Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal episode final
1467
0
திலிப் சென்ற பிறகு அசையாமல் நின்ற காஞ்சனாவைப் பார்த்துக் கேட்டான் “கௌன்சிலர் வரலாமா? ”
பதில் சொல்லாமல் அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தபோது “நீ திருந்தாத ஜென்மம்டி.” என்று மனதில் திட்டிக்கொண்டே வெங்கட் தனது செல்பேசியில் அழைப்பு விடுத்தான்.
அடுத்த பத்து நிமிடத்தில் கௌன்சிலர் வந்து சேர்ந்தார்.
உள்ளே வந்ததும் காலியான ஜுஸைப் பார்த்து “காஞ்சனா சாருக்கு ஜுஸ் மட்டும்தான் வச்சியா போமா போய் ஒரு ஐஸ்கீரிம் எடுத்திட்டு வா. ” என்றார்.
அவர் சொல்லி முடித்தபோது காஞ்சனா பயத்தில் ஜுஸைக் குடித்ததுபோல் ஐஸ்கிரீமை வைத்திருந்தால் எப்படி அதனை சாப்பிட்டிருப்பாள் என்று கற்பனை செய்து பார்த்து குப்பென்று சிரித்தான். அவனது சிரிப்பின் காரணம் புரிந்த காஞ்சனா ஒரு கப்பில் ஐஸ்கிரீமை கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனவள்தான் அதன்பிறகு அந்தப்பக்கமாய் எட்டிக்கூட பார்க்கவில்லை.
“அப்புறம் வெங்கட் சொல்லுங்க. என்ன ஆச்சு நம்ம விஷயம்? ” என்று ஆரம்பித்தார்.
“சார் பணம் இருக்கும் அக்கவுன்ட் நம்பரை டிரேஸ் பண்ணிட்டேன். இதுதான் அந்த அக்கவுன்ட். இப்ப இந்த அக்கவுன்டை லாக் பண்ணி வச்சிருக்கோம். நீங்க சில டெர்ம்ஸ்க்கு ஓகே என்றால் நாங்க ரிலீஸ் பண்ணிடுவோம் சார். ”
“என்ன சொல்றீங்க வெங்கட்? எனக்குப் புரியலை. ”
“சார் உங்க மச்சினன் உங்கமேல் கம்பளைன்ட் கொடுத்திருக்கார். பவித்ரா ஸ்ரீ என்ற இரண்டு பொண்ணுங்களை கொன்றுவிட்டதா கம்பளைன்ட் கொடுத்திருக்கார். ”
“பவித்ரா இறந்தது தெரியும். ஸ்ரீ இறந்ததிட்டாளா? ”
“ஆமாம் சார். நீங்க என்னிடம் அவளைக் கொன்ற விஷயத்தை மறைச்சிட்டீங்க. ஸ்ரீயும் இறந்ததா நியூஸ் வந்திருக்கு. ”
“கன்பார்ஃமாக தெரியுமா? பவித்ராவை நாங்க கொல்லணும் என்று நினைக்கலை. அது ஒரு ஆக்சிடென்ட். ”
“எது ஆக்சிடென்ட்? கடத்தி ஒரு நாள் முழுவதும் மாருதி ஆம்னியில் மதுரையில் சுத்திகிட்டே நாலு பேர் சேர்ந்து நாசம் பண்ணது ஆக்சிடென்டா? ”
“அவளைக் கடத்தி விசாரிக்க சொன்னேன். பசங்க அளவு மீறிட்டாங்க. அவளும் தப்பிக்க டிரை பண்ணி காரில் இருந்து குதிச்சிட்டா. நாங்க அவளை அங்கேயே விட்டுட்டு வந்திட்டோம். காரை மட்டும் ஷெட்டில் போட்டுவிட்டு தடயம் இல்லாமல் இடத்தைக் காலி செய்தோம். ஆனால் கீழே விழுந்தவ அவ நல்ல நேரம் இன்ஸ்பக்டர் ராஜன் கையில கிடைச்சிருக்கா. என் நல்ல நேரம் அவ அன்னைக்கே இறந்திட்டா. பணத்தில் கை வைக்கும்போது தெரிந்திருக்கணும். இவ்வளவு பிரச்சனை வரும் என்று பணத்தில் கை வைக்கும்போது தெரிந்திருக்கணும் அவளுக்கு! ஸ்ரீ இறந்திடுச்சா? நல்லா தெரியுமா? அப்ப என் பணம்? ”
“ம். நூறு சதவிகிதம் தெரியும். ஸ்ரீயும் பவித்ராவும் பணத்தை தனு மோகனா பேர்ல்ல பணத்தைப் போட்டிருந்திருக்காங்க. ஆனால் ஃபிங்கர் பிரின்ட் ஐ.டி புரூஃவ் இல்லாததால் பணத்தை தனுவாலும் வித்டிரா பண்ண முடியலை. பணத்தை எடுத்திடலாம் இரண்டு மூன்று நாளில் பணத்தை எடுத்திடலாம் என்று அறையில் கதவின் பின் நின்ற காஞ்சனாவின் நிழலைப் பார்த்துக் கூறினான். பிறகு ஏதோ மறந்ததை மீண்டும் ஞாபகப்படுத்தும் விதமாக அவரிடம் சத்தமாக சொன்னான் ஆனால் திலிப்தான் பிரச்சனை பண்ணுவான் என்று நம்புறேன்! ”
“இந்த திலிப் பயலுக்கு என்ன வேணும்? ”
“பவித்ராவை ரேப் பண்ணி கொண்ண அந்த நாலு பேரும் வேணுமாம். அவனுங்களோட கலர் ஃபோட்டோ பிளாக் அனட் வைட் ஃபோட்டோன்னு எல்லாம் இருக்கு அவனிடம். ஆனால் ஆளுங்கதான் எங்கன்னு தெரியலை. ”
“அவனுங்க என் ஆளுங்க. அவனுக்கு எப்படி கிடைத்தது? ”
“உங்க ஆளுங்க என்பதால்தான் உங்ககிட்ட கேட்குறான். அந்த டிடெய்ல்ஸ் எல்லாம் ராஜன் தான் அவனிடம் தந்தது. ”
ராஜன் என்ற பெயரைக் கேட்டதும் பற்களைக் கடித்தவர் கடுப்புடன் கேட்டார் “நான் எப்படி அவனுங்களை காட்டிக்கொடுப்பேன்? ”
“அதான் உங்க மேல் கேஸ் போட்டிருக்கான். நீங்க உள்ளபோனாலும் அவனுக்கு திருப்திதானாம். ”
“இதையெல்லாம் அவன்கிட்ட யார் ஆதாரத்துடன் சொன்னது? ராஜன் கையில் ஆதாரம் இல்லையே! எவிடன்ஸ் இல்லாமல் திலிப் ஒருபோதும் ஒரு விஷயத்தை நம்பமாட்டான்! ”
“நான்தான் சொன்னேன். ”
குள்ளநரியை நேரில் பார்த்தவர்போல் அரண்டுபோனார் அவர். ஆனாலும் அவனை பயமுறுத்த தன் அதிர்ச்சியை மறைத்துச் சொன்னார் “வெங்கட் நீங்க உங்க லிமிட்டைத்
தாண்டிட்டீங்க! விளைவு மோசமா இருக்கும்! ”
“இல்லை சார். திலிப்போட ஃப்ரண்ட் அப்பாதான் சிங்கப்பூர் பிரதமராமே? அவர் சொன்னா உங்க கட்சி மேலிடம் இந்த விஷயத்தில் என்ன செய்வாங்கன்னு தெரியலை. உங்க மெடிக்கல் காலேஜ் க்ளோஸ் பண்ணுவாங்களா? இல்லை இன்ஜினியரிங் காலேஜ் கிலோஸ் பண்ணுவாங்களா? என்னால் எதுன்னு நிச்சியமாக சொல்ல முடியலை. ஒரு வேளை இரண்டுமேகூட இருக்கலாம் சார். ஆக மொத்தம் லிமிட்டைத் தாண்டப் போறது திலிப் தான்னு எனக்குத் தோணுது. ஆதனால் விளைவுகளைப் பற்றி கவலைப்படவேண்டியதும் நீங்கதான் சார்.”
வெங்கட் சொல்லி முடித்தபோது கௌன்சிலர் தனது ஐஸ்கிரீமை அவசரமாக சாப்பிட ஆரம்பித்தார். தனது வேலை முடிந்தது என்பது புரிந்தது வெங்கட்டிற்கு.
அடுத்த அரை மணி நேரத்தில் திலிப் கையில் நாலு மிருகங்களின் பையோடேட்டா அவர்களது செல்பேசி எண்ணுடன் கிடைத்தது. காஞ்சனா அன்றே வெங்கட் தந்த வங்கி எண்ணில் 40 லட்சத்தை செலுத்தினாள். கௌன்சிலர் இறந்து போன ஸ்ரீயைப் பற்றி இனி யாரிடம் விசாரிக்கலாம் என்று மனதில் கணக்குப்போட்டார். ஆனால் இனி ஸ்ரீ விஷயத்தில் அவர் கணக்கு போட்டாலும் குஸ்தி போட்டாலும் வெங்கட்டிற்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாது என்பது மதுரையில் இருந்த காக்கை குருவிகளுக்குக்கூட புரிந்தது.
மறுநாள் ராஜனை பார்க்க திருச்சிக்கு கிளம்பினான். மனதில் ராஜனிடம் ஸ்ரீ எழுதிய லெட்டரை காண்பித்து அவன் முகமாறுதலை கவனிக்கணும் என்று தீர்மானித்தவனாய் கரூர் நோக்கி காரை செலுத்தினான். ‘இப்படி ஒரு பெண் கிடைத்தால் நாலு ஜென்மத்திற்கு ஒரு கல்யாணம் போதுமே’ என்று நினைத்து பொறுமினான்.
கரூர் நெருங்கியதும் ராஜனிடம் தான் வந்திருப்பதை கைபேசியில் அழைத்து தெரிவித்தான். ராஜன் அவனை ஷ்டேஷனுக்கு அழைத்தபோது “இது ‘அன்அபிஷியல்’ விட்டில் தான் பார்க்கணும். டிபார்ட்மென்ட் ஆளுங்களுக்கு தெரியவேண்டாமே” என்று நாசுக்காக கூறிவிட்டான்.
ராஜன் வெங்கெட்டை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அது ஒரு காவல்காரர்களின் சிறிய குடியிருப்புப் பகுதி.
குடியிருப்பு மிகவும் நன்றாகவே பராமரிக்கப்பட்டிருந்தது. மழையில் கரைந்து உரிந்திடாத சுவரின் பெயின்ட் அதற்கு சாட்சி சொல்லியது.
ஒவ்வொரு வீட்டின் வாசலில் முன் பகுதியிலும் சின்ன சின்னதாக பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
வெங்கட் ஷுவை கழற்றியபோது பிடிமானத்திற்காக அவன் சுவரின்மீது கைவைத்தபோது சுவரில் கெரயான்ஸ் கொண்டு கிறுக்கி இருந்ததைப் பார்த்தான்.
முகம் கூட பார்த்திராத ஸ்ரீ மீது மிகுந்த இரக்கம் உண்டானது வெங்கட்டிற்கு. ராஜன் இதையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்க ஸ்ரீ என்ன செய்கிறாளோ? என்று நினைத்து உச்சுக்கொட்டிக்கொண்டான்.
ராஜனின் முகத்தில் ஸ்ரீயின் கடிதத்தை விசிறியடிக்க வேண்டும் அந்த கடிதத்தைப் பார்த்து அவன் பத்து நாள் சோறு தண்ணி இறங்காமல் அவஸ்தை பட வேண்டும் என்று எண்ண ஓட்டங்களை ஓடவிட்டுக்கொண்டே ஷ_வைக்கழற்றி முடித்தவன் சாக்ஸையும் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தான்.
வெங்கட் உள்ளே நுழைந்ததும் ராஜனும் அவனை மரியாதையுடன் வரவேற்றான். வீட்டில் ராஜன் மட்டுமே இருந்தான். ராஜனும் வெங்கட்டும் மதுரையின் சப் டிவிஷன் பிரான்ச் பற்றி சிறிது நேரம் சம்பிரதாயமாக பேசினார்கள். பிறகு வெங்கட் விசயத்திற்கு நேராக வந்தான்.
“பேசலாமா? ” என்றான் ராஜனிடம்
அதனைத் தொடர்ந்து “ராஜன் ஸ்ரீ கேஸ் ஞாபகம் இருக்கா? ” என்று கேட்டான்.
ராஜன் முகம் வெளுத்தது.
ராஜனின் தடுமாற்றம் வெங்கட்டிற்கு திருப்தியளித்தது. பின்னே அதற்காகத்தானே அவன் வந்தது. ராஜனை ஸ்ரீயின் பெயரைச் சொல்லி கலங்க வைக்க வேண்டும் என்பதற்குத்தானே அவன் வந்தது. உண்மையாக நேசித்தவளை விட்டுவிட்டு ஓடிவந்தவனை ஒரு கை பார்க்காமலா விடுவது? நான் மட்டும் அவன் இடத்தில் இருந்திருந்தால் ஸ்ரீயை விட்டிருக்கவே மாட்டேன் என்று மதுரையிலிந்து கரூர் வரும் வரையில் நான்கு ஐந்து முறை நினைத்துவிட்டான்.
தனது கேள்வியை திருப்தியாக இரண்டாம் முறை கேட்டான் “ராஜன் ஸ்ரீ கேஸ் ஞாபகம் இருக்கா? ”
“இருக்கு வெங்கட். சொல்லுங்க. என்ன விஷயம்? ”
“ஒன்றும் பெரிசா இல்லை. கௌன்சிலர் ஆளுங்க என்கிட்ட கேஸை கொடுத்திருக்காங்க. நான் இன்னும் நிச்சயமாக ஒரு மாதத்தில் முடிச்சிடுவேன். அக்கூஸ்டை பிடிச்சாச்சு. ஸ்ரீ நிரபராதி. நான் நம்புறேன். கவுன்சிலர் தான் ஸ்ரீயை பார்க்கணும் என்று தவிக்கிறார். அவர் மேல கல் வீசினாளாமே? பவித்ரா பொண்ணு எடுத்தது வெறும் நாலு லட்சம் தான். அதுவும் திலிப் கொடுத்தது. திலிப் தெரியுமா? ”
ராஜன் ஆம் என்று தலையாட்டவும் வெங்கட் தொடர்ந்தான் “அவன்கூட தங்கதான் பவித்ரா மகாபலிபுரம் போயிருக்கா. பாவம் பவித்ராவுடையது பிட்டிஃபுல் டெத். கௌன்சிலர் வைஃப்தான் மொத்த பணத்தையும் எடுத்தது.
இன்வெஸ்டிகேஸனில் கண்டுபிடிச்சேன். ”
“கேஸ் முடிஞ்சிடுச்சுல்ல இப்ப என்ன வேண்டும் வெங்கட்? ”
“இல்லை. நான் என் இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்ஸ் எல்லாம் சப்மிட் பண்ணிட்டேன். ஒரு ரெக்கார்ட் மட்டும் அதிலே சேர்க்கவில்லை. அதை உங்களுக்கு கிஃப்டாக தரலாம் என்ற கொண்டு வந்தேன். கௌன்சிலர் ஆளுங்களுக்கு அது தேவையுமில்லை. ஸ்ரீ கல் வீசினது சரி என்று நினைக்கிறேன். ஆனால் உங்களுக்கு அது தேவையாக இருக்கும். ”
கையில் வைத்திருந்த ஸ்ரீயின் லெட்டரை ராஜனிடம் வெங்கட் கொடுத்தபோது ராஜன் இயல்பாகத்தான் இருந்தான். ஆனால் லெட்டரைப் பிரித்துப் பார்த்த போது அவன் கைகளில் உறுதியில்லை என்பதை அவனை வேடிக்கை பார்த்த காவலன் கண்டுபிடித்தான்.
லெட்டரை எப்படி மறந்தோம்? என்று தன்னிடமே கேட்டுக்கெண்டிருந்த ராஜன் தன்னை வேடிக்கை பார்த்தவனை நோக்கி நிமிர்ந்தான்.
ஆனால் அவனது கவனம் வாசலில் இருந்தது. ராஜனும் வாசல் பக்கமாக திரும்பிப் பார்த்தபோது வாசலில் மழலைகளின் குரல் கேட்டது.
இருவரும் திரும்பிப் பார்த்தபோது ஒரு அழகிய பெண்ணும் அழகிய இரு பெண் குழந்தைகளும் உள்ளே நுழைந்தனர்.
அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த மஞ்சள் சரடும் உச்சிக் குங்குமமும் ராஜனை கண்களில் சிரிப்போடு அவள் பார்த்த பார்வையும் அவள் ராஜன் மனைவி என்று சொல்லாமல் சொல்லியது. வெங்கட் அவள் காபி கொடுத்தபோதுதான் அவள் முகத்தை அருகிலே பார்த்தான். ராஜன் அவனிடம் “இது என்னோட வைஃப் வினோ. ” என்றான்.
‘மச்சம் இவனுக்கு எங்கயிருக்குன்னு கண்டிப்பாக தெரிஞ்சிக்கணும். இவனிடம் என்ன இருக்குன்னு அழகான பொண்ணுங்கயெல்லாம் இவனிடம் விழுறாங்க’ என்ற நினைப்புடன் ராஜன் மனைவி கொடுத்த காபியை குடித்தபோது ராஜன் அந்த லெட்டரை மனைவிக்கு தெரியாதபடி தனது ஃபைலுக்குள் திணித்தான். இதை கவனித்த வெங்கட் மனைவியைக் கோபப்படுத்த மாட்டாராக்கும் துரை? மனைவியிடம் அவ்வளவு பயம். லெட்டரைப் பார்த்தால் பதில் சொல்லணுமே? என்ன பதில் சொல்வான்? ஸ்ரீ யுடன் நடத்திய தனிக் குடித்தனம் பற்றி சொல்ல முடியமா இவனால்? என்று நினைத்தவனுக்கு அதற்கு மேல் பொறுமை போதவில்லை.
ராஜன் அருகில் இருந்த இரு பெண் குழந்தைகளைக் “காட்டி இது என் கஸின் குழந்தை. அது என் குழந்தை. ” என்றான்.
“குழந்தையின் பெயர்? ”
“ரோகினி.” என்று ராஜன் பதில் தந்தபோது அவனது மனைவி அழகான பெண் குழந்தை பெற்றெடுத்த பெருமிதத்துடன் உள் அறைக்குள் நுழைந்தாள்.
ராஜன் தனது மனைவி உள்ளே செல்லும் வரை சிரித்த முகமாய் அவனிடம் தனது டிபார்ட்மெனட் பற்றி சொன்னவன் சத்தமாக சில நேரங்களில் சிரிக்கவும் செய்தான்.
மனைவியிடம் சகஜமாகக் காட்டிக்கொள்கிறானாம் என்று மனதில் வெங்கட் பொறுமியபோதும் கால் மீது கால்போட்டு உட்கார்ந்திருக்கும் ராஜனின் திமிரை அரவே வெறுத்தான்.
அவள் உள்ளே சென்றதும் வெங்கட் ராஜனின் காதருகே சென்று சொன்னான் “ஓ! உங்க பொண்ணு பெயர் நான் ஸ்ரீ யாக இருக்கும் என்று நினைத்தேன். ”
“அந்த பெயர்கூட எனக்கு ரொம்பப் பிடிக்கும். ”
“ஆனால் நான் உனக்கு ஒரு நல்ல பெயர் இங்கிலிஷில் வைத்திருக்கிறேன் ராஜன்” என்றான் வெங்கட்.
சொன்னவன் சிறிதுகூட அவகாசம் தராமல் அந்த ஆங்கிலக் கெட்ட வார்த்தையை சொன்னபோது ராஜன் கோபப்படுவான் அப்போது அதே வார்த்தையை மீண்டும் ஒரு முறை சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்யணும் என்று நினைத்தவன் ராஜனின் செயலால் அசையாது நின்றான்.
ராஜன் சத்தமாக மிகு சத்தமாக சிரித்தான்.
மானம் ரோஷம் உள்ளவன் செய்வதா இது? என்ற நினைத்துக்கொண்டிருந்த வெங்கட் “இன்னும் வேணுமா? வேற வார்த்தை சொல்லவா? ” என்றான்.
“ராஜன் வெங்கட் உங்களுக்கு நானும் ஒரு கிஃப்ட் தரவா? ” என்று கேட்டான்.
“வெங்கட் நான் என் வீட்டுக்கு வருவீங்கன்னு தெரிஞ்சி உங்களுக்கு ஒரு கிஃப்ட் வாங்கியிருக்கேன். ”
என்றவன் உள்ளே சென்று ஒரு காலென்டர் எடுத்து வந்தான்.
அதனைச் சுருட்டி வெங்கட் கைகளில் திணித்தான்.
வெங்கட் என்னடா நடக்குது என்று திரும்பிய போது பின்னால் அவனது மனைவி நின்று கொண்டிருந்தாள். ஆக இவ்வளவு நேரம் அவன் பேசிச் சிரித்தது எல்லாம் நடிப்பா? என்று வினவியபடியே நிற்க தனது ஜீப்பின் டிரைவர் அவனிடம் வந்து நேரமாச்சு சார் என்று சொன்னதும் ராஜனிடம் கிளம்புகிறேன் என்று சொல்லாமல் கிளம்பியபோது அவன்
கைகளைப் பற்றி லெட்டரை ஜாடைகாட்டி தாங்ஸ் என்றான்.
அப்படின்னா அவனும் நொந்து போயிருக்கான் என்பதை புரிந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடாமல் வெளியேறினான்.
வெங்கட்டிற்கு ராஜனின் முகத்தில் இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவனுக்கு நிஜமாகவே ஸ்ரீ பற்றி எதுவும் தெரியாதா? ஸ்ரீ where are you? என்று நினைத்தபோது ஓம் என்ற வார்த்தை புத்தியில் பளிச்சிட்டது. அடுத்த வினாடி ராஜனின் மனைவியின் கழுத்தில் விரலில் இருந்த ஓம் டாலரும் ஓம் மோதிரமும் பளிச்சென தோன்றியது. வெங்கட் தனது ஜீப்பை சடன் பிரேக்போட்டு நிறுத்தினான்.
வண்டியை ஓரம்கட்டி நிப்பாட்டியவன் ராஜன் அவனிடம் தந்த புத்தாண்டு காலண்டரைப் பிரித்துப் பார்த்தான். அதிலே ஒரு துண்டுச் சீட்டு இருந்தது.
அதில் ராஜன் ! இது வேடந்தாங்கல். இங்கே கம்பி மத்தாப்பு கூட யாரும் பொருத்தக்கூடாது வெங்கட். ஓம். ” என்று முடித்திருந்தான்.
வெங்கட் கண்களிலும் கண்ணீர் தேங்கியது. ஷ் என்று கூறி ஜீப்பைக் கிளப்பினான்.‘ ஸ்ரீ you are lucky’ என்று மனதாரச் சொன்னவன் பெரு மூச்செடுத்துவிட்டுச் சொன்னான் “ராஜன் நீ மச்சக்காரன்டா.”
மனைவியும் காதலியும் ஒன்றானால்? அவன் மச்சக்காரன்தான்!
வெங்கட் சென்றபிறகு ராஜன் கடிதத்தை வாசித்ததும் அதனை தனது பீரோலில் வைத்து மூடினான். தன் மனைவியாகிய ஸ்ரீக்கு இதனைப்பற்றி சொல்லி அவளை அவன் துளிகூட கலங்க வைக்க விரும்பவில்லை.
ஸ்ரீ லக்கியா? அப்படியா?
அதிஷ்டம் எப்படி அவளுக்கு அடித்தது? நாலு ஆண்டுகளுக்கு முன் ராஜனிடமிருந்து பிரிந்து வந்த பிறகு…
ஆதிஷ்ட நாட்களுக்கு முன்…
ராஜன் திருமணத்தைப் பற்றி பேசிய மறுநாள் ஸ்ரீ அவன் சொன்னதுபோல் ஆறுமணிக்கு படுக்கையை விட்டு எழுந்தாள். எப்போதும் போல் காபி போட்டு ராஜனுக்கு கொடுத்தாள். ஆனால் அன்று ராஜனின் காபியோடு நான்கு தூக்க மாத்திரைகளையும் கலந்தாள். அவள் திட்டப்படியே எல்லாம் நடந்தது.
ராஜனைப் பிரிந்துவந்த பிறகு ஸ்ரீ முதலில் செய்த வேலை மசூத்தை திருச்சிக்கு உடனே வரச்சொன்னது. அவன் வந்த பிறகு அவனிடம் திருச்சியை விட்டுப்போகமாட்டேன் என்ற சத்தியத்தை அவன் வாயால் பெற்றுக்கொண்டாள்.
அடுத்த காரியம் அவனுடன் இனி எந்த நாளும் தான் சேரப்போவதில்லை என்று பவித்ராவின் மீது சத்தியமாகச் சொன்னாள்.
“பவித்ரா மீது சத்தியம் மசூத் உன்னை நான் எப்போதுமே கல்யாணம் செய்துக்க முடியாது. ” என்றாள்.
ராஜனின் நடவடிக்கையால் சிறிது சந்தேகம் அடைந்த மசூத் விஷயம் என்னவென்று புரிந்துகொண்டு சொன்னான்
“ ஸ்ரீ நான் இப்ப அனுபவிப்பதைவிட ராஜன் அதிகமாக அனுபவிப்பான். அதனால் அவன் மீது கோபப்படகூட முடியல ஸ்ரீ. ”
ஸ்ரீ உடைந்து அழுதபோது தனு ஸ்ரீயை கட்டிலில் படுக்க வைத்தாள். அதன்பிறகு ஸ்ரீக்கு மசூத் ஒரு அரனாக மாறினான். ஒரு நாள் மசூத் அவசரமாக ஸ்ரீயையும் தனுவையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றான்.
அம்பிகையை நோக்கி இரு பெண்களும் கையெடுத்து கும்பிட்டபோது மசூத் தனுவின் கழுத்தில் தாலி கட்டினான்.
திகைத்து திரும்பிய தனுவிடம் “ஸ்ரீயை காதலிச்ச மாதிரி உன்னையும் காதலிக்க டிரை பண்றேன் தனு. இப்படி சொன்னதுக்காவும் என்னை நீ மன்னிக்கணும். ” என்றான்.
அவ்வளவுதான் அப்போதே தனு அவன் தோள்களில் சாய்ந்துவிட்டாள். ஸ்ரீ தனுவிடம் தனு நீ அதிஷ்டக்காரிடி! என்றபோது அவள் ராஜனை நினைத்துதான் அதனைச் சொன்னாள் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.
மோகனாவின் பையன் ஸ்ரீயிடம் வந்து “அக்கா என் ஷுவுக்கு அழகா பாளீஸ் போட்டிருக்க என் யூனிபார்ம் அழகா அயர்ன் பண்ணிருக்க. அம்மா சுத்த வேஸ்ட் அயர்ன் பண்ணாம யூனிபார்ம் போடச் சொல்றாங்க. யாராவது யூனிபார்ம் அயர்ன் பண்ணாமல் போடுவாங்களா? நீயே சொல்லுக்கா. ”
தனு , ஸ்ரீ பிரம்மை பிடித்தது போல நிற்கவும் ஒன்றும் சொல்லாமல் பிரித்வியை அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பினாள். நெடு நேரம் சக்தியின் படத்தின் முன் நின்று சக்தியின் திருஉருவைப் பார்த்தாள். பிறகு குளித்துவிட்டு வந்தவள் ஏதோ சத்தம் கேட்க வாசல் பக்கம் வந்தாள். வீட்டின் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்த திடுக்கிட்டாள். கதவைத்தாள் போட்டுவிட்டு உள்ளே சேலை மாற்ற பெட்ரூமிற்குள் போனபோது ராஜன் அவள் கட்டிலில் உட்கார்ந்திருந்தான்.
ஸ்ரீயைப் பிரிந்து ராஜன் இரண்டு நாட்களில் சகஜமானான். ஸ்ரீயைப் பற்றி தெளிவான முடிவு எடுத்துவிட்டான். அவளை நினைப்பதில் இனி எந்தப் பயனும் இல்லை என்பதை சந்தேகமற புரிந்துகொண்டான். அவளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் அவளை நினைத்து நேரத்தை வீணடிப்பதில் எந்த பயனும் இல்லை என்று சந்தேகமற புரிந்துகொண்டான். நினைத்தபடியே மூன்றே மாதத்தில் கண்டுபிடித்தும் விட்டான்.
ஸ்ரீ ராஜனைப் பார்த்த திகைப்பில் மூச்சுமுட்ட நின்றபோது.. அவனே தொடர்ந்தான் “ஹாலில் உட்கார்ந்திருந்தேன். வாசலுக்கு போகும்போது நீ என்னை கவனிக்கலை. அதான் (கட்டிலைச் சுட்டிக்காட்டி) இங்கயிருந்தா ஞாபகம் வருமேன்னு நேராக இங்க வந்தேன். எப்படி கண்டுபிடிச்சேன்னு பார்க்கிறியா? ஏன் வந்தேன்னு கேட்கத் தோணுதா?
போலஸ்காரனக்கு மோப்பம் பிடிப்பது கஷ்டமில்லை ஸ்ரீ. கவுன்சிலர் ஆளுங்களும் ஸ்ரீ என்ற பெயர் உடைய கிழவியக்கூட தேடுறானுங்க. படிப்பு கம்மியில்ல? அதனால நான் முந்திகிட்டேன். ஸ்ரீ உனக்கு இந்த பெயர் பிடிக்குமா? எனக்குப் பிடிக்கல. நாளையிலிருந்து உனக்கு வினோன்னு பெயர் வைக்கலாம். நாளையிலிருந்து உன் பெயர் வினோ. சரியா?
அப்புறம் இன்னும் இரண்டு பேரைப் பார்க்கச்சொன்னியே…. ”
தனது சட்டையின் காலர் இறுக்கத்தைக் குறைத்துக்கொண்டே சொன்னான்
“ஞாபகம் இருக்கா? எனக்கு எழுதின லெட்டரில் சொன்னியே இன்னும் இரண்டு பேரைப் பார் ராஜன் என் பெயர் கூட உனக்கு மறந்திடும் என்று. அதான் உன் பெயர் மறக்குதா இல்லையா என்று பார்க்கிறதுக்காகத்தான் இந்த பலான பொண்ணுகூட பேசிட்டிருக்கிறேன்.. ம் சீக்கிரம். இன்றே இன்னொரு பொண்ணை பார்க்க முடியாது. நாளைக்குதான் பார்க்கணும். அந்த பொண்ணு பெயர் கேட்க மாட்டியா? ”
சிரித்துவிட்டு அவனே சொன்னான் “நீ பேச மாட்ட உன்னால இப்ப பேச முடியாது. நானே சொல்றேன். நாளைக்கு நான் பார்க்கப் போற பொண்ணு பெயர் வினோ. அப்புறம் நீ அந்த மசூத்தை கல்யாணம் செய்திட்டு மாற்ற டிரை பண்ணல போல? ஏன்? அவனை பிடிக்கலயா? என்னை அவ்வளவு பிடிச்சிருக்கா? ம் சொல்லு ஸ்ரீ. பிடிக்கலைன்னு சொல்லியிருந்தினா இரண்டு நாள் சாப்பிடாமல் கிடந்து கண்ணுல்ல படுகிறவன்னையெல்லாம் புடலங்காய்ன்னு திட்டுட்டு நானும் இரண்டு நாளுக்குப் பிறகு நார்மல் ஆகியிருப்பேன். ஆனால் நீ என்னை பண்ண? வாக்குமூலம் தர்ற.. பிடிச்சிருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆனா ஒத்துவராதுன்னு சொல்லற.. நான் சொல்லணும்! ஒத்து வருமா வராதான்னு நானும் சொல்லணும்ல்ல? நான் சொல்றேன் நமக்குள்ள ஒத்துவரும். நூறு பர்சன்ட் ஒத்துவரும். ஏன்னா நீயும் நானும் ஒரே இனம் தெரியுமா? நேற்றுகூட கிரைம் இன்ஸ்பக்கடர் ஒரு இன்னசன்டை அடித்து துவைத்தபோது கையைக் கட்டிக்கிட்டுதான் நின்னுட்டிருந்தேன்.
நானும் இன்ஸ்பக்டர்தான். காட்டிற்கு ராஜாதான். ஆனா கிரைம்பிரான்ச் இன்ஸ்பக்டர் அவனை அடிச்சப்ப ஒண்ணும் பேச முடியல. நான் டி.எஸ்.பி ஆகும்போதுதான் இந்த நிலைக்கு விமோச்சனம் கிடைக்கும். கையைக் கட்டிக்கிட்டு சலாம் போடுவதில் இருந்து விமோச்சனம் கிடைக்கும். என்கூட வந்திடு ஸ்ரீ உனக்கு இப்போதே விமோச்சனம் வந்திடும். உனக்கு தாகமாக இல்லை? உன் தாகத்தை தணிக்க அன்றைக்கு கல்யாணம் பற்றி பேசினேன். ஆனால் நீ இல்லாமல் இப்ப எனக்கு தாகமாக இருக்கு ஸ்ரீ! என் தாகத்தை தணிக்க வருவீயா ஸ்ரீ?”
விழிகளில் நீர் தேங்கி நிற்க ஸ்ரீ அவனை அதற்கு மேல் பேச விடாமல் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு ஒட்டிக்கொண்டாள்.
என்ன சத்தம் அங்கே? காற்று தான் பலமாக வீசியது.
அழுகைதான் எக்கச்சக்கமாக பேசியது.
இருவரின் மூச்சுக்காற்றுதான் பலமாக வீசியது. இதனை பார்த்துக்கொண்டிருந்த மசூத்தோ மோகனாவோ தனுவோ யாரும் சிரித்தோ அழுதோ கச கசவென்று பேசியோ அவர்களை தொந்தரவு செய்யவில்லை. ஏனென்றால் ஸ்ரீ ராஜன் என்ற இரு காதல் குருவிகள் இல்லை இல்லை கinஉhநள வசிக்கப்போகும் வேடந்தாங்கல் இது..
ஆதலால் யாரும் அவர்களை தொந்தரவு செய்யவில்லை.
யாருக்கும் கம்பி மத்தாப்பு கூட இங்கே பொருத்த இவர்கள் அனுமதிக்கப் போவதில்லை. வெங்கட் உட்பட…
வெங்கட்டும்தான் யாரையும் பொருத்திப் போட விடமாட்டான்.
ஏனென்றால்
ஷ்! இது வேடந்தாங்கல்!
கிசு கிசு :
ஏட்டையா பழநிவேல் : அட நேற்று மசூத்தும் ஸ்ரீயும் ஷாப்பிங் போனாங்கப்பா.. துபாயில்.
ஏட்டையா கிரி: துபாயிலா?
ஏட்டையா பழநிவேல் : ஆமாம்ப்பா. ஸ்ரீகிட்ட ஒரு சி இருக்காம். எல்லாம் கௌன்சிலர் பணம். திருடின பணத்தை எடுத்திட்டு துபாய் போயிடுச்சு!
ஏட்டையா கிரி: அப்படியா? சரி சரி மசூத் இப்ப என்ன பண்றான்?
ஏட்டையா பழநிவேல் : மசூதுக்கும் ஸ்ரீக்கும் இரண்டு பொண்ணுங்களாம். அவனும் ஸ்ரீயுடன் ஜாலியா துபாயில் இருக்கானாம். என் மாமியார் தான் சொன்னது. என் மைத்துனன் துபாயில் இருக்கான் அவன் தான் ஸ்ரீ யைப் பார்த்ததும் என் மாமியாரிடம் தகவல் சொன்னது.
ஏட்டையா கிரி: உன் மைத்துனன் ஸ்ரீயைப் பார்த்திருக்கானா? அந்த பொண்ணு டக்கரா இருக்குமாமே? ஸ்ரீயின் ஃபோட்டோ கிடைக்குமா?
ஏட்டையா பழநிவேல் : நாளை எடுத்து அனுப்பச்சொல்றேன்.
ஏட்டையா கிரி: ஆமாம் நம்ம துணை முதல்வருக்கு துணை முதல்வர் போடப்போறாங்களாமே?
ஏட்டையா பழநிவேல் : உனக்கு இப்பதான் தெரியுமா? எனக்கு நேற்றே வாட்ஸ்அப்பில் வந்திடுச்சு!
ஏட்டையா கிரி: அப்புறம்.. டோனால்ட் டிரம்பை அமெரிக்காவை விட்டு நாடு கடத்திட்டாங்களாமே? அப்படியா?
ஏட்டையா பழநிவேல் : ஆமாம்ப்பா. அவர் அமெரிக்காவை கண்டுபிடிச்ச கொலம்பஸைதான் தன் செக்கரட்டிரியாக போடுவேன் என்று அடம்பிடிச்சாராம். அதனால் தான்!
Comments are closed here.