முட்டகண்ணி முழியழகி – 3
3160
2
அத்தியாயம் – 3
இதோ திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. ‘என்ன செய்வானோ.? அல்லது என்ன
செய்வாளோ.? என்ற பெரியவர்களின் பயத்தை ஒன்றுமே இல்லாமல் ஆக்கியிருந்தனர் கனலியும்,
நிலவனும்.
ஆனாலும் கனலியின் குணம் தெரிந்ததால் எந்த நேரம் என்ன செய்வாள் என்ற சந்தேகத்துடன்
தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அவளுக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லை போல, மிகவும்
மகிழ்வாகத் தான் அந்த திருமண நிகழ்வை எதிர்கொண்டிருந்தாள்.
திருமணத்திற்கான ஒவ்வொரு நிகழ்வையும் மிக மிக சந்தோசமாக உள்வாங்கி ரசித்தாள் எனலாம்.
துணைப்பெண்ணாக நின்ற ஷாலினி கூட ‘என்னடா இவ… இவ்ளோ ஜாலியா இருக்கா.. பெருசா
எதுவோ ப்ளான் பன்றாளோ…’ என்று கூட நினைத்தாள். பெரியவர்களுக்கோ ‘இவளா
கல்யாணமே வேண்டாமனு ஓடிப்போனவ..’ என்று சந்தேகமே வந்துவிட்டது.
நிலவனுக்கோ சொல்லவே வேண்டாம், நாயகி சொல்லக் கேட்டு, அவன் மனதில் வரித்து
வைத்திருந்த அடாவடி கனலியை எதிர்பார்த்தால், இங்கே அமைதியான கனலியாக அவன் முன் சுற்றினால், அவன் தான் என்ன செய்வான், அவளைக் கனிக்க முடியாமல் தலையைப் பிய்த்துக்
கொண்டிருந்தான்..
அவ்வப்போது சந்தேகமாய் பெற்றோர்களைப் பார்த்தால் , அவர்களுக்கும் அதே நிலைதானே.
ஆனால் அதை அவன் முன் காட்ட முடியுமா..? மருமகளான மகளை கீழே விடாமல் தாங்கினர்.
அது இன்னும் அவனை எரிச்சல் படுத்த மூன்றாம் நாள் கிளம்பலாம் என்று வீட்டில் உறுதியாக
சொல்லிவிட்டான். இப்படி அத்தனை பேரின் நினைப்பிலும் ஒரு லிட்டர் ஆவின் பாலை ஊற்றி,
கொதிக்கவிட்டு, ஆசுவாசப் பட வைத்த பெருமை கனலியையேச் சாரும்.
சாரதியும், நாயகியும் அவனுக்கு அறிவுரை என்ற பெயரில் பேச ஆரம்பித்து, அவனே ‘போதும்டா
சாமி… என்னமோ செஞ்சு தொலைங்க’ என்று சொல்லும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டனர்..
உறவினர்களின் வீட்டில் விருந்து வேறு வரிசைக்கட்டி நிற்க, இதெல்லாம் பழகியிராத நிலவன்
தான் விழி பிதுங்கியிருந்தான். வழக்கம்போல கனலி ஒவ்வொன்றாக ரசித்தாள்.
விருந்துக்குப் போகும் வீட்டில் எல்லாம் மனைவி என்றானவளை ‘அப்படி பார்த்துக்கோ, இப்படி
பார்த்துக்கோ’ என்று ஃப்ரீ அட்வைஸ் வேறு, எப்போதடா ஊருக்குப் போவோம் என்று நொடி
நேரமும் விடாமல், நினைக்கத் துவங்கி விட்டான்.. இதே எண்ணம் பின்னாளில் கனலியை விட்டு
இருக்க முடியாமல் அவனுக்குத் தோன்றும் என்பது அப்போது நிலவனுக்குத் தெரியவில்லை.
அடுத்த இரண்டு நாட்களாக தொடர்ந்து, வேளைக்கு ஒரு வீடு என்று மூன்று நேரமும் விருந்து என
முடிந்தவரை, சொந்தபந்தங்கள் அனைவர் வீட்டிலும் விருந்தை முடித்தவர்கள் ஐந்தாம் நாள்
புதுவையை நோக்கி கிளம்ப ஆயத்தமாயினர். நாயகியின் உடல்நிலையை முன்னிட்டு,
சிறியவர்களை மட்டுமே முன்னே அனுப்பினார்கள். புதுவையில் வைக்கப் போகும் ரிசப்ஷனுக்கு
இன்னும் பத்து நாட்கள் இருக்க, அதனால் ஒரு வாரம் கழித்து பெரியவர்கள் அனைவரும்
அப்போது வருவதாக முடிவு செய்யப்பட்டது.
புதுமணத் தம்பதிகளின் காரைச்சுற்றி அனைவரும் மகிழ்வும், சோகமுமாய் நின்றிருக்க, கனலி
மட்டும் தனது குட்டிச்சாத்தான் கூட்டத்திடம் கண்ணீர் மல்க, பிரியாவிடை பெற்றுக்
கொண்டிருந்தாள். அதைப்பார்த்ததும் அதுவரை இருந்த இறுக்கம் தொலைந்து முகம் மெல்லிய
புன்னகையைப் பூசிக்கொண்டது நிலவனுக்கு.
அந்த கூட்டத்தில் ஹர்ஷித் எனும் வாண்டு மட்டும் கனலியின் இடுப்பைக் கட்டிக் கொண்டு
நகரமாட்டேன் என்று அடம் பிடித்தான். சின்னம்மாள் தான், “அடேய் கண்ணா, அத்தாச்சிய விடு,
அவ எங்கயும் போகலடா… நாம எல்லாரும் இன்னும் பத்து நாள்ல போய் பார்ப்போம் தானே,
அப்போ பீச், கோவில் எல்லாம் போயிட்டு வரலாம் கண்ணா..” என்று பொறுமையாகப் பேச,
அவனோ “கெழவி உன்னாலதான் என் அத்தாச்சி என்னை விட்டுட்டுப் போறா, நான் தான்
வளர்ந்து பெரியவனாகி, அத்தாச்சியக் கட்டிக்குறேன்னு சொன்னேனில்ல, நீ ஏன் அவசரப்பட்டு
இந்த தென்னை மரத்துக்கு கட்டி வச்ச, என்னைக் கட்டியிருந்தா நம்ம கூடவே அவ இருப்பா..
இப்போ பாரு எவ்ளோ தூரம் போகுதுன்னு, நீ வேணும்னா போ… அத்தாச்சி வர மாட்டா..” என்று
அழுது கொண்டே மல்லுக்கு நிற்க,
மற்ற எல்லாரும் கொல்லென்று சிரிக்க, ‘என்ன தென்னை மரமா..’ என யோசித்தபடியே, நிலவன்
மனைவியைப் பார்க்க, அய்யோ சதிகாரன் இப்படி போட்டு உடைச்சிட்டானே, என்று
உள்ளுக்குள் கலவரம் ஆனாலும், பாவம்போல் முகத்தை வைத்துக்கொண்டு, அவளும்
கணவனைத்தான் பார்த்தாள்.
“எடு அந்த விளக்கமாத்த, மொளைச்சு மூனு இலை விடல, அதுக்குள்ள பேசுற பேச்சைப் பாரு,
எலேய்… இனி என் பேத்திக் கூட சேருறதப் பார்த்தேன், புளிய மரத்துல கட்டி தொங்க
விட்டுருவேன் பார்த்துக்கோ… ஏத்தா.. பொம்மி அந்தப்பயல விட்டுட்டு நீ கிளம்பு, நல்ல நேரம்
முடியப் போவுது, அவனை நாங்க பார்த்துக்குறோம்..” எனவும், கிழவியை முறைத்துக் கொண்டே
கனலியை விட்டு வந்த வாண்டு, “உன் பேத்திக்கூட சேராம, உங்கூட சேர்ந்து வெத்தலையா
இடிக்க முடியும், கெழவி ரொம்ப பேசினா உன் மண்ட தான் ஃபஸ்ட் உடையும்..” என எச்சரிக்க,
“அட.. எடுபட்ட பயலே, என் மண்டய உடைப்பியா, உன் கைய உடைக்கிறேன் இரு..” என
பக்கத்தில் அடிக்க எதுவும் கிடைக்குமோ எனத் தேட, அவரிடம் மாட்டாமல் ஓடியவன், நேராக
நிலவனிடம் வந்தான்.
“எங்க அத்தாச்சியை நல்லா பார்த்துக்கனும், அவ மட்டும் அழுதா, நாங்க எல்லாரும் அங்க வந்து
உங்க மண்டையை உடைச்சுடுவோம்..” என்று கையை நீட்டி சிறுபிள்ளைக் கோபத்துடன் பேச,
நிலவனுக்கு அதுவரை உதட்டிற்குள் அடக்கியிருந்த புன்னகை வெளிவர, ஹர்ஷித்தை தூக்கி
காரின் மேல் அமரவைத்து, “உங்க அத்தாச்சியை நான் ஒன்னுமே பண்ண மாட்டேன் சரியா..
அவளை அழ வைக்காம பார்த்துக்குறேன், ஆனா அவளும் அதேமாதிரி என்னை அழ வைக்காம
பார்த்துக்கனும் சரியா…” என அந்த சிறுகுழந்தைக்கு சமமாய் அவனும் பேச,
“எங்க அத்தாச்சி தப்பு செஞ்சாதான் சண்டை போடுவா.. அடிப்பா, நீ தப்பு செய்வியா என்ன..?
செஞ்சிருந்தாலும் இனிமே செய்யாத, உன் மண்டை பத்திரம் அதுக்குத்தான் சொன்னேன்..” தன்
அத்தாச்சியைப் பிரிக்க வந்த எதிரியாகவே நினைத்து, நிலவனை முறைத்துக் கொண்டே, காரில்
இருந்து குதித்தோடிப் போய் சந்திராவின் இடுப்பைக் கட்டியிருந்தான் அந்த வாண்டு..
கோபப்படுவானோ என்று எல்லாரும் பார்க்க, அவனோ சிரித்தபடியே, மனைவியைப்
பார்த்திருந்தான். கனமான சூழல் முற்றிலும் மாற, பல பத்திரங்கள், பல அறிவுரைகள் என்று
மூளை ஏற்றுக் கொள்ளவே முடியாத மிகப்பெரும் லக்கேஜோடு முதன்முறையாகத் தன்
என்ஃபீல்டை விட்டுவிட்டு, நிலவனின் காரில் பயணித்தாள் கனலி.
ஊர் எல்லைத் தாண்டியும், தலையை வெளியே நீட்டி, நீட்டிப் பார்த்துக் கொண்டே வந்தவளைப்
பார்த்த நிலவனுக்கு, அவளைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. அவளது மனதை மாற்ற
எதையாவது பேசலாம் என்றால், அவளுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று கூடத் தெரியாது.
பேச வேண்டாமென்று யோசித்தாலும், அவளது வருத்தமான முகம் அவனையும் பாதித்தது தான்
அவனுக்கே ஆச்சரியம்.
‘நிலவா… நீயா.. இப்படியெல்லாம் யோசிக்குற, அவளை உனக்குப் பிடிக்காதுடா..’ என்ற
மனசாட்சியின் குரலுக்கு,
‘எனக்குப் பிடிக்காதுன்னுல்லாம் ஒன்னுமில்ல, அம்மாவுக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும் தான்,
ஆனா அவளோட சேட்டையும், குறும்பும்தான், எனக்கு பயம்..’ என்று மனசாட்சியோடு
எதிர்வாதம் செய்ய,
‘அம்மாவுக்காக எல்லாம் ஒருத்தவங்களை நமக்குப் பிடிக்குமா.? அதெல்லாம் பிடிக்காது,
உனக்கும் அவளைப் பிடிச்சிருக்கு. அதுதான் உண்மை… யார்.? எப்போ.? கேட்பாங்கன்னு வைட்
பன்னிட்டு இருந்து, உங்கம்மா கேட்டதும் தலையை ஆட்டிருக்க. இதுல பிடிக்காத மாதிரியே
ஆக்டிங் வேற..” என்ற மனசாட்சியின் நக்கலை,
‘அப்படி நீ நினைச்சா, நான் ஒன்னும் பன்ன முடியாது.. பிடிச்சாலும், பிடிக்கலன்னாலும் இனி
அதை மைண்ட் பன்னவே கூடாது. என்னோட லைஃப் லாங்க் வரப்போறவ, சோ நானும்
அவளுக்கு கொஞ்சம் அடாப்ட் ஆகனும், அவளையும் ஆக வைக்கனும், உன்னோட வேலையைக்
காட்டாம கிளம்பு’ என விரட்டியவன், மனைவியைத் திரும்பி பார்க்க, அவளோ சீட்டில் சாய்ந்து,
எதிரே நீண்டு தெரிந்த கருஞ்சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள். இதுக்குப் பிறகும்
அமைதியாக வர முடியாது என்றுனர, தொண்டையைச் செருமி, “பொம்மி…” என்றான்.
அவனது அழைப்பு அவள் காதில் விழவில்லை போல, முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
மீண்டும் அழைத்தவன், அப்போதும் அவள் அப்படியே இருப்பதை உணர்ந்து, காரின் வேகத்தைக்
குறைத்து, இடது கையால் மனைவியின் தோள் தொட்டு உழுக்க, அந்த தொடுகையில் விதிர்த்து
திரும்பியவள் அவனைப் பார்த்து முறைக்க, அதில் சிரித்து, “கனலி பேக் டூ ஃபார்ம்..” என்றவன்,
சில நொடிகள் கழித்து “உனக்கு என் கூட வரது கஷ்டமா இருக்கா..” அமைதியாய் அவன்.
இப்போது அவனை நேராகப் பார்த்தவள், ‘என்ன இப்போதான் யோகி பாபு காமெடி பன்ன
மாதிரி சிரிச்சான், உடனே சீரியல்ல வர ஹீரோ மாதிரி சோகமா ரியாக்ட் பன்றான்..’ என
அவனைப் பார்த்தே ஆராய்ச்சியில் இறங்க, மனைவி தன்னையேப் பார்ப்பதை உணர்ந்து,
‘என்ன..’ என்பது போல் புருவத்தை ஏற்றி இறக்க,
அதில் சுயம் பெற்றவள்.. “இந்த ஊரை விட்டு வரது தான் கஷ்டமா இருக்கு..” மெல்லமாய் அவள்.
வேறு எதுவும் கேட்காதே நான் உடைந்து விடுவேன் என்பதாய் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு,
மீண்டும் தலையை சீட்டில் சாய்த்துக் கொண்டாள்.
மனித குலத்தின் வளமான வாழ்வுக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட வைகை நதி,
தன்னைத் தோற்றுவித்த இறைவனையே தரிசிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தன் பயணத்தைத் தொடங்கியதாம்.. ஆதிகாலத்தில் இருந்தே தொன்மைச் சிறப்புடன் திகழ்ந்த இந்த வைகை நதியின் பயணம் எந்த இலக்கை நோக்கித் தொடங்கியது? இதோ, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இப்படிப் பாடுகிறார்.
அல்லும் பகலும் அலைந்து வந்தேன் எங்கள்
ஆழி இறைவனைக் காண வந்தேன்
நில்லும் எனக்கினி நேரமில்லை இன்னும்
நீண்ட வழி போக வேண்டுமம்மா!
‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி, புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி…’ என்றும்,
‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை…’
என்றும் இலக்கியங்கள் போற்றிப் புகழும் வைகை நதியின் பிறப்பிடம் வருசநாட்டு
மலைத்தொடர்களும், மேகமலைத் தொடரில் அமைந்திருக்கும் வெள்ளிமலைப் பகுதிகளும் தான்.
தலைக்காவிரி என்பது போல, இது தலைவைகை.. வைகையாற்றுக்கு மற்றொரு பெயரும் உண்டு,
அது வறட்சியாறு என்பது தான். ஒரு ஆற்றை செயற்கையாகவே வறட்சியாக்க முடியும் என்பதை
வைகையாற்றின் வரலாற்றை படித்தால் உங்களால் புரிந்து கொள்ளமுடியும்.
மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு, ஊருக்குள் எல்லாம் புகுந்து விடும்,
அங்குள்ள மக்கள் அவற்றையெல்லாம் மிகவும் எளிதாக எதிர்கொள்வார்கள். அரசாங்கமே வியந்து பார்த்த காலகட்டமும் உண்டு. தன் கையே தனக்குதவி என்று வாழும் மக்கள் இவர்கள். இந்தப் பகுதி மக்களுக்கு ஆறும் ஆற்றைச் சார்ந்த பகுதியும் (விவசாய நிலங்களின் விளைபொருள்கள்) இவர்களின் வாழ்வாதரங்கள். ஆனால் மணல் கொள்ளை நிலத்தடி நீரை இல்லாமல் செய்து உள்ளது. இதனால் பல நூற்றுக்கணக்க்கான நிலங்கள் பாழ்பட்டு உள்ளன.
ஆற்றை ஒட்டிய ஊர் என்பதாலும், வனப்பகுதியை ஒட்டியது என்பதாலும், எங்கு நோக்கினும்
பசுமைதான். முன்னே விளைச்சல் நிலங்களாக இருந்தவை எல்லாம் இப்போது வெறும் கருவேல
மரங்கள் நிறைந்த பசுமைக் காடுகளாக மாறியிருந்தன.
சாலையின் இருமங்கிலும் வரிசையாய் அடர்ந்து, ஒன்றுக்கொன்று இடைவெளியில்லாமல்
நின்றிருந்த புளிய மரங்களுக்கு இன்னும் எத்தனையாண்டுகளோ ஆயுட்காலம்..’
இவற்றையெல்லாம் எண்ணியபடி பெருமூச்சு விட்டாள் கனலி.
இனி இங்கு அடிக்கடி வந்து போக முடியாது, சிறுவயதில் தன் அப்பத்தாவுடன் நாத்து நடவும்
வயலிற்கு செல்வாள். அப்போது நாற்றை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் நடுவதைப்
பார்த்த கனலி கேட்ட கேள்விகளும், அதற்கு சின்னம்மா கொடுத்தப் பதில்களும் வேறு மனதில்
படமாய் வந்து போனது.
இனி அவள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஓரளவுக்குத் தீர்மானித்து விட்டாள் தான்.
ஆனாலும் இதுவரை பழகியே இராத இவனும், முக்கியமாக அந்த ஊரும் தான், இவள்
கல்யாணமே வேண்டாம் என ஊரைவிட்டு ஓடியதற்கு முக்கியக் காரணங்கள். இவனைக் கூட
சகித்திருவாள்… ஆனால் அந்த ஊரை… எப்படி சகித்துக் கொண்டு இருப்பாளோ.? அவளுக்கேத்
தெரியவில்லை.
ஏனென்றால் கனலிக்கு தன் ஊரைத் தவிர வேறு எந்த ஊரையும் பிடிக்காது. அவளது ஒவ்வொரு
பேச்சிலும் ‘நான் தேனிக்காரிடா..’ என்ற திமிர் ஜொலிக்கும். அதனால் தான் வந்த வெளியூர்
மாப்பிள்ளைகள் அனைவரையும் தன் வானரப் படைகொண்டு துரத்தியது. நிலவனின் விசயத்தில் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் இரண்டு. தன் அப்புச்சியின் உடல் நிலை, மற்றொன்று தன் ஆசை அத்தையின் மகன். அதனால் ஒத்துக்கொள்வதைத் தவிர வேறு
வழியிருக்கவில்லை.
திருமணம் முடிந்த இந்த ஐந்து நாட்களில் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும்,
பெரியவர்களுக்காக தேவையானதைப் பேசிக்கொண்டு, அவர்களே அறியாமல் இல்லற
வாழ்க்கையின் முதல் அடியை எடுத்து வைத்தனர் இருவரும். மேலும் யாரும் பழக்காமலே
அவனை மாமா என்றும் அழைத்திருந்தாள். ‘மாமா என அவள் அழைக்கும் போது அவன் ஏன்
என்னை வித்தியாசமாகப் பார்க்கிறான்’ என்ற யோசனை வேறு அடிக்கடி வந்து அவளை
இம்சையைக் கொடுத்தது.
அன்று மதுரையில் ஷாலினியின் வீட்டில் இருந்துக் கிளம்பியவள் இரவு ஏழு மணிக்குத்தான் வந்து
சேர்ந்தாள். வழக்கம்போல ஒரு வெளுத்த ஜீன்ஸ், ரெட் கலர் ஃபுல் ஹேண்ட் சர்ட், அது முழங்கை
வரை மடங்கியிருந்தது. அதற்கு மேல் ஒரு லெதர் ஜாக்கேட், நீண்ட கூந்தல் கலைந்து போன ஒரு
கொண்டையில் பாதி உள்ளேயும், மீதி வெளியேவும் அடங்கியிருந்தது.
தெருமுக்கில் திரும்பும் போதே அவளது என்ஃபீல்டின் சத்தம் கேட்டு, எல்லாரும் வாசலுக்கே
வந்துவிட, தப்பு செய்த சிறு குற்ற உணர்வு கூட இல்லாமல் வந்தவளை, சந்திராதான் கையில்
கிடைத்ததை வைத்து அடி பின்னி விட்டார்.
“ஏண்டீ… உன்னைப் பெத்ததுக்கு நல்ல மரியாதை செஞ்சுக் கொடுத்துட்ட, கோவில் கோவில்லா
பிச்சையெடுத்து, உன்னை சுமந்த இந்த வயிறு குளுந்துப்போச்சு. ஒத்தப் பொண்ணு ஒத்தப்
பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளத்தது எம்புட்டு பெரிய குத்தமா போச்சு. எல்லா
பெத்தவங்கள மாதிரி நாங்களும் உன்னை வளர்த்திருக்கனும், அதை விட்டுட்டு உன்
இஷ்டத்துக்கு எல்லாம் ஆடினோம் இல்ல, அதுக்கு நீ கொடுத்த பரிசுதான் இந்த அசிங்கம்…”
என்று சராமாரியாக பேசியபடி அடித்தவரை நாயகிதான் தடுத்தார்.
“வுடுங்கண்ணி.. வுடுங்க மொத்த குடும்ப மானத்தையும் வாங்கிட்டாளே..” என்று அடித்துக்
கட்டையைக் கீழே போட்டுவிட்டு அழ, தனக்கு எதுவுமே நடக்கவில்லை என்பது போல், வங்கிய
அடிகளையும் பொருட்படுத்தாது, தன் அறைக்குல் நுழைந்துக் கொண்டாள் கனலி.
அவள் சென்றதும் சந்திராவை எல்லோரும் பிடிபிடியெனப் பிடித்துக் கொண்டனர். ‘உள்ளுக்குள்
அவருக்கும் வருத்தம் தான் ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல், எல்லோரையும்
முறைத்துவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தார். அடிவாங்கியவளுக்கு வென்னீர் வைக்க வேண்டுமே.
மகளெனும் தேவதை அல்லவா அவள்..
2 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vidya Priyadarsini says:
Nice
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
SUPER UD SIS