முட்டகண்ணி முழியழகி – 4
4043
0
அத்தியாயம் – 4
திருமணம் முடியும் வரைக்கும் கனலியுடன் கோபமாகவே இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார் சந்திரா, மகளிடம் அவரது திட்டம் பலிக்காமலே போகும் என்பது தெரிந்தும். அவர் நினைத்ததற்கு சரியாக, ஒவ்வொரு நிமிடமும் தாயைச் சீண்டிக் கொண்டே இருந்தாள் கனலி.
“ம்மா, அதுதான் அந்த அடி அடிச்சியே, அப்புறமும் எதுக்கு இப்படி மரத்துல தலை கீழா தொங்குற மங்கி மாதிரி, அதையேப் பிடிச்சிட்டுத் தொங்குற..” பரிகாசமாய் தாயைச் சீண்டினாள்.
“அடி செருப்பால, யாரைப்பார்த்து கொரங்குன்னு சொல்ற, நீதாண்டி கொரங்கு கொரங்குக்கெல்லாம் கொரங்கு, கொரங்கு பெத்த கொரங்கு… என்னய சொல்ல வந்துட்டா..” கடுப்பாய் கத்த,
“ஹா..ஹா.. அட என் அறிவுக்களஞ்சிய மம்மியோவ், ரைமிங்கெல்லாம் சூப்பரு ஆனா நானும் அதையேதான் சொன்னேன், நீயும் அதையே சொல்றயே.. கொஞ்சம் மாத்தி யோசி” என கிண்டலில் இறங்க.
“சொல்லுவடி சொல்லுவ, எல்லாம் நான் வாங்கி வந்த வரம், அப்பவே என்ன சின்னமனூர்ல கேட்டாக, திண்டுக்கல்லுல கேட்டாக, அதையெல்லாம் வேண்டாம்னுட்டு இந்த காட்டுவாசிக் குடும்பத்துல வந்து மாட்டிக்கிட்டேன்…” என இழுக்க,
“ஓஹோ… அமெரிக்காவுல கேட்டாக, ஆப்பிரிக்காவுல கேட்டாகன்னு ஒன்னுந் தெரியாத சின்ன புள்ளய ஏமாத்துறியா, கட்டுன எம் மவனத்தான் கட்டுவேன், இல்லன்னா அரளி விதய முழுங்கிடுவேன்னு சொன்னவ எவளோ.? எங்க போனாளோ தெரியல, ஏத்தா பொம்மி நீ பார்த்தியா என்ன.?” என அவரும் பேத்தியோடு கூட்டணி வைக்க,
“ஓ.. ஓஹோ… அப்போ இந்த பெட்டர்மெக்ஷ் லைட்டே தான் வேணும்னு நீதான் ஒத்தக்கால்ல நின்னு, அரளிக்காயக் காட்டி எங்கப்பாவ ஆட்டய போட்டுருக்க, நீ சரியான ஆளு மம்மி.. இப்போ எங்க ஃபேமிலிய நீ காட்டுவாசிக் கூட்டம் சொல்றயா, நீயும் எப்பவோ இந்த கூட்டத்துல மிங்கிள் ஆகி ஜங்கிள்ள செட்டில் ஆகிட்ட, சோ நாமெல்லாம் ஜங்கிள்ள வாழுற மங்கிஸ்..” என்றதும்..
“க்கும்.. ஆட்டையைப் போட்டூட்டாலும், ஒரு நாள் ஒரு பொழுது நானும், உங்கப்பாரும் சேர்ந்து நின்னு பேசிட்டா போதும், மூக்குல வேர்த்துடும் உங்கப்பத்தாவுக்கு, உடனே ஒரு வேலையைச் சொல்லி தொரத்தி விட்டுடும் உங்கப்பாவை.. அந்த மனுசனும், ஏன்..? எதுக்குன்னு கேள்வியேக் கேட்காம மண்டய மண்டய ஆட்டிகிட்டு கிளம்பிடுவாரு, என்னய வெளியவே எட்டிப்பார்க்கக் கூடவிடாது” என்று தோள்பட்டையில் முகவாயை இடித்துக்கொள்ள,
“அப்படி வச்சுருந்தே உன் கொட்டம் அடங்கலயே, நீ நெனச்ச மாதிரி வச்சுருந்தேன், என்னை எங்காத்தா வீட்டுக்கு பத்தி விட்டுருப்ப நீ, உன் பவுசெல்லாம் எனக்குத் தெரியாதா..? இந்தாடி எம்பேத்திக்கிட்ட இப்படியே சொல்லிட்டு இருந்த, உன்ன உங்காத்தா வீட்டுக்குப் பத்தி விட்டுட்டு எம் மவனுக்கு ராசாத்தியாட்டம் பொண்ணு பார்த்துக் கட்டி வைப்பேன் தெரிஞ்சுக்கோ..” என்று எகத்தாளமாய் பேச,
“என்ன.. என்ன சொன்னீக, ராசாத்தி மாதிரியா, இல்ல அந்த தெக்குத் தெரு ராசாத்தியே தானா, இதெல்லாம் நீங்களா பேசல, உங்க மவன் தான் பேச வைக்குறாக, வரட்டும் இன்னைக்கு வரட்டும் அந்த மனுசன், புள்ளைக்கு விடிஞ்சா கல்யாணத்தை வச்சுக்கிட்டு, அந்தாளு புதுமாப்பிள்ளை ஆகப்போறாராமா, வரட்டும்..” என மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கப் பேச, இருவரும் மாறி மாறி சண்டையிடுவதை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தவள், அவர்கள் இப்போது நிறுத்தப் போவதில்லை என்பதை உணர்ந்து,
“ஏய் கெழவி உங்க ரெண்டு பேரையும் நான் இப்போ உங்காத்தா வீட்டுக்குப் பத்திவிட போறேன், ஒத்தப்புள்ள பொறந்து வளந்த ஊர விட்டு, சொந்த பந்தங்கள விட்டு போகுதேன்னு வெசனப்படாம, இப்படி அடிச்சுக்குறீங்க, எல்லாம் ஒத்த வீட்ல இருந்து வந்த திண்ணக்கம்.. எப்படி… நீ உங்காத்தா வீட்டுக்கு பத்துவியா.. அதுவும் நீ… இதையெல்லாம் நான் நம்பனும்.. ஒரு நாள் எங்கம்மா இல்லன்னா விடிய முன்னாடி உந்தம்பி வீட்டுல உக்காந்து, ஒரு நேர சாப்பாட்டக் கூட சாப்பிட விடாம இழுத்துட்டு வந்துடுவ… இதுல நீ எங்கம்மா பத்துவியா..” என்று கடுகடுக்க…
“ஏய் என்னடி, வாய் நீளுது… பெரியவங்ககிட்ட எப்படி பேசனும்னு தெரியாதா.. நாங்க மாமியாரும் மருமவளும் இப்ப அடிச்சுப்போம், அப்புறம் சேர்ந்துக்கிடுவோம், நீ எவடி பஞ்சாயத்து பண்ண… அத்த நாயகி அண்ணி தட்டு எத்தன வைக்கன்னு கேட்டாங்க, பேச்சியத்தயும் உங்கள வரச்சொல்லிட்டு போனாக, நீங்க போங்க நான் பார்த்துக்குறேன்” கடுகடுத்த மகளை கடிந்துவிட்டு, மாமியாரிடம் முடித்தார் சந்திரா.
“சரித்தா.. நாயகி வீட்ல எல்லாரும் வந்துட்டாங்களாம், பேராண்டி மட்டும் நாளைக்கு விடிய வந்துடுவான்னாம், பேச்சி சொன்னா. மாப்பிள்ளைக்கு எடுக்க வேண்டியது எடுத்தாச்சான்னு ஒருதடவ கதிர பார்க்க சொல்லுத்தா, கொறைன்னு ஒன்னு வந்துடக்கூடாது, எம்பேத்தி கல்யாணத்துல, எல்லாத்தையும் ஒன்னுக்கு பத்து தடவைப் பார்க்க சொல்லு, ஏத்தா பொம்மி தலைக்கு ஊத்திட்டா செத்த அப்புச்சிக்கிட்ட இரு.. நான் அங்கன போயிட்டு வந்துர்றேன்..” என்றபடிய கிளம்ப, அதில் நிலவன் பற்றிய செய்தி தனக்கு இருப்பது கனலிக்குப் புரியாமல் இல்லை, சரி என்று அவரிடம் தலையாட்டிவிட்டு குளிப்பதற்காக சென்றாள்.
அங்கிருந்து நகன்றவளின் முகத்தில் என்ன இருந்தது என்று படிக்க முயன்ற இருவராலும் ஒன்றும் முடியவில்லை. சலிப்புடன் “என்னத்த இவ இப்படி இருக்கா… அவசரப்பட்டுட்டோமோ” என்றாள் தாய் என்ற கவலையோடு.
“சந்திராம்மா பொம்மி விசயத்துல யாருமே தப்பு பண்ண முடியாதுடா, நாம நல்லதுதான் செய்வோம்னு அவளுக்கும் புரியும், நீ இந்தமாதிரி பேசி மறுபடியும் அவள ஓட வச்சுடாத, கதிர் வரவும் நான் சொன்னத மறக்காம செய், நான் பேச்சி வீட்டுக்கு போயி எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வரேன்..” என்று கிளம்பி விட்டார் சின்னம்மாள்.
சின்னம்மாளின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று பேர், இரு பெண்கள் சின்னம்மாளும், பேச்சியம்மாளூம், ஒரு ஆண் அவர் முத்தையா.. சின்னம்மாள் தன் மகனுக்கு, முத்தையாவின் மகளான சந்திராவையே கட்டிவைத்துவிட்டார். பேச்சியின் மகள்தான் நாயகி, அவருக்கு தன் கணவர் வழியில் பார்த்த மாப்பிள்ளை தான் சாரதி. இருபக்க குடும்பத்தையும் அனுசரித்து செல்லக்கூடியவர் சின்னம்மாள். அவர் செய்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என்று எல்லாருக்கும் தெரியும். அவர்தான் இந்த திருமணத்திற்கு முக்கியக் காரணம்.
கனலியின் துறுதுறுப்பும், அலட்சியப்போக்கும் தான் நிலவனுடனான கனலியின் திருமணத்தை உறுதி செய்ய வைத்தது. வெளியிடத்தில் கொடுத்தால் அவளது குணத்திற்கு யாரும் ஒத்துப்போகவே மாட்டார்கள் என்று நினைத்தார். அதோடு நிலவன் போல் ஒருவனை விட்டுவிடவும் முடியவில்லை. அதனால் கணவரிடம் பேசி யாரின் முடிவையும் கேட்காமல் தானே முடிவெடுத்துட்டார்.
மதியப்பொழுதைத் தாண்டத் தொடங்கும் நேரம், நிலவனின் கார் அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றது. ட்ரைவ் செய்து வந்ததினால் சோர்வாக இருந்தான். அவனது முகத்தைப் பார்த்து வேறு எதையும் கணிக்க முடியவில்லை. அவன் வரும் நேரம் சின்னம்மாளும் அங்கயே இருக்க, வாசலில் நிறுத்தி ஆரத்தி எடுக்க வைத்தே உள்ளே விட்டார். சின்னம்மாளிடம் எதிர்த்துப் பேசி பழகியிராதவன், கோபம் இருந்தாலும் சிரித்த முகத்துடனே இருந்தான்.
“என்ன பெத்த ராசா… வாயா வாயா… நூறு வருஷம் என் பேத்தி கூட நீ சந்தோசமா வாழனும் ராசா” என ஆனந்தக் கண்ணீரோடு அழைக்க,
“என்ன அம்மாச்சி இதெல்லாம், எதுக்கு அழறீங்க, நீங்க என்ன முடிவெடுத்தாலும், எங்க எல்லாருடைய நல்லதுக்கும்தான்னு தெரியும், அதனால வருத்தப்படாம மத்ததைப் பாருங்க, நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்… ட்ரைவ் பன்னிட்டு வந்தது டயர்டா இருக்கு…” என அவரை சமாதானம் செய்ய.
“நீ போ கண்ணா… குளிச்சிட்டு சாப்பிட்டு கொஞ்சம் தூங்குங்க.. சாயங்காலம் பார்ப்போம்… நாயகி தம்பியப்பாரு.. நான் போய் பொம்மிக்கு எல்லாம் எடுத்து வச்சாச்சான்னு பார்க்குறேன்..”
“பெரிம்மா.. நிச்சயப்பட்டு பொம்மிக்கு பிடிச்சிருகுத்தானே, பிடிக்காம போயிடுமோன்னு பயந்துட்டே இருந்தேன்.. அப்புறம் கதிரண்ணேங்கிட்ட தம்பி வந்துட்டான்னு சொல்லிடுங்க.. கேட்டுட்டே இருந்தார்..” என பேச ஆரம்பிக்க,
“உனக்கு பிடிச்சாளே போதும், அவளூக்கும் பிடிச்சிடும், நீ பையனைப் பாரு, அதான் நிச்சயத்துல பார்ப்போம்ல,” என்று அவரை அடக்கிவிட்டு , கிளம்பிவிட, நிலவனின் வெறித்த பார்வை நாயகியைத் துளைத்தது..
“தம்பி..” என்று அவனிடம் வர, “நான் அவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கவே இல்லையில்ல, யார் சொன்னா நான் கேட்பேன்னு, சரியா தெரிஞ்சு பன்னிருக்கீங்க, உங்க அண்ணன் பொண்ணு உங்களுக்குப் பெருசுன்னா, அதை என் தலையில கட்டவேண்டிய அவசியம் இல்ல… எனக்கு அவளைப் பிடிக்கலன்னு சொல்லியும் எதுக்கு என்னை இப்படி டார்ச்சர் பன்றீங்க…” நேற்றைய கனவு, இத்தனை நாட்கள் கழித்து வந்த தன்னை தாய் கவனிக்காது அவளைப் பற்றியேப் பேசியது எல்லாம் சேர்ந்து அவனை அப்படி பேச வைத்தது.
பேச்சியும், நாயகியும் அதிர்ச்சியுடன் நிற்பதைப் பார்த்தாலும், கண்டுகொள்ளாமல் தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான். வெளியெ சென்றிருந்த சாரதி, இவர்களின் இந்த அதிர்ந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார். நடந்ததை மாமியாரின் மூலம் அறிந்தவர், நாயகியை ஆறுதலாய் பார்த்துவிட்டு மகனின் அறைக்குள் நுழைந்தார்.
குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் தன் அறைக்குள் அப்பா வருவதை பார்த்து, ‘ஓ… இவர் வந்ததும் எல்லாத்தையும் சொல்லிருப்பாங்க, அதான் என்ன, ஏதுன்னு விசாரிக்க வந்துருக்கார்’ என்று மனதிற்குள் நினைத்தாலும், வெளியே, “ஹாய் ப்பா…” என்றான் சிரித்த முகத்துடன்.
“ஹாய் கண்ணா.. எப்ப வந்த, எப்படி இருந்தது ட்ராவல்..”
“யா… டாட்… நத்திங் டூ போர்… அஸ் யூஸ்வல்.. இங்க வேலையெல்லாம் எப்படி போகுது… நான் எதுவும் செய்ய வேண்டி இருக்குமா… லஞ்ச் முடிஞ்சதா.. இல்ல நான் வரட்டும்னு வைட் பன்னீங்களா..?”
“உனக்கு ஒரு வேலையும் இல்லக் கண்ணா.. எல்லாம் முடிஞ்சது… நம்ம பக்கம் எல்லா வொர்க்கும் ஃபினிஷ்.. ஈவ்னிங்க் ஃபங்க்ஷன் ஸ்டார்ட் ஆனாதான் உனக்கு வேலை… அதுவும் என் மருமகப் பொண்ணை சைட்டடிக்குற பெரிய வேலை..” என்று கிண்டலடிக்க,
“வாட்…? டாட் உங்களுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு, நான் போய் சைட்டடிக்குறேன்னா, அதுவும் அவளை.. காமெடி பன்னாதீங்க..” என்று எரிச்சலாய் கத்தியவனை அமைதியாகப் பார்த்தவர்,
“எங்க எல்லாருக்கும் பொம்மியைப் பிடிக்கும், அவ நம்ம வீட்டுக்கு வந்தா நல்லா இருக்கும்.. இதெல்லாம் எங்க எண்ணம் தான்… அதுக்காக உனக்குப் பிடிக்காத ஒருத்தியை உன் வாழ்க்கையில திணிப்போம்ன்னு உனக்குத் தோனுதா.. நீ எங்களுக்கு ஒரே பையன்… எங்க உலகமே நீதான்.. அப்படி இருக்கும் போது உன் வாழ்க்கையை நாங்க கஷ்டப்படுத்துவோமா சொல்லு… உனக்கும் பொம்மி மேல ஒரு ஈர்ப்பு இருக்குன்னு எனக்குத் தெரியும்..” அவன் நம்பாமல் பார்ப்பதை உணர்ந்து,
“உங்கம்மா பொம்மி கூட போன்ல பேசும் போது, உன் கண்ல தெரியிற அந்த பளபளப்பு, அதை நான் பார்த்துருக்கேன். உனக்கும் அவளைப் பிடிக்கும்னு தெரியும், நீ அவளை லவ் பன்றேன்னும் தெரியும்.. ஆனா அதை இன்னும் உணரலன்னு இப்போதான் எனக்கேத் தெரியுது… சரி இப்போ சொல்லு, நாங்க என்ன செய்யட்டும், உனக்குப் பிடிக்காத பொண்ணு உனக்கு வேனாம், எங்களுக்கும் வேனாம். இப்பவே சொல்லி மேரேஜ் கேன்சல் செய்துடலாம்.. என்ன வந்தாலும் நான் பார்த்துக்குறேன், எனக்கு நீ முக்கியம், என்ன சொல்ற..” எனவும்
சில நொடிகள் அமைதி காத்தவன், “ப்பா… அரேஞ்ச் செய்தது அரேஞ்ச் செய்ததுதான்.. உங்களுக்கு ஒரு அசிங்கம்னா, அது எனக்கும் தான்.. அவளைப் பத்தி பேசும் போது, என்ன சொல்றாங்க, என்ன பேசுறாங்கன்னு எனக்குள்ளயும் ஒரு ஆர்வம் வந்ததுதான், நான் இல்லைன்னு சொல்லல, ஆனா லைஃப் லாங்க் நம்மக்கூட வரப்போறவ, இப்படி சின்னப்பிள்ளைங்க கூட விளையாட்டுத்தனமா சுத்தினா எப்படி செட் ஆகும்.. என் மேரேஜ்க்கு அப்புறம் நீங்களும் பாண்டி வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க, இவளை எப்படி நான் தனியா மேனேஜ் பண்ணுவேன், அதுதான் ரொம்ப குழப்பம், ஒன்னும் புரியல, வேனாம்னும் சொல்ல முடியல, வேனும்னும் சொல்ல முடியல,..” என்றான் தளர்வாய்.
மகன் நிறையவே யோசித்துக் குழம்பியிருக்கிறான் என்பது அவன் பேச்சிலேயே புரிந்தது. கனலியின் ஒருபக்கத்தை மட்டுமே தெரிந்து கொண்டு குழம்பிக் கொள்கிறான், அவளின் மற்றொரு பக்கம் அவனுக்குத் தெரிந்தால் நிச்சயம் அவளைத் தவிர வேறு யாரும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விடுவான் என்று நினைத்தவர், கனலியின் அனைத்தையும் அவனிடம் சொல்லிவிட்டார்.
கேட்டவனுக்கு தான் எப்படி உணர்கிறோம் என்றேத் தெரியவில்லை.. சிறுபெண், குறும்புக்காரி, விளையாட்டுப்பிள்ளை என்று நினைத்திருந்தவள், இப்போது அவன் வியக்கும் அளவுக்கான உயர்த்தில் இருப்போது போல் ஒரு தோற்றம் அவனுக்குள்.
“கண்ணா… பொம்மிக்கு இங்க நிறைய ஆபத்து இருக்கு, அதை அவக்கிட்ட சொல்லியும் பார்த்தாச்சு, கெஞ்சியும் பார்த்தாச்சு, கேட்கவே மாட்டேங்குறா.. வர மாப்பிள்ளையை எல்லாம் பாதி பேரை அவ துரத்தினா, பாதி பேர் அவங்களாகவே வேனாம்னு போயிடுறாங்க… இது இப்படியே போயிடக் கூடாதே, பொம்பளப் புள்ளையாச்சே, அதான் நாங்க எல்லாரும் சேர்ந்து இந்த முடிவுக்கு வந்தோம். மேரேஜ், ஃபேமிலின்னு அவ லைஃப் ஸ்டைல் மாறும்போது இந்த வொர்க்ல இருந்து அவளே வெளிய வந்துடுவான்னு தோனுச்சு..”
“பெரியவங்க இல்லையா, அதுதான் அப்படி யோசிச்சிட்டோம்… பொம்மி தப்பு செய்தா, அவளை தடுக்கலாம், ஆனா அவ தப்பு செய்றவங்களைத் தானே தட்டி கேட்குறா.. அப்படி இருக்கும் போது நாங்க எப்படி செய்யாதேன்னு தடுக்குறது..” என்று அவனின் அமைதியைக் கலைத்தார்.
“ம்ம்ம்..” என்று பெருமூச்சு விட்டவன், “இதை முன்னமே சொல்லிருக்கலாம், ஏன் சொல்லல, உங்களுக்கு என்மேல நம்பிக்கை வரலையோன்னு தான் எனக்குத் தோனுது…” எனவும்,
“இல்லக் கண்ணா, நாங்க அந்தமாதிரி யோசிக்கல கண்ணா..” எனப்பதற,
“இல்லப்பா… இனி எதையும் பேச வேண்டாம், நடக்குறது நடக்கட்டும், நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்… ஈவ்னிங் ஃபங்க்ஷன் வேற…” என்று சோர்வுடன் கட்டிலில் சாய்ந்துவிட, தனிமைதான் அவனை நல்லமுறையில் சிந்திக்க வைக்கும், சிந்திப்பான் என்ற நம்பிக்கையுடன், நிலவனின் தலையை வருடிவிட்டு, மனைவியை நோக்கிச் சென்றார். அவரையும் சமாதானம் செய்ய வேண்டுமே….
இன்னும் முழிப்பாள்…
Comments are closed here.