மனதில் தீ-18
3634
0
அத்தியாயம் – 18
அன்று
புகழேந்தி நிரஞ்சனியின் காதல் தெளிந்த நீரோடையாக சீராக சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினான் புகழேந்தியின் நண்பன் டாக்டர் ஷங்கர்.
ஒரு நாள் ஷங்கர் திடுமென சோகமாக இருந்தான். அவனுடைய காதலி பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக இவனிடம் சொல்லிவிட்டாளாம். அதனால் இவன் கொஞ்சம் அடிவாங்கிவிட்டான். அவளும் நல்லப் பெண்தான். ஆனால் பெற்றோரின் பிடிவாதத்திற்கு பலியாகி சூழ்நிலை கைதியாகிவிட்டாள். அந்த சம்பவம் புகழேந்திக்கு மனதில் உறுத்தலை ஏற்படுத்தியது.
ஏற்கனவே நிரஞ்சனி அவளுடைய வீட்டிற்கு மிகவும் பயப்படுவது அவனுடைய உறுத்தலை அதிகப்படுத்தியது. இனி ஒரு நிமிடம் கூட நிரஞ்சனி இல்லாத வாழ்க்கையை அவனால் வாழ முடியாது என்பது அவனுக்கு நிச்சயம். அதனால் தாமதிக்காமல் நிரஞ்சனியிடம் திருமண பேச்சை ஆரம்பித்தான்.
“ஜெனி… உங்க வீட்ல நம்ம பேச்சை ஆரம்பித்துவிடலாமே…”
“என்ன புகழ் திடீர்ன்னு… கொஞ்ச நாள் ஆகட்டுமே…”
“எப்போ சொன்னாலும் சொல்றதுதானே… இப்போவே பேசிவிடலாம்… நான் நேரடியா அப்பா அம்மாவை கூட்டிகிட்டு வரட்டுமா… இல்ல யாரையாவது வச்சு முதல்ல பேசட்டுமா…?”
“ஏன் ரொம்ப அவசரப்படறீங்க புகழ்? கொஞ்ச நாள் போகட்டும் பேசலாம் ”
“நாமளா சொல்லாமல் அவங்களுக்கு தெரிஞ்சா… அவங்களோட பிடிவாதம் அதிகமாயிடும் ஜெனி… இப்போவே நம்ம பேசிவிடலாம்… எப்போ பேசினா என்ன..?”
“எனக்கு பயமா இருக்கு புகழ்…”
“பயந்து என்ன செய்யப்போற…? என்னை விட்டுட்டு வேற…” அவன் அவனுடைய காதல் ஜெயிக்க வேண்டுமே என்கிற பதைப்பில் அவளை காயப்படுத்த முனைந்தான். ஆனால் அவன் சொல்ல வந்ததை முடிப்பதற்குள்
“ப்ளீஸ் புகழ்…” என்று கெஞ்சலாக அவனை பார்த்தாள் நிரஞ்சனி..
உடனே அவனும் கோபத்திலிருந்து தணிந்து “சாரி…” என்று சொல்லி கொஞ்சம் இடைவெளி விட்டு
“என்ன ஜெனி…? இது பயப்படற நேரம் இல்லை… நான் உங்க ஊர் ஆட்களை வச்சே உங்க வீட்ல பேசுறேன்… அதுக்கப்புறம் என்னோட அம்மா அப்பாவோட உங்க வீட்டுக்கு வந்து பெண் கேட்கிறேன்…. எல்லாம் சரியா வரும்…” என்று அவளுக்கு தைரியம் சொன்னான்.
அவளுக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவளுடைய அக்காவின் கல்யாணமும் காதல் கல்யாணம் தானே…! அதோடு அக்கா கணவர் படிக்காதவர் என்பது தான் அந்த கல்யாணத்தில் பிரச்சனையாக இருந்தது. ஆனால் புகழுக்கு என்ன குறை… அவங்களே தேடினாலும் இது போல் மாப்பிள்ளையை கண்டுபிடிப்பது கஷ்டம்… அதனால் அவளுக்கும் நம்பிக்கை துளிர்த்துவிட “சரி… வீட்ல நா முதல்ல சொல்லிடறேன்… அப்புறம் நீங்க பேசுங்க… ” என்றாள்.
அவனிடம் “சரி ” என்று சொன்னவளுக்கு வீட்டில் பேசுவது அவ்வளவு எளிதாக இல்லை. முதலில் ‘அம்மாவிடம் சொல்லிவிடலாம்’ என்று நினைத்தாள். ஆனால் அதை பற்றி பேச்செடுக்கும் போதெல்லாம் ஏதாவது தடை வந்துகொண்டே இருந்தது….
புகழேந்திக்கு பொறுமை குறைந்து கொண்டே வந்தது. அதற்கு ஏற்றாற் போல் அவனுடைய நண்பர்கள் “வேம்பங்குடி பெண்ணை காதலித்தால் அந்த காதல் கல்யாணத்தில் நிச்சயம் முடியாது” என்று அடிக்கடி சொல்லி அவனை பயமுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.
இந்த நிலையில் புகழேந்தி, நிரஞ்சனியை மருத்துவமனைக்கு விடுப்பு எடுக்க சொல்லி அவனுடைய அண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்றான். அன்று அவனுடைய அண்ணன், வீட்டில் இல்லை. அவனுடைய அண்ணி நயந்தியிடம் சொல்லி நிரஞ்சனிக்கு தைரியம் சொல்ல சொன்னான். அதற்கு தான் அவளை அழைத்து சென்றான்.
புகழ் நிரஞ்சனியை வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டான். நயந்தி நீண்ட நேரம் நிரஞ்சனியுடன் பேசிக் கொண்டிருந்தாள். நிரஞ்சனிக்கு தைரியம் சொல்லிப் பார்த்தாள். புகழேந்தி மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தான்.
“என்ன அண்ணி சொல்றா…?” அவன் நயந்தியிடம் தனியாகக் கேட்டான்.
“ரொம்ப பயப்படுது தம்பி… அவங்க ஊர் என்ன அப்படி பட்ட ஊரா…? எதுக்கு இப்படி பயப்படுது…?” என்றாள் நயந்தி.
நயந்தியின் பேச்சை கேட்ட புகழேந்திக்கு வயிற்றை பிசைந்தது. நிரஞ்சனிக்கும் அவனுக்கும் திருமணம் நடக்குமா என்று பயந்தான். அவள் அவளுடைய காதலில் அழுத்தமாக இருந்தால் அவனால் உலகத்தையே எதிர்க்க முடியும். ஆனால் அவளுடைய பயத்தை நினைத்தால் புகழேந்திக்கு அவள் எந்த அளவு உறுதியாக இருப்பாள் என்று கணிக்க முடியவில்லை.
ஒவ்வொரு நிலையிலும் அவன் தான் கட்டாயப்படுத்தி அவளை அவனுடன் பேச வைத்தான்… பழக வைத்தான்… பின் காதலை சொல்ல வைத்தான்… நிரஞ்சனி தானாக எதுவும் செய்யவில்லை. அதனால் அவனுக்கு நிரஞ்சனியின் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது. கலக்கம் அதிகமானது.
‘ஒரு வேளை அவள் அப்பா அம்மாவிற்கு பயந்து வீட்டில் பார்க்கும் மாப்பிளைக்கு கழுத்தை நீட்டிவிட்டால் என்ன செய்வது…?’ என்று பயந்தான். அந்த பயத்தோடு நிரஞ்சனியிடம் தனியாக பேசினான்.
இன்று
பாபநாசத்தில் தஞ்சாவூர் MLA திரு.கல்யாணசுந்தரம் வீட்டில் புகழேந்தியும் அவனுடைய அண்ணனும் இருந்தார்கள்.
“நீங்க சொல்றத கேட்டா இது ஒன்னும் பெரிய விஷயமா தெரியல தம்பி. உங்களுக்கு உதவ நான் கடமைப் பட்டிருக்கேன். இதை நான் முடிச்சு தர்றேன்… கவலைப்படாதிங்க ” என்றார் கல்யாணசுந்தரம்.
“எப்படி சார்…?” புகழேந்தி ஆர்வமாக கேட்டான்.
“நம்ப மயிலாப்பூர் MLA நம்ம கட்சி தான். அவரு சொந்த ஊர் எதுன்னு தெரியுமா உங்களுக்கு? ” என்று சிரித்துக் கொண்டே கேட்டவர் “வேம்பங்குடி தான்…” என்றார்.
புகழேந்தியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “அப்போ இப்பவே பேசுங்க சார்” என்றான்.
“தம்பி ரொம்ப பதட்டமா இருக்கீங்க. நீங்க பயப்படற அளவு இது ஒன்னும் பெரிய விஷயமே இல்ல தம்பி. கொஞ்சம் பொறுங்க… இப்பவே அவருக்கு போன் போடுறேன். நீங்களும் கேளுங்க… ஸ்பீக்கர்ல போடுறேன். அப்பதான் நீங்க தைரியமா இருப்பீங்க ” என்று சொல்லிக் கொண்டே மயிலாப்பூர் MLA வுக்கு தொடர்பு கொண்டு போனை ஸ்பீக்கரில் போட்டார்.
கல்யாணசுந்தரத்துக்கும் மயிலாப்பூர் MLA நாஞ்சியப்பனுக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைத்து பேசிக்கொள்ளும் அளவு நெருக்கமாக இருந்தார்கள்.
“ஹலோ…. நா கல்யாணசுந்தரம் பாபநாசத்துலேருந்து பேசுறேன்.”
“அடடே… சொல்லுப்பா சுந்தரம்… என்ன விஷயம்… திடீர்ன்னு கூப்பிட்டுருக்க… வீட்ல எல்லாரும் சௌக்கியமா?”
“எல்லாரும் சௌக்கியம்… அங்க எப்படி…?” என்று பதிலுக்கு விசாரித்தார் கல்யாணசுந்தரம்.
“எல்லாரும் நலம். சொல்லுப்பா என்ன விஷயமா கூப்பிட்ட…?”
“அட… அது ஒன்னும் இல்லப்பா… இங்க நமக்கு வேண்டிய பையன் காதல் விவகாரத்துல சிக்கிகிட்டான்…” என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தார்.
முழுமையாக அவர் சொல்வதை குறுக்கிடாமல் கேட்ட நாஞ்சியப்பன்
“சுந்தரம்… இதை தவிர எது வேணுன்னாலும் கேளு நான் செய்றேன்… ஆனா என்னோட ஊருகாரன எதிர்த்து என்ன எதுவும் செய்ய சொல்லாத. அத நான் உயிரே போனாலும் செய்ய மாட்டேன். அதே சமயம் ஊருக்குள்ளேருந்து அந்த பையனை கண்டிச்சு வைக்க சொல்லி எனக்கு ஏதாவது தகவல் வந்தா, நான் தயங்காம அந்த பையன அடக்க ஏற்பாடு செய்வேன்.” என்றார்.
அதை கேட்டு திகைத்த கல்யாண சுந்தரம், “என்னப்பா நீ… உங்க ஆளுங்களுக்கு புத்தி தானே சொல்ல சொன்னேன். எதிர்க்க சொல்லலியே..” என்றார்.
“அவங்களுக்கு புத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. உன்ன தேடி வந்திருக்க பையனுக்கு நீ புத்தி சொல்லி அனுப்பு. இல்லன்னா நீயும் நானும் மோதிக்கிற மாதிரி ஆகிவிடும். இருபது வருஷ அரசியல் நட்பு முக்கியமா…? புதுசா வந்த அந்த பையன் முக்கியமா…? நீயே முடிவு பண்ணிக்க.” என்று சொல்லி போனை அணைத்துவிட்டார் நாஞ்சியப்பன்.
கல்யாணசுந்தரம் எதுவும் பேச முடியாமல் கையை பிசைந்தார். அவரால் தங்களுக்கு உதவ முடியாது என்பதை புரிந்து கொண்ட புகழேந்தி அவரை தர்மசங்கட படுத்தாமல், “பரவால்ல சார்… நாங்க பார்த்துக்கிறோம்… ” என்று சொல்லிவிட்டு தன் அண்ணனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
“என்னடா புகழ்… நாம மலை போல நம்பியிருந்தவரே இப்படி கைய விரிச்சிட்டாரே…!” புகழேந்தியின் அண்ணன் கவலையாக பேசினார்.
அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்த புகழ்
“அதுவும் நல்லதுக்கு தான் அண்ணா… இது என்னோட காதல்… இதுல நான் அடுத்தவங்களுக்கு பின்னாடி ஒளிந்து கொள்வது சரியில்ல. பிரச்னையை முடிந்த அளவு சுமூகமா முடிக்க முயற்சி செய்தேன். முடியல… இனி நானே நேரடியா இறங்கிப் பார்த்துட வேண்டியது தான்…” என்றான்.
“என்னடா செய்யப் போற?”
“வேம்பங்குடிக்கு போகப்போறேன்…”
“என்ன விளையாடுறியா…? அங்க போனா உன்னோட உயிருக்கு உத்திரவாதம் இல்ல…”
“ஜெனி இல்லன்னா… நானே இல்ல. வாழ்வோ சாவோ…. அது அவளோட தான். அது எங்கையா இருந்தா என்ன? நான் வேம்பங்குடிக்கு போகத்தான் போறேன்.” என்றான் தீர்மானமாக. பின் கைபேசியை எடுத்து பெற்றோருக்கு அழைத்து உடனே தஞ்சாவூருக்கு கிளம்பி வரும்படி சொன்னான்.
அன்று இரவே அவனுடைய பெற்றோர் தஞ்சாவூர் வந்து விட்டார்கள். அவன் தன் தாய் மடியில் தலை சாய்த்து, தந்தையுடன் கலகலப்பாக பேசி அந்த இரவை கழித்தான். இந்த இரவே அவன் அவனுடைய பெற்றோருடன் கழிக்கும் கடைசி இரவாகவும் இருக்கலாம் என்ற எண்ணத்தில், அவர்கள் இருவரையும் அன்று முழுவதும் மிக மகிழ்ச்சியாக வைத்திருந்தான். அவர்களும் மகனுக்கு இருக்கும் பிரச்சனை தெரியாததால் குடும்பத்தோடு சேர்ந்து இருக்கும் நிம்மதியை அனுபவித்தார்கள்.
புகழேந்தி அடுத்த நாள் காலை ஆறு மணிக்கெல்லாம் காரை எடுத்துக் கொண்டு வேம்பங்குடியை நோக்கி புறப்பட்டான்.
Comments are closed here.