Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal episode 44
1274
0
கடிதம்
மறுநாள் காலை பதினோரு மணிக்கு விழிப்புத்தட்டி எழுந்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தனது செல்பேசிக்கடியில் மடித்து வைக்கப்பட்டிருந்த லெட்டரை எடுத்தான். இமைகள் வலுவில்லாமல் மூடிய போதும் அதனை வேகமாக வாசித்தான். கடிதம் ஓம் என்று ஆரம்பித்தது..
ஓம்
ராஜன் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு! சத்தியமாக ரொம்ப பிடிச்சிருக்கு! நன் பொய் சொல்லவில்லை. என்னை நம்பு. நீ என்னிடம் கல்யாணம் பத்திக் கேட்டப்ப நிஜமாகத்தான் சரின்னு சொன்னேன். உன்கிட்ட மறுக்க முடியல ராஜன். அதான் சரின்னு சொன்னேன்.
ராஜன் ஏன் தெரியமா நாம இறந்தவங்க அஸ்தியை கரைச்சிடுறோம்?
சாஸ்திரத்திற்காகவா கரைச்சிடுறோம்? நம்பாத ராஜன். சாஸ்திரமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
பயம் ராஜன்! மனுஷனுக்கு பயம் ராஜன். நம்ம கூட பேசி சிரிச்சவங்க சாம்பலாக ஆகிட்டாங்களே.. அந்த சிரிப்பை இந்த சாம்பல் கண்ணுல பட்டுப்பட்டு ஞாபகப்படுத்துமே? நீயும் ஒருநாள் இப்டித்தான் ஆகப்போற என்று சொல்லுமே? அதனால வரும் பயம் தான் காரணம் ராஜன். அதான் அந்த சாம்பலை கரைச்சிடுறான். எளிதில் கண்ணில் படாத கடலில் கரைச்சிடுறான்.
எனக்கு சிரிக்கத்தான் தோணுது ராஜன். காசி வரை சாம்பலை கொண்டு போக யோசிக்கிறதுன்னா மனுஷன் எவ்வளவு பயந்தாகோளியாக இருந்திருக்கான் பார்த்தியா ராஜன்? நானும் பயப்படுவேன் ரொம்ப பயப்படுவேன் பல்லிக்கு பயப்படுவேன் என்று நினைக்காத… நான் ப்ளஸ் டூ படிக்கும் போது ஹேம்நாத் அப்பா பார்த்தா ரொம்ப பயமாக இருக்கும். வீட்டிற்கு வரும்போதெல்லாம் தொடுவதும் ‘ஈ’ என்று இளிப்பதும் உரசுவதும் அப்பப்பா அருவருப்பா இருக்கும் ராஜன்.
அவனிடம் இருந்து தப்பிக்கத்தான் நான் பவித்ராவுடன் ஃ ப்ரண்ட் ஆனது. அப்புறம் பணத்தேவை அதிகமானது. டீகிரி முடிப்பதே பெரிய விஷயமாகிடுச்சு. அதுக்கு இரண்டு காரணம் ராஜன்.
ஒண்ணு நான் சரியா படிக்கல. இரண்டு இந்த தொழிலில் கிடைக்கும் பணம்.
முதலில் ரொம்ப பயமா இருந்தது. எவன் தொட்டாலும் கூசும். போக போக பழகிடுச்சு. பணத்தாளின் வாசனை அந்த பயத்தை விரட்டிடுச்சு ராஜன். சரி இப்படி பணம் கிடைக்குதே என்று மனசு அவன் பர்ஸை எடுத்ததும் மாறும் ராஜன். பத்து நூறு ரூபாய் தாள் பார்த்ததும் இரண்டு நாளில் அந்த பயம் போயிடுச்சு ராஜன்.
கொஞ்சம் அழகா இருந்தா இந்த தொழிலில் கஷ்டப்படாமலே நாட்களை நகர்த்தலாம். அழகில் கொஞ்சம் சுமாராக இருப்பதால் அவுங்க பாடு எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
தனு மோகனா இரண்டு பேரும் கதை கதையாக சொல்வாளுங்க. அதையெல்லாம் இந்த பேப்பர்ல்ல எழுதிட முடியாது. அப்புறம் அவனுங்களையும் கொல்லணும் என்று வெறி வரும். அப்புறம் அவனுங்களையும் கையில்ல கிடைக்கற கல்லால அடிப்பேன்.
அப்புறம் கௌன்சிலர் ஆளுங்க என்னைத் தேடுவது போல அவனுங்களும் என்னைத் தேடுவாங்க. எதுக்கு வம்பு? ம்?
எனக்கு ஒண்ணு புரியல ராஜன் கல்யாணம் ஆகாதவனும் காசுக்குதான் வந்திருக்கன்னு கேவலமாக பார்க்குறான். கல்யாணம் ஆனவனும் காசுக்குதான் வந்திருக்கன்னு கேவலமாக பார்க்குறான்.
சரி, நானும் ஒத்துக்குறேன். எனக்கு பணம் வேணும். அதை இப்படித்தான் வாங்கிக்றேன். ஆனா அவன் என்ன திருப்பதி கோயிலுக்கா வந்திருக்கான்? திருப்பதி உண்டியலில்லா காசு போடுறான்? என் முந்தில்ல தானே காசு போடுறான்?
இல்லை நாளைக்கு திரும்ப வராமல் இருப்பானா? இவனுங்க என்னமோ ஒழுக்கசிகாமணி போல என்னை ஒரு அசிங்கப் பார்வை பார்ப்பானுங்க பொறுக்கி பசங்க. நீயும் முதலில் என்னை அப்படித்தான் பார்த்த ராஜன்? எனக்குத் தெரியும். இல்லைன்னு மறுக்காதே.
அந்த ரூபாய்த்தாளின் வாசனையை நான் அவமானமாக உணரல்ல ராஜன்.
அந்த ஜெராக்ஸ் கடையை பார்த்தப்பதான் புரிஞ்சது. பணத்தை அடுத்தவன் கூடப்படுத்துதான் சம்பாதிக்கணும் என்று கிடையாது கால்கடுக்க நின்னும் கிட்டேகூட சம்பாதிக்கலாம் என்று அன்றைக்குத்தான் புரிஞ்சது.
என்கிட்ட ஐஞ்சு லட்சம் இருந்திருந்தா, எனக்கு ஒரு தகப்பன் இருந்திருந்தா, பத்து ஜெராக்ஸ் எடுத்து பொழைக்கத் தெரியாமலா போயிருக்கும் எனக்கு?
பத்து லட்சம் என்னைப் பெத்தவங்க கையில் இருந்திருந்தா நானும் ஜெராக்ஸ் மிஷின் வாங்கிப் போட்டு மாதம் பத்தாயிரம் சம்பாதிச்சிருப்பேன். எனக்கு அப்ப தெளிவு இல்லை ராஜன். வயசு கம்மி தானே. இப்ப தெளிவு இருக்கு.
பவித்ராவுக்கும் தெளிவு வந்திருக்கணும். அதனால் தான் இதிலிருந்து விடுபட காசு காசு என்று அலைஞ்சிருக்கா. அவள் சேர்த்த பணம் எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம். எப்படி சேர்த்தாள் என்றே தெரியல. ஆண்களை அவள் மதிச்சதே இல்லை. திலிப் அதில் ஒரு விதிவிலக்கு. பத்து நாளில் அவன் என்ன பண்ணானோ அவனோடு ஒரு மாதம் மலேசியா போக சம்மதம் சொல்லியிருந்தா. பணத்துக்காக அவ ஒத்துக்கிட்டிருப்பா என்று என்னால நம்ப முடியல.
அவன் பேச்சும் மூச்சும் பிடித்திருக்கணும். அதான் போக சம்மதம் சொல்லியிருப்பா. அவள் சாவு நான் கனவில் கூட நினைக்காதது. எனக்காக அவள் உயிரோட இருந்திருக்கலாம். சரி விடு.. அம்மாவும் பவியும் எனக்காக இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கணும் அவ்வளவு தானே?
ராஜன் நான் ஒண்ணு சொல்லுவேன் நீ கோபப் படக்கூடாது. பவித்ராகிட்டதான் பணம் இருந்தது. நாற்பது லட்சம் இல்லை. எட்டு லட்சம் ராஜன். அவள் திருடவில்லை. திலிப்தான் மலேசியா போறதுக்கு முன் பவித்ராகிட்ட எட்டு லட்சம் கொடுத்திருக்கான். திலிப்தான் கொடுத்தான் என்பதுக்கு என்ன சாட்சி? அவன் அப்ப இந்தியாவில் இல்லையே. அதான் பவித்ரா பணம் தன்னிடம் இல்லை என்று கடைசி வரை சொன்னா. அவள் உண்மையச் சொன்னால் நம்பு வாங்களா? சரி நம்பினாலும் பணத்தைக் கொடுத்ததும் பவியை விட்டிருப்பாங்களா? நாலு தடியனுங்க விட்டிருப்பாங்களா? திலிப்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். பவித்ராவே மொத்த பணமும் எடுத்ததா காட்டவே திலிப்பிடம் விஷயத்தை சொல்லல.
இதை நான் ஏட்டையாவிடம் சொன்னால் அவர் என்னை நம்புவாரா? இல்லை அவர்கூட இருக்கிறவங்க பணத்தில் பங்குகேட்காமல் தான் இருப்பாங்களா? உன் ஸ்டேஷனில் இருக்கும் முப்பது நாற்பது போலிஸ் அதில் பங்பு கேட்காமல் கை கட்டி நிற்பார்களா? அதான் பவித்ராவின் பணத்தைப் பற்றி நான் உன்னிடம்கூட சொல்லல.
பவித்ரா பணம் என்னிடம்தான் இருக்கு. அந்த பணத்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றி என் பழைய வீட்டு சின்டெக்ஸ் வாட்டர் டாங்கிற்கு உள்ளே செலோடேப் போட்டு ஒட்டி வச்சிருக்கேன். அந்த டேங்கில் ஐந்து மணிநேரம் மோட்டர் போட்டாலும் தண்ணீர் நிரம்பாது. நிலத்தடி நீர் குறைந்து பல வருஷம் ஆகிடுச்சு.
எட்டு லட்சம் ராஜன். திலிப் தந்த பணம். அந்த பணம் வைச்சி நாங்க நாலு பேரும் எங்க வாழ்க்கைய நல்ல விதமா வாழ ப்ளான் போட்டோம். ஓண்ணும் நடக்கல. சாவு தான் நடந்தது. இதுக்கு மேல ஒரு வலி நான் அனுபவிக்கணும்ன்னா அது மரணவலியாத்தான் இருக்கணும். அந்த கொடுமையான வலியை மறக்க ஒரு வலிநிவாரணியாக நீ இருந்த. தாங்ஸ் ராஜன்!
பவித்ரா உயிரைக் கொடுத்தா. ஏன் பணம் இருக்கும் இடத்தை கௌன்சிலர் ஆளுங்களிடம் அவள் சொல்லவில்லை? எங்களுக்காகச் சொல்லல! நாங்க அந்த பணத்தை வச்சி நல்லாயிருக்கணும் என்பதற்காகச் சொல்லல்ல! அது பவித்ராவின் V.R.S பணம் L.I.C பணம்.
இப்படி எதுவேணும்னாலும் வச்சிக்கலாம். என்னால உன் கூட இருக்க முடியாமல் பாேனதுக்கு அந்த பணமும் காரணம். ஒரு தொழில் செட் பண்ணணும் ராஜன்.
தனுவுக்கும் மோகனாவுக்கும் விவரம் பத்தாது. எனக்கு தான் கௌன்சிலர் ரூபத்தில் ஏழு வருட ‘….’ பிடிச்சிருக்கே. உன்கூட இருக்க கொடுத்துவைக்கலை.
நான் பார்த்து ஏதாவது செய்யணும். எங்காவது ஜெராக்ஸ் கடை வைத்து பொழச்சுப்போம் ராஜன். அந்த கௌன்சிலர் வீட்டு ஆளுங்க தான் பணத்தை எடுத்திருக்கணும். பவித்ரா மேல பழி போட அவள் அங்க தங்கினது அவுங்களுக்கு வசதியாகப் போச்சு. அதான் மொத்த பணத்தையும் அவள் எடுத்திட்டதா பழி போட்டுட்டாங்க.
திலிப்பிற்கு விஷயம் தெரிந்தாலும் தன் குடும்பத்தைக் காட்டிக்கொடுப்பானா சொல்லு? என்கூட இருந்தால் உனக்கு கௌன்சிலர் ஆளுங்களால் பிரச்சனை வரும் ராஜன்.
நான் நிச்சயம் கல்யாணம் குழந்தை என்று சந்தோஷமா இருப்பேன். என்னை மசூத் முழுமனதாக ஏத்துக்கிடும். நமக்குள் நடந்ததை அவனிடம் மறைக்காமல் சொல்லிடுவேன். அது மட்டும் நிச்சயம். எனக்கு மசூத் தான் சரி ராஜன் அவன் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியலைனாலும் குறைக்க முடியும். அவனை திருத்த முடியும். ஒரு குழந்தை பெத்திட்டா மசூத் சீக்கிரம் மாறிடும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். என்ன .. உன்னை மறப்பது கஷ்டம். ஆனால் முடியாதது கிடையாது ராஜன். அவன் கூட வாழ்றது ரொம்ப ஈசி ராஜன். உன் கூட வாழ்றது ரொம்ப கஷ்டம். எனக்கு அது ரொம்ப கஷ்டம். உன் யூனிபார்ம் அயர்ன் செய்றது, சமைக்கிறது, உன் கூட டி.வி பார்க்கிறது ஏன் உன் ஷுபாலிஷ் போடுறதுகூட எனக்கு கஷ்டம். நமக்குள்ள ஒத்துவராது.
எனக்கு அதற்கெல்லாம் பொறுமை பத்தாது. அப்புறம் நீ ஏன் இதெல்லாம் தெரிஞ்ச உன் உடம்பை மட்டுமே பார்த்த பொண்னை கல்யாணம் செய்துக்கக் கூடாது?
அது தான் சரி. நான் வேண்டாம் ராஜன். கஞ்சாவிற்கும் வெற்றிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
நான் ஒரு போதை ராஜன். போதை தெளியனும் ராஜன். உனக்கும் தெளியணும் எனக்கும் தெளியணும். ஆம். நீயும் கஞ்சா தான் எனக்கு. நீ கூட எனக்கு போதைபோல தான் இருந்த. அதான் உன்கிட்ட நான் சொன்ன சொல்லைக் கேட்கும் நாய்குட்டி போல இருந்தேன். நீ எத்தனை பொண்ணுங்களை பார்த்திருப்ப?
நிச்சயம் நான் தான் முதல் என்று எனக்குத் தெரியும். நான் சொல்றதைக் கேள். இன்னும் இரண்டு பேரை பார். அப்புறம் என் பெயர் கூட உனக்கு மறந்திடும்.
என்ன.. எனக்கு அப்படியில்லை. உன்னை ரொம்ப பிடிச்சிபோச்சு.
நான் எப்படியாவது சமாளிச்சிடுவேன் என்று வச்சிக்கோ. நீ அந்த டி.எஸ்.பி பொண்டாட்டியைப் போல நல்லா படிச்ச பொண்ணா பாரேன். அந்த ஃபின்ச்சஸ்க்கு ராஜன், ஸ்ரீ என்று பெயர் வை.
இதுக்கு மேல எழுத முடியல ராஜன். ரொம்ப அழுகை வருது. உனக்கு விளக்கம் போதும்மா ராஜன்? எனக்கும் இன்னும் நிறைய சொல்லணும் என்று தான் ஆசை. ஆனால் அழுகை வராமல் இருந்தா இன்னும் எழுதுவேன். எச்சில் படவே ஒரு முத்தம் தந்து முடிக்கிறேன் ராஜன். நீயும் என் பெயர் இருக்கும் இடத்தில் ஒன்று கொடுத்திடுப்பா… ப்ளீஸ்… ப்ளீஸ்…
என்றும் அன்புடன் காதலுடன் ஆயிரம் ஆயிரம் ஃஹனி முத்தங்களுடன் உன்
ஸ்ரீ
கடிதம் முடிந்தது….
Comments are closed here.