காஜலிட்ட விழிகளே 4
2791
0
அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலில் கார்த்திக் அவனது கல்லூரி நண்பர்களுடன் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தான். பதிமூன்றுபேர் அந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தனர். கார்த்திக் அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் வெளியூரில் பணி புரிபவர்கள். மும்பையிலும் பூனாவிலும் பணிபுரிபவர்கள் அதிகம் இருந்தனர்.
அவர்கள் அனைவரும் உணவினை உண்டபடியே தங்களது பணிவிபரங்களை பகிர்ந்துகொண்டிருந்தனர். பல பல விஷயங்கள். அர்த்தமுள்ள விவாதங்கள் என்று நிமிடங்கள் கழிந்த பொழுது.. திடீரென்று அவர்கள் விவாதிக்கும் விஷயம் காதலைப்பற்றி என்றானது.
வந்திருந்தவர்கள் அனைவரும் தங்களது காதலைப் பற்றி அல்லது முடிந்துபோன காதலைப்பற்றி பேச ஆரம்பித்தனர். அநேகமாக அந்த கூட்டத்தில் அனைவருக்கும் ஒரு காதலி இருந்தாள். சில சபலக்கேஸ்களுக்கு ஒன்றிற்கு மேல் இருந்தனர். அவர்கள் அனைவரின் எண்களையும் பதிந்து வைத்தவன் வாட்ஸ் ஆப் மென்பொருளில் அவர்கள் பதிவேற்றி வைத்திருந்த புகைப்படங்களைப் பார்த்து அல்சர் மருந்துகள் வாங்காத குறைதான். அவ்வளவு வயிற்றெரிச்சல் அடைந்திருந்தான்.
அந்தப் புகைப்படத்தில் பைக்கில் படுத்துக்கொள்ளாத குறையாக ஒருவன் தனது காதலியுடன் இருந்தான். ஒருவர் ஒருவர் மீது ஒட்டிக்கொண்டு இன்னொரு புகைப்படம் கண்ணில் பட்டது என்றால்.. ஒருவன் மடிமீது ஒருவள் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்துகொண்டு ஒரு புகைப்படம் கண்ணை கூசச்செய்தது.
“ஏன்? இருவரும் ஊர் சுற்றிச் சுற்றி ரொம்ப கால் வலி வந்திடுத்தோ? “என்று தன்னிடம் கேட்டவனுக்கு மனதில் அப்போதுதான் ஒரு திகில் வந்து விட்டிருந்தது. அவன் பயந்தபடியே விக்கி அந்த கேள்வியை கேட்டேவிட்டான்
“என்ன கார்த்திக் உன் டி.பி யில் தனியாக நிற்கிற? இன்னும் சிங்கிளாகவா இருக்க? இல்லை வீட்டில் தெரிஞ்சிடும் என்று பயந்திட்டு பொண்ணோட ஃபோட்டோ போடாமல் இருக்கியா? ம்?” தமிழ் , கன்னடம் , ஆங்கிலம் என்று கலந்து அவன் கேட்ட கேள்விக்கு சட்டென்று தமிழில் பதில் சொன்னான் கார்த்திக்.
“மச்சி.. ஆமாம்டா. வீட்டில் தெரிந்தால் பிரச்சனையாகிடும். அவுங்க குடும்பம் ரொம்ப ஆர்தோடாக்ஸ்.. ”
“பொண்ணு எப்படிடா மச்சி? ஆர்தோடாக்ஸா ஆம்ஸ்டெர்டாமா?” என்று ஒரு அதிகபிரசங்கி கேட்டபிறகுதான் அனைவரும் மேஜையின் முன்னே உடலை சாய்த்துக்கொண்டு மேஜையின் ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் தன்னையே பார்ப்பதை கவனித்தான்.
பொண்ணா? அவள் ஹிட்லர் வீட்டிற்கு பக்கத்து வீடு! போதுமா? திருப்தியா? என்று அவர்கள்மேல் பாய நினைத்த மனதை சிரமப்பட்டு அடக்கிவிட்டு சொன்னான், “பொண்ணு ரொம்ப சாஃப்ட் மச்சி!”
“டேய் எத்தனை நாளா டேட்டிங் போற? ”
‘ டேட்டிங்கா? நாங்க காதல் டயட்டில் இருக்கோம் என்று சொன்னால் இவர்கள் எல்லோரும் குடித்த சாம்பெயின் புரையேற சிரிப்பார்களே? ’ என்று நம்பியவன் அசட்டையாக சரடு விட்டான்..
“நேற்றுதான் இன்டர்கான்டினென்டல் போயிட்டு வந்தோம். அடிக்கடி போகும் இடம் என்பதால் கொஞ்சம் போர் அடிச்சது. உனக்கு தெரியுமா விக்கி நான் நம்ம அடுத்த கெட் டூகதெரை அங்கதான் வைக்கலாம் என்று நினைத்திருக்கேன். நீங்க எல்லாரும் யூடியூப்பில் ஹோட்டலைப் பார்த்து சரி என்று சொல்லிட்டால் நான் அங்கே பேசி ஒரு பேக்கேஜ் புக் செய்ய வசதியாக இருக்கும். ”
சாமர்த்தியமாக பேச்சை மாற்றிவிட்டான். எல்லோரும் அவர்களுக்குள் அடுத்த சந்திப்பைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.
அவனுக்குத் தெரியும் ஸ்ருதியும் அவனும் இன்டர்கான்டினென்டல் ரிசார்டில் தங்கியதாகத்தான் அனைவரும் நினைப்பார்கள்.
‘‘இல்லை நீங்க எல்லோரும் நினைப்பது தவறு. எங்கள் காதல் காதல்கோட்டைக் காதல் ” என்றா சொல்ல முடியும்? சொன்னாலும் எவன் நம்புவான்? அப்படியா என்று கேட்பான்.
அந்த ‘அப்படியா’வில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். அதற்கு விளக்கம் தராமலே இருக்கலாம்.. என்று மனதில் ஒரு தர்க்கம் நடத்தினான்.
உணவு முடிந்து அனைவரும் ஐஸ்கிரீமிற்குள் புகுந்த நேரம் அவனது தட்டில் இருந்த ஐஸ்கிரீமை ஃபோர்கினால் எடுத்து சுவைத்த பிரசாத் அவனை இடித்துக்கொண்டு நின்றான்.
“என்ன சார்? ஐஸ்கீரிம் மாதிரியான விஷயத்தை என்கிட்ட மறைச்சிட்ட? ”
பிரசாத் கார்த்திக்கின் மதிப்பிற்குரிய நண்பன். கார்த்திக்கைப் போலத்தான் அவனும். கிடைத்த பெங்களுர் வேலைக்கு போகாமல் அப்பாவின் பிஸினெஸைக் கவனிக்க சென்னையிலேயே தங்கிவிட்டான். இருவரும் ஒரே சாதிசனம் என்பதால் அநேக கல்யாண வீடுகளில் பார்த்துக்கொள்வார்கள். அடிக்கடி பார்க்க நேர்ந்ததால் அதிகப்படியான ஸ்நேகம் இருந்தது. உரிமையும் அதிகமாக இருந்தது. அதே காரணத்தால் ஸ்ருதியைப் பற்றி அவன் மூச்சுவிடவில்லை. இன்று மைக் பிடித்து சொல்லாத குறையாக சொல்லியாச்சு என்று பதட்டம் அடைந்தவன் கேலியாகவே சமாளித்தான்.
“சின்ன விஷயம்தானே.. அதான் சொல்லவில்லை. கல்யாணம் முடிவானதும் உனக்குதான் தனி சலுகை. தனியே உன் வீட்டில் விருந்தே கொடுத்திடு. சரிதானே? ”
“செய்யலாம். ஆனால் கண்ணில் காட்டுவேனா என்கிறாயே.. சரியான ஆள்டா நீ! ”
“ஏய் கோச்சிக்காதே மச்சி. விஷயமாகத்தான்.. ”
“சரி.. சரி.. உன் முயூசிக் ட்ரூப் எப்படிப் போகுது? ”
“நல்லாதான் போகுது. அடுத்த ஆறுமாதத்திற்கு நிறைய ப்ரோகிராம் இருக்குடா. கெட் டுகெதர் வச்சா நான்தான் என் டைரியை செக் பண்ணணும். எல்லோரையும் வரச்சொல்லிட்டு நான் வரமுடியாமல் முழிக்கக்கூடாது பார்.. நீ கண்டிப்பா வந்திடுவீல்ல? ”
“ம். கண்டிப்பா வருவேன். கல்யாணம் வரை தடா எல்லாம் இருக்காதுல்ல. அதனால் அதுக்குள்ள நல்லா என்ஜாய் செய்திடணும். ஆனால் வீட்டில் ஜாதககட்டைத் தூக்கிட்டுதான் அம்மா காய்கறிகூட வாங்கப்போறாங்கடா.. உன்போல் லவ் மெரேஜ் எனக்குக் கொடுத்து வைக்கலை. ம்.. ஜமாய்! ”
‘ஜமாய் என்பது என்ன அழகான வார்த்தை! ஆனால் நான் என்னத்த ஜமாய்க்கிறது.. சுண்டு விரல்கூட பட விடமாட்டிக்கிறாடா..’ என்று கத்தவேண்டும்போல இருந்தது. ஆனால் கார்த்திக் சமர்த்தாச்சே.. அதனால் கத்தாமல் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிரித்தான் பிரசாத்திடம்.
அனைவரும் ஒருவாறு சாப்பிட்டு முடித்ததும் பில் வந்தது. அனைவரும் பில்லிற்குரிய பணத்தை பகிர்ந்தனர். எல்லா கேலியும் கொண்டாட்டமும் முடிந்து பச்சைத் தண்ணீரும் அயல்நாட்டுத் தண்ணீரும் வாயில் ஊற்றிவிட்டு அனைவரும் விடைபெற்றனர்.
அந்த கூட்டம் முடிந்த சில நாட்களில் ஆறு மாதத்திற்கு பிறகு நடக்கவிருக்கும் அடுத்த கூட்டத்திற்கான இடமும் இன்டர்கான்டினென்டல் என்று முடிவு செய்யப்பட்டது.
♥♥♥♥♥
“ஸ்ருதி நான் இப்போ ஹம் பண்றேன். நீ அதே ராகத்தில் பாடிடு. சரியா? ”
“ஓ கே கார்த்திக் சார்.” என்றாள் ஆர்கஸ்ட்ரா டீம் பக்கத்தில் இருப்பதை அறிந்து. அனைவரும் அவனை கார்த்திக் சார் என்றுதான் அழைப்பார்கள்.
‘ஓகே சாரா?’ ‘என்ன கொடுமை இது’ என்று கார்த்திக்கின் மனம் பின்னாலிருந்து குரல் கொடுக்க.. கார்த்திக் ஸ்ருதியை ஓரக்கண்ணால் கடிந்துவிட்டு, “சார் எல்லாம் வேண்டாம் ஸ்ருதி” என்ற பதிலுக்கு பிறகுதான் ராகத்தை ஹம் செய்தான்.
அவன் தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்தும் காதலர்கள் காதலில் ஐஸ்கிரீம்போல் உருகும் பாடல்கள்தான். ஆனால் அவன் மௌன ராகம் படத்தின் பனி விழும் இரவு பாடலை பாடிக்காட்டச் சொன்னபோது ஸ்ருதி மனதில் அவனை திட்டித்தீர்த்துவிட்டாள். மற்றவர்களுக்கு துளிகூடச் சந்தேகம் வரவில்லை. அவனும் அவளும் நடந்துகொண்ட முறை அப்படி. அவள் பாடும்போது மறந்தும் நிமிரவில்லை. அவன் பாடும்போது ட்ருப் பக்கமாகத் திரும்பித் தான் நின்று கொண்டிருந்தான். ஃப்ளுட் வாசிப்பவரிடம் காற்றில் மெட்டுக்களை வரைந்து காட்டினான். ஆனால் மனதில் பரமரகசியமாய் இன்புற்றான். அவனுக்கு என்னவோ ஸ்ருதியே ரேவதிபோலவும் அவன், அவள் அருகே வெள்ளை ஜிப்பா அணிந்து நிற்கும் மோகன் போலவும்.. குளிரில் நடுங்குவதுபோலவும் அழகான பகல் கனவு வந்துபோனது.
ஸ்ருதி இடையில் கிடைத்த தனிமை நேரத்தில் அவனிடம் பாய்ந்தாள் ,
“ என்ன கார்த்திக் இது.. பாட சங்கடமான பாட்டையெல்லாம் பாடச் சொல்ற? மற்றவங்க முன்னாடி எப்படி அதைப் பாடுவது? அதுவும் ஒத்திகை பார்க்கும்போது உன்கூட எப்படி அந்த பாட்டைப் பாடுவது? எனக்கு என்னமோ மாதிரி இருந்தது தெரியுமா? இது கொஞ்சம் ஓவராக இல்லை? ”
‘பாடும்போது என்னமோ மாதிரி இருந்ததா? அடியே எனக்கு உன்னை பார்க்கும்போதெல்லாம் என்னமோ மாதிரிதான் இருக்கு! எனக்கு எவ்வளவு கோபம் வரணும்? கனவில் கட்டிப்பிடித்து முத்தமிட்டால்கூடவா ராணியார் கோட்டை தகர்ந்திடும்?’ என்று நினைத்தவன் அவளிடம் ஒன்றும் பதில் பேசாமல் அனைவரும் வந்தபிறகு டேவிட்டிடம் சொன்னான், “டேவிட் ஸ்ருதி ஒரு இடத்தில் மெட்டை விட்டுட்டா.. அது எதுன்னு கண்டுபிடிச்சியா? ”
நக்கீரனே பாட்டில் பிழை என்று சொன்னபிறகு தருமி இல்லை என்று வாதிடுவானா?
“ஆமாம் கார்த்திக் நானும் கவனிச்சேன்.. சரணம் முழுதும் மெட்டு தப்பிடுச்சு.” என்று கூறிக்கொண்டே ஸ்ருதியின் பக்கமாய் தலையைத் திருப்பியவன் அவள் கோபத்தைக்கண்டு அலறியடித்துக்கொண்டு கார்த்திக்கின் பக்கமாக மீண்டும் திரும்பிக் கொண்டான்.
“ஸ்ருதி டேவிட் சொன்ன போர்ஷனை திரும்பப் பாடு.” என்றான் கார்த்திக்.
முதல் முறை பாடும்போது பாடல் வரிகள் அவளை என்னென்னவோ செய்தது. ஆனால் இப்போது கார்த்திக் அவளை வேண்டுமென்றே பாட வைத்தபோது பாடல் வரிகள் சலனமே ஏற்படுத்தவில்லை. பாடி முடித்தபிறகு தனது பாடல் புத்தகத்தை டொக்கென்று அருகில் இருந்த டேபிளில் போட்டுவிட்டு என் வேலை முடிந்தது என்ற தோரணையில் அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்துவிட்டாள். கார்த்திக் மனதில் பொறுமிக்கொண்டிருந்தான்.
‘தனியே சந்தித்து பேசக் கூடாதாம்.. ஃபோனில் அந்தப் பேச்சுகள் பேசக்கூடாதாம்.. அதான் எல்லாத்துக்கும் சரி என்று சொல்லியாச்சே.. ஒரு ரொமான்டிக் பாட்டுகூடாவா பாடக் கூடாது? மனுஷன் பாவமே.. நமக்காக எவ்வளவு கன்னியமாக நடந்துக்கிறான் அவனுக்காக ஒரேஒரு டூயட் பாட்டு பாடலாமே என்று நினைக்கிறாளா பாரு! அதிலும் ஒரு குறை! இரண்டு மாதம் தாக்குபிடிப்பதே கஷ்டமாக இருக்கு. இதில் இரண்டு வருஷம் கிரிஜா கல்யாணம் வரை எப்படி காலம் தள்ளுவேனோ தெரியலை. கோபத்தைப் பாரு.. ஆனா நானாக போய் சாரி மட்டும் கேட்கவே மாட்டேன். அவளே வரட்டும்.. நல்ல மூடை கெடுத்துட்டோமே என்று அவளே நம்மைத் தேடி வரட்டும். அதுவரை அவகிட்டயே போகக்கூடாது.’ என்று தன் கோபத்தை தீட்டிக்கொண்டிருந்தான் கார்த்திக்.
ஆஃபிஸ் பாய் அப்போதுதான் அனைவருக்கும் டீ தட்டில் டீ கிலாஸ்களை எடுத்துக்கொண்டு வந்தான். எல்லோரும் அவர்களது டீயை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தனர். இரண்டு கிலாஸ்கள் மட்டும் அப்படியே இருந்தது.
டேவிட் கார்த்திக்கிடம் தனது டீயை உறிஞ்சிக் கொண்டே கேட்டான், “என்ன கார்த்திக் டீ குடிக்கலை? ”
கார்த்திக் வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு தனது கீபோர்டில் ஏதொ ஒரு பாடலை வாசித்துக்கொண்டிருந்தான்.
ஸ்ருதி அமைதியாக அவளது டீயை எடுத்துக் கொண்டு மறுகையில் இன்னொரு டீயையும் எடுத்துக்கொண்டு கார்த்திக் அருகே சென்றாள்.
“கார்த்திக் உங்க டீ. ” என்று ஒப்பித்துவிட்டு அவன் திரும்பிப் பார்க்கும் முன் டீக்கப்பை அவனருகில் வைத்து நகர்ந்தாள்.
கார்த்திக் மூன்று நிமிடங்கள் அந்த கிலாஸை தொடக்கூட இல்லை. ஸ்ருதி டேவிட்டிடம், “ டேவிட் நான் பாடுவது சரியா என்று பாரேன் மெட்டு சரியா என்று ஒரே டவுட்.” என்றாள்.
ஸ்ருதி நம்மிடம் சந்தேகம் கேட்கிறாளா? அட அட.. என் பாக்கியந்தான் என்று உடனே தலையை ஆட்டினான் டேவிட். அவனுக்கு என்னவோ இளையராஜாவிற்கே பாட்டு கிளாஸ் எடுத்த உணர்வு வந்துவிட்டது. இருக்காதா என்ன?
திமிங்கலம் அயிரைமீனிடம் உன் பற்களை காண்பி என்று கேட்டால்.. அயிரைமீனிற்கு பெருமை இருக்காதா என்ன?
ஸ்ருதிஇ பனி விழும் இரவு நனைந்தது நிலவு என்று பாட ஆரம்பித்ததும் கார்த்திக் சாவதானமாக திரும்பி தனது டீயை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான்.
டேவிட் ஆண்குரலை பாட ஆரம்பிக்கும் முன் அவனே பாடினான் , ‘பூ பூக்கும் ராக்காலம்… ’
யாருக்கும் சந்தேகம் துளிகூட இல்லாமல் அவர்கள் இருவரும் அழகான டூயட்டைப் பாடினார்கள்.
ஒருவர் கோபம் ஒருவரை பாதிக்காத அழகான காதல் இருவரிடமும் இருந்தது. வெற்றிலை மடித்து தரும் கிழவியும் அதனை ஆசையாக வாங்கி வாயில் குதுப்பிக்கொள்ளும் கிழவனும் வாழ்ந்த இடம் அல்லவா இது? அதிலே காமம் எங்கே இருந்தது? அவர்களும் வரிசையாக பிள்ளை பெற்றார்களே. ஆனால் காதலை கொட்டம் அடிக்கவில்லை. பார்வையால் பரிமாறினர்.
கொஞ்சம் பரம்பரைப் பழக்கம் இன்னும் நம்மிடம் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை இந்த காதல் சொல்லிடும். காமம் இம்மியளவு கூட இல்லாத கார்த்திக் குடனான காதலை ரொம்ப அழகானதாக ஸ்ருதி நினைத்தாள்.
நாற்பத்தேழு தலைமுறைக்கு முன்னர் இருந்த நம் உறவுகளின் குணம்கூட நம்மிடம் இன்னும் இருக்குமாம். விஞ்ஞானிகளும் எழுத்தாளர்களும் சொன்னது நிஜம் என்று சொன்னது ஸ்ருதியின் அனுகுமுறை.
ஏய் புள்ள உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமோ? என்று காதருகே சொன்ன காலம் அது.
ஐ லவ் யூ சோ மச் டி! என்று வாட்ஸ் ஆப் டிபியில் சொல்லும் காலம் இது. ஆனால் இந்த காலத்து காதலில் ஒட்டிக்கொண்டே வரும் காமத்தை மட்டும் ஸ்ருதி புறக்கணித்தாள். அந்த காமம் உதித்திடும் சந்தர்ப்பங்களை புறக்கணித்தாள். அவர்கள் இருவரும் தனிமையில் சந்திக்கும் நிமிஷங்களை இதன் காரணமாகவே நீக்கினாள்.
ஸ்ருதி ஒன்றும் ஆசை துறந்த சன்யாசி இல்லை. ஆங்கில நாவல்களில் வரும் அத்தனை காதலையும், காதல் செய்யும் காட்சியையும் யாருக்கும் தெரியாமல் இரு முறை படித்துவிடும் ரகம்தான். ஆனால் வாழ்க்கையின் முக்கியமான முடிவு ஒன்றை எடுக்கும்போது அதிலே தன் தந்தை பிழை ஏதும் காணக்கூடாது என்ற பயம்தான் அவளிடம் ஓங்கி நின்றது.
டூயட் முடிந்த பிறகு தனது பார்வையால் அவளை விழுங்கிவிடுவதுபோல் பார்த்த கார்த்திக்கிடம் அவள் முகத்தைக் காட்டவேயில்லை. குனிந்து தனது கைபேசியில் முகநூலை நோட்டம் விட்டாள். தனது முகநூல் தபாலில் சில விஷம கேஸ்களிடமிருந்து வந்துள்ள தேவையில்லாத குட்நைட் குட்மார்னிங் என்ன சாப்பிட்ட? மெசேஜை நீக்கியபடியே அமர்ந்திருந்தாள். கார்த்திக் அவளின் கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினான்.
“ஏய் என்னடி செய்யிற? ”
“சும்மாதான் இருக்கேன். ” என்றாள் அவள் பதிலில்.
“ஒரு ஹார்ட் படம் போட்ட ஸ்மைலி படம் அனுப்பியிருக்கேன். நாளைக்கு சன்டே. ஞாபகம் இருக்கா? ”
அவளும் அந்த ஞாயிற்றுக்கிழமைக்காக ஏங்குவாளே.. மறக்கமுடியுமா? ஞாயிற்றுக்கிழமை என்றால் இருவருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்குமே.. ஸ்ருதியின் சந்திக்கக்கூடாது என்ற தடா அந்த நாளில் மட்டும் விளக்கிக்கொள்ளப்படும்.
கார்த்திக்தான் அந்த சலுகையை அரும்பாடு பட்டு வாங்கியது. ஸ்ருதியும் , “போகும் இடம் ஒரே ஒரு இடம்தான் , அதுவும் நான் சொல்லும் இடம் தான். ” என்றதும் இதற்கு தலையாட்டியதே பெரிது என்று சட்டென்று ஒத்துக் கொண்டான்.
“நாளைக்கு சன்டேயா? நான் மறந்திட்டேன் கார்த்திக். ஸ்மைலி படம் சூப்பர் பா. ” என்று அம்மையார் சரடுவிட..
“ஏய் யார்கிட்ட? நீ டேவிட்கிட்ட நாளைக்கு சன்டே எனக்கு தலைக்கு மேல் வேலையிருக்குன்னு துள்ளிக்கிட்டு இருந்தியே.. நான் கவனிக்கலைன்னு நினைச்சியா? ”
“போதும் நீ வாட்ஸ்ஆப் பண்ணது. வீட்டிற்கு போனபிறகு வாட்ஸ் ஆப் பண்ணாதே. சன்டே பார்க்கலாம். பை! ”
“ம்.. ம்.. ”
“கார்த்திக்! ”
“ ம்.. ”
“ கோபமா? ”
“இல்லை.. ”
“சாரிடா.. உன்னை ரொம்ப படுத்துறேனா? ”
“ம்! ரொம்பத்தான்… ”
“கொஞ்ச நாள்தானே. கல்யாணத்திற்கு பிறகு நாம தனியே பேசிக்கிட்டேயிருக்கலாம்.. தனியா பார்க் போகலாம்.. ”
“ஆமாம் ஆமாம். தனியா என் அறையில் இருக்கலாம். என்னோட பாத்ரூமில் … ”
அடுத்த நொடி ஸ்ருதி இஸ் ஆஃப்லைன் என்றது அவனது கைபேசி. தகவல் பரிமாற்றம் மறுமுனையிலிருந்து துண்டிக்கப்பட்டது.
சிரித்துக்கொண்டே கைபேசியை அணைத்தவன் ஸ்ருதியின் முகம் பார்க்க நினைத்தபோதே வாசலில் செருப்பைத் தேய்த்துக்கொண்டே யாரோ ஒருவர் ஆர்க்கெஸ்ட்ரா புக் செய்ய வந்தார். அதன் பிறகு அலுவலக வேலையில் அனைவரும் பம்பரமாகச் சுற்றினர்.
இரண்டு மாதம் தாக்குபிடிக்க கஷ்டப்பட்டவன் ஒரு வழியாக ஒரு வருடம் ஆறு மாதங்களைக் கடத்தியேவிட்டான்.
Comments are closed here.