Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal episode 29
1129
0
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ராஜன் ஞாயிறுகளை எப்போதுமே உற்சாகமாக செலவழிப்பான்.
டியுட்டி அரை நாளோ இல்லை முழுநாளோ வேலைக்கு ஏற்றாற்போல் இருக்கும். அவன் அன்று மிகவும் தாமதமாக எழுந்தான். என்றுமே ஞாயிறு அன்று கூட காலையில் ஆறுமணிக்கு முன்பாகவே எழுபவன் அன்று காலை ஒன்பது மணிக்கு எழுந்தான். “ராஜன் இன்னைக்கு தானே அந்த கிறிஸ்டியன் ஃப்ரண்ட் கல்யாணம்? நீ மறந்திட்டியா?” என்று அவனிடம் ஸ்ரீ கேட்டபோது ராஜன் விழித்தான். யாரு என்று யோசித்தபோது டேவிட் கல்யாணம் என்பது ஞாபகம் வந்தது. விழுந்தடித்துக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்தான். அவன் அலமாரியில் வைத்திருந்த பத்திரிக்கையைப் பார்த்தான்.
‘ நேரம் : மணமகனும் மணமகளும் வேதம் மாற்றிக் கொள்ளும் நேரம் ஞாயிறு காலை 12 மணி. இரண்டாவது ஆராதனைக்குப் பிறகு.’ என்று பட்டை எழுத்தில் அதில் குறிப்பிட்டிருந்ததை பார்த்ததும் ‘அப்பாடா தப்பிச்சேன்’ என்றவாரே குளியல் அறைக்குள் நுழைந்தான். அவனிடம் டேவிட் கல்யாணத்தைப் பற்றிக் கேட்டதைவிட ‘நேற்று போன சமாச்சாரம் ஒத்துவரலையா? இல்லை கையில் காசு இல்லையா? இல்லை உன் மூஞ்சியைப் பார்த்து மாட்டேன் என்றே சொல்லிட்டாளா?’ என்று சரமாரியாக கேள்விகள் கேட்கத்தான் மிகவும் எனக்கு ஆசை என்று ஸ்ரீயிடம் கூறி திட்டும் வாங்கியது ஏதோ ஒரு சயித்தானால் ஏவப்பட்ட அவள் மனது.
அவன் பார்வையில் வித்தியாசத்தைப் பார்த்ததில் இருந்து ஸ்ரீ அவனை வார்த்தையால் சீண்டவேண்டும் என்று பல முறை நினைத்து பல சந்தர்ப்பங்களில் வாய் திறந்து பிறகு வேண்டாம் என்று விட்டுவிட்டாள். சின்ன சபலம்தான் என்பதை அவள் அறிந்தாலும் அவளை தன் இஷ்டம் போல் ஆட்டிப் படைப்பவனை அவளும் சில மணித்துளியேனும் ஆட்டிப் படைக்கவே ஆசைப்பட்டாள். அவள் மேல் தப்பில்லை யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்று நம்மிடம் தான் சொல்லி வைத்திருக்கிறார்களே.
ஆனால் மிகுந்த முயற்சிகளுடன் தன்னை கட்டுக்குள் வைத்திருந்தாள். ஆனால் விதி வலியது அன்றோ?
ராஜனின் ஜாதகக் கட்டத்தில் இருந்த ராகுவும் கேதுவும் அவர்களுக்குள் ஜுமான்ஜி ஆட்டம் விளையாடிக் கொண்டார்கள் போல. அவனது நல்ல நேரம் அவனைவிட்டு எட்ட நின்றுகொண்டு சிரித்தது. இந்த சமாச்சாரத்தை அறியாத அப்பாவியாய் ஸ்ரீயிடம் கேட்டான்இ “ஸ்ரீ நீ என்கூட கல்யாணத்திற்கு வா. சர்ச்சில் நிரைய கூட்டம் இருக்கும். அந்தக் கூட்டத்தில் உன்னை யாரு கண்டுக்க போறா? பிரச்சனை ஒண்ணும் வராது. நீ என்கூட வந்த மாதிரி மட்டும் காட்டிக்காதே. சரியா? உனக்கும் பொழுது போகும் தான? சீக்கிரம் கிளம்பு. ம்.. கிளம்பு. ஐந்து நிமிஷம் உனக்கு டைம் தர்றேன். ” என்றான்.
சாதாரண சுடிதாரில் அம்சமாக ஸ்ரீ அவன் சொன்னதுபோல ஐந்து நிமிடத்தில் கிளம்பி நின்றாள். தப்பிக்க முடியுமா என்று அவள் நினைத்தபோது அந்த வீட்டின் வாசலில் துரை வந்து நின்றார்.
தப்புதான் நான் நினைத்தது தப்புதான். ஐயனார் இருக்கும்போது காவலுக்கு ஆள் இல்லைன்னு கள்வன் நினைக்கலாமோ? என்று கன்னத்தில் இரண்டு போட்டுக் கொண்டாள்.
‘வாங்க ஐயனார் சார். உங்க குதிரை எங்கே’ என்று அவள் ஈ என்று இளித்துக்கொண்டே மனதில் கேட்டபோதுஇ “மேடம் என் பைக்கை வெளியில் நிப்பாட்டியிருக்கேன். அதிலே சின்ன பிராப்ளம். அதனால் சார் ஏட்டையாவின் பைக்கை எடுத்துக்கச் சொன்னார். இது என் பைக் சாவி நாளை காலை மெக்கானிக் வந்தால் இதை மெக்கானிக்கிட்ட கொடுத்திடுங்க.” என்று கூறியவன் சாவியைத் திணித்துவிட்டு ஏட்டையா வீட்டிற்குச் சென்றான்.
‘நமக்கு கொடுத்த ஐந்து நிமிடம்தான் இவருக்கும்போலும் அதான் மனுஷன் ஓடுறார்.’ என்று நினைத்தவளிடம் ராஜன் “கிளம்பலாமா?” என்றான். அவன் கேட்டபோதே மெக்கானிக் வந்துவிட அவரிடம் சாவியைத்தந்தாள். “துரையின் வண்டிச்சாவியா?” என்று ராஜன் கேட்க ஸ்ரீ ‘ஆம்’ என்று தலையை மட்டும் அசைத்தாள். அசைத்தபோதே பசித்தது. அதை உணர்ந்தவன் போல், “கரும்பு ஜுஸ் குடிச்சிட்டு போவோமா? இப்பவே ரொம்ப லேட். ” என்றான். மறுபடியும் ஒரு தலையசைப்பில் ‘ம் ’ என்றாள்.
போகின்ற வழியில் ஒரு கரும்பு ஜுஸ் வாங்கிக் குடித்தனர்.
சர்ச்சின் வாசல் வரை மக்கள் நின்றுகொண்டு ஆராதனைக் கூட்டத்தில் லயித்திருந்தனர். போதகர் “இறைவன் உம்மோடு இருப்பாராக. ” என்று சொன்ன போது அவர்களும் “இறைவன் உம்மோடும் இருப்பாராக.” என்றனர். அந்த மனிதக் குரல்கள் ஒன்றாக ஓங்கி ஒலித்தபோது உள்ளே நுழைபவர்களின் மேனி சிலிர்த்தது. உள்ளே நுழைந்ததும் ஸ்ரீ தன்னை மறந்து வெள்ளை உடையணிந்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்த போதகரின் பேச்சைக் கேட்டாள்.
“கர்த்தர் உங்களை அவரது ஆட்டுக்குட்டிகளைப் போல மடியில் வைத்துக்கொள்வார். பரலோகத்தில் நீங்கள் அவரது மடியில் இருப்பீர்கள். ” என்று போதகர் சொன்னது அப்போதுதான் உள்ளே நுழைந்த இவர்கள் மூவருக்கும் காதினில் விழந்தது.
இரண்டாவது ஆராதனைக் கூட்டம் முடிந்தது. ‘சரியான நேரத்திற்கு வந்துவிட்டோம்’ என்று நினைத்தவன் துரையிடம் “நீங்க ஸ்ரீ கூட இருங்க. நான் என் ஃப்ரண்ட்ஸ்கிட்ட பேசிக்கிட்டிருக்கேன். அரை மணி நேரம்தான் அப்புறம் கிளம்பிடலாம். சரியா துரை? ” என்றான்.
“டேக் யுவர் ஓன் டைம் ராஜன் சார்.” என்றார்.
ராஜன் உள்ளே நுழைந்ததும் பலர் அவனை அழைத்து சிரித்து பேசியது வெகு தூரத்தில் நின்றிருந்த ஸ்ரீக்கு கேட்டது. அந்த தேவாலயத்தில் வெள்ளை நிற ஆடையில் ஜொலித்த புதுமனத்தம்பதிகளை ரசித்தாள் ஸ்ரீ. மனமக்கள் போதகருக்கு அருகே நின்று கொண்டிருந்தனர். வேதத்தை மாற்றி ஒருவரை ஒருவர் பிரியாதிருக்க கடவுள் முன்னே சாட்சியங்களோடு சத்தியம் செய்ய காத்திருந்தனர். ஆனால் அவளை மிகவும் வசீகரித்தது அந்த தேவாலயத்தின் நறுமணம். திரும்பிய இடமெல்லாம் பச்சை நிறக்களிமண்ணில் சொருகி வைக்கப்பட்டிருந்த உயர் ரக ரோஜாக்கள் அவளை வசீகரித்தது. ஒன்றை எடுத்து பார்ப்போமா? என்று பரபரத்த கைகளை அடக்கினாள். வாசம் தரும் மலருக்குத்தான் என்றுமே மவுசு. கனகாம்பரத்தை யார் ரசிக்கப் போகிறார்கள்?
‘இந்த ரோஜாவுக்கும் மல்லிகைக்கும் தானே என்றுமே மவுசு இருக்கும். இன்னும் பத்து வருடத்தில் கனகாம்பரம் என்னும் பூவே யாருக்காவது நினைவில்கூட இருக்குமோ என்னவோ.. ’ என்று மனதில் கனகாம்பரத்திற்காக வருந்தினாள். அப்போது காலையில் செய்தித்தாளில் படித்த செய்தி ஞாபகத்தில் வந்தது. அந்த செய்தி அவளிடம் கேட்டது “மொட்டுக்களே மறுநாள் விடியலை பார்க்க முடியவில்லை கனகாம்பரம் பத்து வருடத்தில் அழிவது ஒரு விஷயமா? ”
செய்தத்தாளில் வந்த செய்தி என்னவென்றால், கதுவா என்னும் ஊரில் ஆசிஃபா என்னும் எட்டு வயது நாடோடி இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் சிறுமி இந்துக்கோயிலில் வைத்து வதைத்து கொலை. மேலும் அந்தத் செய்தித்தாளில் சம்பவத்தைப்பற்றி அவளது தந்தை சொல்கிறார் , “நாங்கள் அனைத்து இடத்திலும் தேடினோம். கோயிலில் மட்டும் தேடவில்லை. அது புனித ஸ்தலம். அங்கே தீயது எதுவும் நடக்காது என்று எண்ணினோம். ” என்று!
அந்த செய்திக்கு கீழே மனிதா நீ மனிதனா? என்று கொட்டை எழுத்தில் போட்டிருந்தார்கள்.
ஸ்ரீயின் மனது வலித்தது. தன்னையறியாமல் மண்டியிட்டு இறைவனிடம் வேண்டினாள், ‘ஆசிஃபாவை உம் மடியில் வைத்துக்கொள்ளும் ஆண்டவரே!’ என்று.
ராஜன் இரண்டு மணி நேரம் கழித்து வந்தபோதும் ஸ்ரீக்கு அது குறையாகத் தெரியவில்லை. அவள் ஏசுபிரானிடம் வேண்டியதைப்போல அல்லாவிடமும் பெரிய கருப்பனிடமும் வேண்டுவதற்கு நிறைய நேரம் அவளுக்கு கிடைத்தது. மனம் ஒருவாறு நிம்மதியடைந்து அமைதியானது. ராஜன் எப்போதும் போல் துரைக்கு கிளம்புமாறு பச்சை சிக்னல் காட்டிவிட்டு வண்டியைக் கிளப்பினான்.
பைக்கில் ஏறி உட்கார்ந்தவள் ராஜன் திடீரென்று வண்டியைக் கிளப்பியதால் ராஜன் முதுகின் மேல் மோதிக் கொண்டாள். மோதிய வேகத்தில் மீண்டும் நேராக உட்கார்ந்தவள் காதினில் , அவளிடம் காலையில் திட்டு வாங்கிய அதே சயித்தான் மனது ஏதோ ஒரு ரகசியம் ஓதியது.
இரண்டு சிக்னல் கடந்திருக்கும். ராஜன் இடதுபுறம் திரும்பியபோது நேராக வந்த ஆக்டிவா வண்டிக்காரன் ராஜன் பைக்கை இடிக்காமல் பிரேக்போட்டு நிறுத்திவிட்டான். ஸ்ரீயின் காலில் லேசாக ஒரு இடி மட்டுமே.
அந்த ஆக்டிவாகாரன் கிளம்பியபிறகு ஸ்ரீ சொன்னாள் “வருதுங்க பாரு. கண்ணை பிடரியில் வைச்சிக்கிட்டு. மேலே விழுந்து இடிக்கிறதுக்குன்னே வருதுங்க. அல்ப்பக் கேஸ். ”
ராஜனுக்கு ஒரு சந்தேகம் ‘பைக் ஸ்டார்ட் பண்ணும்போது மோதியதால் நம்மைச் சொல்றாளா? இல்லை ஆக்டிவாகாரனைச் சொல்றாளா? ’ என்று.
ஜுமான்ஜியின் ஆட்டம் ஆரம்பம் ஆனது. ஆரம்பித்தது ஆக்டிவாகாரன் ரூபத்தில் வந்த ராகு.
மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். அங்கே லிஃப்டில் முந்தியடித்துக்கொண்டு ஏறிய கூட்டத்தோடு இவர்களையும் அவசரப்படுத்தி ஏற்றினார் ஹோட்டல் ஊழியர் ஒருவர். ஒருவன் ஸ்ரீயின் காலை மதித்து விட்டான். லேசாகத்தான். ஆனால் மிதித்து விட்டானே.. கேதுவுக்கு இது போதாதா?
ஜுமான்ஜியின் ஆட்டம் கேதுவால் சூடுபிடித்தது.
லிஃப்டை விட்டு வெளியே வந்ததும் ஸ்ரீ சொன்னாள் “மேலே விழுறதைப் பார். கல்யாணம் செய்ய வேண்டியதுதானே? காலை உரசுறதும் , பார்க்கிறதும்.. ச்ச ச்ச! நீட்டா டிரஸ் மட்டும் போடுறானுங்க.. ”
ராஜன் ஸ்ரீயைப்பார்த்தான் ஸ்ரீ வாயை மூடிக்கொண்டாள். இப்போது ராஜனுக்கு தெளிவாகப் புரிந்தது. ஸ்ரீ லிஃப்டில் காலை மிதித்தவனைப் பற்றி பேசவில்லை நேற்று அவளது கால்களைப் பார்த்த ராஜனைப் பற்றி பேசுகிறாள் என்று.
ஜுமான்ஜியின் ஆட்டத்தில் சிங்கம் புலி ராட்சத மேமோத்கள்
வருவதுபோல ராஜனும் ஸ்ரீயும் கடையிலிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தபோது அவை அனைத்தும் ராஜன் வீட்டிற்குள் அவன் கேள்விகள் மூலமாக வந்தன.
ஸ்ரீ வீட்டிற்குள் இரண்டு அடி எடுத்து வைத்ததும் ராஜன் கேட்டான் “ஸ்ரீ நீ லிஃப்டில் யாரைத்திட்டின? ”
“என் கால்களை ஒரு பன்னாடை மிதிச்சிட்டான். அவனைத் திட்டுனேன். அவன் மிதிச்சதும் இல்லாமல் உரசப்பார்த்தான் நான் என் கால்களை நகர்த்திட்டதால் அவன் உரசல. இல்லாட்டி உரசியிருப்பான். ”
“ஓ! அப்புறம் எதுக்கு அவனை கல்யாணம் செய்யச் சொல்லி அட்வைஸ் செய்த? அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னு உனக்கு எப்படித் தெரியும்? ”
“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். இதிலே என்ன இருக்கு. ”
“இல்லை. நீ என்னைச் சொன்ன! ”
“இல்லவே இல்லை. நான் எதுக்கு உன்னைச் சொல்லணும்? நீ என்ன பண்ண?” என்று நேராக அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.
‘நான் உன் கால்களை பார்த்து ரசித்தேன்.’ என்ற உண்மையை திருடனே ஒத்துக் கொள்ள மாட்டான் போலிஸ்காரன் ஒத்துக்குவானா?
நூற்றில் ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லாமல் இருந்ததால் நம்பிக்கையாகவே ஸ்ரீ அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள். அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.
பாவம் எலி வேட்டை தெரியாத பூனைக்குட்டி. குறுக்கு விசாரணை என்பது ஒன்று உண்டு என்றே அறியாத பூனைக் குட்டிதான் ஸ்ரீ. எப்படிக் குறுக்க வேண்டுமோ அப்படிக் குறுக்கி விசாரிக்கும் காவல் துறையைப் பற்றி தெரியாதுபோன பூனைக் குட்டி.
“அதைத்தான் நான் கேட்குறேன் ஸ்ரீ. நான் என்ன பண்னேன்?” என்று தனது விசாரணையை தொடங்கியபடி ராஜன் கேட்க
“இல்லை. நீ அப்படிக் கேட்கலை. நான் உன்னை வைதேன் என்றுதான் சொன்ன! ” என்றாள் விடையாக ஸ்ரீ.
“ஆமா. அப்படிதான் சொன்னேன். நீ என்னைத்தான் திட்டின. அதைத்தான் ஏன் என்று கேட்டேன். ” என்று தனது கொடுக்கு கொண்டு உணவைத் தேடும் நண்டைப் போல ராஜன் அவனது கேள்விக்கு பதிலைக் கேட்டான்.
“நேத்து நடந்த விஷயத்துக்கு இன்றைக்கு யார் திட்டுவாங்க? அவனுங்க மேலதான் கோபம். உன்னைச் சொல்லணும் என்றே நினைக்கலை.”
ராஜன் விஷயத்தை வாங்கிவிட்ட திருப்தியில் சாவதானமாக அவன் உட்கார்ந்திருந்த சோபாவில் சாய்ந்து அவளைப் பார்க்கவும் ஸ்ரீக்கு முதலில் ஒன்றுமே விளங்கவில்லை. ராஜன் புருவங்களை உயர்த்திக் காட்டவும் தான் புரிந்தது. ஆப்பில் சிக்கிக்கொண்ட உணர்வு இருந்தாலும் முகத்தில் ஒன்றுமே காட்டிக்கொள்ளவில்லை அவள்.
“ம். சொல்லி முடி. நேற்று நான் என்ன பண்னேன்? ”
“ஒண்ணும் பண்ணல. நான் ஸ்நேகாவைப் பார்க்க போறேன். ” என்று கூறிவிட்டு நகர்ந்தவளிடம்.
“நில்லு ஸ்ரீ. உனக்கு மனசுல பெரிய கிளியோபட்ரா என்ற நினைப்பா? நச்சுன்னு இருந்தா நாலு பேர் பார்க்கத்தான் செய்வான். என்கிட்ட ஜாடை பேசுறது இதுதான் கடைசி. இதற்கப்புறம் பேசின..”
“என்னது நாலு பேர் பார்ப்பானா? கண்ணைத் தோண்டிடுவேன். உன் பொண்டாட்டியையும் பார்ப்பான். நல்லா பாருடான்னு அவன் முன்னால போய் நிறுத்து.” என்று ஸ்ரீ சொல்லி முடிக்கும்முன் ராஜன் தனது அறைக்குச் சென்று கதவை தாளிட்டான்.
இரவில் ராஜன் சாப்பிடக்சுட கூப்பிடவில்லை. பார்சலை வாங்கி டைனிங் டேபிளில் வைத்ததோடு சரி. மறுநாள் அவள்
முன்பாகவே மசூத்திற்கு கால் செய்து நாளை வந்து அழைத்துக்கொண்டு போகச்சொன்னான். அவன் மசூத்திடம் பேசியதை ஸ்ரீ தெரிந்து கொண்டாள் என்பதை உறுதி செய்துவிட்டு ராஜன் அவளிடம் பேசினான், “ஸ்ரீ நாளை மசூத் வந்த பிறகு அவனுடன் நீ போகலாம். ஆனால் மசூத்கிட்டதான் இருக்கணும். நான் கூப்பிட்டால் நீ அவசியம் வரணும். கௌன்சிலர் இந்த கேஸை எப்படி கொண்டு போவான் என்று தெரியல. ஆனால் என் வேலைக்கு பிரச்சனை வந்தால் நீ உடனே வந்திடணும். பயப்படாதே. டி.ஐ.ஜி சப்போர்ட் நமக்கு இருக்கும்வரை பிரச்சனையில்லை. திலிப்பும் நமக்கு ஹெல்ப் பண்ணுவான். ”
ராஜன் உனக்கு என்ற வார்த்தையை உபயோகிக்காமல் நமக்கு என்ற வார்த்தையை உபயோகித்ததால் ஸ்ரீக்கு தொண்டைக்குள் ஏதோ அடைத்தது. சிறு பிள்ளைத்தனமாக ராஜனிடம் ஜாடைபேசினது அவளுக்கே பிடிக்கவில்லை. நல்லவேளை நாம அத்துமீறி பேசியபோது அவன் உள்ளே போயிட்டான் என்று நினைத்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அப்போதுதான் ராஜன் இன்னும் அவளுடன் பேசிக் கொண்டிருந்தது அவளது புத்தியில் எட்டியது. அவன் பேச்சைக் கவனித்தாள்.
“என் செல் நம்பர் குறிச்சி வச்சிக்கோ. எதுவும் தேவைப்பட்டால் கூப்பிடு.” என்று ராஜன் முடித்தபோது ஸ்ரீ அவன் கைகளை கொத்தாகப் பற்றி, “ராஜன் ரொம்ப தாங்கஸ்.. நேத்து பேசினதுக்கு ரொம்ப ரொம்ப சாரி. உனக்கு ஏதும் தொல்லை கொடுத்திருந்தா ரொம்ப சாரி ராஜன். என் நிலைமை அப்படி. நீ பவித்ராவுக்காக எனக்கு ஹெல்ப் பண்ண.. என்னால் உனக்கு தொல்லைதான் அதிகமாச்சு. எவ்வளவோ உதவி செய்திருக்க. ஆனால் நான் எதற்குமே ஒரு தாங்க்ஸ் சொல்லலை. ” என்றபோது ராஜன் கொஞ்சம் தான் மசிந்தான்.
“ராஜன் நீ எவ்வளவு டீசன்ட்டாக நடந்துகிட்ட? எவ்வளவு நாள் என்னை இங்க வைத்து பார்த்துகிட்ட! பெட்ரூமிற்குள்கூட வரமாட்ட.. உன்னை நான் தப்பாவே நினைச்சிருக்க கூடாது.. ” என்று அவள் சொன்னபோது ராஜன் முகம் இறுகுவதைப் பார்த்ததும் ‘ஐய்யையோ.. டிராக்கை மாத்தணும்போல’ என்று மனதில் நினைத்தவள் அவ்வாறே செய்தாள்.
“ச்ச! எனக்கு அறிவே இல்லை. உன்னை தப்பா நினைச்சதற்கே என்னை சோட்டால அடிச்சுக்கணும். உன் ரேங்க் என்ன? உன் கிரேட் என்ன? இன்னும் ஒரு வருஷத்தில் இல்லை ஆறு மாசத்தில் இன்ஸ்பக்டர் ஆகப்போற.. உன்னைப் போய் தப்பா நினைச்சதுக்கு பிய்ந்துபோன ஜோட்டால என்னை அடிச்சிக்கணும். ”
ராஜன் முகம் மலர மலர ஸ்ரீ தனது வேலை முடியப்போவதை அறிந்தாள். “ராஜன் சாரி.. என்ன சொல்ற? ஓகேதான? சாரி ப்ளீஸ்.. ” என்று ஸ்ரீ பேசி முடிக்கும் முன் ராஜன் சிரித்துக்கொண்டே..
“ம்.. ஓகே. அப்ப டிக்கெட் கான்செல் செய்திடவா? உன்மேலதான் என் கோபம் போயிடுச்சே? ” என்று இல்லாத காதின் துளையை ராஜன் கண்ணாடியில் பார்ப்பதுபோல் கண்ணாடி முன்பாக வேடிக்கை செய்துகொண்டே கேட்டான்.
பற்ற வைத்த சங்குச்சக்கரம் நம்மை நோக்கி வந்தால் எப்படியிருக்கும்? அப்படியிருந்தது ஸ்ரீக்கு!
ராஜன் தன் கட்டுப்பாட்டை இனி இழக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்யணுமோ அதைத்தான் செய்தான். இரவில் இரண்டு மணிநேரம் யோசித்து அவன் கண்டுகொண்டது என்ன வென்றால் ‘பஞ்சும் நெருப்பும் அவரவர் இடத்தில் இருப்பதுவே நல்லது. இதனைத் தெரிந்துதான் யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்று பாட்டுகூட கவிஞர் எழுதியிருக்கிறார்.’ என்பதுதான்.
கால்களைப் பார்க்க ஆசைப்பட்டதுபோல் வேறெதுவும் பார்க்க நமக்கு ஆசை வந்திடுமோ என்று உள்ளுக்குள் பயந்தான். அதனால் அவன் மசூத்திடம் ஸ்ரீயை சில நிபந்தனைகளுடன் அனுப்ப முடிவு செய்தான். அவனது கேலியை உண்மை என்று நினைத்து பேயடித்ததுபோல் நின்றிருந்த ஸ்ரீயைப் பார்க்கும்போது ராஜனுக்கு இன்னும் வம்பிழுக்கலாம் என்றுகூடத் தோன்றியது.
ஸ்ரீயின் முகத்தைப் பார்த்தே ராஜன் அவள் மனநிலையை புரிந்து கொண்டவன் கொஞ்சம் இரக்கம் கொண்டான்.
“அதான் ஐஸ் வைக்கும்போது கம்மியா வைக்கணும் என்று சொல்றது.. ” என்றான் ராஜன் அவள் முகத்தைப் பார்த்து. ஸ்ரீ அசடாக வழிய.. ராஜன் அவள் நெஞ்சில் பாலை வார்த்தான்.
“சும்மா சொன்னேன் ஸ்ரீ. மசூத் நாளை வந்திடுவான்.” என்று கூறும் போதே அவன் பேச்சை அவனது கைபேசி நிறுத்தியது.
Comments are closed here.