Share Us On
[Sassy_Social_Share]காதல் தீவிரவாதி
1525
3
காதல் தீவிரவாதி
2019 ஜனவரி 8
செவ்வாய் கிழமை
நேரம் காலை 7 மணி
பரந்து விரிந்து இருக்கும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தண்டனை கைதிகள் ஏதோ ஒரு ஆரவாரத்தில் துள்ளி குத்திக்கொண்டு இருக்கிறார்கள். இன்றோ அவர்களின் உறவுகளை காணும் நாள். நேரமும் நகர்கிறது. கைதிகளின் உறவுகள் வருகையும் தொடங்குகிறது. ஆனால் உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்துல் அறையில் மட்டும் அமைதியும் அவனிடம் சோகமும் நிலவுகிறது. யார் இந்த அப்துல் என்று யோசிக்கிறீர்களா? இவனே நமது கதையின் காதல் தீவிரவாதி. அவனது பெயரையும், அவனது மதத்தையும் வைத்து இவன் என்ன தவறு செய்து உள்ளே வந்திருப்பான் என்று நான் சொல்லுவதற்கு முன்பே நீங்களே யோசித்து இருப்பீர்களே? நீங்கள் சரியாக யோசித்து இருந்தால் இந்த கதை உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். வாருங்கள் இந்த தீவிரவாதி பற்றி பார்ப்போம்..!!
நமது கதையின் நாயகனின் முழு பெயர் அப்துல் ரஹ்மான். அவன் மாநிறமாகவும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பான். பார்ப்பதற்கு கவர்ந்திழுக்கும் முகத் தோற்றமும், பழகுவதற்கு மிகவும் கனிவானவன். அப்துலுக்கு நண்பர்கள் கூட்டம் மிகவும் அதிகம். குறிப்பாக மத வேறுபாடுகளின்றி பழகக்கூடியவன். அனைவரிடமும் எளிதாக பழகும் குணம் கொண்டு இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நட்பு வட்டம் அவனுக்கு. அவனின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி. அப்துல் தனது பெற்றோருக்கு ஒரே பையன். அவனின் தந்தை சிறுவயதிலே இயற்கை எய்திவிட்டார். தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்தான். அப்துல் அவனது பள்ளி படிப்புகளை கல்லிடைக்குறிச்சியில் தான் படித்து முடித்தான். தனது கல்லூரி படிப்பிற்காக அம்பாசமுத்திரம் சென்று படித்தான். சரி கதையின் நாயகனை பற்றி தெரிந்து கொண்டோம். இப்போது அவனது சிறை வாழ்க்கை பற்றி அவனது சோகத்தை பற்றியும் தெரிந்து கொள்வோம். அப்துல் அவன் வெளியில் இருந்த அதே குணத்தோடு தான் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களிடமும் பழக கூடியவன். அதனால் அப்துலுக்கு சிறையில் தனி செல்வாக்கு உண்டு. அப்துல் இந்த ஆண்டோடு சிறைக்கு வந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டது. அதுவே அவனது சோகத்துக்கு காரணம். ஓரளவு கதையின் நாயகனை பற்றி தெரிந்து கொண்டீர்கள் வாருங்கள் கதைக்குள் போவோம்.
நேரம் காலை 10 மணியை எட்டுகிறது. சிறைக்காவலர் கணேசன் அவர்கள் அப்துல் சிறையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். சிறையிலோ அப்துல் கவலை தோய்ந்த முகத்துடன் கட்டிடமே இடிந்து விழும் அளவிற்கு மேல்தளத்தை பார்த்தவாறு சோகத்தில் அமர்ந்திருக்கிறான். கணேசன் அவர்கள் அப்துலின் சிறை அருகில் வந்து தனது கையில் வைத்திருக்கும் லத்தியால் சிறைக் கம்பிகளை தட்டுகிறார். அந்த சத்தம் கூட காதில் கேளாது அவன் அமர்ந்திருக்கிறான். பிறகு கணேசன் அவர்கள் சத்தமாக டேய் அப்துல் உன்னை காண உனது உறவினர்கள் வந்து இருக்கிறார்கள் எழுந்து வா! என்று கூப்பிட சோகத்தில் இருந்து அப்துல் விழித்துக் கொள்கிறான். மறு குரலில் இதோ வருகிறேன் கணேஷ் அண்ணன் என்று அங்கிருந்து புறப்பட்டு பார்வையாளர்கள் இடத்தை நோக்கி விரைகிறான். அவனைக் காண்பதற்காக சுந்தரமும் மீனாட்சியும் வந்திருக்கிறார்கள். அவர்களைக் கண்டவுடன் அப்துல் முகத்தில் சிறிது மகிழ்ச்சி ததும்புகிறது. இப்படி இருக்கிறீர்கள் மாமா, அத்தை என்று அவர்களிடம் நலம் விசாரிக்கிறான்.
நல்லா இருக்கோம் மாப்பிள்ளை. நீங்க எப்படி இருக்கீங்க? நானும் நலமாக இருக்கிறேன். ஆயிஷாவும், அமீரும் வரவில்லையா? ஆயிஷாவுக்கு உடல்நிலை சரியில்லை. அமீர் பள்ளிக்கூடம் சென்று விட்டான். அடுத்த முறை அவர்கள் கண்டிப்பாக வருவார்கள் மாப்பிள்ளை என்று மீனாட்சி கூறி முடிக்கிறார்.
அப்துல் கவலையுடன் ஆயிஷாவிற்கு என்னாயிற்று அத்தை என்று வினவுகிறான். பயப்படும் மாதிரி ஒன்னும் இல்லை மாப்பிள்ளை. சாதாரண ஜுரம் தான் என்று மீனாட்சி கூற அப்துல், நீங்கள் வீட்டுக்கு சென்றவுடன் அவளை மருத்துவரிடம் கொண்டுபோய் காட்டுங்கள் என்கிறான். சுந்தரம் அவர்கள் மாப்பிள்ளை நீங்கள் வெளியே வருவதற்கான எல்லா வேலைகளும் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது மாப்பிள்ளை நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் என்று கூறவே, மறுமொழியில் அப்துல் என்னை படைத்தவனே முழுமையாக நம்புகிறேன் அவனே என்னை இந்த பிரச்சினையில் இருந்து வெளிப்படுத்துவான் என்று கூறிவிட்டு தனது அறையை நோக்கி சென்றான். அன்றைய பொழுது விடிய, மறுநாள் காலையில் புதிய சிறைக்கைதி அப்துலின் அறையில் அடைக்கப்படுகிறான். அதனைக் கண்ட அவனுக்கு மகிழ்ச்சியில் முகம் மலர்கிறது. சிறைக்காவலர் சிறைக் கதவுகளை அடைத்துவிட்டு கிளம்பியவுடன் அப்துல் வந்த கைதியிடம் உங்கள் பெயர் என்ன? என்ன செய்து விட்டு உள்ளே வந்தீர்கள் என்று வினவினான். அதற்கு வந்தவனோ எனது பெயர் சதீஷ்குமார். ஒரு பெண்ணை காதலித்தேன். எங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் கோபத்தில் அவளைக் கொன்றுவிட்டேன். இதைக் கேட்டவுடன் அப்துலின் முகம் கோபத்தில் சிவந்தது. அதைக்கண்ட சதீஷ் தெரியாம பண்ணிட்டேன் பாஸ். இப்ப தான் அதோட வலி தெரியாது என்று கூறி முடித்தான்.
உங்கள் பெயர் என்ன? என்ன செய்து விட்டு உள்ளே வந்தீர்கள் என்று அப்துலை நோக்கி வினவினான். எனது பெயர் அப்துல். நானும் ஒரு பெண்ணை காதலித்ததால் தான் இங்கு சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதைக் கேட்ட சதீஷின் மனம் அதை ஏற்க மறுத்தது. என்ன பாஸ் சொல்லுறீங்க? லவ் பண்ணதுக்கு இந்த உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கீங்களா? உண்மைய சொல்லுங்க பாஸ் என்று ஆவலுடன் அப்துல் நோக்கி கேள்விக் கனைகளைத் தொடுத்தான். அதற்கு அப்துல் வெடிமருந்துகள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு இங்கே அடைக்கப்பட்டு இருக்கிறேன் என்று கூறினான். அதற்கு சதீஷ் அதுதானே பார்த்தேன் முகத்த பாத்தா காதலிக்கிற மாதிரியா இருக்கு என்று அப்துலை கலாய்க்க தொடங்கினான். அப்துல் மறுமுறையும் காதலித்ததற்காக தான் இங்கே அடைக்கப்பட்டு இருக்கிறேன் என்று கூறினான். சதீஷ் அதோடு நிற்காமல் பாஸ் உங்க கதையை கேட்க வேண்டும் என்று ஆவலா இருக்கு. உங்கள் காதல் கதையை சொல்லுங்கள் என்று கூறி முடித்தான். அப்துல் அவனது காதல் கதை சதீஷிடம் கூறத் தொடங்கினான்.
அவள் பெயர் அனு. மிகவும் அழகானவள். பார்ப்பதற்கு மிகக் எளிமையாக இருப்பாள். அவளை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். எனது தெருவிற்கு அடுத்த தெருவில் தான் அவளது வீடும் இருக்கிறது. நானும் அவளும் ஒரே கல்லூரியில் தான் படித்தோம். கல்லிடைக்குறிச்சியிலிருந்து அம்பையில் இருக்கும் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் போயிட்டு வருவோம். அவளை பல நாட்கள் தூரத்திலிருந்தே பார்த்து ரசித்திருக்கிறேன். என்னமோ ஒரு பயம் அவளிடம் நேரில் பேசுவதற்கு, சிறுவயதில் பேசி இருக்கிறேன். ஆனால் இந்தப் பருவ வயதில் பேசுவதற்கு மனம் அஞ்சுகிறது. இந்தப் பேருந்து பயணம் ஒரு வருடம் ஓடியது.
நாங்கள் இரண்டாம் ஆண்டிற்கு சென்றோம். அன்று கல்லூரியின் முதல் நாள். அனுவே என்னிடம் வந்து பேசினாள். அந்த நாள் என் நினைவுகளில் இருந்து இன்றுவரை நீங்கவில்லை. இருவரும் நீண்டநேரம் உரையாடினோம். நேரம் போனதே தெரியவில்லை. அன்று தான் தெரிந்தது எனக்கு. நான் மட்டுமல்ல அவளும் என் மீது காதல் கொண்டு இருக்கிறாள் என்று. பிறகு நாங்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் காதலில் முழ்கி தவித்து காலங்கள் கடந்து கொண்டிருந்தது. எங்களது கல்லூரி படிப்பும் முடிந்தது. நாங்களும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றிய யோசனையில் இறங்கினோம். நமது காதலை பெற்றோர்கள் கண்டிப்பாக ஏற்கமாட்டார்கள். என்ன செய்யலாம் அனு? என்று அவளிடம் வினவினேன். அதற்கு உனக்காவது உன் அம்மா மட்டும்தான். அவர்களை நீ இப்படியும் சமாதானப்படுத்தி விடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனது அம்மா அப்பாவை நினைத்தால்தான் எனக்கு பயமாக இருக்கிறது. இருந்தாலும் ஒன்று சொல்கிறேன் அப்துல். நீ தான் எனது உலகம். நீ இல்லாமல் இந்த உலகத்தில் அனு இல்லை என்று கூறி முடித்தாள். பிறகு இருவரும் தங்கள் வீட்டிற்கு பிரிந்து சென்றோம். எங்கள் இருவரின் காதலும் எங்கள் ஊருக்கும் எங்களை சுற்றி உள்ள நண்பர்களுக்கு தெரியாமல் பாதுகாத்து வந்து இருந்தோம்.
அனுவிற்கு என் மீது கொண்ட காதல். என் மதத்தின் மீதும் பற்று ஏற்பட்டு என் மதம் சார்ந்த புத்தகங்களை எனக்கே தெரியாமல் வாசித்துக் கொண்டிருந்திருக்கிறாள். ஒரு நாள் என் நண்பன் கார்த்திக்கை சந்தித்தேன். அவனிடம் எல்லா விஷயங்களும் பகிரக்கூடிய அளவுக்கான நட்புதான். இருந்தாலும் அனுவின் காதலை மட்டும் அவனிடமிருந்து மறைத்து வந்தேன். அன்று அவனிடம் அனுவிற்கு எனக்கும் உண்டான காதலை உடைத்துவிட்டேன். அதற்கு அவனும் சந்தோசம் மாப்பிள. உங்க காதலுக்கு உதவிய செய்ய நான் இருக்கேன் டா! நீ கவலப்படாதடா! என்று கூறிவிட்டு கிளம்பினான். நானும் மிகவும் சந்தோசமாக இருந்தேன் உதவுவதற்கு நண்பன் இருக்கிறான் என்று. ஆனால் மறுநாளே அதன் எதிர்வினை என்னவென்று எனக்கு தெரியவந்தது. நான் எவ்வளவு பெரிய தவறு செய்தேன் என்று அன்றுதான் உணர்ந்தேன். நான் யாரை உற்ற நண்பன் என்று நம்பினேனோ? அவனே எனக்கும் என் காதலுக்கும் குழி பறித்து விட்டான். கார்த்திக்கும், அனுவும் அக்கம் பக்கத்து வீடுதான். அவர்கள் இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள். கார்த்திக்கும் அனுவை ஒருதலையாக காதலித்திருக்கிறான்.
நான் நேற்று அவனிடம் கூறிய விஷயத்தை அவனின் காதலுக்கு சாதகமாக்க முயன்றிருக்கிறான். அதுவரை எங்களுக்குத் தெரியாத ஜாதி என்ற மொழியை அவன் ஆயுதமாக்கி எங்கள் காதலை அனுவின் பெற்றோர்களிடம் கூறிவிட்டான். இதனால் அனுவின் வீட்டில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்தது. அதுவரை என்னிடம் உற்ற நண்பர்களாக பழகியவர்கள் எல்லாம் கார்த்திக்கின் பேச்சை கேட்டு என்னை 10 பேர் கொண்ட குழுவாக வந்து தாக்கினார்கள். அனுவும் வீட்டில் சிறைப் பிடிக்கப்பட்டாள். நானும் என்னை தாக்கியவர்களுக்கு பதில் தாக்குதல் கொடுக்க வேண்டும் என்று மூன்று மாதங்கள் கடுமையான உடற்பயிற்சிகளும், தற்காப்பு கலையான கராத்தே பயிற்சிகளும் மேற்கொண்டேன். என்னை தாக்கியவர்களை பதில் தாக்குதல் செய்தேன். அனுவின் தந்தை எங்கள் காதல் விஷயத்தை அவரின் ஜாதி சங்கத் தலைவரிடம் கூறிவிட்டார். அதைக்கேட்ட ஜாதி சங்க தலைவர் உடனடியாக அவர் சங்க கூட்டத்தை கூட்டி எங்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆலோசனைகள் நடந்தது. இதனடிப்படையில் அனுவின் தந்தை கோபத்தில் ஒரு பாரிய விஷயத்தை என்மீது தொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஒரு நாள் காலை சரியாக எட்டு மணி இருக்கும். நான் எனது வீட்டின் கொல்லைப்புறத்தில் நின்று கொண்டிருந்தேன். எனது வீட்டு கதவை யாரோ பயங்கரமாக தட்டும் சத்தம் கொல்லை வரை எட்டியது. வீட்டிலிருந்த எனது தாய் கதவைத் திறந்தாள். அவள் திறந்த உடன் கதவை வேகமாக தள்ளிக்கொண்டு ஒரு பெரும் காவல் படையை வீட்டின் உள்ளே வந்தது. சப்தமாக அப்துல் எங்கே என்று வினவினார்கள். நானும் வேகமாக வீட்டின் உள்ளே ஓடி வந்தேன். என்னைக் கண்டவுடன் இன்ஸ்பெக்டர் நீதான் அப்துலா? என்று வினவினார். ஆம்! என்ன பிரச்சனை சார்? என்று கேட்டேன். அதற்கு அவர் உனது வீட்டில் வெடிமருந்துகள் இருப்பதாக உளவுத்துறையில் இருந்து செய்தி வந்திருக்கு என்று கூறிவிட்டு. கான்ஸ்டபிளை பார்த்து இவனது வீட்டை முழுவதுமாக சோதனை செய்யுங்கள் என்று கூறினார். வந்த காவலர் படை எனது வீட்டை பிரித்து மேய்ந்தார்கள் பிறகு கொல்லைப்புறத்தில் சோதனை செய்யும்போது பழைய பொருட்கள் வைத்திருக்கும் ஒரு இடத்தில் ஒரு பேக் தென்பட்டது. அதை திறந்து பார்த்தால் வெடி மருந்துகள். என்னை தரதரவென்று இழுத்து போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள். பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து என்னை கூண்டில் ஏற்றினார்கள். நீதிமன்றத்தில் எனது வழக்கு விசாரணைக்கு வந்தது. அன்று அந்த நீதிமன்றமும் அங்கு வந்தவர்கள் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு நடந்தேறியது. எனது எதிர் கூண்டில் அனு வந்து நின்றாள். எனது மீது சாட்டப்பட்ட குற்றங்கள் அனைத்தும் பொய் என்றும் அப்துல் நிரபராதி என்றும் அவனது வீட்டில் வெடிமருந்தை வைத்தது தனது தந்தை என்றும் சாட்சி கூறினாள். வழக்கை விசாரித்த நீதிபதி அந்தக் குற்றத்தில் இருந்து என்னை விடுவித்து விடுதலை செய்தார். சுந்தரத்திற்கு நீதிபதி எச்சரிக்கையும் அறிவுரையும் கூறி அனுப்பினார்.
நானும் அனுவும் திருமணம் செய்து கொண்டோம். அன்று அனு ஆயிஷாவாக மாறி இருந்தாள். மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினோம். திருமணத்திற்கு பிறகும் நான் அவள் மீது கொண்ட காதல் சற்றும் மாறாமல் அவளை அன்பாகவும் பாசமாகவும் பார்த்துக் கொண்டேன். சில மாதங்களுக்குப் பிறகு அவள் கருவுற்று அதன்மூலம் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் ஆயிஷாவின் தந்தை சுந்தரமும், அவளின் தாயும் எங்களது வீடு தேடி வந்தார்கள். பழைய விஷயங்களை எல்லாம் மறந்து, பிறந்த பேரனை கண்டு இன்புற்றார்கள். காலமும் சுழன்று ஓடியது.
2006 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் வந்தது. அதில் நான் சுயேச்சையாக போட்டியிட்டேன். எனக்கு ஊரில் எப்போதும் ஒரு நல்ல பெயர் உண்டு. அந்த நம்பிக்கையில் இறைவனின் உதவியும் கிடைக்கும் என்று தைரியமாக தேர்தல் பிரச்சாரத்தை களம் கண்டேன். எனக்கு உறுதுணையாக எனது மாமனார் சுந்தரமும் பிரச்சாரம் செய்தார். எனது மாமனார் ஊரில் செல்வாக்கு மிக்கவர். பொருளாதார அடிப்படையிலும் நல்ல வலிமையான நிலைமையில் இருந்தார். அதனால் அவரின் சொல்லுக்கு பலரும் கட்டுப்படுவார்கள். தேர்தலும் முடிந்தது. வாக்குப்பதிவும் எண்ணப்பட்டது. 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றேன்.
எனது ஊரிலை ஒரு அலுவலகத்தையும் வாடகைக்கு பிடித்தேன். எனது வெற்றி அந்த சாதி குழுவினருக்கு மிகவும் வெறுப்பை ஏற்படுத்தியது. என்னை தீர்த்து கட்டுவதற்காக பலமுனைகளில் யோசித்து வந்தார்கள். நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எனது காதல் மனைவியுடன், குழந்தையுடனும் சந்தோசமாக வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்தோம். காலங்கள் கனிந்து ஓடியது. அந்த சாதி குழுவினர் மீண்டும் ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டார்கள். அதுதான் எனக்கும் இன்னொரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது என்று ஒரு பெண்ணை அழைத்து வந்து எனது அலுவலகத்துக்கு முன் அவளைப் நிறுத்தி பொதுமக்கள் முன் சாட்சி கூற வைத்தார்கள். அவ்வளவுதான் என் கதை என்று நினைத்தேன் உதவ யாரும் இல்லை. எப்படி இது பொய் என்று நிரூபிப்பது என்று அறியாமல் தவித்தேன். அந்தப் பெண் சென்றவுடன் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் என்னை திட்டி தீர்த்தார்கள். அதன்பிறகு அந்த சாதி குழுவினர் மூலம் எனது பதவியும் பறிபோனது. எனது நண்பர்கள் அந்தப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து ஊருக்கு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.
அதுபோன்றே அந்தப் பொண்ணை விசாரித்து அவள் ஒரு விபச்சாரி என்று அன்று காசுக்காக தான் பொய் சாட்சி கூறினால் என்றும் அவளை ஊர்மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இந்தப் பிரச்சினையில் ஆயிஷா மிகவும் மனமுடைந்து இருந்தாள். எனது பெற்றோர்களே திருந்திவிட்டார்கள்! இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று புலம்பிக் கொண்டே இருந்தாள். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஜாதி குழுவினர் ஆயிஷாவின் தந்தையின் செல்வாக்கு, தொழில் அனைத்தையும் முடக்கினார்கள். அவரும் வேறுவழியின்றி தவித்துக் கொண்டிருந்தார். இப்படியே பயத்திலே எங்கள் காலம் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் அந்த ஜாதி குழுவினர் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். இந்த முறை என்னை பெருசாக ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கார்த்திக் அப்துல போட்டுத் தள்ளி விடலாம் என்று கூறியிருக்கிறான். ஆனால் அவர்கள் இந்த முறை கூட்டம் கூடியதற்கு அந்த ஜாதி குழுவினரின் பெரும் தலைவர்கள் எல்லாம் உடந்தையாக வருகிறார்கள் என்றும் இந்த முறை என்னை வெளியே வர முடியாத அளவிற்கு திட்டத்தை தீட்டி இருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு பிறகு நான் எனது அலுவலகத்தில் அமர்ந்து அலுவலக பணி செய்து கொண்டிருந்தேன். தேசிய புலனாய்வு படையை சேர்ந்தவர்கள் அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள். அன்று எனது வீட்டில் செய்த அதே பாவனைகளை போன்ற இங்கும் செய்தார்கள். அதேபோன்று ஒரு பேக். மீண்டும் வெடிமருந்துகள். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். நீதிமன்றத்தில் நானும், ஆயிஷாயும், அவளின் பெற்றோரும், எனது தாய் என அனைவரும் இது பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கெஞ்சினோம். ஆனால் நீதியோ இந்த முறை பொய்யின் பக்கம்தான் நின்றது. நீதிமன்றத்தில் எனக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பானது. 2009 இல் இருந்து இதுவரை பத்து வருடங்கள் காதலுக்காக இந்த சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஆயிஷாவோ என்னை காதலித்ததற்காக எனது வீட்டில் தனிமை வாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். தினமும் இறைவனிடம் இறைஞ்சி எனது விடுதலைக்காக பிரார்த்தனைகளை தொடுத்து கொண்டிருக்கிறாள் என்று கூறி கண்ணீர் தழும்ப தனது சோகக் கதை சொல்லி முடித்தான். இதைக் கேட்ட சதீஷ் தழும்பி தழும்பி அழத்தொடங்கினான். நண்பா காதலியை கொன்ற நான் எங்கே? காதலிக்காக தவறை செய்யாமல் சிறை தண்டனை அறிவிக்கும் நீ எங்கே? என்ன மன்னிச்சிடு நண்பா. உன் தோற்றத்தைப் பார்த்த உடன் உன்னை தவறாக விளங்கிக் கொண்டேன் என்று கூற, பதிலுக்கு அப்துலும் உன்னை தவறாக நினைக்கவில்லை நண்பா. அந்த ஜாதி குழுவினர் என்னை பழிவாங்குவதற்கு எனது பெயரையும், எனது மதத்தையும் வைத்துதான் நாடகம் ஆடினார்கள். அந்த நாடகத்தை இந்த உலகமும் உண்மை என்று நம்பியது.
அவர்கள் பார்வையில் நான் தீவிரவாதி..!! உண்மையில் நான் அனு என்ற ஆயிஷாவின் காதலின் தீவிரவாதி…!!!
சாதி என்ற உணர்வை
மனதில் சுமந்து வாழும் மனிதர்களே..!!
சமத்துவத்தை மனதில் போற்ற கற்று கொள்ள வேண்டும்…!!
சாதி இல்லா சமூகம் தான்..!! சமூகத்திற்கும் தேவை..!!
சாதி உண்டு என்ற எண்ணத்தை மாற்றுவோம்…!!
சாதி இல்லை என்ற எண்ணத்தை மக்கள் மனதில் வளர்போம்..!!
சாதி அற்ற மனிதராய் வாழ்வோம்..!!
இப்படிக்கு.
உங்கள் சாதிய வெறியால் தீவிரவாதியான
அப்துல் ரஹ்மான்.
3 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Muhammad Nasick says:
Nandrigal Pala
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Puthiyavan says:
Thanks for post my article for your website.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Samri Thi says:
Wow!