காஜலிட்ட விழிகளே 9
2252
0
கிரிஜாவின் கல்யாணம் எப்போதுடா முடியும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்தாள்.
கிரிஜா PH.D படிக்க போகிறேன் என்று சொன்னபோது கார்த்திக்கிடம் புலம்ப முடியாமல் தனது உயிர்த் தோழியிடம் புலம்பித் தீர்த்துவிட்டாள். இரண்டு வருடம் என்று தான் போட்டிருந்த கணக்கு மூன்றாகிவிடும் போல என்று எண்ணி இரண்டு நாட்கள் வீட்டில் ஊமையானாள். என்னடா கண்ணா காய்ச்சலா? என்று பெற்றோர் மாறி மாறி கேட்கும் அளவிற்கு இருந்தது அவளது மௌனம்.
ஆனால் கார்த்திக் கிரிஜா மேற்படிப்புக்கு அனைத்து ஃபார்ம்களையும் வாங்கி ஸ்ருதியின் தந்தையிடம் கொடுத்துவிட்டுச் சென்றபோது ஸ்ருதி அன்டார்டிக் பனி மலைபோல் உருகிவிட்டாள். அவன் துளிகூட வருத்தம் அடையாது செய்த உதவி அவளை உருக வைத்தது.
அதன் பயன் ஞாயிறு அவர்கள் பேசிக்கொண்டபோது கார்த்திக் அவள் கைகளின் மருதானியை தொட்டுத் தொட்டு பார்த்தபோது ஒன்றுமே சொல்லவில்லை. அவளுக்கு மறுப்பு சொல்லத் தோன்றவும் இல்லை.
இரண்டு நிமடங்கள் நீடித்த அந்த தொடுகைக்குப் பிறகு அவள் கைகளை உருவிக்கொண்டாள். கார்த்திக்தான் தன்னை அடக்க மிகுந்த சிரமம் கொண்டான்.
ஆனால் அதையும் காட்டிக்கொள்ளாமல் அவன் சிரித்துக்கொண்டே
“உன்னோட கோட்டைக் காவலன் கொஞ்சம் நேரம் தூங்கினால் நான் கோவிச்சுக்க மாட்டேன் ஸ்ருதி.” என்று கேலிதான் செய்தான்.
அந்த அழகான கோட்டையின் மதில் சுவர்கள் ஸ்ருதியின் உறுதியால் பலமானதாகத்தான் இருந்தது.
ரொம்ப பலமானதாகத்தான் இருந்தது.
ஆனால் கோட்டை என்று ஒன்று இருந்தால் அதில் படையெடுப்பும் ஒன்று இருக்கும் தானே?
நூறு ஆண்டுகள் கட்டிக்காத்த கோட்டைக்குகூட ஆபத்து வரும்போது கட்டப்பட்டு இரண்டே ஆண்டுகள் பூர்த்தியான இவர்கள் கோட்டைக்குள் மதனகாமராஜன் புகுந்திட ஆசை கொண்டால்?
அந்த நண்பர்கள் சந்திப்பிற்கு பிறகு அடுத்த சந்திப்பை இன்டர்கான்டினென்டல் பீச் ரிசார்டில் ஏற்பாடு செய்திருந்தான் கார்த்திக்.
அதே நண்பர்கள் கூட்டம் கேலி பேசி சிரித்துக் கொண்டிருந்தது. கார்த்திக் பிரசாத் இருவரும் அருகருகே உட்கார்ந்திருந்தனர்.
பிரசாத் கார்த்திக்கிடம் பத்து விஷயங்கள் பேசினான் என்றால் கார்த்திக் அவனிடம் பத்து டியூன்கள் பாடிக்காட்டினான்.
முக்கியமாக கமல்ஹாசன் பாடல்களைப் பாடியபோது பிரசாத் அவனிடம் “டேய் கார்த்திக் நீ கமல் குரலுக்கு டப்பிங் கொடுக்கலாம் தெரியுமா? அவர் மூன்றாம் பிறை படத்தில் பேசிய அதே குரல் உன்கிட்ட இப்ப இருக்குடா. ”
“பிரசாத். தாங்ஸ்டா மச்சி. நீ இன்றைக்கு இங்க தங்க போறியா? இல்லை சென்னைக்கு போயிட்டு வருவியா? ”
“தங்கத்தான் போறேன் கார்த்திக். இங்கிருந்து சென்னை சிட்டிக்குள் போக ஒரு மணி நேரம் ஆகிடுது. காரில் வேறு வந்திருக்கேன். டூ வீலர் என்றால்கூட கொஞ்சம் சிக்னலில் புகுந்து போயிடலாம். கார் என்றால் சிக்னலில் காத்துக்கிடந்து நொந்து வெறுத்துதான் போய்ச்சேர முடியும். அதான் இங்கயே தங்கப் போறேன் கார்த்திக்! ”
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் நண்பன் கூட்டத்திலிருந்து கழன்று வந்திருந்த இருவர் கார்த்திக் அருகே வந்தனர்.
“டேய் கார்த்திக் நீ ரூம்ஸ் பார்த்தியா? செமயா இருந்ததுடா. ” என்றான் ஒருவன்
“அவனுக்குத் தெரியாதா? அவன் தான் அவன் கேர்ள்ஃப்ரண்டுடன் இங்கே ஏற்கனவே வந்திருக்கானே? ஏன்டா கார்த்திக் நீ எத்தனை நாள் தங்கின? ”
“ஏன்டா பர்சனல் கேள்வியெல்லாம் கேட்குற? அவனே பாவம். முன்பு வந்தபோது எவ்வளவோ என்ஜாய் செய்திருப்பான். இந்த இரண்டு நாட்களும் கட்டை பிரம்மச்சாரிகளுடன் தங்கப் போறோமே என்று எரிச்சலில் இருப்பான். என்ன கார்த்திக் நான் சொல்றது சரிதானே? ”
“சும்மா இருங்கடா!” என்றான் கார்த்திக் சிரித்துக்கொண்டே…
அந்த அடாவடிகள் சென்றதும் பிரசாத் கார்த்திக்கை பார்த்து புன்முறுவல் செய்தான்..
“என்ன பிரசாத் சத்தமே இல்லாமல் சிரிக்கிற? ”
பிரசாத் தனது புன்முறுவலை மேலும் பெரிது படுத்தினான்..
அவனது வயிற்றில் ஒரு குத்துவிட்டான் கார்த்திக்..
“ஏன் கார்த்திக் அடிக்கிற? நான் சும்மா சிரிக்கத்தானே செய்தேன் மச்சி! ”
“பிரசாத் நீ மனதில் நினைப்பது தப்பு. ”
“நான் என்னடா நினைத்தேன்? நீயும் உன் கேர்ள்ஃப்ரண்டும் இங்கே தங்கி என்ன பண்ணால் எனக்கென்ன? ”
“ அதான் அதைத்தான் நானும் சொன்னேன். நாங்க ஒண்ணும் பண்ணலை. நம்பு. ”
பிரசாத் மீண்டும் சத்தமில்லாமல் புன்முறுவல் செய்தான்..
“வேண்டாம் பிரசாத்.. ஐ ஆம் சீரியஸ்.. ” என்று சொன்னவன் சீரியஸாகத்தானே சொல்லியிருப்பான்? பிறகு ஏன் பிரசாத் சிரிப்பதை நிறுத்தவில்லை?
கார்த்திக் நண்பனின் கொழுப்பை குறைக்கத்தான் அவனது வயிற்றில் இப்போது ஒரு கராத்தே குத்துவிட்டான்.
ஆனால் கொழுப்பு குறையாத நண்பனோ அவனிடம் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை அடி உதை குத்து வாங்கிக் கொண்டேதான் இருந்தான்.
இருவருக்கும் ஒரே அறைதான். “கார்த்திக் உன்கிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும் என்று இருந்தேன். என்று இரவில் ஆரம்பித்தான். ”
“சரியான கம்பளிப்பூச்சிடா நீ! கேளு! ”
“இல்லை கார்த்திக் உன் டை சட்டை ஜீன்ஸ் வாலட் என்று எல்லாமே புளு கலரில் இருக்கே.. உன் ஆளுக்கு புளு கலர் என்றால் ரொம்பப் பிடிக்குமோ? ஒரே
ப்ளு கலர் கிஃப்ட்டாக உனக்கு வாங்கிதள்ளிட்டாளா? ”
கார்த்திக் முறைக்கவும் “சாரி சாரி.. வாங்கி தள்ளிட்டாங்களா? ” என்று கேள்வியை மாற்றிக்கொண்டான்.
கார்த்திக் பதில் சொல்லாமல் தனது பெட்டியை எடுத்து அலமாரியில் வைக்கவும் சொன்னான், “இப்ப பதில் சொல்லப் பிடிக்கலைன்னா என்ன? ஏன் அதுக்குபோய் முறைக்கிற? பரவாயில்லை விட்டிடு! ”
பிரசாத்தைப் பார்த்து லேசாக சிரித்தவன் சத்தம் குறைவாக வைத்துக்கொண்டு தொலைக்காட்சி திரையில் கவனம் கொண்டான்.
கார்த்திக் அருகே உட்கார்ந்துகொண்டு தானும் திரையைப் பார்ப்பதுபோல பேரு பண்ணிக்கொண்டு உட்கார்ந்த பிரசாத் அவனிம் சொன்னான் , “இப்ப சொல்லாட்டி என்ன? பிறகு பதில் சொல்லு. ”
காலையிலிருந்து நண்பர்கள் சிலர் அவனையும் ஸ்ருதியையும் சேர்த்து திரித்துப்பேசி அரைச்சான் தடிமனான கயிற்றையே திரித்துவிட்டிருந்தார்கள்.
மீனாட்சி அம்மன் தேரைக்கூட இழுத்துவிடலாம். அவ்வளவு கனமாக கயிற்றை திரித்து விட்டிருந்தார்கள். அவர்கள் ஒரு பக்கம் கொட்டம் அடித்தால் பிரசாத் ஒரு பக்கம் உயிரை வாங்கினான்.
“ஷாப்பிங் போனால் ஃபீனிக்ஸ் போவியா? சிட்டிசென்டர் போவியா? காஞ்சிபுரம் நமக்கு பக்கம்தானே.. அங்க போய்
பச்சையப்பாஸ் கடையில் பர்சேஸ் பண்ணிடு. இல்லை பாபு ஷா போயிடு. கையில் அப்பதான் காசு மிச்சம் ஆகும். சென்னையில் விலை ரொம்ப ஜாஸ்தி கார்த்திக். ” என்று தீவிரமாக அறிவுரை தந்தான் அவனது நண்பர்களின் அறிவுஜீவி ஒருவன்.
இவ்வளவு தொல்லைகளை சகித்துக்கொண்டவன் பிரசாத்தையும் சமாளிக்க முடியாமல் திண்டாடினான்.
“டேய் பிரசாத் இப்போது உனக்கு என்ன தெரியணும்? காலையிலிருந்து ஒரே தொண தொண என்று..
“உன் ஆள் ஃபோட்டோ வச்சிருக்கியா? அதை என்னிடம் காட்டிவிடு அப்புறம் நான் ஒண்ணுமே கேட்கமாட்டேன். வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்தியதும் அமைதியாகிடுவேன். ”
தனது செல்பேசியை வைதுகொண்டே எடுத்தவன் அதிலிருந்த ஸ்ருதியின் புகைப்படத்தை இரண்டே நொடிகள் காட்டிவிட்டு “பொண்ணு பேர் ஸ்ருதி. என்கூட ட்ரூப்பில் பாடுவா. என்னைவிட நல்லாவே பாடுவா. போதுமாடா ரெஸ்யூம்?”
“வாழ்க பல்லாண்டு! ஒரே ஒரு கேள்வி! நீயும் ஸ்ருதியும் இங்க வந்தபோது எந்த சூட்டில் தங்கினீங்க? பாத் டப் இருந்ததா? நம்ம ரூமில் இருக்கே.. இதோ இருக்கே இந்த கெட்டிலில் உனக்கு காபி போட்டுக் கொடுத்தாளா? அந்த ஃப்ரிஜில் பியர்கூட இருக்குப்பா. அதை எடுத்து நீ குடிச்சபோது அவள் ஒன்றுமே சொல்லவில்லையா? ஓ! நீயும் என்னைப்போல் பியர்கூட குடிக்கமாட்டியோ? மறந்திட்டேன்.. அப்புறம் அந்த பாத் டப்பில் நீ மட்டும் தனியாக குளித்தியா? இல்லை.. ”
கார்த்திக் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அமைதியாக குளியலறை சென்று கதவைத் தாழிட்டான்.
“டேய் நான் கேட்டுக்கிட்டேயிருக்கேன்.. ஓ இப்ப உனக்கு அவசரமாக அதுக்கு போகணுமா? சரி சரி நான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வந்திடு! ”
கார்த்திக் இரண்டு நிமிடம் கழித்துதான் வந்தான்.
இப்போதும் அவன் ஒன்றும் பேசவில்லை. தளும்பத் தளும்ப இருந்த ஷாம்பூ பாட்டிலை பிரசாத் தலையில் அப்படியே கொட்டினான்.
“டேய் என்னடா பண்ற? ”
“உன் புருவத்தில் கண் இமையில் மீசையில் இருக்கும் முடியில் நீ ஷாம்பூ போடவே மாட்டியா? ஒரே நாற்றம் எடுக்குது. அதான் நான் அதுக்கு ஷாம்பூ போடுறேன்!”
என்ன? கண் இமைக்கு ஷாம்பா? என்று பிரசாத் குரல் மட்டும் தான் கொடுக்க முடிந்தது. அவனது எதிர்ப்பால் ஒன்றும் நடக்கவில்லை.
ஷாம்பூ குளியல் எடுத்த பிரசாத் கண்கள் எரிச்சல் தாங்கமாட்டாது சிறிது நிமிடங்களில் தூங்கப்போனது.
Comments are closed here.