நான் ரோஜா!!!
5921
10
நான் பிறந்தது ஒரு கிராமம். கிராமம் என்றால் குக்கிராமம் அல்ல. ஓரளவுக்கு நாகரீகமான ஊர்தான். இங்கு படித்தவர்கள் அதிகம். எனது அப்பா கூட அந்த காலத்தில் பிஏ படித்தவர். இப்போது, அதாவது 2003-ல் நான் BSc மூன்றாம் ஆண்டு கணிதம் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு தங்கையும் தம்பியும் உள்ளார்கள். தங்கைக்கும் எனக்கும் ஒரு வயது மட்டுமே வித்தியாசம். அவள் BSc இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் படித்துக் கொண்டிருக்கிறாள். பார்க்க நாங்கள் இருவரும் ஒரே மாதிரி இருப்பதாக நிறைய பேர் கூறியிருக்கிறார்கள். உதாரணமாக சில சம்பவங்களை கூறுகிறேன்.
அது எங்களுடைய பள்ளிப்பருவம். என்னுடைய தங்கை ஒரு முறை ஆசிரியர் அறைக்கு சென்ற போது, எனது வகுப்பு ஆசிரியை நான் என்று நினைத்து அவளை அழைத்து, திருத்தி வைத்திருந்த நோட்டுகளை வகுப்பிற்கு எடுத்து செல்லும்படி கூறியிருக்கிறார்.
தான் யார் என்பதை சொல்லாமல் அந்த ஆசிரியை கொடுத்த நோட்டுகளை கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிட்டு கோபத்துடன், “ஏன்டி நீ என்னைய மாதிரி பிறந்த?” என்று கேட்டு விட்டு சென்றாள்.
நானா அவளைப்போல் பிறந்திருக்கிறேன்? அவள்தான் என்னைப்போல் பிறந்திருக்கிறாள்? – இந்த கேள்வி அவள் எதிரில் இருக்கும் வரை எனக்கு தோன்றவே இல்லை. நான் இப்படித்தான்… யாரேனும் என்னை கிண்டல் செய்தாலோ அல்லது கோபமாக பேசினாலோ, எனக்கு உடனடியாக பதில் சொல்ல வராது. நான் பதில் யோசித்து பேசுவதற்குள் அவர்கள் அந்த இடத்தில் இருந்து சென்றுவிடுவார்கள் அல்லது வேறு டாப்பிக்கிற்கு மாறிவிடுவார்கள். அதனால் பெரும்பாலும் நான் அமைதியாகவே இருந்து விடுவேன்.
இன்னொரு முறை எனது பிடி ஆசிரியை என் தங்கை என்று நினைத்து என்னை அழைத்து ஒரு முன்னாள் மாணவரிடம் என் தங்கையின் விளையாட்டு திறனைப் பற்றி புகழ்ந்து பேசினார். அவரை மறுத்துப் பேச தோன்றாமல் அமைதியாக நின்றுவிட்டு அங்கிருந்து சென்றேன். அன்று இரவு அதைப் பற்றி என் தங்கையிடம் கூறிவிட்டு அதற்கும் அவளிடம் திட்டு வாங்கி கொண்டேன்.
இதுபோல் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நான் என்று நினைத்து என் தங்கையிடமும், என் தங்கை என்று நினைத்து என்னிடமும் நிறைய பேர் பேசியிருக்கிறார்கள். நாங்கள் அப்படி ஒன்றும் இரட்டையர்கள் போல் ஒத்த உருவ அமைப்புடன் இருக்க மாட்டோம். ஆனாலும் புதிதாக பார்க்கிறவர்கள் சற்று குழப்பம் அடைவது உண்டு.
எங்கள் குடும்பத்தில் நான் தான் மூத்தப் பெண். அதனால் என்னுடைய அம்மாச்சி என்னை கல்யாணக் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டார். என்னுடைய அப்பாவும் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.
ஒருநாள் நான் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய போது என்னுடைய தாய் என்னை மிகுந்த மகிழ்ச்சியோடு எதிர்கொண்டார்கள். அதற்கான காரணம் எனக்கு சிறிது நேரத்திலேயே தெரிந்தது.
மாப்பிள்ளையின் பெயர் அஷ்வினாம். சொந்த ஊர் எங்கள் அத்தையின் ஊராம். இரண்டு தலைமுறைக்கு முன்பே சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்களாம். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூர்ல வேலை செய்கிறாராம். நாளை பெண் பார்க்க வருகிறார்கலாம்.
என்னவென்று சொல்ல தெரியவில்லை. ஆனால் உள்ளுக்குள் ஒரு வித சந்தோஷம்… பயம்… எதிர்பார்ப்பு… எல்லாம் கலந்த கலவையான உணர்வு. இரவு உணவு உள்ளே இறங்கவே இல்லை. ஏதோ ஒரு இன்பமான உணர்வு நெஞ்சை அடைத்துக் கொண்டிருப்பது போல் உணர்ந்தேன். படிப்பது போல் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஓரமாக சென்று அமர்ந்துவிட்டேன்.
சிறிது நேரம் கழித்து வீட்டு வேலை அனைத்தையும் முடித்துவிட்டு அம்மா என்னிடம் வந்தார்கள். ஒரு போட்டோவை கொடுத்து பார்க்கச் சொன்னார்கள். தயக்கத்துடன் அதை வாங்கினேன். ஒருமுறை பார்த்துவிட்டு அம்மாவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.
அந்த போட்டோவில் இருந்தவர் என்ன நிறத்தில் சட்டை அணிந்திருந்தார் என்பதைக் கூட நான் பார்க்கவில்லை. அவ்வளவு வெட்கம் என்னை ஆக்கிரமித்திருந்தது.
“நாளைக்கு நீ காலேஜுக்கு போக வேண்டாம். அம்முகுட்டிய அழைச்சுக்கிட்டு பியூட்டி பார்லர் போய்ட்டு வா” – அம்மா சிரித்துக் கொண்டே கூறினார்கள்.
“லீவு போடணுமா! நாளன்னைக்கு மேம் கேட்டா என்ன சொல்றது!” – நான் தவிப்புடன் அம்மாவைப் பார்த்தேன். ‘என்னை பெண் பார்க்க வந்தார்கள் என்று எப்படி வெட்கமில்லாமல் சொல்வது!’ – நினைக்கும் பொழுதே எனக்கு உயிர் போவது போல் இருந்தது.
என்னை பற்றி நன்கு அறிந்த அம்மா, என் முகத்தை வருடி, “அதெல்லாம் அப்பா பார்த்துக்குவாங்க. நீ கவலைப்படாம தூங்கு” என்று கூறிவிட்டு சென்றார்கள்.
அன்று இரவு முழுக்க எனக்கு உறக்கம் வரவில்லை.ஒரு நொடி அந்த புகைப்படத்தில் நான் பார்த்த உருவத்தை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தேன்.
மறுநாள் காலை எழுந்ததிலிருந்தே எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. எந்த வேலை செய்தாலும் தப்பும் தவறுமாக செய்துவிட்டு தங்கையிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தேன்.
அவள் என்னை பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றாள். புருவம் திருத்தி ஃபேஷியல் செய்து, முடிக்கு ஆயில் மசாஜ் செய்து, என்னை ஓரளவுக்கு அழகுபடுத்தி வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தாள்.
எங்களை பார்த்ததும் அம்மா மிகவும் கோபமாகிவிட்டார்கள். ‘நல்லா இருந்த மூஞ்சியை கெடுத்து இப்படி மெழுகு பொம்மை மாதிரி கூட்டிகிட்டு வந்திருக்கியே!’ என்று என் தங்கையை திட்டித்தீர்த்தார்கள்.
நான் பயந்துவிட்டேன். இதற்கு முன் நான் ஃபேஷியல் எல்லாம் செய்ததே இல்லை.இதுதான் முதல்முறை. என்னுடைய முகத்திற்கு அதெல்லாம் செட் ஆகவில்லை போலிருக்கே! – தவிப்புடன் ஓடிச் சென்று கண்ணாடியைப் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது. இந்த வித்தியாசம் எனக்கு பொருந்தவில்லையோ! – எனக்கு அழுகை வருவது போல் இருந்தது.
அப்பா வந்து பார்த்துவிட்டு நன்றாகத்தான் இருக்கிறது என்று சொன்னார்கள். அதன்பிறகுதான் எனக்கு சற்று சமாதானமானது.
மாமா வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தார்கள். சித்தியும் பெரியம்மாவும் கூட வந்திருந்தார்கள். வீடு உறவினர்களால் நிறைந்திருந்தது. விதவிதமாக பலகாரம் செய்தார்கள். வாசலை கூட்டி தண்ணீர் தெளித்து கலர் கோலம் போட்டார்கள். வேலையெல்லாம் முடித்துவிட்டு எல்லோரும் நாகரீகமாக உடை அணிந்து கொண்டார்கள்.
எனக்கு ஃபேண்டா நிறத்தில் பட்டுப்புடவை கட்டிவிட்டார்கள். எங்கள் வீட்டில் கூடுதல் நகையெல்லாம் இல்லை. எனவே சித்தி கொண்டு வந்திருந்த நெக்லஸ், ஆரம், வளையலை எல்லாம் அணிந்து கொண்டு நான் அழகாக தயாராகியிருந்தேன்.
அம்மா சித்தி பெரியம்மா அனைவரும் என்னுடைய அழகை புகழ்ந்து பெருமை பட்டுக்கொண்டார்கள். ஏனோ என் தங்கை மட்டும் திருப்தியடையவில்லை.
“பெங்களூரில் வேலை செய்ற மாப்ள. அவருக்கெல்லாம் இந்த பூவும் நகையும் பிடிக்குமா! அழகா ஒரு சுடிதார் வாங்கியிருக்கலாம். மார்டனா ஹேரை செட் பண்ணியிருக்கலாம். நம்ம பேச்ச இந்த பெருசுங்க எங்க கேக்குதுங்க” என்று அலுத்துக் கொண்டாள்.
எனக்கு பயமாகிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேனா இல்லையா என்கிற சந்தேகம் வந்துவிட்டது. கண்ணாடியைப் போய் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருந்தேன். என்னுடைய தவிப்பைப் பார்த்துவிட்டு, “நல்லாதாண்டி இருக்க. டென்ஷனாகாத” என்று தைரியம் சொன்னாள் என் தங்கை.
மாலை மூன்று மணியிருக்கும். மூன்று கார் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது.
‘மாப்பிள்ளை வீட்லேருந்து வந்துட்டாங்க…’ – மாமாவின் குரல் கொல்லைப்புறத்தை நோக்கிப் பாய்ந்தது. அங்கே போடப்பட்டிருக்கும் சிறு கொட்டகையில் தான் சமையல் வேலையெல்லாம் நடக்கும். அம்மா பெரியம்மா எல்லோரும் அங்குதான் இருக்கிறார்கள் போலும்.
நான் கூடத்தில் உள்ள ஒரு அறையில் தான் இருந்தேன். என்னோடு என் தங்கையும் ஒன்றுவிட்ட சகோதரிகளும் இருந்தார்கள். அவர்களெல்லாம் ஜன்னல் வழியாக மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை எட்டியெட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னையும் பார்க்கச் சொன்னார்கள். ஆனால் எனக்கு பயமாக இருந்தது. அவரை பார்க்க வேண்டும் என்று மனது ஒரு பக்கம் பரபரத்தாலும் அமைதியாவே அமர்ந்திருந்தேன்.
“ஏய் நா பார்த்துட்டேன்… நா பார்த்துட்டேன்… மாப்பிள சூப்பரா இருக்காரு… நானும் பார்த்துட்டேன். ப்ளூ சட்டை… மீசை இல்லாம இருக்காரு. நல்ல ஹைட்டு… செம்ம கலரு… ஹீரோ மாதிரி இருக்காருடி” – ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசப் பேச என்னுடைய இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டது… பயம் அதிகமாகிவிட்டது.
‘அவருக்கு என்னை பிடிக்குமா!’ – கவலையோடு அமர்ந்திருந்தேன்.
வெளியில் என்னுடைய அப்பா பெரியப்பா அனைவரும் அவர்களை வரவேற்கும் குரல் எனக்கு கேட்டது. அவர் ஏதாவது பேசுகிறாரா என்று கவனமாக அவருடைய குரலைக் கேட்க ஆர்வமாக காதை தீட்டிவைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். இங்கு என்னோடு இருந்த வாயாடிகள் பேசிக் கொண்டே இருந்ததால் அவருடைய குரலை என்னால் கேட்க முடியவில்லை. ஒருவேளை அவர் பேசவே இல்லையா என்பதும் எனக்குத் .தெரியவில்லை.
டென்ஷனில் எனக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது. ஃபேனின் வேகத்தை அதிகபட்சம் ஐந்தில் தான் வைக்க முடியும். அதற்கு மேலும் வியர்த்தால் என்ன செய்வது! அங்கே கிடந்த பழைய பத்திரிகை ஒன்றை எடுத்து விசிறிக்கொண்டேன். அங்கிருந்த யாரும் என்னை கவனிக்கவில்லை. அனைவரும் மாப்பிள்ளையை பார்க்கும் ஆர்வத்தில் வெளியே எட்டியெட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சற்று நேரம் கழித்து என்னைத் திரும்பிப் பார்த்த என் தங்கை, “என்னடி இப்படி வியர்க்குது உனக்கு! பயந்தாங்குளி… விட்டா அழுதுடுவே போலருக்கே! ஃபிரீயா இருடி அக்கா…” என்று என் காதுக்குள் முணுமுணுத்து சிரித்துவிட்டு என் கையிலிருந்த பத்திரிக்கையை வாங்கி எனக்கு விசிறிவிட்டாள்.
சற்று நேரத்தில் அம்மாவும் சித்தியும் நாங்கள் இருந்த அறைக்கு வந்தார்கள். ‘பொண்ணு கைல காபியை கொடுத்து கொடுக்க சொல்லுவோமா இல்ல நாமளே கொடுத்துடுவோமா…’ என்று டிஸ்கஸ் செய்தார்கள்.
‘காபியை நா கொண்டு போயி கொடுக்கணுமா! கடவுளே!’ – எனக்கு அப்பொழுதே கைகாலெல்லாம் நடுக்க ஆரம்பித்துவிட்டது. கையை பிசைந்துக் கொண்டு டென்ஷனோடு அமர்ந்திருந்தேன்.
அப்போது உள்ளே வந்த அப்பா என்னை பார்த்துவிட்டு, “புள்ள பயப்படுது போல தெரியாது. அது கையில காபியெல்லாம் கொடுக்காத… நீயே கொடுத்துடு… இல்லன்னா சுமதியை கொடுக்க சொல்லுன்னு” என்று அம்மாவிடம் கூறினார்கள். எனக்கு பெரிய ரிலீஃபாக இருந்தது. நான் அப்பாவை பார்த்தேன்… அப்பாவும் என்னை பார்த்தார்…
“ஒன்னும் இல்லடா… ஃபிரீயா இரு…” – ஒருமாதிரி மெதுவாக கூறிவிட்டு சென்றார். என்னுடைய அப்பா அப்படி பேசி நான் பார்த்ததே இல்லை.. அவருடைய மனதிற்குள் ஏதோ கவலை இருப்பது போல் எனக்குத் தோன்றியது. பெண்ணுக்கு திருமணம் என்றால் இப்படித்தானோ! சந்தோஷம் துக்கம் இரண்டையும் ஒரே நேரத்தில் பெற்றோர் அனுபவிப்பார்கள் போலும்…
வெளியில் டிஃபன் காபி எல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.எல்லோருடைய பேச்சுக்குரலும் எனக்கு கேட்டது. அவர் மட்டும் பேசியது போலவே தெரியவில்லை. ஒருவேளை நான்தான் சரியாக கவனிக்கவில்லையோ! அவருடைய குரல் எப்படி இருக்கும்! – என்னால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
என் தங்கையைப் பார்த்தேன். அவளிடம் ஏதாவது கேட்கலாமா என்று தோன்றியது. ஆனால் என்ன கேட்பது… எப்படிக் கேட்பது என்று புரியவில்லை. நான் யோசித்து முடிவெடுப்பதற்குள், ஒரு பெண் உள்ளே வந்தாள்.
அவளுக்கு என்னுடைய வயதுதான் இருக்கும். மிகவும் அழகாக இருந்தாள். என் தங்கை கூறியது போலவே டிரஸ் பண்ணியிருந்தாள்.
ஒரு சுடிதார்… குட்டியா ஒரு சென்டர் கிளிப்… கொஞ்சம் லிப்ஸ்டிக்… அவ்வளவுதான் அவளுடைய அலங்காரம். பூ கூட வைக்கவில்லை…. எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாள்! எனக்கு கண்ணை அவளிடமிருந்து எடுக்கவே முடியவில்லை. அவளை பார்த்ததுமே எனக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அற்றுப் போய்விட்டது.
‘இந்த குடும்பத்துக்கு கண்டிப்பா என்னைய பிடிக்கப்போறது இல்ல…’ – மனதிற்குள் நானே சொல்லிக் கொண்டேன்.
“ஹாய்… என் பேரு ஹரிணி… மாப்பிள்ளைக்கு தங்கச்சி” – நெற்றியில் விழுந்த முடியை ஒற்றை விரலால் அழகாக ஒதுக்கிவிட்டுக் கொண்டு சிரித்தாள். அவளுடைய ஸ்டைலை பார்த்து எனக்கு நாக்கு வறண்டுவிட்டது.
“ஹாய்…” – பேசவே முடியாமல் பேசினேன்.
அவள் என்னிடம் வேறு எதுவும் கேட்கவில்லை. அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்த பார்வையே என்னை சங்கடப் படுத்தியது. சற்று நேரத்தில் இன்னொரு பெண்மணி உள்ளே வந்தார்கள். அவர்கள் யாரென்று தெரிந்த போது எனக்கு மூச்சுவிடவே சிரமமாக இருந்தது. அவருடைய அம்மாவாம்…!!! – என்னால் நம்பவே முடியவில்லை. சத்தியமாக நம்ப முடியவில்லை.
அவ்வளவு இளமையாக இருந்தார்கள். ஒல்லியாக உயரமாக கலராக இருந்தார்கள். என்னுடைய அம்மாவை விட வயதில் மூத்தவர்களாக தான் இருக்க வேண்டும். ஆனால் நடிகை போல் நகம் வளர்த்து நெயில் பாலீஸெல்லாம் போட்டிருந்தார்கள். என் தங்கையின் கை கூட அவ்வளவு அழகாக இருக்காது. நான் என்னுடைய கையை சேலையில் மறைத்துக் கொண்டேன். எனக்கு நகமே இருக்காது. டென்ஷன் வந்தால் நகத்தைத்தான் கடிப்பேன். அம்மா எத்தனையோ முறை திட்டியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் கேட்கவே இல்லை. இப்போது வருத்தப்படுகிறேன். எனக்கும் அப்படி நீளநீளமாக நகங்கள் இருந்திருக்கக் கூடாதா… – ஆசையாக இருந்தது.
“அஸ்வின் போட்டோ பார்த்தியாம்மா… பிடிச்சிருந்ததா?” – பட்டென்று கேட்டுவிட்டார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. “ஆங்… ப்..ப்..ப்பார்த்தேன்…” என்று உளறிட்டேன்.
என் தங்கை எனக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டாள். எனக்கு தைரியம் கொடுப்பதற்குத்தான் முயற்சி செய்தாள். ஆனால் அந்தப் பெண்மணியின் பார்வை அவள் மீது விழுந்தது.
“நீ யாரும்மா?” என்று கேட்டார்கள்.
“பொண்ணோட தங்கச்சி” – தயக்கமில்லாமல் பதில் சொன்னாள் என் தங்கை.
“ரெண்டு பெரும் ஒரே மாதிரி இருக்கீங்க. நீ என்னம்மா படிக்கிற?” – அவளை பற்றி விசாரித்தார்கள்.
அவள் சகஜமாக அவர்களிடம் பேசினாள். எனக்கு அழுகை வருவது போல் இருந்தது. எனக்கு மட்டும் ஏன் இப்படி பேச முடியவில்லை. தலையை குனிந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன்.
இப்போது என்னுடைய சித்தி உள்ளே வந்தார்கள். “பொண்ண கூட்டிட்டு வர சொல்றாங்க” என்று சொல்லிக்கொண்டே என்னுடைய கையை பிடித்து, “வாடா தங்கம்…” என்று என்னை வெளியே அழைத்துச் சென்றார்கள். எனக்கு கால்கள் பின்னிக்கொண்டன. நடக்கவே முடியவில்லை… தட்டுத் தடுமாறி வெளியே வந்தேன்.
நிச்சயமாக எனக்கு தெரியும். என்னுடைய முகம் நன்றாக இல்லை… எனக்கு பேசத் தெரியவில்லை… இங்கு வந்திருக்கும் யாருக்கும் பிடிக்கப் போவதில்லை… பிறகு எதற்காக இதெல்லாம்… எனக்கு அழுகையாக வந்தது. அழுது விடக்கூடாது என்று சாமியை வேண்டிக் கொண்டு நின்றேன். அவரை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
“அஸ்வினை பாரு ரோஜா” – அவருடைய அம்மா சொன்னார்கள். அவர் எந்த பக்கம் அமர்ந்திருக்கிறார் என்று தெரியாமல் தோராயமாக நிமிர்ந்து பார்த்தேன். நான் நின்ற இடத்திற்கு நேராக அவர் அமர்ந்திருக்கவில்லை. பக்கவாட்டில் ப்ளூ சட்டை தெரிந்தது. அது அவராகத்தான் இருக்க வேண்டும் என்கிற அனுமானத்தில் தலையை மெல்ல திருப்பினேன். அவர் முகத்தை நேருக்கு நேர் பார்த்து விட்டேன்.
அழகாக இருந்தார். சுத்தமாக ஷேவ் செய்திருந்தார். அவருடைய தாடை லேசாக பச்சை கலராக தெரிந்தது. நல்ல கலராக இருப்பவர்கள் தாடியை எடுத்த பிறகு ஓரிரு நாட்களில் மீண்டும் தாடி வளரத் துவங்கும் நேரத்தில் அப்படி இருப்பதை ஹிந்தி படங்களில் சில ஹீரோக்களின் முகத்தில் பார்த்திருக்கிறேன். இவரும் அப்படித்தான் இருந்தார். நல்ல வாட்டசாட்டமாக… கம்பீரமாக… லேசாக சிரித்தபடி என்னை பார்த்துக்கொண்டே இருந்தார்.
எனக்கு அடிவயிற்றிலிருந்து நெஞ்சுக்குழி வரை ஏதோ படபடவென பறப்பதுபோல் இருந்தது. பட்டென்று கீழே குனிந்து கொண்டேன்.
அவர் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை. என்னை பார்த்துக்கொண்டே இருந்தார்.
பிறகு, “உட்காரு…” என்றார்.
என்னுடைய மனம் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தது. அவருடைய குரல் அவ்வளவு வசீகரமாக இருந்தது. அந்த குரல் எனக்குள் மிக ஆழமாக ஊடுருவியது.
அவர் பேசிய விதம் வித்தியாசமாக இருந்தது. நம்ம ஊர் ஆட்கள் பேசுவது போல் இல்லாமல் மிகவும் அழகாக… ஸ்டைலாக பேசினார்…
ஒரு வார்த்தை தானே பேசினார்… அதில் என்ன ஸ்டைலை நீ கண்டுபிடித்துவிட்டாய் என்று நீங்கள் கேட்டால், வழக்கம் போல எனக்கு பதில் சொல்ல தெரியாது. ஆனால் நாம உட்காரு என்று சொல்லுவது போல அவர் சொல்லவில்லை.
நாம் சொன்னால் சாதாரணமாக ‘உட்காரு’ என்று டக்கென்று சொல்லிவிடுவோம். அவர் ஒருமாதிரி இழுத்து, “உட்…கா…ரு…” என்று அழகாக சொன்னார். லூசு என்று நினைக்கிறீர்களா? எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் லூசாகிவிட்டேன் தான்…
“உட்காருடா தங்கம்…” – சித்தி என்னை சேரில் அமர வைத்தார்கள். நான் கீழே குனிந்துக் கொண்டே இருந்தேன். அவர் என்னைத்தான் பார்த்துக் கொண்டே இருந்தார். எனக்குத் தெரிந்தது…
“என்ன படிக்கிற?” – பாருங்க பாருங்க…. இப்ப கூட எவ்வளவு அழகாக கேட்கிறார்!
“பிஎஸ்ஸி” – நான் பதில் சொல்ல தாமதித்ததும், சித்தி என் கையில் லேசாக கிள்ளிவிட்டு அவருக்கு பதில் சொன்னார்கள். உடனே நான் சுதாரித்துக் கொண்டு, “தேர்ட் இயர்… மேத்ஸ்” என்று சித்தியோடு சேர்ந்து சொல்லியபடி அவரைப் பார்த்தேன்.
இப்போது அவர் நன்றாக பல்வரிசை தெரிய சிரித்தார். வெள்ளவெளேரென்று அழகாக இருந்தது அவருடைய பற்கள். என்னால் கண்களை விளக்கவே முடியவில்லை. அவ்வளவு அழகான சிரிப்பு… சத்தியமாக சொல்றேங்க… இப்படி ஒரு வசீகரமான மனிதனை நான் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை…
அதற்குப் பிறகு அவர் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டார். அவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் டக்-டக்கென்று கரெக்ட்டாக பதில் சொன்னேன். ஒருதரம் கூட உளரவில்லை… அவர் என்னிடம் பேசிய விதமும் என்னை ஓரளவுக்கு அமைதிப்படுத்தியிருந்தது என்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.
ஒற்றை பார்வையிலேயே என்னை உணர்ச்சியின் உச்சத்தில் கொண்டு நிறுத்தவும், இயல்பு நிலைக்கு மீட்டுக் கொண்டுவரவும் அவரால் முடிகிறது என்பதை நான் உணர்ந்தேன்.
சற்று நேரத்தில், “அவங்க கொஞ்ச நேரம் தனியா பேசட்டும்…” என்று அவருடைய அப்பா சொன்னார்.
என்னுடைய அப்பாவும் சம்மதித்ததால், எங்களை தனியாக விட்டுட்டு எல்லோரும் வெளியே சென்றார்கள்.
அதுவரை படிப்பு காலேஜ் என்று பொதுப்படையாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவர் தனிமை கிடைத்ததும், “டூ யு லைக் மீ” என்று பட்டென்று கேட்டுவிட்டார். நான் பேந்த பேந்த முழித்தேன்.
‘என்ன கேட்டாரு! என்னைய பார்த்தா கேட்டாரு!!! நிஜமாவா!!!’ – எங்கோ வானத்தில் பறந்தேன்.
அவர் மலை மாதிரி உயரத்தில் இருக்கிறார். நான் ஏதோ சின்ன புல் போல் தரையோடு படிந்துக் கிடக்கிறேன். என்னை பார்த்து, ‘பிடித்திருக்கா?’ என்று கேட்கிறாரே! இவரை யாருக்குத்தான் பிடிக்காது!!! – வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தேன்.
“ரோஜா…” – முதல் முறையாக அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெயரைக் கேட்டேன். புல்லாங்குழலின் இசை போல் இருந்தது. என் பெயர் இத்தனை அழகானதா!!! – நெஞ்சுக்குள் சந்தோஷம் அலையலையாகப் பொங்கியது. பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் என்னுடைய பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
“பிடிச்சிருக்கு” – சத்தமே வெளியே வராமல் சொன்னேன். ஆனால் அவருக்கு கேட்டுவிட்டது போல… அழகாக சிரித்துக் கொண்டே, “அப்புறம் ஏன் முகத்தை இறுக்கமா வச்சுக்கிட்டு இருக்க? கொஞ்சம் சிரிக்கலாமே” என்றார்.
அவருக்கு என்னை பிடித்திருப்பதை நான் உணர்ந்தேன். என்னுடைய முகத்தில் சிரிப்பு தானாக வந்தது.
அவர்கள் கிளம்பும் நேரம் வந்தது. அவருடைய அம்மாதான் முதலில் உள்ளே வந்தார்கள். பிறகு ஒவ்வொருவராக எல்லோரும் வந்தார்கள்.
“என்னப்பா?” – அவருடைய அப்பா கேட்டார்.
“அடுத்த மாதத்துல நிச்சயதார்த்தம் வச்சா எனக்கு லீவ் எடுக்க ஈஸியா இருக்கும்” என்று ஆங்கிலத்தில் சொன்னார். எனக்கு அவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேச வராது. ஆனால் நன்றாக புரியும். அவர் சொன்னதன் அர்த்தம் புரிந்த போது மழையில் நனைவது போல் ஜில்லென்று இருந்தது. பூரிப்புடன் அவரைப் பார்த்தேன். அவர் முகத்திலும் சந்தோஷம் இருப்பதைக் கண்டு எனக்கு திருப்தியாக இருந்தது.
அவர்கள் அனைவரும் கிளம்பி போனபோது நல்ல செய்தியை சொல்லிட்டுதான் போனார்கள். ஆனால் எனக்கு என்னவோ அவர் கூடவே போகாமல் இங்கே இருக்கிறோமே என்பது மாதிரி என்னவோ போல இருந்தது.
இப்போது இருப்பது போல் அப்போது செல்போன் எல்லாம் அதிகம் இல்ல… யாராவது ஒன்றிரண்டு பேர் வைத்திருப்பார்கள். அவரிடம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் என்னிடம் அதெல்லாம் இல்லை. அதனால் அவரோடு பேசும் வாய்ப்பெல்லாம் எனக்கு இல்லை. அவருடைய போட்டோ ஒன்று வீட்டில் இருந்தது.
தினமும் குளிக்க செல்வதற்கு முன், ட்ரெஸ்ஸை எடுக்க பீரோவை திறப்பேன். அப்போது ஒருதரம் அந்த போட்டோவை யாருக்கும் தெரியாமல் எடுத்து பார்த்துவிட்டு உள்ளே வைத்துவிடுவேன். மீண்டும் அந்த வாய்ப்பிற்காக அடுத்த நாள் வரை காத்திருப்பேன். வார இறுதியில் பீரோவை அடுக்கும் சாக்கில், யாருக்கும் தெரியாமல் இரண்டு மூன்று தரம் பார்த்துவிடுவேன். மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
அவர் என்னை பார்த்துவிட்டுச் சென்று பத்து நாள் கழித்து வீட்டுக்கு ஒரு போன் வந்தது.நான் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாதான் போனை எடுத்தார்கள். அந்த பக்கம் பேசுவது யாரென்று தெரிந்த உடனே, “என்னங்க… அந்த பையன் வீட்லேருந்து பேசுறாங்க” என்று அப்பாவிடம் போனை கொடுத்துவிட்டார்கள்.
அம்மா சொன்னதுமே எனக்குப் புரிந்துவிட்டது. அவருடைய வீட்டிலிருந்துதான்… பரபரப்புடன் நிமிர்ந்து அமர்ந்தேன். நிச்சயதார்த்த தேதியை உறுதிப்படுத்தத்தான் அழைக்கிறார்கள்…. டிவி சத்தத்தை குறைத்துவிட்டு ஆசையோடு காதை தீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தேன். அப்பா பேசினார்… என்னுடைய நெஞ்சுக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டுவது போல் அந்த செய்தியை சொன்னார்.
“மன்னிச்சிருங்க… நீங்க வேற இடம் பார்த்துக்கங்க… ஜாதகம் ஒத்துவரல…” – உலகமே தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது. ‘ஜாதகம் பார்க்காமலா பொண்ணு பார்க்க வருவாங்க!!! ஐயையோ!!! கடவுளே!!!’ – கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. நெஞ்சை அடைப்பது போல் இருந்தது.
“முதல்ல சரியா இருக்குன்னுதான் சொன்னாங்க. இப்போ வேற இடத்துல நிச்சய தேதியை குறிக்க போனப்போ சரியில்லைன்னு சொல்லிட்டாங்க… எதுக்கு ஒத்துவராததை இழுத்துப் பிடிக்கணும். நீங்க வேற இடம் பார்த்துக்கங்க… உங்க பையனுக்கு என்ன… ராஜா மாதிரி இருக்காரு… எங்க பொண்ணுதான் ஒரே பொண்ணா? வருத்தப்படாதிங்க” – அவங்களுக்கு சமாதானம் சொல்லி அப்பா போனை வைத்துவிட்டார். ஆனால் எனக்கு இங்கு யாரால் சமாதானம் சொல்ல முடியும்???
அவசர அவசரமாக குளியலறைக்கு ஓடிப்போய் கதறிக் கதறி அழுதேன். எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது. ஒரு நாள் தான் பார்த்தேன். பத்து நிமிஷம் தான் பேசினேன்… அதற்குள் எப்படி இவ்வளவு பாதிப்பு! எனக்கு தெரியவில்லை… ஆனால் உயிர் போனால்கூட இவ்வளவு வலிக்காது என்று தோணியது.
நான் ஒரு குரோட்டன்ஸ் செடி மாதிரிதான் வளர்ந்தேன். என்னுடைய அப்பா அம்மா என்னை எப்படி வளர்க்க வேண்டும் என்று நினைத்தார்களோ அப்படித்தான் நான் வளர்ந்தேன். அவர்களுடைய எண்ணத்தை நான் அப்படியே பிரதிபலிப்பேன். என்னோட தனிப்பட்ட ஆசை விருப்பம் எல்லாம் என்னவென்றே எனக்கு தெரியாது.
அப்பா என்ன சொல்கிறாரோ அதுதான் எனக்கு வேதம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் என்னால் என்னுடைய அப்பாவின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவரை எதிர்க்கும் துணிவெல்லாம் எனக்கு இல்ல. ஆனால் சரியான காரணத்தை கூட தெரிந்துகொள்ளவில்லை என்றால் எப்படி? நைசாக அம்மாவிடம் சென்றேன்.
அம்மா கொல்லைப்பக்கம் பாத்திரம் விலக்கிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் விளக்கிப் போட்ட பாத்திரத்தை கழுவினேன். ஏதேதோ என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு எதுவும் காதில் விழவில்லை. என்னுடைய யோசனையெல்லாம், அம்மாவிடம் எப்படி இதை கேட்பது என்பதில்தான் இருந்தது.
ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டுவிட்டேன்.
“உண்மையாவே ஜாதகம் பொருந்தலையாம்மா?” – அம்மா என்னை விசித்திரமான பார்த்தார்கள். அதற்கு காரணம் இருந்தது…
இதற்கு முன் எனக்கு எத்தனையோ வரன் பார்த்திருக்கிறார்கள்.. வீட்டில் பேச்சுவார்த்தை நடந்திருக்கு. நான் எதையும் கண்டுகொள்ள மாட்டேன். இவருடையாய் ஜாதகம் வந்த போது கூட நான் எதையும் காதில் வாங்காமல் சாதாரணமாகத்தான் இருந்தேன். ஆனால் இப்போது முடியவில்லை. அதனால்தான் கேட்டுவிட்டேன். ஆனால் நான் கேட்டது அம்மாவிற்கு பிடிக்கவில்லை போல. அதனால்தான் என்னை ஒருமாதிரி பார்க்கிறார்கள்.
என்னால் அம்மாவின் பார்வையை சந்திக்க முடியவில்லை. ஆனால் எனக்கு விடை தெரியாவிட்டால் மூச்சுவிட முடியாது போலிருந்தது. அதனால் அமைதியாக இருந்தேன்.
“ஏன்டா கேட்கற?” – அம்மா கனிவுடன் கேட்டார்கள் . இப்போது எனக்கு தைரியம் வந்தது.
“முதலிலேயே ஜாதகம் பார்த்தீங்களேம்மா. பொருத்தமெல்லாம் இருக்குன்னு பேசிக்கிட்டீங்களே!” – சொல்லும் போதே எனக்கு தொண்டையை அடைத்தது. சமாளித்துக் கொண்டேன்.
“பொருத்தமெல்லாம் இருக்குடா… ஆனா…”
‘ஆனா???’ – நான் அம்மாவை பார்த்துக் கொண்டே இருந்தேன். என்னால் இதற்கு மேல் பொறுக்க முடியாது… ‘ஜாதகம் சரியா இருக்குன்னா வேற என்ன பிரச்சனை? சரி பண்ண முடியாத பிரச்சனையா???’ – இதயம் வேகமாக துடித்தது. மனதிற்குள் ஆவல்… அவரோடு எப்படியாவது சேர்ந்துவிட முடியாதா என்கிற பேராவல் பொங்கியது… அம்மா மேலே தொடராமல் என்னை பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
“என்னம்மா?” – என் குரல் நடுங்குவது எனக்கே தெரிந்தது.
“அந்த பையனுக்கு ஹார்ட்டு பிரச்சனையாம்மா…. நம்மகிட்ட சொல்லாம ஏமாத்தீட்டாங்க. கிராமத்து பொண்ணுதானே… ஏமாந்து போயி கொடுத்துடுவாங்கன்னு நினைச்சுட்டாங்க… கிராமத்துல இருந்தாலும் நமக்கும் நாலு மக்க மனுஷங்க இருக்கத்தானே செய்வாங்க… மனசாட்சி இல்லாம ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பார்த்துட்டாங்களே! அவங்களை சொல்லி குத்தமில்ல…டவுனுக்காரவங்க… அவ்வளவு வசதியானவங்க…. நம்மள தேடி வரும்போதே நாம உஷாரா இருந்திருக்கணும்… ஏதோ… இத்தோட போனிச்சேன்னு நினைச்சு மனச தேத்திக்கடா தங்கம்…” – அம்மா என்னை கண்டுபிடித்துவிட்டார்கள். என்னுடைய மனப்போராட்டத்தை தெரிந்துக் கொண்டார்கள். எனக்கு அவமானமாக இருந்தது . அதே சமயம் அவருக்கு இதய நோய் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தேன்.
‘அப்படியெல்லாம் இருந்தா நோஞ்சான் மாதிரி இருக்க மாட்டாங்களா! இவரு எவ்வளவு திடகாத்திரமா இருக்காரு. யாரோ தப்பா சொல்லிட்டாங்களோ!’ என்று சந்தேகப்பட்டேன்.
“அவங்ககிட்ட நேரடியா கேட்டிருக்கலாமேம்மா” – அடக்கமாட்டாமல் அம்மாவிடம் கேட்டுவிட்டேன்.
“அதெல்லாம் கேட்கக்கூடாதுடா… வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா மனசு கோணாம விலகிக்கணும். ஏற்கனவே வியாதிக்கார புள்ளைய வச்சிருக்கவங்கள குத்திக்காட்டற மாதிரி நாம எதையும் பேசிடக் கூடாது… ” – என்னை எச்சரித்துவிட்டு கழுவி வைத்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அம்மா உள்ளே சென்றார்கள்.
வழக்கம் போல நான் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டேன். கண்ணீர் வற்றும் வரை குலுங்கி குலுங்கி அழுதுவிட்டு முகத்தை கழுவிக் கொண்டு வெளியே வந்தேன்.
மனம் முழுக்க அவருடைய நினைவு மட்டுமே நிறைந்திருந்தது. ‘நா அவரோட சேரலைன்னாலும் பரவாயில்லை… அவருக்கு எந்த நோயும் இருக்கக் கூடாது… அவரு தீர்க்காயுசா ரொம்ப நாளைக்கு வாழணும்’ என்று சாமிக்கு விளக்கு போட்டு தினமும் வேண்டிக் கொண்டேன்.
அவரை மறக்க முடியவில்லை. ஆனால் ஒரு வாரத்தில் மனம் சற்று திடப்பட்டது. வழக்கம் போல கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். ஒருநாள் ஹெச்ஓடி என்னை வர சொன்னதாக பியூன் அண்ணா வந்து வகுப்பில் சொன்னார்கள்.
மேம்-மிடம் பர்மிஷன் சொல்லிட்டு சாரை பார்க்க அவருடைய அறைக்குச் சென்ற நான் ஷாக் அடித்தது போல் நின்றுவிட்டேன்.
அவர்… அஷ்வின் அங்கே இருந்தார்… சாருக்கு முன் உட்கார்ந்து மிகவும் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் தலையை ஆட்டி சிரித்தார்.
எனக்கு என் கண்ணையே நம்ப முடியவில்லை… ‘இது நிஜம் தானா…! இல்ல பிரம்மையா!’ என்று கண்ணை முடித்திறந்து நன்றாகக் பார்த்தேன்.
‘உண்மைதான்… அவருதான்… நிஜத்துல என்னைய பார்க்க வந்திருக்காரு…!!!’ – வார்த்தையால் சொல்லிவிட முடியாத அளவிற்கு அவ்வளவு சந்தோஷம் எனக்குள்… கண்ணெல்லாம் கலங்கிவிட்டது…
“சார் உன்கிட்ட ஏதோ பேசணுமாம்… பேசிட்டு வா…” – ஹெச் ஓ டி சார் சாதாரணமாக பர்மிஷன் கொடுத்தார்.
‘எப்படி இது நடந்துச்சு. பேரன்ட்ஸ் பார்க்க வந்தாலே ஆயிரத்தியெட்டு கண்டிஷன் இருக்கும். இவரை எப்படி உள்ள விட்டாங்க… எப்படி இந்த அளவுக்கு இவர்கிட்ட ஃபிரீயா இருக்காங்க…!’ – என்னுடைய யோசனைக்கு பதில் சொல்வது போல் அஷ்வின் எங்கள் சாரிடம் சூப்பராக இங்கிலீஷ் பேசினார். எங்கள் சாருக்கு அவர் அளவுக்கெல்லாம் பேசத்தெரியாது. அவர் பேசுற இங்கிலிஷ் தமிழ் மாதிரியே தான் இருக்கும். ஆனா அஷ்வின் பேசுற தமிழ் கூட இங்கிலிஷ் மாதிரி ஸ்டைலா இருக்கும்.
அஷ்வினோட ஈடு கொடுத்து சாருக்கு பேச முடியவில்லை… அதனால்தான் அஞ்சு நிமிஷம் பேசினால் பேசிவிட்டு போகட்டும் என்று விட்டுட்டார் என்று எனக்கு தோன்றியது.
சார்கிட்ட சொல்லிவிட்டு அவர் என்னை கேன்டீனுக்கு அழைத்து வந்தார்.
“எப்படி இருக்க?” – சாதாரணமாக பேசினார்.
“நீங்க நல்லா இருக்கீங்களா?” – நல்லா இருக்கேன் என்று சொல்ல வாய் வாராமல், அவருடைய நலனை விசாரித்தேன்.
அவரும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லை. “என்ன சாப்பிடற?” என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
“இங்க இந்த நேரத்துல டீ மட்டும் தான் கிடைக்கும்” என்று சொன்னேன்.
அவர் சிரித்தார். அந்த சிரிப்பு பழைய மாதிரி சந்தோஷமான சிரிப்பாக இல்லை.
அவர் முகத்தில் வருத்தத்தை பார்க்க எனக்கு கஷ்டமாக இருந்தது. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு டீ டம்ளரோட டேபிளில் வந்து அமர்ந்தோம். அவர் என்னை பார்த்துக் கொண்டே இருந்தார். நான் கீழே குனிந்தபடியே அமர்ந்திருந்தேன். இருவருமே சற்றுநேரம் எதுவும் பேசவில்லை. பிறகு அவர்தான் கேட்டார்…
“என்ன ஆச்சு? ஏன் திடீர்ன்னு உங்க வீட்ல இப்படி சொல்லிட்டாங்க?” – அவர் குரலில் எதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. வருத்தத்தை குரலில் காட்டிக்கொள்ளாமலே பேசினார். ஆனால் அவருக்குள் கோபம் இருப்பதை நான் உணர்ந்தேன்.
‘அதுல ஒன்னும் தப்பு இல்ல… அப்பா இப்படி பண்ணியிருக்கக் கூடாது…’ – வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்பாவை குற்றம்சாட்டினேன்.
“ரோஜா…” – அவர் என்னை பெயர் சொல்லி அழைத்தார். மெல்லிய இசை என் செவியில் இழைவது போல் உணர்ந்தேன் நான்… ஆசையோடு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன்.
“வீட்ல என்ன நடந்துச்சு?” – திரும்பவும் கேட்டார்.
சொல்வோமா வேண்டாமா என்று சற்று நேரம் யோசித்தேன். ஆனால் சொன்னால்தான் அவரோடு சேர்வதற்கு வழி கிடைக்கும் என்று மனம் அறிவுறுத்தியதால், சிறு தயக்கத்திற்குப் பிறகு, “உங்களுக்கு உடம்புக்கு என்ன?” என்றேன்.
அவருடைய முகம் இறுகி போய்விட்டது. சற்று நேரம் என்னோடு பேசாமல் அமர்ந்திருந்தார். பிறகு ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, வேகமாக இங்கிலிஷில் பேசினார். எனக்கு இங்கிலிஷ் புரியும்தான்… ஆனால் இப்படி இங்கிலிஷ் படத்தில்வருவது போல் பேசினால் புரியாது… தமிழ்காரங்க இங்கிலிஷ் பேசுவார்களே… அப்படி பேசினால் தான் புரியும். என்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டு பேசுவதை நிறுத்திட்டு, திரும்பவும் என்னை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார். பிறகு, “டூ யூ பிலீவ் மீ?” என்று கேட்டார். நான் தலையை மேலும் கீழும் ஆட்டினேன்.
“எனக்கு ஒன்னும் இல்ல…. ஐம் கம்ப்ளீட்ல்லி ஆல்ரைட்” என்றார்.
எனக்கு ஒரே சந்தோஷம்… தலையில கூடை பூவை கொட்டியது போல் இருந்தது.
“நிஜமாவா! நிஜமாவா சொல்றீங்க?” என்றேன் உற்சாகத்துடன். எனக்கு தெரிந்து அப்போதுதான் நான் அவரிடம் அவ்வளவு சத்தமாக பேசியது.
அவர் என்னை ஒருமாதிரி ரசனையோடு பார்த்துக் கொண்டே ஆமாம் என்று தலையாட்டினார்.
“எனக்கு அப்போவே தெரியும்… என் மேல யாருக்கோ பொறாமை. அதான் இப்படி இல்லாததை எல்லாம் சொல்லி எங்க அப்பா மனசை கலைச்சுட்டாங்க…” – நான் படபடத்துக் கொண்டிருந்தபோது, “உங்க அப்பா கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான் ரோஜா. எதுவும் பொய் இல்ல” என்று குறுக்கிட்டார் அவர்.
என்னுடைய உற்சாகமெல்லாம் வடிந்துவிட்டது. குழப்பத்துடன் அவரைப் பார்த்தேன்.
“சின்ன வயசுல எனக்கு ஹார்ட் ப்ராப்லம் இருந்தது உண்மைதான். அப்போவே சர்ஜரி பண்ணி சரி பண்ணியாச்சு. இருபது வருஷம் ஆயிடிச்சு… நல்லாதானே இருக்கேன்… இனியும் நல்லாத்தான் இருப்பேன். எனக்கு ஒன்னும் இல்ல ரோஜா… நீ என்னை நம்பனும்” – முதல் முறையாக அவர் குரல்ல ஒரு எமோஷன் தெரிஞ்சுது.
நான் அப்படியே இறுகிப்போய் அமர்ந்துவிட்டேன். ‘அம்மா சொன்னது உண்மைதானா! கிராமத்துப் பொண்ணுங்கிறதுனால ஏமாத்த நெனச்சசுட்டாரா! ஏன் இதை முதல்லயே சொல்லாம விட்டுட்டாரு…!’ – எனக்குள் என்னென்னவோ கேள்விகள் எழுந்தன. எதையும் நான் அவரிடம் கேட்கவில்லை. கேட்டு அவர் மனதை புண்படுத்தும் தைரியம் எனக்கு இல்லை. அமைதியாக அமர்ந்திருந்தேன். என்னுடைய அமைதியே அவரை பதட்டப்பட வைத்தது.
“என்ன நினைக்கற? வெளிப்படையா பேசு” – டென்ஷன் தெரிந்தது அவர் முகத்தில்.
“முதல்லயே சொல்லியிருக்கலாமே…” – மெல்ல சொன்னேன்.
“சொல்லியிருக்கணும்” – அவரும் ஒத்துக்கொண்டார்.
“என்னைய ஏன்? உங்க ஊரிலேயே நிறைய பொண்ணுங்க… உங்க லெவலுக்கு…” முடிக்க முடியாமல் திணறினேன். அவர் என்னை குழப்பத்துடன் பார்த்தார். “க்ளீயரா கேளு” – ஒருவித இறுக்கத்துடன் சொன்னார்.
“இல்ல… உங்களுக்கு உடம்பு சரியில்லைங்கிறதுனால தான் என்னைய ச்சூஸ் பண்ணுனீங்களா?” – கேட்டுட்டேன்.
அவர் முகத்துல ஒரு நொடி, அடிபட்டது போல் ஒரு உணர்வு தோன்றி மறைந்தது. எனக்கு பாவமாக இருந்தது. ஏன்டா கேட்டோம் என்று நினைத்தேன்.
“எனக்கு உடம்பு சரியாதான் இருக்கு ரோஜா… இன்னும் எத்தனை தரம் நான் அதை சொல்லணும்?” – சிறு கோபம் வெளிப்பட்டது அவரிடம்.
எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துக்கொண்டே இருந்தது. இப்போது அவருடைய உடல்நிலைப் பற்றி தெரிந்ததும் அந்த தாழ்வுமனப்பான்மை அதிகமாகிவிட்டதை போல் உணர்ந்தேன். அதை தெளிவுபடுத்திக்கொள்ள எண்ணி “அப்புறம் ஏன் நான்?” என்றேன்.
“எனக்கு உன்ன பிடிச்சிருக்கு… ஐ லைக் யு” – தெளிவாக சொன்னார். எனக்கு நம்ப முடியல… ஆனால் சந்தோஷப்பட்டேன்.
என்னைய மாதிரி ஒரு சாதாரண லோயர் மிடில்கிளாஸ் பெண்ணை ராஜகுமாரன் மாதிரி ஒரு பையன் வந்து பிடித்திருக்கிறது என்று சொன்னால் யாருக்குத்தான் சந்தோஷம் இருக்காது. எதுவுமே பேச தோன்றாமல் அப்படியே அமர்ந்துவிட்டேன்.
அதற்குப் பிறகு ஒவ்வொரு வாரமும் அவர் என்னுடைய ஊருக்கு வருவார். ஊருக்கு என்றால் கிராமத்திற்கு அல்ல… என்னுடைய கல்லூரி இருக்கும் டவுனுக்கு வருவார். ஒவ்வொரு வெள்ளி இரவும் பெங்களூரில் புறப்பட்டு சனிக்கிழமை காலை இங்கு வந்துவிடுவார். சனி ஞாயிறு இரண்டு நாள் இங்கு இருப்பார். கம்ப்யூட்டர் கிளாஸ், லைப்ரரி, ஃபிரண்ட் வீடு என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு நானும் அவரை பார்க்க வந்துவிடுவேன். எங்காவது ஒதுக்குப்புறமாக அவருடைய காரில் அமர்ந்து ஒரு மணி நேரம் பேசுவோம். பிறகு வீட்டுக்கு ஓடி வந்துவிடுவேன். அந்த ஒரு மணி நேரத்திற்காக அவர் வாராவாரம் மாநிலம் விட்டு மாநிலம் காரில் பயணம் செய்வது எனக்கு பயமாக இருந்தது. வர வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கவில்லை.
அதன் பிறகு எனக்கு மெயில் ஐடி கிரியேட் செய்து கொடுத்தார். எப்படி மெசஞ்சரில் சாட் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். தினமும் கல்லூரி முடிந்து பிரவுசிங் சென்டர் சென்று அவரோடு சாட் செய்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவேன்.
சில நாள் வீட்டுக்கு போன் செய்துவிடுவார். தோழி என்று சொல்லிவிட்டு ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்துவிடுவேன். இப்போதெல்லாம் வீட்டில் போனை நான்தான் அட்டென்ட் செய்வது. எங்கிருந்தாலும் ஓடிவந்து எடுப்பேன். என்னை யாரும் சந்தேகப்படுவதில்லை. அவ்வளவு தூரம் சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்ட பிள்ளையாக வளர்ந்திருந்தேன். ஆனால் இன்று நானே என்னுடைய பெற்றோருக்கு துரோகம் செய்கிறேன். குற்றவுணர்வு குத்தும். ஆனால் அவரை என்னால் தவிர்க்க முடியவில்லை. அவர் எனக்குள் கலந்துவிட்டார்.
இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தது. அவர் என்னை பேபி… ஹனி… என்றெல்லாம் கொஞ்சி அழைப்பார். அது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வாரமும் பெங்களூரிலிருந்து என்னை பார்க்க வரும் பொழுது ஏதாவது வாங்கிக்கொண்டு வருவார். அதையெல்லாம் பெற்றுக்கொள்ள எனக்கு பயமாக இருக்கும். வீட்டுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்! அப்பா என்ன நினைப்பாங்க! – நினைக்கும் போதே நெஞ்செல்லாம் பதறும். ஆனாலும் அவருடைய முகத்தில் ஏமாற்றத்தை பார்க்கப் பிடிக்காமல் பரிசுகளை பெற்றுக் கொள்வேன். அதை வீட்டில் மறைத்துவைக்க பெரும்பாடுபடுவேன். என்னை சங்கடப்படுத்த விரும்பாமல் அவர் பரிசுகளை குறைத்துக் கொண்டார்.
நான் கவலையோடு இருந்தால் அவர் எனக்கு ஆறுதல் சொல்வார். தைரியம் கொடுப்பார். என்னிடம் ஒரு வார்த்தைக் கூட தவறாக பேச மாட்டார். கண்ணியம் குறைவாக நடந்துகொள்ள மாட்டார். என்னை மரியாதையாக நடத்துவார். எனக்கு முக்கியத்துவம் கொடுப்பார். என்னை மதிப்பார். நாளுக்கு நாள் அவர் மீதான பைத்தியம் எனக்கு அதிகமாகிக் கொண்டே சென்றது.
அவர்தான் என்னுடைய வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன். அவரோடு சேர்ந்து நிறைய புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அந்த புகைப்படங்களையெல்லாம் என்னுடைய மெயிலில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அவர் அருகில் இல்லாத சமயங்களில் அவரைப் பார்க்காத தோன்றினால் பிரவுசிங் சென்டர் சென்று அந்த படங்களை ஓபன் செய்து பார்த்துக் கொண்டிருப்பேன்.
எனக்கு கல்லூரி முடியும் காலம் வந்தது. இப்போது ஒரு முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு இருவரும் வந்தோம்.
“வீட்ல எப்படி பேசுறது?” – நான் பயத்துடன் சொன்னேன்.
நீ இதை பற்றி எதையும் யோசிக்காதே. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் எனக்கு உறுதி கொடுத்தார்.
“என்ன செய்யப் போறீங்க” என்று நான் கேட்டேன்.
“மெடிக்கல் டெஸ்ட் எடுத்துட்டு ரிசல்ட்டுடன் வந்து அங்கிள்கிட்ட பேசறேன்” என்றார். எனக்கு அவர் சொல்வது சரியென்று தோன்றியது. அவருடைய ஆரோக்கியம் தானே பிரச்சனை. மெடிக்கல் டெஸ்ட் ரிப்போர்ட் சரியாக இருந்தால் அப்பா சந்தோஷமாக சம்மதித்துவிடுவார். எல்லாம் சுபமாக முடியும் என்கிற நம்பிக்கையுடன் அடுத்த வாரம் அவருடைய வரவுக்காக காத்திருந்தேன்.
என்னவோ தெரியவில்லை அந்த வாரம் அவர் என்னை பார்க்க வரவில்லை. அவருக்கு நான் மெயில் அனுப்பினேன். அவர் எனக்கு ரிப்ளை செய்யவில்லை. நான் தொடர்ந்து சாட்டிலும் மெயிலிலும் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டே இருந்தேன். அவருடன் பேசாமல் அவரை பார்க்காமல் அவரிடம் இருந்து எந்த தகவலும் தெரியாமல் எனக்குப் பைத்தியம் பிடித்தது. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. 24 மணி நேரமும் அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். காரில் செல்லும் பொழுது அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டதோ என்று அஞ்சி நடுங்கினேன்.
என்னுடைய பயத்தையும் பதற்றத்தையும் என்னால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய எல்லாமுமாக இருந்தவர் திடீரென்று மாயமாகிவிட்டார். என்னை துயரம் ஆக்கிரமித்திருந்தது. இரவெல்லாம் அழுதேன். பகலெல்லாம் அவருக்காகக் காத்திருந்தேன். பைத்தியம் பிடித்தவள் போல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரவுசிங் சென்டருக்கு ஓடினேன். அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லாமல் அழுதுகொண்டே திரும்பினேன். என்னுடைய விசித்திர நடவடிக்கை எல்லோர் கண்ணிலும் பட துவங்கியது. அப்போதுதான் அவரிடமிருந்து ஒரு மெயில் வந்தது. அடுத்த வாரம் அவர் என்னை பார்க்க வருவதாக எழுதியிருந்தார். போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது எனக்கு. ஏன் இப்படி செய்து விட்டார். ஒரு மாதம் என்னை உயிரோடு கொன்று விட்டாரே! அவர் மீது கோபம் பொங்கியது. ஆனால் அதைவிட அவரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல்தான் அதிகமாக இருந்தது.
சொன்னது போலவே அஸ்வின் என்னை பார்க்க வந்தார். நூலகத்திற்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு அவரைப் பார்க்க ஓடோடி வந்தேன். வழக்கமான இடத்தில் அவருடைய கார் எனக்காக காத்துக் கொண்டிருந்தது. யாரும் இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சட்டென்று அவருடைய காரில் ஏறி அமர்ந்தேன். டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த அஸ்வின் வேறு யாரோ போல் இருந்தார். அவர் அவராகவே இல்லை. அவரிடம் பழைய சிரிப்பும் உற்சாகமும் இல்லை. சோர்ந்து தெரிந்தார். எனக்கு வயிறெல்லாம் என்னவோ செய்தது… அவரை பார்த்ததுமே ஏதோ சரியில்லை என்று எனக்கு தோன்றிவிட்டது. அது என்ன என்று கேட்க பயந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். அவரும் எதுவும் சொல்லாமல் காரை ஸ்டார்ட் செய்தார்.
வழக்கமாக நாங்கள் ஊரைவிட்டு வெளியே செல்லமாட்டோம். ஆனால் இன்று அவர் என்னை ஊருக்கு வெளியே ஒரு சிறு நகரத்திற்கு அழைத்துச் சென்றார். எனக்கு அவரோடு செல்வதற்கு எந்த பயமும் இல்லை. அதனால் எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக அமர்ந்திருந்தேன்.
கார் வந்து நின்ற இடம் மிகவும் பணக்காரர்கள் வந்து செல்லும் இடமாக எனக்குத் தோன்றியது. இது போன்ற இடத்திற்கெல்லாம் நான் வந்ததே இல்லை. என்னை சேர்ந்தவர்களும் இங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த தைரியத்தில் காரில் இருந்து இறங்கினேன். அதற்குப் பிறகுதான் தெரிந்தது அது ஒரு ஸ்டார் ஹோட்டல். எதற்காக இங்கு அழைத்து வந்திருக்கிறார். யோசனையுடன் செல்ல நாய்க்குட்டி போல் அவரைப் பின்தொடர்ந்து சென்றேன்.
அறைக்குள் நுழைந்ததும் கையிலிருந்த எதையோ தூக்கியெறிந்துவிட்டு என் கையைப் பிடித்தார். நான் அவரை படபடப்புடன் பார்த்தேன். வேகமாக இழுத்து என்னை இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அவர் உடல் நடுங்குவதை நான் உணர்ந்தேன். பிறகு அவர் உடல் குலுங்கியது… அவர் அழுதார்… ஓவென்று சத்தமாக அழுதார்.
அவருடைய கண்ணீரை என்னுடைய கழுத்து தோள்பட்டை முதுகு எங்கும் உணர்ந்தேன் நான். என்னால் தாங்கமுடியவில்லை… என்னுடைய ‘அவர்’ அழுகிறார்… நானும் வெடித்து அழுதேன்…
என் மனம் ஏதேதோ எண்ணி பயந்தது. எனக்கு நன்றாக தெரிந்து விட்டது. என்னை நிலைகுலைய வைக்கும் ஏதோ ஒன்றை தான் சொல்லப் போகிறார். அதை தெரிந்து கொள்ள நான் விரும்பவில்லை.
அவருடைய அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. என்னிடமிருந்து மெல்ல விலகினார். என் தோள்கள் இரண்டையும் பற்றியபடி என் முகத்தை பார்த்தார்.
“ப்ளீஸ் வேண்டாம்… எதுவும் சொல்லாதீங்க…. எனக்கு எதையும் தெரிஞ்சுக்க வேண்டாம். என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க…. என்னையும் கூட்டிட்டு போயிடுங்க. என்னை தனியா விட்டுட்டு போகாதீங்க. ப்ளீஸ்… என்னை கூட்டிட்டு போயிடுங்க…” – மீண்டும் கதறி அழுதேன்.
அவர் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது. “எனக்கு நீங்க இல்லாம இருக்க முடியாது. ப்ளீஸ்… என்ன விட்டுடாதீங்க” – கெஞ்சினேன். அவர் முகத்தில் துக்கம் குடிகொண்டது. என்னை இழுத்து முத்தமிட்டார். எங்கள் உதடுகள் நான்கும் சேர்ந்திருந்த தருணம் அப்படியே உறைந்து விடாதா என்று நான் ஏங்கினேன். ஆனால் விலகும் நேரம் வந்தது. அவர் என்னை விலக்கி நிறுத்தினார்.
“நா சொல்றத கேட்பல்ல?” – அவருடைய அமைதியான குரல் என்னை பயங்கரமாய் அச்சுறுத்தியது. உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“இனி எனக்காக நீ வெயிட் பண்ணக்கூடாது. என்னை மறந்துவிட்டு உன்னுடைய வாழ்க்கையை நீ வாழனும்” என்றார்.
எனக்கு அவருடைய பேச்சு பிடிக்கவில்லை… அவருடைய குரல் பிடிக்கவில்லை…. அவரையும் பிடிக்கவில்லை…. எப்படி இப்படி எல்லாம் பேசுகிறார்! எப்படி மனம் வருகிறது இவருக்கு! மனசாட்சியே இல்லையா…!! அவரை மறக்க வேண்டுமா! என்னால் எப்படி முடியும்…? அழுதேன்… கண்ணீர் வற்றும் வரை அழுதேன். என் உடம்பில் உள்ள சக்தி எல்லாம் ஆவியாகும் வரை அழுதேன். அவர் என்னை அழுக விட்டுவிட்டு ஒதுங்கி நின்றார். ஒருவழியாக நான் ஓய்ந்த பிறகு எனக்கு பழச்சாறு ஆர்டர் செய்து கொடுத்தார்.
நான் கோபத்துடன் மறுத்தேன். அவர் என் கையை பிடித்துக்கொண்டு, “ஐம் சாரி…” என்றார். அதை சொல்லும் பொழுது அவர் மனம் உள்ளுக்குள் அழுததை நான் உணர்ந்தேன்.
அவர் முகத்தை அப்படி என்னால் பார்க்க முடியவில்லை. இயலாமையுடன் குனிந்துக் கொண்டேன். அவர் எனக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி அந்த பழச்சாறை குடிக்கச் செய்தார். என்னுடைய உடைந்து போன மனதை தேற்ற ஏதேதோ பேசினார். எனக்கு எதுவும் காதில் ஏறவில்லை.
“உங்ககூட ஒருநாள் வாழ்ந்தாலும் போதும்” என்றேன் கண்ணீருடன். அவர் என்னை பார்த்து சோகமாக புன்னகைத்துவிட்டு, என் தலையில் கைவைத்து ஆட்டி “எனக்கு ஒன்னும் இல்ல. ஐம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்” என்றார். அன்றுதான் நான் அவரை கடைசியாகப் பார்த்தது.
அதன்பிறகு அவரிடமிருந்து எந்த செய்தியும் இல்லை. நான் தினமும் அவருக்கு மெயில் அனுப்பி கொண்டே இருந்தேன். வெவ்வேறு டெலிபோன் பூத்தில் இருந்து அவருடைய அலைபேசிக்கு அழைத்துக் கொண்டே இருந்தேன். அந்த அலைபேசி எப்பொழுதுமே அணைத்து வைக்கப்பட்டிருந்தது. போன் நம்பரை மாற்றிவிட்டார் என்று தோன்றியது. ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்துடனேயே கழிந்தது. இந்த முறை அவருடைய பிரிவை தாங்குவதற்கு எனக்கு சக்தி போதவில்லை. உடல் சோர்ந்து அடிக்கடி காய்ச்சலில் விழுந்தேன். என் மனதிற்குள் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தை எனது குடும்பத்தினரோ தோழிகளோ சிறிதும் அறிந்திருக்கவில்லை. நடைபிணமாகவே சுற்றிக்கொண்டிருந்தேன். என்ன உண்டேன்… என்ன உடுத்தினேன்… எப்போது உறங்கினேன்… எப்போது சிரித்தேன்… எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால் உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். என்னை நான் மீட்டுக்கொள்ள முழுதாக ஒரு வருடம் ஆனது.
ஓராண்டிற்குப் பிறகு எனக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தார்கள். அந்த திருமணத்திற்கு பயந்துகொண்டு நான் மேல்படிப்பிற்கு விண்ணப்பித்தேன். இரண்டு ஆண்டுகள் அதில் கழிந்தது. அடுத்து மீண்டும் வீட்டில் திருமண பேச்சு ஆரம்பமானது. அவருடைய நினைவுகள் என்னை சிதைத்து கொண்டிருந்தன. அது போதாதென்று இந்த திருமணப் பேச்சு வேறு… ஒரேடியாக செத்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்கும் ஒரு தைரியம் வேண்டும் அல்லவா. நான்தான் கோழை ஆயிற்றே… எதையும் சாதிக்க முடியாத கோழை… அழுதேன்… இரவெல்லாம் அழுது விட்டு மறுநாள் எழுந்து MPhil படிக்கப் போவதாக கூறினேன். வீட்டில் எல்லோரும் அதிர்ந்தார்கள். ஆனால் நான் எனது முடிவில் பிடிவாதமாக இருந்தேன்.
நான் ஏன் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறேன் என்று எல்லோரும் யோசித்தார்கள். திருமண உறவிற்கு நான் பயப்படுகிறேன் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். நான் வேறு ஒருவரை மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று ஒருவரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதனால் இன்னும் சற்று காலம் போகட்டும் என்று எனக்காக விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் எவ்வளவு காலம் விட்டுக்கொடுப்பார்கள். MPhil முடிந்ததும் மீண்டும் திருமண பேச்சு வீட்டில் ஆரம்பமானது. அப்போதும் நான் மறுத்தேன். ஆனால் இந்த முறை யாரும் என்னுடைய மறுப்பிற்கு செவிசாய்க்கவில்லை.
எனக்குப் பின் ஒரு தங்கையும் தம்பியும் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைக்கு நான் தடையாக இருக்கிறேன் என்பதை எனக்கு நாசுக்காக உணர்த்தினார்கள்.
திருமணத்திற்கு சம்மதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லாமல் போனது. அவரை மறக்க வேண்டும் என்றால் அவரைவிட எல்லாவிதத்திலும் உயர்ந்தவராக ஒருவர் வந்தால் ஒருவேளை என்னால் அவரை மறக்க முடியுமோ என்று எண்ணினேன். அதனால் அதற்கு தகுந்தாற்போல் மாப்பிள்ளை பார்க்கும் படி என்னுடைய பெற்றோரை மறைமுகமாக நிர்பந்தப்படுத்தினேன். அதில் ஒரு நல்ல விஷயம் நடந்தது. மாப்பிள்ளை அமையாமல் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் எனது தந்தை பிடிவாதமாக ஒரு வரனை எனக்கு முடிவு செய்துவிட்டார். அன்று இரவு என் மனம் பட்ட வேதனைக்கு அளவே இல்லை. அவரை (அஸ்வினை) திட்டித் தீர்த்தேன். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சாமியிடம் ஓடிப்போய் வேண்டினேன். என்னுடைய திட்டுகள் எதுவும் பலித்து விட கூடாது என்று மன்றாடினேன். இந்த துன்பம் எப்போது எனக்கு தீரும்? தெரியவில்லை…
திருமணம் முடிவானதிலிருந்து அவரைப்பற்றிய சிந்தனைகள் அதிகமாகிவிட்டது. வேண்டாம் வேண்டாம் என்று நினைக்க நினைக்க தான் நினைவுகள் என்னை துரத்திக் கொண்டே இருந்தன. அவர் ஏன் என்னை பார்க்க வந்தார்… ஏன் என்னோடு பேசினார்… ஏன் பழகினார்… பிறகு ஏன் என்னை விட்டுச் சென்றார்… நான் தவியாய் தவித்தேன். என்னை தாங்கி ஆறுதல் சொல்ல அவர் அருகில் இல்லை… தலையணையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இரவெல்லாம் அழுதேன்.
மீண்டும் ஒருமுறை என்னை பெண் பார்க்க வந்தார்கள். அவர் வந்த நாளன்று என் மனதிற்குள் தோன்றிய எந்த உணர்வும் இன்று எனக்கு தோன்றவில்லை. இந்த மாப்பிள்ளை என்னிடம் சகஜமாகப் பேசினார். நானும் அவரிடம் சகஜமாக பேசினேன். ஏதோ ஒரு கல்லூரி தோழனிடம் பேசுவது போல்தான் இருந்தது. அவருடன் பேசியபோது ஒருவித மெல்லிய உணர்வு என்னை ஆக்கிரமித்திருந்ததே… அது போன்ற எந்த உணர்வும் இப்போது என்னிடம் இல்லை. அவர் என்னை விட்டு செல்லும் பொழுது என்னுடைய இளமை உணர்வுகளையும் கூடவே எடுத்துச் சென்றுவிட்டார். நான் இப்போது ஒரு மொட்டை மரம். எனக்கு பூச்சூட்டி அலங்காரம் செய்கிறார்கள். நானே பூத்துக் குலுங்குவது போல ஆகுமா இந்த பூ அலங்காரம்! – என்னை நானே கேட்டு கொண்டேன். என்னுடைய மனம் இங்கு யாருக்குமே புரியவில்லை.
புரிய வேண்டாம்… விட்டுத்தள்ளுங்கள்… காலம் அடித்துச் செல்லும் திசையில் எங்கோ சென்று தொலைகிறேன். வெறுப்புடன் மணவறையில் அமர்ந்தேன். தாலி கட்டிக் கொண்டேன். என் கணவரோடு வாழ்ந்தேன். இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தேன். அதில் மூத்தவன் பெயர் அஸ்வின். அவனுக்கு நான்தான் பெயர் வைத்தேன். அவன் அவரைப் போலவே இருப்பதாக எனக்குத் தோன்றும். அவனை ஒரு நல்ல ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தேன். அவன் ஆங்கிலத்தில் பேசும் பொழுது அவரைப்போலவே பேசுகிறான் என்று எண்ணுவேன். அவன் சிரிக்கும் பொழுது பளிச்சென்று தெரியும் அவனுடைய பற்கள் எனக்கு அவரை நியாபகப்படுத்தும்.
நான் ஒரு அஸ்வினை வளர்க்கிறேன். எனக்கு கொடுப்பினை இருந்தால் அவரிடமும் ஒரு ரோஜா வளர்வாள். அந்த ரோஜாவை தேடி கண்டுபிடித்து இந்த அஸ்வினுடன் சேர்ப்பேன். வழக்கம் போல இந்த எண்ணம் என் மனதிற்குள் உருண்டு கொண்டிருக்க மடிக்கணினியை திறந்து பேஸ்புக்கை ஓபன் செய்தேன். சர்ச் பாக்ஸில் நான் கர்சரை வைத்தவுடன் ஆட்டோ சஜஷனில் முதல் பெயராக “அஸ்வின் ராகவேந்திரா” வந்தது. 15 வருடங்களாக நான் தேடிக் கொண்டிருக்கும் பெயர். இன்றாவது நான் தேடும் நபர் எனக்கு கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.
– நான் ரோஜா…!!!
10 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samrithi says:
Oh god very emotional…. Heart touching story superb 👍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Anjali Suresh says:
Enna solrathune therila… very touching….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Anjali
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rajee Karthi says:
Superb
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Rajee
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Mercy Aruna says:
Heart touching story Nithya, Superbly expressed Roja’s feelings throughout the story,
What happened to Ashwin Nithya ? Please sollunga
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you so much Aruna… Ashwin ku enna aayirukkum nu ungalukku thonudho adhuthaan aayirukkum…. 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samrithi says:
Oh god 😩 APO enn sis Avan normal nu poi sonnan? Konja nal avaloda happy ah erukanga? So sad .. Avan avala love pannirkan right?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Nice….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Vidya