மனதில் தீ-16
3436
1
அத்தியாயம் – 16
இன்று
நிரஞ்சனிக்கு பார்க்கும் மாப்பிள்ளையின் தரம் குறைந்து கொண்டே வந்தது. பார்க்கும் மாப்பிள்ளை எல்லாம் தட்டிக்கொண்டே போனது. அவளை பற்றி ஊரில் உள்ளவர்களுக்கு நல்லவிதமாக அபிப்ராயம் இல்லை. அதனால் விஷயம் மாப்பிள்ளை வீட்டிற்கு ஒன்றுக்கு இரண்டாக திரித்து சொல்லப்பட்டுவிடுகிறது.
பேச்சு ஆரம்பிக்கும் போது சுவாரஸ்யமாக ஆரம்பிப்பவர்கள் இரண்டு மூன்று நாட்களில் ‘பெண்ணை பற்றி தவறாக கேள்விப்பட்டோம்’ என்று சொல்லிவிட்டு கழண்டுவிடுகிரார்கள்.
ஒவ்வொருமுறையும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து ‘உங்கள் பெண் எங்களுக்கு வேண்டாம்’ என்ற செய்தி வரும் போதெல்லாம் நிரஞ்சனிக்கு அன்றைய நாள் நரகமாக மாறிவிடும். அந்த அளவுக்கு தாமரையும் இராஜசேகரும் அவள் மனதை காயப்படுத்தி விடுவார்கள். அவர்களும் அவளை நோகடிக்க எண்ணி செய்ய மாட்டார்கள். வெளியில் அவர்கள் படும் அவமானத்தை அவளிடம் கோபமாக காட்டுவார்கள்.
நிரஞ்சனி தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதை தடுக்க முடியாமலும், அது ஒவ்வொரு முறை தட்டிப் போகும் போது அதற்காக சந்தோசப் பட்டாலும், நிம்மதியை தொலைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருந்தாள். அதில் அவள் தனக்கு பார்க்கப் படும் மாப்பிள்ளைகளை பற்றி தெரிந்து கொள்ளாமலே இருந்தாள்.
இந்த நிலையில் சிவரஞ்சனி நிரஞ்சனியிடம் கேட்டாள். “என்னடி ரஞ்சி செய்யப்போற…”
“எதுக்குடி…?”
“உனக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருக்காங்க… தெரியாதது மாதிரி பேசுற…?”
“ஆமா… அதுக்கு என்ன…? எப்படியும் என்னை கல்யாணம் செஞ்சுக்க எவனும் வரப்போறதில்லை… ” என்று சாதரணமாக சொன்னாள்.
“இப்ப பார்த்திருக்குற மாப்பிள்ளை முடிவாயிடும் போலிருக்குடி…”
“என்னடி சொல்ற…? எப்படி?”
“மாப்பிள்ளை வேற யாரும் இல்ல… இராஜசேகர் மாமா தோட்டத்துல வேலை செய்ற தர்மன் தான்…. அவனுக்கு எல்லாமே தெரியும். நிலம் வீடு எல்லாம் கொடுக்கிறேன்னு சொன்னதும் அவனும் ஒத்துகிட்டானாம்… அவன் நம்ம ஜாதிங்கிறத தவிர… அவனுக்கு என்னடி தகுதி இருக்கு உன்ன கல்யாணம் செஞ்சுக்க… ஐயோ இந்த கொடுமைய என்னால சகிக்க முடியல…”
சிவரஞ்சனி சொன்னதை கேட்ட நிரஞ்சனிக்கு தலையில் ஒரு கூடை நெருப்பை அள்ளி கொட்டியது போல் இருந்தது. புகழேந்தியை தவிர அவளுக்கு யாரை மாப்பிளையாக பார்த்தாலும் அவளுக்கு சம்மதம் இல்லைதான். அது குப்பனாக இருந்தாலும் சரி சுப்பனாக இருந்தாலும் சரி… அதை பற்றி அவளுக்கு எந்த அபிப்ராயமும் இல்லை தான்….
ஆனால் அவளை பெற்றவளுடைய பாசத்தை நினைக்கும் போது அவளுக்கு புல்லரித்தது…
எவ்வளவு பெரிய காரியத்தை செய்திருக்கிறாள் அவளுடைய அன்னை….
படிப்பறிவு சுத்தமாக இல்லாத கைநாட்டு… சாயுங்காலம் ஆனால் கள்ளச்சாராயம் எங்கே என்று தேடி ஓடும் குடிகாரன்… ஒரு அடி நிலம் சொந்தமாக இல்லாத கூலி… பார்க்கவே பயங்கரமான உருவம்… இவன் எனக்கு மாப்பிள்ளையாம்… அதை யார் பார்த்திருந்தாலும்… என்னை பெற்றவள் அருமையாக வளர்த்தவள் அவனை மாப்பிள்ளையாக்க சம்மதித்துவிட்டாள்.
தந்தையை பற்றி பேச்சில்லை… அவர் எப்பவுமே அவள் மீதும் அவளுடைய அக்கா மீதும் பாசமாக இருக்க மாட்டார். ஆனால் அம்மா…! அவளால் எப்படி முடிந்தது…? அவளுக்கு என்ன அப்படி பிடிவாதம்…? எதை சாதிக்க என்னை இந்த நரகத்தில் தள்ள சம்மதித்தாள்….?
அவள் அவளுடைய அன்னையை தேடிச் சென்றாள்..
“ஏம்மா.. ஏம்மா இப்படி பண்ணின…? எனக்கு அந்த தர்மன் தான் மாப்பிள்ளையா…? உனக்கு எப்படி மனசு வந்தது…?”
அவர்கள் யாருக்குமே நிரஞ்சனியை தர்மனுக்கு கொடுக்க மனம் இல்லை. ஆனால் வேறு வழியே இல்லை… எவ்வளவு தேடியும் அவளுக்கு வேறு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. ஒரு முறைக்கு இரண்டு முறை பேர் கேட்டு போன பெண்ணை கட்ட எல்லோரும் தயங்கினார்கள்.
முதலில் அழகான படித்த வசதியான நல்ல குணம் உள்ள மாப்பிள்ளையை பார்த்தார்கள். அமையவில்லை…. அழகு இல்லை என்றால் பரவா இல்லை… வசதியான, படித்த நல்ல குணமான மாப்பிள்ளையாக இருந்தால் போதும் என்று நினைத்தார்கள்.
அதுவும் அமையவில்லை. சரி.. வசதி வேண்டாம்… படிப்பும் குணமும் போதும் என்று நினைத்தால் அதுவும் அமையவில்லை… சரி குணம் மட்டும் போதும் என்றால் “ம்ஹும்….”
அதன் பிறகுதான் இந்த தர்மனை பிடித்தார்கள்.
‘அவன் கொஞ்சம் குடிப்பான் அதுதானே… நம்ம தோட்டத்தில் வேலை செய்கிறான். நம்முடைய பேச்சை மீறி என்ன செய்துவிட முடியும்…? நம்ம ஜாதியா போய்விட்டான்… அவனை திருத்தி நம்ம வழிக்கு கொண்டு வந்து விடலாம்… சொத்து சுகமெல்லாம் நம்மலே உருவாக்கி கொடுத்துவிடலாம்…’
‘படிப்பென்ன படிப்பு.. நம்ம பெரிய மாப்பிள்ளை கூட படிக்கவில்லை… அவர் எவ்வளவு குணமா இருக்கார்… அது மாதிரி இவனும் இருப்பான்’ என்று ஒரு வழியாக தங்களை சமாதானம் செய்து கொண்டார்கள்.
இந்த நேரத்தில் நிரஞ்சனி இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் முதலில் அங்கிருந்த அல்லி, தாமரை, பாக்கியத்தம்மள் அனைவருமே திகைத்தார்கள். குற்ற உணர்வால் வாயடைத்தார்கள்.
ஆனால் அடுத்த கணமே தன்னை சுதாரித்துக் கொண்ட தாமரை “எல்லாத்துக்கும் நீதானடி காரணம்… நீயே உந்தலையில மண்ணள்ளி போட்டுகிட்ட… எங்கள எங்க போயி உனக்கு நல்ல மாப்ள புடிக்க சொன்ன… உம்பேரு தான் ஊரு சிரிக்குதே…” என்று நிரஞ்சனியை வார்த்தையால் குதறினாள்.
“இப்படியெல்லாம் பேசாதம்மா… எனக்கு தாங்க முடியல… நீ ஏம்மா என்ன ராணி மாதிரி வளத்த… இந்த மாப்பிள்ளைக்கு கொடுக்கவா…? எனக்கு கல்யாணமே வேண்டாம்மா… என்ன விட்டுடு…” அவள் கண்களில் கண்ணீரோடு யாசித்தாள்.
“கல்யாணம் பண்ணிக்காம… ஊரே பொண்ண கட்டிகுடுக்காம வீட்ல வச்சுருக்கேன்னு என்ன காரி துப்பவா… நீ கல்யாணமோ… கருமாதையோ… பண்ணிக்கிட்டு என்னைவிட்டு தொலைஞ்சா தான் எனக்கு நிம்மதி…” தயவு தாச்சன்யமே இல்லாமல் பேசினாள்.
“நீ என்ன கொலை பண்ணினா கூட பரவால்லம்மா… ஆனா என்ன உயிரோட வச்சு என்னோட உணர்வுகளை கொன்னு என்னை நடைபிணமா ஆக்கிகிட்டு இருக்கம்மா… எனக்கு நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் மனச வலிக்குதும்மா… தாங்க முடியல… நீ அன்னைக்கு சொன்னியே… ஏதோ விஷம் வாங்கி தர்றேன்னு… அதை தயவுசெஞ்சு வாஞ்சி கொடும்மா… ” என்று சொன்னவள் தாமரை ஏதோ பேச ஆரம்பிக்கவும் “எதுவும் சொல்லிடாதம்மா… சொல்லிடாத… இதுக்கு மேல எனக்கு உன்னோட பேச்ச தாங்குற சக்தி இல்ல…” என்று குமுறி அழுதாள்.
அங்கிருந்த அனைவருக்குமே ஆத்திரம் தொண்டையை அடைத்தது. தங்களுடைய முந்தானையை வைத்து வாயை அடைத்து அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டார்கள். நிரஞ்சனி உள்ளே சென்று அறை கதவை தாள் போட்டதும் கொள்ளை பக்கம் ஓடினார்கள். நிரஞ்சனிக்கு சத்தம் கேட்காத தூரம் சென்று தாமரை தரையில் புரண்டாள்.
“ஐயோ அல்லி… எம்மகள நானே கொல்லப்போறேனே…டி என்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டாளே… ராசாத்தி மாதிரி இருக்கருவளுக்கு கூலிகாரப்பயலாடி மாப்ள… நா என்ன செய்வேண்டி… எனக்கு வேற வழி தெரியலையே… ” என்று அழுதாள். அவளை சமாதனம் செய்ய முடியாமல்… தோன்றாமல் அல்லியும் அவளுடைய தாய் பாக்கியத்தம்மாளும் அழுதார்கள்.
அவர்கள் யாருக்குமே வேறு ஜாதிகாரனை மாப்பிள்ளையாக ஏற்கும் தைரியம் இல்லை. அதனால் வேறு வழியும் தெரியவில்லை..
அன்று
“ஹலோ… ஜெனி… என்ன பண்ணிட்டு இருக்க? நான் கான்டீன்ல உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரம் வா…?” அவள் அவனிடம் தன்னுடைய காதலை ஒத்துக்கொண்டதற்கு மறுநாள் புகழேந்தி நிரஞ்சனியை கைபேசியில் அழைத்துப் பேசினான்.
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நீங்க சாப்பிட்டுவிட்டு போங்க… நா அப்புறம் வர்றேன்…” அவள் அவனிடம் தன்னுடைய காதலை ஒத்துக் கொண்டாலும் அதை ரகசியமாக வைத்திருக்க விரும்பினாள்.
“என்ன வேலை லஞ்ச் டைம்ல… என்னோட சாப்பிட பிடிக்கலான்னா நேரடியா சொல்லிட வேண்டியதுதானே…”
“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க… ”
“வேற எப்படி பேச சொல்ற…? உன்னை நேற்று பார்த்தது. நான் ஒன்னும் வெட்டி ஆபீசர் இல்ல… எனக்கும் வேலை இருக்கு… அதை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு தான் உனக்காக இங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீ உனக்கு மட்டும் தான் வேலை இருக்க மாதிரி பேசினால் அதற்கு என்ன அர்த்தம்?”
“ஒரு அர்த்தமும் இல்லை…. இதோ வர்றேன்… கொஞ்சம் இருங்க…” என்று சொல்லிவிட்டு அவசரமாக காண்டீனுக்கு சென்றாள்.
அவன் அவளுக்கும் சாப்பாடு வாங்கி வைத்துவிட்டு அவளுக்காக காத்திருந்தான். அவள் தயங்கி தயங்கி அவனுக்கு எதிரில் வந்து அமர்ந்தாள். அவர்களை பலரும் கவனித்தார்கள். அது புகழேந்தியை கொஞ்சமும் பாதிக்கவில்லை. ஆனால் நிரஞ்சனிக்கு கூச்சமாக இருந்தது.
அவன் தயங்காமல் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக கேட்பவர்களிடமெல்லாம் சொன்னான். நிரஞ்சனிக்கு மூச்சு முட்டியது. அந்த நேரத்தில் “ஜெனி எனக்கு மூன்று நாள் பெங்களூர்ல செமினார் இருக்கு. நாளைக்கு கிளம்பனும்” என்று கொஞ்சம் வருத்தமாக சொன்னான்.
“ஹோ… போயிட்டுவாங்க…” என்று நிரஞ்சனி உற்ச்சாகமாக சொன்னாள்.
“நா இங்கிருந்து போறதுல உனக்கு அவ்வளவு உற்சாகமா.. எப்படியாவது என்னை தொலைச்சுட்டா உனக்கு சந்தோஷம் அப்படிதானே…” அவனுக்கு இருக்கும் வருத்தம் அவளுக்கு துளியும் இல்லையே என்ற கோபத்தில் பேசிவிட்டான்.
“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க…நா அப்படி நினைப்பேனா…” அவள் அடிபட்டவலை போல் பேசினாள்.
அவனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது… ” சரி சரி விடு… ஆனால் இதுமாதிரி உன்னை அங்க இங்க கூப்பிட்டு தொல்லை செய்யமாட்டேன்… அந்தவிதத்தில் உனக்கு சந்தோஷம் தானே…” என்று கேட்டான்.
அவள் பதில் சொல்லாமல் லேசாக சிரித்தாள்.
அதன் சிரிப்பு சொல்லும் பதிலை புரிந்துக் கொண்டவன் “தெரியும்…டீ உன்னை பற்றி…” என்று சிரித்துக் கொண்டே அருகில் இருந்த ஸ்பூனை எடுத்து அவளை லேசாக அடித்தான்.
இருவருக்குமே அந்த தருணம் மகிழ்ச்சியாக இருந்தது.
மூன்று நாட்கள் பெங்களூர் சென்றுவிட்டு நான்காவது நாள் ஒரு பையுடன் வந்தான். அன்று நிரஞ்சனியை உணவு இடைவேளையில் சந்திக்க முடியவில்லை. அந்த நேரம் அவனுக்கு மீட்டிங் இருந்தது. உணவு இடைவேளை முடிந்து மாலை ஒபி பார்க்கும் வரை அவனுக்கு ஓய்வுதான். அதனால் நிரஞ்சனிக்கு கைபேசியில் அழைத்து ஒரு பத்து நிமிடம் அவனுடைய அறைக்கு வந்துவிட்டு போகும்படி அழைத்தான்.
அவனுடைய அறைக்கு உள்ளே நுழைந்தவள், “என்ன சொல்லுங்க…” என்றாள்.
“ஹும்ம்ம்… மூன்று நாள் வெளியூர் போய்விட்டு வந்திருக்கேனே… கொஞ்சமாவது ரொமாணடிக்கா பேசுறாளா பார்… சுடுதண்ணிய கால்ல ஊத்திக்கிட்டு நிக்கிரவ மாதிரி உள்ளே வரும்போதே பறந்துகிட்டு வர்றா…” என்றான் அவளுக்கு கேட்கும்படி ஜாடையாக.
“ஹலோ சார்… என்னை எதுக்கு வர சொன்னீங்க…?”
“ஐயோ… அம்மா… தாயே… தயவுசெஞ்சு இந்த ‘சார்… மோர்…’ எல்லாம் மூட்டை கட்டி வக்கிறியா…. உனக்கு புண்ணியமா போகும்…”
“ம்ஹும்… நம்பவே முடியல…” என்றாள் அவள் சம்மந்தம் இல்லாமல்.
“எதை நம்பமுடியல…?”
“நான் இங்க வேலைக்கு சேர்ந்த புதுசுல உங்களை பார்க்கும் போது தமிழே தெரியாதோன்னு நினைப்பேன்… இப்போ பார்த்தா இந்த பேச்சு பேசுறீங்க… ‘வாடி… போடி… சுடுதண்ணீ… பாவம்… புண்ணியம்ன்னு…’ அப்போ நான் பார்த்தது உங்களை தானான்னு நம்ப முடியல…”
“என்னாலையும் தான் நம்ப முடியல… ஒன்னும் தெரியாத அமுல் பேபி மாதிரி இருந்துகிட்டு என்னையே கிண்டல் பண்ற…” என்று சிரித்தான்.
“சரி சொல்லுங்க… எதுக்கு கூப்டீங்க ” என்று அவளும் சிரிப்பினுடே கேட்டாள். அதற்கு பதிலாக அவன் அவளிடம் ஒரு பையை எடுத்துக் கொடுத்தான். அதில் மூன்று விலையுர்ந்த சுடிதார் செட் இருந்தது.
“எதுக்கு இதெல்லாம்…?”
“நல்லா இருந்தது… உனக்கு பொருத்தமா இருக்கும் என்று தோணிச்சு… வாங்கிட்டேன்… ” என்றான். அவள் வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்று கொஞ்சம் தவிப்பாகவும் இருந்தது அவனுக்கு.
“சரி… இதை நம்ப வீட்டுல கொண்டு போய் வைங்க… நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இதை நான் பயன்படுத்திக்கிறேன்…” என்றாள்.
அவள் அவனுடைய முதல் பரிசை மறுக்காமல் அழகாக தப்பித்துக் கொண்டவிதத்தை அவன் ரசித்தான். அவள் ‘நம் வீடு… நம் கல்யாணம்’ என்று சொன்னதில் முழுதாக கவிழ்ந்துவிட்டான்
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
இந்த சமூகம் தன் சாதியில் இருக்கும் குடிகாரனுக்கு கூட தங்கள் பெண்ணை கொடுப்பார்கள் ஆனால் வேற்று சாதியில் இருக்கும் நல்லவனுக்கு பெண்ணை கொடுக்கமாட்டார்கள்,இவர்கள் என்ன மனிதர்களோ தெரியவில்லை.
நன்றி