முட்டகண்ணி முழியழகி-5
2523
2
முட்டக்கண்ணி – 5
‘குட்டையைக் குழப்பினால் தான் மீன் பிடிக்க முடியும்’ என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். நிலவனின் மனதைக் கடைசி நிமிடத்தில் குழப்பி விட்டால் தான் அவன் சரியான முடிவை எடுப்பான் என்று நேரம் பார்த்துக் காத்திருந்து, அதை சரியாகவும் செய்து விட்டார் சாரதி.
இனி அவன் சரியாக யோசிப்பான் என்று எண்ணியவர், அடுத்தடுத்த வேலைகளை கவனித்தார், மற்றவர்களையும் கவனிக்க வைத்தார். அவர் எண்ணியது போலவே நிலவன் சரியான முடிவைத்தான் எடுத்திருந்தான்.
கண்ணை மூடிக் கட்டிலில் சாய்ந்தவனுக்கு குழப்பம், குழப்பம், குழப்பம் மட்டுமே… இப்போது அவன் என்ன செய்ய வேண்டும்..? அவளை உனக்குப் பிடிக்குமா..? உன்னால் அவளது பிரச்சினைகளை சரி செய்ய முடியுமா..? இங்கு அவள் செய்து கொண்டிருக்கும் இந்த வேலையை அவளால் விட்டுவிட முடியுமா..? வரிசையாய் மனசாட்சி கேட்டக் கேள்விகளில் அவனுக்கு தலையை வலித்தது.
‘இப்படியே இருந்தால் தலையே வெடித்துவிடும்’ என்பது போல் பார்வையைக் கூர்மைப் படுத்த, அவளைச் சுற்றிக் குழந்தைகள் ஆட்டம் போட்டாலும், சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அப்புச்சியின் தலையைச் சாய்த்துப் படுத்திருந்தவளின் பார்வை மட்டும் தூரத்தே தெரிந்த தொடுவானில் நிலைத்திருந்தது. கண்ணில் கூட நீரின் பளபளப்புத் தெரிந்ததோ..?
அப்போது தான் குளித்திருப்பாள் போல, கூந்தலைக் காயவைக்கும் பொறுட்டு, வெளியே வந்திருப்பாள் என்றும் புரிந்தது. கரும்பச்சையில் தங்க ஜரிகை இட்ட சில்க் காட்டன் புடவையில், நீண்ட கூந்தலை விரித்துவிட்டு, அதை தன் விரல்களால் அளந்து கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும் மனம் முழுவதும் இதம் பரவ, அதுவரை இருந்த குழப்பங்களும், கோபங்களும் பறந்து விட, தன்னைத் தவிர வேறு யாரும் அவளை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள முடியாது என்ற உறுதியே பிறந்து விட்டது அவனுக்கு.
இந்த ஊரைவிட்டு, அவளது வேலையை விட்டு என மொத்தமாக வருவது நிச்சயம் அவளுக்கு வருத்தத்தைக் கொடுக்கும் தான். காலங்கள் கடக்க, அவளது மனநிலையும் மாறி மற்றவைகளையும் மறந்து விடுவாள், இல்லையென்றால் என்னால் மறக்கவைக்க முடியும், கண்டிப்பாக முடியும் என்று நம்பினான். அதனால் அடுத்தடுத்து நடக்கப்போகும் நிகழ்வுகளில் மகிழ்ச்சியாய் கலந்து கொள்ள முடிவெடுத்தான்.
அவளுக்காக அவன் மாறுவானா..? அவனுக்காக அவள் மாறுவாளா..? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
நாயகியைத் தேடிச் சென்றவன், அவரை அனைத்து “சாரிம்மா.. அண்ட் வெரி தேங்ஸ்மா…” என்று கன்னத்தில் முத்தம் வைக்க, நிலவனது மகிழ்வான முகமே, பெரியவர்களுக்கு அவனது தெளிவைப் பறைசாற்றியது.
மனதில் தோன்றிய நிம்மதியுடன், “டேய் என் ப்ராபர்டிய டச் பண்ணக்கூடாதுன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன்..” என சாரதி சண்டைக்கு வர,
“தோடா.. மை மம்மி… மை ப்ராபர்டி… நீங்க கிளம்புங்க… காத்து வரட்டும்…” என அவர் மடியில் சாய்ந்துக் கொள்ள,
“இருடா… என் மருமக வரட்டும், அப்புறம் உங்க ரெண்டு பேரையும் கவனிச்சுக்கிறேன்..” என்றதும், அவரைப் பார்த்து தாயும், மகனும் நக்கலாய் சிரிக்க, “ஹேய் என்ன உங்க லாஃபிங்கே டிஃபரண்டா இருக்கு..” என முறைக்க,
“யூ நோ டேட்.. உங்க மருமக, அவங்க அத்தைக்குத் தான் சப்போர்ட் பண்ணுவா, அந்த அத்தை ஐ மீன் மை மம்மி எனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க, அந்த உண்மையை நினைச்சதும், தன்னால சிரிப்பு வந்துடுச்சு, வேறொன்னுமில்ல..” என சாரதி முறைத்ததையும், கண்டுகொள்ளாமல், நாயகி ஊட்ட, உணவை வாங்கி கொண்டிருந்தான் நிலவன்.
இவர்களது விளையாட்டைப் பார்த்த பேச்சிக்கும் மனம் லேசாகிவிட்டது. தன் பேரன்-பேத்தி வாழ்க்கை இனி சுமுகமாகிவிடும், நிலவன் அவளை சரியாகப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் வந்தது. பேச்சியின் பார்வை நிலவனிலேயே நிற்க, அதை உணர்ந்தவன் எழுந்து வந்து அவரிடம், “அம்மாச்சி என்ன இப்படி பார்க்குறீங்க, என் மேல எதுவும் கோபமா..?” என்று நாடியைப் பிடித்துக் கொஞ்ச..
“ச்சே.. ச்சே என்ன பேச்சு ராசா பேசுற, உன்மேல எங்களுக்கு கோபமே வராது ராசா.. அது உனக்குமேத் தெரியும். நீ சிரிச்சா ரொம்ப அழகா இருக்க கண்ணா.. என் கண்ணே பட்டுடும் போல, நீயும் சிரிச்சு, அவளையும் சிரிக்க வச்சு ரெண்டு பேரும் ஆயுசுக்கும் சந்தோசமா இருக்கனும், அதுதான் எங்க எல்லாருடைய ஆசையும்.. அவ சின்னப்பொண்ணு.. ஏதோ கோபம், சரியாகிடுவா… இல்லைன்னா சரி பண்ணிடனும், எங்களுக்காக செய்யனும் கண்ணா, அவளுக்கு எங்க மேல எல்லாம் கோபம்..” என்றவரின் குரல் தழுதழுக்க…
“ப்ச்.. அம்மாச்சி என்ன இது.. இப்போதான் சின்னப்புள்ளன்னு சொன்னீங்க.. அப்புறம் அவ பேசலன்னு அழறீங்க, சின்னக் குழந்தைங்க அடமும், கோபமும் எத்தனை நாளைக்கு, அவளே சரியாகிடுவா.. வேணும்னா பாருங்க, இன்னைக்கு நிச்சயம் முடியறதுக்குள்ள, உங்க தண்டட்டியில ஒன்னையாச்சும் ஆட்டையப் போடுறாளா இல்லையான்னு..” என்றவன் மந்தகாசமாய் புன்னைகைக்க..
மகனின் பேச்சைக் கேட்ட பெற்றோர் இருவரும் ஆவென வாய் பிளக்க, பேச்சியோ.. “அப்படியா ராசா அவக் கேட்டா நானே எல்லாத்தையும் கொடுத்துடுவேன், இது எல்லாம் என் ஒத்தப் பேத்திக்குத்தான, அவளுக்கு இல்லாதது எதுவுமே இல்ல இங்க…” என்று சத்தமாய் பேசியவர், பின் குரலை தாழ்த்தி,
“என் தண்டட்டி மேல அவளுக்கு ஒரு கண்ணுன்னு எனக்குத் தெரியும், இந்த தண்டட்டிய ஒரு நாளும் நான் அவளுக்கு கொடுக்க மாட்டேன். இது எங்க மாமியா எனக்கு போட்டது.. அது பரம்பரைச் சொத்து மாதிரி, அதை எப்படி அவளுக்கு கொடுப்பேன்.. என் காதுல கை வைக்கட்டும், அவக் கைய ஒடைச்சு அடுப்புல வைக்கிறேன்..” என குசுகுசுவென பேச, நிலவனுக்கோ, ‘என்னடா ஆவேசமா பேச வேண்டிய டயலாக்க எல்லாம் இந்த அம்மாச்சி சீக்ரெட்டா பேசுது..’ என அவன் முழித்ததைப் பார்த்து,
“அது ராசா… ரெண்டு முட்டையை முழுங்கி, அதைக் கண்ணுல வச்சுருக்காளே, அவதான் வீட்டைச் சுத்தி நாலு குட்டிப் பிசாசுங்கள வேவுப் பார்க்க விட்டுருக்கா, அதுங்க நான் ஒன்னு சொன்னா மூனா போய் அந்த முட்டக்கண்ணிக்கிட்ட சொல்லி வம்ப இழுத்து விட்டுடுதுங்க, அவளும் வரிஞ்சுக் கட்டிக்கிட்டு வர்ரா.. உன் குட்டிப்பிசாசுங்க பொய் சொல்லுதுங்கடின்னு’ சொன்னா,
‘என் படைத் தளபதிகள் அனைவரும் உண்மை விளம்பிகள்’ன்னு கூசாம பொய் சொல்றா.. அதோட விடுறாளா..? ஏன்..? எதுக்குனு..? ரெண்டு மணி நேரம், மூனு மணி நேரம் விசாரணை பண்றா.. மயக்கம் வருதுடி பாவின்னு சொன்னா… ஜூஸ் கொடுத்து விசாரணை பண்றா… அதுதான் அவக்கிட்ட இருந்து தப்பிக்க மெதுவா பேசக் கத்துக்க்கிட்டேன்..” என பேச்சி அப்பாவியாய் நீட்டி முழக்க,
“அம்மாச்சி.. இதுக்குப் பேருதான் தெளியவச்சு, தெளியவச்சு அடிக்கிறதா..” என்று நிலவனும் அவன் பங்கிற்கு கிண்டல் செய்து, கண்ணில் நீர் வரும் அளவிற்கு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
அப்போது பேச்சியின் போன் ‘பல்டி பக்குற டர்ல வுடனும் பல்தே Wolrdu மொத்தமும் அற்ல விடணும் பிஸ்தே’ அலற, “அய்யோ போச்சு… போச்சு.. ஏதோ ஒரு குட்டிச்சாத்தான் போய் வத்தி வச்சிடுச்சு போல…” என போனை விட அலறினார்.
பேச்சியின் செய்கையில் சிரித்துக் கொண்டே வந்தவன் போனை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டுவிட, “ஏய் கிழவி… என்ன பயமெல்லாம் போச்சா.. உன் பேரன் வரவும் தைரியமாகிடுச்சு போல, ஏதாச்சும் என்னைப் பத்தி உன் பேரன் அந்த நெடுமாறங்கிட்ட சொன்ன… அவ்வளவுதான், அப்புறம் உன் பேரன் வாழ்க்கையை இழந்து வாழாவெட்டனா வந்து உன் வீட்டுல உக்காந்து கண்ணைக் கசக்குவான்.”
“நீயே முடிவு பண்ணிக்கோ… உன் பேரன் கண்ணுல தண்ணி வராம பார்த்துக்கனுமா, வேண்டாமா..? என்று கொஞ்சம் கூட அலட்டாமல், மிரட்டல் குரலில் சொல்ல, நிலவன் வாயை மூடி உருண்டு புரண்டு சிரித்தான் என்றால், சாரதியும், நாயகியும் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டனர்.
பேச்சியோ திருதிருவென விழிக்க, அதைக் கண்டவன் சிரிப்பை நிறுத்தி, போனை தன் கையில் நிதானமாய் எடுத்தவன், எல்லோரையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, “நான் நிலவன் பேசுறேன், ஐ மீன் உன் பாசையில நெடுமாறன்..” எனவும்..
“ஹாங்..” எனக் கனலித் திகைப்பது போனிலேயே அவனுக்குத் தெரிய, அங்கிருந்த அறைக்குள் வந்தவன், “யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. நீயே உனக்கு எப்போத் தோணுதோ அப்போ சொல்லு போதும்… ஐம் வைடிங்… ஈவ்னிங் மீட் பண்ணுவோம் முட்டக்கண்ணி.. பாய்..” என அவளை மேலும் மேலும் திகைக்க வைத்தே போனை அணைத்தான்.
முகம் முழுக்க புன்னகை ,மனம் நிறைந்த புன்னகை, இனி அவளோடு வாழப்போகும் வாழ்க்கை வரமாகத்தான் இருக்க வேண்டும் என மனதுக்குள் கடவுளிடம் வேண்டிக் கொண்டான். ஆனால் அதற்கு நேர்மாறான எண்ணத்தில் இருந்தாள் கனலி.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்தில் இருக்க… வெம்மையின் வீச்சு கொஞ்சமே கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும் அந்திசாயும் நேரம். பகல் முழுவதும் சுட்டெரித்த சூரியன் ஓய்வெடுக்க மறைந்த பொழுது சிவந்த செவ்வானம் கனலியின் மனதில் இருந்த வெம்மையும் மெல்ல மெல்ல தனிக்க ஆரம்பித்ததோ அவள் மனதிலும் இதம் கூடத்தான் செய்தது.
தன் அறையில் இருந்து தெருவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் கனலி. இரண்டு வீட்டிலும் தெருவை அடக்கி பந்தல் போடப்பட்டிருந்தது. இரு வீட்டிலும் ஒற்றைப் பிள்ளைகள் என்பதால், அவர்களது திருமணம் ஊரே மெச்சும்படியாய் இருக்க வேண்டும் என்பது பெரியவர்களின் ஆசை.. அது அப்படியே நடந்து கொண்டிருந்தது.
குழந்தைகளின் ஆட்டமும், பாட்டமும், பெரியவர்களின் மகிழ்ச்சியும் அவளுக்கு ஒரு குற்றவுணர்ச்சியைக் கொடுத்தது என்றால் அது பொய்யில்லை. தன் சுயநலத்திற்கு இவர்களை வருத்தப்படுத்தி விட்டோமோ என்று எண்ணிக் கொண்டாள்..
தன் எண்ணங்களில் சுழன்றவளின் தோளில் கைவைத்து நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தார் சந்திரா.. அவரைத் திரும்பி பார்த்தவளின் முகத்தில் இருந்த புன்னகை கண்களை எட்டவில்லை என்று தெரிய, ஆதுரமாய் தலையை வருடியவர், “உனக்குப் பிடிக்காத ஒன்னை உங்கிட்ட திணிக்கிறதா தோணுதாடா..” என்றார் குற்றவுணர்வுடன்.
“இல்லம்மா.. அப்படி இல்லை… உங்க எல்லாருடைய சந்தோசமும் எங்கிட்ட தான் இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சும், அதைப் புரிஞ்சிக்காம நடந்துக்கிட்டேனோன்னு வருத்தமா இருக்கு..”
“ச்சே..ச்சே… அப்படி எதுவும் இல்லடா… உனக்கு எதை செய்யனுமோ அதை சரியா செஞ்சுக் கொடுக்கனும்னு நினைச்சோம்.. அதே சமயம் நாங்களும் உன்னைக் கஷ்டப்படுத்திடக் கூடாதேன்னும் நினைச்சோம். உன்னோட கொள்கைகள் மேல எங்களுக்கு கோபமோ, பிடித்தமின்மையோ இல்ல, இதுவே ஒரு ஆண்பிள்ளைன்னா நாங்க யாரும் யோசிக்கவே மாட்டோம். நாங்களே இந்த ஆத்துக்காகவும், மண்ணுக்காகவும் போராட சொல்லி உன்னை அனுப்பிருப்போம். ஆனா நீ…? எங்களையும் யோசிச்சுப் பாரேன்.. நீ தான் எங்களுக்கு எல்லாமும். ” என்றவரின் குரலில் வருத்தம் அப்பட்டமாக தெரிய..
“புரியுதும்மா… விடுங்க இப்போ நான் என்ன செய்யனும்…” தன் கவலைகள் மொத்தத்தையும் தூக்கித் தூர வைத்துவிட்டு, மகளாக தாயிடம் கொஞ்ச ஆரம்பிக்கும் போதே வீதியில் பட்டாசு வெடிக்கும் சத்தம் காதைப் பிளக்க, “பொம்மி மாப்பிள்ள வீட்ல கிளம்பிட்டாங்க, நீ ரெடியாகி இந்த நகையைப் போட்டுக்கோ… இந்தப் ப்ளூக்கலர் சேலைக்கு, வைரக்கல் செட் இருக்கே, இதைப் போடு.. தலை நீ பின்னிக்கிறியா.. இல்லை நான் பின்னட்டுமா… மல்லிப்பூவா வைடா… அதுதான் அழகு…” என வரிசையாக அடுக்க…
ஒரு புன்னகையுடன் எல்லாவற்றிற்கும் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தாள். “இப்படியே நாங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்..” என்றபடியே நகர, அவர் குரலில் இருந்த ஆதங்கம் கனலிக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும் புன்னகை மறையவில்லை. மேளச்சத்தமும், பட்டாசு சத்தமும் தன் வீட்டு முன்னே கேட்க, அதில் உணர்வுக்கு வந்தவள் தன் வாசலைப் பார்க்க, சின்னம்மாளும், இன்னும் சில வயதான பெண்கள் ஆரத்தி எடுக்க, அவன் பார்வையோ வீட்டைச் சுற்றியது.
அவன் தேடுவதை உணர்ந்து, தன்னைத் தேடுகிறானா, இல்லை வீட்டைப் பார்க்கிறானா…? அவளுக்கும் ஆர்வம் வர, அவனையே விடாமல் பார்க்க, சுற்றியலைந்தவனின் பார்வை அவளைக் கண்டு கொண்டதில் அங்கேயே நிற்க, அவளும் அவனையே பார்த்திருந்தாள். விழிகளிரண்டும் மோதிக்கொள்ள, சில நொடிகளில் தன்னை சுதாரித்தவள், வழக்கம்போல் தன் குறும்புத்தனம் தலைத் தூக்க, ஒரு நக்கல் பார்வையை கொண்டுவந்து கண் சிமிட்டியவள், அழகாய் புன்னகைக்க… இப்போது என்ன நடந்தது என்று புரிவதற்குள் அவள் உள்ளே மறைந்திருக்க… தன்னைச்சுற்றி அனைவரும் அவனைக் கிண்டல் செய்கிறார்கள் என்று புரிந்தும், அதை ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். அவளது செய்கையில் மொத்தமாய் தலைக்குப்புற விழுந்திருந்தான் நிலவன். இனி அவளது செயல் ஒவ்வொன்றிலும் விழப்போவதை அறியாமல்…
2 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
superrrrrrrr
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rajee Karthi says:
Super nice story