Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

காதலும் இயற்கையும்

 

காதலும் இயற்கையும்..!!

 

காதலிலும் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்த ஒரு காதல் கதை.

 

நமது காதல் கதை பற்றி பார்ப்பதற்கு முன் நமது கதையின் காதலர்கள் வசிக்கும் மாநகரம் பற்றி சில தகவல்களை தெரிந்து கொண்டு கதையின் உள்ளே போகலாம். நமது கதையின் காதலர்களின் மாநகரம் ஈரோடு தான். இந்த மாநகரம் மஞ்சள் மாநகரம் என்றும் நெசவு மாநகரம் என்றும் கைத்தறி மாநகரம் என்றும் பல பெயர்களை கொண்ட ஊர் இது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பங்கு நமது ஈரோட்டிலிருந்து தான் கிடைக்கிறது. இம்மாவட்டத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள வனக் பகுதிகளில் ஈரோடு வனப்பகுதியை மிகப் பெரியது. வனப்பகுதி நமது கதையின் ஒரு முக்கியமாக அங்கம் வகிக்கும் ஒரு இடம். சரி வாருங்கள் கதையின் நாயகர்களை பற்றி பார்க்கலாம்.

கதையின் நாயகன் பெயர் வருண். பார்ப்பதற்கு எளிமையானவன். பழகுவதற்கு மிகவும் வெள்ளந்தி ஆனவன். அனைவரிடம் சிரித்துப் பழகும் குணம் கொண்டவன். வருண் தனது பெற்றோர்களுக்கு இரண்டாவது பையன். முதல் பையன் விவேக். ரெண்டு பேரும் சரியான வாலு பசங்க. அவங்க இருக்கிற இடம் எப்பவுமே கலகலப்பா தான் இருக்கும். அதிலும் வருண் சேட்டைக்கு சொந்தக்காரன்.

ஆண்டு 2010 நமது வருண் பத்தாவது பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். விவேக் முதலாம் ஆண்டு B.C.A கம்ப்யூட்டர் சயின்ஸ் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான்.

வருணுக்கு கணினியில் மீது அளப்பரிய காதல். அதனால் 2010 ஆம் ஆண்டு தனது பத்தாவது வகுப்பில் வெற்றி பெற்ற பிறகு தனது பதினோராவது வகுப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ் இருக்கும் குரூப்பாக தேர்ந்தெடுக்கிறான். பள்ளிப் படிப்பும் தொடங்கி நல்லவிதமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு மாதத்திற்கு பிறகு நித்தியா அதே பள்ளியில் வந்து சேருகிறாள். அட கதைக்குள்ள யாரோ புதுசா வந்து சேர்ந்து இருக்கானு பாக்குறீங்களா? வேற யாரு இவங்கதான் நம்ம கதையின் ஹீரோயின். ஹீரோ பத்தி தெரிஞ்சுக்கிட்டோம். கொஞ்சம் நம்ம ஹீரோயினையும் பத்தி தெரிஞ்சுக்குவோம். நித்தியா ஒரு அழகு தேவதை. பார்ப்பதற்கு மட்டுமல்ல பழகுவதற்கும். நல்ல இந்திய வெள்ளை நிறம். அமைதியான குணம் கொண்டவள். தனது பெற்றோருக்கு ஒரே பாசக்கார பொண்ணு. நித்தியாவின் சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். இந்த ஊர் ஈரோட்டிலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தனது தந்தையின் தொழிலுக்காக ஈரோடில் வந்து செட்டில் ஆகிறார்கள். நித்தியா தனது 11ஆவது வகுப்பை வருண் படிக்கும் அதே பள்ளியில் தொடங்குகிறாள். வருண் அன்று அவளை முதல்முறையாக பள்ளி வளாகத்தில் வைத்து பார்க்கிறான். வருணுக்கு நித்தியாவை பார்த்தவுடன் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்குது. ஏண்டா? நம்ம நித்தியா 96 பட ஜானு மாதிரியால இருந்தா! வேற பறக்காம இருக்கும்.! வருணுக்கு கணினியின் மேல் இருந்த காதல் நித்தியா என்ற கன்னியின் மேல் பட தொடங்கிவிட்டது. மதிய உணவு இடைவேளையும் முடிகிறது. பள்ளி வகுப்பும் ஆரம்பமாகிறது. முதல் வகுப்பு வருணுக்கு பிடிச்ச கம்ப்யூட்டர் கிளாஸ். நித்தியாவின் பெற்றோர்கள் அவள் அந்த பள்ளியில் சேர்வதற்கான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அவளை வகுப்பறைக்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். எந்த வகுப்பறை என்று யோசிக்கிறீர்களா? வேற எங்கே நம்ம வருண் பிடிக்கும் அதே கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பறை தான். கம்ப்யூட்டர் டீச்சர்.திவ்யா நித்தியாவை வரவேற்று வகுப்புறையில் அமர செய்கிறார். தனது வகுப்பறையில் நித்தியா கண்ட வருணின் மனது வானின் எல்லை தொடுகிறது. வகுப்பறையில் வருண் செய்யும் குட்டி குட்டி சேட்டைகள் நித்தியாவின் கவனத்தை வருண் பக்கம் இழுக்கிறது. சில தினங்களுக்கு பிறகு வருணும், நித்தியாவும் நல்ல நண்பர்களாக மாறுகிறார்கள். பிறகு ஆண்டுகளும் ஓடுகிறது. இவர்களின் நட்பும் வளர்கிறது. பள்ளிப்படிப்பு முடிகிறது. கல்லூரி படிப்பும் தொடங்குகிறது. நித்தியாவின் தந்தை நித்தியாவை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் கல்லூரி படிப்பிற்காக சேர்த்துவிடுகிறார். அவள் அத்தை வீட்டில் தங்கிப் படிப்பதற்கான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஊர் திரும்புகிறார். வருண் கல்லூரி படிப்பிற்காக ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்கிறான். வருணுக்கும் நித்தியாவிற்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு முதல் பிரிவு.

இந்த பிரிவு நித்தியா மீது வைத்திருந்த காதலை அவனுக்கு வெளிப்படுத்துகிறது. நித்தியாவும் வருண் மீது கொண்டது நட்பல்ல அது காதல் என்று உணர்கிறாள். நித்தியா தனது முதல் வார விடுமுறையில் பெற்றோரைக் காண ஈரோடு புறப்படுகிறாள். பேருந்தும் ஈரோடு நோக்கிப் புறப்படுகிறது. நித்தியாவின் நினைவுகள் வருணனை நோக்கி நகர்கிறது. பேருந்து ஈரோட்டை வந்தடைந்தவுடன் நித்தியாவின் கால்கள் வருணை தேடி ஓடுகிறது. வருணை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்துகிறாள். வருணுகோ ஒரே நேரத்தில் இரட்டிப்பு சந்தோஷம். ஒன்று நித்தியாவை கண்டது மற்றொன்று தான் வெளிப்படுத்த வேண்டிய காதலை முதலில் அவளை வெளிப்படுத்தியது. இருவரும் ஆரத்தழுவி தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். நாட்களும் ஓடியது. ஆண்டுகளும் ஓடியது. இவர்களின் காதலும் வளர்ந்து வளர்ந்து ஆலமரமானது.

ஆண்டு 2015 வருணுக்கு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான்.  வருணின் அண்ணன் விவேக்கும் இதே ஊரில் நல்ல வேலையில் இருப்பதால் தங்களது பெற்றோர்களை பெங்களூர் அழைத்துவந்து குடியமர்த்தினார்கள். அதே நேரத்தில் நித்தியாவுக்கும் அவள் படித்த கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைக்க அவளும் அந்த வேலைக்காக புறப்பட்டாள்.

 

இரண்டாவது பிரிவு: பிறகு வார விடுமுறைகளில் இருவரும் ஈரோட்டில் காதலராக வலம் வந்தார்கள். அந்த ஆண்டின் இறுதியில் வருணுக்கு துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

 

மூன்றாவது முறை காதலியை பிரிகின்ற வருணுக்கு இந்த முறை தொலைதூரப் பயணம். துபாயின் வாழ்க்கை நல்லவிதமாக அவனுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. வருட விடுமுறையில் நாட்டுக்கு திரும்பினாலும் பெங்களூருக்கு வந்தவுடனே அடுத்த கணமே நித்தியாவை காணப் புறப்பட்டு ஓடிவிடுவான்.

 

2017 ஆம் ஆண்டு இருவரும் நல்ல வேலையில் இருப்பதால் தங்கள் காதலை பெற்றோரிடம் கூறி அனுமதி வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் இவர்களின் காதல் அவர்களின் வீட்டுக்கதவை தட்டித் திறக்க வைத்தது. முதலில் பெற்றோர்கள் மறுத்தாலும் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தைக் கருதி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள்.

 

மார்ச் மாதம் 31 ஆம் தேதி 2017 பெரியோர்களால் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பள்ளி கூடத்தில் தொடங்கிய அவர்களின் காதல் திருமணம் வரை தொட இருப்பதால் வருணும், நித்தியாவும் சந்தோஷ கடலில் நீந்தினார்கள். தாங்கள் காதலிக்கும் நேரத்தில் சென்ற இடத்திற்கு எல்லாம் சென்று தங்களது நினைவுகளை மீட்டுக் கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் அவர்களின் வீட்டில் திருமணத்திற்கான நல்ல நாள் பார்த்து திருமண தேதியை முடிவு செய்தார்கள்.

 

நான்காவது பிரிவு: திருமணம் தேதி முடிவான சந்தோசத்தில் மீண்டும் துபாய் நோக்கி பயணமானான். நாட்கள் ஓடியது. திருமண தேதியும் நெருங்கியது. வருண் தனது திருமண விடுமுறைக்காக அலுவலகத்தை அணுகும்போது வெறும் 22 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது. இதனால் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே இந்தியா வருவதற்கான பயணத்தை திட்டமிட்டு இருந்தான். அதன்படி நவம்பர் 22 ஆம் தேதி இந்தியா திரும்பினான்.
திருமணத்திற்கு இன்னும் இரண்டு தினங்களை இருந்தாலும் தனது திருமணத்திற்காக நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்தான். நித்தியாவும் தனது தோழிகள், உறவினர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்து கொண்டு வந்தாள்.

நவம்பர் 24 இருவரின் பெற்றோர்களும், அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் சூழ திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இருவரும் திருமண வாழ்க்கை அடியெடுத்து வைத்தார்கள். முகநூலிலும் திருமண புகைப்படங்களை பறக்க விட்டார்கள். வருண் எப்போதும் எங்கு சென்றாலும் அந்த நிகழ்வுகளை முகநூலில் பதிவிறக்கம் செய்வதை மறப்பதே இல்லை. திருமணம் முடிந்து இரு வாரங்கள் ஓடியது. தனது காதல் மனைவியுடன் இன்ப சுற்றுலா எங்கு போலாம் என்று ஆலோசனையில் இறங்கினான். இருவரின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் மூணார், கொச்சி மற்றும் ஆலப்புழா போன்ற பகுதிகளுக்கு போகலாம் என்று தீர்மானித்தார். துபாயிலிருந்து குறுகிய விடுமுறையில் வந்ததால் நேரங்கள் அனைத்தையும் நித்தியாவுடன் கழித்தான். இன்ப சுற்றுலா தொடங்கியதிலிருந்து முடியும் வரை அனைத்து நிகழ்வுகளும் முகநூலில் புகைப்படங்களாக பதிவிறக்கம் ஆகியது. வருணின் விடுமுறையும் முடியப்போகிறது. மீண்டும் துபாய் நோக்கி பயணம் ஆகவேண்டும். பயணத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் நித்தியா தயார் செய்தாள். சென்னை விமான நிலையம் வரை வந்து வருணை வழியும் அனுப்பினாள்.

ஐந்தாவது பிரிவு: இந்த முறை மனைவி நிந்தியாவின் பிரிவை நினைத்து சோகத்துடன் பயணமான வருண் தொடர்ந்து 98 நாட்கள் பணியில் இருக்கிறான். வருண் இந்த நாட்களில் மனைவியை துபாய் அழைத்து வருவதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்திருந்தான். தனது காதல் மனைவியை துபாயில் கூட்டி சுற்றுவதற்காக ஒரு புதிய காரையும் வாங்கியிருந்தான். இருவரும் தங்குவதற்கு ஒரு ஸ்டூடியோ பிளாட்டை வாடகைக்கு எடுத்திருந்தான். அவளை மார்ச் 28-ஆம் தேதி துபாய்க்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தான். அதற்கான முன் பணங்களையெல்லாம் கொடுத்துவிட்டு தனது நூறாவது திருமண நாளை மனைவியுடன் கொண்டாட மார்ச் 1 2018 இந்தியா திரும்பினான். வருணுக்கும், நித்தியாவிற்கும் விதி நிர்ணயித்த வாழ்க்கை இதுவரையிலும் சந்தோசமாக கடந்தாலும், இனிவரும் காலங்களில் விதி ஏற்படுத்தும் மாற்றங்களை தெரியாமல் மார்ச் 3 ஆம் தேதி தங்களது 100வது திருமண நாளை சந்தோசமாக கொண்டாடுகிறார்கள். இருவரும் கோயிலுக்கு சென்று விட்டு தங்களது மகிழ்ச்சி தருணங்களை முகநூலிலும் பகிர்கிறார்கள். வருணும், நித்தியாவும் தங்கள் 100 வது திருமண நாளைக் கொண்டாட வித்தியாசமான ஒரு இடத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுக்கிறார்கள். தங்களுடன் பள்ளியில் படித்த நண்பர்களை சேர்த்துக் கொண்டு மார்ச் 9 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள கொழுக்கு மலைக்கு பயணமாகிறார்கள். கதையின் தொடக்கத்தில் ஈரோட்டை பற்றி அறிந்தது போல் இந்த ஊரைப் பற்றி சில விஷயங்களை அறிந்துகொண்டு நமது கதையின் இறுதிக் கட்டங்களை தெரிந்து கொள்வோம்.

கொழுக்கு மலை என்பது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் எல்லையுடன், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் தாலுக்காவில் உள்ள ஒரு மலை வாசத்தலம் ஆகும். அந்த மலைப்பகுதிக்கு அருகில் தான் குரங்கணி கிராமம் மற்றும் வனப்பகுதிகளும் காணப்படுகிறது. உலகின் மிக உயர்ந்த தேயிலை இங்குதான் வளர்க்கப்படுகிறது. மலையேற்றத்திற்கு பெயர் போன பகுதி. சரி வாங்க கதையைத் தொடர்வோம்.

மார்ச் 10 ஆம் தேதி வருண், நித்தியா மற்றும் அவர்களின் பள்ளிக்கூட நண்பர்களான செந்தில், கண்ணன் அவர்களுடன் இணைந்து ட்ரெக்கிங் செல்வதாக ஒரு செல்பி புகைப்படத்தை முகநூலில் பதிவிடுகிறான். அந்தப் புகைப்படத்தை தமிழ்நாடே திரும்பி பார்க்கப் போகிறது என்ற விதியின் விளையாட்டு அன்று அவனுக்கு அறியவில்லை.

ட்ரெக்கிங் என்பது மலையேறுதல். வருணும் நித்யாவும் தங்களது 100 வது திருமண நாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டுமென்று இந்த மலையேறுதல் தான் தீர்மானித்தார்கள். கொழுக்கு மலை அடிவாரத்திலிருந்து அதன் சிகரத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 7130 அடி இருக்கும்.  இந்த ட்ரெக்கிங் செல்பவர்கள் அதன் உயரத்தை அடைந்த உடன் அங்கு கிடைக்கும் விலை உயர்ந்த தேநீரை பருகுவதை இவர்களின் நோக்கம். வருணின் குழு ஈரோட்டிலிருந்து ஒரு டிரவல்ஸ் நிறுவனத்தின் மூலம் வந்தான். இதேபோன்று சென்னையில் இருந்தும் ஒரு குழு வந்தது. இரு குழுவும் இணைந்து மலையேறுவதற்கு தயாரானார்கள். மதிய உணவுகளை எல்லாம் எடுத்துக்கொண்டு 36 மலையேறிகளும் 3 வழிகாட்டியும் பயணத்தைத் தொடங்கினார்கள். வருணும் நித்தியாவும் பல கனவுகளுடன் மலையேற தொடங்கினார்கள். அழகிய இயற்கை காட்சிகள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன் காட்சிகளை ரசித்துக் கொண்டு குழு மலை ஏறி கொண்டே இருக்கிறது. மதிய உணவிற்காக ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு முகாம் இடுகிறார்கள். தங்களுடன் கொண்டு வந்த மதிய உணவுகளை உண்ண தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் யாருமே எதிர்பார்த்திராத அந்த நிகழ்வு நடந்தது. இங்கு கொண்டுவந்த உணவுகள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு சிரிப்புடனும் சந்தோஷத்துடன் உணவுகளை உட்கொண்டிருக்கிறார்கள். அங்கு காட்டுத்தீ ஏற்பட்டு மளமளவென்று பரவிக்கொண்டிருக்கிறது. பரவிய தீ முகாமிட்டு இருப்பவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. காற்றின் வேகத்தில் காட்டுத்தீ வேகமாக முகாமை நெருங்கியது. காட்டுத்தீயை கண்டவுடன் வருணும், நித்தியாவும் செய்வதறியாமல் திகைத்தனர். அங்கு இருந்தவர்களின் கூச்சல் சத்தமும், அழுகைச் சத்தமும் காட்டுத் தீயின் புகை சூழ இருந்தது. காட்டுத்தீ அவர்களை நாலாபுறமும் சுற்றிவளைத்தது. வருண் நித்தியாவை கூட்டிக்கொண்டு எப்படியாவது அந்த தீயிலிருந்து தப்பித்து ஓட வேண்டும் என்று முற்பட்டுக் கொண்டிருந்தான். வருணின் நண்பன் கண்ணன் அந்தக் காட்டுத் தீயில் இருந்து தப்பித்து முதலில் வெளியேறினான். மற்றவர்கள் செய்வதறியாமல் மலைப்பகுதியில் ஓடி குழியிலும், பள்ளத்தாக்கிலும் தவறி விழுந்தனர்.  கண்ணன் ஓடிவந்து திரும்பிப் பார்க்கும்போது தன்னுடன் யாரும் வரவில்லை என்று தெரிகிறது. தன்னுடன் வந்த நண்பர்களை காப்பாற்ற வேண்டுமென்று மீண்டும் முகாமிட்ட பகுதியை நோக்கி ஓடினான். அந்த நேரத்தில் காட்டுத் தீ பரவுவதை கண்ட குரங்கணி கிராமத்து மக்களும், வன அதிகாரிகளும் தீயை அணைக்க முற்பட்டார்கள். கண்ணன் வருணையும், நித்தியாவையும் சந்தித்து தப்பிக்க முயற்சிக்கும் வேலையில் கண்ணனின் உடம்பில் தீப்பற்றியது. அவனை தொடர்ந்து வருணின் உடம்பிலும், நிந்தியாவின் உடம்பிலும் பற்றியது. நண்பர்களை காப்பாற்ற வந்த கண்ணனை தீ பஸ்பமாக்கியது. வருணின் உடம்பில் பற்றி தீ அவனது உடைகளை முழுவதையும் எரித்து உடலையும் எரித்துக்கொண்டிருந்தது. அவனது காதல் மனைவி கண் முன்னே எரிந்து கொண்டிருப்பதை கண்டு யாராவது காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூச்சலிட்டான். குரங்கணி கிராம மக்கள் வந்து சுற்றியிருந்த தீயை அணைத்து நித்தியாவை மீட்டனர். வருணை சுற்றியிருந்த தீயை அணைத்தனர். வருண் சுற்றியிருந்தவர்களை பார்த்து தண்ணீர்! தண்ணீர்! என்று கெஞ்சினான். அங்கு வந்த ஒருவர் அவனின் அந்த இறுதித் தருணத்தை வீடியோவாக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதைக் கண்டு தமிழக மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்தனர். அந்த மக்கள் உதவுவதற்குள் அவனின் இறுதி மூச்சாக அதுவே அமைந்தது. அந்த கிராம மக்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். தமிழகத்தின் அனைத்து தொலைக்காட்சிகளும் வருண் இட்ட கடைசி முகநூல் பதிவை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட வருணின் பெற்றோர்களும், நித்தியாவின் பெற்றோர்களும் தேனியை நோக்கி விரைந்தன. தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். தனது காதல் மனைவியுடன் பல கனவுகளுடன் சென்ற வருணின் எரிந்த உடலை கண்டு அவனின் பெற்றோர்கள் ரத்த கண்ணீர் வடித்தனர். நித்தியாவின் பெற்றோர்கள் நித்தியாவை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அடுத்த நாள் காலையில் கண் விழித்த நித்தியாவின் கண்கள் வருணை தேடிக் கொண்டு இருந்தது. அவனின் மரணம் கூட தெரியாமல் அவளின் வாய் வருணின் பெயரை உச்சிரித்து கொண்டு இருந்தது. அவளின் உடலில் 70 சதவிகிதம் தீக்காயங்கள் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உயிருக்கு போராடிய அவள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இந்த காதல் ஜோடியின் இறுதி பிரிவாக அமைந்தது. இந்த கோர விபத்தில் வருணுடன் சென்றவர்களின் மேலும் 18 பேரின் உயிரையும் காவு வாங்கியது.

காதலிலும் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்த இந்த காதல் ஜோடி இறப்பிலும் ஒன்று சேர்ந்தது அவர்களின் விதியின் முடிவே..!!

 

எழுத்துக்கள்

புதியவன்




Comments are closed here.

You cannot copy content of this page