Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal episode 37
1229
0
ராஜன் சமைக்கச் சொல்லி கேட்டுக்கொண்ட இரண்டு நாட்கள் வந்தது.
வீட்டில் அவள் அன்றுதான் சமையல் செய்தாள்.
ஆனால் சமைக்கும் போதே கடுகு துவரம்பருப்பு என்று எதைத் தொட்டாலும் பவித்ராவின் ஞாபகம் வந்தது.
காலையில் மீண்டும் தனுவிடம் பேசிய பிறகு ஸ்ரீயின் மனம் துன்பத்தில் மூழ்கியது.
இன்று ஒரு நாள் சமைக்க என்று முடிவு செய்தாலும் அதை நிறைவேற்ற பெரும் முயற்சி அவளுக்குத் தேவைப்பட்டது.
காரக்குழம்பும் ஒரு பொறியலும் வைத்தவள் அதை ருசி பார்க்க துணிந்தபோது “ஏய் ஸ்ரீ என்கிட்டக்கொடு. நான் எப்படி இருக்குன்னு புட்டு புட்டு வைக்கிறேன். ” என்ற பவித்ராவின் குரல் மனதுக்குள் கேட்க அடக்க முடியா அழுகையில் பெருங்குரலெடுத்து அழளானாள்.
மனதில் முழுதும் வெறுப்பு சுழ்ந்து கொண்டது. ராஜன் அவளை கௌன்சிலரிடம் இருந்து காப்பாற்றியது பவித்ராவிடம் கொடுத்த வார்த்தைக்காக அவளை விழுந்து விழுந்து கவனிப்பது எதுவுமே அவளுக்குப் பிடிக்கவில்லை.
மோகம் கொண்டு அவளை அவன் மீண்டும்
நாடியிருந்தால்கூட ஸ்ரீ அவன் செய்கையில் கவரப்பட்டிருக்க மாட்டாள்.
ஆனால் அவனோ மிகுந்த கட்டுப்பாட்டுடனும் கன்னியத்துடனும் அவளிடம் பழகியபோதுதான் ஸ்ரீ தனது கட்டுப்பாட்டை இழந்தாள்.
ராஜனின் அறையும் அவன் கண்களின் ஊடுருவலும் அவன் சிரிப்பும் இப்படி எத்தனையோ ‘அவனை’ நினைத்தவள் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.
உடலில் எற்பட்ட அதிர்வால் வயிறு வலித்தது. சாப்பிட்டதெல்லாம் வாந்தி பண்ணினாள். அவசரமாக டாய்லட்டிற்குள் புகந்தாள். வயிறு காலியான பிறகு துவண்டுபோய் சோபாவில் படுத்துக்கொண்டாள்.
பவித்ரா நினைத்திருந்தால் பணத்தை பிடிபட்டவுடன் கொடுத்திருக்கலாமே? ஏன் கொடுக்கவில்லை? என்று அவளுக்கு அப்போது புரியவில்லை.
ஆனால் இப்போது ஏட்டையாவையும் ராஜனையும் அவள் மாஜிஸ்ரேடிடம் காட்டிக் கொடுக்காதபோது புரிந்தது ஸ்ரீக்கு.
நமது வாழ்க்கையில் முடிவின் விளிம்பில் நிற்கும் போது மற்றவர்களாவது பிழைத்துப்போகட்டும் என்று எண்ணிடுமே மனித இதயம்.
ஏட்டையாவிடம் ஸ்ரீக்கு அந்த
பரிதாபமும் இரக்கமும் தோன்றியதால் அவர்களை அவள் காட்டிக் கொடுக்கவில்லை என்பதை புரிந்துகொண்டாள்.
அடுத்த நொடி கண்ணீர் கண்களை நிரப்பி கன்னங்களில் வழிய ஆரம்பித்தது. திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணையாம்.
இவள் எந்த தெய்வத்தை நாட என்று தெரியாது விழித்தபடி கண்களை மூடும்போது ஏதோ ஒரு பயம் அவளைப் பின்னிப் பிணைத்தது.
கடலுக்குள் நீச்சல் தெரியாமல் முழ்கியவனுக்கு தண்ணீர் நுரையீரலுக்குள் நிரம்புவதைப்போல மூச்சுவிடக்கூட முடியாததுபோல உணர்ந்தாள்.
மனதை திடமாக்கிக்கொண்டு கண்களை மூடி நிதர்சனத்திற்கு வந்தாள்.
தன்னிடமே சொல்லிக் கொண்டாள்
“ராஜன் வேறு நீ வேறு. தனு மோகனா இவர்கள் தான் நம் தேசம். ராஜன் அந்நியன். அந்நியனை சொந்த மண்ணில் நுழைய விட்டால் மண்ணும் பறிபோகும் உயிரும் விடுதலைக்கு கதறிடும். அவனுக்கு உன் உலகம் புரியாது. உனக்கு அவன் உலகம் புரியாது.”
இறுதியாக தன்னைத் தாமே மூளைச்சலவை செய்தவள் மனிதர்களை இஷ்டம்போல வதைக்கும் காரணத்தால் நரகத்தில் வாழ முழுத்தகுதியடைந்தவன் கடவுளே என்ற முடிவுக்கு வந்திருந்தாள். தனக்கு பிடித்த மிட்டாயை தன்னிடம் கொடுக்காதவனை எந்த குழந்தைக்கு பிடிக்குமாம்?
உயிரை விட்டவள் விட்டுவிட்டாள். ஆனால் ஸ்ரீ ஒவ்வொரு நொடியும் செத்துப்பிழைத்தாள்.
இறந்தவர்கள் நல்லவர்களாக இருப்பின் இருப்பவர்கள் நடைபிணம்தான்.
ஸ்ரீ நடைபிணம் ஆனாள். சமைத்தவள் ஒரு பருக்கை கூட சாப்பிடாமல் அவள் மனப்பாடம் செய்து வைத்திருந்த தனுவிடம் கொடுத்திருந்த மூன்றாவது செல் நம்பரை திரும்பத்திரும்ப மனதில் சொல்லிப்பார்த்தவள் அப்படியே உறங்கிப்போனாள்.
வீட்டைத் திறந்து உள்ளே வந்த ராஜன் ஸ்ரீயைக் கூப்பிட ஸ்ரீ தூக்கத்திலிருந்து விழித்தாள். அவனைக் கண்டதும் பித்து பிடிக்கும் மனதிடம் அவள் போராட வேண்டியதாக இருந்தது.
அவளை நேராக நோக்கியவன் “இன்றைக்கு சொன்ன மாதிரியே சமைச்சிருக்க? எனக்கு இனி தினம் ஆயிரம் ரூபாய் செலவாகாது போலயிருக்கே. செல்ஃபோனை வச்சிட்டு போயிட்டேன். எதுவும் ஃபோன் வந்ததா ஸ்ரீ? ” என்றான்.
என்ன வார்த்தைக்கு வார்த்தை ஸ்ரீ வேண்டிக்கிடக்கு? என்ற எரிச்சலில் “ஃபோன் வந்தாலும் நான் எடுக்க முடியுமா?” என்று சிடுமூஞ்சித்தனமாக பதில் சொன்னாள்.
“சமைக்கும் போதே மிளகாய்ப்பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டுக்கிட்டியா? நான் சாப்பிடப்போறேன்.. நீ ஆச்சா? ”
“ம.” என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னதால் அவளை ஒரு கோப பார்வையால் அவனும் பதில் கொடுத்துவிட்டு அடுக்களைக்குள் நழைந்தான். அவன் அடுக்களைக்குள் நுழைந்ததும் கேட்டான் இல்லை இல்லை கத்தினான்.
“ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என் செல்ஃபோன் கொண்டு வா. ”
இன்னும் கூட ரெண்டு தடவைப் கூப்பிடாமப் போனானே என்று மனதில் வைது கொண்டே கத்தினாள்.
“சரி சரி வெயிட் பண்ணு. செல்போன் எடுத்திட்டு வர்றேன். ”
செல்போனை எடுத்து அவன் கையில் திணித்தவள் ஹாலுக்கு சென்று சோபாவில் போர்த்திப்படுத்துக் கொண்டாள்.
சாப்பிட்டு முடித்தவன் கொஞ்ச நேரம் டி.வி பார்த்தான்.
பிறகு பொறுமையிழந்து சோபாவில் படுத்திருந்த ஸ்ரீ யை தட்டி எழுப்பி “ஸ்ரீ ரூம்மில் போய் படு. எழுந்திடு ஸ்ரீ.”
ஸ்ரீ எழவில்லை என்றபோதே ராஜன் ஏதோ விஷயம் இருக்கு என்று புரிந்து கொண்டான். ஸ்ரீயும் மெல்ல எழுந்தாள்.
சோபாவிலேயே உட்கார்ந்து கொண்டு அவனிடம் அமைதியாகச் சொன்னாள் “ராஜன் இன்றைக்கு எனக்கு மனசே சரியில்லை. நான் தனியாக இருக்க விரும்புறேன். உனக்கு கண்டிப்பா வேணும் என்றால் சொல்லு தனுவின் ஃப்ரண்டிற்கு ஒரு கால் செய்யிறேன். அவள் நாளைக்கே வந்திடுவாள். நீ கேட்பதும் உனக்கு கிடைக்கும். அவள் கேட்பதும் அவளுக்கு கிடைக்கும்… ”
அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. ராஜன் கோபத்தில் அவள் மூடியிருந்த போர்வையை இழுத்து விட்டெறிந்தான். ஒரு காலின் கொலுசைப் பற்றி இழுத்தான்.
அவள் வலியில் ஆ என்று அலறியதும் அவளைவிட்டு விலகியவன் தனது அறைக்குச் சென்று தாளிட்டான்.
இரண்டு நாட்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கக் கூட இல்லை. ஸ்ரீ தினம் ஒரு முறைதான் போஜனம் உண்டபோதும் ராஜன் ஏன் என்ன என்று ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை.
ஸ்ரீவிற்கோ அவன் முகத்தை நேருக்கு நேர் பார்க்காமல் இருப்பதே நிம்மதியிலும் பெரும் நிம்மதி என நினைத்துக்கொண்டாள்.
Comments are closed here.