Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal episode 21
1279
0
“ராஜன் சார். என்னால இங்க இருக்க முடியல. நாளுக்கு நாள் வெறுப்பா இருக்கு. நான் சென்னைக்கு போறேன்.”
“அப்புறம்? ”
“ரொம்ப கஷ்டமாக இருக்கு சார். ”
அமைதியாக செய்தித்தாளை லேசாக விலக்கியவன் அவன் முகம் மட்டுமே அவளுக்கு தெரியும்படி வைத்துக்கொண்டு கேட்டான் அவனவன்கிட்ட காசுக்காக ஒன்றுமில்லாமல் நின்னபோது கஷ்டமாக இல்லையா? ”
ஸ்ரீ அவன் கேள்வியால் அதிர்ந்தாள். அவன் கூசாமல் பேசிய பேச்சால் இனி பேசிப் பயன் இல்லை என்று தெரிந்து அமைதியாக உள்ளே சென்றாள். கழுத்தைப் பிடித்து தள்ளியது போல் உணர்ந்தாள். வலித்தது. ஆனால் எங்கு? என்றுதான் சொல்லத் தெரியவில்லை அவளுக்கு.
வாக்குவாதத்தையோ வாயிதாவையோ விரும்பாதவன் போலிஸ்காரன். அவளுடன் இவ்விரண்டையும் விரும்பாதவன் பொறுமையிழந்ததால் போலீஸ்காரன் கையாளும் முறையைக் கையாண்டுவிட்டான். லத்தி சார்ஜ்!
பேச்சுக்கே இடம் இல்லாத வழிமுறை. கைகளில் லத்தி இல்லை அதனால் வார்த்தைகளால் ஒரு போடு போட்டு விட்டான். சும்மாவா சொன்னார்கள்? நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்று. இப்படித்தான் வார்த்தைகளால் சூடு போடுவார்களோ? அவர்களிடம் சொல்ல வேண்டும் இதயம் சதையால்தான் ஆனது என்று!
உள்ளே சென்றவள் ஒரு துளி கண்ணீர் கூடச் சிந்தவில்லை. பவித்ராவும் அம்மாவும் ஒரே நாளில் இறந்தபோதே கண்ணில் சுரப்பிகள் தான் அணைத்தும் இறுகி ஒன்றுக்குடன் ஒன்று முன்பே ஒட்டிக்கொண்டு விட்டதே! அதிலிருந்து எப்படி கண்ணீர் வரும்?
மறுநாள் கடிகாரம் முன்தினம் போலச் சுழலவில்லை ஸ்ரீக்கு. காலை எட்டு மணியளவில் ராஜன் எழுந்து வாக்கிங் சென்றதை உறுதி செய்துவிட்டு கையில் தனது ஒரு பையில் பர்ஸைமட்டும் போட்டுக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றாள். மொட்டை மாடியிலிருந்து பக்கத்து வீட்டு மாடிக்கு தாவுவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. நெருக்கமான காவலர் குடியிருப்புப் பகுதியால் விளைந்த நன்மை. (நன்மையா?)
அமைதியாக அரவமோ பதட்டமோ மருந்துக்குக்கூட இல்லாமல் படியில் இறங்கி நிதானமாக நடந்தாள். இருபது படிகள் இருந்தது. நான்கு படிக்கட்டுகள் தாண்டியிருப்பாள். அடுத்த படியில் கால் வைக்கப் போனபோது அவள் எதிரே ராஜன் வேர்த்து வடிந்த டி சர்ட்டுடன் நின்றுகொண்டிருந்தான்.
அகப்பட்டதை ஒப்பவில்லை மனது ஆனால் அவனிடம் பதில் ஏதும் பேசாமல் அமைதியாக அவன் பின்னே நடந்து சென்றாள். ஆனால் இதயம் மட்டும் அவள் ஆடைக்கு வெளியே எவ்விக் குதித்துவிடும் அளவிற்கு துடித்தது. பத்து நிமிடம்கூட நீடிக்காத விடுதலை. அடிமைகள் விடுதலைக்காக உயிரை விடுவதுகூட புரிந்தது அவளுக்கு.
வீட்டிற்கு வந்தபிறகும் எதுவும் இருவரும் பேசவில்லை. டேபிளில் நியுஸ்பேப்பர் கிடந்தது. ஸ்ரீ அதை எடுத்துக்கொண்டு சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். ராஜன் அன்று டியுட்டிக்கு கிளம்பாமல் இருப்பது கண்டு அவளுக்கு உள்ளுர திகில் பரவியது. ஆனால் செய்தித்தாளை புரட்டியபோது அவள் கண்ணில் பட்டது அவளை ஏதோ செய்தது. அது ஏதோ செய்த காரணத்தாலே அவள் சிரித்தாள். முதலில் அவளுக்கு மட்டுமே கேட்கும் விதம் சிரித்தவள் அடுத்த இரண்டு நிமிடங்களில் அடுத்த அறையில் ஷார்ஸ்சுடன் கட்டிலில் கால் நீட்டி படுத்திருந்த ராஜனுக்கும் கேட்கும் வண்ணம் சிரித்தாள்.
‘பிடிபட்டதால் உசுப்பேத்துறா’ என்று நினைத்தான். ஆனால் சிரிப்பை அவள் நிறுத்தவேயில்லை. கடுப்பாகிப்போய் அவள் இருக்கும் அறைக்குச் சென்றான்.
ராஜன் அவள் அருகே சென்று “ஏய் இப்ப எதுக்கு சிரிக்கிற? தப்பிக்க முடியலைன்னு பைத்தியம் பிடிச்சிருச்சா? ”
ஸ்ரீ சிரிப்பை நிறுத்தவில்லை. அடக்கமாட்டாமல் சிரித்தாள்.
“ஏய் சிரிப்பதை நிறுத்து. ”
பைத்தியம் என்று ராஜன் அவளை சொன்னதுக்கு ஏற்ப சிரித்துத் தள்ளினாள்.
ராஜன் அவளிடம் கடுமையை மிக அதிகமாக காட்டி ஸ்ரீ என்று அழைக்கவும் ஸ்ரீ சிரிப்பை நிறுத்தினாள்.
ஆனால் இகழ்ச்சியாக செய்தித்தாளை அவன் முன்பாக நீட்டினாள். செய்தித்தாளில் ராஜன் கண்கள் அதிலிருந்த புகைப்படத்தில் பதிந்த நொடி அவனுக்கு ஸ்ரீயின் சிரிப்பின் காரணம் புரிந்தது. புருவங்களை உயர்த்தி அவளிடம் “இவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதா? உனக்கே இது தப்பா தெரியல? ”
“ஏன்? ஏன் பார்க்க கூடாது? ” என்று நியுஸ்பேப்பரை அகலமாக விரித்தாள்.
அதில் முதல்நிலைக் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுக்காக நானூறு ஆண்கள் வரிசையாக நின்றனர்.
அவன் முன்தினம் பேசிய பேச்சு அவளை பித்து பிடித்தவள் போல பேசவைத்தது.
“ஏன்? ஏன் பார்க்க கூடாது?அவனவன் எப்படி நிற்குறான் பாரு ராஜன். அவன் ஏன் அப்படி நிற்கிறான்? வேலை வேணும். அதனால் அவன் அப்படி நிற்கிறான். வேலை எதுக்கு வேணும்? நாட்டுக்காக உழைச்சி உழைச்சி முதுகு வளைக்கவா? இல்லை பத்து பேரை திருடன்கிட்டயிருந்து காப்பபாற்றி தானும் கத்தி குத்துபட்டு சாகவா? எத்தனை பேர் அப்படியிருப்பாங்க? ஒருத்தன்? இரண்டு பேர் ? எண்ணிப்பார்க்க ஒரு கை விரல் போதும்! மீதிபேர் எதுக்கு சட்டையில்லாம பேன்ட்இல்லாம நிற்குறாங்க? ஃபேஷன் ஷோவா நடக்குது? வேலை ராஜன்! வேலை வேணும்! வேலை எதுக்கு வேணும்? காசு ராஜன்! காசு வேணும் அதனால் வேலை வேணும்!
அவள் கத்திக்கொண்டே போகப் போக ராஜன் எதுவும் பேசவில்லை.
அவள் அவனை ராஜன் என்று மரியாதை கொடுக்காமல் கூப்பிட்டதையோ இல்லை ஆவேசமாக அவன் பேசியதற்கு பதிலடிகொடுக்க தப்புத்தப்பாக உவமை சொன்னதையோ ராஜன் கண்டு கொள்ளவேயில்லை. அமைதியாக சென்று கதவை பூட்டியவன் சாவியை அவள் முன்னே தூக்கிக் காட்டினான். சாவியும் அவளை பார்த்து கிளுக்கென்று சிரித்துவிட்டு அவன் ஷார்ட்ஸ் பாக்கெட்டில் போய் அமர்ந்துகொண்டது. அவன் அதன்பிறகு நேரே தனது அறைக்குச் சென்று அதே இடத்தில் படுத்துக்கொண்டான்.
அவள் சொன்னது தப்பான உவமையாக இருந்தாலும் அவனை சங்கடத்தில் ஆழ்த்தியது. ‘ச்ச! அவளுக்கும் நாம பேசினப்ப இப்படித்தானே இருந்திருக்கும்?’ என்று நினைத்துக்கொண்டான். நினைத்ததோடு சரி. மேலே சுழலலும் மின்விசிறியை பார்த்தவாரு ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தான். மழையில் உப்பு விற்றவன் நிலை என்ன? படுத்துக் கொண்டே கண்இமைக்காமல் மின்விசிறியைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் நிலை என்ன? விடை தெரிந்துவிட்டதா? மிகச் சரி!
சிறிது நேரத்தில் ராஜனின் கண்கள் தானாக மூடிக்கொண்டது. தனது ஷார்ட்ஸ் பாக்கெட்டில் எலி நுழைவதுபோல் இருந்தபோதும் அவன் அசையக்கூடயில்லை. ஸ்ரீக்கு ஒரு லேடிஸ் ஹாஸ்டல் கேட்டிருந்தோமே இவளை எத்தனைநாள் அடை காக்க? அங்கேயும் இடம் கிடைக்கணுமே என்ற நினைப்பில் கண்களை மூடியவன் எலியின் சில்மிஷத்தைக் கூட அறியவில்லை. ஆனால் கதவு திறக்கப்படும் சத்தம் மட்டுமே தெளிவாக சந்தேகமறக் காதினில் கேட்டது. அப்போதுதன் அவன் ஆறாவது அறிவு அவன் காதில் சொன்னது ஷார்ட்ஸில் நழைந்தது எலி அல்ல ஸ்ரீயின் கைகள் என்று. கண் விழித்து பார்த்தபோது ஸ்ரீ என்னும் பெண்னொருத்தி அவன் வீட்டில் இல்லை. சன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது ஸ்ரீ வெளி கேட் தாண்டி ரோட்டில் நடந்து கொண்டிருந்தாள். ‘ச்ச! அவளை பிடித்ததும் இரண்டு அப்பு அப்பியிருக்கணும். பாவம் என்ன செய்வாள்? தப்பிக்கத்தானே தோணும் என்று நினைத்ததற்கு இதுவும் வேணும் எனக்கு இன்னமும் வேணும் ’ என்று மனதில் நினைத்தவன் இனி நடக்க வேண்டியதை வேகமாக யோசித்தான்.
ஸ்ரீ இருந்தால்தான் கேஸை முடிக்க முடியும். முதல் குற்றவாளி பவித்ராவாக இருந்தாலும் ஸ்ரீயின் ஒத்துழைப்பால் பணத்தை கண்டுபிடித்துவிட்டால் கௌன்சிலர் தலைவலி கிடையாது. கொஞ்ச நாள் பொறுமையாகயிருகக்கூடாதா? என்று நினைவுகளை விரட்டிக்கொண்டே கைபேசியை எடுத்தான்.
Comments are closed here.