Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal episode 35 and 36

நன்றாக அவன் கைகளில் மாட்டியிருந்த கைக்கடிகாரத்தை முன்னும் பின்னும் அசைத்தவன் குனிந்த தலை நிமிராமல் அவள் கண்களைப் பார்க்காமல் அவளிடம் “சாயங்காலம் சீக்கிரம் வந்திடுவேன் ஸ்ரீ. நீ ஸ்நேகா வீட்டில் இரு. நான் வரட்டுமா?” என்றான். இருட்டில் உறவாட முடிந்தது. பேச முடிந்தது. ஆனால் வெளிச்சத்தில் எல்லாமே சாத்தியம் இல்லாமல் போனதுதான் நிஜம். நிஜத்தை இருவரும் மீறவில்லை.
தலையை ஆட்டியது மட்டுமே அவள் ஞாபகத்தில் இருந்தது. மற்றவை எல்லாம் ஞாபகத்தில் இல்லை. எப்படி அவன் செல்லும்போது வாசல் வந்து செருப்பை ஒழுங்கு படுத்துவதுபோல் அவன் கண்களைத் தேடினாள்? கதவை எப்படி பூட்டினாள்? எப்படி உள்ளே வந்து பொத்தென்று சோபாவில் உட்கார்ந்தாள்? என்ற அனைத்து கேள்விகளுக்கும் ஸ்ரீயிடம் ஒரு வார்த்தையில்கூட பதில் இல்லை.
ராஜன் சென்றபிறகுதான் முந்தைய நாளின் நினைவுகள் அவளுக்கு காட்சிகளாக மனக் கண்ணில் விரிந்தது.

வெட்கம் என்பது தோன்றாதபோதும் தன்னை இக்கட்டான நிலையில் தள்ளிவிட்ட சந்தர்பங்களை மனதில் நினைத்துக்கொண்டாள்.
கட்டிலில் என்றுமே மண்புழுபோல உணர்ந்தவள் வைரமாக தன்னை உணர்ந்த நொடிகளை நெஞ்சில் அசைபோட்டாள்.

இரவில் சகஜமாக பேசிய உரையாடல் எல்லாம் கனவில்கூட நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்தபோது விதியின் கைகளுக்குள் தான் சிக்கியதாகவே உணர்ந்தாள் ஸ்ரீ. முன்பின் அறிந்திராத மகிழ்ச்சியும் எப்போதும் அவளிடத்தில் குடியிருக்கும் பயமும் அவள் கண்ணாடியின் முன் தோன்றும் பின்பம்போல் தெளிவாகத் தோன்றியபோது ஸ்ரீயால் மனதை குழப்பிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

ராஜன் என்றுமே காலை உணவு சாப்பிடுவதில்லை.

பாதாம்பருப்பு பிஸ்தா என்று அளவாக முடித்துக்கொள்வான்.
ஸ்ரீக்கு நான்கு இட்லி (இட்லி என்ற ரவா இட்லிதான்) எப்போதும் போல் வந்துவிட்டது.

நான்கில் இரண்டாவது சாப்பிட்டுவிட்டு மீதத்தை மொட்டை மாடியில் காக்கைகளுக்கு பிய்த்துப் போட்டு ஒரு மணி நேரத்தை கடத்திவிடும் ஸ்ரீ இன்று நான்கு இட்லியும் காக்கைக்குத்தான் என்பதை ஐயம் திரிபர உணர்ந்தாள்.

எப்போதும் போல் பொழுதை கடத்தினாலும் மனம் முந்தைய நாள் அரவணைப்பில் லயித்து மிகுந்த சோம்பேறியாவதை உடல் நடுங்க உணர்ந்தாள். அறிஞர்கள் கூறுவதுபோல் அடுத்த நாள் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ரகசியம்தான்.

ஆனால் அதனை எதிர்கொள்ளமுடியாமல் ஸ்ரீ திணறினாள்.

மோகம் என்றால் ‘சீ’ என்று விட்டுவிடலாம்.

மோகம் கொள்ளும் வயதில்லை அவளுக்கு. அந்த நிலையிலும் இப்போது அவள் இல்லை. இதில் மோகம் இல்லாததுதான் அவளை மிகவும் கலங்கச்செய்தது.

மோகம் இல்லாத பந்தம் அவள் அனுபவித்தது இல்லை. பயம் , கலக்கம் , நிம்மதியின்மை, திக் திக் என்று அடிக்கும் பலவீனமான இதயம் என இவை அனைத்தும் அனுபவித்தபோதும் மகிழ்ச்சியும் இன்பமும் அவள் ராஜனை நினைத்த போதெல்லாம் வந்தது. முடியலையடா சாமி என்று அவள் தலையில் கை வைத்து உட்கார்ந்தபோது பகல் ஒரு மணி.

பகல் ஒரு மணி

அதே பகல் ஒரு மணிக்கு ராஜனும் “என்னால் முடியலைடா. ” என்று கோபியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

“என்ன முடியலை? நாலு நாளா என் வீட்டுக்கு வா வா என்று கூப்பிடுறேன். ஒரே பதில் சொல்லிக்கிட்டே இருக்க. இன்னைக்கு நைட் நீ கண்டிப்பா வரணும். வருவீல்ல? ”

“சாரி டா. என்னால் முடியாதுன்னா முடியாதுதான். ”

ஒன்னும் பேசாமல் இருந்த கோபி ராஜன் அவன் முகத்தைப் பார்க்காமல் பேசும்போதே ஏதோ விஷயம் என்று புரிந்துகொண்டவன் “ஓ அப்படியா விஷயம்? உன் பர்ஸ்னல் போலிஸ் ஸ்டேஷனில் வேலை அதிகமாக இருக்கும். ” என்றான்.

“என்ன கோபி? எதைச் சொல்ற? ”
“அதான் நீ உன் வீட்டோட ஒரு ஸ்டேஷன் வச்சிருக்கியே அதைச் சொன்னேன். ”

“உளராதே கோபி. அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ”

“டேய் நீ ஒண்ணும் இல்லைன்னு சொல்றதே ஆயிரம் இருக்குன்னு சொல்ற மாதிரி இருக்குடா. ” என்றான்.

“போடா கோபி உனக்கு இப்ப இங்க என்ன வேலை? உன்னைதான் எலெக்ஷன் விஷயமா கலெக்டர் கூட பேசணும் என்று இன்ஸ்பக்டர் கூப்பிட்டாருல்ல? போகலையா இன்னும்? ”
“ராஜன் விரட்ட விரட்ட கோபியின் சந்தேகம் உறுதியானது. அப்படின்னா விழுந்திட்டியாடா? ”

“கோபி வேண்டாம் என்னை கோபப்படுத்தாத! ” என்றபோது

“சரி சரி நடத்து!உன்னோட ஜாதக புத்தகம் ஃபிரிஜுக்குள் இருக்கு! என்னோடது மைக்ரோ அவனில் இருக்கு! என்ன பண்ண? எல்லாம் நேரம்டா. ” என்றபோது ராஜனால் மேலும் கோபம் கொள்ள முடியவில்லை.

ராஜன் சிரித்த பிறகு கோபியும் அவனது சிரிப்பில் கலந்து கொண்டான். ரகசியமாய் காதினில் ஏதோ பேசி ராஜனை நெளியவைத்த கோபி கிளம்பும்போது ராஜன் போதும்.

“சீக்கிரம் விட்டுவிடு உனக்கு இது நல்லதில்லை. அந்தப் பொண்னோட பெயரை கேட்க்கும்போதெல்லாம் ஸ்ரீன்னு காதில் விழுவதில்லை பிரச்சனை என்று தான் காதில் விழுது. தொட்டுட்டேன்னு சொன்ன பழகிட்டேன்னு சொன்ன சரி இத்தோட போதும். அடுத்து நான் பேசும்போது அவளை விட்டுட்டேன்னும் சொல்லணும். என்ன நான் பேசுறது காதில் கேட்குதா? ” என்றான்.

ராஜன் பதில் பேசாமல் அவனது செல்பேசியின் திரையைப் பார்த்தான். அவன் இனி தன்னிடம் பேசப்போவதில்லை என்பதை அவனது பார்வையால் சொன்னதும் கோபி தனது வேலையைப் பார்க்கப் போனான்.
கோபி சென்றபிறகும் ராஜனின் கோபம் குறையவில்லை.

தன்னை இவ்வளவு கேவலமாக நினைச்சிட்டானே என்றதில் இருந்தது. ஏன்டா அவனிடம் சொன்னோம் என்றாகிவிட்டது. அட்வைஸ் பண்றானாம் அட்வைஸ்! இவன்கிட்ட நான் கேட்டேனா? என்று கீழே கிடந்த காகிதம் ஒன்றை எடுத்தான் ராஜன். அப்போதுதான் தன்னுடைய ஷுவைப் பார்த்தான். அவனது ஷ{தான். ஆனால் அதில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. என்ன? என்று யோசித்தபோது ஷுவிற்கு பிளாக் பாலிஷ் போடப்பட்டிருந்தது.

அதிர்ந்தவன் மறு காலின் ஷுவைப் பார்த்தான். அதிலும் பிளாக் பாலிஷ் போடப்பட்டிருந்தது. நல்ல வேலை அதிகமாக அப்பிடவில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டான். பிரௌன் ஷுவிற்கு பிளாக் பாலிஷ்? அட அறிவுக்களஞ்சியமே என்று மனதில் ஸ்ரீயின் வேலையை நினைத்தவனால் கோபப்பட முடியவில்லை. ஆனால் அந்த நாள் முழுதும் மற்றவர்கள் முன்பு தனது ஷுவை மறைக்க அவன் அரும் பெரும்பாடு படவேண்டியதாக இருந்தது.

கோபியின் அறிவுரை மழையில் உஷ்ணமானவன் ஷுவைப் பார்த்து சாந்த சுவரூபன் ஆனான்.
இருட்டில் நடந்தவை எல்லாம் வெளிச்சத்தில் நம்ப முடியாத நிகழ்வுகளாக தோன்றியது அவனுக்கும்.

இயல்பாக நடந்த விஷயம் ஒன்று தனது இயல்பு வாழ்க்கையில் ஆயிரம் துளையிட்டு செல்லும்போது கைகளைக் கட்டிவேடிக்கை பார்க்கும் நிலையில் இருந்தான்.
இரவில் பதினோரு மணிக்கு வந்தபோதும் ஸ்ரீ ஸ்நேகாவுடன் தன் அறையில் பேசுவது உள்ளே நுழைந்தபோதே அவனுக்கு கேட்டது.

ஸ்நேகா சென்றபிறகு உள்ளுக்குள் ஆயிரம் தோன்றியபோதும் ஸ்ரீ இயல்பாக வெகு இயல்பாக அவன் முன்னே நடமாடியது அவன் பேச நினைத்ததை பகல் முழுதும் ஒத்திகைப் பார்த்துப் பேச நினைத்ததை அதெல்லாம் தேவையேயில்லை என்று அவனை எண்ண வைத்தது.

 

நடந்தது வெறும் நிகழ்வுதான் என்று ஸ்ரீயும் நம்பினாள் அதையே ராஜனையும் நம்பவைத்தாள். ராஜனும் அவளிடம் ஷுவைக்காட்டி கேலி பேசியதோடு இயல்பாகிவிட்டான்.

அவளும் பதிலுக்கு அவனிடம் அவனது கூண்டுப் பறவைகளை கேலி செய்துவிட்டு அவனையும் சிரிக்க வைத்தாள். முகத்தைக்கூட இருவரும் நேருக்கு நேர் பார்த்து பேசிக் கொண்டனர். முந்தைய நாளை ரப்பர் கொண்டு அழித்துவிட்டனர்.

அப்படித்தான் ஏமாற்றுமாம் கானல் நீரும்.




Comments are closed here.

You cannot copy content of this page