அத்தியாயம் 40 – நீர் விளையாட்டு

 

இந்த வரலாறு நிகழ்ந்த காலத்துக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் மூவேந்தர்களைத் தவிர, சிற்றரசர்கள் எழுவர் புகழ்பெற்று விளங்கினார்கள். அவர்களுக்கு ‘வள்ளல்கள்’ என்ற பட்டப் பெயரும் வழங்கி வந்தது. அந்த எழுவரில் ஒருவன் கொல்லி மலையின் தலைவனான ஓரி என்பவன். இவன் வில் வித்தையில் இணையில்லாத வீரன் என்று பெயர் பெற்றிருந்தான். இவன் தன் வலிய பெரிய வில்லை வளைத்து நாணேற்றி அம்பை விட்டானாயின், அது இராமபிரானுடைய அம்பு ஏழு மரங்களைத் தொளைத்தது போல் முதலில் ஒரு புலியைத் தொளைத்து, பிறகு ஒரு மானைத் தொளைத்து பிறகு ஒரு பன்றியை தொளைத்து, பின்னர் ஒரு முயலைத் தொளைத்து விடுமாம். இவ்வாறு புலவர்களால் அவனுடைய வில் வித்தைத் திறன் பாடப் பெற்றிருந்தது. அதிலிருந்து அவன் ‘வல்வில் ஓரி’ என்று குறிப்பிடுவதும் வழக்கமாயிற்று.

 

கொல்லி மலை வல்வில் ஓரியின் மீது, அந்நாளில் வலிமை பெற்ற வேந்தனாக விளங்கிய சேரன் கோபம் கொண்டான். அவனைத் தாக்குவதற்குத் திருக்கோவலூர்த் தலைவன் மலையமான் திருமுடிக்காரியின் துணையை நாடினான். காரியின் வீரம் ஓரியின் வீரத்துக்கு குறைந்ததன்று. அத்துடன் மலையமான் காரிக்குப் படைபலம் அதிகமாயிருந்தது. மலையமான், கொல்லி மலைமீது படை எடுத்துச் சென்று வல்வில் ஓரியைக் கொன்று அவனுடைய மலைக் கோட்டையையும் நிர்மூலமாக்கினான்.

 

அதே காலத்தில் கொல்லி மலையை அடுத்திருந்த நிலப் பகுதியில் அதிகமான் நெடுமானஞ்சி என்னும் குறுநில மன்னன் அரசு புரிந்து வந்தான். வல்வில் ஓரியுடன் அவன் உறவு பூண்டவன். வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் காரியை அவன் பழிவாங்க விரும்பினான். தன்னால் மட்டும் அது முடியாதென்று எண்ணிச் சோழ மன்னனாகிய கிள்ளி வளவனின் உதவியை நாடினான். மலையமானின் வலிமை அதிகமாகி வருவது பற்றியும் அவன் சேரனோடு தோழமை கொண்டிருப்பது பற்றியும் கிள்ளிவளவனுக்குக் கோபம் இருந்தது. எனவே சோழன் கிள்ளிவளவனும் தகடூர் அதிகமானும் சேர்ந்து திருக்கோவலூர் மலையமானைத் தாக்கினார்கள். மலையமான் போர்க்களத்தில் வீர சொர்க்கம் எய்தினான். மலையமானுடைய இரு இளம் புதல்வர்களைச் சோழ நாட்டு வீரர்கள் சிறைப்பிடித்து வந்தார்கள். மலையமானுடைய வம்சத்தையே அழித்துவிட வேண்டுமென்று கருதியிருந்த அதிகமானும் கிள்ளிவளவனும் அந்தக் குழந்தைகளைப் பூமியில் கழுத்தளவு புதைத்து யானைக் காலால் இடறிக் கொல்லும்படி கட்டளையிட்டார்கள். மலையமானுடைய வள்ளன்மையை அறிந்து, அதனால் பயன் துய்த்திருந்த புலவர் ஒருவர் அச்சமயம் அங்கு வந்து சேர்ந்தார். மலையமானுடைய குழந்தைகளின் உயிருக்காகச் சோழ மன்னனிடம் மன்றாடினார்.

 

“வேந்தே! அதோ பார்! கழுத்து வரை புதைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் முகங்களைப் பார்! அந்த முகங்களில் தவழும் புன்னகையைப் பார்! தங்களைக் காலால் இடறிக் கொல்லப் போகிற யானையைப் பார்த்து, அதன் துதிக்கை ஆடுவதைப் பார்த்து, அக்குழந்தைகள் ஏதோ வேடிக்கை என்று எண்ணிச் சிரிக்கின்றன. இத்தகைய குற்றமற்ற குழந்தைகளையா கொல்லப் போகிறாய்? அந்தக் குழந்தைகள் என்ன பாவம் செய்தன? தகப்பன் செய்த குற்றத்துக்காகக் குழந்தைகளைத் தண்டிக்கலாமா?” என்றார் புலவர்.

 

அதைக் கேட்ட சோழன் மனமாற்றம் அடைந்தான். தன் கட்டளையை உடனே மாற்றினான். குழந்தைகளைத் தரையிலிருந்து எடுக்கச் செய்தான். வயது வந்த பிறகு அவர்களில் மூத்த பிள்ளைக்குத் திருக்கோவலூர் அரசையும் திரும்பக் கொடுத்தான்.

 

அது முதல் நூற்றாண்டு நூற்றாண்டாகச் சோழ குலத்து மன்னர்களிடம் திருக்கோவலூர் மலையமான் வம்சத்தினர் நன்றியுடன் நட்புரிமை கொண்டிருந்தார்கள். அந்த உறவு சுந்தர சோழர் காலம் வரையில் நீடித்திருந்தது. மலையமான் மகளாகிய வானமாதேவியைச் சுந்தர சோழர் மணந்து பட்ட மகிஷியாகக் கொண்டிருந்தார்.

 

கொல்லி மலை வல்வில் ஓரி – தகடூர் அதிகமான் இவர்களுடைய வம்சத்தினர் அழிந்து பட்டனர். ஆயினும் அவர்களுடைய கிளை வம்சத்தில் தாங்கள் தோன்றியதாகக் கடம்பூர் சம்புவரையர்கள் சொல்லிக் கொண்டார்கள். அவர்களுடைய முன்னோர்கள் திருக்கோவலூர் மலையமான் வம்சத்தாரிடம் கொண்டிருந்த பகைமையை சம்புவரையர்கள் மறக்கவில்லை. ஆதலின் மலையமானுடைய பேரப்பிள்ளை சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக முடி சூடுவதை அவர்கள் விரும்பாதது இயற்கையேயல்லவா? ஆதித்த கரிகாலனுடைய அகம்பாவமும், சிற்றரசர்களைச் சிறிதும் மதியாமல் அவன் நடந்து கொண்ட விதமும் சம்புவரையர்களின் வெறுப்பு வளர்வதற்கு மேலும் காரணம் தந்தது. ஆகையினாலேயே கண்டராதித்தருடைய குமாரன் மதுராந்தகனைத் தஞ்சை சிம்மாதனத்தில் ஏற்றிவைக்கும் முயற்சியில் சம்புவரையர்கள் ஊக்கமாக ஈடுபட்டார்கள்.

 

ஆனால் கரிகாலன் கடம்பூருக்கு வந்த நாளிலிருந்து பெரிய சம்புவரையரின் உள்ளம் சிறிது சிறிதாக மாறுதல் அடையலாயிற்று. அவருடைய செல்வப் புதல்வியாகிய மணிமேகலையே அவருடைய மனமாறுதலுக்குக் காரணமாயிருந்தாள். ஆதித்த கரிகாலனுடைய உள்ளத்தை மணிமேகலை கவர்ந்து விட்டாள் என்பதற்குப் பல அறிகுறிகள் தென்பட்டன. பெண்களைக் கண்ணெடுத்தும் பாராதவன் என்றும், பிரம்மச்சாரியாகவே காலத்தைக் கழிக்கப் போகிறான் என்றும் கரிகாலனைப் பற்றி பேசப்பட்டு வந்தது. அத்தகையவன் கடம்பூர் மாளிகைக்கு வந்ததிலிருந்து அடிக்கடி பெண்கள் இருக்கும் இடம் போவதும் அவர்களுடன் உல்லாசமாகப் பேசுவதுமாக இருந்தான். முக்கியமாக அவன் மணிமேகலையின் ‘சூடிகை’யைப் பற்றி அடிக்கடி பாராட்டிப் பேசினான். கரிகாலன் வந்ததிலிருந்து மணிமேகலையும் ஒரே உற்சாகமாக இருந்தாள். அதற்குக் காரணம் அவளும் கரிகாலனிடம் பற்றுக் கொண்டதுதான் என்று பெரிய சம்புவரையர் கருதினார். அவர்கள் இருவருடைய குதூகலத்தையும் பார்த்துப் பார்த்துச் சம்புவரையரும் உற்சாகம் கொண்டார். கரிகாலன் மணிமேகலையை மணந்து கொண்டால் தம் செல்வத் திருமகள் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாக விளங்குவாள்! அவளுக்குப் பிறக்கும் குழந்தையும் தஞ்சை சிங்காதனத்துக்கு உரியவனாவான்! இன்று திருக்கோவலூர் மலையமான் அடைந்திருக்கும் பெருமிதத்தை அப்போது தாமும் அடையலாம். அதற்கெல்லாம் தாமே எதற்காகத் தடையாக இருக்கவேண்டும்? தமது அருமைக் குமாரியின் ஏற்றத்துக்குத் தாமே ஏன் இடையூறு செய்ய வேண்டும்?

 

மதுராந்தகனுக்குத் தம் மகளை மணம் செய்விக்கலாம் என்ற யோசனை முன்னம் சம்புவரையருக்கு இருந்தது உண்மைதான். ஆனால் மதுராந்தகனுக்கு ஏற்கெனவே இரு மனைவியர் இருந்தனர். சின்னப் பழுவேட்டரையரின் மகளை அவன் மணந்திருந்ததுடன், அவளுக்கு ஓர் ஆண் மகனும் பிறந்திருந்தது. ஆகையால் மதுராந்தகன் சிங்காதனம் ஏறினால் பழுவேட்டரையரின் வம்சத்தினர்தான் பட்டத்துக்கு உரிமை பெறுவார்கள். மணிமேகலை தஞ்சை அரண்மனையில் உள்ள பல சேடிப் பெண்களில் தானும் ஒருத்தியாக வாழ வேண்டியிருக்கும்.

 

ஆனால் ஆதித்த கரிகாலனை மணிமேகலை மணம் செய்து கொண்டால் அவள்தான் பட்ட மகிஷியாயிருப்பாள். அவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே சிங்காதன உரியதாகும். மதுராந்தகனுக்குப் பட்டம் சூட்டுவதென்பது பிரம்மப் பிரயத்தனமான காரியம். மக்கள் அதற்கு விரோதமாயிருப்பார்கள். மலையமானுடனும் கொடும்பாளூர் வேளானுடனும் போராட்டம் நடத்தித்தான் அதைச் சாதிக்க வேண்டியதாயிருக்கும். மதுராந்தகனுடைய அன்னையே அதற்குத் தடையாயிருக்கிறாள். இவ்வளவு தொல்லையான முயற்சியை எதற்காக மேற்கொள்ள வேண்டும்?

 

ஆதித்த கரிகாலனுக்கு முடிசூட்டுவதென்பது ஏற்கெனவே முடிவான காரியம். அதை நிறைவேற்றுவதில் எவ்வித சிரமும் ஏற்படாது. பழுவேட்டரையர்களின் பிடிவாதந்தான் பெரிய இடையூறாயிருக்கும். அவர்களில் பெரிய கிழவனோ இளைய ராணியின் மோகத்தில் மூழ்கிக்கிடக்கிறான். இன்னும் எத்தனை நாளைக்கு அவன் உயிரோடிருப்பானோ, தெரியாது. இந்தக் கிழவனை நம்பி ஒரு பெரும் அபாயகரமான காரியத்தில் எதற்காகத் தலையிட வேண்டும்? மதுராந்தகன் பக்கம் இருப்பதாகத் தாம் சபதம் செய்து கொடுத்திருப்பது என்னமோ உண்மைதான். அதனால் என்ன? சபதத்துக்குப் பங்கம் செய்யாமலே காரியத்தை முடிக்க வழியில்லாமலா போகிறது? மதுராந்தகன் ஓர் அப்பாவிப் பிள்ளை என்பது தெரிந்த விஷயந்தான். அவனைக் கொண்டே “எனக்கு இராஜ்யம் வேண்டாம்” என்று கூடச் சொல்லும்படி செய்து விடலாம். அல்லது அவனுடைய அன்னையின் சம்மதம் வேண்டும் என்று வற்புறுத்தினாலும் போதுமே!…

 

இவ்வாறெல்லாம் சம்புவரையரின் உள்ளம் சிந்திக்கத் தொடங்கியிருந்தது. ஆகையால் பழுவேட்டரையர் தஞ்சைக்குப் போகும் யோசனையை அவர் உற்சாகமாக ஆதரித்தார். அவர் இல்லாத சமயத்தில் கரிகாலனுடன் அந்தரங்கமாகப் பேசி அவனுடைய உள்ளத்தை நன்கு அறிந்து கொள்ளலாம் என்றும், பிறகு சமயோசிதம்போல் நடந்து கொள்ளலாம் என்றும் எண்ணினார். ஆதலின் பெரிய பழுவேட்டரையரை அவரே துரிதப்படுத்திப் பரிவாரங்களுடன் தஞ்சை அனுப்பி வைத்தார்.

 

பழுவேட்டரையர் பிரயாணப்பட்டுச் சென்ற பிறகு ஆதித்த கரிகாலனும், அவனுடைய தோழர்களும் வேட்டைக்குப் புறப்பட்டார்கள். அவர்களுடனே மணிமேகலையையும் மற்ற அந்தப்புரப் பெண்களையும் அனுப்பக் கூடச் சம்புவரையர் சித்தமாயிருந்தார். ஆனால் நடப்பதையெல்லாம் வேறு நோக்குடன் கவனித்து வந்த கந்தமாறன் அதை ஆட்சேபித்தான். கரிகாலன் மணிமேகலையிடம் காட்டிய சிரத்தையெல்லாம் நந்தினியை முன்னிட்டுத்தான் என்பதை அவன் உணர்ந்திருந்தான். இதனால் கரிகாலன் பேரில் அவனுடைய வெறுப்பு வளர்ந்திருந்தது. இதை எல்லாம் தந்தையிடம் விளக்கிச் சொல்லவும் முடியவில்லை. ஆகையால், “வேட்டையாடும் இடத்தில் பெண்களைக் கூட்டிக் கொண்டு போய் என்னத்தைச் செய்வது? இவர்கள் பத்திரமாயிருக்கிறார்களா என் பார்ப்பதற்குத்தான் சரியாயிருக்கும். மேலும் இது ஐப்பசி மாதம், எந்த நிமிஷத்திலும் பெரு மழை தொடங்கலாம். ஏரிக்கரைக் காடெல்லாம் வெள்ளமாகிவிடும். பெண்கள் திண்டாடிப் போவார்கள்!” என்று சொன்னான்.

 

அதன் பேரில் சம்புவரையரும் அந்த யோசனையைக் கைவிட்டு விட்டார். ஆதித்த கரிகாலன் தன் தோழர்களாகிய பார்த்திபேந்திரன், வந்தியத்தேவன், கந்தமாறன் இவர்களையும், மற்ற வேட்டைக்காரர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றான்.

 

எல்லோரும் சென்ற பிறகு சம்புவரையர் மாளிகை வெறிச்சென்று இருந்தது. நந்தினி, மணிமேகலையைப் பார்த்து “புருஷர்கள் வீட்டில் இருக்கும்போது நமக்குத் தொல்லையாகத் தோன்றுகிறார்கள். ஆனால் அவர்கள் எங்கேயாவது போய்விட்டாலும் நமக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. பரிகசித்துச் சிரிப்பதற்குக் கூட விஷயம் கிடைப்பதில்லை!” என்றாள்.

 

“ஆம், அக்கா! நாம் கூட வேட்டைக்குப் போயிருக்கலாம். எனக்கு வேட்டை பார்க்கப் பிரியம் அதிகம். என் தந்தையோடும் தமையனோடும் சில சமயம் போவதுண்டு. ஆனால் இன்றைக்கு என்னமோ கந்தமாறன் பிடிவாதமாகத் தடை செய்து விட்டான். ஒருவேளை உங்களுக்கு வேட்டை பிடிக்காது என்று அவ்விதம் தடை செய்தானோ, என்னமோ?” என்றாள் மணிமேகலை.

 

“ஆமாம்; எனக்கு வேட்டை அவ்வளவாகப் பிடிப்பதில்லைதான். இரத்தத்தைக் கண்டாலே எனக்குத் திகிலாயிருக்கும். ஆனால் கந்தமாறன் அதற்காகச் சொல்லவில்லையடி! உன்னையும் உன் வீட்டு விருந்தாளிகளில் ஒருவரையும் பிரித்து வைப்பதற்காகவே அவ்விதம் அவன் தடை செய்து விட்டான்!” என்றாள்.

 

மணிமேகலையின் கன்னங்களில் சுழிகள் காணப்பட்டன. சிறிது நேரம் தரையைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, “புருஷர்கள் எங்கேயாவது போய்த் தொலையட்டும், அக்கா! அவர்கள் சகவாசமே நமக்கு வேண்டாம். நாம் ஏரிக்கரை நீராழி மண்டபத்துக்குப் போய் நீர் விளையாடி விட்டு வரலாம்! வருகிறீர்களா?” என்றாள். நந்தினியும் அதற்குச் சம்மதிக்கவே தந்தையிடம் சொல்லி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மணிமேகலை செய்தாள்.

 

வீரநாராயண ஏரியின் கீழ்ப்புறத்தில் பெரிய கரையும் அதில் எழுபத்து நாலு மடவாய்களும் உண்டு என்பதைப் பார்த்திருக்கிறோமல்லவா? ஏரியின் மேற்புறத்தில் அத்தகைய பெரிய கரை கிடையாது. ஏரி நீரின் ஆழம் சிறிது சிறிதாகக் குறைந்து வந்து ஏரிக்கரை அங்கே சம தரையாக அமைந்திருந்தது. இன்னும் மேற்கே அடர்ந்த காடுகள் மண்டிக் கிடந்தன.

 

இவ்விதம் ஏரி நீர் குறைந்து சம தரையாகும் பிரதேசத்தில் ஆங்காங்கே சிறிய தீவுகள் காணப்பட்டன. தீவுகளில் மரங்களும் செடி கொடிகளும் அடர்ந்து வளர்ந்திருந்தன. அத்தீவுகளில் ஒன்றின் கரையில் படித்துறையும் நீராழி மண்டபமும் அமைக்கப்பட்டிருந்தன. இங்கே கடம்பூர் சம்புவரையரின் அந்தப்புரத்துப் பெண்கள் நீராடுவதற்காகவும் உல்லாசமாகப் பொழுது போக்குவதற்காகவும் வருவது வழக்கம். அந்த இடத்துக்கு வந்து சேர வேண்டுமானால் இரண்டு காததூரம் ஏரியைச் சுற்றிக் கொண்டு வரவேண்டும். இதனாலும் சம்புவரையர் வீட்டுப் பெண்கள் குளிக்குமிடம் என்று தெரிந்திருந்தபடியாலும் அன்னிய மனிதர்கள் அங்கே வருவது கிடையாது.

 

நந்தினியும் மணிமேகலையும் படகிலேறிக் கொண்டு அந்தத் தீவுக்கு இப்போது வந்து சேர்ந்தார்கள். படகு செலுத்தத் தெரிந்த இரண்டு தோழிமார்கள் உடன் வந்தார்கள். சமையல் செய்வதற்கு வேண்டிய பண்டங்களையும் படகில் கொண்டு வந்தார்கள். நீராழி மண்டபப் படித்துறையை அடைந்ததும் தோழிப் பெண்கள் படகை விட்டிறங்கி மண்டபத்தில் சமையல் செய்யத் தொடங்கினார்கள். நந்தினியும் மணிமேகலையும் சிறிது நேரம் படித்துறையில் உட்கார்ந்து வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். மணிமேகலை, இயற்கை மதியூகமுள்ள பெண்; குறும்பில் பற்றுள்ளவள். அவள் பழுவேட்டரையர் பேசுவது போலவும் கரிகாலன், கந்தமாறன், பார்த்திபேந்திரன், வந்தியத்தேவன் ஆகியவர்கள் பேசுவது போலவும் நடித்துக் காட்டினாள். அதையெல்லாம் பார்த்தும் கேட்டும் நந்தினி கலீர், கலீர் என்று சிரித்துக் கொண்டிருந்தாள். ஆயினும் அவளுடைய கவனம் முழுவதும் மணிமேகலையிடம் இல்லை என்பதும், அவள் மனம் அவ்வப்போது ஏதோ அந்தரங்க சிந்தனையில் ஈடுபட்டது என்பதும் வெளியாகி வந்தது.

 

திடீரென்று மணிமேகலை துள்ளிக் குதித்து எழுந்து நின்றாள். “அக்கா! வேட்டைக்கு நாம் போகவில்லை; ஆனால் வேட்டை நம்மைத் தேடி வந்திருக்கிறது!” என்று கூவிக் கொண்டே இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்தாள்.

 

நந்தினியும் திடுக்கிட்டு எழுந்து மணிமேகலை பார்த்த திசையை நோக்கினாள். அங்கே சாய்ந்து படர்ந்திருந்த ஒரு பெரிய மரக்கிளையின் மீது சிறுத்தைப் புலி ஒன்று காணப்பட்டது! அந்தச் சிறுத்தை அவர்கள் மீது பாயலாமா, வேண்டாமா என்று யோசிப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தது.

 

அதே சமயத்தில் சிறிது தூரத்தில் குதிரைகள் தண்ணீரில் இறங்கிப் பாய்ந்து வரும் சத்தமும் கேட்டது.