நிழல்நிலவு – 37
6396
0
அத்தியாயம் – 37
“ஓஓஓஓ!!!!” – வாயை குவித்து அடிவயிற்றிலிருந்து உற்சாகமாக கூச்சலிட்டாள் மிருதுளா.
அது ஒரு ஸ்கூட்டர் பயணம். ஸ்கூட்டர் என்றால் சாலையில் ஓடும் சாதாரண ஸ்கூட்டர் அல்ல… தண்ணீரில் பறக்கும் வாட்டர் ஸ்கூட்டர். அலைகளில் துள்ளித் துள்ளி எழுந்து சீறிப்பாய்ந்தது. அவன் முதுகை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பயத்தை மிஞ்சிய குதூகலத்தில் தன்னை மறந்து கத்தித் தீர்த்தாள். அவளுடைய அந்த அதீத உற்சாகத்திற்கு காரணம் வாட்டர் ஸ்கூட்டர் மட்டும் அல்ல… அதில் அவர்கள் வந்திருந்த இடம்.
சிலிக்கா ஏறி கடலோடு கலக்கும் முனை… அந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு… டால்பின்கள்… அவர்களுடைய ஸ்கூட்டரை சுற்றிசுற்றி எத்தனை டால்பின்கள் வட்டமடிக்கின்றன! அவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை. அதிகாலையில்தான் இவைகள் இந்த பகுதியில் விளையாடுமாம்… அதனால்தான் விடிவதற்கு முன்பே இழுத்துக் கொண்டு வந்துவிட்டான். இந்த காட்சியை – இந்த விதத்தில் – இவனோடு அனுபவிப்பதற்கு தூக்கம் என்ன… எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம்.
“ஓஓஓஓ!!!!” – மீண்டும் கத்தினாள். துள்ளித் துள்ளி குதிக்கும் டால்பின்களை கட்டித்தழுவி தண்ணீருக்குள் உருள வேண்டும் போல் தோன்றியது… அவற்றின் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டும் போலிருந்தது. அவைகளோடு போட்டிப் போட்டுக் கொண்டு நீந்த வேண்டும் போல் ஆசை வந்தது. நிறைவேறாத ஆசைகள் தான்… ஆனால் டால்பின்கள் நீர்மட்டத்திற்கு மேலே எழும்பி டைவடிக்கும் போது தெறிக்கும் நீர் துளிகளின் சில்லிப்பில் அத்தனை சந்தோஷத்தையும் அனுபவித்துவிட்டது போல் பரவசப்பட்டாள்.
மிருதுளாவின் ஆசை தீருமட்டும் டால்பின்களோடு வட்டமடித்து விளையாடிவிட்டு, ஸ்கூட்டரின் வேகத்தை அதிகரித்தான் அர்ஜுன். ஆனால் அவர்களுடைய பயணம் கரையை நோக்கி இல்லாமல் எதிர் திசையை குறிவைத்திருந்தது. எங்கே போகிறோம் என்று அவள் கேட்டாள். வழக்கம் போல் அவன் பதில் சொல்லவில்லை.
அன்று அதிகாலையில் பிதர்கானிகாவில் புறப்பட்டவர்கள் காலை உணவு வேளையில் வேறொரு ஊரில் கரையேறினார்கள். கடற்கரையிலிருந்து நடைபயண தொலைவிலேயே கடைத்தெரு இருந்தது. மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. பெருநகரங்களைப் போல் பேருந்துகளும் ஆட்டோக்களும் இருசக்கர வாகனங்களும் வடம் பிடித்தன.
மிருதுளாவின் கையை பிடித்தபடி அந்த கூட்டத்தில் கலந்த அர்ஜுன் சற்று நேரத்தில் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தான்.
ஓரளவுக்கு வசதியான ஹோட்டல்தான் என்றாலும் கூட்டம் அதிகமில்லை.
“ரெஸ்ட்ரூம் அந்த பக்கம். ரெஃப்ரெஷ் பண்ணணுன்னா போயிட்டு வா…” – அவளுடைய தேவையறிந்து தானாகவே கூறினான்.
ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு அவன் கைகாட்டிய திசையில் சென்ற மிருதுளா சற்றுநேரத்தில் திரும்பி வந்த போது அவன் நின்ற இடத்திலேயே நின்றுக் கொண்டிருப்பதை கண்டு வியந்தாள்.
“என்ன ஆச்சு! ஏன் இங்கேயே நிக்கிறீங்க? உள்ள போயி உட்கார்ந்திருக்கலாமே!”
“ம்ம்… வா…” – அவளுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தான் என்பதை வெளிப்படுத்தாமல் சின்ன முணுமுணுப்புடன் அவளை இழுத்துக் கொண்டு டைனிங் ஏரியாவிற்குச் சென்றான்.
ஆடர் எடுக்க வந்த சர்வரிடம், அவளுக்கு ஒரு செட் ரொட்டி குருமாவும் தனக்கு ஒரு பிஸ்லரி வாட்டர் பாட்டிலும் கொண்டுவர சொன்னான்.
“நீங்க சாப்பிடலையா?” – அக்கறையாக கேட்டாள் மிருதுளா.
“நீ சாப்பிடு” – ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டான்.
சற்று நேரத்திற்கு முன்புவரை நன்றாக இருந்தவனுக்கு இப்போது திடீரென்று என்னவாயிற்று? ஏன் இப்படி இறுகிப்போயிருக்கிறான் என்கிற சிந்தனையோடு உணவை முடித்தாள் மிருதுளா.
முதலை கால்வாயில் தோன்றியது போல், கடைத்தெருவுக்குள் நுழைந்ததிலிருந்தே அவனுடைய உள்ளுணர்வு உறுத்த துவங்கிவிட்டது என்பதையும், தங்களை யாரோ கண்காணிப்பதாக அவன் சந்தேகப்படுகிறான் என்பதையும் அப்போது அவள் அறியவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது.
பில் கௌண்ட்டரில் பணம் செலுத்திவிட்டு நகர்ந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில்… என்ன நடந்தது என்று புரிந்துகொள்ளக் கூட முடியாத வேகத்தில் திடீரென்று நடந்து முடிந்துவிட்டது அந்த சம்பவம்.
அவன்… அந்த புதியவன் தனியாக நின்றுக் கொண்டிருந்த மிருதுளாவை நோக்கித்தான் வந்தான். மிகவும் சாந்தமாக… சாதாரணமாக…
அவனைப் பார்த்தால் வித்தியாசமாக எதுவும் தோன்றாததால் அவளும், அவன் அருகில் நெருங்கி வரும் வரை எந்த சலனமும் இல்லாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பில் செலுத்திவிட்டு நகர்ந்த அர்ஜுன் அந்த புதியவனைக் கண்டதும் அரை நொடிப்பொழுதில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கணித்து விருட்டென்று இருவருக்கும் இடையில் புகுந்தான்.
அடுத்து நடந்ததுதான் பயங்கரம்… வீடியோவில் பாஸ்ட் ஃபார்வர்ட் செய்யப்பட்ட காட்சி போல் இருந்தது இவருடைய தாக்குதலும். யார் யாரை தாக்குகிறார்கள்… அடிப்பது யார்… அடி வாங்குவது யார் என்று கவனிப்பதற்குள் காட்சி மாறியது. அந்த புதியவன் தலைதெறிக்க தப்பித்து ஓட, அர்ஜுன் தடுமாறி கீழே விழுந்தான். இல்லையில்லை… அர்ஜுன் தடுமாறி கீழே விழுந்த நேரத்தில்தான் அவன் தப்பித்து ஓடியிருக்க வேண்டும்.
அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் மலங்க விழித்துக் கொண்டிருந்தது மிருதுளா மட்டும் அல்ல… சுற்றியிருந்த பொதுமக்களும் தான்… அவளுடைய பார்வை தூரத்தில் புறமுதுகிட்டு ஓடும் அந்த புதியவனிடமிருந்து மீண்டு, “நா வருவேன்.. உன்னை தேடி வருவேன்” என்று உரக்க கத்திய அர்ஜுனிடம் வந்தது. அடிபட்ட வேங்கை போல் தரையிலிருந்து எழுந்தவன் கையில் ரெத்தம் வழிவதைக் கூட உணராமல் பெருங்குரலில் கர்ஜித்தான்.
“அர்ஜுன்!!” – பதட்டத்துடன் அவனிடம் பாய்ந்தோடினாள் மிருதுளா. காயப்பட்ட அவன் கையை எடுத்து, “மை காட்! ரெத்தம்!!!” என்று பதறினாள்.
“மூவ்…” என்று அங்காரத்துடன் அவளை ஒதுக்கிவிட்டு மிக மும்மரமாக தரையில் எதையோ தேடியவன், தேடிய பொருள் கிடைத்துவிட்ட திருப்தியுடன் கீழே குனிந்து அந்த புல்லட் கேஸை எடுத்தான்.
“வாட் இஸ் திஸ்! ஓ மை காட்! ஆர் யு ஷாட்? சுட்டுட்டானா அவன்? அர்ஜுன்!” – மிரண்டு போன மிருதுளா அவன் கையை பிடித்துக் கொண்டு படபடத்தாள்.
‘எப்போது! எப்படி! சத்தமே கேட்கவில்லையே! ஆனால் ரெத்தம் வழிகிறது…’ – அவன் பயன்படுத்தியது சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி என்பதையெல்லாம் யோசித்து புரிந்துகொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. பயந்துபோய், “யாராவது ஹெல்ப் பண்ணுங்க…” என்று கத்தினாள்.
அர்ஜுனின் ஆக்ரோஷ உடல்மொழி உதவி தேவைப்படுபவன் போல் இல்லாமல் அருகில் நெருங்குவபவர்களுக்கு ஆபத்து என்று எச்சரிப்பது போல் இருந்ததால் சுற்றியிருந்தவர்கள் தள்ளியே நிற்க, அவளுடைய புலம்பலில் எரிச்சலடைந்து “ஷ்ஷ…ட்-அப்…” என்று குரலை உயர்த்தி அதட்டினான் அர்ஜுன்.
சட்டென்று அடங்கியவள் அடுத்த நிமிடமே “யு ஆர் ப்ளீடிங்” என்றாள் தவிப்புடன். முகத்தில் கலவரம் அப்பியிருந்தது. கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.
அர்ஜுனின் பார்வை அவள் முகத்தில் ஆழப்பதிந்தது… அவளுடைய பெரிய கண்களில் குளம்கட்டியிருந்த கண்ணீரில் அவன் கொந்தளிப்பு சற்று மட்டுப்பட்டது. அந்த நொடி அவன் பார்வையில் அவள் மிருதுளாவாக தெரியவில்லை. அவனுடைய காயத்தை கண்டு கலங்கும் ஜீவன்… அவனுடைய வலிக்காக துடிக்கும் உயிர்… அவனுக்காக கண்ணீர் விடும் ஆத்மா… உள்ளத்தில் ஏதோ ஈரமான உணர்வு சுரப்பதை உணர்ந்தான். இதுவரை அவளிடமிருந்த ஈர்ப்பையும் அவனிடமிருந்த அதிகாரத்தையும் விஞ்சிய உணர்வு அது…
அடைத்த தொண்டையை செருமிக்கொண்டு, “ஐம்… ஆல்ரைட்….” என்றவன், பாக்கெட்டில் இருந்த கர்ச்சிப்பை எடுத்து காயத்தில் கட்ட முனைந்தான். தோள்பட்டைக்கு கீழே அடிபட்டிருந்ததால் ஒற்றை கையால் கட்டு போட முடியாமல் அவன் சிரமப்பட, உடனே உதவிக்கு வந்தாள் மிருதுளா.
அவளிடம் கையையும் கர்ச்சிப்பையும் கொடுத்துவிட்டு அவள் முகத்தையே பார்த்தபடி அமைதியாக நின்றான். மயிலிறகோ பூவிதழோ என்பது போல் மிக மென்மையாக அவன் காயத்தை சுற்றி கட்டினாள்.
அர்ஜுன் அங்கிருந்து உடனடியாக கிளம்ப எண்ணினான். அது சிசிடிவி இல்லாத உணவகம்தான். குப்பையை சுத்தம் செய்யும் வேலை மிச்சம். சுற்றியிருந்தவர்களில் யாரேனும் வீடியோ எடுத்திருக்கக் கூடுமோ என்று எண்ணி பார்வையை சுழலவிட்டான். நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்துவிட்ட சண்டையை, வீடியோ எடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூட யாருக்கும் அவகாசமில்லை. திகைப்பு நீங்காமல் விக்கித்து நின்றவர்கள் யார் கையிலும் அலைபேசி தென்படவில்லை. அதற்கு மேலும் வீடியோ வெளியானால் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி மிருதுளாவை இழுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.
“ஹாஸ்ப்பிட்டல் போகலாம் அர்ஜுன்… பிளட் போயிட்டு இருக்கு… ப்ளீஸ்…” என்று தொடர்ந்துக் கொண்டிருந்த மிருதுளாவின் கெஞ்சல்களை ஒதுக்கிவிட்டு, கண்ணில் தென்பட்ட ஒரு மெடிக்கல் ஷாப்பில், சில மெடிக்கல் டூல்சும் மருந்துகளும் வாங்கி கொண்டு ஆட்டோ பிடித்து, அவளோடு ஒரு உயர்தர ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான்.
அங்கே ஏற்கனவே அறை புக் செய்யப்பட்டிருந்தது. எப்போது யார் செய்தார்கள் என்கிற கேள்வியெல்லாம் அவளுக்கு எழவில்லை. அவனுடைய காயமும், ரெத்தப்போக்கும் மட்டுமே மூளையை முற்றிலும் ஆக்கிரமித்திருந்தது.
அறைக்கு வந்ததும் கீசரை ஆன் செய்துவிட்டு, கையில் கட்டியிருந்த கர்ச்சீப்பை பிரித்து எறிந்துவிட்டு சட்டையை கழட்டி காயத்தை ஆராய்ந்தான். அவனுடைய சிவந்த மேனிக்கு பயங்கரமாய் தெரிந்த அந்த ரெத்தத்தையும் ஆழமான காயத்தையும் கண்ட மாத்திரத்தில் அவளுக்கு நெஞ்சை அடைத்தது. “ஸ்ஸ்ஸ்… ஐயோ!” என்றாள் அதிர்ச்சியுடன்.
அவளை நிமிர்ந்து பார்த்த அர்ஜுன், “நீ தள்ளி போ…” என்றான் அவள் பயத்தை உணர்ந்து.
“இல்ல… நா இருக்கேன்… உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன்” – வறண்டு போன உதட்டை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு உமிழ்நீரை கூட்டி விழுங்கினாள்.
அவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் பஞ்சை எடுத்து காயத்தை சுற்றி படிந்திருந்த ரத்தத்தை துடைத்தான். மிருதுளா ஓடிப்போய் தண்ணீர் சூடாகிவிட்டதா என்று சோதித்து, கப்பில் வெந்நீர் பிடித்துக் கொண்டு வந்தாள்.
அதை வைத்து அர்ஜுன் காயத்தை சுத்தம் செய்து முடித்த போது பொட்டு வைத்தது போல் ஒரு புள்ளி மட்டும்தான் காயமாக இருந்தது. ஆனால் அதற்குள் தோட்டா இருக்கும் போலிருக்கிறதே! எப்படி வெளியே எடுக்கப் போகிறான்! வலிக்குமே! – நினைக்கும் போதே அவளுக்கு வலித்தது. உள்ளங்காலெல்லாம் கூசியது… அடிவயிற்றை பிசைந்தது…
“ஹாஸ்ப்பிட்டலுக்கு போயிடலாம் அர்ஜுன்… ப்ளீஸ்…” – கெஞ்சினாள். ஆத்திரத்தில் குரல் கரகரக்க தொண்டையை அடைத்தது…
அவளை சட்டை செய்யாமல் காயம்பட்ட இடத்தை கத்திரிக்கோலால் வெட்டினான் அர்ஜுன். ரெத்தம் குபுகுபுவென்று பொங்கியது. மிருதுளாவின் கண்கள் தெரித்துவிழிவது போல் விரிந்தன. மூச்சே நின்றுவிடுவது போல் சுவாசக்குழலுக்குள் ஏதோ அடைத்தது.
“அர்…ஜு…ன்!!!” – அதிர்ச்சியுடன் கூவினாள்.
“ஷட்-அப்” – பல்கலைக் கடித்துக் கொண்டு இடுக்கி போன்ற ஏதோ ஒரு சிறு உபகாரணத்தால் தோட்டாவை பிடுங்கிவிட்டு பஞ்சை வைத்து அழுத்தி ரத்தக்கசிவை கட்டுப்படுத்தினான்.
கண்களை இருட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு…
மூக்கு வளைந்த அந்த கொடூரமான ஊசியில் நரம்பை அவன் விரல் நடுங்க கோர்க்கும் போதே இவளுக்கு வயிறெல்லாம் கலங்கியது. ரெத்தம் கசியக்கசிய சதையில் ஊசியை குத்தி இழுக்கும் போது இவள் இதயம் வலியில் துடித்தது.
அவன் தையல் போட்டு முடிக்கும்வரை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றவள், அவன் நரம்பை முடிச்சிட்டு கத்தரித்து ஊசியை கீழே வைத்த நொடியில் முகத்தை மூடிக் கொண்டு தரையில் சரிந்து கதறிவிட்டாள்.
ஓரிரு நிமிடங்கள் மெளனமாக அவளை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் பிறகு எழுந்து அவளிடம் நெருங்கினான். அருகில் அமர்ந்து அவளை தோளோடு அணைத்துக் கொண்டு, “ஷ்ஷ்ஷ்…” என்றான்.
“ஏன்? ஏன் இவ்வளவு வலி? இதெல்லாம் எதுக்கு?” – அவனோடு ஒண்டிக்கொண்டு குலுங்கியழுதாள்
“ஐம் ஓகே….”
“நோ… யு ஆர் நாட் ஓகே… யு ஆர் டெஃபனட்லி நாட் ஓகே… யு ஆர் க்ரூயல்… மரப்புமருந்து கூட எடுக்கல… எதுக்காக அவ்வளவு வலியையும் தாங்கினீங்க? தனக்குத்தானே எப்படி இந்த கொடுமையை செய்ய முடிஞ்சுது உங்களால?” – ஆற்றாமை கோபமும் கண்ணீருமாக வெளிப்பட்டது.
அவள் கோபத்தில் இதயம் இனிக்க அணைப்பில் இறுக்கம் கொடுத்தவன், “ஸ்டாப் கிரையிங். பேபி” என்றான் களைப்பையும் மீறிய மென்புன்னகையுடன். ‘அழாதே’ என்று கூறினாலும் அவனுக்காக வெளியேறும் அந்த கண்ணீரை அவன் மனம் ரசித்தது.
“யார் அவன்? என்னைத்தானே டார்கெட் பண்ணி வந்தான்? எதுக்காக? கோர்த்தா ஆளா? சுக்லா தான் அனுப்பினாரா?” – கேள்விகளை அடுக்கினாள்.
அவன் முகத்திலிருந்த மென்மை துணி கொண்டு துடைத்து போல் முற்றிலும் மறைந்து போனது. இறுகிய பாவத்துடன், “நா கொஞ்ச நேரம் கண்ணை மூடி படித்திருக்கேன். நீ ரூமைவிட்டு எங்கேயும் போகக் கூடாது… யார் வந்து கதவை தட்டினாலும் திறக்கக் கூடாது” – அவளுக்கு பதில் சொல்வதை தவிர்த்து எழுந்து சென்று மெத்தையில் சாய்ந்தான்.
அவன் உறங்குவதையே கண்கொட்டாமல் பார்த்தபடி பக்கத்தில் அமர்ந்திருந்தாள் மிருதுளா. அவன் காலையிலிருந்து எதுவுமே உண்ணவில்லை என்பது மனதை வருத்தியது. ‘அவ்வளவு ரெத்தம் போய்விட்டது… உணவும் உண்ணவில்லை… உடல் எப்படி தாங்கும்?’ – கவலையோடு அமர்ந்திருந்தாள். சரியாக மதிய உணவு நேரத்திற்கு கதவு தட்டப்பட்டது. சட்டென்று கண்விழித்தான் அர்ஜுன்.
மிருதுளா அவனை வியப்புடன் பார்த்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் படுத்திருந்தான்… லேசாக கதவு தட்டப்பட்டதும் உடனே விழித்துவிட்டான்! உறங்கவே இல்லையா! – மனதில் தோன்றியதை வாய்விட்டே கேட்டாள்.
“தூங்கவே இல்லையா நீங்க?”
“ஐம் நாட் எ டீப் ஸ்லீப்பர்” – நான் ஆழ்ந்து உறங்குபவன் அல்ல என்றபடி எழுந்துச் சென்று டோர் வியூவர் வழியாக வந்திருப்பது யார் என்று பார்த்துவிட்டு துப்பாக்கியை ஏந்தியபடி எச்சரிக்கையுடன் கதவைத் திறந்தவன், அவனை பின்தொடர்ந்து யாரும் வரவில்லை உறுதி செய்துக்கொண்டு அவனை உள்ளே அனுமதித்தான்.
வந்திருந்தவன் அர்ஜுனிடம் சில ஷாப்பிங் பைகளையும் ஒரு கார் சாவியையும் கொடுத்துவிட்டுச் சென்றான்.
ஷாப்பிங் பைகளில் அவர்களுக்கு தேவையான ஆடைகளும் ஒரு உணவு பொட்டலமும் இருந்தது. மிருதுளாவிற்கு அதைக் கொடுத்துவிட்டு, கதவின் லாக்கை ஒருமுறை சரிபார்த்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான் அர்ஜுன்.
அவன் வெளியே வரும்வரை காத்திருந்த மிருதுளா, அவன் வந்ததும், “நீங்க காலையிலிருந்து எதுவும் சாப்பிடல…” என்றாள் ஏதோ அவன் பெரிய குற்றம் இழைத்துவிட்டது போல்.
“என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும். நீ சாப்பிடு”
“எப்படி? எப்படி மேனேஜ் பண்ண முடியும்? எவ்வளவு ரெத்தம் போயிருக்கு. மயக்கம் வந்துடும்” – அதட்டினாள்.
“நா பார்த்துக்கறேன்…”
“முடியாது…” – பிடிவாதம் பிடித்தாள்.
“மிருதுளா…” என்று கண்டிக்கும் தொனியில் அழைத்தவன், “பச்சத்தண்ணியை மட்டும் குடிச்சுக்கிட்டு பத்து நாள் கூட என்னால திடமாவே தாக்குப்பிடிக்க முடியும். குழந்தை மாதிரி அடம் பிடிக்காம சாப்பிடு.. நாம உடனே இங்கிருந்து கிளம்பனும். ம்ம்ம்… சீக்கிரம்…” – விரட்டினான்.
அவள் முடியவே முடியாது என்று உறுதியாக நின்றாள். ஏன் அவன் சாப்பிட மறுக்கிறான் என்று காரணம் கேட்டாள்.
“நா சாப்பாட்டு விஷயத்துல யாரையும் நம்பறது இல்ல மிருதுளா… கொஞ்சம் இன்செக்யூர் ஃபீல் இருக்கும். அதிகமா வெளியே எங்கேயும் சாப்பிட மாட்டேன்…” என்றான் இறங்கிய குரலில்.
மிருதுளா அவனை வியப்புடன் பார்த்தாள். இது என்ன வாழ்க்கை என்கிற ஆயாசத்துடன், “அப்போ வீட்ல? அங்கேயும் சமையல்காரர் தானே சமைக்கிறார்?” என்றாள்.
“வீட்ல எல்லா இடத்துலயும் எனக்கு கண்ணு இருக்கு. அங்க யாராலயும் என்னை எதுவும் செய்ய முடியாது. அதோட அங்க இருக்க சமையல்காரர் எனக்காக உயிரையும் கொடுப்பார். அவரை மீறி என்னோட சாப்பாட்டில் யாராலும் கைவைக்க முடியாது”
“அப்படின்னா நீங்க வெளியே சாப்பிட்டதே இல்லையா?”
“வெளியே வந்தா பெரும்பாலும் நானே சமைச்சுதான் சாப்பிடுவேன். தவிர்க்க முடியலைன்னா ராண்டமா எங்கேயாவது… யாரும் கெஸ் பண்ண முடியாத ஹோட்டல்ல சாப்பிடுவேன்…” – ஆசிரியருக்குப் பதில் சொல்லும் சிறுவன் போல் அவளுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பதை அவன் உணரவே இல்லை.
“சரி… அப்படின்னா இப்பவும் ஏதாவது ஒரு ராண்டம் ஹோட்டல்லேயே சாப்பிடுவோம் வாங்க..” என்று கூறியவள் துரிதமாக குளியலறைக்குள் சென்று திரும்பி, அவனை அழைத்துக் கொண்டு அந்த ஹோட்டலிலிருந்து வெளியேறினாள்.
ஆம், அவள்தான் அவனை அழைத்துக் கொண்டு வெளியேறினாள். தன் பிடியை… அதிகாரத்தை… தெரிந்தே அவளிடம் இழந்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
Comments are closed here.