Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal episode 23
1264
0
அங்கே ஒருவர் ஆவேசமாக டிராஃபிக் போலிசிடம் பேசினார் “சார் ரோடே சின்ன ரோடு அதிலே ஒரு ஓரமாய் குப்பைத் தொட்டியிருக்கு. பஸ்போகின்ற பாதையில் டூவீளர் காரன் குப்பைத்தொட்டி மேல் பறந்தா போக முடியும்? கார்ப்ரேஷன் ஆளங்களை எல்லாம் லாட்ஜில் ரூம் போட்டு தூங்கச் சொல்லுங்க. பணத்தைக் கண்டதும் பொணம்மாதிரி வாயைத் திறக்கும் ஆளுங்க. எவன்டா இங்க இன்ஸ்பக்டர்? கூப்பிடு அவனை. நாங்க யாரும் இடத்தைவிட்டு நகரமாட்டோம். பஸ்ஸைத் தாண்டும் போது குப்பைத தொட்டியிருந்ததால் ஓரம் கட்ட முடியாமல் இறந்த அந்த புள்ளைக்கு இருபத்தினாங்கு வயசுதான் ஆகுது. தருவானா கார்ப்ரேன்காரன் போன உசுரை? தண்டச்சோறுங்க! டார்கட் வச்சிருப்பானாம். நாங்க மிடில்கிளாஸ் வியாபாரத்தில் இவ்வளவு சரக்கு விக்கணும் என்று சேல்ஸ் டார்கட் வச்சிருப்பதுபோல் அவனும் இந்த வருத்தில் மேல் அதிகாரிக்கு இரண்டு சி கொடுக்கணும் அவனுக்கு ஐம்பது லட்சம் கிம்பளப் பணம் ஒதுக்கணும் என்று டார்கட் வச்சிருப்பானாம்!
பேசிக்கொண்டே இருந்தவர் கூட்டத்தில் அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவரது மனைவி நகரவும் அவர் மனைவியைப் பார்த்து கத்தினார்
“ஏய் உட்காருடி இங்க! நகரக்கூடாது. ஒண்ணும் ஆகப்போறதில்ல. ஆனா செத்துப்போனவன் மேல இருந்து பார்ப்பான்! நாம நாலுபேர் தட்டிக்கேட்டா அவன் ஆத்மா கொதிக்காமல் சாந்தி அடையும. நம்ம புள்ளகுட்டி கண்ணால் மழையைப் பார்க்கணும்ன்னா எல்லாரும் உட்காருங்க! ”
ராஜன் தனது கைபேசியில் பத்து ஃபோன் செய்தான். டி.ஐ.ஜி யும் அவருடன் இரண்டு உயர் அதிகாரிகளும் வந்தனர். ஆம்புலன்ஸ் வரவழைத்து கூட்டத்தை சமாதானம் செய்தனர்.
இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலையும் இரண்டு லட்சம் நிவாரணத்தொகையும் வழங்கப்படும் என்று டி.ஐ.ஜி உறுதி தந்தார். மேலும் அந்த சாலையில் இனி பேருந்து இயக்கப்படாது என்றும் உறுதி படக்கூறினார்.
ராஜன் சில காவலர்களிடம் அந்த சாலையில் கன ரக வாகனங்கள் போக முடியாதபடி தரையிலிருந்து ஆறடிக்கு மேல் ஒரு இரும்பு கம்பிகொண்டு தடுப்பு போடுவதற்கான ஏற்பாடுகளை செய்தான். ஏதோ யோசனையில் பேன்ட் பாக்கெட்டிற்குள் கைகளை விட்டபோது பைக்சாவி தட்டுப்பட்ட போதுதான் ஸ்ரீயின் ஞாபகம் வந்து அவளைத் தேடினான்.
அவள் இடதுபுறமும் இல்லை வலதுபுறமும் இல்லை. மற்ற இரண்டு திசையில் கண்களை திருப்பியபோது ரோட்டோரமாய் கிடந்த ஒரு கல்மேல் உட்கார்ந்து தலையை குனிந்திருந்தாள் ஸ்ரீ.
அவள் அருகே சென்று அவன் நின்றபோது அவளும் நிமர்ந்தாள். அவள் நாடியில் அரைத்த விழுதுபோல் தோசையும் கன்னங்களில் கண்ணீரும் முகத்தில் விழிந்து அவள் நிலையைச் சொல்ல ராஜன் அவளை எழுப்பி நிற்க வைத்தான். இரும்பு கைகள் என்று ஏன் சொல்லுகிறார்கள்? அப்படிச் சொன்னவனை ராஜனைப் போன்றவன் தொட்டு பேசியிருப்பான். மனித உடலை
போர்த்திய ஊண் இவன் உடலை போர்த்தும்போது உறைந்துவிட்டதோ? இல்லை இந்தப் பாதகன்தான் உறைய வைத்திருப்பான். அவன் தொடுபவரை பயமுறுத்தவே ஊணை உறைய வைத்திருப்பான். அவனது முரட்டு பிடி அவளை பேச உந்தவில்லை. ஆனால் இவ்வாறு சிந்திக்க வைத்தது.
“இங்கிருக்கும் பிரச்சனையில் எங்கும் வாயை கொப்புளிக்க தண்ணீர் கிடைக்காது. வா உன் துப்பட்டாவில் முகத்தை துடை. துப்பட்டாவை சுருட்டி கையில் வச்சிக்கோ. அதை வீட்டுக்கு போனபிறகு அலசிக்கலாம். வா. வாந்தி வாடை மூக்கில் படாமல் அதனை வச்சிக்கோ. அப்புறம் திரும்ப வாந்தி வரும். ” என்று கூறியவன் அவளை தனது பைக்கில் ஏற்றிச் சென்றான்.
துப்பட்டாவை பாத்ரூமில் போட்டவள் முகத்தை கழுவிக்கொண்டு வந்தபோது ராஜன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். எவ்வளவு கொடூரமான ஆக்சிடன்ட்? எறும்பைப்போல் மனிதன் மனிதன் உருவாக்கிய சாதனத்தாலேயே நசுக்கப்பட்டு உயிரை விடுகிறான். அதை பார்த்தபிறகு எப்படி கல்லாட்டம் இருக்கான் பாரு! காக்கிச் சட்டையை அயர்ன் பண்ணுவதுபோல் போலிஸ்காரன் இதயத்தையும் அயர்ன் பண்ணிட்டுதான் தினம் டியுட்டிக்கு போவான் போல என்று அதைப்பற்றி நினைத்தவளுக்கு வாந்தியின்வாடை மீண்டும் வந்து குமட்டியது. மேலும் ஏதோ ஒரு புளித்த வாசனை வாயில் அடிக்கவும் அடுக்களைக்குள் சென்று தண்ணீர் குடிக்கச் சென்றாள். அடுக்களைக்குள் செல்லும்முன் ராஜன் நிழல் அறை வாசலில் ஆடியது. திரும்பி அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்வையை அவனிடம் ஓட்டினாள். ராஜன் தனது கைக்கடிகாரத்தின் செல் பட்டனை ஆன் செய்து ஆஃப் செய்து கொண்டிருந்தான். பத்து முறை அதையே செய்தவன் ஒருநிமிடம் ஆனபிறகும் அதையே செய்தான். பட்டனின் கிளிக் செயலை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தால் என்ன விவரிக்கும்?
அவனுக்கு எரிச்சலா? கோபமா? இதில் எது அவன் மனநிலை என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால் இரண்டில் ஏதோ ஒன்றுதான் அவனை பிடித்துக் கொண்டிருந்தது என்பதை ஸ்ரீ உணர்ந்தாள். அழுகைதான் துக்கத்தின் வருத்தத்தின் வெளிப்பாடு என்பதை அவள் அன்று சந்தேகித்தாள். கோபத்தால்கூட துக்கத்தை அனுசரிக்க முடியுமோ?அழுக முடிந்தவன் அழுதுவிடுகிறான். மற்றவன்?
ஸ்ரீயைப் பார்த்ததும் ராஜன் அவளிடம் “ஸ்ரீ மேஜையில் பால் பாக்கெட் இருக்கு. காபி போடு என்றான். ”
அவனிடம் இருந்து தப்பி ஓட நினைத்ததை கேட்காதவரை அவளுக்கும் நிம்மதிதான். அவன் பேன்ட் சட்டை வாலட் ஆகியவற்றை கடத்தியதை கேட்டுவிட்டால் இஞ்சி திண்ண குரங்கின் கதைதான். இல்லை ரிஷியின் சடாமுடியைப் பிடித்து இழுத்து எழுப்பிய மோகினியின் கதை தான். என்ன ராஜன் சாபமெல்லாம் தரமாட்டான். குத்து மதிப்பாக பத்து நாள் ரிமான்ட் வாங்குவான் என்பது அவள் வ்யூகம்.
அதனால் அவன் ஏவிய வேலையை தட்டாமல் செய்தாள். குமட்டல் புரட்டல் எல்லாம் வயிற்றின் ஓரமாய் ஒளிந்து கொண்டது. (போலிஸ்காரனை பார்த்து அதுவும் பயந்துவிட்டது போலும்)
காபியைப் போட்டவள் அதன் ருசியை இரண்டு முறை சரி பார்த்தாள். ராஜன் சோர்வாக தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். ஸ்ரீயின் கால்களுக்கு அவன் அருகே செல்லக்கூட துணிவு வரவில்லை. முழு தைரியத்தையும் திரட்டிக்கொண்டு அவன் அருகே சென்று காபி டம்ளரை வைத்தாள். வைப்பதற்கு முன் மனதில் பல கேள்விகள்.
காபி நல்ல சூடாக இருந்ததா? இருந்தது என்றது அவள் கைகள்!
காபியில் இனிப்பு எப்படி இருந்தது? மிகவும் திட்டமாக! என்றது அவள் நாவு.
காபியின் கசப்பு லேசாக தெரிந்ததா? ஆம் கசப்பு தேவையான அளவு தெரிந்தது.
காபியின் நிறம்? அது விளம்பரத்தில் காட்டுவான்ல? அது போலத்தான் இருந்தது என்றது அவள் கண்கள்.
சோர்வாக இருந்தவன் மெல்ல இமைகளைத் திறந்து அவள் காபியை டேபிளில் வைத்தபோது பார்த்தான். அதன்பிறகு
அவளை பார்க்கவில்லை. அவன் அயர்ச்சி அவனை கவனிக்க விடவில்லை. இரண்டு மணிநேரமாக ஆக்சிடன்ட் நடந்த இடத்தில் நின்றுகொண்டே இருந்தானே? அதனால்தானோ? என்று ஸ்ரீ நினைத்தபோது. அவன் காபியை எடுத்துக் குடித்தான். குடித்துக்கொண்டிருந்த போதே கண்களை மூடித் திறந்தான். பத்து நிமிடத்திற்குப் பிறகு ஸ்ரீ அவனைத் தாண்டி பாத்ரூம் போகப் போனபோது அவளை அழைத்தான் “ஸ்ரீ இங்க வா. ”
இப்போதுதானே அவ்வளவு சோம்பலாக இருந்தான்? கொஞ்சம் தெளிவாக பேசுறானே. எப்படி?
“ஸ்ரீ உன்னிடம் பேசணும். ”
அட பத்து நிமிஷத்திற்கு முன்பு தலையில் கை வைத்திருந்தானே? இப்ப கைகளை சோபாவின் கைகளில் அழுத்தமாக வைத்திருக்கிறானே! எப்படி?
“ஸ்ரீ இப்பதான் காபி குடித்தபிறகு தலைவலி விட்டிருக்கு. நீ ஆடி அசைந்து வருவதற்குள் திரும்ப வந்திடும் போல. வா இங்க. நான் கேட்பதுக்கு பதில் சொல். உண்மையாக பதில் சொல். அங்கயே நின்னுகிட்ட இருந்தா என்ன அர்த்தம்? என் கையில் மைக் இல்லை. பக்கத்தில் வா! ”
‘ச்ச! காபியை கேவலமாக போட்டிருக்கணும். இல்லை படு கேவலமாக போட்டிருக்கணும். கஷாயமாக இருந்திருக்கணும் அவனுக்குத் தந்த காபி. அப்பதான் இவன் தலையில் வைத்திருந்த கையை எடுத்திருக்கவே மாட்டான்.’ என்று மனதில் விவாதித்தவள் அவன் சொன்ன இடத்தில் வந்தமர்ந்தாள்.
அவள் முகத்திற்கு நேரே தனது உடலைத் திருப்பி அவள் கண்களைப்பார்த்து அவளுடைய கண்களின் முழு ஈர்ப்பையும் பெற்றவன் அவளிடம் “ஸ்ரீ உன்னிடம் இரண்டு கேள்வி கேட்பேன். எனக்கு சரியான பதில் வரணும். என்ன? ”
“ம். கேளு ராஜன். ”
“கௌன்சிலர் பணம் என்னாச்சு? ”
“பணம் பவித்ராகிட்டதான் இருந்திச்சு. ஆனால் அவள் என்னிடம் பணத்தை தரல்ல. ப்ராமிஸ். ”
“சரி. ஏன் இங்கிருந்து போக நினைச்ச? ”
“நாங்க வெறும் ஃப்ரண்ட்ஸ் மட்டும் கிடையாது. ஒரே குடும்பம். அக்கா தங்கச்சி மாதிரி. ஐந்து வயசுலயிருந்து ஒன்னா இருந்திருக்கோம். மோகனா அக்காவுக்கு நான் மக மாதிரிதான். தனுவும் மோகனா அக்காவும் சென்னையில் இருக்காங்க. அவுங்களுக்கு நான் இல்லாம எப்படி சாமாளிக்க முடியும்? நான் போனாதான் மோகனா அக்கா அவுங்க பையனை ஸ{கூளில் சேர்க்க முடியும். என்னிடம் தான் நாங்க வீட்டு சாமான்களைவிற்ற பணம் இருக்கு. அந்தப் பணத்தைக் கொண்டு ஏதாவது தொழில் வைக்கணும். அப்புறம் இங்க சும்மாவே உட்கார்ந்திருப்பது வெறுப்பா இருக்கு. அவுங்க நான் ஏன் இன்னும் வரவில்லை என்று தேட மாட்டாங்களா? இன்னைக்குதான் அவுங்ககூட ஃபோனில் பேசினேன். என்னோட குடும்பம் அவுங்க. மிக்சி கிரைன்டர் லாப்டாப் செல்ஃபோன் என்று எல்லாத்தையும் விற்ற பணத்தை ஒழுங்கா செலவு செய்யணும்தானே? ”
“மிக்சி கிரைண்டர் சரி. கட்டிலும் வித்தாச்சா? ”
கொழுப்பெடுத்த நாவுக்காரன். இவனுக்கு உடம்பில் உள்ள கொழுப்பு முழுதும் நாவில்தான் என்பதை ஐயம் திரிபர உணர்ந்து சொன்னாள் “தனு மோகனா பற்றி தெரியாது. என் கட்டிலை வித்தாச்சு! சந்தேகமா? நான் இந்த பத்து நாளும் இங்கிருந்து தப்ப வேற முயற்சி செய்துப்பார்க்காதபோதே நீ இதைப் புரிஞ்சிருக்கணும் ராஜன். ”
Comments are closed here.