உனக்காகவே வந்தேனடா – 3
2888
1
அன்று மாலை ஏழு மணி அளவில்…
குருபவனத்தின் முன் வந்து நின்றது ஓலா… அதிலிருந்து இறங்கினாள் அவள். தனது
உடமைகளை எடுத்து கொண்டு, டிரைவருக்கு வேண்டிய பணத்தை கொடுத்தவள்,
வண்டி கிளம்பியதும் வீட்டை ஆராய ஆரம்பித்தாள்.
தனது ரக்சாக்கை முதுகில் மாட்டியபடி, பெரிய பெட்டியை கைகளால்
இழுத்துக்கொண்டு கேட்டின் முன் வந்து நின்றாள். அத்தனை ரம்மியமாக இருந்தது
வீடு… சுற்றிலும் மரம் செடி கொடிகள் என்று அவளுக்கு பிடித்தது போலவே இருந்தது.
‘பிடிச்ச மாதிரியே வீடு இருக்கு சாக்ஷி… இங்கே இருக்க மொத்த பேரையும் கவுத்தினா
மட்டும் தான் எல்லாம் நமக்கு பிடிச்ச மாதிரி… நாம நினைச்ச மாதிரி நடக்கும்!’
மொத்தம் நான்கு வீடுகள் இருந்தது. வலது பக்க வீட்டை நெருங்கி கதவின் மேல்,
‘சந்தோஷி… லெக்சரர்…’ என்று பெயர் தாங்கியிருக்க, படித்து கொண்டே அழைப்பு
மணியை அழுத்தினாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு வந்து கதவை திறந்தார் அந்த பெண்மணி… சந்தோஷியின்
அன்னை…
முகம் முழுக்க சாந்தமும், உதட்டில் உறைந்த சிறு புன்னகையும், நெற்றியில்
பூசப்பட்டிருந்த சந்தனமும், திருநீறும் பார்க்கும் அனைவரையும் அமைதி அடைய
செய்யும் தோற்றம் அவரது!
யாரென்பது போல் பார்த்தவரிடம், “வணக்கம்மா… என் பேரு சாக்ஷி… சாக்ஷி பாலா.
ரெண்டு நாளைக்கு முன்னாடி போன் பண்ணினேனே… நடேசன் சார் சொல்லி… வீடு
வாடகைக்குன்னு அட்வர்டைஸ்மென்ட் பார்த்து…” என்று விளக்கம் தர,
“ஹோ… நியாபகம் இருக்கு… நியாபகம் இருக்கு… என் பொண்ணு சொன்னா…
வாம்மா… உள்ளே வா!” என்று அழைத்து கொண்டு உள்ளே சென்றார் தேவிகா.
“சந்தோஷி… அந்த பொண்ணு வந்துருக்கா… கொஞ்சம் வரியா?” என்று மகளை
அழைத்தவர்,
“உட்காரும்மா… நான் போய் தண்ணி எடுத்துட்டு வரேன்…” என்று கிச்சனுள்
சென்றார். சில நிமிடங்கள் கழித்து சந்தோஷி அங்கே வர, எழுந்து நின்றாள் சாக்ஷி.
“அட… உட்காருங்க… எதுக்கு இந்த பார்மாலிடிஸ் எல்லாம்…” சிரிப்புடன் பேசிய
சந்தோஷி, அவளை பற்றிய விபரங்களை கேட்க ஆரம்பித்தாள்.
“நடேசன் மாமா சொன்னதால மட்டும் தான்… சரின்னு சொல்லிருக்கோம்… அவர்
இவ்ளோ நம்பிக்கையா யாரைப்பத்தியும் சொல்ல மாட்டாரு… ஆமா அவர் எப்படி
உங்களுக்கு பழக்கம்?” – சந்தோஷி வினவ,
“நடேசன் அங்கிள் சென்னைல இருந்த டைம்ல அவர் பக்கத்து வீடு நாங்க… அண்ட்
அம்மாவும் அங்கிளும் ஒண்ணா தானே வேலை பார்த்தாங்க… அப்போ பழக்கம்,
அப்பறம் அவர் இங்கே ட்ரான்ஸ்ஃபர் வாங்கி வந்துட்டார்… நாங்க அங்கேயே
இருந்தோம்… எனக்கு இங்கே போஸ்டிங் போட்ட பிறகு, அம்மாவோட காண்டாக்ட்
லிஸ்ட்ல அவரோட நம்பர் கிடைச்சது… அப்போ தான் மறுபடியும் பேச
ஆரம்பிச்சேன்!” என்று பதில் தந்தாள் சாக்ஷி.
“ஹோ… அப்படியா… நடேசன் நல்ல மனுஷன்… எனக்கு ஒரு வகைல ஒண்ணுவிட்ட
அண்ணன் தான்…” என்றபடி வந்த தேவிகா தண்ணீர் மட்டுமல்லாமல், காஃபி,
சிற்றுண்டி போன்றவற்றையும் எடுத்து வந்து சாக்ஷியிடம் நீட்ட,
“ஐயோ எதுக்கு ஆன்ட்டி?” என்று ஆட்சேபம் செய்தாள்.
“இருக்கட்டுமா… உன்னை பார்த்தா ரொம்ப தூரம் இருந்து வந்த மாதிரி இருக்கு…
நீயும் எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்ட, சாப்பிடு…” என்று உபசரிக்க, மூன்று
பெண்களும் பொதுப்படையாக உரையாடினர்.
“எனக்குமே முதல்ல அவர்கிட்ட கேட்க சங்கடம் தான்… ஆனா எனக்கு இருந்த ஒரே
ஹோப் அவர்தான்!” என்று காஃபியை ஒரு மிடறு அருந்திக்கொண்டே கூறினாள்
சாக்ஷி.
“வீட்டை கொஞ்சம் சுத்தம் செஞ்சு வைச்சிருக்கோம்… இன்னைக்கு ஒரு நாள்
இங்கேயே தங்குங்க… நாளைக்கு அங்கே பால் காய்ச்சிட்டு ஷிஃப்ட் ஆகிருங்க…
ஆமா… உங்க திங்க்ஸ் எதுவும் எடுத்துட்டு வரலை போல?” என்று சந்தோஷி
விசாரிக்க,
“ஆமா… இப்போதைக்கு ட்ரெஸ் மட்டும் எடுத்துட்டு வந்துட்டேன்… வீட்டுக்கு
தேவையானது எல்லாம் நாளைக்கு காலைல வந்துரும்… பாகர்ஸ் கொண்டு வந்து
போட்டுருவாங்க… அடுத்து வேறேதாவது வேணும்ன்னா வாங்கிக்க வேண்டியது
தான்!” என்று விரிந்த சிரிப்புடன் கூறியவளின் மகிழ்ச்சி சந்தோஷியையும்
தொற்றிக்கொண்டது.
“உங்க சிங்கப்பல் சிரிப்பு அழகா இருக்கு?” சந்தோஷி பாராட்டு விடுக்க,
ஆச்சர்யப்பட்டு சிரித்த சாக்ஷி,
“தாங்க்ஸ்… நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க… சிரிக்காட்டினாலும் கூட…” என்று
பதில் பாராட்டு தர, நொடி நேரத்தில் தோழிகள் ஆகிவிட்டனர்.
“வீட்டு சாவி நித்திலன்கிட்ட இருக்கு… பாட்டி அவங்க வீட்டு சாவியோட இன்னைக்கு
கோவில் போய்ட்டாங்க… அவங்க வர கொஞ்ச நேரம் ஆகும்…” என்று கூறியபடி,
“ரொம்ப நாளாவே அந்த வீட்டுக்கு யாரையும் குடி வைக்க விருப்பம் இருந்ததில்லை…
ஈவினிங் மட்டும் டியூஷன் நடக்கும்… அப்பறம் ஒருநாள் நித்திலன் தான்
சொன்னாங்க… வீட்டை வாடகைக்கு விடுவோம்… ஒன்னு சின்ன பிள்ளைங்க இருக்க
மாதிரி விடுவோம்… இல்லாட்டி வேலைக்கு போற பொண்ணுங்களுக்கு வீடு போல
விடுவோம்… அப்போ தான் அம்மாக்கும் பாட்டிக்கும் துணையா இருக்கும்னு அவங்க
சொன்னதுனால… சரி எதுக்கு எல்லாத்தையும் இப்படி துரு பிடிச்சு போக வைக்க,
அதுக்கு பதிலா யாரையாவது வாடகைக்கு வைக்கலாம்ன்னு நினைச்சு தெரிஞ்சவங்க
கிட்ட சொல்லிவைச்சோம்…” என்று விளக்கினாள் சந்தோஷி.
பிறகு தங்களின் குடும்பம் வேலை என்று பேசிக்கொண்டு இருந்தனர் பெண்கள்.
“நான் எம்ஃபில் முடிச்சிருக்கேன்… சிட்டில இருக்க கர்ள்ஸ் காலேஜ்ல லெக்சரர்…
இங்கே நானும் அம்மா மட்டும் தான்… அப்பா சின்ன வயசுல ஒரு ஆக்சிடென்ட்ல
இறந்துட்டாங்க… அப்பா, அப்பா ஃபிரெண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா ஒரே இடத்துல
கட்டுன வீடு இதெல்லாம்… எல்லாருமே ஒண்ணா இருக்கனும்ன்னு! இப்போ
சப்போர்ட்க்கு பிரெண்ட்ஸ் இருக்காங்க…” என்று சிரிப்புடன் சுருக்கமாக கூறிய
சந்தோஷியின் கூற்றுக்கு தலையாட்டியபடி கேட்டு கொண்டிருந்தாள் சாக்ஷி.
“ஹோ… எனக்கும் அப்பா சின்னவயசுலேயே இறந்துட்டாங்க… ஹார்ட் அட்டாக்…
அம்மா பேங்க் எம்ப்ளாயீ… அம்மா தான் எல்லாம் பார்த்தாங்க… அவங்களும் போன
வருஷம் உடம்பு சரியில்லாம கடவுள் கிட்ட போய்ட்டாங்க… இப்போ அவங்க வேலை
தான் எனக்கு கிடைச்சிருக்கு…” என்று தன்னை பற்றி சுருக்கமுடன் கூறிமுடித்தாள்
சாக்ஷி.
இரு பெண்களின் பேச்சிலும் எனக்காக பரிதாபம் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம்
மேலோங்கியே இருந்தது. என்னை அப்படியே ஏற்றுக்கொள் என்ற உணர்வு
தென்பட்டதில் இரு பெண்களின் முகத்திலும் மெல்லிய புன்னகையின் சாயல்.
இதை கேட்டுக்கொண்டிருந்த தேவிகாவோ, “கவலைப்படாதம்மா… கடவுள்
நம்மக்கிட்ட இருந்து நமக்கு ரொம்ப பிடிச்ச உறவுகளை கூட்டிட்டு போறார்ன்னா,
இதைவிட விலைமதிப்பில்லாத பல உறவுகளை நம்மகிட்ட தருவாங்கன்னு எங்க
பசங்க சொல்வானுங்க… நீ பாரேன்… கண்டிப்பா உன்னை கண்ணுக்குள்ள வைச்சு
தாங்குற மாதிரி ஒருத்தன் வருவான்!” என்று ஆறுதல் கூறினார்.
“தாங்க்ஸ் ஆண்ட்டி… இப்படி வார்த்தைகள் கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு!”
என்று நெகிழ்வுடன் சாக்ஷி சொல்ல, புன்னகைத்தனர் மற்ற இருவரும்…
அதே நேரம் சாக்ஷியின் போன் கிணுகிணுக்க, எடுத்து பார்த்தவள், “என் ஃபிரெண்ட்
தான்… ரீச் ஆகிட்டேனான்னு கேட்க போன் பண்றா… ஒரு நிமிஷம்…” என்று
இவர்களை பார்த்து கூறியபடி போனை அட்டென்ட் செய்து பேசவாரம்பித்தாள்.
“ஹலோ… நிஷா… வந்தாச்சு நிஷா… இருபது நிமிஷம் ஆச்சு…” என்று இவள் கூறி,
மறுபக்கம் இருந்து பதில் வேண்டி காத்திருக்க, கரகரவென்று மட்டுமே நிஷாவின்
குரல் ஒலித்தது.
“ஹலோ… ஹலோ…” என்று நாலைந்து தடவை சாக்ஷி கூற, போன் கட்டானது.
“சிலசமயம் இங்கே வீட்டுக்குள்ள டவர் கிடைக்காது! எதுக்கும் வெளில போய்
பேசிப்பாருங்க…” என்று சந்தோஷி கூற, நன்றி சொல்லிவிட்டு வெளியேறினாள்
சாக்ஷி.
இங்கே சந்தோஷியோ, “நல்ல பொண்ணுலம்மா… எனக்கு இவளை ரொம்ப
பிடிச்சிருக்கு… இங்கேயே இருக்கட்டும்… அந்த நந்தா எருமை தான் ரூல்ஸ்
பேசுவான்… நல்லவேளை இப்போ தூங்கிட்டான்… நாளைக்கு அவனை பாட்டி
வைச்சு தான் சமாளிக்கணும்… அதுவரைக்கும் இவ அவன் கண்ணுல படாம
இருந்தாலே போதும்…” என்று தாயிடம் சிரிப்புடன் சொல்ல,
“விளக்கி சொன்னா புரிஞ்சுக்குவான்மா… சரி நீ நித்திலன் வந்தவுடனே ரெண்டு
பேருக்கும் சாப்பாடு எடுத்துட்டு போ… பாலா அப்பவே சாப்பிடுட்டான்… அவனும்
படுத்துருப்பான்… பாட்டி வேற இன்னும் வரக்காணோம்… ஹ்ம்ம்… நான் போய்
சமைக்கிறேன்…” என்று கிச்சனை நோக்கி படையெடுத்தார் தேவிகா.
தாய் எதனால் அப்படி சொன்னார் என்று சந்தோஷிக்கு நன்றாகவே தெரியும்!
ஏனென்றால் நந்தனும் சரி, நித்திலனும் சரி இரவு சாப்பாடை சந்தோஷியின் வீட்டில்
தான் உண்பர்! பல சமயங்களில் நந்தன் இங்கே தான் இருப்பான்.
ஆனால் முதல் முதலாக வந்திருக்கும் பெண் ஏதாவது சங்கடமாக நினைப்பாளோ
என்று தான் சாப்பாடை அங்கே கொண்டு போய் கொடுக்க சொல்கிறார் அன்னை.
மேலும் பெண்கள் மட்டும் இருப்பதினால், அந்த சங்கடம் இல்லாமல், அவர்களுக்குள்
ஒரு நல்ல தோழமை உணர்வோடு பழகுவாள் என்று எண்ணியபடி தான் தாய்
இவ்வாறு கூறினார் என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டாள் சந்தோஷி!
வெளியில் வீட்டை அடுத்து இருந்த நடைப்பாதையை தாண்டி, அங்கே காரிருள்
சூழாமல் இருக்க, அங்கே போடப்பட்டிருந்த மின்விளக்கின் கீழ் இருந்த கல்மேடையில்
சென்று அமர்ந்தாள் சாக்ஷி.
போனை எடுத்து தோழி நிஷாவிற்கு அழைத்தாள். அந்தப்பக்கம் அழைப்பை
ஏற்றவுடன்,
“வந்து சேர்ந்துட்டேன் நிஷாம்மா…” என்று குரல் கமற சொல்லிய வார்த்தைகளின்
அர்த்தத்தை சரியாக புரிந்து கொண்டாள் நிஷா.
“ஃபீல் பண்ணாத பாலா… உங்க அம்மாவோட கடைசி ஆசையை நிறைவேத்த தானே
நீ அங்கே போயிருக்க… எல்லாமே நல்லபடியா நடக்கும்…” என்று நம்பிக்கை
வார்த்தைகளை அளித்தவள்,
“சரி… அங்கே எல்லாரையும் மீட் செஞ்சுட்டியா?” என்று ஆர்வமாக கேட்க,
“இல்லை… சந்தோஷியையும், தேவிகா ஆன்ட்டியையும் மட்டும் தான் பார்த்தேன்…
நித்தி, நந்தா, பாட்டி எல்லாம் வெளில போயிருக்காங்க போல…” என்று விவரம் தந்த
சாக்ஷி,
“இப்போ தான் என்னோட சொந்த வீடு வந்து சேர்ந்த மாதிரி இருக்கு நிஷா…
இவங்களோடவே என்னோட மொத்த காலமும் இருக்கணும்னு அடிக்கடி ப்ரே
பண்ணுறேன்!” என்று கண்களில் கண்ணீருடன், வார்த்தைகளில் நெகிழுவுடன்
கூறினாள்.
“இட்ஸ் டெஸ்டினி பாலா… அவங்க கூடத்தான் நீ இருப்ப… இருக்கணும்… கண்டிப்பா
பாரேன்… நீ இல்லாம அவங்களால ஒரு நொடி கூட இருக்க முடியாதபடி ஆவாங்க… நீ
தான் அவங்களுக்கு எல்லாமேன்னு சொல்வாங்க பாரேன்! இனி உன்னோட
ஆட்டதை ஆரம்பி!” என்று நிஷா தந்த தைரிய வார்த்தைகளில் சாக்ஷியுமே தைரியம்
கொண்டாள்.
பிறகு தோழியுடன் சிறிது நேரம் பேசி வைத்தவளின் மனதில் தேவிகா கூறிய
வார்த்தைகளே ஆழமாக பதிந்தது.
‘கவலைப்படாதம்மா… கடவுள் நம்மக்கிட்ட இருந்து நமக்கு ரொம்ப பிடிச்ச உறவுகளை
கூட்டிட்டு போறார்ன்னா, இதைவிட விலைமதிப்பில்லாத பல உறவுகளை நம்மகிட்ட
தருவாங்கன்னு எங்க பசங்க சொல்வானுங்க… நீ பாரேன்… கண்டிப்பா உன்னை
கண்ணுக்குள்ள வைச்சு தாங்குற மாதிரி ஒருத்தன் வருவான்!”
பிற்பகுதி வார்த்தைகளை கவனத்தில் கொள்ளாமல் விட்டவள், இந்த முற்பகுதி
வார்த்தைகளில் மொத்தமாக நெகிழ்ந்து தான் போனாள் சாக்ஷி!
‘ஆமா… எனக்கான விலைமதிப்பில்லாத உறவுகள் இங்கே தான் இருக்கீங்க… அது
நீங்க தான்!’ என்று அதே நெகிழ்வுடன் சந்தோஷியின் வீட்டை நோக்கி நடையை
எட்டி போட்டாள் சாக்ஷி!
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Nice……..