காஜலிட்ட விழிகளே 6
2809
0
கார்த்திக் இப்படித்தான் தனது ஞாயிறு டேட்டிங்கை ஆரம்பிப்பது வழக்கம். ஸ்ருதி கார்த்திக் அப்புறம் ஸ்ருதியின் அப்பா மூவரும் சேர்ந்தே அந்த அன்பு இல்லத்திற்கு போவார்கள்.
பாட்டுக் கச்சேரி நடக்கும். ஊக்கம் தரும் பாரதியார் பாடல்கள் பாடுவார்கள்.
“வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டிவந் தோம்என்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடு வோம் தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம். “
என்று பாட்டாக பாடியபோது அனைவரும் ஆர்ப்பரித்தனர்.
‘ஒவ்வொரு பூக்களுமே சொல்லிடுமே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே’ என்று ஸ்ருதி பாடிடும்போது ஆர்க்கெஸ்ட்ராவை கையால் சைகைசெய்து நிறுத்திவிடுவான் கார்த்திக். அவர்கள் முன்னே கூடியிருந்த முன்னூறு குழந்தைகளும் சேர்ந்து ஒன்றாக கைதட்டி தாளம் போடும்போது ஆர்கெஸ்ட்ரா எதற்கு?
கரஓசையும் பாடல்வரிகளும் அந்த அறைமுழுதும் பாடல் முடிந்தபிறகும் எதிரொலிக்கும். பாடல் முடிந்த பிறகு ஸ்ருதியின் தந்தை ஒரு மணிநேரம் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு யோகா பயிற்சி கொடுப்பார். அந்த ஒரு மணி நேரம்தான் அவர்களின் டேட்டிங் நேரம். கார்த்திக் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் நேரம்.
ஸ்ருதியின் சந்திக்கக்கூடாது என்ற தடா அந்த நாளில் மட்டும் விளக்கிக்கொள்ளப்படும். கார்த்திக்தான் அதனை அரும்பாடு பட்டு வாங்கியது.
“ஸ்ருதி எல்லோரும் சன்டே முழுக்க லவ்வர்ஸா சுத்தி வர்றாங்க. பீச்சுக்கு போறாங்க, சினிமாவுக்கு போறாங்க, பீட்சா ஹட்டுக்கு போறாங்க, இது எதுவும் இல்லை என்றால் கோயிலுக்குகூட போறாங்க. நான்தான் தனியா கிடக்கிறேன் தெரியுமா? ” என்ற குறையோடுதான் ஒரு நாள் ஆரம்பித்தான்.
“கார்த்திக் நம்ம நல்லதுக்காகத் தான் சொல்றேன். யாராவது என்னை இங்க பார்த்தேன் அங்க பார்த்தேன் என்று சொன்னால் எங்க அப்பா என்ன நினைப்பார்? அதெல்லாம் என்னால் முடியாதுப்பா.. ”
“ஆமாம் நேத்து எனக்கு பத்து இச்சு குடுத்திட்டா இன்றைக்கு கூடுதலாக இரண்டு கேட்டுட்டேன். அதுக்குத்தான் அதெல்லாம் என்னால் முடியாதுப்பா என்று ராகம் பாடுறா.. ” என்று முணுமுணுத்தான்.
அதன்பிறகு அவன் உம்மென்று இருந்து தனது காரியத்தை சாதித்துக்கொண்டான். காதலனின் நியாயமான பிடிவாதம் ஜெயித்தது.
அதன்பிறகு ஸ்ருதி, “போகும் இடம் ஒரே ஒரு இடம்தான் அதுவும் நான் சொல்லும் இடம் தான்” என்றதும் இதற்கு தலையாட்டியதே பெரிது என்று சட்டென்று ஒத்துக் கொண்டான்.
ஸ்ருதியும் அவள் கொள்கைக்கு பாதிப்பு வராமல் பார்த்துக்கொண்டாள்.
அவள் தேர்ந்தெடுத்த இடம் அன்பு இல்லம். அவனுக்கு கொடுத்த கால அவகாசம் ஒரு மணி நேரம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே தனது தந்தையுடன் இங்கு வந்து குழந்தைகளை உற்சாகப்படுத்துவது அவளுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. இரண்டு மணிநேரம் பாட்டுக்கச்சேரி. அதன்பிறகு ஒரு மணிநேரம் அவளது தந்தை யோகா சொல்லிக்கொடுப்பார். அந்நேரம் ஸ்ருதி ஹிந்தி பாடம் எடுப்பாள்.
பிராத்மிக் வகுப்பும் மத்யமா வகுப்பும் நடைபெறும். ஸ்ருதி அந்த வகுப்புகளை எடுத்துக்கொண்டிருக்கும் போது கார்த்திக் கணித வகுப்புகளை எடுப்பான். பாட வேளை முடிந்ததும் இருவரது வகுப்புகளும் காலியாகிவிடும். பிள்ளைகள் யாவரும் எப்படா ஓடுவோம் என்று கடிகாரத்தின்மீது கண்வைத்துக் காத்துக் கொண்டிருப்பார்களே! அந்த காரணத்தால் துல்லியமாக ஒரு மணி நேரத்தில் வகுப்புகள் காலியாகிவிடும். அடுத்த அறையில் இருக்கும் கார்த்திக் அடுத்த ஒரு மணிநேரம் ஸ்ருதியுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்திடுவான்.
ஸ்ருதியின் அப்பா நிலைதான் அதோகதி. அவர் வகுப்பை முடித்துக்கொள்ள இரண்டு மணிநேரமாவது ஆகிவிடும். ஒரு மணிநேர வகுப்புதான், ஆனால் பிள்ளைகள் பயிற்சியின்போது செய்யும் சேட்டைகளால் பயிற்சியின்போது பாதி தூக்கத்தில் லயித்திடும் குழந்தைகளால் வகுப்பு இரண்டரை மணிநேரமாவது நீடித்துவிடும்.
மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமே. இதில் கார்த்திக்கின் பங்கு ஏராளம். கண்ணில்படும் அணைத்து உயர்நிலை மாணவர்களையும் யோகா வகுப்பில் சேர்த்துவிட்டான்.
‘கோபத்தை இந்த டீன்ஏஜ்ஜில் கட்டுப்படுத்தணும் சார் அதான்.’ என்றான் ஸ்ருதியின் தந்தையிடம். ஆயிரம் பேர் வந்தாலும் நீங்க சமாளிச்சுடுவீங்களே? என்று ஸ்ருதியின் அப்பா தலையில் ஆயிரம் கிலோகணக்கில் ஐஸ்கட்டிகளை வைத்தான். ஹிந்தி கணிதம் பிடிக்காத மாணவர்களை தேடிப்பிடித்து யோகா வகுப்பில் உட்காரவைத்தான். கார்த்திக் செய்வதை புரிந்து கொண்ட ஸ்ருதி அவனிடம் , “கார்த்திக் அப்பா கிளாஸில் இப்பவே எழுபது பசங்க இருக்காங்க. இன்னும் சேர்த்துவிடாதே! ”
“யோகா கோபத்தை கட்டுப்படுத்தும் ஸ்ருதி. நான்தான் தகுந்த உதாரணம். நான் ஏழு வருஷம் கிளாஸ் போனேன். இப்ப உன் கன்டிஷனுக்கு எல்லாம் எப்படி பொறுமையாக இருக்கேன் என்று தெரிந்திருக்குமே? உன்கிட்ட அடாவடி செய்யாமல் இருப்பதை வைத்து நீ பெருமைப்படணும். என் கை நீளுதா பார். நீ பக்கத்தில் இருக்கும்போதும் கை அது இருக்க வேண்டிய இடத்தில் எப்படி அமைதியாக இருக்குன்னு பார். எவ்வளவு கட்டுப்பாடு இருக்கு என்னிடம். அதான்.. ”
“போதும் போதும் ரொம்ப பீத்திக்காதே. கை நீளுமாமே.. எங்க செய்து பார் கார்த்திக். நானும்தான் நாலு வருஷம் கராத்தே கிளாஸ் போனேன். அதை நீயும் தெரிந்தே வச்சுக்கோ! ”
“ஏய் ஸ்ருதி கராத்தே எனக்கு சொல்லிக்கொடேன்.. என்ன நீ சொல்லிக் கொடுத்தால் கராத்தே எனக்கு “பாலே” பழகுவதுபோல ரொமான்டிக்காக இருக்கும். நினைத்தாலே இனிக்குதுப்பா. ” என்றான்
‘தொட்டுக்கொள்ளாமல் எப்படி கராத்தே சொல்லலிக் கொடுக்க முடியும்?” என்று நினைத்தவள் மௌனமாக இருப்பதைப் பார்த்து,
“சரி சரி கல்யாணத்திற்கு அப்புறம் சொல்லிக்கொடு.. ஆமாம் அந்த சரத் ஹிந்தியும் படிக்க மாட்டேன் மேக்ஸ{ம் படிக்க மாட்டேன் என்று சொன்னானே அவனைக் கூப்பிடு. உன் கிலாஸில்தானே தூங்கி வழியிறான்? ”
“கார்த்திக் அவனை யோகா கிளாஸ் அனுப்பப்போறியா? அப்பாவால் முடியாதுப்பா. ” என்று செல்லமாகப் பேசிப்பார்த்தாள்.
“இப்படியெல்லாம் பேச உனக்கு யார் கத்துக் கொடுத்தது? மெர்சல் பண்றடி! அப்ஜெக்ஷன் கிரான்டட். இன்னொரு யோகா டீச்சர் பார்க்கலாம். ” என்று கார்த்திக் சொன்ன நேரமோ கார்த்திக்கின் நல்ல நேரேமோ விரைவில் ஒரு யோகா டீச்சர் வந்துவிட்டார்.
கார்த்திக் புது பயிற்சியாளர் வந்த வேகத்தில் யோகா வகுப்புகளில் நாற்பது மாணவர்களைச் சேர்த்துவிட்டான்.
அதனால் வகுப்பு நேரம் முடிந்த பிறகும் வகுப்பு மாணவர்களின் பெயர்களை வருகைப் பதிவில் பதிந்து வைத்து சரி பார்க்கும் வேலையை ஸ்ருதியின் அப்பா தாமே எடுத்துக்கொண்டார். ஆற அமர அவர் அதை நேர்த்தியாகச் செய்கிறேன் என்று கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டது கார்த்திக்கின் லாபம்.
இவ்வாறு ஒவ்வொரு ஞாயிறுகளிலும் கிடைக்கும் அந்த ஒரு மணி நேர தனிமை இருவரையும் ஏங்க வைத்தது. வீட்டிலிருந்து அவள் கொண்டு வந்த முறுக்கை மென்று கொண்டே அவள் கைகளின் மருதாணி கோலத்தைப் பார்ப்பது அவனுக்கு அலாதிப்பிரியம் என்றால்..
ஸ்ருதிக்கு அவனிடம் ராகம் தாளத்துடன் தனது காதலை பரிமாறுவது அலாதி இன்பம் அளித்தது. காதலை பரிமாறினாள், மிகவும் கவனத்துடன்தான். தொடாமல்தான்.
அப்படித்தான் ஒரு நாள் அவள் அவனது காதோரம் எட்டிப்பார்க்கும் நரை முடியை சுட்டிக்காட்டி, “கார்த்திக் நீ இன்று தலைக்கு குளித்தியா? ” என்று அவனிடம் சந்தேகம் கேட்டாள்.
“ஆமாம் ஸ்ருதி. ஏன் கேட்கிற? ”
“இல்லை நீ உன் முடிக்கு அடித்த டை தண்ணியோட தண்ணியாக போயிடுச்சுப்பா.. நீ கவனிக்கலையா?”
ஹும் ஹும் என்று அப்பாவியாக தலையாட்டியவனிடம் ஸ்ருதி, “கார்த்திக் நான் இப்ப ஒரு சிட்டுவேஷன் சாங் பாடவா?”
என்று அவன் பதில் எதிர்ப்பாக்காமல், ‘நீலச் சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும்.. ’ என்று பாடினாள்.
அவனும் அவளது கன்னங்களை தொடுவதுபோல் தொடமல் பார்த்து, ‘ராஜா வேஷம் கலைஞ்சி போச்சு. டும் டும் டும் ’ என்று பாடிக் காட்டினான்.
அவன் உலகநாயகன் கமலின் குரலை நன்றாகவே மிமிக்கிரி பண்ணுவான். அதனால் அவன் தொடர்ந்து அந்தப் பாடலைப் பாடுவதை ரசித்துக் கொண்டேயிருந்தாள் ஸ்ருதி.
பாடலும் கேலியும் கலந்த நிமிடங்கள் வேகமாக முடியப்போகும் தருவாயில் இருவரும் அவர்களது அறையில் அவர்களது இடத்தில் அமர்ந்து கொன்டார்கள்.
ஸ்ருதி ஒதுக்கிய பாதுகாப்பான தனிமை அவர்களின் காதல் கோட்டைக்காதலுக்கு இடையூறு தராத அழகான அம்சமான தனிமையாகத்தான் இருந்தது.
கார்த்திக் அதனை ஜில்லென்ற லெமன் ஜுஸ் தனிமை என்றான் அவளிடம் ஒருநாள்.
ஸ்ருதி அதனை நச்சென்ற ஃபில்டர் காஃபி என்றாள்.
ஆக இந்த லெமென் ஜுஸ்சும், ஃபில்டர் காஃபியும்தான் கார்த்திக் சரடுவிட்ட டேட்டிங் என்றானது.
ஐம்பது சின்னஞ்சிறு குழந்தைகள் அடுத்த அறையில் குதித்துக் கொண்டிருக்க அவர்கள் டேட்டிங்கில் சில்மிஷங்கள் கடகளவுகூட கலந்திட வாய்ப்பே இல்லை.
Comments are closed here.