அத்தியாயம் 29 – சந்தேக விபரீதம்

 

பொன்னியின் செல்வர் அரண்மனைக்கு உள்ளே சென்ற பிறகு, காலாந்தக கண்டர் அரண்மனை வாசலில் வந்து சேர்ந்து கொண்டிருந்த வேளக்காரப்படை வீரர்களை நெருங்கினார்.

 

“இது என்ன கூச்சல்? அரண்மனைக்குள்ளே சக்கரவர்த்தி நோயுடன் படுத்திருப்பது உங்களுக்குத் தெரியாதா? கோட்டையைச் சுற்றிப் பகைவர் படை சூழ்ந்திருப்பது தெரியாதா?” என்று கடுமை தொனிக்கும் குரலில் கேட்டார்.

 

வேளக்காரப் படையின் தலைவன், “ஐயா! கோட்டையைச் சூழ்ந்திருப்பவர்கள் பகைவர்கள் தானா? கொடும்பாளூர்ப் பெரிய வேளார் நமக்குப் பகைவர் ஆனது எப்படி?” என்று கேட்டான்.

 

சின்னப் பழுவேட்டரையர் பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, “அதை அவரிடந்தான் கேட்க வேண்டும்; பகைவர் இல்லையென்றால், எதற்காகச் சைன்யத்துடன் வந்து கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறார்?” என்று கேட்டார்.

 

“சின்ன இளவரசரைச் சிம்மாசனத்தில் ஏற்றி முடிசூட்டுவதற்காக என்று கேள்விப்படுகிறோம்” என்றான் வேளக்காரப் படைத்தலைவன்.

 

“அது உங்களுக்கெல்லாம் சம்மதமா?” என்று சின்னப் பழுவேட்டரையர் கேட்டார்.

 

வேளக்காரப் படைத்தலைவன் தன் வீரர்களைத் திரும்பிப் பார்த்து, “நீங்களே சொல்லுங்கள்!” என்றான்.

 

வீரர்கள் உடனே “சம்மதம்! சம்மதம்! பொன்னியின் செல்வர் வாழ்க! ஈழங்கொண்ட இளவரசர் வாழ்க!” என்று கோஷித்தார்கள்.

 

இம்முறை அந்தக் கோஷம் முன்னைவிட அதிக வலுவுடையதாயிருந்தது.

 

சின்னப் பழுவேட்டரையரின் முகம் சிவந்தது; மீசை துடித்தது. ஆயினும் பல்லைக் கடித்துக் கொண்டு, “முடி சூட்டுவது பெரிய வேளாரின் இஷ்டத்தைப் பொறுத்ததா? அல்லது உங்கள் விருப்பத்தைப் பொறுத்ததா? சக்கரவர்த்தியின் விருப்பத்துக்கு மதிப்பு ஒன்றும் இல்லையா?” என்று கேட்டார்.

 

வீரர்களில் ஒருவன், “தளபதி! சக்கரவர்த்தி சௌக்கியமாயிருக்கிறாரா! நிச்சயந்தானா!” என்று கேட்டான்.

 

“இது என்ன கேள்வி?” என்று காலாந்தகர் சீறினார்.

 

“சக்கரவர்த்தியைப் பற்றி ஊரில் ஏதேதோ வதந்தி பரவியிருக்கிறது. நாங்களும் அவரை இன்று பார்க்க முடியவில்லை! அதனால் அவருடைய சுகத்தைப் பற்றி எல்லாரும் மிக்க கவலை அடைந்திருக்கிறோம்!” என்று வேளக்காரப்படை வீரர்களின் தலைவன் கூறினான்.

 

“சக்கரவர்த்தியை நீங்கள் பார்க்க முடியாத காரணம் முன்னமே நான் சொல்லவில்லையா? சக்கரவர்த்தியின் மனக்குழப்பம் இன்று அதிகமாயிருந்தது. யாரையும் பார்ப்பதற்கு அவர் விரும்பவில்லை. சபாமண்டபத்திற்கு வருவதற்கும் மறுத்துவிட்டார்…”

 

“சக்கரவர்த்தியின் மனக்குழப்பத்திற்குக் காரணம் என்ன? ஏன் எங்களுக்குத் தரிசனம் அளிப்பதற்கு மறுக்க வேண்டும்? நாங்கள் அதையாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா?”

 

“நல்லது; சொல்லுகிறேன்; ஈழத்துக்குச் சென்றிருந்த இளவரசரைப் பற்றி ஒன்றும் தெரியாமலிருந்ததுதான் சக்கரவர்த்தியின் கவலை அதிகமானதற்குக் காரணம். இப்போது இளவரசரே வந்து விட்டபடியால்…”

 

“இளவரசரை நாங்கள் பார்க்கவேண்டும். நன்றாக வெளிச்சத்தில் பார்க்கவேண்டும்!” என்று அந்தப் படையினரில் ஒரு வீரன் கூறினான்.

 

“ஆமாம்; பார்க்க வேண்டும்! ஈழங்கொண்ட இளவரசர் வாழ்க!” என்று எல்லாரும் சேர்ந்து கூவினார்கள்.

 

“இளவரசர் முதலில் சக்கரவர்த்தியைத் தரிசிக்க வேண்டும். அல்லவா? பிறகு இஷ்டப்பட்டால் உங்களையும் வந்து பார்ப்பார்!”

 

“நிச்சயந்தானா? ஒருவேளை பாதாளச் சிறைக்கு அனுப்பப்படுவாரா?”

 

வேறொரு நாளாக, வேறொரு சந்தர்ப்பமாக இருந்தால், வேளக்காரப் படையினர் இவ்வளவு துடுக்காகப் பேசியதற்குச் சின்னப் பழுவேட்டரையரின் வீரர்கள் அவர்கள் மீது போர் தொடுத்திருப்பார்கள். பெரிய ரகளையாகப் போயிருக்கும். ஆனால் இளவரசரின் திருமுகத்தைச் சற்றுமுன் பார்த்த காரணத்தினாலோ, என்னமோ, காலாந்தக கண்டரின் வீரர்களும் மௌனமாக நின்று கொண்டிருந்தார்கள். சின்னப் பழுவேட்டரையருடைய கை அவருடைய உடைவாளை நாடியது. மேற்கண்டவாறு கேட்ட வீரனை ஒரே வெட்டில் வெட்டிக் கொன்றுவிட வேண்டுமென்று ஒரு கணம் எண்ணினார். உடனே அந்தக் கோபத்தைச் சமாளித்துக் கொண்டு உரத்துச் சிரித்தார்.

 

“இவன் கேட்ட கேள்வி உங்கள் காதிலெல்லாம் விழுந்ததல்லவா? இளவரசர் பாதாளச் சிறைக்கு அனுப்பப்படுவாரா என்று கேட்கிறான். நல்லது; இளவரசரைச் சிங்காதனத்தில் ஏற்றி முடிசூட்டுவதோ, பாதாளச் சிறைக்கு அனுப்புவதோ என்னுடைய அதிகாரத்தில் இல்லை, சக்கரவர்த்தியின் விருப்பத்தின்படி நடக்கும். இளவரசரைப் பாதாளச் சிறைக்குக் கொண்டு போவதாயிருந்தாலும், இந்த வழியே தான் கொண்டு போக வேண்டும். அப்போது நீங்கள் அவரைப் பார்த்துக் கொள்ளலாம்!” என்று காலாந்த கண்டர் கண்களில் கனல் பறக்கக் கூறிவிட்டு, அரண்மனைப் பக்கம் திரும்பினார். வீரர்கள் மீண்டும் கோஷமிட்டதையும் பொருட்படுத்தாமல் அரண்மனை முன் வாசலை நோக்கிச் சென்றார்.

 

அங்கே வாசற்படிக்கு அருகில் பூங்குழலி தன்னந்தனியாக நின்று கொண்டிருப்பதைக் கண்டார். “பெண்ணே! நீ ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்? உன்னை உள்ளே வர வேண்டாம் என்று தடுத்து விட்டார்களா?” என்று கேட்டார்.

 

“என்னை யாரும் தடுக்கவில்லை. நானாகவே நின்று விட்டேன் ஐயா!” என்றாள் பூங்குழலி.

 

“ஏன்?”

 

“வெகுநாட்களாகப் பிரிந்திருந்த தந்தையும் மகனும் சந்திக்கும் வேளையில் எனக்கு என்ன அங்கே வேலை?”

 

“போகட்டும்; நீயாவது சக்கரவர்த்தி உயிரோடு இருக்கிறார் என்று நம்புகிறாயே? அந்த மட்டில் சந்தோஷம்!”

 

“நம்புவது மட்டுமில்லை, சக்கரவர்த்தி சௌக்கியமாயிருப்பதைக் கண்ணாலேயே பார்த்துவிட்டுத் தான் திரும்பி வந்தேன்.”

 

“அதோ நிற்கிறார்களே, அந்த வேளக்காரப் படையினரிடம் நீ பார்த்ததைச் சொல்! அவர்கள் சந்தேகப்படுவதாகத் தோன்றுகிறது!” என்றார்.

 

“அவர்களுடைய சந்தேகத்துக்கு இந்த நிமிஷம் வரையில் ஆதாரம் இல்லை. அடுத்த நிமிஷம் அது உண்மையாகாது என்று யார் சொல்ல முடியும்?”

 

“பெண்ணே! நீயும் சேர்ந்து என்னைக் கலவரப்படுத்தப் பார்க்கிறாயா? உங்கள் எல்லாருக்கும் பைத்தியம் பிடித்து விட்டதா?” என்று கேட்டார்.

 

“தளபதி! என்னைப் பலர் ‘பைத்தியம்’ என்று சொல்லுவதுண்டு. நானே என்னைப் ‘பைத்தியம்’ என்று சொல்லிக் கொள்வதுமுண்டு. ஆனால் இந்தப் பைத்தியத்தின் யோசனையைக் கேட்டபடியினால்தான் இன்று இளவரசர் இந்தக் கோட்டைக்குள் அபாயம் இன்றிப் புக முடிந்தது. சக்கரவர்த்தி உயிரோடிருக்கும்போதே அவரைச் சந்திக்கவும் முடிந்தது…”

 

“ஆகா! இது என்ன? சக்கரவர்த்தியின் உயிருக்கு நீயும் கெடு வைக்கிறாய் போலிருக்கிறதே! மூட ஜனங்களும் முட்டாள் ஜோசியர்களும் உளறுவதைக் கேட்டு நீயும் பிதற்றுகிறாயா? அல்லது உனக்கு வேறு ஏதேனும் தெரியுமா?”

 

“ஜனங்களும் ஜோதிடர்களும் மட்டுந்தானா கெடு வைக்கிறார்கள்? தங்கள் தமையனார் சொல்லி அனுப்பிய செய்தியைச் சற்று முன் கேட்டீர்களே?”

 

“அது உண்மை என்பது என்ன நிச்சயம்?” என்றார் காலாந்தக கண்டர்.

 

“தளபதி! கொடும்பாளூர் இளவரசி எதற்காகப் பொய் சொல்ல வேண்டும்?”

 

“யார் கண்டது? அடுத்தாற்போல் சிங்காதனம் ஏறிப் பட்டமகிஷியாகும் ஆசையிருக்கலாம்..”

 

“தளபதி! நானும் அப்படித்தான் எண்ணியிருந்தேன். இளவரசி இன்று காலையில் செய்த சபதத்தைக் கேட்ட பிறகு என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்” என்றாள் பூங்குழலி.

 

“பெண்ணே! ஒருவேளை உனக்கே அத்தகைய ஆசை இருக்கிறதா, என்ன?” என்று கேட்டுவிட்டுச் சின்னப் பழுவேட்டரையர் இலேசாக நகைத்தார்.

 

“தளபதி! உண்மையில் நான் பைத்தியக்காரிதான்! தங்களிடம் பேச நின்றேன் அல்லவா?” என்று கூறிவிட்டுப் பூங்குழலி திரும்பிப் போக யத்தனித்தாள்.

 

காலாந்தக கண்டரிடம் உடனே ஒரு மாறுதல் காணப்பட்டது. “பெண்ணே, கோபித்துக் கொள்ளாதே! நீ சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் போ!” என்றார்.

 

பூங்குழலி மறுபடியும் திரும்பி, “ஆம், சொல்லத்தான் வேண்டும். இல்லாவிடில் பின்னால் நானும் வருத்தப்படுவேன்; தாங்களும் வருந்தும்படி நேரிடும். ஐயா! சக்கரவர்த்தியின் உயிருக்கு ஏதாவது அபாயம் நேர்ந்தால், நாடு நகரமெல்லாம் தங்கள் பேரிலேதான் பழி சொல்லும். தங்களுடைய வீரர்களே கூடச் சொல்லுவார்கள்!” என்றாள்.

 

சின்னப் பழுவேட்டரையரின் முகம் சுருங்கிற்று. “அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் மற்றவர்கள் பழி சொல்லும் வரையில் காத்திருக்க மாட்டேன். பழிச்சொல் காதில் விழுவதற்குள்ளே என் உயிர் பிரிந்துவிடும்! இந்த வேளக்காரப் படையினர் துர்க்கா பரமேசுவரி கோவிலில் சத்தியம் செய்தபோது, எல்லாருக்கும் முதலில் சத்தியம் செய்து வழிகாட்டியவன் நான்!” என்றார்.

 

“அதில் என்ன பயன்? சோழ ராஜ்யம் சக்கரவர்த்தியையும் இழந்து, ஒரு மகா வீரரையும் இழந்து விடும்! அதைக் காட்டிலும் முன் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதல்லவா?”

 

“பெண்ணே! நான் முன் ஜாக்கிரதையாக இல்லை என்றா சொல்லுகிறாய்? இதோ இந்த அரண்மனையைச் சுற்றி இவ்வளவு வீரர்கள் கண் கொட்டாமல் நின்று காத்து வருகிறார்களே! எதற்காக? முதன் மந்திரி அநிருத்தர்கூட நான் அறியாமல் அரண்மனைக்குள்ளே போகமுடியாது! தெரியுமா?”

 

“தெரியும், தளபதி! ஆனால் அரண்மனைக்குள்ளேயிருந்தும், அபாயம் வரலாம் அல்லவா?”

 

“என்ன பிதற்றல்? அரண்மனைப் பெண்கள் சக்கரவர்த்திக்கு விஷங்கொடுத்துக் கொன்றுவிடுவார்கள் என்று சொல்லுகிறாயா?… அல்லது ஒருவேளை இப்போது இளவரசருடன் உள்ளே போனாளே, அந்தக் கொடும்பாளூர்ப் பெண்ணின் பேரில் சந்தேகப்படுகிறாயா?” என்றார்.

 

“தெய்வமே! அந்தச் சாதுப் பெண்ணின் பேரில் சந்தேகப்படுகிறவர்களுக்கு நல்ல கதி கிடைக்காது. அவளுக்கு அவ்வளவு சாமர்த்தியமும் இல்லை. ஐயா! இந்த அரண்மனைக்குள் வருவதற்குச் சுரங்கபாதை ஒன்று இருக்கிறதல்லவா?…”

 

சின்னப் பழுவேட்டரையர் திடுக்கிட்டு, “பெண்ணே! அதைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்? மூன்று நாலு பேரைத் தவிர அந்தப் பாதையைப் பற்றி யாருக்கும் தெரியாதே! தெரிந்தவர்கள் உயிரோடு திரும்பிப் போக முடியாதே?” என்று பரபரப்புடன் கேட்டார்.

 

“தளபதி! அதைப்பற்றி இன்று அதிகாலையிலேதான் நான் தெரிந்துகொண்டேன். அங்கே கையில் கூரிய எறிவேலுடன் பாண்டிய நாட்டுச் சதிகாரன் ஒருவன் ஒளிந்து கொண்டிருப்பதையும் பார்த்தேன்…”

 

“கடவுளே! இது என்ன பயங்கரமான வார்த்தை சொல்லுகிறாய்?… அந்த பாதை… அந்தப் பாதை… எங்கே போய் முடிகிறது என்று தெரியுமா?”

 

“பொக்கிஷ நிலவறை வழியாகப் போகிறது!” என்றாள் பூங்குழலி. “ஆகா! நீ சொல்லுவது உண்மையாக இருக்கலாம். மனிதப் பெண் உருக்கொண்ட அந்த மாய மோகினியின் வேலைதான் இது! என் தமையனை அடிமை கொண்ட பெண் பேயின் வேலைதான் இது. ஐயோ! எத்தனை தடவை நான் எச்சரித்தேன்? பெண்ணே! நீ சொல்லுவது சத்தியமா? நீயே பார்த்தாயா? அந்தப் பாதை இருக்குமிடம் உனக்கு எப்படித் தெரிந்தது?…

 

“என் அத்தை இன்று காலையில் அழைத்துப் போனபோது தெரிந்தது…”

 

“அவள் யார் உன் அத்தை?”

 

“முதன் மந்திரியின் கட்டளையின் பேரில் தாங்கள் அனுப்பிய பல்லக்கில் கோடிக்கரையிலிருந்து கொண்டுவரப் பட்டவள்தான், ஐயா! நாம் இதைப்பற்றி மேலும் இங்கே பேசிக் கொண்டேயிருக்கும்போது…”

 

“உண்மைதான்! நான் உடனே பெரிய பழுவூர் அரண்மனைக்குப் போய் வேண்டிய ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன். அதற்குள் நீ…”

 

“நான் இந்தப் பக்கத்து முனையில் நின்று பார்த்துக் கொள்கிறேன்…”

 

“ஆகா! உன்னை நான் எப்படி நம்புவது? நீ அந்தப் பாண்டிய நாட்டுத் சதிகாரர்களுக்கு உடந்தையானவள் இல்லை என்பது என்ன நிச்சயம்? என்னைப் போக்குக் காட்டி ஏமாற்றி விட்டு…”

 

“தளபதி, அப்படியானால் என்னுடன் தாங்களும் வாருங்கள்! ஒரு தீவர்த்தி எடுத்துக்கொண்டு வாருங்கள்! இரண்டு பேருமாகப் போய்ப் பார்ப்போம்! போகும்போது எனக்குத் தெரிந்த மற்ற விவரங்களையும் சொல்கிறேன்…”

 

சின்னப் பழுவேட்டரையர் உடனே வாசற்பக்கம் சென்ற தமது வீரர்களில் சிலரை அழைத்து அவர்களிடம் ஏதோ சொன்னார். அவர்கள் பழுவூர் அரண்மனைக்குப் போகிறார்கள் என்று பூங்குழலி ஊகித்துக் கொண்டாள். வீரர்களில் ஒருவன் கையில் பிடித்திருந்த தீவர்த்தியைக் கோட்டைத் தளபதி வாங்கிக் கொண்டு வந்தார்.

 

“பெண்ணே! வழிகாட்டிச் செல்! நீ சொன்னதெல்லாம் உண்மைதானா என்று பார்த்து விடுகிறேன்” என்றார் காலாந்தககண்டர்.

 

அப்போதும் அவர் மனத்தில் பூங்குழலியைப் பற்றிச் சந்தேகம் தீரவில்லை. இந்தப் பெண் பொய்யும் புனைசுருட்டும் சொல்லித் தன்னை ஏமாற்றப் பார்க்கிறாளோ, என்னமோ! சுரங்கப் பாதையைப் பற்றித் தன் மூலமாக அறிந்துகொள்ள விரும்புகிறாளோ, என்னமோ? அதன் வழியாகக் கொடும்பாளூர் ஆட்களைக் கோட்டைக்குள் விடுவதற்கு இது ஒரு சூழ்ச்சியோ என்னமோ!… அப்படியெல்லாம் தன்னை எளிதில் ஏமாற்றிவிட முடியாது இவள் அத்தகைய உத்தேசத்துடன் தன்னை அழைத்துப் போனால் இவளுக்குச் சரியான தண்டனை விதிக்க வேண்டும். பெரிய பழுவேட்டரையரைப்போல் நான்கூட ஏமாந்து விடுவேனா, என்ன? எல்லாவற்றுக்கும் இவள் முன்னால் போகட்டும், சுரங்கப்பாதை இவளுக்குத் தெரியும் என்பது உண்மைதானா என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். பிறகு அங்கே சதிகாரர்கள் ஒளிந்திருப்பது உண்மைதானா என்று அறியலாம். அது உண்மையாயிருந்தால், கடவுளே! எத்தகைய ஆபத்து! நல்ல வேளையாக அதைத் தடுப்பதில் கஷ்டம் ஒன்றுமில்லை. பொந்தில் ஒளிந்திருக்கும் நரியைப் பிடிப்பதுபோல் பிடித்துக் கொன்று விடலாம்!..

 

இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டு சின்னப் பழுவேட்டரையர் பூங்குழலிக்குப் பின்னால் நடந்தார். அவளுடைய நடையில் இருந்த வேகத்தைக் குறித்து அதிசயப்பட்டார்.

 

ஆம்; பூங்குழலியின் உள்ளப் பரபரப்பு அப்போது உச்ச நிலையை அடைந்திருந்தது. அதற்குத் தகுந்தாற்போல் அவளுடைய நடையும் துரிதமாயிருந்தது.

 

பூங்குழலியின் வாழ்க்கையில் சில காலமாகவே அபூர்வமான சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அன்றைக்கு நிகழ்ந்தவை போல் அதற்கு முன் என்றும் நடந்ததில்லை. அதிகாலையில் அவளைத் தூக்கத்திலிருந்து அத்தை தொட்டு எழுப்பினாள். அவர்கள் படுத்திருந்த அந்தப்புரத்தின் மேல் மச்சுப் பலகணியில் கோரமான முகம் ஒன்று தெரிந்தது; உடனே அது மறைந்தது. மந்தாகினி சத்தம் செய்யாமல் எழுந்து பூங்குழலியையும் அழைத்துக்கொண்டு மூடிக்கிடந்த சிற்ப மண்டபத்துக்குள்ளே சென்றாள். மேல் மச்சுப் பலகணியில் பார்த்த அதே பயங்கரமான முகம் இராவணனுடைய தலைகளுக்கும், அவன் கைகளினால் தாங்கிக்கொண்டிருந்த கைலையங்கிரிக்கும் நடுவில் ஒரு கணம் தெரிந்து மறைந்தது. இருவரும் அச்சிலையின் அருகில் சென்று பார்த்தார்கள். இராவணன் தலைகளுக்கு இடையே சுரங்க வழி ஒன்று ஆரம்பமாகிச் செல்கிறது என்று பூங்குழலி அறிந்தாள். மந்தாகினி முதலிலும், பூங்குழலி அவளைத் தொடர்ந்தும் அச்சுரங்கப் பாதையில் இறங்கிச் சென்றார்கள். பூங்குழலிக்கு முதலில் கண்ணே தெரியவில்லை. அத்தகைய அந்தகாரம் சுரங்கப் பாதையில் குடிகொண்டிருந்தது. அத்தையின் கையைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறித்தான் போனாள். பாதையிலிருந்து சில படிகள் ஏறியதும் ஒரு மண்டபத்துக்குள் இருவரும் வந்து விட்டதாகத் தோன்றியது. அங்கேயும் இருளடர்ந்து தானிருந்தது. கையினால் தடவிப் பார்த்துக் கொண்டு தூண்களிலும், சுவர்களிலும் முட்டிக்கொள்ளாமல் போவதே கஷ்டமாயிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் மேலே எங்கிருந்தோ சிறிய பலகணிகளின் வழியாகச் சொற்ப வெளிச்சம் வரத் தொடங்கியதும், பொழுது நன்றாய்ப் புலர்ந்திருக்கவேண்டும் என்று பூங்குழலி ஊகித்தாள். அத்துடன் அவர்கள் சுற்றி அலைந்து கொண்டிருப்பது பொக்கிஷ நிலவறை என்பதையும் தெரிந்து கொண்டாள். ஆனால் மந்தாகினி அத்தை எந்த மனிதனைத் தேடிக்கொண்டு வந்தாளோ, அவன் அகப்படுவான் என்று தோன்றவில்லை. இருள் சூழ்ந்த அந்த நிலவறையில் ஒளிந்து கொள்வதற்கு எத்தனையோ இடங்கள். அவன் எங்கே ஒளிந்திருக்கிறானோ, என்னமோ? நாம் அவனைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால், அவன் நம்மைக் கண்டுபிடித்துப் பின்புறமாக வந்து குத்திக் கொன்றாலும் கொன்றுவிடலாம்; இந்த நிலவறையில் கேள்வி முறை ஒன்றும் இராது.

 

பூங்குழலி இப்படி எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது மந்தாகினி அவளுடைய அபூர்வமான குரலில், – மானிடக்குரல் என்றோ, பிராணியின் குரல் என்றோ கண்டுபிடிக்க முடியாத குரலில், – கூச்சலிட்டாள். அதைத் தொடர்ந்து பீதி நிறைந்த ஒரு மனிதக் குரல் ஓலமிட்டது. நிழல் போன்ற உருவம் ஒன்று தடதடவென்று ஓடியது. பலகணியில் முகத்தைக் காட்டிய மனிதனாகத்தான இருக்கவேண்டும் என்று பூங்குழலி தீர்மானித்துக்கொண்டாள். அத்தையின் குரலைக் கேட்டு அவன் பேயோ, பிசாசோ என்று பயந்து ஓடுகிறான் என்று பூங்குழலி அறிந்தாள். இந்த எண்ணம் அவளுக்குச் சிரிப்பை உண்டாக்கியது. சிறிது நேரத்துக்கு ஒரு முறை மீண்டும் மந்தாகினி அத்தை அந்த மாதிரி குரல் கொடுத்து அம்மனிதனை அங்குமிங்கும் தெறிகெட்டு ஓடி அலையும்படி செய்தாள். கடைசியாக அவள் ஓடிப்போய் மரக்கதவு ஒன்றில் மோதிக் கொண்டான். பிறகு, அக்கதவை தடதடவென்று தட்டினான். விட்டுவிட்டு நாலைந்து தடவை தட்டினான். பின்னர் கதவு திறந்தது. திறந்த இடத்தில் பெண் ஒருத்தி நிற்பது தெரிந்தது. அவளிடம் அம்மனிதன் ஏதோ கூறினான். அந்தப் பெண் சிறிது தயங்கியதாகவும், அம்மனிதன் அவளை பயமுறுத்தியதாகவும் தோன்றியது. பிறகு அவள் திரும்பிப் போனாள். மனிதன் கதவினருகிலேயே நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பெண் கையில் ஒரு விளக்குடன் வந்து சேர்ந்தாள். இருவரும் நிலவறைக்குள் நுழைந்தார்கள். மந்தாகினி, பூங்குழலியின் கையைப்பிடித்து அழைத்துச் சென்று ஒரு பெரிய தூணின் மறைவில் நின்று கொண்டாள். விளக்கு வெளிச்சத்தில் அந்த மனிதனுடைய முகத்தோற்றத்தை அவர்கள் நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.

 

அந்த மனிதனும் விளக்குக்கொண்டு வந்த பெண்ணும் நிலவறையின் உட்பகுதிக்குச் சென்றார்கள். “பேயாவது? பிசாசாவது? நன்றாகப் பீதி அடைந்து போயிருக்கிறாய்! இவ்வளவு பயந்தவன் இந்தமாதிரி காரியத்துக்கு ஏன் வரவேண்டும்?” என்று அந்தப் பெண் கேட்டது பூங்குழலியின் காதில் நன்றாக விழுந்தது. ‘எந்த மாதிரி காரியம்’ என்பது அவ்வளவு நன்றாகப் பூங்குழலிக்கு விளங்கவில்லை.

 

நிலவறைக்குள்ளே விளக்குடன் அவர்கள் மறைந்ததும் மந்தாகினி பூங்குழலியைக் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டு போய்த் திறந்திருந்த கதவின் வழியாக வெளியேறினாள். நடை பாதையைக் குறுக்கே நடந்து கடந்து ஒரு பெரிய தோட்டத்துக்குள் அவர்கள் பிரவேசித்தார்கள். அங்கே ஏகாந்தமான ஓரிடத்தில் மந்தாகினி பூங்குழலியிடம்தான் சொல்ல வேண்டியதைச் சமிக்ஞை பாஷையினால் தெரிவித்தாள். “என்னுடைய அந்தியகாலம் நெருங்கிவிட்டது. நான் கடைசியாகக் கண்ணை மூடுவதற்குள்ளே இளவரசனை ஒருமுறை பார்க்கவேண்டும். நீ போய் இச்செய்தியைச் சொல்லி அவனைக் கையோடு அழைத்து வர வேண்டும்” என்பதுதான் அச்செய்தி.

 

பூங்குழலி அவளுடைய அத்தையிடம் கொண்டிருந்த அன்பு நாம் நன்கு அறிந்ததே, அம்மாதிரி சமயத்தில் அவளை விட்டு விட்டுப்போகவும் பூங்குழலிக்கு மனம் வரவில்லை; அவள் வார்த்தையைத் தட்டவும் இயலவில்லை. எனினும், அதே சமயத்தில் பொன்னியின் செல்வரைப் பார்ப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பம் என்னும் எண்ணம் அவளை உடனே முடிவுக்கு வரும்படி செய்தது. அத்தையிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றாள். தோட்டத்தின் மதிள் ஏறிக் குதித்து அப்பால் சென்று தஞ்சை நகரின் கோட்டை வாசலையும் கடந்தாள். அங்கே ஆழ்வார்க்கடியானைச் சந்தித்தாள். அவனும் முதன் மந்திரியின் ஆக்ஞையினால் பொன்னியின் செல்வரைப் பார்ப்பதற்கே போவதாக அறிந்தாள். அந்த வீர வைஷ்ணவனுடைய உதவியினால் அவளுடைய பிரயாணமும் சௌகரியமாக நடந்தது.

 

அன்றைக்கு அதிர்ஷ்டம் நெடுகிலும் அவள் பக்கம் இருந்தது. குடந்தை ஜோதிடர் வீட்டின் வாசலில் இளைய பிராட்டியின் ரதத்தை அவர்கள் கண்டார்கள். இளவரசரைப் பற்றிக் குந்தவை தேவிக்கு ஏதேனும் செய்தி தெரிந்திருக்கலாம் என்று எண்ணி விசாரிப்பதற்காக ஜோதிடர் வீட்டில் நுழைந்தார்கள். அங்கே பெரிய பழுவேட்டரையரின் வாய் மொழியினால் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களைப்பற்றி அறிய நேர்ந்தது. பொக்கிஷ நிலவறையில், ஒளிந்திருந்தவன் அந்தச் சதிகாரர்களில் ஒருவன்தான் என்பதைப் பூங்குழலி நிச்சயித்துக் கொண்டாள். அதே சமயத்தில், இளவரசருக்கும் சதிகாரர்களினால் அபாயம் ஏற்படலாம் என்று அந்த வேதனைக்கு ஒரு பரிகாரமாயிருந்தது. இளவரசி வானதியைக் காப்பாற்றப்போன இடத்தில் இளவரசரையும் சந்திக்கலாயிற்று.

 

எல்லாவற்றையும்விட அவளுக்குத் திருப்தி அளித்த காரியம். தஞ்சாவூருக்குப் போவது பற்றி அவளுடைய யோசனையை இளவரசர் ஏற்றுக் கொண்டது தான். இலங்கையில் தம்மைத் தெரியப்படுத்திக் கொள்ளாமல் யானைப்பாகனைப் போல் அவர் யாத்திரை செய்வதுண்டு என்பதை அவள் அறிந்திருந்தாள், அங்கே சேநாதிபதியையும் படைவீரர்களையும் அவர் பிரிந்து தன்னை மட்டும் யானை மேல் ஏற்றிக்கொண்டு கடற்கரைக்கு விரைந்து வந்ததையும் அவள் மறந்துவிடவில்லை. எனவே இச்சமயமும், இளவரசர் அதே முறையைக் கடைப்பிடித்தால் நல்லது என்றும், அவர் தனியாகப் போனால் தஞ்சைக் கோட்டைக்குள் போக இயலாது என்றும், தன்னையும் வானதியையும் அழைத்துப் போனால் யானைப்பாகன் என்று எண்ணி விட்டுவிடுவார்கள் என்றும் சொன்னாள்.

 

“சமுத்திர குமாரி! நல்ல யோசனை சொன்னாய். ஒரு பெரிய ராஜ்யத்துக்கு முதன் மந்திரியாக இருக்க நீ தகுந்தவள்!” என்று இளவரசர் கூறிய மொழிகளை நினைத்து நினைத்து அவள் உள்ளம் பூரித்தது.

 

ஆனால், இவ்விதம் அந்த நிமிஷம் வரையில் அவள் நினைத்தபடியே எல்லாம் நடந்திருந்தும் என்ன உபயோகம்? அவள் எதிர்பார்த்தபடி மந்தாகினி அத்தை சக்கரவர்த்தி படுத்திருந்த அறையில் இல்லை! அவளைப் பற்றி அங்கே யாரிடமும் விசாரிக்கவும் கூடவில்லை. “என்னுடைய இறுதிக் காலம் நெருங்கி விட்டது” என்று அத்தை சமிக்ஞையினால் அறிவித்ததை எண்ணிய போதெல்லாம் பூங்குழலியின் நெஞ்சு ‘பகீர்’ என்றது. ‘இவ்வளவு சிரமம் எடுத்துச் சாதுர்யமாகப் பேசி இளவரசரை இங்கே அழைத்து வந்திருந்து என்ன பயன்? அத்தையைக் காணவில்லையே’ அவள் நெஞ்சு துடிதுடித்தது. நிலவறையிலேயே இன்னும் இருக்கிறாளோ என்று தோன்றியது. ஒருவேளை அந்தப் பாதகச் சதிகாரனால் அங்கேயே கொல்லப்பட்டிருப்பாளோ என்று எண்ணியபோது அவள் நெஞ்சு பிளந்தே போயிற்று.

 

சுரங்கப்பாதை வழியாக நிலவறைக்குள் போய்ப் பார்க்க விரும்பினாள். ஆனால் அரண்மனையில் அப்போது இளவரசரின் வரவு காரணமாக ஒரே கோலாகலமாயிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகப் பெண்கள் போவதும் வருவதுமாயிருந்தார்கள். கூட்டம் கூட்டமாக வந்து சக்கரவர்த்தி படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்து விட்டுப்போன வண்ணமிருந்தார்கள். இதற்கிடையில் தான் மட்டும் அந்தப் பழைய சிற்ப மண்டபத்துக்குத் தனியாகப் போவதை யாராவது பார்த்தால் என்ன நினைத்துக் கொள்வார்கள்? அந்தச் சதிகாரன் ஒருவேளை இன்னமும் அங்கே இருந்தால், தான் அவனிடம் தனியாகப் போய் அகப்பட்டுக் கொள்வதும் உசிதமல்ல. எத்தனையோ நெஞ்சத்துணிவுள்ள பூங்குழலிக்கும் அந்த இருளடர்ந்த பொக்கிஷ நிலவறை சிறிது பயத்தை அளித்தது.

 

ஆகையினாலேயே சின்னப் பழுவேட்டரையரிடம் சொல்லி, அவரையும் அழைத்துக் கொண்டு போய் நிலவறையில் தேடிப் பார்க்கத் தீர்மானித்தாள். காலாந்தக கண்டரோடு வாதம் செய்து அவர் மனத்தைத் திருப்பி அழைத்துப் போவதற்குச் சிறிது அவகாசம் ஆகிவிட்டது. அதை நினைத்துத்தான் அவள் இப்போது மிக விரைவாக நடந்தாள். விரைவில் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று அவளுடைய உள்ளுணர்ச்சி கூறியது. அதனால் தனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் பாதகமில்லை. அத்தைக்கு ஒன்றும் நேரக்கூடாதென்று மனப்பூர்வமாக விரும்பினாள்.

 

சிற்ப மண்டபத்துக்குள் பிரவேசிக்கும் சமயத்தில், அரண்மனை மாடத்திலிருந்து ஏதோ கரிய நிழல் விழுவது போலிருந்தது. சுவர் ஓரமாக ஓர் உருவம் போவது போலவுமிருந்தது. அவை உண்மையா அல்லது பிரமையா என்று பார்த்துத் தெளிவதற்காகச் சற்று நின்றாள்.

 

“பெண்ணே! ஏன் நிற்கிறாய்? பொய் வெளிப்பட்டு விடுமே என்று பயப்படுகிறாயா?” என்று சின்னப் பழுவேட்டரையர் கூறியது காதில் விழுந்ததும், மேலே விரைந்து நடந்தாள்.

 

சிற்ப மண்டபத்துக்குள் சென்றதும் இராவணன் தலைகளுக்கும், கைலையங்கிரிக்கும் நடுவில் இருந்த துவார வாசலைப் பூங்குழலி சின்னப் பழுவேட்டரையருக்குச் சுட்டிக் காட்டினாள்.

 

“சரிதான்! இறங்கு முதலில்!” என்றார் கோட்டைத் தளபதி.

 

ஏனோ பூங்குழலிக்குத் தயக்கம் உண்டாயிற்று. அவள் உடம்பு நடுங்கிற்று.

 

அதே சமயத்தில் ‘கிறீச்’ என்று அமானுஷியமான குரல் ஒன்று ஓலமிடும் சத்தம் கேட்டது. அது தன்னுடைய அத்தை மந்தாகினியின் குரல் என்பதை உடனே உணர்ந்து கொண்டாள். அந்த ஓலக்குரல் அரண்மனைக்குள்ளே சக்கரவர்த்தி படுத்திருக்கும் அறையிலிருந்து வருகிறது என்பதையும் அறிந்தாள். உடனே அவளுடைய தயக்கம் தீர்ந்துவிட்டது.

 

சின்னப் பழுவேட்டரையரைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அரண்மனை அந்தப்புரத்தை நோக்கி விரைந்து ஓடினாள். மீண்டும் அந்தப் பயங்கர ஓலக்குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. சக்கரவர்த்தி படுத்திருந்த அறைக்குள் அவள் பிரவேசித்த போது, அங்கே தோன்றிய காட்சி அவள் உள்ளத்தில் ஒரு பெரிய சித்திரக் காட்சியைப் போல் பதிந்தது.

 

சக்கரவர்த்தி சாய்ந்து படுத்த வண்ணம் தமது அருமைக் குமாரன் அருள்மொழியின் கைகளைத் தமது கைகளால் பிடித்துக் கொண்டிருந்தார். அவர்கள் இருவருக்கும் முன்னால் மந்தாகினி அத்தை நின்று ஓலமிட்டாள். ஒரு பக்கத்தில் வானதியும், அவளை மருமகளாகப் பெறுவதற்கிருந்த மலையமான் மகளும் நின்று கொண்டிருந்தார்கள். எல்லாரும், வெறி கொண்டவள்போல் கூச்சலிட்ட மந்தாகினியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

மேல் மண்டபத்தின் முகப்பிலிருந்து பாய்ந்து வந்த கூரிய வேலை அவர்களில் யாரும் கவனிக்கவில்லை.

 

பூங்குழலி தன் அத்தையை நோக்கி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்றாள்.