Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal episode 31 to 33

தனது சன்னல்களை கொசுவுக்கு பயந்து மூடிய ஸ்ரீ ராஜன் உள்ளே நுழைந்ததும் அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.

உள்ளே வா என்று அவளும் கூப்பிடவில்லை. வரவா? என்று அவனும் கேட்கவில்லை.

ஆனால் இந்த அனுமதியும் கேள்வியும் கேட்கப்படாமலே அங்கே நிகழ்வுகள் நடந்தன.

அவள் கட்டிலின் எதிர்புறம் இருந்த நாற்காலியில் ராஜன் உட்காரவும் ஸ்ரீ அவன் எதிரே கட்டிலில் உட்கார்ந்தாள்.

உன் கட்டிலை வித்தாச்சா? என்று முன்பு அவன் கேட்டதை அவள் ஞாபகப்படுத்திக்கொள்ளவில்லை.

ராகுவும் கேதுவும் உறங்குகிறார்கள் போல!

“ஸ்ரீ ஏதோ கேட்டியே? ” என்று ஆரம்பித்தான் ராஜன்.

“இல்லை ரொம்ப சோர்வா இருந்தியா.. அதான் வேலை அதிகமான்னு கேட்டேன்.” என்று அவள் சொன்னபோது, “அழகர்கோவிலில் ஒரு தெஃப்ட் கேஸ். அங்கவரை டூவீலரில் போனேனா அதான் ரொம்ப டயர்டா ஆகிடுச்சு. நான் வரும்போது நீ இங்க இல்லையே? எங்க போன? ”

“நான் ஸ்நேகாகூட பேசிக்கிட்டிருந்தேன். நீயும் வரல்லைய தூங்கவும் முடியல. அதான் கொஞ்ச நேரம் பேசிக் கிட்டுயிருந்தேன். ”

ஆனால் விட்டகுறை தொட்டகுறை என்பார்களே அதுபோல ஸ்ரீக்கு ‘ராகு அவர்கள்’ அந்த வகை உறவுபோல. மோகினிப் பிசாசாய், விக்கரமாதித்தன் வேதாளமாய் அவளை துரத்த அவர்கள் விழித்துக்கொண்டார்கள் போல. அவளுக்கு ராஜனை சீண்டத்தோன்றியது.

“ராஜன் அன்றைக்கு எங்கேயோ கிளம்பிட்டு நீ காலையில்தான் வருவேன்னு சொன்ன.. ஆனா சீக்கிரம் வந்துட்டியே ஏன்? ”

“என்றைக்கு?”

அதான் ராஜன் என் கால்களைப் பார்த்தப்ப! என்பதை மறைமுகமாய், “அதான் ராஜன் நான் ஏட்டையாவின் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தப்ப! ” என்றாள்.

சீண்டலா? கிண்டலா? என்று ஆராய்ச்சியில் இறங்காமல் போலிஸ்காரன் உஷார் ஆனான். அவளுக்கு மற்றொரு கேள்விக்கான நேரத்தை ராஜன் அவளுக்குத் தரவில்லை.

“நானும் கேட்கணும் என்று நினைச்சேன். நீ ஏன் அன்றைக்கு தண்ணீர் எடுத்திட்டு வர லேட் பண்ண? எவ்வளவு நேரம் கதவைத் திறந்து வைத்திருந்தேன் தெரியுமா? அரை மணிநேரம் ஆன பிறகுதான் கதவை மூடினேன். ”

அதனால் வந்த நன்மை கூட்டல் தீமை வினைதானே அவள் கால்களை ராஜன் பார்த்தது? இதனை அறிந்த ஸ்ரீ ஏதோ சப்பைப்கட்டு கட்டும் விதமாக “ஞாபகமில்லையே!” என்று ஒரு பதிலைத் தந்தாள்.

ஆனால் ராஜன் விடவில்லையே..
“என்ன ஸ்ரீ கண்ணாடி போட்டவன் உன்கிட்ட ரொம்ப அசடு வழிகிறதா ஏட்டையா என்னிடம் புலம்பினார்? உண்மையா? ”

ஆமாம் உன்னைப் போலதான் அவனும் அன்றைக்கு அசடு விழிந்தான் என்று சொல்லிட அவளுக்கும் சின்ன சின்ன ஆசை தான்.. ஆனால் அவனிடம் சுமூக உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அரை மணி நேரத்திற்கு முன்பாக ஸ்ரீ ஒரு முடிவு செய்திருந்ததால் மனதில் நினைத்ததைச் சொல்லாமல் அவனிடம் சொன்னாள் “எனக்கும் இன்னைக்கு ஒரே டயர்ட் தெரியுமா ராஜன்? ”

ராஜன் சிரிக்கத்தான் போகிறான் என்று உணர்ந்த ஸ்ரீ அவன் சிரிக்கும் முன் சிரிப்பை நிறுத்திவிட வேண்டும் என்பதால் அவசரமாகச் சொன்னாள் “சிரிக்காதே ராஜன். நிஜமாகத்தான் சொல்றேன். அந்த சன்னல் பக்கமாக நின்னு வேடிக்கை பார்த்தேனா அதான் ஒரே கால் வலி. ”

இருவர் கேட்ட கேள்விக்கும் சரியான விடை வராதபோதும் இருவரும் சமாதானப் புறாவை கைகளில் வைத்திருக்க விரும்பியதால் விடையை இருவருமே வற்புறுத்திப் பெறவில்லை.

தன்னை உண்மையாகவே கௌன்சிலர் பிடியிலிருந்து தப்ப வைக்கத்தான் ராஜன் முயற்சி செய்கிறான் என்பதை ஸ்ரீ மனதார நம்பினாள்.

தனது கோபத்தல் ஸ்ரீயை பயமுறித்தி அவள் நம்பிக்கையை இழந்தபிறகும் சஸ்பன்ஷனில் இருந்து தன்னை காப்பாற்றியதால் ராஜன் அவளுக்கு அவன் உதவிகளை நன்றி என்று வார்த்தைகளில் சொல்லாமல் செய்கையில் காட்டினான்.

அவள் பிரச்சனைகளை தன்னால் பின்னுக்குத் தள்ள முடியும் என்பதை எள் அளவும் சந்தேகமில்லமல் நம்பினான்.

பவித்ராவிற்கு செய்து கொடுத்த சத்தியம் தான் முதல் காரணமாக இருந்தாலும் அதன்பிறகு நடந்த சம்பவங்கள் தான் அவளை தப்பிக்க அவன் எடுத்த முயற்சிகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டது.

அவள் சொல்வதை நிஜமாகவே நம்புவதுபோல் தனது கேள்வி இருக்க வேண்டும் என்று எண்ணிய ராஜன் இப்போது அவளிடம் கேட்டான் “எவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்த? ”

“நாலு மணி நேரம் ராஜன். அந்த சின்ன பையன் நாலு மணி நேரமும் உட்காரவேயில்லை. ஜெராக்ஸ் எடுத்திட்டே இருந்தான். ஆமாம் ராஜன் ஒரு நாளுக்கு அவன் எவ்வளவு சம்பாதிப்பான்?
ஸ்ரீ தீவிரமாகக் கேட்கவும் ராஜனும் கேலியை விட்டுவிட்டு அக்கரையுடன் பதில் தந்தான்

“சம்பாதிப்பான் ஸ்ரீ. ஒரு இரண்டாயிரம் நிச்சயம் கிடைக்கும். காலேஜ் ஸ்கூல் ஆர்டர் கிடைத்தால் நிரைய கிடைக்கும். எதுக்கு கேட்ட? ”

“இல்லை சும்மாதான் கேட்டேன். ”

“ஸ்ரீ மசூத்கிட்டயிருந்து பத்து மிஸ்ட்டு கால். வேலை முடிந்த பிறகுதான் நான் திரும்ப அவனைக் கூப்பிட்டேன். வீட்டுக்குப் போனதும் உன்கிட்ட செல்ஃபோன் கொடுக்கச் சொன்னான். உன்னிடம் ஏதோ பேசணுமாம். மணி பதினொன்றாச்சு. காலையில் பேசுறியா அவனிடம்? ”

“ம். சரி ராஜன். ”

“ஸ்ரீ உன்கிட்ட கேட்கணும் என்று நினைச்சேன். நீ நம்ம பள்ளியில் யாருடைய பேட்ஜ்? ”

“திவாகர் மதனா தெரியுமா? நல்லா படிப்பாங்களே? மதனா நம்ம ஸ்கூல் ஃபர்டஸ்ட் ராஜன். அவுங்க பேட்ஜ்தான் நான். ”

“ஓ! இரண்டு வருஷம் முந்தின பேட்ஜா? சரி சரி. நீ என்ன டிகிரி படிச்ச? ”

“ஆர்ட்ஸ் டிகிரி முடிச்சேன். உன் அம்மா அப்பா எங்கே? ”

“அம்மா தவறிட்டாங்க. அப்பா மட்டும் எங்க சொந்த ஊர் கரூரில் இருக்கார். கூடப் பிறந்தவங்க ஒரே ஒரு அக்காதான். அத்தானும் போலிஸ்தான். டெல்லி போலிஸ். அவுங்க குடும்பத்தோட டெல்லியில் இருக்காங்க.

நான் போஸ்டிங்காக இங்க இருக்கேன். ஆமாம் மசூத் உன்னை கல்யாணம் செய்யப் போறதா நீ ஹாஸ்பிட்டலில் இருந்தப்ப சொன்னான். அப்படியா? ”

“அவன் ரொம்ப நாளா என் பின்னாடியே சுத்திட்டு இருந்தான். என்னால் கல்யாணம் குடும்பம் என்றெல்லாம் செட்டில் ஆக முடியாது. ”

“ஏன்? அவனுக்கு என்ன குறைச்சல்?

“அவனுக்கு எதுவும் குறையே இல்லையே அதுதானே பிரச்சனை. ராஜன் பவித்ரா பத்தி உனக்கு தெரியாதுல்ல? அவளை யாருமே திருப்தி படுத்த முடியாது. எந்த விஷயத்திலும் திருப்தி படுத்தவே முடியாது. ஹேம்நாத் பற்றி தெரியும்ல்ல? அவன் பவித்ரா பின்னாடியே அலைந்தான். ஆனால் அவள் அவனை ஏத்துக்கல்ல. நான்கூட அவளிடம் சண்டை போட்டேன். அவனைக் கட்டிக்கோ பவின்னு கெஞ்சினேன். ஆனா பவித்ரா அசைந்தே கொடுக்கல்ல. சரி எக்கேடும் கெட்டு போகட்டும் என்று விட்டுட்டேன். எண்ணி மூன்றே மாசத்தில் மஞ்சுன்னு ஒரு பொண்ணுகூட சுத்த ஆரம்பிச்சிட்டான் ஹேம்நாத்.
இந்த விஷயத்தில் மட்டும் இல்லை ஒரு சேலை எடுக்கணும்ன்னாகூட பத்து முறை யோசிப்பா. நாலு கடையில் விலை விசாரிப்பா. கோயிலுக்குப் போனா அம்பாள் பாட்டு பாடி அம்மனை தலையில் வச்சி கொண்டாடுவா. ஆனால் வீட்டில் வைத்து விளக்கு கூட ஏற்ற மாட்டா. சில நேரம் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போலாமா என்றுகூட நான் நினைத்தது உண்டு. அவளால் ஒரு முடிவை சட்டுன்னு எடுக்க முடியாது. ஏன்னு
தெரியுமா? பயம். வாழ்க்கையில் எல்லாமே தப்புத் தப்பா நடக்கும்போது பயம் வரும் ராஜன். உனக்குப் புரியாது. நல்ல அம்மா நல்ல அப்பா, நல்ல பணம் இருப்பவங்களுக்கு இந்த பயம்பற்றியே தெரிய வாய்பில்லை. பவித்ரா இதிலிருந்து தப்பிக்க எவ்வளவோ முயற்சி செய்தா. ஆனால் நிரந்தர விடுதலையே கிடைச்சிருச்சு. இப்ப எனக்கும் அந்த பயம் வந்திருக்கு ராஜன். இந்த பயம் போகணும்இ அப்புறம்தான் நான் கல்யாணத்தைப் பற்றி யோசிக்க முடியும். மசூத்கிட்ட அதனால்தான் ஒரு வருஷம் டைம் கேட்டிருக்கேன். அவன் அவசரப்படுத்தினால் நான் என்ன பண்ணட்டும்?
“வாழ்க்கையில் வாய்ப்பு ஒரு தடவைதான் கிடைக்கும் ஸ்ரீ அதை தவர விட்டுடாதே. சீக்கிரம் குழந்தை குட்டின்னு செட்டில் ஆகிடு. ”

ஸ்ரீ சிரித்தாள். ராஜனுக்கு ஏன்டா அறிவுரை சொன்னோம் என்றானது. இடத்தைவிட்டு எழ நினைத்து லேசாக எழப்போனபோது ஸ்ரீ அவனைத் கைகளால் சைகையில் தடுத்தாள்இ “எங்க ஓடுற? என் வாயைப் புடுங்கினல்ல? நீ இப்ப சொல்லு! நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க? நீ ஏன் இன்னும் குழந்தை குட்டின்னு செட்டில் ஆகாமல் இருக்க? ”

“தோணலை. அதனால்தான். ”

“நான் என்ன ஒரு வார்த்தையிலா பதில் சொன்னேன்? ”

“என்ன சொல்லச் சொல்ற? இதிலே ரகசியம் எல்லாம் ஒண்ணுமே இல்லை. அம்மா இருந்திருந்தா எனக்கு எப்பவோ கல்யாணத்தைப் பண்ணி வச்சி இ இப்ப இரண்டு குழந்தைக்கு அப்பாவாக ஆக்கியிருப்பாங்க. அம்மா இறந்ததை மறக்கவே ஒரு வருஷம் ஆனது எங்களுக்கு. அப்போ நான் டிரைனிங்கில் இருந்தேன். இப்ப என்னடான்னா மாப்பிள்ளை போலிஸ் என்றதும் ‘ எங்கவீட்டில் பொண்னே இல்லையே. இருந்திருந்தா உன் பையனுக்கு கொடுக்காமல் யாருக்கு கொடுப்பேன்? ’ என்று பீலா தான் உடுறானுங்க. எங்க அப்பா என்ன செய்வார்? ஆனால் எப்படியாவது ஒரு மூன்று மாசத்தில் பொண்னை பார்த்து முடிவு செய்திடுவாங்க. சரி நேரமாச்சு தூங்கப் போவா? ” என்றதும் ஸ்ரீ “ம்.. ம் ” என்று இரு வார்த்தையில் குட் நைட் சொன்னாள்.

ஆனால் போகும் முன் அவளிடம் ஸ்ரீ உனக்கு காலையில் பொழுதுபோகலைன்னா நான் நிறைய டி.வி.டி வச்சிருக்கேன். அதைப் பாரு என்றான்.

 

மறுநாள்

மறுநாள் வீடு வந்ததும் படம் பார்த்தியா என்று மறக்காமல் கேட்கவும் செய்தான். ஸ்ரீ இல்லை என்றதும் ஏன் என்ற விசாரிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் உடனே உடை மாற்றிவிட்டு வந்தவன் தனது டி.வி.டி சேமிப்பில் இருந்த நல்ல ஆங்கிலப் படம் ஒன்றை எடுத்து ஓடவிட்டான்.

ஸ்ரீ மட்டும் தான் படத்தைப் பார்த்தாள். ராஜன் அவனது அறையில் ஏதோ ஃபைலைக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான்.

ராஜன் இடையில் தண்ணீர் குடிக்க வெளியே வந்தபோது இருவரும் சம்பிரதாயமாகச் சிரித்துக் கொண்டார்கள். படத்தின் பெயர் அடிக்டெட் டு லவ். முதலில் படம் புரியாதபோதும் காட்சிகள் நகர நகர படத்தில் மூழ்கியேவிட்டாள் ஸ்ரீ.

ஒரு காட்சியில் ஸ்ரீ சிரிப்பை அடக்க முடியாமல் சோபாவில் புரளவும் ராஜன் தனது அறையின் வாசலில் நின்று அவளை வேடிக்கை பார்த்தான்.

அவளும் அவனைப் பார்த்தாள். அவள் பார்த்ததும் அவனும் படக்காட்சியைப் பார்த்து சிரித்தான். வேடிக்கை காட்டிய தொலைக்காட்சி மனிதர்கள் திடீரென்று ஆங்கிலக் காதலில் லயிக்க ஆரம்பித்தனர்.

அடுத்த மூன்று நிமிடங்களில் ஃபிரன்ச் காதலில் மிதந்தனர்.
இவன் எதுக்கு இங்க நிற்கிறான்? அடுத்து இந்த சீன்தான் என்று தெரிந்தே வந்திருப்பானோ? என்று அவள் மனதில் சந்தேகம் எழுந்தபோது ஸ்ரீ தானாக வேறு சானல் மாற்றினாள்.

 

ராஜன் அடுக்களைக்குள் நுழைந்து தண்ணீர் குடித்துவிட்டு அவளுடன் சோபாவில் வந்து உட்கார்ந்தான்.

இருவரும் பத்து நிமிடங்கள் வேறு சானலைச் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் அந்த படத்தைப் பார்க்க ஆரம்பித்தனர். காதல் காட்சிகள் முடிந்து மீண்டும் நகைச்சுவையாக படம் நகர்ந்தது.

ஆனால் ஸ்ரீயின் சந்தேகம் மட்டும் நகரவேயில்லை.

ராஜன் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான் இ “ஸ்ரீ இந்தப் படத்தை இப்ப தான் பார்க்குறேன். நல்லாயிருக்குல? நான் டாம் குருஸ் ஜேம்ஸ் கேமரான் இப்படி சில பேர் படம் மட்டும்தான் முழுசா பார்ப்பேன். மற்றதை ஓட விட்டு ஒட விட்டு படத்தைப் பார்த்து முடிச்சிடுவேன். இங்கிலிஷ் படம் தான் கிலாஸா இருக்கும். படம் நல்லா இருக்கு என்று ஆனந்த விகிடனில் விமர்சனம் வந்தால் மட்டும்தான் தமிழ்ப்படமே தியேட்டருக்குப் போய் பார்ப்பேன்.”

“நான் படமே பார்க்கமாட்டேன். என்னமோ பார்க்கவே பிடிப்பதில்லை. இஷ்டமும் கிடையாது. பவித்ராதான் காதலுக்கு மரியாதை டி.வி.டி சிக்கித்திணறி குப்பைக்கு போகும் வரை பார்ப்பாள். அப்புறம் வாலிஇ ஜில்லென்று ஒரு காதல் இ இப்படி அவ வச்சிருக்கும் டி.வி.டி லிஸ்ட் ரொம்ப நீளம். கே. டிவியில் குணா படம் போட்டால் இங்கிட்டு அங்கிட்டு அசையாமல் பார்ப்பா. அந்த படத்தின் கடைசி கிளைமாக்ஸ் பார்த்தேன். ஒத்துக்க முடியல. அந்தப் படத்தின் காதலை லாஜிக்கை சுத்தமா ஒத்துக்க முடியல. அப்படி யாரும் இருப்பாங்களா நிஜவாழ்க்கையில்? ம்?”

“எனக்கும் புரியலை. ஒருத்தர் மீது ஒருத்தர் இப்படி பைத்தியமா இருக்க முடியுமா? தெரியலை ஸ்ரீ. அந்தப் படத்தின் காதல் எனக்கு சுத்தமா புரியலை. படத்தை இரண்டு தடவை பார்த்திட்டேன். ஆனால் புரியலை. ”

“உனக்குப் புரியிறது கொஞ்சம் கஷ்டம்தான் ராஜன் அதான் டைரக்டர் பாட்டிலேயே சொல்லிட்டார்ல்ல? மனிதர் உணர்ந்து கொள்ளும் மனிதக் காதல் இல்லை இது. அதையும் தாண்டி புனிதமானது. என்று. ”

“ஆமாம் ” என்று ஒத்துப்போகப் போனவன் சட்டென்று அவள் முகம் நோக்கி நிமிர்ந்துஇ

“ஏய் ஸ்ரீஇ நீ என்னை மனுஷனா நினைக்கலைன்னு இப்ப சொன்ன.. இல்லை இல்லை நான் மனுஷன் இல்லைன்னுதான சொன்ன? ”

அவள் சிரிக்காமல்தான் சொன்னாள். ஆனால் ராஜனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

வேறேதோ ஒன்று செய்யத்தோன்றியது அவனுக்கு. அது என்னவென்றுதான் தெரியவில்லை.

தனது கன்னங்களை தேய்த்துக் கொண்டான். காது மடல்களை மெல்ல அழுத்திவிட்டுக்கொண்டான். உள்ளங் கைகளை உரசி உஷ்ணம் பரப்பிக் கொண்டான்.

ஆனால் இவை எதுவுமே அவனுக்குப் போதவில்லை. குளியலறைக்குச் சென்று முகத்தில் தண்ணீரை அடித்தால் நல்லாயிருக்குமோ? என்று தன்னிடம் கேட்டான். ஆனால் இந்த இடத்தைவிட்டு எழ மனமில்லை. ஏதோ ரிசர்வ் செய்யாத ரயிலில் கஷ்டப்பட்டு கர்சீஃப் போட்டு இடம் பிடித்தவன்போல அந்த சோபாவைவிட்டு அசைய மனம் மறுத்தது.

என்னமோ செய்யணும் என்று தோணுது. ஆனால் என்ன என்று தான் தெரியலை என்று மனதில் சொல்லிக்கொண்டு ஸ்ரீயிடம் அவனது சிரிப்பால் தனது விட்டுப்போன உரையாடலை தொடர்ந்தான்.

“ஏய் நீயும்தானே அந்தப்படத்தின் காதல் புரியலை என்று சொன்ன? ”

“ராஜன் நான் அந்த லாஜிக் தான் புரியலை என்று சொன்னேன். கண்மூடித்தனமான அந்தக் காதல் எனக்குப் புரியும். நானும் பவித்ராவும் அப்படித்தான் இருந்தோம். இப்ப அவள் உயிருடன் இல்லை. ஆனால் நான் என்ன உடனே செத்தா போயிட்டேன்? உயிரோடுதானே இருக்கேன்? ”

சிரிப்போடு கலந்த உரையாடல் சோகமாக மாறிப்போவதை ராஜன் விரும்பவில்லை. உடனே பேச்சை மாற்றினான்.

“இந்த பிரச்சனை எல்லாம் இங்கிலிஷ் படத்தில் இல்லை ஸ்ரீ. ஒன்று இல்லை இரண்டு டேட்டிங்கில் காதல் வந்திடும். வில்லன் ஹீரோவைவிட சூப்பரா இருப்பான். படத்தில் அவுங்க பேசுற மொழியில் ஸ்டைல் இருக்கும். அமெரிக்கன் இங்கிலிஷ், பிரிட்டன் இங்கிலிஷ் ஆஸ்டிரேலியன் இங்கிலிஷ் என்று மூன்று வகை ஆக்சென்ட் இருப்பதால் சப்டைட்டில் இல்லாமல் படம் புரியாது. ஆனால் மொழியும் படமும் எவ்வளவு ஸ்டைலிஷாக இருக்கும் தெரியுமா? ”

அவனை மேலும் நக்கல் செய்யணும் என்ற நினைப்பை மட்டும் ஸ்ரீ விட்டுவிடவேயில்லை. டென்னிஸில் ஒரு செட்கூட எடுக்கவிடாமல் தடுக்கும் வீரரைப் போலஇ கிரிக்கெட்டில் மூன்று ஸ்டெம்ப்களையும் பறக்க வைக்கத் துடிக்கும் வேகப் பந்து வீச்சாளரைப் போல ஸ்ரீயும் ஒரு விஷயத்தைத் தேடினாள்.

அலசி ஆராய்ந்துப் பார்த்ததில் ஸ்ரீக்கு அம்சமாக ஒரு விஷயம் மாட்டியது.
அவள் ஏதோ கேட்கப் போகிறாள் என்று அவளின் முகத்தில் கண்டுபிடித்தவன் அது என்ன என்று பேராவலுடன் அவளை பார்த்தவாரே உட்கார்ந்திருந்தான். ராஜனை அதிக நேரம் காத்திருக்க விடாமல் ஸ்ரீ சொன்னாள்இ
“அடபோ ராஜன் உன் இங்கிலிஷில் ஸ்டைல் இருக்கு நானும் ஒத்துக்குறேன். ஆனால் எந்த மொழியிலும் செய்ய முடியாததை தமிழ் மொழியில் தான் செய்ய முடியும். உனக்குத் தெரியுமா அது என்னன்னு? ”

 

“அது என்ன? இவ்வளவு தத்துவம் பேசுறியே அதையும் நீயே சொல்லு! ”

“தமிழ் என்னும் வார்த்தையை உன் பெயராகவோ.. இல்லை பெயருக்கு முன்னோ பின்னோ சேர்க்கமுடியும். எதுகை மோனை ஒத்து வந்தால் பெயருக்கு முன்னோ பின்னோ சேர்க்கமுடியும். மற்ற மொழியை பெயரில் யாருமே எனக்குத் தெரிந்த வரையில் சேர்த்ததில்லை. உதாரணமாக தமிழ், தமிழ்ச் செல்வன், தமிழரசன் தமிழ்ச்செல்வி, தமிழ் மதுரம் , தமிழன்பன். தமிழ்ஞானசம்பந்தர் என்று ஒரு புலவர் கூட இருந்தார்.
இதை நீ ஹிந்தியில் யோசிச்சுப்பார் ஹிந்தி செல்வன் ஹிந்திசல்மா. ஹிந்தி ஷாரூக்கான். இல்லை தெலுங்கில் யோசித்துப்பார் தெலுங்கு தேவகவுடா, தெலுங்கு விஜயசாந்தி , தெலுங்குபாபு… கன்னடராவுத்தர்.. ஆனால் இங்கிலிஷில் ஒரு வார்த்தை மட்டும் கேட்டிருக்கேன். ஜானி இங்கிலிஷ் என்ற பெயர் மட்டும் இருக்கு. ஆனால் அதை ஜோக்கருக்கு மட்டும் தான் வச்சிருக்கான்.
அப்புறம் இன்னொன்று சொல்லணும்ன்னு நினைச்சேன். இங்கிலிஷில் ஒரு நிமிஷத்தில் நூற்றிஐம்பது வார்த்தை பேசுவாங்கன்னு கேட்டிருக்கேன். ஆனால் அந்த ஹீரோ இரண்டாயிரம் வார்த்தை பேசினான். பேசும்போதே தண்ணீகூட குடிச்சான்.

அவ்வளவுதான் அவன் மூச்சுவிடமுடியாமல் செத்துதான் போகப்போறான்னு நினைச்சேன். ஆனால் தண்ணீர் குடிச்சப்பிறகு மூவாயிரம் வார்த்தை பேசுறான் ராஜன். அசந்தேபோயிட்டேன். நம்ம ரேடியோ ஜாக்கி பேசும்போதே நான் எச்சில் விழுங்குவேன். இந்த இங்கிலிஷ்காரன்கூட இருந்தா அண்டா அண்டாவாக தண்ணீர் குடிக்கணும்போல. நம்மைப் பார்த்தாவது எச்சில் விழுங்கி நிதானமா பேச மாட்டாங்களான்னு இருக்கு. நான் சொல்லறது சரிதான?..” என்று கேட்டுவிட்டு நிறுத்தினாள்.

ஸ்ரீ பேசிக்கொண்டே போகப்போக ராஜனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சிரித்து சிரித்து அவன் சந்தோஷப்பட்டான்.
ஆனால் ராஜனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சிரிப்பது மட்டுமே போதும் என்றும் தோன்றவில்லை. வேறேதோ ஒன்று செய்யத்தோன்றியது அவனுக்கு. அது என்னவென்றுதான் தெரியவில்லை. தனது கன்னங்களை தேய்த்துக் கொண்டான். காது மடல்களை மெல்ல அழுத்திவிட்டுக்கொண்டான். உள்ளங் கைகளை உரசி உஷ்ணம் பரப்பிக் கொண்டான்.

ஆனால் இவை எதுவுமே அவனுக்குப் போதவில்லை. குளியலறைக்குச் சென்று முகத்தில் தண்ணீரை அடித்தால் நல்லாயிருக்குமோ? என்று தன்னிடம் கேட்டான்.
ச்ச என்ன இது அப்போது நினைத்த மாதிரியே நினைக்கிறோம்? என்று எண்ணும்போது புரிந்தது அவனுக்கு தன் சந்தோஷத்தை பகிர தன்னுள் ஒரு வழி தேடினான் என்று. அந்த வழி ஏதும் கிடைக்காதலால் அவனுக்கு எதிலுமே திருப்தி ஏற்படவில்லை என்பதும் புரிந்தது. பத்து பேர் சுற்றி நின்று சாமரம் வீசினாலும் அது அவனுக்கு திருப்தி அளிக்கப் போவது இல்லை என்பது நன்கு புரிந்தபோது “சரி அப்படி என்றால் அந்த வழிதான் என்ன?” என்று தன்னிடமே கேட்டபோது அவன் மனம் அவனிடம் தனது ஆட்காட்டிவிரலைத் தூக்கி ஸ்ரீயின் மூக்கின் மீது கை வைக்காத குறையாக நீட்டியது.

அதிர்ந்தான்.

ஆனால் ஒத்துக்கொண்டான்.

அவனது சந்தோஷத்தில் அவளையும் சேர்த்துக் கொண்டான். எப்படி? ஸ்ரீயை அவன்புறமாக இழுத்து அணைத்து ஒரு முத்தமிட்டு பிறகு என்னென்னவோ செய்து அவனது சந்தோஷத்தில் அவளையும் சேர்த்துக்கொண்டான்.

அதற்குமேல் தன்னை கட்டுப்படுத்த அவன் என்ன பிரம்மரிஷியா? இல்லை சித்தனா? இரண்டுமே இல்லை. பின் ஏன் அவன் தன்னை அடக்கி ஆளவேண்டும்?

ஆனால் ஸ்ரீயின் மனநிலையில் எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. தீடீறென்று தாக்கிடும் சுனாமியைப் போல சொல்லிக் கொள்ளாமல் வரும் பூகம்பத்தைப் போல நடந்த விஷயத்தை என்ன என்று புரிந்து கொள்ளக்கூட ராஜன் அவளுக்கு அவகாசம் கொடுக்கவில்லை.
அவளது சம்மதம் இதில் எப்போதுமே எவருக்குமே தேவைப்பட்டதில்லை. ஆனால் ராஜனைப் போன்றவனை அவள் பார்த்ததும் இல்லை. இனி பார்க்கப் போவதும் இல்லை.

கொஞ்சம் என்ன நிறையவே கர்வம்கூட உண்டானது. ராஜன் அவள் கைகளைப் பற்றி இழுத்தபோது மண்புழுவோடு இத்தனை நாளும் தன்னை ஒப்பிட்டவள் மண்ணுக்குள் இருக்கும் வைரத்தோடு தன்னை ஒப்பிட்டாள். அதனால் அவனிடம் மறுப்பு தெரிவிக்கும் எண்ணமே எழவில்லை.

ராஜன் அவள் கைகளைப் பற்றி அவள் கை விரல்கள் ஒடியாமல் தன்னை நோக்கி பிடித்திழுத்தான் என்றால் அது சரி என்றுதான் ஸ்ரீ சொல்வாள்.
தரையில் அவள் சேலை ஆஸ்கர் அவார்ட் நுழைவாயிளில் விரிக்கப்பட்ட ரெட் கார்பெட்போல் கோணல் மானலாக விரிந்து கிடந்தது என்று சொன்னால் அதுவும் சரி என்றே ஸ்ரீ சொல்வாள்.
விடியல் வரை நேரம் இருந்தது. ஆனால் எதற்குமே அவர்களுக்கு நேரம் போதவில்லை. ஏதேனும் பேசுவதற்கு காரணம் கற்பிக்க என்று எதற்குமே என்றால் எதற்குமே நேரம் போதவில்லை.. விடிந்து சில மணி நேரத்தில் ஸ்ரீ எழப்போனபோது ராஜன் அவளிடம் கேட்டான் “ஸ்ரீ என்னை பாரு. ” அவள் பார்க்கவேயில்லை. ஆனால் பதில் மட்டும் தந்தாள் .
“ம். ”




Comments are closed here.

You cannot copy content of this page