காஜலிட்ட விழிகளே 8
2502
0
“ஹலோ.” ஸ்ருதியாக இருக்குமோ என்ற ஆசையில் எடுத்தவனுக்கு ஏமாற்றம் தந்தது அவளது தந்தையின் குரல்.
“கார்த்திக் குட் மார்னிங். ”
“குட்மார்னிங் சார்! ”
“நீ என்னப்பா பண்ற? உன்கிட்ட ஒரு விஷயம் சொன்னா நீ ஆடிப்போயிடுவ!”
‘நானும் உங்கிட்ட ஒரு விஷயம் சொன்னா நீங்களும் ஆடிப்போயிடுவீங்க’ என்று நினைத்தவன் “சொல்லுங்க சார். நான் பாட மட்டும்தான் சார் செய்வேன். ” என்றான் அமைதியாக சிரித்துக்கொண்டே..
“நம்ம சௌத் டூர் அடுத்த மாசம் உறுதியாகிடுச்சு. அந்த காலேஜ் டூரும்தான் உறுதியாகிடுச்சு. அந்த சார் ரொம்ப சப்போர்ட் பண்ணார். ராஜ மரியாதை அங்கு எனக்கு. கலேஜில் பாடப்போறோம் என்று சொன்னதும்.. நமக்கு கிடைச்சிருக்கின்ற ஸ்பான்ஸர் எத்தனை தெரியுமா? ”
“சொல்லுங்க சார். நானும் தெரிஞ்சிக்கிறேன். ”
“எட்டு பேர். அனைவரும் அட்வான்ஸ் கொடுத்தாச்சு!”
“அப்படியா? நம்பவே முடியலை சார். ”
“எல்லாம் உன் முயற்சிதான் கார்த்திக். நீ மட்டும் அலைந்து திரிந்து வேலை செய்யலைன்னா.. இது நடந்திருக்காது.. ஐ ஆம் வெரி ஹாப்பி. டூர் வரும் ஜுன் வச்சிக்கலாமா? ஆனால் நான் அப்பதான் கேதர்நாத் டிரிப் ப்ளான் பண்ணியிருக்கேன். என்னால் காலேஜ் கச்சேரியை பார்க்க முடியாது. பரவாயில்லை கார்த்திக்.. அநேகமாக எல்லா ஸ்பான்ஸர்களும் எல்லா டூர்க்கும் வந்திடுவாங்க. அந்த டெக்ஸ்டைல் கடைக்காரர் மகன் எவ்வளவு தன்மையான ஆள் தெரியுமா? நல்ல பையன். அன்பு இல்லத்திற்கு எங்களை மட்டும் தனி ஸ்பான்ஸராக போட்டிடுங்க சார் நாங்களே எல்லா செலவும் பார்த்துக்கிறோம் என்றான். எவ்வளவு பெரிய மனசு பார். உன்னை மாதிரியேதான். கிரிஜாவிற்கு அந்த பையன் ஜாதகம் வந்திருக்கு.. நீ என்ன நினைக்கிற? ”
“ரொம்ப சந்தோஷம் சார். ஜாதகம்கூட பார்க்க வேண்டாம் சார். பையனைப் பற்றி மட்டும் அவன் ஃப்ரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சுக்கோங்க. ”
கார்த்திக் ஸ்ருதியின் வீட்டின் மின் இணைப்பு போல் அத்தியாவிசயமான ஒன்றாகிவிட்டிருந்தான். வீட்டில் குருவி கூடு கட்டினால் ஸ்ருதியின் அம்மா அவன் ஞாயிறு அன்று வரும்போது அவனிடம் சொல்லி சந்தோஷப்படுவார். தனது பாலிய கால நண்பரை எங்கேனும் சந்தித்துவிட்டால் கார்த்திக்கை உடனே கைபேசியில் அழைத்துச் சொன்ன பிறகுதான் ஸ்ருதியின் தந்தை மறுவேலை பார்ப்பார். கிரிஜாவும் எப்போதும் கார்த்திக் கையில் ஒவ்வொரு ரக்ஷாபந்தன்போதும் ஒரு ராக்கி வாங்கிக் கட்டிவிடுவாள்.
ஸ்ருதிக்கு அசௌகரியமாக இருந்தாலும் “மதினியாரை கோவிச்சுக்க முடியுமா? உன்னைக் கட்டிக்கிட்ட பிறகு நான் கிரிஜாவுக்கு அண்ணன் மாதிரிதான். அதனால் உன் அக்கா ராக்கி கட்டினதுகூட ஒரு விதத்தில் சரிதான் ஸ்ருதி. ” என்று அவளுக்கு சமாதானம் சொன்னான். ஸ்ருதி அவனுடைய இந்த நல்ல மனதிடம் தன்னையே தொலைத்தாள்.
கார்த்திக்கின் மீது தனது காதல் நாளுக்கு நாள் கூடுவதை அவள் உணர்ந்தாள். கனவினில் தாலிகட்டிக் குடித்தனம் நடத்தினாள். தூங்கும் அழகான இரண்டு ஆண்குழந்தைகளை அவள் முத்தம் கொடுத்துக் கொஞ்சும் போது கார்த்திக் அவளை கைகளில் தூக்கிக் கொண்டு படுக்கையறை செல்லும் காட்சியை பகல் கனவில்கூட கண்டு திடுக்கிட்டு பல நாள் வியர்க்க வியர்க்க எழுந்தாள்.
கார்த்திக் அவளை கொண்டாடிடுவான். பகலில் அவளிடம் சுத்தமான அக்மார்க் ஆண்மகனாக நடந்திடுவான். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் சின்ன சின்ன கொஞ்சல்கள் அவன் பேச்சில் வந்துவிடும். தனிமை அவர்களுக்கு கிடைத்த தில்லை. ஸ்ருதி தனிமையை கிடைக்க விட்டதில்லை என்பதே உண்மை.
பறவைகளின் கூட்டிற்கு எதற்கு கதவுகள்? கதவுகள் மூடப்படாமலே அங்கே அழகிய காதல் வாழ்ந்து வளர்ந்து வந்தது.
அன்று காதலர்கள் தினம்.
கார்த்திக் படு உற்சாகமாக இருந்தான். குழுவினர் சூழ்ந்திருக்க கார்த்திக் ஸ்ருதியுடன் தனிமையில் ஒரு ஐ லவ் யூ சொல்ல ஏங்கினான்.
அதைக் கேட்பத்ற்காகவும் மீ டூ கார்த்திக் என்று பதில் சொல்வதற்காகவும் நெஞ்சம் நிறைய ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி.
“டேவிட் அந்த பாடல் வரிகளை என் செல்லுக்கு அனுப்பி வை. நான் இப்ப அதை பாடிப்பார்க்கணும். என் நெட்வொர்க் சரியில்லை. கீபோர்டில் அந்த கடைசி வரியுடைய ட்யூன் வாசிக்கிறேன். நீ கவனி. இன்டர்நெட்டில் வேற மாதிரி இருக்கு. ”
டேவிட் கார்த்திக் வாசிக்கும்போது நன்றாகவே கவனித்தான். ஆனால் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
“இரண்டுமே ஒன்றாகத்தான் தெரிந்தது. ”
“டேவிட் ஏதாவது வித்தியாசம் கண்டிப்பா இருக்கும்.”
“மூன்றே வார்த்தைதான் அந்த கடைசி வரியில் வருது. அதில் என்ன வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும் கார்த்திக்? ஏதாவது ஒரு டியூனில் பாடு! ”
“இல்லை டேவிட் உனக்குத் தெரியாது.. ஸ்ருதி உனக்கு கண்டிப்பா வித்தியாசம் தெரியுமே? நான் வேற ஒரு எக்சாம்பிள் சொல்றேன்.. நீயும் கவனி.” என்றான் மிகுந்த கடமை உணர்ச்சியுடன்.
“இதயத்தை திருடாதே படத்தில் பேக்கிரவுன்டு மியூசிக்கில் ஐ லவ் யூ என்று பாடலாக வந்துகிட்டே இருக்கும். முதலில் வரும் ஐ லவ் யூவிற்கும் இரண்டாவதாக வரும் ஐ லவ் யூவிற்கும் சின்ன வித்தியாசம்தான். ”
அந்த டியூனும் ஹீரோயினும் டேவிட்டிற்கு நன்றாக ஞாபகம் வந்தது.
“ஓ! ஆமாம் கார்த்திக் நானும் கவனிச்சிருக்கேன்.” என்றான் டேவிட். மெட்டை கண்டுபிடித்ததைவிட அவன் அந்த கதாநாயகியை கண்டுபிடித்ததுதான் அவன் முகத்தில் நன்றாகத் தெரிந்தது.
“இல்லை. நீ சரியாக கவனிச்சிருக்க மாட்ட.. நானே பாடிக் காட்டுறேன் பார். ஸ்ருதி நீ நல்லா கவனிக்கணும் சரியா?” என்றவன் டேவிட்டிற்கு பாடம் எடுக்கிறேன் என்ற சாக்கில் ஸ்ருதியிடம் ஐ லவ் யூ என்று அந்த இரண்டு ராகத்திலும் பாடிக்காட்டிக் கொண்டிருந்தான்.
சிரிக்காமல் இருப்பதற்கு உதடுகளை அழுத்தி இறுக்கமாக வைத்துக்கொண்டாள் ஸ்ருதி.
“ம் ம் புரிஞ்சிருச்சு கார்த்திக்.. அந்த அடுத்த பாட்டு எனக்கு என்னன்னு சொல்லிட்டினா.. ” என்ற டேவிட்டின் இடையூரை கார்த்திக் சிறிதும் பெரிது படுத்தாமல்..
“இல்லை டேவிட். ஸ்ருதிக்கே இப்பதான் புரிஞ்சிருக்கு. உனக்கு இப்ப கொஞ்சம்தான் புரிஞ்சிருக்கும். ஸ்ருதி.. நீயும் அதே பேக்கிரௌன்ட் மியூசிக்கை பாடிக்காட்டு.. டேவிட்டிற்கு இன்னும் நல்லாவே புரிந்திடும். ”
ஸ்ருதி கூச்சம் கலந்த குரலில் அந்த ஐ லவ் யூ பாடலைப் பாடிக்காட்டினாள். கார்த்திக்கிடம் பாடம் படிக்கும் அழகான மாணவியைப் போல..
“சூப்பர் இப்ப நல்லா புரியுது.. அழகான பி.ஜி.எம்!” என்றான் டேவிட்.
“என்ன? அழகான பி.ஜி.எம்மா? அது ஒரு மேஸ்ட்ரோவின் படைப்பு டேவிட். உனக்கு அது ஜீனியஸாகத் தெரியவில்லை? உனக்கு இன்னும் புரியவில்லை. ஸ்ருதி நானும் பாடுறேன் நீயும் பாடு. இரண்டு பேரும் சேர்ந்து பாடுவோம். டேவிட்டிற்கு அப்பதான் புரியும் என்றபோது அந்த அப்பாவிப் பிறவி அமைதியாக சம்மணம் இட்டு தரையில் உட்கார்ந்து படு சிரத்தையுடன் கவனித்தான்.
கார்த்திக்கும் ஸ்ருதியும் சேர்ந்தே பாடினார்கள். அழகாக இருந்தது அந்த ஐ லவ் யூ பாடல்.
“யெஸ் கார்த்திக். நீ சொன்னது தான் சரி. இது ஒரு மாஸ்டர் பீஸ்! நான் இந்த டியூனை மறக்க மாட்டேன். ”
ஆனால் பாடல் முடிந்த பிறகு ஸ்ருதி ஏதோ ஒன்றை ஹம் செய்தாள். அவள் ஹம் செய்ததைப் போலவே கார்த்திக்கும் ஹம் செய்தான். டேவிட் அதை என்னவென்று கேட்கவில்லை. கேட்டால் திரும்ப பாடம் நடத்தி விடுவானோ என்று பயம் அவனிடத்தில்.
டேவிட் அமைதியாக தன் வேலையில் அறையின்
ஒரு ஓரத்தில் தனது கீபோர்டுடன் லயித்து இருக்க.. கார்த்திக் கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
“கார்த்திக் நான் கடைசியாக என்ன ஹம் பண்னேன்? ”
கார்த்திக் பதிலை அடுத்த நொடி தந்துவிட்டான்.
“மீ டூ! அதுதானே நீ ஹம் பண்ண? ”
அவன் பதிலை கண் இமைக்காமல் பார்த்து ரசித்தவள் அவனிடம் அடுத்த தகவலை அனுப்பினாள்.
“டேவிட்டிற்கு மீண்டும் கிளாஸ் எடுப்போமா? ”
“ம்! ம்! முதல் கிளாஸில் கற்பனையிலேயே நமக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு. அடுத்த கிளாஸ் சீக்கிரம் எடுத்திடலாமா? அப்பத்தான் குழந்தை குட்டின்னு என் கனவு முழுமையாகும்! ம்? என்ன சொல்ற ஸ்ருதி? ஒன் ஹவர் கிளாஸ் போதுமா? இல்லை டூ ஹவர்ஸ் வேண்டுமா? ”
ஆனால் அவனது கைபேசி எதுவும் பேசவில்லை. மேற்கொண்டு அவனிடம் அது உரையாடவில்லை. ஸ்ருதியின் கைபேசி ஊமையாக இருந்ததால் அவனது கைபேசியும் ஊமையானது. ஆனால் இருவர் மனதும் ஆயிரம் ஆயிரம் காதல் அன்பு நிறைந்த வார்த்தைகளால் நிறைகுடம் போல் நிரம்பி இருந்தது. நிறைகுடம் தளும்பாது என்பது எல்லாவற்றிற்குமே பொருந்துமோ?
Comments are closed here.