காஜலிட்ட விழிகளே 12
2463
0
ஜுலை 24 இரண்டாயிரத்தி பதினெட்டாம் ஆண்டு…
*****************************
மறுநாள் காலையில் தருண் தனது கைகளில் கால்களில் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து என்று கொசுக்கடிகளை எண்ணியபோது அமைதியக அதை வேடிக்கை பார்த்தான் கார்த்திக்.
தருண் அவனிடம் “டேய் மச்சி? ”
“ ம்? என்ன? ”
“ நேற்று கரண்ட் கட் ஆச்சா? ”
“ ஆமாம்டா மச்சி! ”
“ எப்போடா கரண்ட் போச்சு? ”
“ பதினோரு மணி முப்பது நிமிஷம் இருக்கும்போது அணைந்திருக்கும் என்று நினைக்கிறேன். ” என்று கார்த்திக் சொன்னபோது பேந்தப் பேந்த விழித்தான் தருண்.
பிறகு அணைத்தவனுக்குத்தானே மணி தெரியும் என்பதை தாமதமாக உணர்ந்தவன் கைகலப்பில் இறங்கினான்.
இருவரும் கட்டிப்பிடித்து உருண்டு அந்த அறையில் தரையை சுத்தப்படுத்திய பிறகு குளித்துவிட்டு டேவிட் வீட்டு விஷேஷத்திற்கு கிளம்பினர்.
*****************************
அன்றைய தினம் ஜுலை 24 இரண்டாயிரத்தி பதினெட்டு.
******************************
அன்றுதான் டேவிட் தனது புதுமனை புகும் விழா வைத்திருந்தான்.
ஸ்ருதி அவளது அன்னையுடன் வந்திருந்தாள். கிரிஜாவும் பிரசாத்தும் வந்திருந்தனர்.
திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் நண்பர்களைச் சந்தித்ததால் இருக்கும் அனைத்து கேலிப்பேச்சுகளும் பேசப்பட்டன.
“கிரிஜா உன் கன்னம் ஆப்பிள் போல சிவந்திருக்குடி. அண்ணா ஆப்பிள் என்று நினைத்து கடித்து வைத்திட்டாறா? பார்த்துடி எசக்கு பிசக்காக காயம் ஆனால் டாக்டர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.” என்று ஒருத்தி சொன்னபோது அனைவரும் பக்கத்தில் இருப்பவர்கள் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு சத்தமாகச் சிரித்தனர்.
ஸ்ருதி தனது ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு வந்தபோது மொட்டை மாடியில் நின்றுகொண்டிருந்த கார்த்திக் “டேவிட் நான் மேலே மொட்டை மாடியில் நிற்குறேன்.” என்றான் சத்தமாக.
அவனது குரலைக்கேட்டு சட்டென உயரே பார்த்த ஸ்ருதி வண்டியில் தன் அன்னையும் இருப்பதை தாமதமாக உணர்ந்தவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
கள்ளி சிக்க மாட்டிக்கிறாளே. அவுங்க அம்மாகிட்டக் கூட விஷயத்தை சொல்ல மாட்டிக்கிறாளே! இன்னைக்கு இரண்டுல்ல ஒண்ணு கேட்டுடணும். அப்பா தானே ஊருக்கு போயிருக்கார். அம்மா இங்கதானே இருக்காங்க. யார் சம்பந்தம் பேசினால் என்ன?
அனைவரும் மண்அடுப்பில் காய்ச்சிய பாலைக் குடித்தனர். டேவிட் தனது சர்ச்சின் போதகர் மூலம் சிறு பிராத்தனைக் கூட்டம் நடத்தினான். சிறிது நேரத்தில் பிராத்தனைக் கூட்டமும் முடிந்தது. அதன் பிறகு நண்பர்கள் வீட்டைச் சுற்றிப் பார்த்தனர்.
வீட்டில் மூன்று கீபோர்ட்கள் இருந்தது கார்த்திக்கிற்குப் பிடித்தது என்றால்.. இருபது ஜானகி அம்மாவின் பாடல் டி.வி.டிக்கள் இருந்தது ஸ்ருதிக்கு மிகவும் பிடித்தது. மாடிப்பகுதிக்குச் சென்று அந்த அறையை அனைவரும் பார்த்தபோது.. அனைவரும் பிரம்மித்தனர். அவர்களின் வியப்பைக் கண்டு டேவிட்டே விளக்கம் தந்தான்.
“கீழே அம்மா சமைத்துக்கொண்டு வேலை ஆட்களிடம் கத்தி வேலைவாங்கிக்கொண்டு இருப்பார்கள். எனக்கு ரிகர்சல் பண்ண ஒரு தனி ரூம் தேவைப்படும். அதான் இந்த மாடிப்போர்ஷனை நான் எடுத்துக்கொண்டேன். இங்க இருக்கும் அணைத்து இன்ஸ்ட்ரூமென்டும் நான் பார்த்துப் பார்த்து வாங்கியது. ”
“இது என்ன அது என்ன? ” என்று ஒவ்வொரு பொருளையும் காட்டி டேவிட்டிடம் ஸ்ருதி கேள்வி கேட்டாள்.
டேவிட்டும் அவளிடம் பொறுமையாக பதில் சொன்னான்.
அறையில் ஒரு அழகிய வீணை இருந்தது. கார்த்திக் அவளிடம் முன்பு அடிக்கடி சொல்வது அவளுக்கு ஞாபகம் வந்தது ஸ்ருதிக்கு.
முன்பொருநாள் அவள் அன்பு இல்லத்தில் தனியாக இருந்தபோது வீணையின் நரம்புகளை தொட்டுப் பார்த்தபோது கார்த்திக் அவளைச் சீண்டினான்..
“நரம்புகளைத் தொட்டால் ராகம் வரும் தெரியுமா? ”
“ம் தெரியுமே. ” என்றவளிடம்
“காதின் மடல்களில் ஒரு நரம்பு உண்டு ஸ்ருதி.. அப்புறம் கை மணிக்கட்டில் ஒன்று உள்ளது.. அப்புறம் கழுத்து வளைவில்கூட ஒன்று.. ஆனால் எதைத் தொட்டாலும் அழகிய ராகம் வரும் தெரியுமா ஸ்ருதி? உனக்கு நான் சொல்லித் தரவா? நான்தானே சொல்லித் தர முடியும்! ” என்று கேட்டான்.
“ஆமாம் ஆமாம் சார். எல்லாம் இருக்கும் இடத்தில் இருக்கட்டும். அந்த ராகத்தை நீரே தெரிந்து வைத்துக் கொள்ளும் எனக்கு வேண்டாம்! ” என்று கத்தரித்த சம்பவம் அவளுக்கு ஞாபகம் வந்தது.
சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவானேன்? என்று இப்போது டேவிட் வீட்டிலும் கார்த்திக் வீணையைக் காட்டி அவளிடம் ரகசிமாய் சிரிக்க..
அவள் வீணையைக் காண்பித்து “கார்த்திக் சார் உங்களுக்கு இந்த நரம்புகளால் இசை உருவான விதம் தெரியுமா? ” என்று கார்த்திக்கை சீண்ட ஆரம்பித்தாள்.
“ம்.. என் அப்பா வீணை தோன்றிய கதையை சொல்லியிருக்கார். ”
“என் அப்பாதான் இந்த நரம்புக் கதையை உங்க அப்பாகிட்டச் சொன்னதே! ”
திரும்பத் திரும்ப சீண்டுறாளே?ஆனால் இப்பவும் அப்பா புராணமா? என்று நினைத்தவன்.. நம்ம பொண்ணும் ஸ்ருதியைப் போல் அப்பா பொண்ணாகத்தான் வருவா என்று மனதில் சமாதானம் சொல்லிக்கொண்டு அவளிடம் பதில் சொன்னான்
“ஒத்துக்கிறேன்.” ஆனால் பற்களைக் கடித்தவன் கோபம் டேவிட் கண்ணில் படவில்லை.
டேவிட் ஸ்ருதியிடம் கேட்டான் “அதென்ன நரம்புக்கதை? எனக்குச் சொல்லு ஸ்ருதி. ”
“ஓ அதுவா? ஒரு வீரன் தனது அம்பினால் அம்பு ஏய்கிறான். அம்பு பாய்ந்து சென்றபிறகு அம்பின் நரம்பு சிலநொடிகள் அதிர்ந்ததோடு விநோத இசையும் வந்ததாம். அப்படித்தான் நரம்பினால் உருவான இசை கருவிகள் பிறந்ததாம்.. மரத்தின் வேர்களினால் மிருகங்களின் குடலினால் உருவான் நரம்புகள் தான் இசைக்கருவிகளில் பொருத்தப் பட்டதாம். அம்பின் வளைவுதான் ஒலியின் மாறுதலுக்கு காரணம் என்றும் பின்னால் கண்டுபிடித்ததுதான். ”
“ஓ அப்படின்னா.. ” என்று இன்னும் ஒரு சந்தேகம் கேட்க நினைத்த Nடவிட் ஸ்ருதியின் அம்மா அழைத்த குரலில் தனது கேள்வியை நிறுத்தினான்.
ஸ்ருதியும் அவனிடம் ஒரு இசைக்கருவியை காண்பித்து இது என்ன? என்று கேட்டு அவனருகில் வந்தாள்.
மீண்டும் ஸ்ருதியின் அம்மா அவளை அழைத்தார். “இதோ வந்திட்டேன்.” என்று அவள் தனது தாவனியின் பாவாடையை மொத்தமாக சுருட்டிப் பிடித்துக்கொண்டு டேவிட் “நான் கீழே என்ன என்று கேட்டிட்டு வர்றேன்.” என்று கூறியவாரே இறங்கியபோது கார்த்திக் மனது பித்துப்பிடித்து பித்தனானது.
இரண்டு மணிநேரத்தில் விழா முடிந்து அனைவரும் திரும்பிக்கொண்டிருந்தனர். டேவிட் அன்னையும் ஸ்ருதியின் அன்னையும் நெருங்கிய தோழிகள் என்பதால் ஸ்ருதியின் அன்னை ஒத்தாசை என்ற பெயரில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
கிரிஜாவும் பிரசாத்தும் பேசுவதற்கு விஷயமா வேண்டும்? அவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். இவர்களிடம் ஸ்ருதி ஒட்டாமல் போர் அடித்துப்போய் உட்கார்ந்திருந்தாள்.
“ஸ்ருதி டேவிட் உன்னை மேலே கூப்பிட்டான். மொட்டை மாடியில் ஒரு ரூம் இருக்கு. அதில் நிறைய ஆர்க்கெஸ்ட்ரா ஜாமான்கள் எல்லாம் போட்டு வச்சிருக்கான் டேவிட். அங்கதான் வரச்சொன்னான். நீ என்னமோ டவுட் கேட்கணும் என்று சொன்னியாமே? அதான் உன்னை உடனே வரச்சொன்னான். நீ உடனே போயிடு. அப்புறம் என்னைதான் கடிப்பான். நான் கிளம்புறேன். எனக்கு நேரம் ஆச்சு கீபோர்டை சர்வீஸ் விட்டிருக்கேன் இன்று போய் வாங்கலைன்னா கார்த்திக் என்னை தொலைச்சுக் கட்டிடுவான். நேராக அங்கத்தான் போறேன். பை! ” என்று கூறியபடி அவளருகில் வந்த வினோத் நகர்ந்து விட்டான்.
“வினோத் இப்பவா வரச்சொன்னார்? ”
“ஆமாம் ஸ்ருதி. உடனே… பை”
இரண்டு படி ஏறும்போதே கிரிஜா ஸ்ருதியை உரக்க கத்தி அழைத்தாள்.
“ஸ்ருதி எங்க போற? நானும் அவரும் பைக்கில் போறோம். நீ அம்மாகூட வந்திடுவியா? ”
“டேவிட் கூப்பிட்டான் கிரிஜா அக்கா. என்ன என்று கேட்டிட்டு வந்திடுறேன். அம்மாவையும் நானே கூட்டிட்டு வந்திடுறேன் கிரிஜா. அம்மாகிட்ட சொல்லிடு. அவுங்க உன்கூட நானும் கிளம்பிட்டேன் என்று நினைச்சுக்கப்போறாங்க.”
“சரி சரி. சொல்லிட்டே போறேன். வர்றேன் ஸ்ருதி. ”
“ம். பார்த்துப்போ. ” என்று இரண்டாம் படிக்கட்டில் இருந்தபடியே கத்தினாள்.
அடுத்த இரண்டு படிக்கட்டுகள் ஏறும்போது கால் தடுக்கியது. அட இது ஒன்று. தாவணியை நானே ஒழுங்கா கட்டியிருப்பேன். இந்த கிரிஜா கட்டிவிடுறேன் என்று சொன்னதும் சரின்னு சொன்னது தப்பு. தாவணியை தழையத் தழைய கட்டிவிட்டிருக்கா எப்படி தடுக்குது பார்.
கைகளில் பாவாடையை சுருட்டிப் பிடித்துக் கொண்டு மீதியிருந்த படிகளைக் கடந்தாள்.
அந்த அறைக்குள் உள்ளே நுழைந்தபோது எந்த சந்தேகமும் அவளுக்குத் தோன்றவில்லை.
“டேவிட் இல்லையா?” என்று கேட்டாள் கார்த்திக்கிடம்.
“இப்பதான் போனான் ஸ்ருதி. ”
“இல்லை என்னை டேவிட் கூப்பிட்டதாக வினாத் சொன்னான். இங்க தனியாக என்ன பண்ற கார்த்திக் வா கீழே போகலாம். ”
“சரி வா ஸ்ருதி கீழே போகலாம். ”
இருவரும் வெளியே செல்ல அடிகளை எடுத்துவைத்தனர். கார்த்திக் முன்னே செல்ல ஸ்ருதி பின்னே நடந்து வந்தாள்.
ஆனால் முன்னே சென்ற கார்த்திக் கதவுகளை மூடித் தாழ் போட்டபோது அவனது பின்னே வந்த ஸ்ருதி ஒன்றும் புரியாமல் விழிபிதுங்கி நின்றாள்.
கிரிஜாவிடம் அவள் தாயிடம் அவள் அவமானப்பட வேண்டும் என்று இருக்கும்போது அதை மாற்ற அவளால் இயலுமா? இயலாத காரியங்களைத் தான் விதிவசம் என்று நாம் சொல்வோமா?
ஒரு மணி நேரம் கழித்து கார்த்திக்கும் ஸ்ருதியும் அந்த அறையை விட்டு வெளியேறினர். கதவைத் திறந்துவிட்ட கிரிஜா அதிர்ச்சியில் உரைந்தாள்.
வியர்த்து வடிந்த முகமாய் பயந்த விழியால் ஸ்ருதி அனைவரையும் பார்த்தாள். தன் முன்னே நின்றிருந்த கிரிஜாவைப் பார்த்ததும் அந்த அறையின் வாசலில் சிலையாகவே நின்றுவிட்டாள்.
ஸ்ருதி பேசும் முன் அவளது அன்னை அவளை கன்னத்தில் அறைந்தார்.
கார்த்திக் அவரிடம் “ஆன்ட்டி தப்பு என்மேல்தான்.. நான் தான் அவளை இங்க வரச்சொன்னேன்.. ” என்று பேசி முடிக்கும் முன்..
கிரிஜா, ஸ்ருதி, அவர்கள் அன்னை மூவரும் படியிறங்கி நகர்ந்துவிட்டனர்.
டேவிட்டின் அம்மா மட்டும் தான் அங்கே கார்த்திக் அருகில் நின்றுகொண்டிருந்தார்.
கார்த்திக் தனது வீட்டிற்கு கிளம்பும் முன் நேரே ஸ்ருதியின் வீட்டிற்குத்தான் சென்றான்.
பிரசாத் தான் கதவைத்திறந்தான். ஞாயிறு விடுமுறை என்பதால் கிரிஜாவும் பிரசாத்தும் ஸ்ருதியின் வீட்டில்தான் இருந்தனர்.
“கார்த்திக் நாளை பேசலாமே. இங்க கொஞ்சம் நிலைமை இப்போ சரியில்லை.. ஸ்ருதியுடன் நீ இப்போ பேசுறது.. ”
“பிரசாத் நான் கிரிஜாகிட்ட பேசணும். ஸ்ருதி என்கிட்ட ஒரு வார்த்தைகூட பேசமாட்டா. நானும் அவளை வற்புறுத்த மாட்டேன். அவள் கோபம் இரண்டு நாளில் குறைந்த பிறகு அவளுடன் பேசிக்கிறேன். கிரிஜாவைக் கூப்பிடு! ”
“இரு.. கார்த்திக் சாரிடா.. ஃபோனில் சின்ன பிரச்சனை அதான் ஸ்ருதி பேசுறது என் பக்கத்தில் இருந்த கிரிஜாவுக்கு நல்லாவே கேட்டிடுச்சு.. மச்சான் ரொம்ப சாரிடா.. ”
“கிரிஜாவைக் கூப்பிடு பிரசாத். ”
“இரு கூப்பிடுறேன். ”
கிரிஜா வந்ததும். அவள் அழுதிருப்பது தெரிந்தது.
அமைதியாக சுவரில் சாய்ந்து நின்றவள் கார்த்திக்கை நிமர்ந்துகூட பார்க்கவில்லை.
கார்த்திக் தான் ஆரம்பித்தான் , “கிரிஜா.. நான் சும்மா விளையாட்டுக்கு செய்யப்போய்.. அது ரொம்ப பெரிய தப்பாக முடிஞ்சிடுச்சு.. நான் என் அப்பாவை நாளைக்கு அழைச்சிட்டு பெண் கேட்டு வரப்போறேன். அதைச் சொல்லத்தான் வந்தேன். ”
கார்த்திக் முடிக்கும் முன் “இல்லை.. கார்த்திக் சார். ”
“என்ன இல்லை கிரிஜா? ” என்றபோது மட்டும் அவனது குரல் ஓங்கியது.
“அப்பா வந்த பிறகுதான்.. ” என்று கிரிஜா சொன்ன பதிலில் பிறகு தணிந்தான்.
அக்காவும் தங்கையும் ஒரே பல்லவிதான் பாடுவேன் என்று அடம்பிடிக்கும்போது நாம என்ன செய்யமுடியும் என்று குழம்பினான். வேறு வழியில்லாமல் அவனும் அதே பல்லவியையே பாடினான்.
“சரி கிரிஜா. உன் அப்பா வந்தபிறகு என் வீட்டிலிருந்து வந்து பெண் கேட்கச்சொல்றேன். ”
அதற்குள் ஸ்ருதியின் அன்னை வந்து “கார்த்திக் ப்ளீஸ் இன்றைக்கு நடந்த பிரச்சனை அவள் அப்பா காதுக்கு போகாமல் என்ன செய்யணுமோ அதைச் செய்திடுங்க! டேவிட் மூலமாகவோ. அவுங்க அப்பா மூலமாகவோ அவர் காதுக்கு போயிடுச்சுன்னா.. அவர் .. ”
“ஆன்ட்டி ஐ அம் வெரி சாரி. இன்றைக்கு தப்பு எல்லாம் என்மேல்தான். ஸ்ருதி மேல் தப்பே இல்லை. ”
ஸ்ருதி அம்மா தனது கண்ணீரை மறைக்க உள்ளே சென்றுவிட்டார்.
கார்த்திக்கிற்கு கூச்சம் பிடுங்கித்திண்றது.
கிரிஜாவும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
பிரசாத் மட்டும் கார்த்திக்குடன் இருந்தான். பிறகு அவனை தானே காரில் கொண்டுபோய்விடுவதாகச் சொன்னான். “நானே ஓட்டிடுவேன் பிரசாத்.” என்று கார்த்திக் மறுத்தபோது “இதே நினைப்பில் கார் ஓட்டுவ.. வேண்டாம். எல்லாம் சரியாகிடும். நான் தருண் வரும் வரை உன் வீட்டில் வெயிட் பண்றேன். அவன் வந்தபிறகு அவன் என்னை டிராப் பண்ணிடுவான். ” என்று உறுதியாகச் சொல்லிவிட்டான்.
போகும் வழியில் கார்த்திக்கிடம் எந்த விதமான குறுக்கு விசாரணையும் செய்யவில்லை.
எந்த நேரத்தில் கிண்டல் செய்யலாம்.. எந்த நேரத்தில் கிண்டிக் கிளறலாம் என்று தெரிந்து பழகும் நட்பு ஆண்களுக்கு மட்டுமே கிடைத்துவிடுகிறது.
அதனை உணர்ந்த நண்பன் வாய்திறந்து பேசாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான்.
வீடு வந்து சேர்ந்ததும் கார்த்திக் குளியலறை புகுந்து கொண்டான். காலையில் நடந்த சம்பவங்களை அவன் அங்கேதான் மீண்டும் மனதில் ஓட்டிப்பார்த்தான். அவள் கைகளைப் பிடித்து இழுத்தது மட்டுமே முதலில் ஞாபகத்தில் வந்தது. அடுத்த காட்சி நகர்ந்தபோது அவனால் மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை. அதற்கடுத்து ஸ்ருதி அழுதது கண்முன்னே வந்து போனது. காற்றிலே தெரியும் அவளது உருவத்தின் கண்ணீரை துடைத்துவிட்டான். அதற்கடுத்த காட்சியாக அவன் மனதில் கண்டது.. கிரிஜா கதவைத் திறந்து விட்டதுதான்.
அதன்பிறகு நடந்தவற்றை அவன் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை.
பாத்டப்பில் குளிக்கத்தொடங்கினான்.
கார்த்திக் குளித்துவிட்டு வந்தபோது தருணும் ஹாலில் அமர்ந்து கொண்டிருந்தான். பிரசாத் டி.வி பார்த்துக் கொண்டிருக்க தருண் அவன் பக்கத்தில் உட்கார்ந்து தனது கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான். கார்த்திக்கை பார்த்ததும் எப்போதும் வம்பிழுக்கும் தருண் அன்று அமைதியாக இருந்தபோதே அவனுக்கும் விஷயம் தெரிந்துவிட்டது என்பதை புரிந்துகொண்டான். நண்பர்கள் மூவரும் ஒரு ஹோட்டலுக்கு சென்று உணவை முடித்துக்கொண்டனர்.
பிரசாத்திற்கு கிரிஜாவிடமிருந்து அழைப்பு வந்து கொண்டேயிருந்தது. கார்த்திக் அவனிடம் “சரி பிரசாத் நீ கிளம்பு. முடிந்தால் நைட் ஸ்ருதியிடம் நான் பேச ஹெல்ப் பண்ணு! ” என்றான்.
“என்னால் முடிந்தால் நிச்சயம் கார்த்திக்.” என்று கூறிவிட்டு கிளம்பினான்.
இரவு மணி பன்னிரெண்டானது. பிரசாத் கிளம்பி நான்கு மணி நேரம் ஆகிவிட்டது இனிமேல் ஸ்ருதி கூப்பிட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த கார்த்திக் விளக்கை அணைத்துவிட்டு படுக்க நினைத்தபோதுதான் ஒரு மெசெஜ் வந்தது.
“ஐ ஹேட் யூ. ”
“ஐ லவ் யூ. ” என்றான் பதிலுக்கு.
“உன்கூட நான் பேச மாட்டேன் கார்த்திக். பிரசாத் மாமா பேசச் சொன்னார். ஆனால் நான் மாட்டேன். ” என்ற குறுந்தகவல் வந்தது அவள் சொன்ன பதிலுக்க பதிலாக.
“சரி பேச வேண்டாம்.. ஆனால் இன்று நடந்த விஷயத்தில் நான் மட்டும்தான் தப்பு செய்ததா? என்மேல் மட்டும்தான் தப்பு இருக்குதா? ”
பதில் குறுந்தகவலில் வரவில்லை. ஆனால் ஸ்ருதி உடனே கார்த்திக்கிற்கு செல்பேசியில் அழைத்தாள்.
உடனே கார்த்திக்கும் கைபேசியை எடுத்துவிட்டான்.
அவள் பேசவில்லை..
ஆனால் அவன் பேசினான் “ஸ்ருதி ஸாரி டா.. ”
அவள் பேசவில்லை..
ஆனால் அவன் பேசினான் “ஸ்ருதி என்மேல் மட்டும்தான் தப்பு இருக்கா? ”
அவள் பேசவில்லை.. ஆனால் அழுதாள். அழுதுக்கொண்டே கைபேசியை அணைத்தாள்.
உடனே ஒரு குறுந்தகவல் வந்தது அவளிடமிருந்து “தப்பு என் மேலும் தான் கார்த்திக். நான் அவசரப்பட்டு பிரசாத் மாமாவுக்கு கால் பண்ணிருக்கக் கூடாது.” என்றது அந்த மெசேஜ்.
அதன்பிறகு இரண்டு நாட்களாக முயற்சி செய்தான். அவளது கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இடுப்பில் கை வைத்தபோது இனிச்சிச்சுல்ல? இப்ப கசக்குது இதையும் அனுபவி என்றது அவனது ஆள்மனது.
கார்த்திக்கும் ஸ்ருதியும் பேசாமல் இருந்து முழுதாக மூன்று நாட்கள் சென்றிருந்தது. கார்த்திக்கும் ஸ்ருதியை பேச வைக்க எவ்வளவோ முயற்சி செய்தான். ஆனால் ஒன்றும் நடக்கவேயில்லை.
கார்த்திக்கின் பிரச்சனை முடிய மூன்றே விஷயங்கள் தான் நடக்கவேண்டும்.
“தருண்.. எனக்கு மூன்றே பிரச்சனைதான்டா இருக்கு! ஒன்று ஸ்ருதியை சமாதானம் பண்ணணும். இரண்டு ஸ்ருதி அம்மாகிட்டயும் கிரிஜாகிட்டயும் பிரச்சனையை புரிய வைக்கணும். மூன்று ஸ்ருதி அப்பாகிட்ட கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கணும். ”
“அன்றைக்கு வீடு கிரகப்பிரவேசத்திற்கு போனீங்க.. திரும்பி வரும்போது ஸ்ருதி வீட்டிற்கு விஷயம் தெரிந்திடுச்சு என்று சொன்னான் பிரசாத். எப்படி தெரிந்துச்சு? பிரசாத் சொன்னானா? ”
“இல்லை. ”
“பிறகு எப்படி தெரிஞ்சிச்சு? அப்படி என்னடா கிரகப்பிரவேசத்தில் நடந்தது? ”
“அதை விடு. நான் சொன்ன மூன்று பிரச்சனைபற்றிப் பேசு! ”
“ஆமாம்டா.. என்னை கேள்வியே கேட்கவிடாதே. அந்த மூன்றே விஷயங்ள்தான் இருக்கா? இல்லை இன்னும் இருக்கா? ”
“வேறு எதுவும் இல்லவே இல்லை. ”
“சரி உன்னை நம்புறேன். நான் ஒரு ஈசியான வழி சொல்லவா? ”
“ம்.. சொல்லு .. என் நேரம் உன்கிட்ட அட்வைஸ் கேட்கிற நிலையில் இருக்கேன்.. ”
“என் வழி எப்போதும் ஏ.டி.யெம் கார்ட் மாதிரிதான். ஈசியான வழி. நீ பாங்க்போய் கியூவில் நின்றுதான் செக்போட்டுதான் பணம் எடுப்பேன் என்று சொல்லும் ரகம். நான் எப்போதும் இன்ஸ்டன்ட் ஆளுடா! ”
“சுத்தி வளைக்காதே. விஷயத்தைக் கக்குடா! ”
“நான் என்ன சொல்றேன்னா… முதல் இரண்டு பிரச்சனையும் ரொம்ப பெரிசு. சரி பண்ண உனக்கு சாமர்த்தியம் பத்தாது.
“ஏன் பத்தாது? ஏன் ஏன்?
“சும்மா துள்ளாதடா? ஸ்ருதி உன்னைப் பார்த்து கத்தும்போது கத்துகின்ற வாயை அடைக்கும் சுலபமான வழி தெரியுமாடா உனக்கு?
கார்த்திக் பற்களைக் கடித்தான்.
“தெரியாதுதானே? இல்லை இல்லை சாரி தப்பாகச் சொல்லிட்டேன். தெரியும் உன்னால் அது முடியாதுதானே? அப்படி செய்தால் உடனே உன்னை கன்னத்தில் பளார் என்று அறைந்து விடுவாள் என்று உனக்கு பயம்! உன்னை வெளியே தள்ளி கதவைத்தாழ் போடாமல், உள்ளே தனியே வைத்து தாழ் போட்டுவிடுவாள் என்ற பயம். அப்படித்தானே? ”
“ஏற்கனவே நிறைய செய்திட்டேன் மீண்டும் அதையே செய்தால் என்னை அவ கொன்னே போட்டிடுவாடா! நீ சொல்றதை சீக்கிரம் செல்லு!” என்றான் அவனுக்கே கேட்காமல்..
“தெரியுதுல்ல? அப்படின்னா கம்முன்னு நான் சொல்வதைக் கேளு. பேசாமல் உன் அப்பாகிட்ட சொல்லி ஸ்ருதி அப்பாகிட்ட சம்பந்தம் பேசச் சொல்லு. ஸ்ருதி அப்பா உடனே ஒத்துக்குவார். ஸ்ருதி அப்பா பேச்சை மீறமாட்டாள். அப்புறம் எல்லாம் சுபம் தான் ! ”
“ஸ்ருதியை எப்படி சமாதானம் செய்யடா? கல்யாணத்திற்கு பிறகும் முறைச்சிட்டு இருந்தான்னா? ”
“அவள் வாயை நான் சொன்னதுபோல அடக்கு! அப்போ வெளியே தள்ளி கதவைத் தாழ் போட முடியாதுடா! ரூம் கதவு மூடித்தானே இருக்கும்? அம்மா தாயே மன்னிச்சிடு என்று அவள் காலில் விழுந்திடு! இல்லை அதுவும் வொர்க்கவுட் ஆகலை என்றால்.. கரகாட்டம் படம் பார்த்திருக்கியா? அதுலே செந்தில் ஒரு பார்வை பார்ப்பார். திருவிழாவில் காணாமல்போன குழந்தைபோல ஒரு லுக் விடுவார். அந்த லுக்கை மெயின்டேன் பண்ணு. பட்சி மசிஞ்சிடும்! ”
கார்த்திக் ஒரு நிமிடம் தருண் சொன்ன பாதையை யோசித்துப்பார்த்தான். ஆனால் ஏதோ ஒன்று இதில் இடித்தது.
“கிரிஜா அப்புறம் அவுங்க அம்மா இவுங்க ரெண்டு பேரையும் எப்படி சமாதானம் செய்யப்போறோம் சார்? ”
“அவுங்ககூடவா நீ குடித்தனம் நடத்தப்போற? இல்லைதானே.. விட்டுத்தள்ளு. தானாக சரியாகிடும் அந்தப் பிரச்சனை. ”
“டேய் நீ சொல்வதில் என்னமோ தப்பா இருக்கே? கொஞ்சம் குழப்பமாக இருக்கே! ”
“நீ ஓடும் ஆற்றில் வேஷ்டையை விரித்து மீன் பிடிக்கணும் என்று சொல்கின்ற. நான் வயலில் ஓடும் நண்டைப் பிடி இப்போதைக்கு நண்டு குழம்பு சாப்பிடு. பிறகு ஆற்றில் தண்ணீர் வற்றும்நேரம் மீன் குழம்பு சாப்பிடு என்று சொல்றேன். இப்ப புரியுதா S.P.B சார்? ”
“ஆனால் நீ சொல்வது கொஞ்சம் தப்பா இருக்கே… ”
“தமிழ்ப்படங்களில் வரும் நாலு காதல் படம் பார்த்தால் இதுதான் சரி என்று சொல்லிடுவ. இங்கிலீஷ்காரனின் காதல் படங்கள் பார்த்தால் ஹனிமூன் பாக்கேஜ் பற்றி இப்ப நீ யோசிக்க ஆரம்பிச்சிருப்படா. என்ன படம் போட்டுக்காட்டடும்? தமிழா? இங்கிலிஷா? ம்? ”
நண்பனின் உரையாடல் பல குழப்பத்தைத் தர ஸ்ருதியை சந்தேத்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பிரசாத் மூலமாக கிரிஜாவிடம் பேசி சம்மதம் வாங்கி ஒரு ஃபுட்கோர்ட்டிற்கு வரவழைத்தான்.
Comments are closed here.