Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal episode43
1163
0
அடுத்து நகர்ந்த இரண்டு நாட்களிலும் ராஜன் ஸ்ரீயைத் தொடவில்லை. அமைதியாக அவள் சென்னைக்கு செல்வதைப் பற்றிக் கேட்டபோது அவனே டிக்கெட் எடுத்துத் தருவதாக மட்டும் சொன்னான்.
பொதுவான விஷயங்கள் பேசுவான். ஆனால் அவள் அறைக்குள் செல்ல மாட்டான்.
ராஜன் அன்றிரவு வந்ததும் அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபோதும் ஸ்ரீ அவன் பார்வையில் வித்தியாசம் காணவில்லை.
உடையை மாற்றாமல் அவள் அறைக்குள் வந்து அவளை பார்த்து பேச ஆரம்பித்தபோது கூட அவனிடமிருந்து அந்தக் கேள்வியை எதிர்ப்பார்க்கவில்லை.
“ஸ்ரீ நீ மசூத்தை கல்யாணம் பண்ணப்போறியா? ”
“ தெரியலை ராஜன் ஏன் கேட்குற? ”
“ சும்மாதான். நான் கல்யாணம் பண்ணப்போறேன்! ”
“ ஓ! எப்போ? ”
“ நாளைக்கு! ”
மனதில் சிறியதாய் அல்ல பெரியதாய் ஒரு சந்தேகம் அப்போதுதான் ஸ்ரீக்கு தோன்றியது.
“ என்ன திடீரென்று? உங்க அப்பாவுக்கு தெரியுமா? ”
“ தெரியாது. பிறகு சொல்லிப்பேன். கோபியை மட்டும் தான் கல்யாணத்திற்கு கூப்பிடணும். புது டிரெஸ் இப்பதான் வாங்கி வந்தேன். டி.எஸ்.பி சார்கிட்ட காலைதான் பேசணும்.” என்று அவன் சொன்னபோதுதான் அவன் கையில் இருந்த பார்சலைப் பார்த்தாள்.
அவன் திட்டம் முழுதாய் புரிந்தபோதும் அவள் திடமாகவே மனதை வைத்துக்கொண்டு அவனிடம் பேசினாள் “சரி ராஜன் நான் தூங்கப் போறேன். ”
“நில்லு ஸ்ரீ. கல்யாணத்தைப் பற்றி பேசணும். ”
“என்ன பேசணும் ராஜன்? ” என்று அவள் கேட்டபோது அவள் மனதில் இருந்த சந்தேகம் பெரிதாகவே ராட்சசன் போன்ற வடிவமெடுத்தது.
“என் கல்யாணத்தைப் பற்றி பேசணும் ஸ்ரீ. கொஞ்ச நேரம் இங்க உட்கார். ”
ஆனால் ஸ்ரீ அங்கே உட்காராமல் தனது அறைக்குள் சென்று தனது துணிமணிகளை எடுத்து ஒரு கட்டைப் பையில் அடுக்கினாள்.
அவளிடம் மூன்றே சல்வார் கமிஸும் ஒரே ஒரு சேலையும்தான் இருந்ததால் அந்த வேலையும் வெகு சீக்கிரம் முடிந்தது. ராஜன் அவள் அறைக்குள் வந்தபோது ஸ்ரீதான் பட படவென்று பேசினாள்
“ராஜன் என்னால் ஒரு நிமிஷம்கூட நீ பேசுறதை கேட்க முடியாது. நீ என்ன பேசுறன்னு எனக்குப் புரியுது. பொட்டில் அடிச்சமாதிரி நல்லாவே புரியுது. அதில் உனக்கு சந்தேகமே வேண்டாம். நான் கிளம்புறேன். இப்பவே. வர்றேன். ” என்று வாசல்நோக்கி நடந்தவளை ராஜன் கைகளைப் அழுத்தமாகப் பற்றி நிறுத்தினான்.
“ஸ்ரீ உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. உன்னை என்றால் உன்னை. நீ வேறெதாவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. ஒரு நாளில் எடுத்த முடிவு இல்லை ஸ்ரீ இது! சரின்னு சொல்லு. பத்து நிமிஷம்கூட உன்னை நான் யோசிக்க விடமாட்டேன். இத்தனை நாள் சும்மா கட்டிக்கிட்டேன் இப்ப நிஜமாகவே கட்டிக்கிறேன் என்று சொல்றேன். அப்ப சரின்னு சொன்னீல? இப்பவும் சரின்னு சொல்லு. ”
ஸ்ரீ அவன் முகத்தைப் பார்க்காமல் “சரி ” என்றாள்.
“ஏய் முகத்தைப்பார்த்து சொல்லுடி ” என்றான்.
ஸ்ரீ அவன் முகத்தைப் பார்க்கவில்லை.
“முகத்தைப் பார்த்து சரின்னு சொல்லு ஸ்ரீ. ” என்றான் மீண்டும் ராஜன். ஸ்ரீ கண்களை அவன் முகத்தில் செலுத்தவும் அவளை குழந்தைபோல அள்ளிக்கொண்டு அவன் சொன்னான் “ஸ்ரீ டேவிட் சொன்னதுபோல் தாகம் எடுப்பவனுக்கு செம்புத் தண்ணீரும் கொடுக்கலாம் ஒரு மடக்கு தண்ணீரும் கொடுக்கலாம். நான் உனக்கு எவ்வளவு தாகம் என்று தெரிந்துதான் இந்த முடிவு எடுத்தேன். ”
அவனை குளமான கண்களுடன் பார்த்தவள் “நான் இப்ப என்ன செய்யணும்? ” என்றாள்.
“இன்னைக்கு எவ்வளவு லேட்டாக தூங்கினாலும் நாளைக்கு ஆறுமணிக்கு எழுந்திடணும். எட்டு மணிக்கு ரெஜிஸ்டர் ஆஃபிஸ். அதன் பிறகு கரூர் போகணும். அப்பாகிட்ட இரண்டு நாள் இருந்திட்டு மதுரை வரணும். நாம என்ன செய்யப்போறோம் என்று சொல்லிட்டேன். இப்ப தூங்கலாமா? ”
“ம்.. ” (ஆனால் நிஜமாகத் தூங்கப் போகவேயில்லை)
வாசகர்களுக்கு….
இது சிறிய பதிவுதான். சந்தர்ப்பம் அப்படி அமைந்துவிடுகிறது. சீக்கிரம் சுபமாய் இக்கதை முடிந்திடும். உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது. எனது குறை களைச் சாெ ல்லவும். என் எழுத்துக்கள் இன்னும் தரமாக உருவாக அது உதவும். நன்றி
Comments are closed here.