Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 1

அத்தியாயம் – 1

மத்திய நவம்பர் மாதத்தில் ஒரு நாள்… கீற்றாய் எட்டிப்பார்த்த பிறைநிலவை முற்றிலும் சூழ்ந்து மறைத்திருந்தது, கருத்துத் திரண்டிருந்த கார்மேகம். காற்றில் கலந்திருந்த குளிர்ச்சியும் மண்வாசமும் அருகில் எங்கோ மழை பெய்து கொண்டிருப்பதை அறிவுறுத்தியது. அமாவாசை போல் எங்கும் கும்மிருட்டு… வளர்ந்துவரும் குடியிருப்புப் பகுதியில் ஆங்காங்கே முளைத்திருக்கும் கடைகளும் வெகுநேரம் விழித்திருப்பதில்லை என்பதால் மின்விளக்கின் ஒளியும் குறைந்துவிட்டது. ஆள்நடமாட்டமும் அதிகமில்லை. சிவம் கம்பியூட்டர்ஸில் மட்டும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அடிக்கடி சுவர் கடிகாரத்தையும் கைக்கடிகாரத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா சரியாக பத்துமணியானதும் சட்டென்று எழுந்து அலைபேசி, தொப்பி மற்றும் சாவியை கையிலெடுத்துக் கொண்டு மின்விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்து ‘ஷட்டரை’ இழுத்து மூடி பூட்டினாள்.

 

இடியும் மின்னலும் அச்சுறுத்தியது. பத்து நிமிடம் முன்பாகவே பூட்டிவிட்டு கிளம்பியிருக்கலாம். ஆனால் முதலாளி விசுவாசத்திற்கு எதிராக இம்மி பிசகவும் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. தோள்பட்டையில் தவழ்ந்த கூந்தலை உச்சியில் அல்லி முடிந்து ரப்பர் பேண்டில் அடக்கியவள், கையிலிருந்த தொப்பியை தலையில் வைத்துக் கொண்டு சாலையில் இறங்கி வேகமாக நடந்தாள். அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேண்டும், உயரமான உடல்வாகும் தன்னை ஆண்பிள்ளை போல் காட்டும் என்பது அவளுடைய கணக்கு. தற்காப்பு கலைகளில் கைதேர்ந்தவள் என்றாலும், வரும்முன் காக்கும் எச்சரிக்கை உணர்வும் நல்லதுதானே!

 

ஆந்திரப்பிரதேசம் அனந்தபூர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பயிலும் மிருதுளாவிற்கு தாய் மட்டும் தான். அவர் அனுப்பும் சொற்ப பணத்தில் அறை வாடகை மட்டும்தான் கொடுக்க முடியும். சாப்பாடு மற்றும் இதர செலவுகளுக்கு தாயை துன்புறுத்தாமல் இருக்க அவள் கண்டுபிடித்த வழிதான், இந்த பகுதி நேர பிரவுசிங் சென்டர் வேலை.

 

சாலையில் ஜனநடமாட்டமே இல்லை. அவள் தங்கியிருக்கும் வீட்டை அடைய இன்னும் அரை மைல் தூரம் நடக்க வேண்டும். அவள் ஒரு தடகள வீராங்கனை என்பதால் நடப்பதோ ஓடுவதோ அவளுக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் இன்றைய பிரச்சனை உறுமும் வானம்தான். எந்த நேரத்திலும் கொட்டித் தீர்த்துவிடும் அபாயத்தில் இருந்தது. அடியை எட்டிப்போட்டு வேகமாக நடந்து கொண்டிருந்த போது கையிலிருந்த அலைபேசி ஒலித்தது. அம்மாதான்… அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்தாள்.

 

“சொல்லுங்கம்மா”

 

“கிளம்பிட்டேன்… கிளம்பிட்டேன்…”

 

“பத்து நிமிஷத்துல போயிடுவேன்…”

 

“இல்லல்ல… பக்கத்துல வந்துட்டேம்மா… வீட்டுக்கு போயிட்டு கூப்பிடுறேன்” – அஞ்சிய அன்னைக்கு ஆறுதல் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். தூறல் துவங்கியது. மிருதுளாவின் நடையில் வேகம் கூடியது.

 

சாலை விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருந்தன. அதிலும் சில பழுதாகியிருந்ததால், இருளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. மழைவேறு நன்றாகக் பிடித்துவிட்டது. என்றைக்கும் இல்லாதவிதமாக அவள் மனம் ஏனோ பதட்டம் கொண்டது. சற்று முன்னதாகவே கிளம்பியிருக்கலாமோ என்று தோன்றியது. இனி யோசித்து பலனில்லை. இன்னும் சற்றுதூரம் தான். அதோ…. அந்த வளைவில் உள்ள முதல் வீட்டின் மாடியில்தான், தோழி இனியாவோடு தங்கியிருக்கிறாள். இரண்டே நிமிடத்தில் போய்விடலாம். இன்னும் வேகமாக நடந்தாள். அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது. அவள் மனம் கொண்டிருந்த பதட்டத்தை மேலும் அதிகரிப்பது போல், ‘தட்… தட்…’ என்கிற பெரிய சத்தம் மழையின் ‘ச்சோ..’ வென்கிற ஓசையையும் மீறிக் கொண்டு கேட்டது.

 

முகத்தில் வடியும் நீரை வழித்தெறிந்துவிட்டு பார்வையை கூர்மையாக்கி சத்தம் வந்த திசையை நோக்கினாள் மிருதுளா. ஒரு மனித உருவம்… பருமனான ஆண் உருவம் தரையில் கிடந்தது. அதன் விசித்திரமான அசைவுகள் அவள் கவனத்தை கூர்மையாக்கியது. எழ முயற்சிக்கிறான். மண்டியிடக் கூட முடியாமல் மீண்டும் கீழே விழுகிறான்… மீண்டும் முயற்சிக்கிறான். ‘ஓடு… உதவி செய்…’ என்று உள்ளே ஓர் குரல் ஓங்கி ஒலிக்க, சூழ்நிலையைப் பற்றி சிந்திக்கக் கூட தோன்றாமல் அவனிடம் ஓடினாள். அருகில் செல்லச் செல்ல, எமனிடம் மன்றாடும் அவனுடைய மரண முனகல் அவள் செவியை எட்டியது. துளைப்பட்ட அவன் உடலிலிருந்து பெருகும் செங்குருதி மழைவெள்ளத்தோடு கரைந்தோடிய காட்சி அவளை உலுக்கியது.

 

“ஐயோ” என்று பெருங்குரலில் கத்தினாள். கீழே கிடந்தவன் சிரமப்பட்டு அவளை திரும்பிப் பார்த்தான். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற மிருதுளாவின் முகத்தைப் பார்த்ததும் பேயை கண்டது போல் அவன் முகம் மிரண்டு போனது. மறுகணமே முணுமுணுப்பாக ஏதோ சொன்னான். மூளை மறைத்துப் போய் செயலற்று நின்ற மிருதுளா அவன் ஏதோ சொல்வதை உணர்ந்து, “எ… என்ன சார்? யார் நீங்க? ஆம்…ஆம்புலன்ஸ்… கூப்பிடுறேன். பயப்படாதீங்க…” என்று தடுமாற்றத்துடன் பேசியபடி அவனிடம் அமர்ந்து அவன் கையைப் பிடித்து தைரியம் கூறினாள். கூடவே அலைபேசியை எடுத்து ஆம்புலன்ஸ் சேவை தொடர்பு எண்ணை தேடினாள்.

 

சட்டென்று அவள் கையிலிருந்த அலைபேசியை தட்டிவிட்ட அந்த மனிதன், “கோ…” என்றான் கரகரத்த குரலில். மிருதுளா புதிராக அவனைப் பார்த்தாள்.

 

மடிந்துக் கொண்டிருந்த உடம்பில் மிச்சமிருந்த அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி “போ இங்கிருந்து…” என்று உறக்கக் கத்தினான்.

 

உடல் தூக்கிப்போட சட்டென்று பின்வாங்கிய மிருதுளா சிந்தனையுடன் அவனைப் பார்த்தாள்.

 

“ஐம்… ஐம் ட்ரையிங் டு ஹெல்ப் யூ…” என்று மெல்ல முணுமுணுப்பாக ஆரம்பித்து, “உனக்கு உதவி செய்ய ட்ரை பண்ணறேய்யா… என்ன பிரச்சனை உனக்கு?” என்று பதிலுக்கு கத்தினாள். கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது. அறிமுகமற்றவன்தான். ஆனால் அவனுடைய துடிப்பையும் துன்பத்தையும் அவளால் சகிக்க முடியவில்லை.

 

சட்டென்று அவளுக்குள் ஓர் அதீத தைரியம் தோன்றியது. அதை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு அவனை தூக்கி அமர வைக்க முயன்றாள். உதவிக்கு யாரேனும் வரமாட்டார்களா என்று சுற்றிச் சுற்றி பார்த்தாள். “யாராவது இருக்கீங்களா? ப்ளீஸ் ஹெல்ப்…” என்று சத்தமாகக் கத்தினாள். மீண்டும் அலைபேசியை எடுத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடர்புகொள்ள முயன்றாள். அவளுடைய எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை.

 

அந்த மனிதனின் நிலைமை மேலும் மோசமானது. மூச்சுவிட சிரமப்பட்டான். கேவிக்கேவி இழுத்தது. உயிர் நிற்கப் போகிறதோ என்கிற சந்தேகம் எழுந்ததும் அவளுடைய பதட்டம் அதிகமானது.

 

“ஒன்னும் இல்ல சார்… பயப்படாதீங்க… சரியாயிடும்… ஹாஸ்ப்பிட்டல் போயிடலாம்… யாராவது இருக்கீங்களா…. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க… ஹெல்ப்…” என்று பெருங்குரலில் மீண்டும் மீண்டும் கத்தினாள். அடுத்த சில நொடிகளில் காலடி சத்தம் கேட்டது. உதவிக்கு யாரோ வந்துவிட்டார்கள் என்னும் நிம்மதியோடு நிமிர்ந்து பார்த்தவள் விதிர்விதிர்த்துப் போனாள். துப்பாக்கி முளைத்த கையேடு இருள் மறைவிலிருந்து வெளிப்பட்ட ஐந்தாறு பூதங்கள் அவளை நெருங்கி கொண்டிருந்தன.

 

மிருதுளா மிரண்டுபோனாள். அவளுடைய இதயம் தாறுமாறாகத் துடித்தது. அம்மாவின் பிடிவாதத்தால் அரைகுறையாக கற்றிருந்த தற்காப்புக் கலையெல்லாம் துப்பாக்கி முனையில் எம்மாத்திரம். முயன்று பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இம்மி கூட தோன்றவில்லை.

 

“ஓடு… ஓ..டி…டு…” – தட்டுத் தடுமாறி உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசினான் அந்த மனிதன்.

 

ரெத்த வெள்ளத்தில் செத்துக் கொண்டிருக்கும் மனிதன்… கையில் துப்பாக்கியோடு நெருங்கி வரும் பூதங்கள், ‘ஓடு ஓடு…’ – மூளை விரட்டியது… கீழே கிடப்பவனும் அதையே அறிவுறுத்தினான். நொடி பொழுதில் முடிவு செய்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவனை விட்டுவிட்டு இருட்டுக்குள் புகுந்து ஓடினாள்.

 

“புடிங்கடா அவனை…” – ஓடுவது ஆண் என்கிற எண்ணத்துடன் அந்த ரெத்த வெறி பிடித்த மிருகங்கள் அவளைத் துரத்தின.

 

கண்மண் தெரியாமல் காட்டுத் தனமாக ஓடினாள் மிருதுளா… உயிருக்கு பயந்து ஓடுகிறவள் வைத்துப்பார்ப்பாளா என்ன! கையிலிருந்த போன்… சாவி… கால் செருப்பு… ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பறந்துவிட, காற்றை கிழித்துக் கொண்டு பறந்தாள். அவர்களும் விடாமல் பின்தொடர்ந்தாள். அரனாய் சூழ்ந்திருந்த இருளோடு, அவளுடைய தடகள திறமையும் சேர்ந்துகொள்ள, அந்த அரக்கர்களிடமிருந்து வெகுதூரம் ஓடிவந்து மூச்சிரைக்க நின்றாள்.

 

மழை ஓய்ந்துவிட்டது… இதயத்தின் தடதடப்பு ஓயவில்லை. உடலின் நடுக்கம் குறையவில்லை. வாயாலும் மூக்காலும் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளியேற்றியபடி மிராண்ட விழிகளுடன் சுற்றும்முற்றும் பார்த்தாள். யாரும் தொடர்ந்துவரவில்லை… ஆனால் எந்த நேரமும் வந்துவிடலாம்… ‘ஓடு ஓடு…’ என்று மூளை விரட்டியது. ஆனால் உடல் துவண்டது… வறண்டுபோன நா மேலண்ணத்தில் ஒட்டியது… இதற்கு மேல் ஓடமுடியாது. இங்கேயே ஏதாவது உதவி கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் என்று எண்ணி மீண்டும் ஒருமுறை சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். குடியிருப்புப்பகுதிதான். ஆனால் வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகதான் இருந்தன. அதில் ஒரு வீட்டில் மட்டும் மின்விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அங்கு சென்று உதவி கேட்கலாம் என்று எண்ணி ஓடினாள். அருகில் சென்ற பிறகு மீண்டும் பயம் வந்தது.

 

இது எந்த இடம்… எவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கிறோம் என்பதெல்லாம் புரியாத நிலையில், இப்போது அந்த வீட்டின் கதவைத் தட்டி தன்னிலை விளக்கம் கொடுத்து உதவி கேட்டு… அவர்கள் இவளை நம்பி உதவி செய்வதற்குள் அந்த காட்டுமிராண்டிகள் இங்கு வந்துவிட்டால்? அல்லது இந்த வீட்டிற்குள் வேறு ஏதாவது சைக்கோ கொலைகாரன் இருந்தால்? – பயத்தில் தறிகெட்டு ஓடிய சிந்தனைகள் முற்றுப்பெறுவதற்குள் வீட்டின் கதவு திறக்கப்பட்டது. சட்டென்று இருளில் பதுங்கினாள் மிருதுளா.

 

நெடிய உருவம் கொண்ட ஒருவன் வீட்டிலிருந்து வெளியே வந்தான். அதே நேரம் அவளை துரத்திக் கொண்டு வந்த பூதங்களில் ஒன்று சாலையில் வேகவேகமாக நடந்து வந்து கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது. “பீங் பீங்…” – இருளில் அவளுக்கு வெகு அருகில் நின்ற கார் அன்லாக் ஆனது. வீட்டிற்குள் இருந்து வெளிப்பட்ட அந்த நெடியவன்தான் கையிலிருக்கும் சாவியால் தூரத்திலிருந்தே அன்லாக் செய்திருக்க வேண்டும்.

 

அவ்வளவுதான்… அதற்கு மேல் அவள் எதையும் யோசிக்கவில்லை. சட்டென்று காரின் பின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து சீட்டிற்கு இடையில் படுத்து தன்னுடைய மெல்லிய உடலை மறைத்துக் கொண்டாள். கண்களை இறுக்கமாக மூடி மூச்சுக்காற்றை சீராக்க முயன்றாள். உயிர் பயத்தில் அவள் உடல் நடுங்கியது. ‘தப்பித்துவிடலாம்… தப்பித்துவிடலாம்…’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். இந்த கார் எங்கு சென்று நிற்கிறதோ அங்கு இறங்கி கொள்ளலாம். மற்றதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி மனதை தைரியப்படுத்திக் கொண்டாள். மூச்சு மெல்ல சமன்பட்டது.

 

மறுகணமே அங்கு அடிபட்டுக் கிடந்த மனிதன் நினைவில் வந்தான். அவனுடைய வலியும் துடிப்பும் ரெத்தமும் இவளை உலுக்கியெடுத்தது. கண்களை மூட முடியவில்லை. ‘செத்துருப்பானா… இல்ல இன்னமும் துடிச்சுக்கிட்டு இருப்பானா…’ – உள்ளே வலித்தது. ‘சகமனிதனை இப்படி வதைக்கிறார்களே! இவர்களையெல்லாம் அந்த கடவுள் தண்டிப்பாரா?’ – மனம் தவித்தது. கண்களில் கண்ணீர் கசிந்தது. கைகள் இரண்டாலும் வாயை அழுந்த மூடிக் கொண்டு மெளனமாக கண்ணீர் வடித்தாள்.

 

இந்த புது மனிதனிடம் நடந்ததையெல்லாம் சொல்லி உதவி கேட்கலாமா… அம்புலன்ஸுக்கு போன் செய்ய சொல்லலாமா… போலீசில் புகார் கொடுக்க துணைக்கு அழைக்கலாமா… என்றெல்லாம் யோசித்தபடி, மெல்ல சீட்டுக்கு அடியிலிருந்து நகர்ந்து தலையை மட்டும் தூக்கி வெளியே பார்த்தவளின் முகம் மிரட்சியில் வெளிறியது. காரணம் அவளை துரத்திக் கொண்டு வந்த அரக்கன் இவனிடம் வெகு பணிவாக பேசிக் கொண்டிருக்க, அவன் தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டுவது போல் இவன் ஏதோ சொன்னான்.

 

‘சர்வநாசம்… ஒழிந்தோம்…’ – மிருதுளாவின் உடல் வெடவெடத்தது. ‘இவன் சொல்லித்தான் அந்த பூதங்கள் அந்த கொலையையே செய்திருக்கும் போலிருக்கிறதே! மூட்டை பூச்சிக்கு பயந்து காட்டு மிருகத்திடம் வந்து சிக்கிக் கொண்டோமா!’ – நெஞ்சை அடைத்தது. ‘இப்போது என்ன செய்வது!!! மெல்ல காரிலிருந்து இறங்கி மீண்டும் இருளுக்குள் பதுங்கிவிடலாமா’ – அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே நெடியவன் கரை நோக்கி திரும்பிவிட்டான். அனிச்சையாய் சீட்டுக்கு அடியில் பதுங்கினாள் மிருதுளா.

 

சற்று நேரத்தில் கார் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. உள்ளே ஒருவன் ஏறி அமர்வதும் தெரிந்தது. அவன் கதவை மூடிய வேகத்தில் இவள் இதயம் எகிறிக் குதித்தது.

 

சில நொடிகளுக்குப் பிறகு, “ஐம் கம்மிங்… கெட் எவ்ரிதிங் ரெடி…” என்கிற அவனுடைய அழுத்தமான குரலை தொடர்ந்து கார் மெல்ல நகர்ந்தது.

 




9 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Usha mohan says:

    Super interesting update thank u


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Super…. next epi eppo


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Interesting…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    Super and thrilling


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ramanujam Iyer says:

    Asathal arambam sis
    Happy new year💐💐💐💐💐💐💐💐💐


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Umamanoj says:

    வாழ்த்துக்கள் நித்யா..தொடக்கமே தூள் பறக்குது..😊


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    reka perumal says:

    nice


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shanthi Murugan says:

    nice start mam.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Nice and thrilling start

You cannot copy content of this page