Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ-17

அத்தியாயம் – 17

 

அன்று

 

அந்த வார ஞாயிற்றுக் கிழமை புகழேந்தியின் அண்ணி நயந்தி நிரஞ்சனியை வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைத்திருந்தாள். அன்று புகழேந்திக்கு வேலை நாள் அல்ல. நிரஞ்சனிக்கு அரை நாள் வேலை. அவள் வேலை நேரம் முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வரவும்  புகழேந்தியின் கார் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

 

“ம்ம்… ஏறு…” என்று அவளுக்கு  முன் பக்க கதவை திறந்துவிட்டான்.

 

‘இவனோட பெரிய தொல்லையா போச்சு… என்னைக்கு யார் கண்ணுல மாட்டி வீட்டுல மாட்டப் போறேனோ தெரியல…’ என்று மனதில் நினைத்துக் கொண்டே அவனுக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்து அவனுடைய அண்ணன் வீட்டை அடைந்தாள்.

 

அவள் காரில் இருந்து இறங்கும் போது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பெண் வந்தாள்.

 

“என்னம்மா… நிரஞ்சனி நல்லா இருக்கியா… நீ தாமரை அக்கா மகள் தானே…” என்று கேட்டாள்.

 

நிரஞ்சனிக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. “ஆ… ஆமா… நீங்க…” என்று திக்கி திணரிக்கொண்டே கேட்டாள்.

 

“என்னை தெரியலையா… நாந்தான்… உங்க அம்மாவோட பெரியப்பா மகளோட சின்ன ஒர்ப்படியார்…” என்று உறவுமுறை விளக்கம் சொன்னாள்.

 

‘போச்சு… போச்சு… இன்னிக்கு வீட்டீல நமக்கு சமாதிதான்…’ என்று மனதிற்குள் நடுங்கினாள். முகத்தில் வியர்வை முத்துமுத்தாக அரும்பிவிட்டது. கைகள் லேசாக நடுங்கியது. சமாளித்து சிரித்துக் கொண்டே உள்ளே வந்தாள். யாரிடமும் சகஜமாக இருக்க முடியவில்லை. ‘இப்படியே எங்கேயாவது ஓடிவிடலாமா…’ என்று இருந்தது.

 

அந்த நேரத்தில் தான் புகழேந்தி, நிரஞ்சனியின் மனநிலையை உணர்ந்துகொண்டவன் அவள் வயிற்றில் பாலை வார்ப்பவன் போல் அந்த செய்தியை சொன்னான்.

 

“பயப்படாத ஜெனி… இவங்களுக்கு நம்ப விஷயம் தெரியும்… என்னோட சார்பா உங்க வீட்ல சமாதானம் பேசுறேன்னு சொல்லியிருக்காங்க… நம்ப கல்யாணத்துக்கு இவங்க தான் ஹெல்ப் பண்ண போறாங்க…” என்று அந்த பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தான்.

 

நிரஞ்சனிக்கு போன உயர் திரும்பி வந்தது. ‘இப்போதைக்கு விஷயம் வீட்டிற்கு போகாது… அதுவே போதும்… அதோடு இவங்க நம்ம ஊர் காரவங்க… இவங்களே நமக்கு சப்போர்ட் பண்ணி பேசுறதா சொல்லியிருக்காங்களே… நம்ம கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்கவும் வாய்ப்பு இருக்கு போல…’ என்று நினைத்து மகிழ்ந்தாள்.

 

அன்று மதியம் பலமான விருந்து சமைத்திருந்தாள் நயந்தி. புகழேந்தியின் அண்ணன் நிரஞ்சனியுடன் கலகலப்பாக பேசினார்.  அவளுக்கும் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக மாறிவிட்டதாக தோன்றியது.

 

புகழேந்தி அவளை உணவு முடிந்ததும் வீட்டை சுற்றிக் காண்பிக்கும் பெயரில் அவனுடைய அறைக்கு அழைத்து சென்று வம்புப் பண்ணினான்…. கேலி பேசினான்…. சிரித்தான்… மகிழ்ந்தான்… அன்றைய தினம் அவனுக்கு மிக சிறந்த தினமாக தோன்றியது.  அவர்கள் அனைவருக்குமே அன்றைய நாள் சிறந்த நாளாக இருந்தது.

 

அன்று புகழேந்தி நிரஞ்சனியை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு மேம்பாலம் வழியாக வீட்டிற்கு திரும்பும் போது ஒரு விபத்தைப் பார்த்தான். ஒரு விலையுயர்ந்த பைக்கின் மீது ஒரு லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அங்கு ஜன நடமாட்டமே அதிகம் இல்லை. அதோடு மேம்பாலத்தில் எப்போதுமே அதிகம் கூட்டம் இருக்காது என்பதாலும் அடி பட்டுகிடந்தவனுக்கு யாரும் உதவவில்லை.

 

புகழேந்தி தனி ஒருவனாக அவனுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதற்கட்ட சிகிச்சை அளித்தான். அந்த நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்களுக்கும் தொலை பேசியில் அழைத்து அந்த புதியவனுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தான். அவனுடைய உடமைகளை ஆராய்ந்து அவனுடைய வீட்டிற்கும் தகவல் தெரிவித்துவிட்டு வீட்டிற்கு சென்றான்.

 

மறுநாள் அந்தபகுதி MLA புகழேந்தியை சந்தித்தார்.

 

“டாக்டர்…. நீங்க தான் என் பையன காப்பாத்தினதா சொன்னாங்க… நன்றின்னு ஒரு வார்த்தையை சொல்லி நீங்க செய்த இந்த பெரிய காரியத்துக்கு ஈடுகட்டிட முடியாது. நீங்க என் குலவிளக்கு அணையாம காப்பாத்தியிருக்கீங்க…. இந்த உதவிய நா என்னோட வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்…” என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

 

“இதுல என்ன சார் இருக்கு… ஜஸ்ட் இது ஒரு மனிதாபிமானம் தானே…” என்று அவரை அமைதிபடுத்தினான்.

 

“தம்பி… சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க… உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் எங்கிட்ட கேளுங்க….” என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் வாக்கு விரைவிலேயே  பலித்தது.

 

இன்று

 

நிரஞ்சனியின் கல்யாணம் முடிவு செய்யப்பட்டுவிட்டது. நிச்சயதார்த்த தேதியும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. ‘இன்னும் ஒரே வாரத்தில் நிச்சயம். அது முடிந்து பத்து நாட்களில் திருமணம்’ என்று முடிவு செய்திருந்தார்கள். யாருக்குமே இந்த கல்யாணத்தில் திருப்தி இல்லாததாலோ என்னவோ வீட்டில் கல்யாண கலை இல்லவே இல்லை.

 

எப்போதுமே புகழ் நிரஞ்சனியின் நெஞ்சில் நிறைந்திருந்தாலும் நிச்சயதார்த்த நாள் நெருங்க நெருங்க நிரஞ்சனிக்கு அவனுடைய நினைவு ஒரு நொடி விலகாமல் அவளை இம்சித்தது.

 

நிச்சயதார்த்த தேதி நெருங்கிவிட்டதை ஒட்டி நிரஞ்சனியை வேம்பங்குடிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவள் தனிமையில் தவித்தாள். பெற்றோர் இருவரும் வயல் தோப்பு என்று சென்றுவிட, தனிமை தீயில் வெந்து கொண்டிருந்தாள். அப்போதும் பெற்றோரை மீறி புகழேந்தியை திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள அவள் மனம் ஒப்பவில்லை.

 

‘என்ன செய்வது…? என்ன செய்வது…?  என்ன செய்வது…?’  என்ற கேள்வி மட்டும் தான் அவளுடைய மூளையில் முழு நேரமும் ஓடிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் யாரோ பின்னந்தலையை இறுக்கி பிடிப்பது போல் உணர்வாள். இன்னும் கொஞ்ச நாள் இதே நிலைமையில் இருந்தால் அவளுக்கு நிச்சயம் பைத்தியம் பிடித்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

“அத்த மாமா எங்க…?” இராஜ சேகர் தாமரையிடம் கேட்டான்.

 

“தோப்பு பக்கம் போனாரு மாப்ள… என்னா சேதி…?”

 

“நிச்சயத்த நமக்குள்ள ஒரு பத்து பேர மட்டும் வச்சு முடிச்சுக்குவோமுன்னு நெனக்கிறேன். செலவுக்கு பாக்குறேன்னு நினைச்சுடாதிங்க… என்னமோ எல்லாருகிட்டயும் போயி சொல்ல புடிக்கல…” அவன் தயக்கமாக சொன்னான்.

 

தாமரைக்கும் புரிந்தது. ‘தெரிந்தவர் தெரியாதவர்களுக்கெல்லாம் தெரிந்துவிட்டது, நிரஞ்சனி புகழேந்தி விஷயம். அதை உறுதி செய்வது போல் அவசர கல்யாணம். அதுவும் தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு கூலிக்கு பெண் கொடுக்க போவதாக சொல்லிக்கொள்ள யாருக்கு தான் பெருமையாக இருக்கும்…? ‘

 

தாமரைக்கு மனம் கலங்கியது. ஆனாலும் எல்லா வழியிலும் முயன்றுவிட்டு மீதமிருக்கும் ஒரே வழி இதுதான் என்று தெரிந்த பின்பும் இதையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்ன செய்வது…? பெண் பிள்ளை எவ்வளவு நாள் தனியாக வாழ முடியும்…? என்றெல்லாம் யோசித்து தன்னை திடப்படுத்திக் கொண்டு, “சரி… மாப்ள.” என்றாள்.

 

“நா கெளம்புறேன்… மாமா வந்தா சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.

 

அரசு இந்த கல்யாண விஷயத்தில் எதிலும் பட்டுக்காமல் இருந்தார். அவர் எப்பொழுதுமே அப்படித்தான். மூத்த மகள் திருமணத்திலும் தானாக பொறுப்பாக எதுவும் அவர் செய்ததில்லை. மாலை ஆனால் அவருக்கு குடிக்க வேண்டும். அது தான் அவருக்கு முக்கியம். அது தவிர வீட்டில் எது நடந்தாலும் அது பற்றி அவருக்கு அக்கறை இல்லை.

 

புகழேந்திக்கு வாழ்க்கை நரகமாக இருந்தது. நிரஞ்சனியை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று புரியாமல் திணறினான். அவளுக்கு நடக்கும் திருமண ஏற்பாடுகளை பற்றி தெரிந்து கொண்டவன் அந்த திருமணத்திலிருந்து நிரஞ்சனியை எப்படி காப்பது என்று தெரியாமல் தவித்தான்.

 

அதுபற்றி சிவரஞ்சனிக்கு தொடர்பு கொண்டு நிரஞ்சனியோடு பேச முயற்சி செய்தான். ஆனால் அவள் வேம்பங்குடிக்கு சென்றுவிட்டாள் என்ற செய்தியை மட்டும் தான் அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது.

 

அவனுக்கு ஆலோசனை சொல்பவர்கள் எல்லாம் ‘வேம்பங்குடிக்கு போக வேண்டாம்…’ என்று தான் சொன்னார்கள். முட்டாள் தனமாக அவசரப்பட்டு வேம்பங்குடிக்கு சென்று மாட்டிக்கொள்ள புகழேந்திக்கு விருப்பம் இல்லை. ஆனால் நிரஞ்சனியை வேம்பங்குடியிலிருந்து வெளியே கொண்டுவருவதில் உறுதியாக இருந்தான்.

 

அது பற்றி அவனுடைய அண்ணனிடம் பேசினான்.

 

“அண்ணா… இந்த பிரச்சனைக்கு என்ன செய்றது..? கண்டிப்பா நிரஞ்சனிய நா கல்யாணம் செஞ்சே ஆகனும். அந்த ஊர் ஆளுங்க சரியான காட்டானுங்கன்னு எல்லோரும் சொல்றாங்க… என்ன செய்றது?”

 

“அந்த பொண்ணுக்கு போன்ல கூப்பிட்டு வளநாடு வரைக்கும் வர சொல்லிடு. அங்க நம்ம போய் அழைச்சுகிட்டு வந்துடுவோம்.”

 

“அவ வர மாட்டாண்ணா… அதுவும் இல்லாம அவளை காண்டக்ட் பண்ண முடியல…”

 

“ஏண்டா வராது அந்த பொண்ணு… உன்ன லவ் பண்ணுது தானே… அந்த பொண்ணு உறுதியா இல்லன்னா எதுவும் செய்ய முடியாதுடா புகழ்…”

 

“அவ என்ன லவ் பண்றதுல எந்த சந்தேகமும் இல்லைண்ணா… அத அவ எங்க… யார்கிட்ட வேணுன்னாலும் சொல்வா… ஆனா, வீட்டைவிட்டு வர மாட்டா.. பெத்தவங்களுக்கு தெரியாம கல்யாணம் செஞ்சுக்க மாட்டா…”

 

“அப்படின்னா அவங்க அப்பா அம்மாகிட்ட பேச வேண்டியதுதான்… ”

 

“அதுங்க நம்ம பேச்ச கேட்டாதான் பிரச்சனை இல்லையே… அங்க ஒருத்தன் இருக்கான்… இராஜசேகர்…. அவன் பேச்சு தான் அங்க எல்லாமே… நம்ம பேசி எல்லாம் ஒரு பயனும் இருக்காது…”  என்று சலிப்பாக சொன்னவன், திடீரென உற்சாகமாகி,

 

“நா வேணுன்னா அவளை ராத்திரியோட ராத்திரியா வீடு புகுந்து தூக்கிகிட்டு வந்துடவா…. அதுதான் இப்போதைக்கு இருக்க ஒரே வழி…” என்றான்.

 

“ஹேய்… அதுமாதிரி எல்லாம் செஞ்சுடாதடா… மாட்டனா அங்கயே சமாதிதான்…. உன்னோட சாம்பல கூட யாருக்கும் தெரியாதபடிக்கு அழுச்சுடுவானுங்க… காட்டு பசங்க… ” என்று சொன்னார்.

 

அப்போது அவனுடைய அண்ணி நயந்தி குறுக்கிட்டு, “நம்ப பேசினா தானே பிரச்சனை… யாரையாவது பெரிய ஆளுங்களை வச்சு பேசி பார்க்கலாமே…” என்றாள்.

 

“இது நல்ல யோசனை…” என்று புகழேந்தியின் அண்ணன் சொல்ல அவனும் தலையை ஆட்டி அதை ஆமோதித்தான்.

 




Comments are closed here.

You cannot copy content of this page