காஜலிட்ட விழிகளே 3
2540
0
மீண்டும் இன்று
ஜுன் மாதம்
இரண்டாயிரத்தி பதினாராம் ஆண்டு…(2016)
இடம்:
கபாலீஷ்வரர் கோயில் சென்னை
“இது காதல் கோட்டைக் காதல் தான்” என்று ஸ்ருதி சொன்ன போது கார்த்திக் ஒன்றும் சொல்லவில்லை.
“கார்த்திக் இது காதல் கோட்டைக் காதல் தான். நான் சொல்றது புரியுதா?”
“கொஞ்சம் புரியுது ஸ்ருதி. ஆனா நான் சரியாகத்தான் புரிஞ்சிருக்கேனா இல்லையான்னு நீ சொல்லும் விளக்கத்தை வைத்துதான் சொல்ல முடியும். அதனால் கொஞ்சம் விளக்கம் தர முடியுமா?”
“கார்த்திக் நாம இரண்டு பேரும் சந்திக்கலாம். ஆனால் தனியாக சந்திக்கக் கூடாது. நீ தனியாக என்கூட பேசக்கூடாது. வெளியே எங்கேயும் என்னை கூப்பிடக் கூடாது. அப்பா இரண்டு வருஷம் கழித்துதான் என் கல்யாணம் பற்றியே பேச்செடுப்பார். அதனால் அதுவரை எப்ப கல்யாணம் என்று என்னை நச்சரிக்கக் கூடாது. என் வீட்டில் குறிப்பா என் கிரிஜா அக்காவுக்கு சந்தேகம் வரும்படியாக நீ நாம ஸ்டேஜில் பாடும்போது நடந்துக்கக் கூடாது. கிரிஜா அக்கா கல்யாணம் இன்னும் ஒரு வருஷத்தில் முடிஞ்சிடும் அதுவரை அக்கா நம்மகூட ட்ரூப்பில் பாடுவாங்க. அதனால் ரொம்ப ரொம்ப கவனம்! முக்கியமானது ஒண்ணு சொல்ல மறந்திட்டேன் பாரு.. நீ என்னைத் தொடவே கூடாது! ”
“கார்த்திக் ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. நீ தொட்டா நான் உருகுவேன் அப்புறம் கல்யாணத்தை சீக்கிரம் வச்சிட சரின்னு சொல்வேன் என்று மட்டும் நினைக்காத. அப்படி ஒரு விஷயம் நடந்ததுன்னா உன்னை நான் திரும்பிகூட பார்க்க மாட்டேன். தெரிஞ்சுக்கோ. நம்ம காதல் காதல் கோட்டை படத்தில் வருவது மாதிரிதான் கண்ணியமாக இருக்கணும். என் அப்பாவுக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது தெரியுமா? எனக்கு எல்லாமே என் அப்பாதான். என் அப்பா மனக் கஷ்டப்படும்படி நான் எதுவுமே செய்யமாட்டேன். அவருக்கு ஜோடியாக பைக்கில் சுத்துவது.. பீச், பார்க், தியேட்டர், இப்படி பல இடங்களில் அலைவது.. கைகோர்த்து நடப்பதுஇ இது எதுவுமே துளிகூடப் பிடிக்காது. நானும் கிரிஜாவும் அப்பா இஷ்டம்போல்தான் எப்போதும் நடந்துக்குவோம். இப்ப புரியுதா?” என்று ஸ்ருதி முடித்தபோது கார்த்திக் தெளிவாக குழம்பியிருந்தான்.
ஆனால் அவள் சொன்னது கொஞ்சம் புரிந்தபோதே தலையே சுற்றியது. கறாராக கேள்வி கேட்பவளிடம் பதில் சொல்லாமல் தப்பிக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்தவன் அவளிடம் தன் மனதில் தோன்றியவற்றை கொட்டத் தொடங்கினான்.
“புரியுது. உன் கண்டிஷன்களுக்கு ஓகே ஸ்ருதி. ஆனால் நானும் ஒரு கண்டிஷன் வச்சிருக்கேன். அதுக்கு நீயும் ஓகே சொல்லணும். உன் கன்டிஷனுக்கு எல்லாம் நான் ஓகே சொல்லிட்டேன்ல்ல?” என்றதும் ஸ்ருதி ஒரு கணம்கூட யோசிக்காமல் சரி என்றாள்.
“கல்யாணத்திற்கு முன் உன் சொல்பேச்சு கேட்பேன். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகும் இதையே எதிர்ப்பார்க்காதே. ஒரு வார்த்தைகூட கேட்கமாட்டேன். நான் வச்சதுதான் சட்டம். சரியா? இப்போது சொல்வது மாதிரி இங்கத்தொடாதே அங்கத்தொடாதே என்றெல்லாம் சொல்லக்கூடாது சரியா?”
பதில் வராமல் அவன் காத்திருக்க நேர்ந்ததும், “என்ன சரியா காஜலிட்ட விழிகளே?” என்று மீண்டும் கேட்டான்.
‘தொடாமல் பேசியே ஆளைக் கவுத்திடுவான். காஜல் விழியேன்னு ஐஸ் வைப்பதைப் பாரு! சில்மிஷமாய் தொடக் கூடாதுன்னு சட்டம் வச்சது நல்லதாகப்போச்சு’ என்று மனதில் தீர்மானம் செய்துகொண்டே “சரி” என்றாள்.
“ஸ்ருதி அப்புறம் ‘லவ் பண்ணும்போது நான் சொன்னதையெல்லாம் கேட்ட ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு கேட்கவே மாட்டிக்கிற..’ அப்படி இப்படின்னு புலம்பக்கூடாது! சொல்லிட்டேன். ”
“சொல்லமாட்டேன்.”
“எனக்கும் உன்னை தொட்டுக்கிட்டே இருக்கணும். பைக்கில் பின்னாடி உட்காரவைத்து ஊர் சுத்தணும், இடுப்பில்.. முறைக்காதடி! இடுப்பில் மட்டும்தான் அதற்குமேல் கைகளை நகர்த்தமாட்டேன்.. உன் இடுப்பில் வலிக்காமல் கிள்ளிவைக்கணும் அப்படி இப்படின்னு எவ்வளவு ஆசை இருக்கும்? அதுக்கெல்லாம் நீ ஒரேடியாக முழுக்கு போடுற.. காதல் விஷயத்தில் சரியான கருமியாக இருக்கின்றதால் உனக்கு இந்த பனிஷ்மென்ட். கல்யாணத்திற்குப் பிறகு உன் சொல்பேச்சு ஒண்ணுகூட கேட்க மாட்டேன். நானும் என் பிள்ளைகளும் உன்னை என்ன பாடு படுத்துறோம் என்று பாரு. என் பிள்ளைகளுக்கு உன் குண்டு கன்னங்கள் வந்தாலும் சரி, என் கரடு முரடான கன்னங்கள் வந்தாலும் சரி, காரில் தினம் தினம் பார்க்குக்கு கூட்டிட்டு போய் என் சொல்பேச்சு மட்டுமே கேட்கும் தலையாட்டி பொம்மையாக்கிடுவேன். இரண்டு வருஷம் என்னை டார்ச்சர் பண்ணப்போற.. அதனால் வாழ்க்கை முழுதும் என்கிட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாகப் போற.. உனக்கு என் கன்டிஷன் புரியிதா? ”
“சரி சரி அதை அப்புறம் பார்க்கலாம்.. ”
“நோ டியர். இந்த மழுப்பல் எல்லாம் வேலைக்கு ஆகாது. டீலா நோடீலா? ”
“டீல் ” என்றாள் மேலே இருந்த ஃபால்ஸ் ஸீலிங்கைப் பார்த்துக்கொண்டு.
“சரி நீ வந்த முக்கியமான விஷயம் முடிஞ்சிடுச்சா இல்லை இன்னும் இருக்கா? ”
“முடிஞ்சிடுச்சு. நான் போகட்டுமா?”
“ஸ்ருதி நாளையிலிருந்துதானே இந்த சட்டம் எல்லாம் அமலுக்கு வரும்? இன்றைக்கு அதெல்லாம் ஒண்ணும் இல்லையே? கைலாசநாதர் கோவிலுக்கு போகலாமா? உன்னுடன் போகணும்.. ” என்று அவன் கேட்டபோது..
“கார்த்திக் நான் இங்க வந்து பதினைந்து நிமிடங்கள் ஆச்சு. சட்டம் அமலுக்கு வந்து அதே பதினைந்து நிமிடங்கள் என்பது என் கணக்கு! நீ எப்படி? கணக்கில் ஸ்ட்ராங்கா? வீக்கா? என்று அவள் தனது பாடல் வரிகள் அடங்கிய கையேட்டின் பக்கங்களை திருப்பிக்கொண்டே பதில் தர.. கார்த்திக் தனது கையிலிருந்த கைபேசியை இயக்கி சத்தமாகச் சொன்னான், “டேவிட் இன்னைக்கு ரிகர்சல் ஆரம்பிக்கலாமா? ரிக்கார்டிங் தியேட்டருக்கு வந்திடுங்க.. நான் ஸ்ருதியை அழைத்திட்டு வர்றேன். ”
அவளுக்கு அவன் அவளை கல்யாணத்திற்குப்பிறகு பந்தாடுவேன் என்று சொன்ன எரிச்சல். அவனுக்கு அவள் காதலிக்கும் நாட்களை சுத்த சைவ நாட்களாக்கிய எரிச்சல்.
ஆசை ஆசையாக அவள் பேசவேண்டும் என்று கபாலீஷ்வரர் கோவிலுக்கு அழைத்துவிட்டு தலையில் இடிமேல் இடியாக விஷயங்களை இறக்கிய கோபம் அவனுள் இருந்தபோதும் அவளிடம் வெளிப்படையாகக் காட்டாமல் அமைதியாகவே இருந்தான் கார்த்திக். இருவரும் ரிக்கார்டிங் தியேட்டர் சென்றனர். தனது வேலையில் கவனம் வைத்தான்.
கார்த்திக் மைக்கில் அழைத்ததும் முதலாவதாக ஓடிவந்த டேவிட்டிடம் கேட்டான் ,
“எத்தனை பாட்டு உங்களுக்கு ஒதுக்கியிருக்கேன் டேவிட்? டேவிட் உச்ச ஸ்ருதியில் பாடும்போது கவனமாக இருங்க. சில நேரம் அந்த ஸ்ருதி உயிரை வாங்கிடும்! ஸ்ருதியில் பிரச்சனையில்லை அதை கண்டுபிடிச்சானே.. அந்த ஆளால்தான் பிரச்சனை.” என்று சொன்னபோது அவன் அருகில் நின்றுகொண்டு தனது பாடலின் வரிகளை மனப்பாடம் செய்த ஸ்ருதிக்கு கோபம் எல்லாம் வரவில்லை. ஆனால் மகாக் கோபம் வந்தது.
சந்தடி சாக்கில் தன் தந்தையை அவன் மட்டம் தட்டிப்பேசுவது நன்கு விளங்கியது. ஆனால் யாரிடமும் தனது கோபத்தை பகிரவில்லை. கார்த்திக்கின் பேச்சால் முகத்தை சிடு சிடுவென்று வைத்திருந்த ஸ்ருதிக்கு தன்னை பெயர் சொல்லி யாரோ அழைப்பது கேட்கவும் திரும்பி அத்திசையில் பார்த்தாள்.
அவளை அழைத்துக்கொண்டே ஸ்ருதி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள் கிரிஜா. கிரிஜா ஸ்ருதியின் உடன்பிறந்த சகோதரி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கல்லூரிப் படிப்பை நல்ல முறையாக முடித்துவிட்டு ஓய்வு நேரத்தில் இசைக்குழுவில் பாட வந்திருந்தாள்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஸ்ருதி சேர்ந்தது இசைக் கல்லூரியில். படிப்பு முடிந்ததும் கார்த்திக்கின் ட்ரூப்பில் சேர்ந்துவிட்டாள். தந்தையின் முழுசம்மதம் கிடைத்த பிறகுதான். ஸ்ருதியின் திறமையை உள்ளுர ரசித்தாலும் பலர் முன்னிலையில் பாட ஒத்துக்கொள்ள அவர் எடுத்துக்கொண்ட அவகாசம் மூன்று மாதங்கள்.
“ஸ்ருதி இங்க வாடா! ”
“என்னப்பா? ”
“நீ நம்ம ட்ரூப்பில் கண்டிப்பா பாடணுமா? ”
“..”
“சொல்லு ஸ்ருதி.. அப்பா கேட்கிறேன் பதில் சொல்லும்மா. ”
“ஆமாம்ப்பா. எனக்கு ஒரு இரண்டு வருஷம் மட்டும் பெர்மிஷன் கொடுங்க. அக்கா கல்யாணத்திற்கு பிறகு பாட மாட்டேன். ”
“இல்லைடா கண்ணு.. ”
“என்னப்பா? ”
“ஒண்ணும் இல்லை.. அதுவந்து.. கிரிஜா ஏதோ ஒன்று இரண்டு கச்சேரியில் பாடுறா அது வேற.. அவள் வருஷத்திற்கு ஒன்று இரண்டு பாடுவது வெளியே தெரியாது? நீ முழுநேரமும் பாடப்போறேன்னு சொல்றியா.. அதான்.. அதான்..”
“என்ன விஷயம்ப்பா? ”
“ஒண்ணும் இல்லைடா.. வந்து.. நீ பெரிய பொண்ணு. உனக்கு அப்பா அட்வைஸ் தேவையில்லை. சரி, நீ நம்ம ட்ரூப்பில் பாடு. நம்ம சொந்தக்காரங்க பொம்பளைப்பிள்ளைங்க பாடினால் தப்புத்தப்பா பேசுவாங்க. பியுட்டி பார்லர் வச்சு நடத்துதே அந்த பொண்ணு சந்தியா.. அதை அங்க பார்த்தேன் இங்க பார்த்தேன் என்று என் காதுபடவே பேசுறாங்க. அந்தப் பொண்ணு கல்யாண மேக்அப் போட வெளியே போகத்தானே வேணும்? இதையே தப்பா பேசுறாங்கடா.. அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. எனக்குத் தெரியும். அவளது அப்பாவைப் பற்றி நல்லவே தெரியும். அந்த ஆள் பொண்ணு தப்பா போகாது. ஆனால் யார் நம்புவாங்க? ஒரு ஆஃபீசில் வேலை பார்ப்பது வேற.. இது வேற.. ”
“நீ ஸ்டேஜில் பாடப்போறேன்னு சொன்னா.. கார்த்திக் மாதிரி வயசு பசங்க அதிகமாக இருக்கும் இடத்தில்.. ” என்று நிறுத்தியவர் ஏதோ நினைத்துக்கொண்டு ஒரு மனதாய் தனது சம்மதத்தைத் தந்தார்.
“சரி சரி பாடுடா. யார் என்ன நினைத்தால் எனக்கென்ன? என் பொண்ணைப் பற்றி எனக்குத் தெரியாதா? ஆனால் அக்கா கல்யாணத்திற்கு பிறகு உடனே உன் கல்யாணம். அதனால் பாடுவதை நிறுத்திடணும். சரியாம்மா?”
தயங்தித் தயங்கித் தன் தந்தை கொடுத்த சம்மதம் அவளால் என்றுமே மறக்க முடியாது. பிறர் எள்ளல் பேச்சுக்கள் தான் தன் தந்தை தயங்கியதன் காரணம் என்று ஞாபகம்வர ஸ்ருதி கார்த்திக் காதல், ‘காதல்கோட்டைக் காதல் ’ என்றானது.
Comments are closed here.