நிழல்நிலவு – 38
6510
0
அத்தியாயம் – 38
போக்குவரத்து நெரிசல் இல்லாத நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட முப்பது மணிநேர கார் பயணம். ஒரிஸாவிலிருந்து ஆந்திராவை கடந்து கர்நாடகாவில் நுழைந்து மங்களூரை வந்து சேர்ந்திருந்தார்கள். ஊருக்குள் நுழையும் போதே கண்டுபிடித்துவிட்டாள் மிருதுளா.
“அர்ஜுன்!!!” – ஆனந்த அதிர்ச்சியோடு அவனை நோக்கினாள்.
சாலையில் பதித்த பார்வையை அவள் பக்கம் திருப்பாமலேயே கேட்டான். “பிடிச்சிருக்கா? என்னோட சர்ப்ரைஸ்…?”
“எதிர்பார்க்கவே இல்ல…” – உணர்ச்சிவசத்தில் குரல் நடுங்கியது.
“நா உனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்…”
“தேங்க யூ…” – கண்ணீருடன் பாய்ந்து அவனை கட்டிக்கொண்டாள்.
காயம்பட்ட கை விண்ணென்று தெறிக்க, “ஸ்ஸ்…” என்ற முனகலுடன் விலகியவனின் கார் சாலையிலிருந்து பள்ளத்தில் இறங்கி ஏற சட்டென்று பிரேக் அடித்து நிறுத்தினான்.
“ஐயோ… சாரி அர்ஜுன்… சாரி… ரொம்ப வலிக்குதா… கடவுளே…” – தாயை பார்க்கப் போகும் சந்தோஷத்தில் அவனுடைய காயத்தை மறந்துவிட்டவள் குற்றஉணர்வுடன் நூறு முறை மன்னிப்புக் கேட்டபடி அவன் காயத்தை மென்மையாக வருடிவிட்டாள்.
“இட்ஸ் ஓகே… காம் டௌன்… எனக்கு ஒன்னும் இல்ல… ஐம் ஆல்ரைட்.. ” என்று அவளை அமைதிப்படுத்தியவன், “ஊரை மட்டும்தானே சொன்ன. வீட்டுக்கு எப்படி போகணும். வழி சொல்லு” என்றான்.
மிருதுளாவிடம் உற்சாகம் மீண்டும் தொற்றிக் கொண்டது. பரபரப்புடன் வழியை காண்பித்தாள். ‘எத்தனை நாட்களாகிவிட்டது அம்மாவிடம் பேசி… எப்படி இருக்கிறார்களோ! நம்மை பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்வார்களோ!’ – பரபரக்கும் உள்ளத்துடன் சாலையிலேயே பார்வையை பதித்திருந்தாள். யாராவது தெரிந்தவர்கள் தென்படுகிறார்களா என்று தேடியது அவள் பார்வை. தாயின் நலனை விசாரிக்க மனம் துடித்தது.
காரிலிருந்து இறங்கி ஓடிப்போய் அன்னையை கட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. தான் எவ்வளவு தூரம் அம்மாவை மிஸ் செய்திருக்கிறோம் என்பதை அப்போதுதான் அவள் முழுதாக உணர்ந்தாள்.
மிருதுளா சொன்ன வளைவுகளிலெல்லாம் வளைந்து குறுகிய சாலையிலெல்லாம் புகுந்து, மேடுபள்ளங்களையெல்லாம் கடந்து மங்களூரை அடுத்துள்ள அந்த சின்ன கிராமத்திற்குள் நுழைந்தது அவனுடைய கார்.
தாய் இந்த ஊருக்கு வந்த பிறகு இரண்டோ அல்லது மூன்றோ முறைதான் இங்கு வந்திருக்கிறாள் மிருதுளா. ஊருக்குள் வருவதற்கு சுலபமாக வழிகாட்டிவிட்டவளுக்கு வீட்டை கண்டுபிடிக்க சற்று சிரமமாக இருந்தது. சாலை போடுகிறேன் என்று இருந்த மரங்களையெல்லாம் வெட்டி மொட்டையடித்திருந்தார்கள். ஊரே மாற்றமாக தெரிந்தது. வீட்டு ஓனரின் பெயரை சொல்லி வழி கேட்டுக் கொண்டே வந்து வீட்டை அடைந்தார்கள்.
அவ்வளவுதான்… பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்தது போல் மிருதுளாவின் உற்சாகமெல்லாம் அடங்கிப்போய்விட்டது. கதவில் தொங்கி கொண்டிருந்த பூட்டையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றவளின், கண்களில் கண்ணீர் மட்டும் கரகரவென்று வழிந்துக் கொண்டிருந்தது.
“இட்ஸ் ஓகே… இங்கதான் பக்கத்துல எங்கேயாவது போயிருப்பாங்க… நாம வெயிட் பண்ணலாம்…” – அவளை தோளோடு அணைத்து தேற்றினான் அர்ஜுன்.
அவளுடைய முகம் தெளியவில்லை. தாயை பார்க்க வேண்டும் என்று ஆசையோடு ஓடி வந்தவள் இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் துவண்டு போனாள்.
அது ஒரு கிராமம்… வீடுகள் நெருக்கமாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கும் என்றாலும், ஊருக்குள் புது மனிதர்களின் வரவு வெள்ளை துணியில் வைத்த கலர் புள்ளி போல் அனைவருக்கும் பட்டவர்த்தனமாக தெரிந்துப்போகும்.
அப்படித்தான் பக்கத்து தெருவில் வசித்த வீட்டு ஓனருக்கும் அவர்களுடைய வரவு தெரிந்தது. உடனே துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்துவிட்டார்.
“யாரு நீங்கல்லாம்… என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என்று கன்னட மொழியில் தூரத்தில் வரும் போதே குரல் கொடுத்தவர், அருகில் வந்ததும் மிருதுளாவை அடையாளம் கண்டுகொண்டார்.
“அடடே… நீ அந்த அம்மாவோட பொண்ணுதானே?” – ஆர்வமும் நிம்மதியும் இருந்தது அவர் குரலில்.
தாய் பல வருடங்களாக கர்நாடகாவில் வசித்ததாலும் அவரை பார்க்க மிருதுளா அடிக்கடி அங்கு வந்து சென்றதாலும் அவளுக்கு கன்னடா பரிச்சயமான மொழிதான். ஓரளவுக்கு பேசவும் தெரியும். எனவே அவன் கேட்டதை புரிந்துக் கொண்டு,
“ஆமாம் ஐயா… அம்மா எங்க போயிருக்காங்க?” என்றாள் கன்னடாவை உடைத்துக் கோர்த்து.
அவர் முகத்தில் அதிர்ச்சி… “என்னம்மா இப்படி கேட்கற! அப்போ உனக்கும் தெரியாதா?” என்றான்.
அர்ஜுன் ஹோத்ராவின் புருவங்கள் நெரிந்தன. “என்ன சொல்லறீங்க?” என்றபடி முன்னால் வந்தான்.
“அந்த அம்மாவை நான் பார்த்து ஒரு மாசம் ஆகுதுங்க… திடீர்ன்னு எங்க போனாங்கன்னு தெரியல. வீடு பூட்டியே கெடக்கு. எனக்கு இந்த மாசம் வாடகை பணம் வேற வரல… இந்த அம்மாவுக்கு வீட்டை கொடுத்ததுக்கு தென்னந்தோப்பு காரருக்கே கொடுத்திருக்கலாம்… ஒண்ணாந் தேதியானா டான்னு வாடகை கொடுக்கற மனுஷன். குடோனு கிடைக்காம அலைஞ்சுக்கிட்டு இருக்காரு. வீடு வீணா போயிடுமே, புழக்கமா இருக்கட்டும்னு இவங்களுக்கு கொடுத்தேன். இப்படி பூட்டிப் போட்டுட்டு போய்ட்டாங்களே!” – தன் கவலையை புலம்புனார் அந்த முதியவர்.
“ஒரு மாசமா காணுமா! ஐயோ!!” – கலவரத்துடன் அர்ஜுனின் கையைப் பிடித்தாள் மிருதுளா.
“ப்ச்… எதுவும் ஆயிருக்காது… பயப்படாத…” என்று அவளிடம் கூறியவன் அவர் பக்கம் திரும்பி, கடைசியாக அவர் எப்போது மிருதுளாவின் தயை பார்த்தான். என்ன பேசினார்… அவர்களுடைய நடத்தையில் வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் மாற்றம் தெரிந்ததா? பதட்டமாக இருந்தார்களா என்றெல்லாம் குடைந்துக் குடைந்து விசாரித்தான். பிறகு வீட்டின் மாற்று சாவியை கேட்டான். அவர் இல்லை என்று மறுத்தார். பூட்டு அவர்களுடையது… சாவியும் அவர்களிடம்தான் இருக்கும் என்றார்.
அடுத்த கணமே சிறிதும் யோசிக்காமல் பூட்டை உடைத்தான். வீட்டு ஓனர் அதிர்ந்து, “என்ன தம்பி இது!” என்றார்.
“அந்த அம்மாவோட பொண்ணு தானே இவங்க… இவங்களுக்கும் இந்த வீட்ல உரிமை இருக்கு… கிளம்புங்க…” என்று அவரை விரட்டியவன் சற்று நிதானித்து “ஒரு நிமிஷம்” என்று கூறியபடி தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து வாடகை கணக்கை தீர்த்து அனுப்பினான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் மிருதுளாவின் பதட்டம் மேலும் அதிகமானது. போட்டது போட்டபடி என்பார்களே. அப்படித்தான் இருந்தது அந்த வீடு. சமைத்த உணவு பாத்திரத்திலேயே பூசணம் பூத்துக் கிடந்தது. துவைத்துப்பிழிந்த துணி காய வைக்காமல் வாளியிலேயே முருகலாகக் இருந்தது. பீரோ திறந்து கிடந்த விதத்தில் அவசரமாக துணிமணிகளை பையில் அள்ளி திணித்திருப்பதை ஊகிக்க முடிந்தது. யாருக்கோ… எதற்கோ பயந்து, பேய் துரத்துவது போல் அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடியிருப்பது புரிந்தது.
தன் மனதில் தோன்றியதை வாய்விட்டுக் கூறியபடி மிருதுளாவை திரும்பிப் பார்த்தான் அர்ஜுன். துக்கத்துடன் சுவற்றில் சாய்ந்து நின்றவள், ‘இல்லை என்பது போல் குறுக்காக தலையை அசைத்தாள். பேய் துரத்தி ஓடவில்லை பேய் போல் ஒருவரை துரத்திக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் என்றாள்.
அவன் புரியாமல் பார்த்தான். “அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஆனா அவர் மேல பைத்தியம்” – அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது.
“யார் மேல?” – சட்டென்று அடுத்த கேள்வியை கேட்டான். பெற்ற மகளை விட அப்படி யார் மீது ஒரு பெண் பையித்தியமாக இருக்க முடியும்!
அவனுடைய கேள்விக்கு மிருதுளா உடனே பதில் சொல்லவில்லை. ஓரிரு நொடிகள் மெளனமாக நின்றவள் பிறகு, “என்னோட அப்பா மேல” என்றாள். தொடர்ந்து “இது புதுசு இல்ல… அவர் எங்கேயாவது இருக்காருன்னு நியூஸ் வந்தா இப்படித்தான்… எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு அவரை தேடி ஓடிடுவாங்க” என்றவள், “ஆனா நா காணாம போய்ட்டேங்கறதைக் கூட பொருட்படுத்தாம அவரை தேடி ஓடியிருக்காங்கங்கறதை தான் நம்ப முடியல… அதுவும் ஒரு மாசம்…” என்று வெகுவாய் குழம்பினாள்.
பிறகு அவளே, “ஒருவேளை நா அவர்கிட்ட போய்ட்டேன்னு நெனச்சு அவரை தேடி போயிருப்பாங்களோ!” என்றாள். சற்று யோசித்துவிட்டு, “ஆமாம்… அப்படித்தான் இருக்கும்” என்று அந்த ஊகத்தையே முடிவாக பிடித்துக் கொண்டாள்.
அவளுடைய சிந்தனைகளையும் ஊகங்களையும் அவள் போக்கிலேயே விட்டுவிட்டு மேலும் வீட்டை பார்வையால் அலசிய அர்ஜுனின் கண்களில், கதவில் மேலிருந்து கீழ் வரை கூடுதலாக பொருத்தப்பட்டிருந்த தாழ்ப்பாள்களும் பூட்டுகளும் தென்பட்டன.
“என்ன இது!” என்றான் வியப்புடன்.
“அவர் எங்களை விட்டுட்டு போனதிலிருந்து இப்படித்தான்… அதிக பயம்… அதிக எச்சரிக்கை… நிறைய மாறிட்டாங்க”
அவன் புருவம் சுருங்கியது. “உன்னோட அப்பா விட்டுட்டு போனதுக்குப் பிறகு வருமானத்துக்கு என்ன செஞ்சீங்க? உன்னோட படிப்பு செலவையெல்லாம் எப்படி சமாளிச்சீங்க?”
“அம்மா ஒரு அதலட்… பக்கத்துல இருக்க சின்ன பசங்களுக்கு ஸ்போர்ட்ஸ் ட்ரைனிங் கொடுப்பாங்க. அப்புறம் கராத்தே, டேக்-வான்-டோ கூட சொல்லிக் கொடுப்பாங்க, என்னோட படிப்பு செலவு ஸ்காலர்ஷிப்ல கவராயிடும். ரூம் ரெண்ட் மட்டும் அம்மாகிட்டருந்து வாங்கிப்பேன். மத்த செலவெல்லாம் பார்ட் டைம் ஜாப்ல கிடைக்கிற சம்பளத்துல சமாளிச்சுப்பேன்” – விளக்கமாகக் கூறினாள்.
அவளுடைய தாய் தற்காப்புக்கலை தெரிந்தவள். ஆனால் வீட்டுக்கு பத்து பூட்டுப் போட்டு பூட்டிக்கொள்கிறாள். அதில் இருந்த முரண்பாடு உறுத்த அதையும் அவளிடம் கேட்டான்.
தந்தை விட்டுச்சென்றதிலிருந்துதான் இந்த அதீத பயம் தன் தாயை துரத்துகிறது என்றாள். ஆண்துணை இல்லாததால் யாரேனும் தவறாக நடந்துவிடக் கூடுமோ என்கிற பயமாக இருக்கலாம் என்று காரணத்தையும் ஊகித்துக் கூறினாள். எல்லாமே ஊகம் தான்… அவளுக்கும் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. ஹாஸ்ட்டல் வாசம் அவளை பெற்றோரிடமிருந்து அத்தனை தூரத்திற்கு தள்ளி வைத்திருந்தது.
அவள் சொல்வதையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டான் அர்ஜுன். பிறகு, அவளை அழைத்துக்கொண்டு அனந்த்பூரை நோக்கிப் புறப்பட்டான். மிருதுளாவின் ஊகம் தவராகக் கூட இருக்கலாம். மகளைத் தேடி அந்த பெண்மணி அங்குகூட சென்றிருக்கலாமே!
அர்ஜுன் சொன்ன பிறகுதான் மிருதுளாவிற்கு அப்படியும் நடந்திருக்கலாம் என்று தோன்றியது. ஒருவேளை மிருதுளாவை காணவில்லை என்று செய்தி கிடைத்ததும் அவளைத் தேடி கூட அவசரமாக கிளம்பி இருக்கலாம் தானே? அதற்கும் வாய்ப்பு உள்ளதே. இப்போது இதுதான் உண்மையாக இருக்கக் கூடும் என்று அவள் மனம் நம்பியது.
Share your Comments here
Comments are closed here.