Vedanthangal epi 17
1422
0
பதினைந்து நாட்களுக்குப் பிறகு
பதினைந்து நாட்களுக்குப் பிறகே ஸ்ரீயைப் பார்க்க மசூத் அனுமதிக்கப்பட்டான். ஸ்ரீ கண்களை மூடி உறங்கிக் கொண்டிருக்க மசூத் ஸ்ரீயின் கைகளைத் தொட நினைத்து தொடாமல் அவன் கைகள்கொண்டு அவன் முகத்தையே மூடிக் கொண்டான். அவன் மெல்ல தனது கைகளை அகற்றி கண் திறந்து பார்த்த சிறிது நேரத்தில் ஸ்ரீ விழித்தாள். மசூத் ஸ்ரீயிடம் சொன்னான் “மோகனாவின் பையனுக்கு கர்சீப்ஃ வேணுமாம். தனுவுக்கு காஸ் சிலின்டர் கனெக்ஷன் வேணுமாம். நீ இன்னும் எனக்கு யஸ் சொல்லலை ஆனாலும் ஒண்ணு கேட்கிறேன் இன்றிலிருந்து ஏழு மாதத்தில் நாலு முகூர்த்தம் இருக்கு எதை முடிவுசெய்யணும்? அடுத்து சாவதற்கு முயற்சி செய்வதுக்கு முன்பு இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு முயற்சி செய். சரியா? ”
தன் கோழைத்தனத்தை நியாயப் படுத்த விரும்பவில்லை ஸ்ரீ. பேச முயற்சி செய்தால் பேச முடியும் என்றாலும் அவள் முயற்சி செய்யவில்லை. ஆனால் அவனது ஒரு கேள்விக்கு நிச்சயம் பதில் தரணுமே என்று எண்ணியவள் சொன்னாள்
“இப்ப கல்யாணம் வேண்டாம். நான் கல்யாணம் செய்யப் போறதில்ல.. ”
அதன்பிறகு தலையைக் குனிந்தவள் நிமிரவேயில்லை. பாத்ரூம் போகணும் என்று பாத்ரூமிற்குள் புகுந்துகொண்டாள். மசூத் சன்னல் ஓரமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் வெளியே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அறைக்கதவு தட்டாமல் திறக்கப்பட்டது. நான்கு பேர் உள்ளே நுழைந்தனர். நேராக மசூதிடம் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் மசூத் சுதாரித்துக்கொண்டான்.
“ஸ்ரீ எங்கே? ”
“அவளை டெஸ்டுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க.. ”
வந்தவர்கள் கண்கள் அறை முழுவதையும் நோட்டம் விட்டது. பாத்ரூமிற்குள் சத்தம் கேட்கவும் பாத்ரூம் கதவை தட்டினார்கள். வெளியே மசூத் பேசியதைப் கேட்ட ஸ்ரீ நிலவரத்தைப் புரிந்து கொண்டாள். குரல்களும் அவளிடம் கௌன்சிலர் ஆளுங்கதான் என்று சொன்னது.
பாத்ரூமிற்குள் இருந்த பினாயில் பாட்டிலை கையில் எடுத்தாள். பத்து நிமிடங்கள் அவர்களை கதவைத் தட்ட விட்டவள் அதன்பிறகு அவள் ஷால்கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டே வெளியே வந்தாள். அவள் எதிரே நின்றுகொண்டிருந்த நான்கு எருமைகள் மீதும் பினாயிலை ஊற்றியவள் மசூத்தை இழுத்துக்கொண்டு ஏட்டையாவைத் தேடி அவரது இடத்திற்கு போனாள்.
ஸ்ரீயின் துணையாக இந்த பதினைந்து நாட்களும் இருந்த ஏட்டையாவின் தனி அறையில் ராஜனும் இரண்டு நர்ஸ்களும் இருந்தனர். ராஜன் ஸ்ரீயின் டிஸ்சார்ஜ் ஃப்ர்மை தயார் செய்துகொண்டிருந்தான். திடீரென்று ஸ்ரீயைப் பார்த்ததும் அவனால் “என்ன இங்கே? ” என்ற கேள்விமட்டுமே கோர்வையாக கேட்கமுடிந்தது.
“யாரோ துரத்துறாங்க” என்று கூறிய மசூத் ராஜன் இருந்த அறையின் உள்ளே செல்லப்போனவளைத் தடுத்தான். “ஸ்ரீ இங்கயிருக்க வேண்டாம். ஸ்ரீயை எங்க கூட்டிட்டு போக? என் கிராமத்துக்கு கூட்டிட்டு போயிடுறேன்.” என்றான் அவசரமாக .
மசூத்தை கோபமாக முறைத்துவிட்டு “அப்படினா என் கேஸை யார் வைத்து முடிக்க? ஸ்ரீ என் கஸ்டடியில் இருக்கட்டும். நான் பார்த்துக்கிறேன். ஸ்ரீ ஷாலால் முகத்தை மூடு. உன் கண் மட்டும் தான் தெரியணும். ஏட்டையா அவளை பின் வாசல் வழியாக அந்த ஃப்யர் எக்சிட் வழியாக கூட்டிட்டு போங்க.. நான் இங்க முடிச்சிட்டு வர்றேன். ஏட்டையா கவனம். ” என்று ஒவ்வொருவரிடமும் ஒரு வரி பேசிவிட்டு ராஜன் அவர்கள் முகத்தைப் பார்த்தவாறே நின்றான். அவன் தான் கூறியதை நிறைவேற்றச் சொல்கிறான் அவன் சொல்லுக்கு அப்பீலே கிடையாது என்று புரிந்துகொண்ட ஏட்டையா சொன்னார்
“நான் பார்த்துக்கிறேன் ராஜன் சார்.” என்றவர் அடுத்த நொடியில் ராஜன் சம்மதத்தோடு அவனது கள்ளத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மறுகையால் ஸ்ரீயை பிடித்துக்கொண்டு ராஜன் சொன்ன பாதையில் நகர்ந்தார்.
“அக்கா இந்த பிஸ்கட் சாப்பிடுங்க. இதிலே சாக்லேட் ஜெல்லிமாதிரி இருக்கும். நேரம் ஆக ஆக அப்படியே மெல்ட்ஆகி ஓடும். நான் அப்பாகிட்ட இதைதான் தினம் ஸ்நாக்ஸ{க்கு வாங்கச்சொல்வேன். ஆனா அம்மா இதையெல்லாம் வாங்க விட மாட்டாங்க. நீங்க வந்திருப்பதால் தான் இப்ப அப்பா இதை கண்ணுல காட்டியிருக்காங்க.” என்று இறுக்கமாக வாயை மூடிக்கொண்டிருந்த ஸ்ரீயிடம் ஏட்டையாவின் பதிமூன்று வயது மகள் ஸ்நேகா வாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்தாள்.
ஸ்ரீயை ரௌடிகளிடம் இருந்து காப்பாற்றியதும் அவளை ஏட்டையாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்தான் ராஜன்.
ஏட்டையாவும் ராஜனும் ஒரே அடுக்குமாடி காவலர்கள் குடியிருப்பில் இருந்தனர்.
அந்த மூன்று மாடி காவலர்கள் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் இரண்டு வீடுகள் இருந்தன. கீழ்தளத்தில் ஏட்டையா தனது குடும்பத்துடன் இருந்தார். இரண்டாம் தளத்தில் ராஜன் குடியிருந்தான்.
“ஸ்நேகா உனக்கு நாளை பயாலஜி டெஸ்ட் இருக்கு. ” என்று அடுக்களைக்குளிருந்து ஏட்டையாவின் மனைவி புஷ்பா சத்தம் கொடுத்தார்.
ஸ்நேகா ஏட்டையாவின் கடைக்குட்டி. மூத்தவள் பத்மா உதவி சப் இன்ஸ்பக்டர். மதுரையின் மேற்கு பிரான்ச். பத்மாவுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் கடந்திருந்தது. டிபார்ட்மென்டில் நல்ல பெயர் பத்மாவுக்கு. ஏட்டையாவிற்கு ராஜனை மருமகன் ஆக்கிட ஆசைதான். ராஜன் தான் இன்ஸ்பக்டர் ஆகாமல் திருமணம் பற்றிய பேச்சே கிடையாது என்று பெற்றோரிடமும் உறவுகளிடமும் கூறிவந்தான். இப்பவே வயது முப்பதை தொடங்கப்போகுது என்று அவனது சின்ன தாயார் தான் மிகுந்த வருத்தம் கொள்வார். ராஜன் முடிவு எடுத்து விட்டால் அதில் மாற்றமோ திருத்தமோ இருக்காது. இதனை அறிந்த பெரியவர்கள் அவனை இம்சிப்பதில்லை.
தாயின் குரலைக் கேட்ட ஸ்நேகா உடனே ஸ்ரீயிடம் “அக்கா நான் பிறகு வர்றேன். இப்ப போகலைன்னா தோசை கரண்டியோடுதான் அம்மா வருவாங்க. நல்லா படிச்சி ஒப்பிச்சி காண்பிச்சிட்டா அப்புறம் அம்மாவே அரட்டை அடிக்க டைம் கொடுப்பாங்க. வர்றேன் பை.” என்று கூறிவிட்டு அவசரமாகச் சென்றவள் தனது கைபேசியை ஸ்ரீ அருகிலேயே வைத்துவிட்டுச் சென்று விட்டாள்.
ஸ்நேகா மீது எண்ணில் அடங்கா பொறாமை எண்ணங்கள் உண்டானது ஸ்ரீக்கு. தன் தலையெழுத்தை நொந்தவள் சட்டென்று ஏதோ ஒன்று ஞாபகம் வர ஏட்டையாவிடம் “சார் பாத்ரூம் பேகணும்.” என்றாள்.
டி.வியில் தனது விருப்பமான நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஏட்டையா பாத்ரூமைக் காட்டிவிட்டு மீண்டும் டி.வி பார்க்கச் சென்றார்.
ஸ்ரீ பாத்ரூமிற்குள் நுழைந்தவுடன் வாலியை குழாய்க்கு கீழே வைத்துவிட்டு குழாயை திறந்துவிட்டாள். தண்ணீர் வெற்று வாலியில் சட சட வென விழுந்து நிரப்பியது. ஸ்ரீ ஸ்நேகாவின் கைபேசியை எடுத்தாள். எண்களை அழுத்தினாள்.
மூன்று ரிங்கில் எதிர்முனையிலிருந்து பதில் வந்தது.
“ஹலோ.. ”
“தனு.. ”
“ஸ்ரீ ஏன் இரண்டு வாரமாக பேசலை? நாங்க ரொம்ப பயந்துபோயிட்டோம். மோகனா அக்காவும்தான். எங்களை திருச்சிக்கு அனுப்பிட்டு நீ ஏன் இன்னும் வராம இருக்க? ”
“தனு. நானும் வந்திட்டா பணத்தை பவி தான் எடுத்தாள் என்று பழி போடுவாங்க. இறந்தவளுக்கு திருட்டு பட்டம் வேண்டுமா? திலிப் கூப்பிட்டாரா? ”
“ம். ஆமாம் அக்கா. பத்து நாள் முன்புதான் அவருக்கு பவித்ரா விஷயம் தெரிந்ததாம். என் நம்பர் கஷ்டப்பட்டு தேடி எடுத்திருக்கார். பவித்ரா ரிசார்ட்டில் இருந்தப்ப எனக்கு கால் செய்ததை வைத்து கண்டுபிடித்திருக்கார். அவர் தான் வீட்டு வாடகை கட்டினாரு. இனி அவர்கிட்ட பணம் வாங்க மாட்டோம். சாரிக்கா. நீயும் இல்லையா அதான் என்ன செய்ய என்றே தெரியல. மசூத்கிட்ட ஃபோன் போட்டு கேஸ் சிலின்டர் வாங்க காசு கேட்டேன். அவன் தந்தான். ”
ஸ்ரீ அவசரமாக “எப்படி தந்தான்? உங்க அட்ரஸ் சொல்லிட்டியா? ”
“இல்லைக்கா திண்டுக்கல் போஸ்ட் ஆபிஸ் அட்ரஸ் தந்து அதுக்கு அனுப்ப வைத்தேன். ”
‘திருச்சியில் இருந்துகொண்டு திண்டுக்கல் போய் ரூபாயை வாங்கிருக்காங்க. பரவாயில்லை விவரமாகதான் இருக்காங்க’ என்று மனதில் மெச்சியவாரே ஸ்ரீ கேட்டாள் “அப்புறம்? ”
“மசூத் என்னை நம்பலை. கொஞ்சம் கோச்சிக்கிச்சு. அப்புறம் நான் அட்ரஸ் தரமாட்டேன் என்று புரிந்துகொண்டு திண்டுக்கல்லுக்கே அனுப்பி வைத்தது. ”
வாளியில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. ஸ்ரீ பரபரப்பானாள்.
“தனு என்னால் ரொம்ப நேரம் பேச முடியாது. நான் திரும்ப கூப்பிடுவேனா என்று கூட எனக்குத் தெரியாது. திலிப் கூப்பிட்டால் இனி எடுக்க வேண்டாம். பவித்ராவுக்குதான் அவன் காசில் உரிமை இருக்கு. உனக்கு நான் சொல்றது புரியுதுல்ல? இப்ப உபயோகிக்கும் சிம்மை காலி செய்திடு. அப்பதான் இனி அவன் உங்களிடம் தொடர்பு வச்சிக்க மாட்டான். அவன்கூட பேசுறது என்றுமே ரிஸ்க் தனு. புரியிதா? தைரியமாக இருக்கணும். நான் மூன்று சிம் தந்தேன் தானே? அதிலிருந்து இரண்டாவது சிம் எடுத்துப் போட்டுக்கோ. எனக்கு மூன்று சிம் நம்பரும் மனப்பாடமாக தெரியும். நான் இனி அந்த புது நம்பருக்கு கால் பண்றேன். அம்மாவின் செயினை அடகு வச்சிடுங்க. இரண்டு மாதம் தள்ளலாம். அதுக்குள்ளே நான் வந்திடுவேன். பவித்ரா கேஸ்சும் முடிஞ்சிடும். வைச்சிடுறேன்.” என்று கூறியவள் தனது கால்களில் தண்ணீர் ஊற்றிவிட்டு வாலி தண்ணீரை பாத்ரூம் முழுதும் ஊற்றிவிட்டு வெளியே வந்தாள். அமைதியாக செல்ஃபோனை சோபாவில் வைப்பதற்கு முன் அவள் டயல் செய்த நம்பரை அழித்தாள்.
Comments are closed here.