறுபடி வேலைக்கு வந்ததும் அவளோடு பேசி பழக அவன் முயன்றால் அவள் முன்பைவிட பல காததூரம் தள்ளி ஓடுகிறாள்.

 

அவன் கைபேசியில் அவளை அழைத்துப் பார்த்தான். அவள் எடுக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தான். அவள் கை பேசியை அணைத்து விட்டாள். பலமுறை முயன்று பார்த்துவிட்டு அவனுடைய உதவியாளரை அனுப்பி “நிரஞ்சனியை  தன்னை வந்து பார்க்கும்” படி சொல்ல சொன்னான்.

 

இதற்கு மேல் போய் பார்க்காமல் இருந்தால் அதுவே பெரிய செய்தியாக மாறி மருத்துவமனை முழுக்க பரவிவிடும் என்று நினைத்த நிரஞ்சனி உடனே அவனை சென்று பார்த்தாள்.

 

“எதுக்கு வர சொன்னீங்க…?” விறைப்பாக கேட்டாள்.

 

அவன் OP க்கு செல்ல இன்னும் ஒருமணி நேரம் இருந்தது. அதனால் ஓய்வாக அவனுடைய அறையில் அமர்ந்திருந்தான்.

 

“உக்காரு…”

 

“நீங்க சொல்லுங்க….”

 

“உக்காருன்னு சொன்னேன்…”

 

“அவள் அவனுக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்”

 

“எதுக்கு இன்னிக்கு நீ கேண்டீன் வரல… போன் பண்ணினப்பவும் எடுக்கல… நான்கு நாட்களுக்கு பிறகு இன்னிக்கு தான் வந்திருக்க… ஏன் ஒரு வார்த்தை என்னோடு  பேசாம… என் கண்ணுல படாம ஓடி ஒளியிர….?” அவன் பட்டென்று கேட்டான்.

 

“ப்ச்… நம்பள பத்தி மருத்துவமனைல தப்பா பேசிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்… அதுதான்…” அவள் குரல் எழும்பாமல் மெதுவாக சொன்னாள்.

 

“என்ன  தப்பா பேசிக்கிறாங்க…?”

 

“புரியாதது மாதிரி கேட்காதிங்க…”

 

“புரியாமல் தான் கேட்கிறேன்…? எல்லாரும் உண்மையை தானே பேசிக்கிறாங்க… இதுல என்ன தப்பு இருக்கு?”

 

இப்போது நிரஞ்சனி அவனை முறைத்தாள். “என்ன சொல்றீங்க நீங்க…?”

 

“இப்போ நீ புரியாதது மாதிரி கேட்காத… என்னை கல்யாணம் செஞ்சுக்க உனக்கு விருப்பமா இல்லையா…?” அவன் அழுத்தமாக கேட்டான்.

 

“என்ன இப்படி கேட்கிறீங்க…?” அவள் அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

 

“உனக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா இல்லையா…? ”

 

“நா எப்படி உங்களுக்கு…. வேற நல்ல பெண்ணை…”

 

“உனக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா இல்லையா…? அதை மட்டும் சொல்லு?”

 

“இப்படி திடீர்ன்னு கேட்டால் எப்படி…?” அவள் தடுமாறினாள்.

 

“உனக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா இல்லையா…? ” அவன் விடாபிடியாக கேட்டான்.

 

“வேற யாரையும் நான் கல்யாணம் செஞ்சுக்க போறதில்லை…. எனக்கு கல்யாணமே வேண்டாம்….” அவள் தன் உணர்வுகளை வெகுவாக கட்டுப்படுத்த முயன்று கொண்டே பதில் சொன்னாள்.

 

அவன் அவளை ஆழமாகப் பார்த்தான். “ஜெனி… எனக்கு இன்னிக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். மதில் மேல் பூனை மாதிரி என்னால நிக்க முடியாது… சொல்லு…  உனக்கு என்னை கல்யானம் செஞ்சுக்க விருப்பமா… இல்லையா… இப்போவே சொல்லு…?” ஒவ்வொரு வார்த்தையாக தனித்தனியாக அழுத்தமாக கேட்டான்.

 

“எங்க வீட்டுல இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க சார்… என்னை விட்டுடுங்க…” அவள் அழுதுவிடுபவள் போல் சொன்னாள்,

 

அவளுடைய மனம் முழுக்க அவனுடைய முகம் நிறைந்திருக்கும் போது அவனை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று அவளால் எப்படி சொல்ல முடியும். அவள் அவனுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.

 

“அப்போ உனக்கு உங்க வீட்டோட சம்மதம் தான் பிரச்சனையா… மற்றபடி உனக்கு சம்மதம் தானே…”: என்று கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான்.

 

அவள் பதட்டமாகிவிட்டாள். “எ.. என்ன சார்… அதெல்லாம் இல்ல…”

 

“அப்போ உனக்கு என்னை பிடிக்கவில்லை என்று நேரடியாக என் முகத்தை பார்த்து சொல்லிவிட்டு போ…” என்றான் குரலில் கொஞ்சம் கூட இளக்கமே இல்லாமல்.

 

“………..” அவள் பதில் பேச முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

 

“சொல்லு… ஏன் பேசாம இருக்க…? சொல்லு ஜெனி…. என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டு போ… சொல்லு…” என்று அவளை படுத்தியதில் அவள் அழுதுவிட்டாள்.

 

“ஐயோ… பிடிச்சுருக்கு… உங்கள பிடிச்சிருக்கு… ரொம்பப் பிடிச்சிருக்கு… உங்களைத் தவிர வேறு யாரையும் பிடிக்காது… பிடிக்காது…” என்று சொல்லிவிட்டு முகத்தை மூடிக்கொண்டு தேம்பி அழுதாள்.

 

அவன் அவனுடைய இருக்கையிலிருந்து எழுந்து வந்து அவளுடைய தலையை தடவிக் கொடுத்தான். அவன் மனதில் ஒரு அமைதி வந்திருந்தது. ஆனால் நிரஞ்சனியின் மனதில் அமைதி போய்விட்டது. இதன் முடிவு எப்படி இருக்கும் என்று அவள் சிந்தித்து சிந்தித்து அமைதியை இழந்து கொண்டிருந்தாள்.

  

இன்று

 

தாமரையும் அல்லியும் சகோதரிகள் என்றாலும், தாமரை படபடப்பாக பேசி முக்கிய விஷயத்தை கோட்டைவிட்டுவிடும் ரகம். அவளை சுலபமாக ஏமாற்றலாம். ஆனால் அல்லி அழுத்தமாக காரியத்தை சாதிக்கும் ரகம். அவளை சுலபமாக ஏமாற்ற முடியாது.

 

அன்று புகழ் வீட்டிற்கே வந்துவிட்ட விஷயத்தை அறிந்து கொண்ட அல்லி அதை பற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை. ஆனால் அன்றிலிருந்து நிரஞ்சனியை மிக கவனமாக கவனிக்க ஆரம்பித்தாள்.

 

‘அன்று புகழ் கொடுத்தனுப்பிய கடிதத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டோம்’ என்று நிரஞ்சனி நினைத்துக் கொண்டாள். ஆனால் அவள் செம்போடு சேர்த்து ஒரு காகிதத்தை வாங்கியதையும்… உடனே குளியலறைக்குள் சென்று தாள் போட்டுக் கொண்டதையும் கவனித்திருந்த அல்லி ‘நிரஞ்சனிக்கும் புகழேந்திக்கும் தொடர்பு இருக்கிறது’ என்பதை தெளிவாக தெரிந்து கொண்டாள்.

 

அதோடு இப்போதெல்லாம் நிரஞ்சனியும் சிவரஞ்சனியும் தனியாக தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசிக் கொள்கிறார்கள். இதைப் பற்றி சிவரஞ்சனியிடம் தனியாக விசாரித்தால் அவள் நிரஞ்சனிக்கு சாதகமாக எதையாவது பேசுகிறாள். இது எங்கு போய் முடியும்….?

 

‘ஒருவேளை அந்த புகழேந்தியை திருமணம் செய்ய எண்ணி நிரஞ்சனி வீட்டை விட்டு போய்விட்டால்….!? அய்யய்யோ…. அதைவிட அவமானம் வேறு என்ன இருக்க முடியும்…? அதன் பிறகு அக்கா உயிரோடு இருப்பாளா என்பதே சந்தேகம் தான்… ‘ அல்லிக்கு பயம் வந்துவிட்டது. உடனே அவள்  இராஜசேகரிடம் பேச்சை ஆரம்பித்தாள்.

 

“மாப்ள… ராஞ்சிக்கு மாப்ள பார்க்கிற விஷயம் என்ன ஆச்சு…? ஒன்னு போனா நாம இன்னொண்ண பார்க்க வேண்டியது தான்… என்ன செய்றது…? அவளும் நம்ப பொண்ணு தானே… விட்டுட முடியுமா…?”

 

இத்தனை நாளும் நிரஞ்சனியின் கல்யாணத்துக்கு தடை சொல்லிக் கொண்டிருந்த அல்லியே இன்று பேச்சை ஆரம்பித்தது இராஜசேகரின் நெற்றியை சுருங்கச் செய்தது.

 

“என்னத்த…? அந்த பய ஏதும் இந்த பக்கம் வந்தானா…?” என்று சரியாக பாய்ண்டை பிடித்தான்.

 

“அதெல்லாம் இல்ல மாப்ள… ஒரு தடவ ஆரம்பிச்சுட்டு நாம பாட்டுக்கு இருந்துட கூடாது… அதான் சொன்னேன்…” என்று சமாளித்தாள் அல்லி.

 

“அதானே பாத்தே(ன்)… சரித்த… பாக்க ஆரம்பிச்சுடுவோம்… நல்ல வரனா வந்தா உடனே முடிச்சிரலாம்….” என்றான் இராஜசேகர்.

 

அன்றிலிருந்து நிரஞ்சனிக்கு மாப்பிள்ளை தேடும் படலம் துரிதப்படுத்தப் பட்டது. இதுவரை தடை சொல்லிக் கொண்டிருந்த அல்லியும் இப்போது மாப்பிள்ளை வேட்டையில் தீவிரமாக இறங்கிவிட்டார். தினமும் இரண்டு மூன்று ஜாதகம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தது.

 

இராஜசேகர் எவ்வளவு வேண்டுமானாலும் சீர்வரிசை செய்ய தயாராக இருந்தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதை திருப்பித் தந்துவிடும் எண்ணம் தாமரைக்கு இருந்தாலும் இந்த நேரத்தில் அவன் பொறுப்பாக மாமனார் பிரச்னையை தன்னுடையதாக எண்ணி பாரம் தாங்குவதில்  அனைவருக்கும் பெருமை…. மகிழ்ச்சி…

 

**********************

 

நிரஞ்சனியிடம் பேசிவிட்டு கோபமாக கைபேசியை அணைத்த புகழேந்திக்கு கோபம் குறையவே இல்லை. அவன் மூளை நிரஞ்சனியின் வீட்டு ஆட்கள் செய்த… செய்து கொண்டிருக்கும்… தவறுகளை பற்றி  யோசித்தது. அப்போது அவனுக்கு அவளுடைய மாமா புகழேந்தியின் வீட்டில் வந்து சம்மந்தம் பேசியது நினைவிற்கு வந்தது.

 

அவன் அவருடைய கைபேசிக்கு தொடர்பு கொண்டான். அன்று அவர் புகழேந்தியின் வீட்டிற்கு வந்த போது அவருடைய நம்பரை புகழ் வாங்கிக் கொண்டான்.  அதில் இப்போது தொடர்பு கொண்டான்.

 

அவர் போனை எடுத்து “ஹலோ…” என்றது தான் தாமதம்.

 

அவ்வளவு கேவலமான வார்த்தைகளக் கூட அவனால் பயன்படுத்த முடியுமா என்று அவனுக்கே சந்தேகம் ஏற்படும் படி அவ்வளவு மோசமாக அவரை திட்டினான். பின்,

 

“என்னையா பூச்சாண்டி காட்றீங்க… உங்க ஊருக்கு நான் வந்தா என் தலையை எடுத்துருவீங்களா…? நீயும் உன் ஆளுங்களும் தஞ்சாவூர் பக்கம் வந்துடாதீங்க… தொலைச்சுடுவேன்…” என்று அவரை மிரட்டவேறு செய்தான்.

 

அவருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. பதிலுக்கு அவரும் பேசினார். போனிலேயே இருவரும் சண்டை போட்டு ஓய்ந்தார்கள்.

 

அந்த செய்தி உடனே அல்லியின் வீட்டு கூடத்திற்கு வந்தது. அனைவரும்  நிரஞ்சனியை பிடித்துக் கொண்டார்கள்.

 

“உனக்கு மாப்பிள்ளை பார்ப்பது அவனுக்கு எப்படி தெரியும்…? அவன் உனக்கு எப்படி தொடர்பு கொண்டான்….? என் அண்ணனை எப்படி அவன் பேசலாம்…? எல்லாம் உன்னால் தான்…” என்று தாமரை நிரஞ்சனியை உலுக்க அனைவரும் அது சரியே என்று ஆளாளுக்கு ஒன்று சொல்லி நிரஞ்சனியை வார்த்தைகளால் குதறினார்கள். யாரும் அவளுடன் முகம் கொடுத்து பேசாமல் அவளை  தனிமைப்படுத்தி கொன்றார்கள்.

 

அன்று என்னவோ இராஜசேகர் கொஞ்சம் அடக்கி வாசித்தான். எல்லோரும் கொதித்துப் போய் இருந்ததால் அவன் கொஞ்சம் அடக்கமாக இருந்தான் போலும்…

 

சிவரஞ்சனியால் நிரஞ்சனிக்கு எந்தவிதத்திலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. நிரஞ்சனிக்கும் புகழேந்தியின் செயலில் உடன்பாடு இல்லை தான். ‘ஏற்கனவே இருக்கும் நூல் கண்டு சிக்கலை இடியாப்ப சிக்கலாக மாற்றிவிட்டானே’ என்று அவன் மீது அவளுக்கும் கோபம் தான். ‘வயதுக்கு கூட  மரியாதை கொடுக்காமல் மாமாவை அவமதித்துவிட்டானே’ என்று அவன் மீது வருத்தம் தான்.

 

ஆனால் அதை அங்கு யார் ஏற்பார்கள்…? ‘நீ கொடுத்த தைரியத்தில் தான் அவன் பேசினான்’ என்று சொல்பவர்கள் அவளும் மாமாவிற்காக வருந்துகிறாள் என்று சொன்னாள் நம்புவார்களா…?

 

*******************

 

தாமரை அவளுடைய அண்ணன் கோபாலனை முதலில் புகழ் வீட்டிற்கு சென்று பேசிவிட்டு வர சொன்னதனால் தான் அவர் சென்றார். அவருக்கு புகழேந்தியின் ஜாதியை பற்றி தெரிந்திருக்கவில்லை. அதனால் சந்தோஷமாக சம்மந்தம் பேசிவிட்டு வந்தார்.

 

ஆனால் இராஜசேகர் அதை விசாரித்து கல்யாணத்தை தடை செய்துவிட்டான். அதன் பிறகு அது பற்றி தாமரை கோபாலனிடம் சென்று எதுவும் பேசவில்லை. அதனால் அவர் கோபமாக இருந்தார். இருந்தாலும் தங்கையின் நிலைமை என்னவோ என்று அவர் தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு வளநாட்டில் என்ன நடக்கிறது என்று அவராகவே போனிலும் மற்றவர்கள் மூலமாகவும் விசாரித்து தெரிந்து கொண்டிருந்தார்.

 

இன்று புகழ் தொலைபேசியில் அவரை சண்டை போட்டதும் அவருடைய கோபம் தாமரையின் மீது திரும்பியது. சம்மந்தம் பேச அனுப்பிவிட்டு அது வேண்டாம் என்று முடிவு எடுத்தவள் அதை பற்றி அவரிடம் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்திருந்தால் முறையாக அவனுடைய வீட்டிற்கு சென்று சம்மந்தம் பேசியவர் இந்த கல்யாணம் ஒத்துவராது என்று அவரே முறைப்படி சொல்லியிருப்பார். அதுதான் மரியாதை.

 

அப்படி சொல்லியிருந்தால் புகழ் இன்று அவரை கேள்வி கேட்டிருக்க முடியாது. அவரும் ஒரு வயதில் சிறிய பையனிடம் திட்டு வாங்கியிருக்க வேண்டியது இல்லாமல் போயிருக்கும். இதையெல்லாம் சிந்திக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்து அதன் படி ஆடும் தங்கை தாமரை மீது அவர் கடும் கோவத்தில் இருந்தார்.

 




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    நிரஞ்சனியின் காதலும் திருமணமும் நாளுக்கு நாள் சிக்கலாகிக்கொண்டு போகின்றதே.

    நன்றி

You cannot copy content of this page