மனதில் தீ-19
3176
0
அத்தியாயம் – 19
அன்று
நிரஞ்சனிக்கு அவளுடைய காதலை பற்றி வீட்டில் பேச தைரியம் இல்லை. அதை புரிந்து கொண்ட புகழ், நிரஞ்சனிக்கு அவனுடைய அண்ணி நயந்தியிடம் சொல்லி தைரியம் சொல்ல சொன்னான்.
நிரஞ்சனியிடம் பேசிப் பார்த்த நயந்திக்கும் நிரஞ்சனிக்கு போதுமான மன தைரியம் இல்லை என்று தோன்றி விட, அதை மறைக்காமல் புகழேந்தியிடம் சொன்னாள். அதில் பீதி அடைந்த புகழ் நிரஞ்சனியை தனியாக தன்னுடைய அறைக்கு அழைத்து பேசினான்.
“ஜெனி… உனக்கு என்னை நிஜமாவே பிடிச்சுருக்கா…?”
“என்ன புகழ் இது… திடீர்ன்னு ஏன் இப்படி கேட்கிறீங்க…?”
“நீ பதில் சொல்லு….”
“ஆமா… பிடிச்சிருக்கு…”
“அப்படின்னா நீ வீட்டுல பேச வேண்டியதுதானே… எதுக்கு லேட் பண்ணற…?”
“ப்ச்… நீங்க எதுக்கு அவசரப்படறீங்க…?”
“என்னோட தவிப்ப நீ புரிஞ்சுக்கவே மாட்டியா…? நா இப்போ நம்ப கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு தெரியாம நெருப்பு மேல நிக்குற மாதிரி இருக்கேன்… புரிஞ்சுக்கோ ஜெனி… ப்ளீஸ்… ” அவன் வார்த்தையில் தான் ப்ளீஸ் இருந்ததே தவிர, அவனுடைய குரலிலும் முகத்திலும் கண்டிப்பும் கடுகடுப்பும் தான் இருந்தது.
“பேசு பேசுன்னு சொல்றீங்க… உங்களுக்கு என்ன…? ஈஸியா சொல்லிடுவீங்க… நான் தானே பேசணும்…” என்று படபடத்துவிட்டு “ச்சை… எப்ப பார்த்தாலும் ‘தொன தொனன்னு…’ சரியான தொல்லையா போச்சு…” என்று முனுமுனுத்தாள்.
அது அவனுக்கு தெளிவாக கேட்டுவிட்டது.
“என்ன சொன்ன… என்ன சொன்ன… திரும்ப சொல்லு… என்னால உனக்கு தொல்லையா..?” என்று கோபமாக கேட்டான்.
“ஆமா தொல்லை தான்… இந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு வேலைக்கு வந்ததிலே…..ருந்து மாற்றி மாற்றி ஏதாவது பிரச்சனை… என்னோட நிம்மதியே போச்சு…” என்றாள் அவளும் கோபமாக.
அவள் சொல்லி முடிக்கும் முன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் புகழ், தன்னுடைய கையை முறுக்கி எதிரில் இருந்த ஆள் உயரக் கண்ணாடியில் குத்திவிட்டான். கண்ணாடி உடைந்து சிதறியது. இரத்தம் பீறிட்டது. கையை உதறினான். அறை முழுவதும் இரத்தமாக மாறியது.
“ஐயோ… என்ன பண்ணிட்டிங்க… ” என்று பதறி அவனுடைய கையை பிடிக்க முயன்றாள் நிரஞ்சனி.
“கைய விடு… நகரு…” அழுத்தமாக சொன்னான்.
“ஐயோ… ரெத்தம் இப்படி கொட்டுதே… கைய குடுங்க…” என்று பதறி அவன் கையை மீண்டும் பிடிக்க முயன்றாள்.
“நகரு முதல்ல…” என்று கடுப்புடன் சொல்லி அவளை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு, கையில் வடியும் இரத்தத்தோடு கார் சாவியை தேடி எடுத்துக் கொண்டு, அங்கே பதறியபடி நிற்கும் நிரஞ்சனியை கண்டுக்காமல் வெளியே சென்றுவிட்டான்.
“தனியா போகாதிங்க… ப்ளீஸ்… நானும் வர்றேன் ஹாஸ்ப்பிட்டல் போகலாம்…” என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்த நிரஞ்சனியை அவன் பொருட்படுத்தவே இல்லை.
இது அனைத்தும் அவனுடைய அறையில் நடந்தது. அண்ணி அவர்களுடைய அறையில் இருந்தாள். அவளுக்கு எதுவும் தெரியவில்லை.
“தனியா போகாதிங்க… தனியா போகாதிங்க…” என்று நிரஞ்சனி அழுது கொண்டே சொல்லவதை கேட்டு அவளுடைய அறையிலிருந்து நயந்தி வெளியே வரும் போது புகழேந்தியின் கார் வெளியே கிளம்பியது…
“என்ன ஜெனி… தம்பி ஏன் கோவமா போகுது..?”
“அக்கா… அக்கா.. அவர் கைல அடி பட்டிருக்குக்கா… நிறைய ரெத்தம் போயிக்கிட்டு இருக்கு… அந்த கையோட கார் டிரைவ் பண்ணிக்கிட்டு தனியா போறாரே… மயக்கம் வந்தா என்ன செய்வாருக்கா… பயமா இருக்கு… எங்க போறாருன்னு தெரியலையே…” என்று அழுதாள் நிரஞ்சனி.
“சரி… சரி… ஒன்னும் இல்ல… மருத்துவமனைக்கு தான் போகும். பெரிய அடியா இருக்காது. நீ கவலைப் படாத… நாமளும் ஆட்டோ பிடிச்சு மருத்துவமனைக்கு போயி பார்க்கலாம்…” என்று சொல்லி நிரஞ்சனியை சமாதானம் செய்த நயந்தி ஆட்டோ வர சொன்னாள். இருவரும் அவசரமாக மருத்துவமனைக்கு சென்றார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிரஞ்சனி தானாகவே புகழேந்தியிடம் வந்து “எங்க வீட்டுக்கு யாரையாவது வந்து பேச சொல்லுங்க…” என்று சொன்னாள்.
ஆனால் புகழ் அதை கண்டுக்காமல் இருந்தான். நிரஞ்சனி அவனிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சி கூத்தாடி அவனை சமாதானம் செய்து அவளுடைய வீட்டிற்கு சம்மந்தம் பேச வர சொன்னாள்.
நிரஞ்சனியின் தாய்க்குத்தான் முதலில் விஷயம் தெரிந்தது. புகழேந்தியின் அண்ணன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் வேம்பங்குடி. அந்தப் பெண்தான் தாமரையிடம் பேசியது. தாமரைக்கும் மாப்பிள்ளை டாக்டர்… நல்ல வசதி… என்றதும் சம்மதம் போல் தோன்றியது.
நிரஞ்சனியை தனியாக அழைத்து விசாரித்தார். அவளும் தயங்கித்தயங்கி உண்மையை சொல்லி முடித்தாள். தாமரை கணவனிடம் பேசிவிட்டு அவருக்கும் சம்மதம் என்றதும் தன் அண்ணன் கோபாலனிடம் மறுநாள் போய் நின்றாள்.
“அண்ணா… நம்ப ரஞ்சி வேலைபாக்குற ஆசுபத்திரில ஒரு டாக்டர் ரஞ்சிய பொண்ணு கேட்டு அனுப்பியிருக்காரு. நல்ல பையனாம். நம்ப தனத்து ஓப்படியா சொன்னா… நீங்க போயி ஒரு எட்டு பாத்துட்டு வாங்க… புடிச்சிருந்தா மேல பேசலாம்” என்று சொன்னார்.
கோபாலன் புகழேந்தியை சென்று அவனுடைய அண்ணன் வீட்டிலேயே பார்த்தார். அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.
“எனக்கு மாப்பிளையையும் உங்க குடும்பத்தையும் ரொம்ப பிடிச்சிருக்கு… நீங்க வந்து ஒரு தரம் பொண்ண பார்த்துடுங்க… மற்றதெல்லாம் பேசி முடிச்சிடலாம்” கோபாலன் மகிழ்ச்சியாக சொன்னார்.
“பெண் புகழுக்கு தெரிந்த பெண் தானே… அதனால் பெண் பார்க்கிற சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம். ஆனா அம்மா அப்பா நிரஞ்சனிய பார்த்தது இல்ல. அதனால அவங்க மட்டும் ஒரு தரம் வந்து பார்க்கட்டும்….” என்றார் புகழேந்தியின் அண்ணன்.
“சரிங்க… தாராளமா வரட்டும்…”
“உங்க சைடுல மற்ற எல்லாருக்கும் இந்த கல்யாணத்துல சம்மதம் தானே…?”
“அனேகமா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரிதான். எங்க ஊர் திருவிழா அடுத்த மாசம் வருது. திருவிழா கழிச்சு கல்யாணம் வச்சுக்குற மாதிரி இருக்கலாம்…” என்று அவர் ஆர்வக் கோளாறில் பேசிவிட்டு வந்துவிட்டார். அவர் செய்த ஒரு காரியம் அவனுடைய ஜாதியை கேட்காதது.
‘மாப்பிள்ளை வீட்டில் பெண் கேட்டு அனுப்புகிறார்கள். பெண்ணுடைய தாய் மாப்பிள்ளையை போய் பார்த்துவிட்டு வர சொல்கிறாள். அதற்கு பிறகு ஜாதி என்ன மாற்றமாக இருக்கப் போகிறது…? ஜாதியை தானே முதலில் விசாரிப்பார்கள். அது தெரியாமலா இருவரும் பேச்சு வார்த்தை வரை வந்திருப்பார்கள்…’ என்று நினைத்து அவர் ஜாதியை பற்றி பேசாமல் வந்துவிட்டார். ஆனால் அதுவே பின்னாளில் மிகப் பெரிய பிரச்சனை ஆகிவிட்டது.
அது தெரியாமல் புகழேந்தி நிரஞ்சனியுடைய மாமா கொடுத்த உறுதியை நம்பி வீடெல்லாம் பார்த்து, நிரஞ்சனிக்கும் காட்டி அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துவிட்டான். அதுதான் முதல் பகுதியில் நிரஞ்சனியும் அவனும் வீடு பார்க்க சென்ற சமாச்சாரம்…
இன்று
புகழேந்தியின் கார் வேம்பங்குடிக்குள் நுழைந்தது. இது தான் அவன் முதல் முறை அந்த ஊருக்குள் வருவது. அவனுடைய கற்பனையில் தோன்றியது போல் அந்த ஊர் பயங்கரமாக இல்லாமல் அமைதியாகவும் அழகாகவும் இருந்தது. அந்த ஊர் வயல் வெளியின் தென்றல் காற்று அவனுடைய வெம்மையான மனதையும் இதமாக வருடி குளிர்வித்தது.
அமைதியான மனநிலையில் அவன் நிரஞ்சனியின் வீட்டை நோக்கி பயணம் செய்தான். சாலையில் ஜன நடமாட்டம் குறைவாக இருந்தது. எதிரில் தென்பட்ட ஒரு முதியவரிடம் காரை நிறுத்தி
“தாத்தா… இங்க அரசு என்பவரின் வீடு எங்க இருக்கு…?” என்று கேட்டான்.
“எந்த அரசு…? நடு வீட்டு அரசா…. மேலத்தெரு அரசா…?” என்று விளக்கம் கேட்டார் அந்த முதியவர்.
என்ன சொல்வது..? அவனுக்கு என்ன தெரியும் அதை பற்றி…?
“இராஜசேகரோட மாமனார் அரசு வீடு தாத்தா…” என்று பதில் சொன்னான்.
“ஓ… மேலத்தெரு அரசு… நீங்க யாரு தம்பி….” என்று மேலும் விபரம் கேட்டார்.
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ‘சொந்தகாரன் என்று நிச்சயம் சொல்ல முடியாது. அப்படி சொனால் என்ன சொந்தம் என்று விசாரிக்க ஆரம்பித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை…’ என்று நினைத்தவன்
“பழக்கப்பட்டவர் தாத்தா… வளநாடு வந்தால் வீட்டுக்கு வர சொல்லியிருந்தார்… ஆனா வீடு எங்க இருக்குன்னு எனக்கு தெரியல…” என்று சொல்லி வைத்தான்.
“அப்படியா தம்பி…. இந்த ரோட்டுல நேர போங்க.. சோத்தாங் கை பக்க(ம்) ஒரு புளிய மரம் வரு(ம்), அதுக்கு பக்கத்துல ஒரு மண் ரோடு போவு(ம்)… அதுல கார விடுங்க… நாலாவது வீடு தான் அரசு வீடு… கொள்ளைக்குள்ள இருக்கு(ம்)… ஓட்டு வீடு… பாத்து போங்க… தெரியலன்னா அந்த பக்க(ம்) சனங்களுகிட்ட கேளுங்க சொல்லுவாங்க…” என்று அவனுக்கு வழி சொல்லி அனுப்பி வைத்தார்.
அவருடைய ஊர்காரனின் நண்பன் அவருக்கும் நண்பன் என்ற ரீதியில் அன்பாக பேசிய அந்த முதியவரின் மீது அவனுக்கு மரியாதை ஏற்பட்டது.
அந்த முதியவரிடம் பேசும் போதே அவன் ஒன்றை உணர்ந்து கொண்டான். ‘அந்த ஊரில் தனித்தோ இரகசியமாகவோ எதுவும் செய்ய முடியாது. எல்லோருக்கும் எல்லோரை பற்றியும் எல்லாம் தெரிந்திருக்கும் போல… பாவம் ஜெனி… ‘ என்று நினைத்துக் கொண்டான்.
அந்த பெரியவர் காட்டிய வழியில் வந்தவன் நிரஞ்சனியின் வீட்டை நெருங்கிவிட்டான். ஆனால் அங்கு எந்த வீடு நிரஞ்சனியின் வீடு என்பது அவனுக்கு தெரியவில்லை. எல்லா வீடுகளுமே கொல்லைக்குள் தான் இருந்தது. ஒன்றிரண்டு வீட்டை தவிர அனைத்து வீடுகளுமே ஓட்டு வீடு தான். வீடுகள் அனைத்தும் அங்கும் இங்கும் இருந்ததால் எங்கிருந்து எண்ணிக்கையை ஆரம்பித்து நான்காவது வீட்டை கண்டு பிடிப்பது என்பதும் அவனுக்கு தெரியவில்லை.
சற்று நேரம் குழம்பியபடி சாலை ஓரமாக வண்டியை நிறுத்தியிருந்தவன் ஒரு நடுத்தர வயது மனிதர் தன் காரை கடந்து போவதை கவனித்தான். வேகமாக இறங்கி
“சார்… ஒரு நிமிஷம்…” என்றான்.
அந்த மனிதர் திரும்பி புகழேந்தியை பார்த்தார். இருவருக்குமே ஆச்சர்யம். அந்த மனிதர் அரசு…
புகழேந்தியை பார்த்ததும் அரசுவின் கண்கள் கோவத்தில் கோவை பழமென சிவந்தன.
நாடு ரோட்டிலேயே ரசபாசாமாக போகிறது என்று நினைத்தான் புகழ்.
“சார்… உங்கள பார்க்கதான் வந்தேன்… உங்களிடம் கொஞ்சம் பேசணும் ” புகழ் அமைதியாக சொன்னான். அவன் குரலில் பதட்டமோ பயமோ சிறிதும் இல்லை. அதே சமயம் அலட்சியமும் இல்லை.
“வாங்க வீட்டுக்கு போயி பேசலாம்… எம் பின்னாடியே கார எடுத்துகிட்டு வாங்க…” என்று அவரும் அமைதியாகவே சொன்னார்.
வீட்டை அடைந்து தோளில் இருந்த துண்டை எடுத்து திண்ணையை ஒரு முறை தூசு தட்டிவிட்டு அமர்ந்த அரசு, புகழேந்தியை எதிரில் இருந்த நாற்காலியில் அமர சொன்னார்.
“சொல்லுங்க என்ன சேதியா இந்த பக்கம் வந்திங்க…?”
“உங்க பொண்ணு நிரஞ்சனியும் நானும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறோம்… அவளை பொண்ணு கேட்டு வந்திருக்கேன்.” என்று கொஞ்சமும் தயங்காமல் சொன்னான்.
“………….” அரசு எதுவும் பேசாமல் அவனை பார்த்தார்.
“உங்க பொண்ண எனக்கு கல்யாணம் செய்து குடுத்தீங்கனா அவள கடைசி வரைக்கும் கண் கலங்காம பார்த்துக்குவேன்” என்று உறுதியாக சொன்னான்.
“ஹா… ஹா… ஹா…” அவன் பேசியதை கேட்டு ‘கட கட’ வென சிரித்தார் அரசு.
புகழேந்திக்கு அவர் ஏன் சிரிக்கிறார் என்று புரியவில்லை. சிரிப்பை நிறுத்திவிட்டு அவரே பேச்சை ஆரம்பித்தார்.
“இது தான் ஆம்பளைக்கு அழகு… நாங்கெல்லாம் கல்யாணத்துக்கு சாதிய ரொம்ப முக்கியமா பார்ப்போம்… ஏன்னு தெரியுமா உங்களுக்கு…?”
“………..” புகழேந்தி எதுவும் பேசாமல் அவரை பார்த்தான்.
“நம்ப சாதிக்காரன் தான் நம்பளுக்கு ஏத்த மாதிரி நடந்துக்குவான். நம்பளோட பழக்க வழக்கமெல்லாம் அவனுக்கு தான் ஒத்து போகும்… நா சொல்றது புரியுதா இல்லையா…?”
“ம்ம்… புரியுது சொல்லுங்க… எதுல நான் உங்களோட ஒத்து போகணும் ?”
“ஹா.. ஹா…” திரும்ப சத்தமாக சிரித்தார்.
“அதெல்லாம் சொல்லி வரக் கூடாது தம்பி… தானா வரணும்… ஆனா உங்களுக்கு எங்க சனங்களோட குணம் இருக்கு…” என்றார்.
புகழேந்திக்கு பளிச்சென்று மனதில் ஒரு மகிழ்ச்சி… ‘இவர் என்ன சொல்றார்…’
“நீங்க என்ன சொல்றீங்க…?”
“ஆம்பளன்னா என்ன தெரியுமா…?” என்று கேட்டவர், தன் நெஞ்சில் ‘தடார் தடார்’ என்று இரண்டு முறை அடித்து காண்பித்து
“வீரம்…. வீரம் தான் ஆம்புள… வீரம் தான் வேணும் ஆம்பளைக்கு… நா சொல்றது புரியுதா இல்லையா…? ” என்றார்.
“ம்ம்… புரியுது… சொல்லுங்க…” என்றான் அமைதியாக
“வீர்ம்ன்னா என்ன சொல்லுங்க பார்ப்போம்…” என்றார்.
“……………” – அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவரை பார்த்தான்.
“ஒரு ஊரையே தொணைக்கு அழைச்சுகிட்டு ஒருத்தன எதுக்குறது வீரமா…? சொல்லுங்க பாப்போம்….”
“……………..”
“ஊரையே எதுத்து ஒத்தையாளா வந்து நிக்கிறீங்க பாருங்க… இது வீரம்…”
“………………”
“வீரம் மனசுல இருக்கணும்… தைரியம் தான் மொத வீரம்… நா சொல்றது புரியுதா இல்லையா…?”
“ம்ம்ம்….” அவனுக்கு குழப்பமாக இருந்தது. ‘எவ்வளவு சீரியசான மேட்டர் பேச வந்தா இந்த ஆள் ‘வீரத்த பத்தி பேசி புரியுதா இல்லையா… புரியுதா இல்லையான்னு’ கழுத்த அருக்குறாரே….’ என்று நினைத்து நொந்து கொண்டான்.
“எங்க ஊர பத்தி தெரிஞ்சும் பயம் இல்லாம ஊருக்குள்ள வந்து என்னுகிட்டையே பொண்ணு கேக்குறீங்களே… இது வீரம்….” என்றார்.
“………………”
“அச்சம் என்பது மடமையடா….
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா … “ அவர் பாடலை சத்தமாக பாடினார்.
இப்போது புகழேந்திக்கு தெளிவாக புரிந்து விட்டது. ‘ஐயோ இந்த ஆள் கண்ணு சிவந்திருந்தது கோவத்தில் இல்லையா..? குடிச்சிருக்கார்……! போதையில இருக்கிறவர்கிட்டையா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கேன்…. கடவுளே…’ என்று கடவுளை துணைக்கு அழைத்தான்.
“…………………” அவன் குழப்பமாக அவரை பார்த்தான். அவனை பொறுத்தவரை பைத்தியகாரனிடம் பேசுவதும் குடிகாரனிடம் பேசுவதும் ஒன்று தான். இருவருக்குமே சுய நினைவு கிடையாது.
“என்ன அப்புடி பாக்குறீங்க…? அந்த காலத்துலயே தலைவர் பாடி வச்சுருக்காரு….”
“………………….”
“அஞ்சாமை திராவிடர் உடமை…. திராவிடர்ன்னா எப்புடி இருப்பாங்க தெரியுமா…?”
“…………………….”
“கருப்பா, குட்டையா, சப்ப மூக்கோட இருக்கவ(ன்) தான் பழங்கால திராவிடர்ன்னு சொல்லுவாங்க… என்ன… என்ன…? என்ன அப்படி பாக்குறீங்க…? இந்த காட்டுப்பயளுக்கு எப்புடி இதெல்லாந் தெரியுமுன்னு சந்தேகப் படுறீங்களா…? புத்தகம் படிச்சாதா(ன்) விவரந் தெரியனுமுன்னு இல்ல… கேள்வி ஞானமு(ம்) போது(ம்)… புரியுதா இல்லையா…?”
“ம்ம்ம்ம்….”
“என்ன சொன்னே…. ஆங்… திராவிடர்கள்… நம்மல்லாந் திராவிடர்கள் தா(ன்)…. ஆனா நா எப்புடி இருக்கேன்…? உயரமா இருக்கேன். எம் பொண்ணு எப்புடி இருக்கு…? செவப்ப இருக்கு. நீங்க எப்புடி இருக்கீங்க…? செவப்பும் இல்லாம கருப்பும் இல்லாம கூர் மூக்கோட இருக்கீங்க. அப்பா நம்பெல்லாம் திராவிடர் இல்லையா…?”
“……………….”
“சொல்ல முடியலைல்ல…. பதில் சொல்ல முடியலைல்ல… ஹா… ஹா… கலப்பு நடந்துருச்சு தம்பி…. எப்பையோ… எத்தன ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியோ கலப்பு நடந்துரிச்சு… இப்ப போயி நீ வேற சாதி நா வேற சாதின்னு குருட்டு தனமா நம்புறவ(ன்) நா இல்ல… நா சொல்றது புரியுதா இல்லையா…?”
“ம்ம்.. சொல்லுங்க….” அவன் விதியே என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
“ஆனா நம்ப பழக்க வழக்கமும் குணமும் நம்மள சேர்ந்தவங்களுக்கு இருக்குமுங்குறது உண்மையா இல்லையா…?”
“ஆமா… உண்மை தான்…”
“ஆனா… அது உங்களுக்கும் இருக்கு(ம்) போது உங்களுக்கு பொண்ணு குடுக்க நா எதுக்கு தயங்கணும் சொல்லுங்க…..?”
‘இவர் பேச்சை எப்படி நம்புவது….? குடிச்சுட்டு உளறிக்கிட்டு இருக்கார். ‘டோட்டலி வெஸ்ட் ஆஃப் டைம்’ ‘ என்று நினைத்தவன் வீட்ல வேற யாரும் இல்லையா…? நான் பேச வந்ததை நாம பேசலாம். உங்க மனைவி அல்லது உங்க மருமகனை கூப்பிடுங்க” என்றான்.
“ஏன்… என்ன பாத்தா மனுஷனா தெரியலையா…? புரியுது… குடிச்சுட்டு பேசுறேன்னு நெனைக்கிறீங்க… அதுதானே…” என்றார் அரசு
“ஆமாங்க…’ என்றான் அவன் தயங்காமல்
“குடிக்கிறவனுக்கு தான் ஊர எதுத்து நிக்கிற தைரியம் வரும்… புரியுதா இல்லையா….?”
“……………” அவன் அவரை விசித்திர பிறவியை பார்ப்பது போல் பார்த்தான்.
அவர் ‘கட கட’ வென சிரித்துவிட்டு “அவங்க எல்லாரும் உங்க காதலியோட கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க காலையிலேயே அஞ்சு மணிக்கெல்லாம் திருப்புவனத்துக்கு கெளம்பிட்டாங்க. ரஞ்சிய அவங்க மாமா வீட்டுல விட்டுட்டு போயிருக்காங்க.. நீங்க கொஞ்ச நேரம் இங்க உக்காந்துருங்க… புரியுதா இல்லையா…? எதுவும் யோசிக்க கூடாது… புரியுதா இல்லையா…? நா இப்ப வர்றேன்…” என்று சொல்லிவிட்டு திண்ணையிலிருந்து வீட்டிற்குள் சென்றார்.
Comments are closed here.