நிழல்நிலவு – 2
15814
8
அத்தியாயம் – 2
‘கோர்த்தா கேங்க்’ – 1970 களில் ஒரிசாவில் தலையெடுத்த இந்த மாபியா கேங்க் மெல்ல மெல்ல நாடு முழுவதும் பரவி இன்று அழிக்க முடியாத மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துவிட்டது. இவர்களுடைய முக்கியமான குறிக்கோள் கனிம சுரங்கங்கள் தான்.
ஒரிசாவில் உள்ள தொண்ணூறு சதவிகித கனிம சுரங்கங்கள் இவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இது தவிர மற்றவர்களின் கைவசம் இருக்கும் சில சுரங்கங்களிலும் இவர்களுடைய ஆதிக்கம் தலைதூக்கியிருந்தது. கனிமவள விதிகளை மீறி குவாரிகளில் நடக்கும் மோசடிகள் அநேகம். அனுமதிக்கப்படாத இடங்களில் கனிமங்களை வெட்டி எடுத்தல், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான கனிமங்களை வெட்டியெடுத்தல், அரசுக்கு காட்டும் கணக்குவழக்கில் குளறுபடி போன்ற பல மோசடிகள் அனுதினமும் அரங்கேறிக் கொண்டிருந்தன. இவை அனைத்திற்கும் முதுகெலும்பாய் இருந்த கோர்த்தாவை அணுஅளவுக் கூட அரசால் அசைக்க முடியவில்லை.
காரணம், இன்று நாட்டை ஆளும் இருபெரும் சக்திகளான அரசியல்வாதிகளுக்கும் கார்ப்பரேட் எனப்படும் பெருநிறுவனங்களுக்கும் தடைகளை அகற்றும் தளபதிகளாக செயல்படும் மாஃபியாக்களில் முக்கியமானது இந்த கோர்த்தா கேங்.
இவர்கள் செய்யாத வேலை என்று எதுவும் இல்லை. வீடு மட்டும் அல்ல… நாடு புகுந்து ஆட்களைக் கடத்தியிருக்கிறார்கள். உளவு பார்த்திருக்கிறார்கள். ஒட்டுக்கேட்டிருக்கிறார்கள். வதந்திகளை பரப்பியிருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். திருடியிருக்கிறார்கள். பெண்களைத் தூண்டிலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கணக்கற்றமுறை கொலை செய்திருக்கிறார்கள். தங்களுடைய இலக்கை அடைய எதையும் செய்யத் துணிந்தவர்கள். ஒருவரை பலி கொடுத்தால் ஒன்பது பேரை பழிவாங்கும் போர் குணம் படைத்தவர்கள்.
இந்த குழு ஒருங்கமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பை உடைக்காமல் இவர்களை அழிக்க முடியாது. அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. கிட்டத்தட்ட இயலாதக் காரியம் என்று கூட சொல்லலாம். காரணம் இந்த குழுவை யார் எங்கிருந்து இயக்குகிறார்கள்… எத்தனை பேர் இதில் இணைந்திருக்கிறார்கள்… அவர்களுடைய தொடர்பு ஊடகம் என்ன… திட்டங்கள் என்னென்ன… எதுவும் யாருக்கும் தெரியாது. நெருங்க முடியாத இடத்தில் இருந்துக்கொண்டு நினைத்ததை சாதித்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கத்தின் அனைத்து குவாரி டெண்டர்களும் இவர்கள் விரும்பும் கைகளுக்கு மட்டுமே வந்து சேருவதால் இவர்களுக்கு ‘டெண்டர் மாஃபியா’ என்கிற பெயரும் உண்டு.
நாட்டின் பொருளாதாரத்தை செல்லரித்துக் கொண்டிருந்த, கண்ணுக்குத் தெரியாத இந்த மாஃபியா கேங்க், வருவாய் மற்றும் குற்றவியல் புலனாய்வு துறையின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தது. இதைப்பற்றியெல்லாம் செவிவழி செய்தியாகக் கூட கேள்விப்பட்டிராத மிருதுளா ‘கோர்த்தா’ என்னும் இரும்பு கோட்டையின் முக்கிய தளபதி ஒருவனுடைய காரில் அவனுடைய அனுமதியில்லாமல் பயணம் செய்து கொண்டிருந்தாள்.
காரை ஓட்டிக் கொண்டிருந்த மனிதன் அமைதியாக இருந்தாலும் அவனை சுற்றியிருந்த காற்றில் கூட ஒருவித இறுக்கம் இருப்பதை உணர்ந்தாள் மிருதுளா. பேராபத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, கார் எந்த நேரத்திலும் நிற்கலாம், கிடைக்கின்ற முதல் வாய்ப்பிலேயே இறங்கி ஓடிவிட வேண்டும் என்கிற முடிவோடு பலமணிநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சோர்ந்து போனாள். பின் மெல்ல நினைவுகள் மங்கி… மயக்க நிலையில் மரக்கட்டையாய் கிடந்தாள்.
அவள் மீண்டும் கண்விழித்தபோது, தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது. உணர்ந்து கொண்டதும் சட்டென்று பரபரப்பு தொற்றிக் கொள்ள அவன் பார்த்துவிடுவானோ என்கிற பயத்துடன் மேலும் சீட்டிற்கு அடியில் பதுங்கினாள். மூச்சுவிடக் கூட அஞ்சியவளாக இறுகிப் போய் கிடந்தாள். அவளுடைய புலன்கள், காருக்குள் ஏதேனும் அரவரம் இருக்கிறதா என்பதை கூர்ந்து கவனித்தன. எந்த சத்தமும் இல்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு மெல்ல மண்டியிட்டு கண்ணாடிவழியே வெளிப்புறத்தைப் பார்த்தவளின் விழிகள் விரிந்தன. காரணம் பளபளவென்று புலர்ந்துவிட்ட வானம் உணர்த்திய நேரம்… நேற்று நள்ளிரவுக்கு பிறகுதான் என்றாலும் இன்று காலை வரை பயணம் செய்திருக்கிறாள் என்றால் எவ்வளவு நேரம்… எவ்வளவு தூரம்! – மிருதுளாவின் வயிறு கலங்கியது. எங்கு வந்திருக்கிறோம்! கடவுளே! – காய்ந்து போயிருந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு வெளிப்புறத்தை நோட்டமிட்டாள்.
செந்நிற ஓடு பதித்த நீண்ட ட்ரைவ்வே ஓரிடத்தில் பிரிந்து அரைவட்டமாக வளைந்து சென்றது. அதற்கு நடுவில் செராமிக் டைல்ஸால் செய்யப்பட்ட செயற்கை நீரூற்று… அதை சுற்றிலும் அலங்காரமாய் வண்ண மலர்கள்… இருபுறமும் அழகிய தோட்டம்… மேலும் சீரான இடைவெளியில் அடுக்கி வைக்கப்பட்டது போல் ட்ரைவ்வே-யின் இருபுறமும் வளர்ந்து நின்ற மரங்கள்… இவை எதுவுமே அவள் கருத்தில் பதியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை என்பது மட்டுமே அவள் கவனத்தில் இருந்தது.
மெல்ல கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள் திகைத்து நின்றாள். உள்ளே இருந்து பார்த்த போது அந்த கட்டிடம் அவள் கண்ணில் படவில்லை… கட்டிடமா! வெறும் கட்டிடம் என்று என்று சொல்லிவிட முடியாது… பெரிய மாளிகை… வெண்ணிற மாளிகை… உயரமான தூண்கள், பிரம்மாண்டமான நுழைவாயில், கலைநயத்துடன் அகண்டு உயர்ந்த இரட்டை மரக்கதவுகள் அத்தனையும் அவளை அச்சுறுத்தியது.
மெல்ல நகர்ந்தாள். பூனை போல் அடியெடுத்துவைத்து அங்கிருந்து செல்ல எத்தனித்து மெயின் கேட் பக்கம் திரும்பியவள் தயங்கி பின்வாங்கினாள். இங்கிருந்து தப்பிக்க வழியே இல்லை என்று தோன்றியது. காரணம் அவள் நிற்கும் இடத்திலிருந்து மெயின் கேட்டிற்கு செல்ல வேண்டிய தொலைவு… அந்த தொலைவை யார் கண்ணிலும் படாமல் கடப்பதென்பது இயலாத காரியம். அப்படியே கடந்துவிட்டாலும் கேட்டிற்கு அருகில் நிற்கும் சீருடை அணிந்த கார்ட்ஸை சமாளிப்பது எப்படி! மிருதுளாவின் அடிவயிறு தடதடத்தது. உடல் நடுங்கியது. வேறு வழி ஏதேனும் இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“ஹேய்… கியே தூம்???” – எங்கிருந்தோ ஒரு குரல் அதட்டியது. ‘ஒரியா!!!’ – அவளுடைய தாய் மொழி… – ‘ஒடிசாவிற்கு வந்துவிட்டோமா!’ – அவள் பார்வை அனிச்சையாய் குரல் ஒலித்த திசையில் பாய்ந்தது.
சிவந்த விழிகளும், கடுமையான முகபாவமுமாக அவளிடம் நெருங்கி கொண்டிருந்தான் ஒரு சஃபாரி மனிதன். அவனைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. மிருதுளாவின் கால்கள் பின்னோக்கி நடந்தன. அவனுடைய கை வெஸ்ட் பெல்டிற்கு சென்றது.
‘துப்பாக்கியை எடுக்கப்போகிறான்… சுடப்போகிறான்…’ – “நோ…..!!!” – அடுத்த சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் தெறித்து ஓட துவங்கிவிட்டாள்.
“ஏய்… நில்லு… நில்லு…” – ஓரியாவில் கர்ண கொடூரமாக கத்தியபடி அவளை துரத்தினான். அடுத்த நொடியே இன்னும் சிலரும் அவனோடு சேர்ந்து கொண்டார்கள்.
பதட்டத்தில் அங்கும் இங்கும் ஓடியவள் இறுதியாக அந்த மாளிகைக்குள் ஓடினாள். என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று எதுவும் புரியவில்லை. உயிர் பிழைத்தால் போதும் என்கிற ஒரே எண்ணம் அவளை விரட்டியது. பெரிய ஹால்… பல அறைகள்… அங்கும் இங்கும் புகுந்து… சோஃபாவிலும்… சேரிலும்… மேஜையிலும் நுழைந்து இறுதியாக மாடிப்படியை நோக்கி ஓடினாள். தலைதெறிக்க மாடி காரிடாரில் ஓடியவள் கண்ணில் பட்ட ஒரு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி தாழிட்டாள்.
தான் மாடிப்படியில் காலடி எடுத்து வைத்த மறுகணமே தன்னை துரத்திக்கொண்டு வந்த படை ஷாக் அடித்தது போல் நின்றுவிட்டதையும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் திகைத்துப் போனதையும் அறியாமல் மேல் தாழ்ப்பாளையும்… கீழ் தாழ்ப்பாளையும் மாற்றி மாற்றி அழுத்தி பூட்டிக் கொண்டிருந்தாள்.
உஸ்-புஸ்ஸென்று மேல்மூச்சு வாங்கியது… இதயம் தடதடத்தது. உடல் வியர்வையில் குளித்துவிட்டது. சிறிதும் குறையாத பதட்டத்துடன் கதவின் மீதே ஓரிரு நொடிகள் சாய்ந்து நின்றாள். ‘தப்பித்துவிட்டோமா! பிழைத்துவிட்டோமா!’ – நம்ப முடியவில்லை… பதட்டம் சற்று குறைந்தது. மெல்ல மெல்ல ஆசுவாசப்பட்டாள். திடீரென்று அதே அறையிலிருக்கும் இன்னொரு கதவில் அரவரம் கேட்டது. மீண்டும் பதட்டத்தின் உச்சத்திற்குச் சென்றாள்.
‘கடவுளே! கடவுளே! வந்துட்டானுங்களா!’ – பயத்தில் இதயம் எகிறிக் குதித்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒளிவதற்கு இடம் தேடினாள்… அதோ கட்டில்… ‘ஓடு… ஓடு…’ – மூளை விரட்டியது. சட்டென்று பாய்ந்துச் சென்று கட்டிலுக்கு அடியில் நுழைந்து, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு கடவுளின் நாமத்தை மனதிற்குள் முணுமுணுத்தாள்.
அறைக்குள் நடமாட்டம் தெரிந்தது. அழுத்தமான காலடி ஓசை அவள் இதயத்தை எகிறிக்குதிக்கச் செய்தது. அதோ…! லெதர் ஷூ அணிந்த ஒரு ஜோடி கால்கள்… அவளை நோக்கி தான் வருகிறது… க…ட..வு…ளே! – மிருதுளாவின் உடல் வெடவெடத்தது. மூச்சுக்காற்றின் வேகம் அதிகமானது. கைகளால் வாயை அழுந்த மூடிக் கொண்டு அமைதிகாக்க முயன்றாள்.
“கிர்… கிர்…” – அலைபேசியின் வைபிரேஷன் ஒலி எங்கோ கேட்டது. அவளை நோக்கி வந்த கால்கள் இப்போது விலகிச் சென்றன.
“வாட்ஸ் த மேட்டர்?” – அந்த குரல்… அவள் காரில் கேட்ட அதே குரல்… அமைதியாக… அழுத்தமாக ஒலித்தது. அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. கால்கள் மீண்டும் அவளை நோக்கி… நெருங்கி வந்தன… கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு ‘கடவுளே கடவுளே கடவுளே’ என்று இடைவிடாது ஜெபித்தாள். மெல்ல இமைத்திறந்து பார்த்தாள். இப்போது கட்டிலுக்கு மிக நெருக்கமாக வந்து நின்றது அந்த கால்கள்.
‘குனிய போறான்… பார்க்கப் போறான்… கொல்லப்போறான்…’ – பீதியுடன் காத்திருந்தாள். நல்லவேளை… அவன் குனிந்து பார்க்கவில்லை. மீண்டும் அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றான். ‘தேங்க் காட்…’ – அவளுடைய இறுக்கம் தளர்ந்தது… முழுமையான விடுதலை இல்லைதான்… ஆனாலும் மனம் சற்று ஆசுவாசமடைந்தது… ஒரு முறை இயல்பாக மூச்சுவிட்டாள். மறு நொடியே அவளுடைய கால்கள் அசுரத்தனமாக பின்னால் பிடித்து இழுக்கப்பட்டன.
******************
அனந்தபூரிலிருந்து மஹல்பாட்னாவிற்கு ஒரே மூச்சாக பயணம் செய்திருந்தாலும் ஓய்வெடுக்கும் உத்தேசமில்லாமல் உடனடியாக ரெஃப்ரெஷ் செய்து உடைமாற்றிக் கொண்டு, பேஸ்மெண்ட்டுக்கு செல்ல தயாரானான் அர்ஜுன் ஹோத்ரா. அங்கே மிக முக்கியமான வேலை ஒன்று அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தது. லெதர் கோட், கையுறை சகிதம் குளோசெட்டிலிருந்து வெளியே வந்தவன் அறையில் ஏதோ மாற்றத்தை உணர்ந்து சட்டென்று நின்றான். இறுகியிருந்த அவன் முகம் மேலும் இரும்பு குண்டலம் போல் மாறியது. அவனுடைய அழுத்தமான பார்வை அறையை வட்டமடித்து, தாழிட்டிருந்த கதவில் வந்து மோதியபோது எச்சரிக்கையானான். இடுப்பிலிருந்த துப்பாக்கி கைக்கு இடம் மாறியது. அதே நேரம் மேஜையில் இருந்த அலைபேசி வைபிரேட் ஆனது. எடுத்து காதுக்கு கொடுத்தான்.
“வாட்ஸ் த மேட்டர்?”
“இட்ஸ் எ கேர்ள்… அத்துமீறி நுழஞ்சிருக்கா… மாடிலதான் இருக்கா. கார்ட்ஸ் ஆர் வெயிட்டிங் ஃபார் யுவர் ஆர்டர்” – சுருக்கமாக கூறினான் சுஜித் சிங்.
அர்ஜுன் ஹோத்ராவின் விழிகள் சிவந்தன. அவனுடைய புலன்கள் அனைத்தும் அறையை நோட்டமிடுவதில் கவனமாயின. மெல்ல அடியெடுத்துவைத்து அறையை சுற்றிவந்தவன் கட்டிலை நெருங்கும் போது அந்த மெல்லிய சத்தத்தை உணர்ந்தான். மூச்சுவிடும் சத்தம்… அவனுக்கு புரிந்துவிட்டது… மெல்ல கட்டிலை சுற்றி வந்து சட்டென்று கீழே குனிந்து கையில் அகப்பட்ட அவளுடைய காலை பிடித்து வேகமாக வெளியே இழுத்தான். அலறிவிட்டாள் மிருதுளா.
குப்புறக் கிடந்தவளின் பின்னந்தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தி, “ஸ்டாப் ஷெளட்டிங்” என்றான் அடிக்குரலில்.
பேராபத்தின் தீவிரம் நெஞ்சை உலுக்க கைகள் இரண்டாலும் வாயை இறுக்கமாகப் மூடிக் கொண்டாள். கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது. வெடிக்க துடிக்கும் விம்மலை அடக்க பெரும்பாடுபட்டாள். மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது.
“டர்ன் அரௌண்ட்…” – ‘திரும்பு’ – கரகரத்தது அவன் குரல். பயத்தில் உறைந்துப் போய் கிடந்தவள் திரும்பவில்லை. அர்ஜுன் ஹோத்ராவின் தாடை இறுகியது. பற்களை நறநறத்தபடி துப்பாக்கியை மேலும் அழுத்தி, “டர்ன் அரௌண்ட்” என்றான் குரலை உயர்த்தி.
சட்டென்று அவள் உடல் தூக்கிப்போட்டது. மிரட்சியுடன் மெல்ல திரும்பினாள். அவனுடைய பார்வை கூர்மையானது.
தலை குனிந்திருந்தாள். முன்பக்கம் சரிந்துவிழுந்த கேசம் அவள் முகத்தை முழுவதுமாக மறைத்திருந்தது. கைகளிரண்டையும் நெஞ்சுக்கு குறுக்கே இறுக்கமாகக் கட்டி கொண்டு குறுகி அமர்ந்தாள். ஆடை அழுக்கில் குளித்திருந்தது. உடல் வெடவெடவென்று நடுங்கியது.
“லுக் அட் மீ” – ஆணையிட்டான். அவள் நிமிரவில்லை. அவளுடைய கீழ்படியாமை அவனுடைய கோபத்தை மேலும் தூண்டியது.
“காண்ட் யு ஹியர் மீ?” என்றான் கடுமையாக.
அவன் அதட்டி வேகத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் மிருதுளா. முன்பக்கம் சரிந்துக் கிடந்த கேசத் திரையின் வழியே அவள் பார்வை அவன் கண்களை சந்தித்தது.
அந்த அரைகுறை தரிசனம் அவனுக்கு போதவில்லை. அவளை முற்றிலும் அறிந்துகொள்ளும் ஆவலுடன் துப்பாக்கியால் அவள் முகத்தை மறைத்திருந்த முடியை விளக்கினான். அவன் புருவங்கள் உயர்ந்தன. பால்முகம் மாறாத சிறு பெண். துப்பாக்கியை உயர்த்திப் பிடித்திருந்த கை தானாக கீழே இறங்கியது.
மருண்ட விழிகள்… கனிந்த இதழ்கள்… சிவந்த முகம்… – அவன் பார்வை அவளை அளந்தது. அவளுடைய அதீத பயத்தை அவனால் உணர முடிந்தது. இமை மூடித் திறந்து அவன் பார்வையை சந்தித்த மிருதுளாவின் கண்களும் சூழ்நிலையை மறந்து அவனை ஆராய்ந்தன.
ஆறடி உருவம்… அளவான உடற்கட்டு… மேல்நோக்கி படிய வாரியிருக்கும் கருங்கசம்… அகண்ட நெற்றி… அடர்ந்த புருவம்… விடைத்த நாசி நேர் நாசி… இறுகிய முகம்… பிறகு அந்த பார்வை… எதிரிலிருப்பவர்களை துளைத்து ஊடுருவும் துஷ்டப்பார்வை…
“கெட் அப்…” – அவனுடைய அதிகாரக் குரல் அவளை தன்னிலைக்கு மீட்டது.
பயத்துடன் எழுந்த மிருதுளா, கைகளைக் கட்டிக் கொண்டு குறுகி நின்றாள். துடிக்கும் இதழ்களை மடித்துக் கடித்து பயத்தை மறைக்க முயன்றாள். அந்த சிறுபிள்ளை முயற்சி அவன் கண்களில் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. ‘இந்த இடத்திற்கு பொருத்தமில்லாதவள்… அதுவும் என் வீட்டிற்கு…’ – அவன் மனம் அடித்துக் கூறியது. ஆனாலும் அந்த கேள்வியை அவன் கேட்டான்.
“யார் உன்ன அனுப்பியது?”
8 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
semma epi ma
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thrilling…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ayyayo kadasila matinde matintala???
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Wow.. let him be kind for her
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Super
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you Rajee… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
பரபரப்பான அப்டேட்… நெஞ்சில் திக் திக் இதய வேக ஓட்டத்துடன் தான் படிச்சேன்.. அடுத்த அப்டேட் சீக்கிரம் போடுங்க நித்யா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you Uma… 🙂