அத்தியாயம் 45 – “நீ என் சகோதரி!”

 

நந்தினியும் வந்தியத்தேவனும் நின்ற இடத்தை அணுகி இளவரசரும் மணிமேகலையும் வந்து சேர்ந்தார்கள்.

 

அருகில் வரும் வரையில் இளவரசர் வந்தியத்தேவனை நோக்கிய வண்ணம் வந்தார். கிட்ட வந்ததும் நந்தினியை ஏறிட்டுப் பார்த்தார். அவளுடைய ஒரு கன்னத்திலும் ஒரு தோளிலும் சிவந்த கோடுகள் போன்ற காயங்களிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்டார்.

 

“ஐயோ! உங்களை அந்தப் பாழாய்ப்போன புலி காயப்படுத்திவிட்டதா, என்ன?” என்றான்.

 

“ஆம், ஐயா! ஆனால் அந்தப் புலி என் உடம்பைத்தான் காயப்படுத்தியது; நெஞ்சிலே காயம் உண்டாக்கவில்லை!”

 

இந்த வார்த்தைகள் கரிகாலருடைய நெஞ்சிலே பாய்ந்தன. அவர் மேலே எதுவும் சொல்லுவதற்குள் மணிமேகலை நந்தினியின் அருகில் பதட்டத்துடன் சென்று, “ஆம், அக்கா! நன்றாய்க் கீறி விட்டிருக்கிறதே! நல்ல வேளையாக அஞ்சனம் கொண்டு வந்திருக்கிறேன். வாருங்கள், போட்டு விடுகிறேன்! உடனே போட்டால் காயம் சீக்கிரம் குணமாகிவிடும்!” என்றாள்.

 

“தங்காய்! இந்த மாதிரி காயங்கள் எனக்குச் சர்வசாதாரணம் எத்தனையோ காயங்கள் பட்டு ஆறியிருக்கின்றன. நெஞ்சில் படும் காயத்தை ஆற்ற ஏதாவது அஞ்சனம் இருக்கிறதா, சொல்!” என்றாள்.

 

“ஓ! இருக்கிறது, அக்கா! அதுவும் இருக்கிறது!” என்று மணிமேகலை சொல்லிவிட்டு நந்தினியைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு பளிங்கு மண்டபத்துக்குச் சென்றாள்.

 

இளவரசரும் வந்தியத்தேவனும் சிறிது பின்னால் சென்று மண்டபத்துக்கு அருகில் ஒரு விசாலமான மாமரத்தின் அடியில் அமைந்திருந்த சலவைக் கல் மேடையில் அமர்ந்தார்கள்.

 

“ஐயா! எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து போகிறோமோ அவ்வளவுக்கு நல்லது! அதிக நேரம் தங்கினால் கந்தமாறனும் அவன் தந்தையும் ஏதாவது தவறாக எண்ணிக் கொள்ளலாம்” என்றான் வந்தியத்தேவன்.

 

“யார் வேணுமானாலும் தவறாக எண்ணிக் கொள்ளட்டும். நம் தலையை வாங்கிவிடுவார்களா, என்ன? இந்தப் பெண்கள் நம்மைப் பற்றித் தவறாக எண்ணிக் கொள்ளாமலிருந்தால் போதும். அவர்கள் வந்ததும் சொல்லிக் கொண்டு புறப்படலாம்” என்றார் இளவரசர்.

 

சற்று நேரத்துக்கெல்லாம் நந்தினியும் மணிமேகலையும் புதிய ஆடைகள் அணிந்து அலங்கரித்துக் கொண்டு வந்தார்கள். நந்தினியின் கன்னத்திலும் தோளிலும் இரத்தக் காயம் தெரியாதபடி அஞ்சனம் தடவியிருந்தது.

 

“உங்களிடம் விடை பெற்றுக் கொண்டு போவதற்காகக் காத்திருந்தோம்” என்றார் கரிகாலர்.

 

“நன்றாயிருக்கிறது; உச்சி வேளைக்கு மேலாகிவிட்டது எங்களுடன் இருந்து உணவருந்திவிட்டுத்தான் போக வேண்டும். இந்த நேரத்தில் உங்களைப் போக விட்டுவிட்டால், சம்புவரையர் மகள் என்னை மன்னிக்கவே மாட்டாள்” என்றாள் பழுவூர் ராணி.

 

“ஒரு நிபந்தனையின் பேரில் இருக்கிறோம்; உங்களுடைய காயத்துக்கு அஞ்சனம் தடவியிருக்கிறாள் மணிமேகலை. நெஞ்சத்தின் காயத்துக்கும் ஏதோ அஞ்சனம் இருக்கிறது என்று சொன்னால் அல்லவா? அது என்ன அஞ்சனம் என்பதைத் தெரிவித்தால் இருக்கிறோம்” என்றார் கரிகாலர்.

 

“அவளைக் கேட்காமல் நாமே அதை ஊகித்துச் சொல்லப் பார்க்கலாமே?” என்றாள் நந்தினி.

 

“ஒருவேளை காலப்போக்கினால் ஏற்படும் மறதியைச் சொல்லியிருக்கலாம்” என்றார் கரிகாலர்.

 

“அதுவாக இருக்க முடியாது; காலப்போக்கினால் மாறாத நெஞ்சுப் புண்ணும் உண்டு அல்லவா?” என்றாள் நந்தினி.

 

“பெண்களின் விஷயத்தில் நெஞ்சுப் புண்ணுக்கு ஒரு நல்ல அஞ்சனம் இருக்கிறது! அதுதான் கண்ணீர்!” என்றான் வந்தியத்தேவன்.

 

“பெண்களைக் கேவலப்படுத்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என்று வல்லத்து இளவரசர் காத்திருந்தார்; ஆனால் அவர் சொல்வது சரியல்ல. சில விதமான நெஞ்சுக் காயங்கள் ஏற்பட்டு விட்டால் கண்ணீர் விடும் சக்தியே போய்விடுகிறது. பிறகு அது அஞ்சனமாக எவ்விதம் பயன்படக்கூடும்?” என்றாள் நந்தினி.

 

“நாங்கள் இருவரும் சொன்னது சரியில்லையென்றால், நீங்கள் உங்கள் ஊகத்தைச் சொல்லுங்கள்?” என்றான் வந்தியத்தேவன்.

 

“அதற்கென்ன, சொல்கிறேன்; தங்காய்! நீ குறிப்பிடும் அஞ்சனம் செவியின் மூலமாக நெஞ்சுக்குப் போவதல்லவா? யாழிலும், குழலிலும், இனிய குரலிலும் எழும் இன்னிசையைத் தானே நெஞ்சின் காயத்துக்கு அஞ்சனம் என்று சொல்கிறாய்?” என்றாள் நந்தினி.

 

“ஆம், அக்கா! உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று மணிமேகலை கேட்டாள்.

 

“நான்தான் மந்திரக்காரி என்று சொல்லியிருக்கிறேனே? பிறர் மனத்தில் உள்ளதை அறியும் சக்தி எனக்கு உண்டு. ஐயா! நீங்கள் இருவரும் இன்னிசையின் அந்த அபூர்வ சக்தியை ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று நந்தினி கேட்டாள்.

 

“ஆம், ஆம்! அதை ஊகிக்க முடியாமற் போனது எங்கள் தவறு என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். மணிமேகலை இசைக் கலையில் தேர்ந்தவள் என்றும் நன்றாக யாழ் வாசிப்பாள் என்றும் கந்தமாறன் கூறியதும் நினைவு வருகிறது” என்றார் கரிகாலர்.

 

“தமையன் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? தங்கையின் புகழை யாரிடமாவது சொல்லாத நாளெல்லாம் கடம்பூர் இளவரசருக்குப் பிறவாத நாள் போலிருக்கிறது. மணிமேகலையின் இசைத்திறனைப் பற்றி அவர் கூறியது உண்மைதான். மணிமேகலை யாழ் கூட எடுத்து வந்திருக்கிறாள். கானவித்தையின் மகிமை அறியாத என்னை மட்டும் வைத்துக் கொண்டு பாட வேண்டிய நிர்பந்தம் நல்ல வேளையாக அவளுக்கு இன்று இல்லை. ஐயா! பேதைப் பெண்களாகிய எங்களை இன்று புலிக்கு உணவாகாமல் காப்பாற்றினீர்கள். அதற்கு நன்றி நாங்கள் செலுத்த வேண்டாமா? எங்களுடன் உணவருந்திவிட்டு, மணிமேகலையின் இசை அமுதையும் அருந்திவிட்டுத்தான் போக வேண்டும்” என்று வற்புறுத்தினாள் நந்தினி.

 

வந்தியத்தேவன் அதற்கு இணங்க வேண்டாம் என்று இளவரசருக்குச் சமிக்ஞை செய்தான். அதை அவர் கவனிக்கவே இல்லை. “இளவரசிகளின் சித்தம் எங்கள் பாக்கியம்” என்றார் கரிகாலர்.

 

“மணிமேகலை! உன் மனோரதம் நிறைவேறிவிட்டது. சமையல் ஆகிவிட்டதா என்று போய்ப் பார்! இல்லாவிடில், சற்று துரிதப்படுத்து” என்று ஏவினாள் நந்தினி.

 

மணிமேகலை உடனே எழுந்து சமையல் நடந்த இடத்தை நோக்கிச் சென்றாள். அதே சமயத்தில் வந்தியத்தேவனும் எழுந்து நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.

 

அதை நந்தினி கவனித்துவிட்டு, “சற்று முன் பிறருடைய மனத்தில் உள்ளதை அறியும் மந்திர சக்தி எனக்கு உண்டு என்று சொன்னேன் அல்லவா! அதை இப்போது பரீட்சை பார்க்க விரும்புகிறேன். வல்லத்து இளவரசரின் மனத்தில் இப்போதுள்ள எண்ணத்தைச் சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.

 

கரிகாலர் சிரித்துக் கொண்டே “சொல்லுங்கள் பார்க்கலாம்!” என்றார்.

“அந்தப் புலியைக் கொன்று இந்தப் பெண்களைக் காப்பாற்றியது பெருந்தவறு என்று பச்சாதாபப்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் அந்தப் புலியின் வயிற்றுக்குள் போயிருந்தால் மிக்க நன்றாயிருக்கும் என்று எண்ணமிடுகிறார்!”

 

கரிகாலர் மேலும் சிரித்துக் கொண்டே, “நண்பா! நீ இப்படி எண்ணமிடுகிறாயா?” என்று கேட்டார்.

 

“இல்லை, ஐயா! அப்படி நான் எண்ணவில்லை. ஆனால் புலியைப் பற்றியும் இவர்களைப் பற்றியும் எண்ணியது உண்மைதான். இவர்களிடம் அகப்பட்டுக் கொண்ட புலி எப்படி உயிரோடு தப்பிப் பிழைத்தது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்!” என்றான்.

 

“என்ன, தம்பி! உளறுகிறாய்? புலி தப்பிப் பிழைத்ததா? மறுபடியுமா? செத்த புலியின் உடல் தண்ணீரில் மிதந்ததே! அது எங்கே?” என்று இளவரசரும் எழுந்து நின்று கேட்டார்.

 

“அதோ பாருங்கள்!” என்று வந்தியத்தேவன் சுட்டிக் காட்டினான்.

 

அவர்கள் இருந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் மரக்கிளைகளின் இடையில் தண்ணீர்க் கரை தெரிந்தது. அங்கே இளவரசிகள் வந்த படகு கட்டிப் போட்டிருந்தது. அந்தப் படகின் முனையை முன்னங்கால்களினால் பற்றிக் கொண்டு சிறுத்தை படகில் ஏற முயன்று கொண்டிருந்தது.

 

“ஆகா! இந்தப் புலியின் உயிர் வெகு கெட்டி!” என்றார் கரிகாலர்.

 

“ஐயா! வாருங்கள், போய் அதைக் கொன்றுவிட்டு வரலாம். காயம் பட்ட புலியை உயிரோடு விடுவது தவறு!” என்றான் வல்லவரையன்.

 

“வாணர் குலத்து வீரரே! நீங்கள் இரண்டு வீரர்கள் ஒரு காயம் பட்ட புலிக்காக ஏன் சிரமப்பட வேண்டும்? மணிமேகலையைக் கூப்பிடுகிறேன். அவள் தன் கையில் உள்ள சிறிய கத்தியினால் புலியைக் கொன்றுவிட்டு வருவாள்!” என்றாள் நந்தினி.

 

“பார்த்தாயா, நண்பா! பழுவூர் ராணி நமது வீர தீரத்தைக் குறித்து அவ்வளவு பெருமதிப்பு வைத்திருக்கிறார். நானும் வரவேண்டுமா? நீ மட்டும் போய் வருகிறாயா?” என்றார் கரிகாலர்.

 

“அல்லது மணிமேகலையை அனுப்பலாமா?” என்றாள் நந்தினி.

 

“மணிமேகலையை அனுப்பலாம் ஆனால் அந்தப் பெண் ஒருவேளை காயம்பட்ட புலிக்கும் அஞ்சனம் தடவிப் பிழைக்க வைத்துக் கொண்டு வந்து விட்டால் என்ன செய்கிறது?” என்று வந்தியத்தேவன் முணுமுணுத்தான்.

 

“என்ன யோசிக்கிறாய்?” என்றார் இளவரசர்.

 

“காயம்பட்ட புலியின் தலையை வெட்டிக் கொண்டு வந்து பழுவூர் அரசியின் காலடியில் சமர்ப்பிக்கலாமா என யோசிக்கிறேன். அப்போதாவது அவர் திருப்தியடைகிறாரா, பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு வந்தியத்தேவன் விடுவிடு என்று நடந்தான்.

 

“அந்த மூடன் சொன்னதைக் கேட்டீர்களா? காயம்பட்ட புலியின் தலையை வெட்ட ரொம்ப வீரம் வேண்டுமா?” என்று கரிகாலர் கேட்டுக் கொண்டே சிரிக்கத் தொடங்கியவர், நந்தினியின் முகத்தைப் பார்த்து விட்டுப் பாதியில் சிரிப்பை நிறுத்தினார்.

 

“அதைப் பற்றித் தாங்கள் அல்லவோ அபிப்ராயம் சொல்ல வேண்டும்?” என்றாள் நந்தினி.

 

கரிகாலர் தேகமெல்லாம் சிலிர்த்தது. தழதழத்த குரலில், “நந்தினி! கந்தமாறனிடம் நீ ஓலை கொடுத்து அனுப்பினாய். அதனாலேதான் நான் இவ்விடம் வந்தேன். இல்லாவிட்டால் வந்திருக்க மாட்டேன்” என்றார்.

 

“என் வேண்டுகோளுக்கு இத்தனை காலங்கழித்தாவது மதிப்புக் கொடுத்தீர்களே! மிக்க வந்தனம்!” என்றாள் நந்தினி.

 

“சென்று போனதையெல்லாம் நீ மறந்துவிட்டாய் என்று நினைத்தேன். அதனாலேதான் ஓலை அனுப்பினாய் என்று கருதினேன்…”

 

“சென்றதையெல்லாம் மறக்க முடியுமா, ஐயா! நீங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டீர்களா?…”

 

“மறக்க முடியாதுதான் என்னாலும் மறக்கமுடியவில்லை! நீ கண்ணும் கண்ணீருமாக நின்று என்னிடம் ஒரு வரம் கேட்டாய். அதை நான் கொடுக்கவில்லை. அந்தச் சமயம் ஏதோ வெறி கொண்டிருந்தேன். அதையெல்லாம் நான் இன்னமும் மறக்கவில்லைதான். ஆனால் எதற்காக ஓலை கொடுத்து அனுப்பினாய்? எதற்காக என்னை இவ்விடம் வரச் சொன்னாய்?” என்று கேட்டார் இளவரசர்.

 

“ஐயா! தஞ்சாவூருக்குத் தாங்கள் மூன்று ஆண்டுகளாக வரவில்லை. நோய்ப்பட்டிருக்கும் தங்கள் தந்தையைப் பார்க்கவும் வரவில்லை….”

 

“அவர் எனக்கு மட்டும் தந்தை அல்ல, நந்தினி!…”

 

“ஆம், இளைய பிராட்டிக்கும் தந்தைதான்! பொன்னியின் செல்வருக்கும் தந்தைதான்! ஆயினும் தங்களைப் பார்க்காதது தான் தங்கள் தந்தைக்குப் பெருங்குறையாக இருக்கிறது. தாங்கள் வராமைக்குக் காரணம் நான் என்று சக்கரவர்த்தியிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதனால் அவர் என்னைப் பார்ப்பதே கிடையாது. ஐயா! எனக்கு ஏற்கெனவே தாங்கள் செய்த தீங்கெல்லாம் போதாதா? இந்தப் பழி வேறு எனக்கு ஏற்பட வேண்டுமா?…”

 

“ஆனால் அது உண்மைதானே? உன் காரணமாகத் தான் தஞ்சைக்கு நான் வரவில்லை..”

 

“அப்படியானால், நான் தஞ்சையை விட்டுப் போய் விடுகிறேன். தாங்கள் தஞ்சைக்கு வந்து, தங்கள் தந்தையின் சிம்மாசனத்தில் அமர்ந்து மணிமகுடம் சூட்டிக்கொண்டு…”

 

“நந்தினி! அது ஒரு நாளும் நடவாத காரியம். எனக்குச் சிம்மாசனத்தில் இப்போது ஆசை இல்லை. மதுராந்தகத்தேவன் சிம்மாசனத்தில் அமர்ந்து சாம்ராஜ்யத்தின் மணிமகுடத்தைச் சூட்டிக் கொண்டு இராஜ்யம் ஆளட்டும்…”

 

“ஐயா! மதுராந்தகரைத் தங்களுக்கு நன்றாகத் தெரியும். அவரால் இந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை ஒரு நாளேனும் ஆளமுடியுமா?”

 

“அவனால் ஆள முடியாவிட்டால், அவனுக்கு உதவி செய்யப் பழுவேட்டரையர்கள் இருக்கிறார்கள்; நீயும் இருக்கிறாய்…”

 

“ஐயா! தங்கள் விருப்பம் இப்போது நன்றாய் எனக்குத் தெரிகிறது. நான் தஞ்சையிலிருந்து, பழுவூர் அரண்மனையிலிருந்து, போய்விடுகிறேன்…தாங்கள் தஞ்சைக்கு வந்து…”

 

“இல்லை, இல்லை! நீ தவறாக எண்ணுகிறாய்! எனக்கு அந்த எண்ணமே கிடையாது. உனக்கு நான் முன்னம் செய்த குற்றமெல்லாம் போதும். பழுவூர் அரண்மனையிலிருந்து உன்னைத் துரத்திய பாதகத்தையும் நான் சேர்த்துக் கட்டிக் கொள்ள வேண்டாம்…”

 

“ஐயா! நாம் இருவரும் தஞ்சையில் இருக்க முடியாதா? அந்தப் பெரிய நகரில் நாம் இரண்டு பேரும் இருக்க இடம் இல்லையா? ஒருவரையொருவர் பார்க்க வேண்டிய அவசியம் கூட இல்லையே?”

 

“பார்க்க வேண்டிய அவசியமில்லாமலிருக்கலாம் ஆனால் மனத்தில் நினைக்காமல் இருக்க முடியுமா? சற்று முன் நீதான் சொன்னாய்! சென்று போனதையெல்லாம் மறக்க முடியாது என்று, உன் நெஞ்சத்திலுள்ள காயத்தைப் பற்றியும் சொன்னாய். என் நெஞ்சத்திலும் காயம் பட்டிருக்கிறது என்னாலும் மறக்க முடியவில்லை.”

 

“மறக்க முடியாமல் இருக்கலாம்; ஆனால் மன்னிக்க முடியாதா? நான் செய்த குற்றங்களை இத்தனை காலம் கழித்த பிறகும் மன்னிக்க முடியாதா?”

 

நந்தினி! நான் மன்னிக்கும்படியாக நீ ஒரு குற்றமும் செய்யவில்லை. குற்றம் செய்தவன் நான்; உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியவன் நான். காஞ்சியிலிருந்து புறப்பட்ட போதுகூட உன்னிடம் மன்னிப்புக் கேட்டுப் பெறலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பினேன். ஆனால் வழியில் நான் அறிந்த ஒரு செய்தி உன்னிடம் மன்னிப்புக் கேட்கவே என்னைத் தகுதியற்றவன் ஆகிவிட்டது.”

 

“கோமகனே! தாங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்பது எந்த வகையிலும் தகுதியற்றதுதான். தாங்கள் புவி ஆளும் சக்கரவர்த்தியின் திருக்குமாரர், நான் பெற்ற தாய் தந்தையரால் கைவிடப்பட்ட அநாதைப் பெண்…”

 

“இல்லை, நந்தினி! நீ அநாதைப் பெண் அல்ல….”

 

“தனாதிகாரி பழுவேட்டரையர் என்னை மனமுவந்து தம் இளைய ராணியாக அங்கீகரித்தார் ஆனாலும்…”

 

“அதுமட்டுமல்ல, நந்தினி! எப்படி உன்னிடம் உண்மையைச் சொல்லுவது என்று தயங்குகிறேன்…”

 

“இந்தப் பேதைப் பெண்ணிடம் தாங்கள் எதை வேண்டுமானாலும் தயங்காமல் சொல்லலாம். வழியோடு போகிறவர்கள் எல்லாரும் என்னிடம் ஏதேதோ சொல்லத் துணிகிறார்கள். என்னை வம்புக்கு இழுத்து அவமதிக்கிறார்கள்….”

 

“நந்தினி! இனி அவ்விதம் யாரேனும் நடந்து கொண்டால் என்னால் ஒரு கணமும் பொறுக்க முடியாது. நீ சொல்ல வேண்டியதுதான் அவனை உடனே யமனுலகுக்கு அனுப்பி விட்டு மறு காரியம் பார்ப்பேன்….”

 

“எப்போதும் என்னிடம் தாங்கள் அத்தகைய கருணைகாட்டி வந்திருக்கிறீர்கள். பழையாறை

 

இளைய பிராட்டியோடு கூட எனக்காகச் சிறு பிராயத்தில் சண்டை பிடித்திருக்கிறீர்கள் அவர் தங்கள் சகோதரி…”

 

“நந்தினி! நீயும் என் சகோதரி தான்! இளைய பிராட்டியைப் போல நீயும் என் சகோதரி; நான் உன் சகோதரன்!”

 

“கோமகனே! நான் இன்னொருவரை மணந்ததிலிருந்து என்னைத் தங்கள் சகோதரியாகப் பாவிக்கிறீர்கள். அது தங்கள் குலத்தின் பெருமைக்கு உகந்ததுதான். ஆனால் சக்கரவர்த்தியின் திருக்குமாரரை, மூவுலகும் ஆளப் பிறந்தவரை, நான் எவ்வாறு என் சகோதரராகக் கருத முடியும்…?”

 

“நான் சொல்வதை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை நந்தினி! உண்மையாகவே நீ என் சகோதரி; மூவுலகும் ஆளும் சக்கரவர்த்தியின் திருக்குமாரி…!”

 

இதைக் கேட்ட நந்தினி கலகலவென்று சிரித்தாள்.

 

“தங்களுடைய சித்தம் குழம்பியிருக்கிறதா, எனக்குத்தான் பைத்தியம் பிடித்திருக்கிறதா, தெரியவில்லை!” என்று கூறினாள்.

 

“சித்தப்பிரமையும் இல்லை! பைத்தியமும் இல்லை.”

 

“அப்படியானால், இந்தப் பேதையைப் பரிகாசம் செய்கிறீர்களா?”

 

“என்னைப் பார்த்துச் சொல், நந்தினி! உண்மையாகவே உன்னைப் பரிகசிப்பவனாகத் தோன்றுகிறதா?”

 

“ஐயா! தாங்கள் என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்! என்னைப் பார்த்தால், சக்கரவர்த்தியின் திருக்குமாரி என்று தோன்றுகிறதா? இராஜ குலத்தின் இலட்சணம் என் முகத்திலே விளங்குகிறதா?”

 

“நந்தினி! நீ ஐந்து வயதுப் பெண்ணாக இருந்தது முதல் உன் முகத்தை பார்த்திருக்கிறேன். உன் முகத்தில் ஜொலித்த இணையில்லாத சௌந்தரியத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். அதற்குக் காரணம் மட்டும் இப்போதுதான் தெரிந்தது. காஞ்சியிலிருந்து புறப்பட்ட பிறகு நடுவழியிலேதான் தெரிந்தது. சோழ குலத்தில் வாழ்க்கைப்பட்டவர்களிலே வைதும்பராஜன் மகள் கலியாணிக்கு இணையான அழகுடையவர் யாரும் இல்லை என்பது உலகப் பிரசித்தம். அவர் என் பாட்டி; இன்னமும் பழையாறையில் உயிரோடு இருந்து வருகிறார். எழுபது வயது ஆன பிறகும் அவர் முகத்தில் விளங்கும் தெய்வீகமான அழகு கண்களைக் கூசச் செய்யும். அவருடைய அழகெல்லாம் இப்போது உன்னிடந்தான் தஞ்சம் புகுந்திருக்கிறது. அது என்னிடம் இல்லை; இளைய பிராட்டியிடம் இல்லை, அருள்மொழியிடமும் இல்லை. என் தந்தையின் மூலமாக உன்னிடத்தேதான் வந்திருக்கிறது…”

 

“ஐயா! இது என்ன சொல்கிறீர்கள்? உண்மையிலேயே எனக்குச் சித்தக் கோளாறுதான் போலிருக்கிறது. அல்லது என் காதுகளில் ஏதேனும் கோளாறு இருக்க வேண்டும்…”

 

“இல்லை, நந்தினி இல்லை! சித்தக் கோளாறும் இல்லை; உன் காதிலே கோளாறும் இல்லை; நீ என் தந்தையின் மகள்; ஆகையால் என் சகோதரி! சக்கரவர்த்தி என் அன்னையை மணப்பதற்கு முன்னால் ஈழ நாட்டைச் சேர்ந்த ஒரு தீவிலே ஒரு மாதரசியைக் காதலித்துக் காந்தர்வ மணம் புரிந்து கொண்டார். அவளுடைய புதல்வி நீ, ஆகையால் என் சகோதரி!” என்று கரிகாலர் ஆதுரம் ததும்பிய குரலிலே கூறினார்.

 

நந்தினி பெருந் திகைப்பு அடைந்தவள் போலச் சிறிது நேரம் ஆதித்த கரிகாலரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அவளுடைய முகத்தில் தெளிவு தோன்றியது.

 

“ஐயா! இந்தச் செய்தியைத்தானா தாங்கள் காஞ்சியிலிருந்து புறப்பட்ட பிறகு அறிந்தீர்கள்?” என்று கேட்டாள்.

 

“ஆம் நந்தினி! அதை அறிந்ததும் ஏற்கெனவே விளங்காமலிருந்த பல விஷயங்கள் எனக்கு விளங்கின.”

 

“கோமகனே! தங்களுக்கு இந்தச் செய்தியை வழியிலே சொன்னவர் யார்? வல்லத்து இளவரசரா?”

 

“அவன்தான்! ஆனால் அவனாகச் சொல்லவில்லை. இளைய பிராட்டி குந்தவை அவனிடம் சொல்லி அனுப்பினாள்!”

 

“ஆகா! தங்களையும் என்னையும் பிரித்து வைப்பதற்கு ஆதிநாளிலிருந்து எத்தனையோ சூழ்ச்சி செய்து வந்திருக்கிறார்கள். இன்னமும் அவர்களுடைய சூழ்ச்சிகள் முடிந்தபாடில்லை.”

 

“நீ நினைப்பது தவறு நந்தினி! இதில் சூழ்ச்சி ஒன்றுமில்லை. சிறு பிராயத்தில் உன்னையும் என்னையும் பிரித்து வைப்பதற்குப் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி செய்த முயற்சிகள் எனக்குப் புரியாமலிருந்தன. அதற்காக அளவில்லாத கோபம் அடைந்தேன். அவர் எவ்வளவு பயங்கரமான விபத்திலிருந்து நம்மைத் தடுத்துக் காப்பாற்றினார் என்று இப்போதுதான் தெரிகிறது. ஆனால் உண்மையை அவர்கள் அப்போதே சொல்லியிருக்கலாம். சொல்லாத காரணத்தினால் உனக்குப் பெரும் அநீதி செய்தார்கள்; எனக்கும் தீங்கு செய்துவிட்டார்கள்; போனது போகட்டும். சென்றதையெல்லாம் நாம் இருவரும் மறந்து விடுவோம்; மறக்க முடியாவிட்டாலும் மன்னித்து விடுவோம்…”

 

“ஐயா! வல்லத்து இளவரசர் வழியில் தங்களைச் சந்தித்து இந்தக் கதையை மட்டுந்தான் சொன்னாரா? இன்னும் ஏதாவது சொன்னாரா?” என்று நந்தினி கேட்டாள்.

 

“கதை என்று ஏன் கூறுகிறாய், நந்தினி! உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்றார் ஆதித்தகரிகாலர்.

 

“தாங்கள் கூறிய செய்தி அவ்வளவு எளிதாக நம்பக் கூடியதா? சக்கரவர்த்தியின் குமாரியாகப் பிறந்து நான் இந்தக் கதியை அடைந்திருக்க முடியுமா? இவ்வளவு கொடுமையான துன்பங்களுக்கு உள்ளாகியிருக்க முடியுமா? வந்தியத்தேவன் கூறியது உண்மையாகவே இருக்கட்டும். இது மட்டுந்தான் அவர் சொன்னாரா? வேறு ஒன்றும் சொல்லவில்லையா?” என்றாள் நந்தினி.

 

கரிகாலர் சிறிது தயங்கிவிட்டு, “ஆம்; இன்னொரு செய்தியும் சொன்னான். நீ பாண்டிய நாட்டுச் சதிகாரர்களோடு சேர்ந்திருப்பதாகச் சொன்னான். சோழர் குலத்தையே கருவறுத்து விடக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அதற்காக, பிடியில் மீன் சின்னம் உள்ள கொலைவாள் ஒன்றை நீ வைத்துப் பூஜித்து வருவதாகவும் சொன்னான். கொள்ளிடக்கரைக் காட்டில் பள்ளிப்படையின் அருகில் யாரோ ஒரு சிறுவனை வைத்து மணிமகுடம் சூட்டியதாகவும் கூறினான். நந்தினி! அதையெல்லாம் நீ இனி மறந்துவிடு! சோழர் குலத்தின் பெருமைக்கெல்லாம் என்னைப் போல் உரிமையுள்ளவள் நீ. சுந்தர சோழ சக்கரவர்த்தியின் புதல்வி. எங்கள் அருமைச் சகோதரி. உனக்கு இதுவரை செய்த அநீதிகளுக்கெல்லாம் பரிகாரம் செய்வதே எனது முதற் கடமையாக இனி வைத்துக் கொள்வேன்…”

 

“ஐயா! இவ்வளவையும் தாங்கள் நம்புகிறீர்கள் அல்லவா? அப்படியிருக்கும்போது, கடம்பூருக்கு வந்து இத்தனை நாள் வரையில் காத்திருந்ததேன்? முன்னாடியே என்னைச் சந்தித்துப் பேச ஒரு முயற்சியும் செய்யாதது ஏன்?”

 

“என் மனத்தில் ஏற்பட்டிருந்த குழப்பந்தான் காரணம். நம்முடைய புதிய உறவை என் மனதில் நிலைப்படுத்திக் கொள்ள அவகாசமும் வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லத் தக்க சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பலர் முன்னிலையில் சொல்லக்கூடிய செய்தியா இது? அதிர்ஷ்டவசமாக, ஒரு காட்டுப்பன்றியும் ஒரு சிறுத்தைப் புலியும் இன்றைக்கு அத்தகைய சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தன…”

 

நந்தினி குறுக்கிட்டு, “ஐயா! காட்டு மிருகங்கள் பொல்லாதவைதான்! ஆனால் மனிதர்களைப் போல் அவ்வளவு கொடுமை செய்யக் கூடியவை அல்ல. இது இன்றைக்குத்தான் எனக்கு நன்கு தெரிந்தது” என்றாள்.

 

“சகோதரி! சென்று போனதையெல்லாம் மறக்க முடியுமா என்று சற்று முன்னால் நீ சொன்னாய். அதை நானும் ஒப்புக் கொண்டேன். மறக்க முடியாவிட்டாலும் மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அதற்கு நீ மறுமொழி சொல்லவில்லை.”

 

“கோமகனே! தாங்கள் இதற்கு முன்னால் எனக்குச் செய்த துரோகங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும் மன்னித்து விடுவேன்; ஒருவேளை மறந்தும் விடுவேன். ஆனால் இன்றைக்குச் செய்த துரோகத்தை என்றைக்கும் மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது…”

 

“ஐயோ! இன்றைக்கு நான் என்ன செய்தேன்? நான் அறிந்து ஒரு துரோகமும் உனக்குச் செய்யவில்லையே?”

 

“சொல்லுகிறேன் அதோ வருகிறானே, அந்த தூர்த்தனைப் பாருங்கள்!”

 

“வல்லவரையனையா சொல்கிறாய்?”

 

“ஆமாம்; புலியின் தலையைக் கொண்டு வராமல் வெறுங்கையுடனே வருகிறானே, அவன்தான். ஒருநாள் அவன் தஞ்சையில் என்னைப் பார்த்தான். என்னுடைய பாதம் அவன் பேரில் பட்டால் அதை ஒரு ‘பாக்கியமாகக் கருதுவேன்’ என்று சொன்னான். அவனை என் காலால் தொட்டு உதைக்கவும் நான் இஷ்டப்படவில்லை. வேலைக்காரர்களை அழைப்பதாகச் சொன்ன பிறகு ஓடி விட்டான். அவனுடைய நீசத்தனமான எண்ணத்துக்கு நான் இணங்காததற்காகத் தங்களிடம் இத்தகைய பயங்கரமான கற்பனைகளைப் புனைந்து சொல்லியிருக்கிறான். நான் விரும்பினால் தங்களுடைய தலையையே கொண்டு வந்து விடுவதாக உறுதி கூறினான். இதையெல்லாம் தங்களிடம் நான் சொல்லி விடப் போகிறேனோ என்று அவனுக்குப் பயம். அதற்காகவே தாங்கள் கடம்பூர் மாளிகைக்கு வராமல் வழியிலே தடுத்து விடப் பார்த்தான். அதனாலேயே தங்களுடன் இணைபிரியாமல் சுற்றி வந்து கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட நீசன், என் காலினால் தொடுவதற்குக்கூட நான் விரும்பாதவன், – அவன் என் உடம்பு முழுவதையும் அணைத்துத் தூக்கிக் கரையேற்றும்படிச் செய்தீர்கள். அதைப் பார்த்துக் கொண்டுமிருந்தீர்கள். இதை நான் மறக்க முடியுமா? அல்லது மன்னிக்கத் தான் முடியுமா?”

 

இவ்விதம் நந்தினி கண்களில் கோபக்கனல் பொங்கக் கூறி வந்த பயங்கரமான மொழிகளைக் கேட்டுக் கரிகாலருடைய தலை உண்மையிலேயே சுழலத் தொடங்கியது. பளிங்கு மண்டபம், ஏரியின் நீர், காட்டு மரங்கள் எல்லாம் சுழன்றன. சற்று நிதானித்துக் கொண்டு, “சகோதரி! நந்தினி! நீ சொல்வது உண்மையாக இருக்க முடியுமா? எதை நம்புவதென்று எனக்கு மெய்யாகவே தெரியவில்லை. வந்தியத்தேவன் அவ்வளவு நீசனாக இருக்கக் கூடுமா? அவனுக்கு இந்தப் பேதைப் பெண் மணிமேகலையைத் திருமணம் செய்விப்பது என்று சற்று நேரத்துக்கு முன்னால் கூட எண்ணினேனே?” என்றார்.

 

“ஐயா! நான் சொல்வதை மட்டும் நீங்கள் நம்பிவிட வேண்டாம். எப்போதுமே அவசரப்பட்டுத் தாங்கள் காரியம் செய்து விடுவீர்கள். இந்தத் தடவை அப்படிச் செய்ய வேண்டாம். இரண்டு நாள் பொறுத்திருந்து இவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்து வாருங்கள். தாங்களே தெரிந்து கொள்வீர்கள்!” என்றாள் நந்தினி.