உனக்காகவே வந்தேனடா – 2
1706
2
அத்தியாயம் – 2
தேவநந்தன் – நித்திலன் – சந்தோஷி மூவரின் தந்தைகளும் நண்பர்கள். தந்தைகளை
போலவே பிள்ளைகள் மூவரும் பால்யம் தொட்டே உயிர் நண்பர்கள்.
நந்தனுக்கும் நித்திலனுக்கும் வயது 30. சந்தோஷி இருவரை விடவும் நான்கு வயது சிறியவள்.
நந்தனின் தாய்க்கு மகன் தலைச்சிறந்த மருத்துவன் ஆகவேண்டும் என்ற ஆசை உண்டு. தாயின் ஆசையை தட்டாமல் நிறைவேற்றினான் மகன். இத்தனைக்கும் அவர் நந்தனை கட்டாயப்படுத்தும் தாய் எல்லாம் இல்லை. அவனுக்குமே மருத்துவன் ஆகவேண்டும் என்ற கனவு உண்டு. அதனால் விருப்பமாகவே படித்தான்.
நந்தன் டாக்டர் ஆகிவிட, நித்திலனோ மூவரின் தந்தைகளும் ஒன்றாய் கவனித்து வந்த ஹோட்டல் (உணவு விடுதி, பேக்கரி) தொழிலை தன் கைவசம் எடுத்து கொண்டான். மேலும் அவன் சிரமேற்று நடத்திய பிறகு பேரும் புகழும் பன்மடங்கு பெருகியது.
இதோ இவர்கள் இருவரையும் மட்டுமல்லாமல், பாலாவையும் சேர்த்து மேய்க்கும் சந்தோஷியோ பிரபல தனியார் பெண்கள் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளர். மாலை நேரங்களில் அருகே இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு டியூஷனும் எடுப்பாள். இங்கு உதவியாய் இருப்பது நந்தன் மட்டுமே.
இவர்களின் தந்தைகள் மூவரும் அக்காலத்திலேயே ஒன்றாய் அருகிலேயே நிலம்
வாங்கி அங்கேயே வீடு கட்டி வாழ்ந்து வந்தனர். நகரத்தின் பரபரப்பு எதுவுமின்றி அமைதியான இடத்தில் எழில்கொஞ்சும் வீட்டை கட்டி இருந்தனர். பிள்ளைகளும் இன்றுவரை ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் தந்தைகளை எடுத்துக்காட்டாக கொண்டு.
சொன்னது போல் அடுத்த அரைமணி நேரத்தில் சந்தோஷி தனது காரை எடுத்து கொண்டு வர, அதற்குள் தயாராகி வந்த நித்திலனை ஏற்றிக்கொண்டு கிளம்பினாள் ரயில் நிலையம் நோக்கி!
******
மருத்துவமனையில் நந்தனோ அந்த முக்கிய அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு, ரிலாக்ஸாக அமர்ந்திருந்தான். இன்னும் அரைமணி நேரம் கழித்து தான் ஓபி பார்க்க வேண்டும்.
நன்றாக சுழலும் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவன், இருகைகளையும் தலைக்கு பின்புறம் கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் நிம்மதியாக!
ஆழ மூச்செடுத்து விட்டவனின், நிம்மதிக்கு காரணம் சிகிச்சை நல்லபடியாக முடிந்ததினால் வந்தது என்று சொல்லவும் தேவையில்லை.
சில நிமிடங்களுக்கு பிறகு அவனை கண் திறக்க வைத்தது அவனின் அலைபேசியின் கிணுகிணுப்பு!
யாரென்று எடுத்து பார்த்தவன், ‘Don’ என்று திரை ஒளிர்வதை கண்டு, சிரிப்புடன் எடுத்து பேச ஆரம்பித்தான்.
“ஹாய் பாட்டி… என்ன நல்லபடியா வேர்ல்ட் டூர் எல்லாம் போயிட்டு வந்தாச்சா?” என்று கேலி செய்ய,
“ஹக்கும்… வேர்ல்ட் டூர் ஒண்ணுதாண்டா குறைச்சல் இப்போ… ஒரு வாரம் ஊருக்கு
போயிட்டு வந்து வீட்டை பார்த்தா வீடு மாதிரியாடா இருக்கு! கடல் மேல போட்ட பிளாஸ்டிக் குப்பையாட்டம் கிடக்கு… இப்படி இருந்தா வீட்ல எப்படிடா மகாலட்சுமி இருப்பா?” திட்டினார் நித்திலனின் பாட்டி பிரபா.
“வீட்ல மகாலட்சுமி இருக்கா… அப்போ வாடகை வாங்கிருங்க பாட்டி…” என்று ஒரு அதர பழசான மொக்கையை நந்தன் எடுத்துவிட,
“வந்தேன்… குடலை உருவிருவேன்… வாயை மூடுடா… ஏண்டா கடன்காரா… வீட்டை வீடு மாதிரியாடா வைச்சு இருக்கான் உன் நண்பன்… ஹாலை கூட்டி ரெண்டு நாள் ஆகுது… அழுக்கு துணி எல்லாம் சோபாவுல தொங்குது… சாப்பிட்ட தட்டு, ஜாம் டப்பா எல்லாம் டைனிங் டேபிள்ள கெடக்கு… என்ன லட்சணத்துலடா வளர்ந்துருக்கிங்க?” என்று நித்திலனோடு சேர்த்து நந்தனும் திட்டு வாங்கினான்.
“அவனுக்கு மூணு நாளா காய்ச்சல் பாட்டி… எப்படி செய்வான் அவன்?” நண்பனுக்காக
பரிந்து பேசினான் நந்தன்.
“நீ என்னத்தை வெட்டி முறிச்ச?” இடக்காக கேட்டார் நித்திலனின் பாட்டி
“நானும் தான் பிசியா இருந்தேன்… இதோ இப்போ கூட ஒரு சர்ஜரின்னு காலைல சாப்பிட கூட இல்லை தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டே சந்தோஷி தந்துவிட்ட உணவு டப்பாவை திறந்து சாப்பாட்டை வாசம் பிடித்தான் நந்தன்.
“என்னது சாப்பிடலையா? சந்தோஷி சாப்பாடு கொடுத்தேன்னு சொன்னா?” என்று சந்தேகமுடன் இழுக்க,
“ஹையோ பாட்டி நான் காலைல டிஃபனை சொல்றேன்!” என்று விளக்கினான் நந்தன்.
சொல்லிக்கொண்டே உணவை உண்ண ஆரம்பித்தான்.
“ஏண்டா போனது ஆறு மணிக்கே… அப்பவே நீ எப்படிடா சாப்புடுவ…? சாப்பாட்டு ராமா! இதான் இனி கொட்டிக்குவல…”
“பாட்டி… எனக்கு அத்தை நிறைய டீஃபன் பாக்ஸ்ல வைக்கணும்ன்னு நினைச்சாலும், இந்த சதிகாரி
குறைச்சு தான் வைப்பா… பாருங்க இப்போ கூட ரெண்டு சப்பாத்தி தான் வைச்சிருக்கா… கூடவே ரெண்டு ஆப்பிள்… மதியத்துக்கு அரைடப்பா சாதம் தான் வைச்சிருக்கா… அதுவும் லெமன் சாதமும் தயிர் சாதமும்… இது எப்படி வளருற பையனுக்கு பத்தும்…?” என்று குறைப்பட்டு கொண்ட நந்தனை,
“தின்னி பண்டாரம்… தின்னி பண்டாரம்… இதுவே ஜாஸ்திடா கிராதகா! போனா போகுதுன்னு பாவமேன்னு சமைச்சு தராங்கடா” என்று அதற்கும் திட்டினார் பிரபா.
“என்ன ஜாஸ்தி…? பாட்டி… ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க… காலைல ராஜா மாதிரி சாப்பிடனும்… மதியம் ஆனா இளவரசன் மாதிரி சாப்பிடனும்… ராத்திரியானா…” என்று சொல்லி முடிப்பதற்குள்,
“மந்திரி மாதிரி சாப்பிடனுமா…?” என்று கேட்டு வைத்தார் பிரபா.
“அதான் இல்லை… பிச்சைக்காரன் மாதிரி சாப்பிடனும்!” என்று அறிவுறுத்தினான்
நந்தன்.
“என்னைக்கேட்டா அவன் தான் மத்த ரெண்டு பேரையும் விட அதிகமா சாப்பிடுவான்… அடப்போடா புண்ணாக்கு…”
‘எனக்கு இது தேவை தான்…’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் நந்தன்.
பாட்டியோ, “டேய் இங்கே பாருடா… இப்படி எல்லாம் அறிவாளியா பேசுறேன்னு ஊருக்குள்ள போய் பேசிட்டு இருக்காதா… கேனப்பையன்னு நினைச்சுருவாங்க… நான் உனக்கு பொண்ணு வேற பார்த்துட்டு இருக்கேன்… அப்பறம் விஷயம் வெளில தெரிஞ்சுது ஊருக்குள்ள ஒருத்தன் உனக்கு பொண்ணு தரமாட்டான்!” என்று
புலம்பலாய் கூற,
“ஹையே… ஏன் பாட்டி இப்போ போன் பண்ணி நசநசன்னு புலம்புறிங்க?” என்று நந்தன் சலித்து கொள்ள,
“என்னது நசநசன்னு பேசுறேனா? உன்னை எல்லாம் வளர்த்ததுக்கு எனக்கு இந்த பேச்சு தேவை தாண்டா… காலா காலத்தில் கல்யாணம் பண்ணி வைச்சிருந்தா… உன்கிட்ட நான் இப்படி பேச்சு வாங்க வேண்டி இருக்குமா? வந்த
சீமாட்டி உன்னை தாலாட்டி சீராட்டி இருப்பா… நீயும் அவ பேச்சு தேன் மாதிரி இருக்குன்னு சிலாகிச்சு இருப்ப… நான் கிழவி தான அதான் இப்படி ஏசுற…!” தனது அக்மார்க் புலம்பலை ஆரம்பித்து நந்தனை நொந்து போகவைத்தார் பிரபா.
‘தெரியாத்தனமா வாயை குடுத்து வசவு வாங்குறியேடா நந்தா!’ என்று தலையில் அடித்து கொண்டவன், மேலும் தொடர்ந்து புலம்பி கொண்டிருந்த பாட்டியின் பேச்சையும் கேட்டான்.
பிரபாவோ, நந்தன் நித்திலன் ரெண்டு பேரின் குணநலன்களை பட்டம் விட்டு மார்ஸிற்கே அனுப்பி கொண்டு இருந்தார்.
ஒருவழியாக வசவுகளை முடித்தவர், இறுதியாக, “உங்க மொத்த கொட்டத்தையும் அடக்க ஒருத்தி வருவாடா…” என்று வரம் ஒன்றையும் தந்துவிட்டு போனை வைக்க,
‘இன்னொருத்தி வேறையா… உங்களையும் சந்தோஷியையும் வைச்சே எங்களுக்கு நாக்கு தள்ளுது!’ என்று மனதிற்குள் கதறிய நந்தன், புண்பட்ட மனதை உரமேற்ற, மதிய உணவையும் சேர்த்து முழுங்கினான்.
ஆனால் எல்லாம் நினைப்பது போலவா நடக்கும்…
வருபவள் இவர்களின் கொட்டத்தை அடக்குபவளாக இல்லாமல், பல நூறு சேட்டைகளை செய்து மொத்த பேரின் தலைமுடியையும் பிய்த்து கொள்ள செய்பவள்
என்று அவள் மட்டுமே அறிவாள்.
2 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
nice ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Nice……… like my sweety grand ma.