Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ-20

அத்தியாயம் – 20

 

புகழேந்திக்கு தன் நிலையை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. இவரோடு பேசுவது பயனில்லாத ஒன்று தான். ஆனால் இவரிடம் ஆரம்பித்தால் தான் மற்றவர்களை நெருங்க சுலபமாக இருக்கும் என்று நினைத்து அரசுவின் ரம்பத்தை பொறுத்துக் கொண்டான்.

 

 

சிறிது நேரத்தில் குளித்து முடித்து திருநீர் பட்டையுடன் வந்தவர்

“கெளம்புங்க… வளநாடு வரைக்கும் போகணும்… ” என்று புகழேந்தியை பார்த்து சொன்னார்.

 

 

அவனும் மறு பேச்சின்றி காரை எடுத்தான்.

 

 

வளநாட்டில் ஒரு துணி கடை முன் காரை நிறுத்த சொன்னவர் நிரஞ்சனிக்கும் புகழேந்திக்கும் புது துணி எடுக்க சொன்னார். அவனுக்கு ஒரு இன்பமான குழப்பம். இருந்தாலும் அவர் சொல்வதை தட்டாமல் கேட்டான்.

 

 

நகைக்கடைக்கு அழைத்து சென்று தாலி வாங்க சொன்னார். மற்ற சாமான்களை எல்லாம் அவர் அவருடைய பணத்தில் வாங்கினார்.

 

 

“வரும் போது ஒரு கோயில் காமிச்சேனே… அந்த கோயிலுக்கு காரை விடுங்க…”

 

 

அவன் கோவிலில் கொண்டு போய் காரை நிறுத்தினான்.

 

 

“இன்னிக்கே கல்யாணம் பண்ணி ரஞ்சிய உங்களோட அழைச்சுகிட்டு போறதுல உங்களுக்கு சம்மதம் தானே…?”

 

 

அரசுவின் நடவடிக்கையை வைத்து அவர் திருமணத்திற்கு தான் ஏற்பாடு செய்கிறார் என்பதை புரிந்து கொண்டாலும், அவர் வெளிப்படையாக சொல்வதை கேட்டு நெகிழ்ந்த புகழ் அவர் கைகளை பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டான்.

 

 

அவனுடைய அந்த செய்கையில் அரசுவும் நெகிழ்ந்தார்.

“இங்கயே இருங்க… இன்னும் ஒரு மணி நேரத்துல திரும்ப நான் இங்க வர்றேன்…” என்று சொல்லிவிட்டு வேக நடையுடன் அவர் அங்கிருந்து சென்றார்.

 

 

மாமன் வீட்டு வாசலில் காய வைக்கப்பட்டிருந்த நெல்லை காக்கையிடமிருந்து பாதுகாக்க வேண்டி, காவலாக மரநிழலில் அமர்ந்திருந்த நிரஞ்சனி, வேர்க்க விறுவிறுக்க தன் முன் வந்து நிற்கும் தந்தையை ஆச்சர்யமாக பார்த்தாள்.

 

 

“என்ன பாக்குற… கெளம்பு…?”

 

 

“எங்க…?”

 

 

“வீட்டுக்கு தான்…?” மற்றவர்களுக்கு இப்போதைக்கு எந்த விபரமும் தெரிய வேண்டாம் என்று நினைத்தவர் எதையோ சொன்னார்.

 

 

“எதுக்கு…? அவங்க வந்துட்டாங்களா…?” அவள் தாமரையை அம்மா என்று அழைப்பதை தவிர்த்து ‘அவங்க’ என்று பொதுவாக சொன்னாள்.

 

 

“வரல… வீட்டுல வேலை இருக்கு. நீ இப்ப கெளம்பி வா…”

 

 

“சரி இருங்க… மாமிகிட்ட சொல்லிட்டு வர்றேன்.” என்று சொல்லிவிட்டு மாமாவின் வீட்டிற்குள் சென்று மாமியிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

 

 

அப்போதே அவளுக்கு ஒரு சந்தேகம். ‘இன்னிக்கு வயல்ல வேலை இல்ல… இந்நேரத்துக்கு இவர் குடிச்சுட்டுள்ள இருப்பார். என்ன இன்னிக்கு வெள்ளையும் சொள்ளையுமா விபூதியெல்லாம் தூள் பறக்குது…!’ என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் வாய் விட்டு எதுவும் கேட்கவில்லை.

 

 

அரசு கோபாலன் வீட்டிலிருந்து நிரஞ்சனியை சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் வீடு இருக்கும் தெருவைத் தாண்டி வந்ததும் நிரஞ்சனி கேட்டாள்,

 

 

“வீட்டுக்கு போகாம எங்க போறீங்க….?”

 

 

“வா சொல்றேன்…?”

 

 

அதற்கு மேல் அவளும் எதுவும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை.

சைக்கிள் அந்த விசாலமான கோவில் ஆலமரத்தை அடைந்ததும் சைக்கிளிலிருந்து கீழே இறங்கிய நிரஞ்சனி, கோவிலை நோக்கி நடந்தாள். அவளுக்கு இங்கு எதற்காக அழைத்து வரப் பட்டிருக்கிறோம் என்ற யோசனையெல்லாம் இல்லை. ஏதோ கால் போன போக்கில் கோவிலை நோக்கி நடந்தவள் நெஞ்சுக்குள் ஒரு மின்னல் பாய்ந்ததை உணர்ந்தாள்.

 

 

‘யார் அது கோவிலுக்குள்ள நிக்கிறது….? புகழா… புகழ் தானே…!’ முதுகு காட்டி நிற்கும் அந்த மனிதனின் முகத்தை பார்க்கும் ஆவலில் வேக நடை போட்டாள்.

 

 

அதே நேரம் அந்த மனிதனும் வாசல் பக்கம் தன் பார்வையை திருப்ப இருவருக்குள்ளும் இன்னதென்று சொல்ல முடியாத எண்ண அலைகள்….

 

 

மகிழ்ச்சியா…. துக்கமா…!? ஒருவரை ஒருவர் கண்ணால் பார்த்துவிட்ட மகிழ்ச்சியை தாங்க முடியாத துக்கமா…! அல்லது விதி தங்கள் வாழ்க்கையில் ஆடிய ஆட்டம் முடிந்துவிட்டது என்ற மகிழ்சியை நம்ப முடியாத துக்கமா…!

 

 

வேக நடையுடன் வந்த நிரஞ்சனியும் சரி… பார்வையை திருப்பிய புகழேந்தியும் சரி… ஒருவரை ஒருவர் பார்த்த நொடியில் சிலையாக சமைந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் சிலை அல்ல… உயிரும் உணர்வும் உள்ள ஜீவன்கள் என்பதை மெய்பிக்க இவருடைய கண்களிலும் கண்ணீர் ஊற்றெடுத்தது.

 

 

துன்பத்தையும் மகிழ்ச்சியையும் தனித்தனியாக தாங்கிய நிரஞ்சனி, தற்போது தன் மனதில் ஏற்பட்டுள்ள விசித்திரமான… என்னவென்று அவளுக்கே புரியாத உணர்வை தாங்க முடியாமல், கோவில் வாசலில் வெட்டவெளியில் மண்டியிட்டு அமர்ந்துவிட்டாள்.

 

 

அவளுடைய நிலையை புரிந்து கொண்ட புகழ், தன்னை சுதாரித்துக் கொண்டு வேகமாக வெளியே ஓடி வந்தான்.

 

 

“ஜெனி… ஜெனி… என்ன… என்ன ஆச்சு…?”

 

 

“நீ.. நீங்க… நீங்க…!” அவள் பேச முடியாமல் தவித்தாள்.

 

 

“நான் தான்… எந்திரி முதல்ல… உள்ள வா…”

 

 

அவளை கைதாங்களாக எழுப்பி கோவிலுக்குள் அழைத்து சென்றான். காரில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து அவளுக்கு கொடுத்து தண்ணீர் பருக வைத்தான். பின் நிதானமாக நடந்ததை அவளுக்கு விளக்கினான்.

 

 

அதற்குள் நிரஞ்சனியை கோவிலில் விட்டுவிட்டு கோவில் வளாகத்திலேயே இருந்த ஐயர் வீட்டிற்கு சென்ற அரசு, ஐயரை அழைத்து வந்தார்.

 

 

“இது தான் பையனும் பொண்ணுமா…? அம்மாடி இந்தா மணப்பெண் அறை சாவி… இந்தாங்க சார் நீங்களும் பிடிங்க… போயி தயாராயி வாங்க… பன்னிரண்டு மணிக்கு முகூர்த்த நேரம் முடியுது. அதுக்குள்ள நா இங்க தேவையானதை ரெடி பண்ணி வைக்கிறேன்… ” ஐயர் பரபரப்பாக பேசினார்.

 

 

சிறிது நேரத்தில் மணப்பெண்ணும் மணமகனும் தயாராகி அம்மன் சந்நிதானத்துக்கு வந்து விட, அதே நேரம் வெளியிலிருந்து பாட்டி பாக்கியத்தம்மாள் கோவிலுக்குள் வந்தார்.

 

 

அவரை பார்த்த நிரஞ்சனிக்கு அதிர்ச்சி. அரசு அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை என்றாலும் ‘இவங்க எதுக்கு இப்போ இங்க வந்தாங்க…?’ என்று நினைத்துக் கொண்டார்.

 

 

கோவில் சாலையில் உள்ள மக்களிடம் வட்டி பணம் வசூல் செய்ய வந்த பாட்டி, அம்மனை தரிசிக்க கோவிலுக்கு வந்தார். கோவிலில் தன் பேத்தியையும் மருமகனையும் எதிர்பாராமல் சந்தித்த பாட்டிக்கு அங்கு என்ன ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது என்பதை சுலபமாக புரிந்துகொள்ள முடிந்தது.

 

 

பாட்டியை பார்த்த நிரஞ்சனியின் கண்களில் கலக்கம் சூழ்ந்துவிட மீண்டும் அவள் கண் கலங்கினாள்.

 

 

“எதுக்கு இப்ப கலங்குற…? நல்ல காரியம் நடக்க இருக்கையில எதுக்கும் கலங்கப் புடாது… மூச்…” என்று வாயில் ஒரு வரலை வைத்து பேத்தியை எச்சரித்தவர் புகழேந்தியிடம் சென்று,

 

 

“அன்னிக்கு வளநாட்டுக்கு வந்த பையந்தான நீ… அன்னிக்கே நீ இவள கட்டிக்க நேரடியா கேட்டிருக்க வேண்டியது தானே…?” என்றார்.

 

 

பாட்டி அடித்த அந்தர் பல்ட்டியில் அங்கிருந்த அனைவரும் அசந்துவிட்டார்கள்.

“ஆத்தா… உனக்கு சம்மதமாத்தா…?” என்று நிரஞ்சனி பாட்டியை கட்டிக் கொண்டாள்.

 

 

“எனக்கு என்னடி கண்ணு சம்மதம் வேண்டிக் கெடக்கு… சாவ போற கட்டைக்கு…” என்று கேட்டவர் பேத்தியை மனதார வாழ்த்தினார்.

 

 

“சரி சரி இப்படி வந்து உக்காருங்கோ…” என்று சொன்ன ஐயர் புகழேந்தி மற்றும் நிரஞ்சனியின் திருமணத்தை பாக்கியத்தம்மாள், அரசு மற்றும் அகிலத்தை ஆளும் ஆதிசக்தி மலையேரியம்மன் முன்னிலையில் சிறப்பாக நடத்தி வைத்தார்.

 

 

கழுத்தில் தாலியை வாங்கிய நிரஞ்சனி தந்தையை நன்றியுடன் பார்த்தாள். ‘பொறுப்பில்லாத மனிதன் என்று அனைவராலும் முத்திரை குத்தப்பட்ட மனிதன், தன் மகள் திருமணத்தை யாரையும் எதிர்பார்க்காமல் நடத்தி வைத்துவிட்டாரே…! மகள்கள் மீது பாசமே இல்லாதவர் என்று நினைத்தோமே… இவர் தான் சரியான நேரத்தில் மகளுக்காக தைரியமாக ஒரு முடிவை எடுத்துள்ளார். பாசம் இல்லாமல் எப்படி இவ்வளவு பெரிய காரியத்தை இவரால் செய்ய முடியும்…? ‘ நிரஞ்சனி ஆச்சர்யப்பட்டாள். தன் தந்தைக்குள் இப்படி ஒரு உறுதியான மனிதன் இருப்பதை இன்று வரை அவள் அறிந்ததில்லை.

 

 

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் ஒரு மனிதனின் சுயரூபத்தை காட்டிக் கொடுக்கிறது. இதுவரை குடும்பத்தை தாமரை நல்லபடியாக பார்த்துக் கொண்டதால் தாமரையின் எந்த செயலிலும் அரசு தலையிடவில்லை. ‘அவர் உண்டு அவர் வேலை உண்டு’ என்று இருந்தார். ஆனால் தாமரை தவறான ஒரு முடிவை எடுத்திருந்த சமயத்தில் எந்தவித தயக்கமும் இல்லாமல் அதிரடியாக அவர் ஒரு மாற்று முடிவை எடுத்துவிட்டார்.

 

 

மணமக்கள் பாட்டியிடமும் அரசுவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள்.

 

 

“மாப்ள உங்கள முறைப்படி நா வீட்டுக்கு அழைச்சுகிட்டு போகணும். ஆனா இப்போ என்னால அது முடியாது. எனக்கு ரஞ்சி மட்டும் பொண்ணு இல்ல… நீருவும் இருக்கு…”

 

 

“புரியுது மாமா…”

 

 

“வீட்டுல பேசி எல்லாரோட சம்மதமும் வாங்கி உங்க கல்யாணத்த நடத்த அவகாசம் இல்ல… அங்க நா பேச்ச ஆரம்பிச்சா எம் மூளையையே கலக்கி உங்களுக்கு எதிரா யோசிக்க வச்சிருவா எம் பொண்டாட்டி… அது தான் உங்க கல்யாணத்த உடனே முடிச்சிட்டேன்… ” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

 

 

நிரஞ்சனியும் புகழேந்தியும் ஒரே நாளில் தங்களுடைய வாழ்க்கையில் நடந்தவிட்ட மாயாஜால மாற்றத்தால் இன்பக் கடலில் மிதந்தார்கள். அவர்களுக்கு வேறு எதுவுமே தேவைப்படவில்லை.

 

 

“சீக்கிரமே பெரிய மாப்ளைய சமாதானம் பண்ணி உங்களுக்கு ஊர கூட்டி விருந்து வைக்கிறேன்…” என்றார் அரசு.

 

 

“சரி மாமா… நீங்க அடிக்கடி வீட்டுக்கு வாங்க. போன் பண்ணுங்க…” என்றான் புகழ்.

 

 

“ரஞ்சி… புத்தியா நடந்துக்க ஆயி… எல்லாரு(ம்) கொஞ்ச நாளு கழிச்சு கூடிக்கலாம்… இப்ப நிம்மதியா உன்னோட குடும்பத்த நடத்து…” என்று பேத்திக்கு கன்னம் தொட்டு திருஷ்டி வழித்து புத்தி சொன்னார் பாட்டி.

 

 

தனியாக வேம்பங்குடிக்கு வந்த புகழேந்தி தன் துணைவியுடன் தஞ்சைக்கு திரும்பினான்.

 

 

“அடேய்…. சண்டாள பாவி… எம் பொண்ணுங்களோட வாழ்க்கைய கெடுத்துப் புட்டியேடா… நாசமா போறவனே… நா என்ன செய்யப் போறனோ தெரியலையே… ஐயேய்ய… ஐயேய்ய… சாதிகெட்ட பயலுக்கு பொண்ணு குடுத்துட்டானே…. நா என்ன செய்வே(ன்)….” என்று தாமரை அரசுவை காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

 

 

திருபுவனத்திலிருந்து திரும்பியதும் பஸ் நிறுத்தத்திலேயே நிரஞ்சனியின் தீடீர் திருமண விஷயத்தை கேள்விப் பட்ட தாமரை அந்த நொடியிலிருந்து அரசுவை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள். அவள் பாக்கியத்தம்மாளையும் விட்டு வைக்கவில்லை.

 

 

அவர்கள் இருவருமே தாமரையின் கோபத்தை பொறுத்துக் கொண்டார்கள். அரசு எதுவுமே பேசாமல் மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தார்.

 

 

“ஏய் கெழவி…. நீ என்னா அந்த ஆளுக்கு கையாலா…? நீயுந்தா கோயில்ல இருந்தியா(ம்)… இப்ப ஒன்னுந் தெரியாத மாரி உக்காந்துருக்க… வயசான காலத்துல உனக்கு எதுக்குடி கெழவி புத்தி இப்புடி போவுது…?”

 

 

“ச்ச ச்சை… நாய ஓடு அந்தண்ட…. நானும் பாத்துக்குட்டே இருக்கே(ன்)… நீயும் வந்து வீட்டுக்குள்ள நொழஞ்சதுலேருந்து பேசுற… பேசுற… நிறுத்தாம பேசிகிட்டே இருக்கியே…! என்னாடி பொம்புள நீ… ஒரு ஆம்புள எவ்வளவு நேரந்தா(ன்) பொறுப்பாறு….” என்று பாட்டி குரலை உயர்த்தினார்.

 

 

“என்னைய அடக்காத… இப்ப வருவானே வடக்கி தெருவா(ன்). அவனுகிட்ட உன்னோட பேச்சு தெறமைய காமி… பாவிகளா.. எம் பொண்ணுகள என்னுகிட்டேருந்து பிருச்சுபுட்டியளே… நீங்கெல்லாம் நல்ல கெதிக்கு போவியளா…?”

 

 

“இந்தா….. இந்த பேச்செல்லாம் இங்க பேசப்புடாது… எங்களுக்கு விருப்பம்… நாங்க எம் பேத்திக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். உனக்கு புடிக்கலன்ன நீ ஒதுங்கிக்க…” சட்டமாக சொன்னார் பாட்டி.

 

 

“எம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நீ யாருடி கெழவி…?”

 

 

“உம பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நா ஆளு இல்ல… அதே மாரி எம் மருமவன் அவரு மவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு. அத கேக்க நீ ஆளு இல்ல”

 

 

“இப்புடி மானங்கெட்ட பொழப்பு பொழக்க நாண்டுகிட்டு சாவலாம்… து ” என்று தாமரை வெறுப்பை உமிழ

 

 

தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்த மிக சிரமப்பட்டு எழுந்து, குச்சியை கையில் எடுத்து ஊன்றிக் கொண்டு மெதுவாக நடந்து வாசல் பக்கம் போய் கொட்டகையில் இருந்து ஒரு கயிறை கொண்டு வந்து தாமரைக்கு முன் போட்ட பாட்டி,

 

 

“இந்தா கெடக்கு கயிறு… போயி மாமரத்துல தொங்கு…. எங்களுக்கு வெக்கமா இல்ல… நாங்க இருக்குறோம். வெக்க படுற நீ போயி தொங்கு…” என்று சொன்னார்.

 

 

பாட்டியின் அழுத்தமான பேச்சில் விக்கித்த தாமரை, “அடியே கெழவி… மருமகனுக்காவ மகளை கொல்லப் பாக்குறியே… நீயெல்லாம் ஒரு அம்மாவாடி….?” என்று எகிற,

 

 

“ஏண்டி…? நீ உம் மருமவனுக்கு ஏத்துகிட்டு உம் மவள சாவ சொல்லலாம்… நா எம் மருமவனுக்கு ஏத்துகிட்டு எம் மவள சாவ சொல்லக் கூடாதா…?” என்றார் பாட்டி.

 

 

“பேசுடி… நல்லா பதிலுக்கு பதிலு பேசு…! அவ தப்பு பண்ணினா… அதுனால சாவ சொன்னேன். அதுக்காவ என்னையும் சாவ சொல்லுவியா…?”

 

 

“அவ பண்ணுனது உனக்கு தப்புன்னா… நீ பண்ணுறது எனக்கு தப்பு…”

 

 

பாட்டி சரியாக தாமரைக்கு பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க, பாட்டியை வாயில் மிஞ்ச முடியாத தாமரை வேறுவிதமாக தனது தாக்கலை ஆரம்பித்தாள்.

 

 

“நீ எதுக்கு இங்க உக்காந்துருக்க…? கெளம்பு மொதல்ல உன் வீட்டுக்கு…”

 

 

“நா எதுக்கு போவனும்..? நா போனோன எம் மருமவன பட்டினி போட்டு கொல்லாமுன்னு பாக்குறியா? அதுதான் நடக்காது. இது எம் மருமவன் வீடு. நா இங்க தான் இருப்பேன். நீ வேணுமுன்ன கொப்பமுட்டுக்கு(அப்பாவின் வீட்டுக்கு) போ…” என்று சொல்லிவிட்டு நடுவீட்டில் சட்டமாக கால்களை நீட்டி அமர்ந்து கொண்டார்.

 

 

இராஜசேகரின் புல்லெட் சத்தம் வாசலில் கேட்டது. தாமரைக்கு குலை நடுங்கியது. மூத்த மகளின் வாழ்க்கை என்னவாகும் என்று நெஞ்சு படபடத்தது.

 

 

வாசலில் நீரஜா மகனை கையில் வைத்துக் கொண்டு நிற்க, இராஜசேகர் புல்லெட்டை நிறுத்திவிட்டு இறங்கி மரத்தடியில் அமர்ந்திருக்கும் அரசுவை நோக்கி சென்றான். அவனை மற்றவர்கள் தொடர்ந்தார்கள்.

 

 

“ரஞ்சி எங்க…? நா கேள்விப் பட்டதெல்லாம் உண்மையா…?” இறுகிய முகத்துடன் கேட்டான்.

 

 

தாமரைக்கு உடல் நடுங்கியது. நீரஜாவிற்கு கண்களில் கண்ணீர் கொட்டியது. பாட்டி அலட்டிக் கொள்ளவில்லை. அரசு லேசாக தடுமாறினார்.

 

 

“மாப்ள… நா சொல்றத கொஞ்சம் கேளுங்க…”

 

 

“கேக்க தானே வந்து நிக்கிறேன்… சொல்லுங்க…”

 

 

“அந்த பையன் வீட்டுக்கு வந்திருந்தாரு. முறையா என்னுகிட்ட பேசினாரு…”

 

 

“நா மட்டும் என்ன முறைகெட்டா நடந்துகிட்டேன். நானும் உங்களுகிட்ட முறையா பேசிட்டுதானே மாப்ள பார்த்தேன். உங்க சம்மதத்தோட தானே கல்யாணத்தை நிச்சயம் பண்ணினேன்…”

 

 

“அது சரி தான் மாப்ள…”

 

 

அவன் கையமர்த்தி அவர் பேச்சை தடை செய்தான்.

 

 

“உங்க பொண்ணு தானா திருட்டு கல்யாணம் பண்ணிகிட்டிருந்தாள்ன்னா, இந்நேரம் அவளுக்கும் அவ புருஷனுக்கும் பாட கட்ட ஏற்பாடு பண்ணியிருப்பேன்… ஆனா தப்பு அங்க இல்ல… நீங்க ஏறுமாற இருக்கும் போது அவள சொல்லி தப்பு இல்ல…”

 

 

“……………………..”

 

 

“இனி நா உங்களுக்கு மாப்ள இல்ல.. நீங்க எனக்கு மாமனாரு இல்ல… இன்னையோட உங்களுக்கும் எனக்குமான உறவு முறிஞ்சிடுச்சு…” என்று அரசுவிடம் சொன்னவன், நீரஜாவின் பக்கம் திரும்பி

 

 

“ஏய்… உனக்கு அப்பமுடு வேணுமா… நா வேணுமா… இப்பவே முடிவு பண்ணு…” என்றான். அவள் கொஞ்சமும் தயங்காமல்

 

 

“நீங்க தாங்க வேணும்…” என்றாள். அவளை பொறுத்தவரை இந்த கேள்வியையாவது கேட்டானே. அவளிடம் எதுவும் கேட்காமல் அவளை பிறந்த வீட்டில் விட்டுவிட்டு செல்லாமல் இருந்தானே. அதுவே போதும் என்று நினைத்துக் கொண்டாள்.

 

 

“அப்பன்னா கெளம்பு… இனி உனக்கு மேலத்தேருவே ஞாபகம் வரக் கூடாது…” என்று சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

 

 

அன்றோடு தாமரையின் இரண்டு மகள்களுக்கும் தாமரைக்கும் இருந்த உறவு முறிந்தது.

 

 




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nachiar says:

    Kaniyamudhe. Novel il engalaiye tholaithu viduhirom. Such a flow full writting


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nachiar says:

    Kamiya the novel daily thedi thedi. Thavittu pohiren. Such a nice. Story

You cannot copy content of this page