Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal epi 18

ராஜன் எவ்வளவோ மறுத்தபோதும் அவர் விடவில்லை. கையைப்பிடித்து சாப்பிட இழுத்து வந்தார். சாப்பிடும்போது ஸ்ரீயின் கண்களை தேடியது ராஜன் விழிகள்.
தீபம் அணையப்போகும் தருவாயிலில் எண்ணெய் கொடுங்கள் என்று கேட்டிடும் தீபத்தின் பஞ்சைப்போல அந்தத் தேடலில் ஒரு அவசரம் இருந்தது.
ஓரப்பார்வை நேர்பார்வை கள்ளப்பார்வை திருட்டுப்பார்வை (நம்ம பாக்கியராஜ் பார்வை) இப்படி எதுவுமே கைக் கொடுக்காமல் போக ‘ஹாஸ்பிட்டலில் இருந்து வந்த பிறகு ஒரு பார்வை பார்கிறாளா பாரு. எவ்வளவு ஹெல்ப் செய்திருக்கேன்?’ என்றான் ராஜன் மனதில்.
‘மாஜிஸ்ரேட்டிடம் மாட்டிவிடாமல் இவன் வேலையை காப்பாற்றியிருக்கேன். வாய் திறந்து பேசுறானா பாரு. தாங்க்ஸோ சாரியோ சொன்னால் என்னவாம்? ’ என்றாள் ஸ்ரீ மனதில்.
இருவரும் கை கழுவ வாஸ்பேஷன் சென்றபோது இருவரும் ஒன்றாக ஒருவருக்கு ஒருவர் வழி விட்டனர்.
ராஜன் தாங்ஸ் என்றான். உடனே யோசிக்காமல் ஸ்ரீயும் தாங்ஸ் என்றாள். ராஜன் கர்சீப்ஃ கொண்டு உதடுகளைத் துடைத்துவிட்டு பட்டென்று சொன்னான்
“சாரி. F.I.R என்றதும் ரொம்ப பயந்திட்டியா? ”
ஸ்ரீயும் அவள் மனதில் இருந்த கோபம் விட்டுவிட்டு சொன்னாள் “தாங்ஸ் ராஜன் சார். தங்க இடம் இல்லாமல் ஓடி ஒளியிற போது ஹெல்ப் செய்திருக்கீங்க. தாங்ஸ் சார். ”
“நீ மசூத்கூட பேசிட்டியா? அவனுக்கு ஏட்டையா நம்பர் கொடுத்திருக்கேன். சப் இன்ஸ்பக்டர் கோபிநாத் ஹேம்நாத்தை பிடிச்சிட்டா உனக்கு பிரச்சனை வராது. பணம் கிடைச்சிட்டா இன்னும் ஈசி உன் கேஸ். நிஜமாகவே பணம் உன்னிடம் இல்லையா? ”
“இல்லை ராஜன் சார். காலையில் தான் மசூத்கிட்ட பேசினேன். என் வீட்டிலிருந்து எதுவும் எடுக்கவேண்டாம் நேரே பாங்கிற்கு போய் அவன்கிட்ட இருக்கும் என் செக்கில் நான்காயிரம் என்று நிரப்பி என்னிடம் எடுத்துத் தரச்சொன்னேன். பேன்க்கில் பத்தாயிரம்கூட இருக்காது. ஹேம்நாத் பற்றிதான் நினைச்சிட்டேயிருக்கேன். அவன் பிடிபட்டாலும் பிரச்சனை எப்படி தீரும் என்று தெரியல. தனுவும் மோகனாவும் என்னைத் தேடுவாங்க. நான் போகணும். நான் சென்னைக்கு போயிடுறேன் சார். ”
“அவுங்க எங்கயிருக்காங்க? அவுங்களை கான்டாக்ட் பண்ணாத. யாரையும் நான் சொல்லாமல் கான்டாக்ட் பண்ணாத. காரணமாகத்தான் சொல்றேன். உனக்கு அவுங்களால் பிரச்சனை வரக்கூடாது பார். அவங்களை கான்டாக்ட் பண்ணியா? பணம் எங்க என்று தெரியாதா உனக்கு? ”
பதில் கூற அவசரப்படுத்துவதால் தன்மீது இன்னும் சந்தேகப்படுவது ஸ்ரீக்கு புரிந்தது. வேகமாக பதில் சொல் என்று மூளை எச்சரிக்க பதில் கூற ஒரு நொடி மட்டுமே எடுத்துக் கொண்டாள்.
“பணத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அவுங்களும் சென்னையில்தான் இருக்காங்க. யாரையும் கான்டாக்ட் பண்ண மாட்டேன். ”
பத்து நிமிடங்களாக கை கழுவும் இடத்தில் பேசுவதை உணர்ந்தவன் “உள்ளே போ ஸ்ரீ. நாளை ஏதாவது நியூஸ் கிடைத்தால் சொல்றேன். ” என்றான்.
வீட்டின் மொட்டை மாடியில் ஏட்டையா மனைவி சொல்லச் சொல்ல கேட்காமல் துவைத்த துணிகளை உலர்த்தப்போனாள் ஸ்ரீ. கொடிகளில் துணிகளை உலர்த்தப் போட்டுவிட்டு அங்கிருந்த துணி துவைக்கும் கல்லில் அமர்ந்தாள். மொட்டை மாடியில் அணில் ஒன்று வேகமாக அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு கொய்யா மரத்தின் கிளைகள் இவர்கள் வீட்டு மொட்டைமாடி வரையிலும் பரவி இருப்பதால் காய்களைத் திண்பதற்கு அணிலுக்கு நிழல் சூழ்ந்த இந்த மொட்டை மாடி வசதியாகப் போனது. எட்டாத ஒரு கொய்யாவை பறிக்க அணில் ஒன்று குதித்து குதித்துப் பார்த்தது. ஆனால் அதனால் அதைப் பறிக்க முடியாது. அதற்கு உயரம் போதாது. அது குதிப்பதே வேடிக்கையாக இருக்கும்.
அந்த அணிலைப் பார்ப்பது ஸ்ரீக்கு நிரம்பப் பிடிக்கும். எப்போதுதான் அந்தப் பழம் அதுக்கு எட்டப்போகுதோ? என்று அவளே ஏங்கிடுவாள்.
அணிலைப் பார்த்துக்கொண்டே காய்ந்த துணிமணிகளை எடுத்தவள் தவறுதலாக ராஜனின் யுனிபார்ம் சட்டையையும் எடுத்து வந்துவிட்டாள். ஏட்டையா மனைவியிடம் தந்தபோது அவரது மனைவி “இது ராஜன் சார் யுனிபார்ம். அவர்கிட்டயே கொடுத்திடுறியா? நான் இனிதான் குளிக்கவே போகணும். ”என்றார்.
ஸ்ரீ உடனே சரி என்று கூறாமல் நிற்கவும் “ராஜன் தம்பி ரொம்ப நல்ல தம்பிமா.. நீ பயப்படாமல் போ.. ” என்றார்.
ஸ்ரீ அப்போதும் அசையாது நின்றபோது ராஜன் அங்கு வந்துவிடவே புஷ்பம் ராஜனிடம் கேட்டார் “என்ன ராஜன் சார்? ”
“சட்டை மாறிடுச்சுன்னு நினைக்கிறேன். ”
“ஆமாம் சார். ஸ்ரீதான் மாத்தி எடுத்திடுச்சு. கொண்டுபோய் கொடுன்னு சொல்லிக்கிட்டிருந்தேன் அதுக்கு மாட்டேன்னு இங்கயே நிக்குது. நீங்க என்ன F.I.R ஆ போடப்போறீங்க?
உங்களப் பார்த்து பயப்படுது? ”
‘இப்போதா F.I.R பற்றி ஞாபகப்படுத்திருக்கணும்? இப்போதான் முகத்தைப் பார்த்து பேசுறா. குணச்சித்திர நடிகர் விவேக்கைவிட இவர் டைமிங் சென்ஸ் சூப்பராக இருக்கே!’ என்று நினைத்தவன்
“ச்ச.. ச்ச.. சட்டையை மாத்தினதுக்கெல்லாம் F.I.R போட்டா டைப்பிஸ்ட் கைதான் வீங்கிடும்.” என்று சொல்லி கேலியாகவே முடித்தான் ராஜன்.
இந்தக் கேலிக்கெல்லாம் ஸ்ரீயால் சிரிக்க முடியவில்லை. பவித்ராவின் ஞாபகங்களே எங்கும் எதிலும் முந்திக்கொண்டு வந்தது.
மறுநாளும் அணிலைப் பார்க்க ஸ்ரீ மொட்டை மாடிக்குப் போனாள். எட்டாத பழத்தை அணில் பறித்துவிட்டதா இல்லையா என்று தெரிந்துகொள்ள அவளுக்கும் ஆசையாக இருந்தது. அவளும் வாழ்க்கையில் எட்டாத நிம்மதிக்கு பெரு முயற்சி செய்கிறாள் அல்லவா? அதனால் வந்த எதிர்பார்ப்பும் ஆசையும். அவள் நுழையும் போது அங்கே பேச்சுக்குரல் பலமாகக் கேட்டது. ராஜனும் மற்றொருவரும் மாடியில் பேசிக் கொண்டிருந்தனர். அவளைப் பார்த்ததும் ராஜன் ஸ்ரீயை அழைத்தான்.
“ஸ்ரீ இங்க வாயேன். இது தான் சப் இன்ஸ்பக்டர் கோபிநாத். என் ஃப்ரண்ட். உன் கேஸை இவனும்தான் ஹேன்டில் பண்றான். ஹேம்நாத் பற்றி கொஞ்சம் தகவல் தந்தான். உன்னிடம் ஏதோ கேட்கணும் என்று சொன்னான். ” என்றான்.
கோபிநாத் சரியான போதையில் இருந்தான்.
“ஆமாம். ராஜன் உன்னை ஹேன்டில் பண்றான். நான் கேஸை ஹேன்டில் பண்றேன். ” என்று குளறினான்.
ராஜனுக்கு மிகுந்த சங்கடமாகிப் போனது. ஸ்ரீயின் முகமாறுதலைக் கண்டுகொண்டான்.
ஸ்ரீ அங்கே நிற்காமல் கீழே சென்றுவிட்டாள். ராஜன் அவள் பின்னே செல்லவில்லை. அவள் பின்னால் சென்று அவளை சமாதானம் செய்யும் பொறுமையும் அவனுக்கு இல்லவே இல்லை. கொஞ்சம் ஆற்பபோடுவோம் என்று விஷயத்தை ஆறப்போட்டான்.
ஆனால் மயில் இறகினால் சாமரம் வீசினாலும் ஆறமாட்டேன் என்றது ஸ்ரீ மனது. ஏட்டையாவின் வீட்டிற்குள் நுழைந்தவள் அமைதியாக ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் பார்வையைத் திருப்பினாள். ராஜன் ஒரு மணி நேரம் கழித்து ஏட்டையா வீட்டிற்குள் நுழைந்தான். யாரும் அருகில் இல்லாதபோது
“ஸ்ரீ அவன் போதையில் இருக்கான். அதை பெரிதாக நினைக்காத.. ” என்றான்.
ஸ்ரீ ஒன்றும் பேசவில்லை.
“நிஜமாகத்தான் ஸ்ரீ. அவன் ரொம்ப நல்லவன். HE IS A NICE GUY. ”
“ஆமாம் சார். நீங்க சொன்னால் சரிதான். இல்லைன்னு சொன்னா F.I.R போட்டிடுவீங்கல்ல? ”
‘எவன்டா இவளுக்கு இப்ப F.I.R ஞாபகப்படுத்தினது?’ என்று நினைத்து கோபமாக நண்பனைத் திரும்பி பார்த்தபோது கோபிநாத் ‘ஈ’ என்று இளித்துக்கொண்டு போதையில் காற்றுடன் கை குலுக்கிக்கொண்டிருந்தான். அமைதியாக ஸ்ரீயிடம் திரும்பியவன் தன்னை அக்கூயூஸ்ட் ஆக்கிட்டானே பாதகன் என்று நண்பனை திட்டிவிட்டு ஸ்ரீயிடம் என்ன பேசுவது என்று தெரியாமல்
“ஸ்ரீ” என்று ஆரம்பித்தான்.
“போலிஸ்காரங்களை பகைச்சிக்க முடியுமா? நாங்கல்லாம் தர லோக்கல். உங்களை எதிர்த்து பேச முடியுமா?”
“ஸ்ரீ!”
“வேணும்ன்னா அவர்கிட்ட போய் நான் தப்பாவே எடுத்துக்கல்ல என்று சொல்லட்டுமா? இல்லை ரிட்டர்ன் ஸ்டேட்மன்டா எழுதித் தரணுமா? ” “ஸ்ரீ!”
“ஓ! என்னை ஹேன்டில் பண்ணும் உங்களிடம் தான் நான் முதலில் உங்க ஃப்ரண்டை தப்பா நினைத்தற்கு மன்னிப்பு கேட்கணுமா? ”
“ஸ்ரீ”
“ராஜன் சார். ரொம்ப சாரி. நீங்க போய் உங்க ஃப்ரண்டை ஹேன்டில் பண்ணுங்க. அவரை தனியாக விட்டுட்டு வந்திட்டிங்களா? மொட்டை மாடியில் இருந்து டைவ் பண்ணிடப் போறார்.. பார்த்துக்கோங்க. ”
“ஸ்ரீ அந்த அணில் பழத்தை பறிச்சிடச்சு! ”
“ஆ? ”
“ஸ்ரீ அந்த அணில் பழத்தை ஒரே தாவுல தாவிப் பிடிச்சி பறிச்சிடுச்சு! ”
“ஆ? ”
“ஸ்ரீ அந்த அணில் பழத்தை ஒரு பிட் மிச்சம் வைக்காமல் கரும்பிடுச்சு! ”
ஸ்ரீ விக்கவும் இல்லை விறைக்கவும் இல்லை. ஆனால் சிரித்தாள். இருபத்தியெட்டு நாட்களாக சிரிக்காதவள் அன்று சிரித்தாள். அணிலுக்கு கிட்டிய பழம் போல கிட்டாத நிம்மதி தனக்கும் கிட்டிடும் என்ற நம்பிக்கை அவளுக்கும் வந்தது.
ஸ்ரீயின் சிரிப்பில் தானும் கலந்தவன் அவளது சிரிப்பு அவன் இதயத்தை அவளை நோக்கி இன்ச் இன்சாக நகரச்செய்வதை நினைத்து அவளை அவன் அங்குலம் அங்குலமாக ரசிப்பதை நினைத்து நம்பமுடியாமல் திடுக்கிட்டான். ஆனால் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் போல மட்டும் இருந்தது. என்னவென்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபோதும் ஏதோ ஒன்று செய்யத் துடித்த மனதிடம் ‘என்ன வேணும்?’ என்று கேட்டுக்கொண்டிருந்தான்.




Comments are closed here.

You cannot copy content of this page