காஜலிட்ட விழிகளே 14
1908
0
மறுநாள் நண்பனுடன் காலை உணவருந்திவிட்டு வீடு வரும்வரை கார்த்திக் பைக்கை நிதானமாக ஓட்டிக்கொண்டு வந்தான். மிக நிதானமாக. அருகில் சென்ற ஒரு லேடிபேர்ட் சைக்கிள் அவர்களை சுலபமாக முந்திச் சென்றது. அந்த அளவு நிதானமாகச் சென்றான்.
வீட்டிற்குள் சென்றதும் “கார்த்திக் என்ன பேசவே மாட்டிக்கிற? வீட்டிற்குள் இருந்தால் உம்மென்று இருக்க என்றுதான் வெளியில் போனதே. இன்னும் உன் மூட் சரியாகலையாடா? இன்றைக்கு சன்டே. ஞாபகம் இருக்கா? அன்பு இல்லத்திற்காவது போகலாமே.. ”
“ம் ஞாபகம் இருக்கு! ஸ்ருதி வரமாட்டாடா! என்மேல் கோபமாக இருக்கா. ”
“ஸ்ருதி அப்பாகிட்ட என்ன காரணம் சொன்ன? அன்பு இல்லத்திற்கு போகலையா என்று நாளை உனக்கு ஃபோன் போட்டுக் கேட்பாரே? ”
“காய்ச்சல் என்று சொல்லியிருக்கேன். ”
“அடுத்த சன்டே? என்ன பண்ணப்போற? அப்பவும் காய்ச்சல் என்று சொல்வியா? ”
“அடுத்த சன்டே காய்ச்சலில் செத்துட்டேன் என்று சொல்லப்போறேன்! விடுடா.. என்ன எல்லாரும் கேள்வி கேட்குறீங்க? இது என்னோட பெர்சனல் மேட்டர். நீ தலையிடாதே. எனக்குப் பேச பிடிக்கலை. சும்மா தொண தொணன்னு பேசிகிட்டு.. எப்போ பாரு என் விஷயத்தில் கேலி பேசிகிட்டு.. ஐ ஹேட் யுவர் சில்லி ஜோக்ஸ்.. அந்த லைட்டை ஆஃப் பண்ணு. தலை வின்னு வின்னுன்னு தெறிக்குது.”
தருண் விளக்கை அணைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
கார்த்திக் ஒரு மணி நேரம் கழித்து டி.வி பார்க்க ஹாலுக்கு வந்தபோது தருண் அறையில் தனது துணிமணிகளை ஒரு நாகரிகமான பையில் அடுக்கிக் கொளண்டிருந்தது தெரிந்தது. அவன் அறைக்குள் சென்றவன் விஷயத்தை யூகித்துவிட்டு ,
“ சாரி தருண். ” என்றான்.
“சரி விடு! நான் ஒரு மாசம் என்கூட வேலை பார்க்கும் விமல் ரூமில் இருந்துக்குறேன். உனக்கும் ஸ்ருதிக்கும் கொஞ்சம் பிரச்சனை சரியான பிறகு வர்றேன். உங்க சண்டையானால் நமக்கும் எப்போ பார் சண்டைதான் வருது.”
“அதான் சாரி கேட்டுட்டேன் தானே? இந்த விஷயத்தை இப்படியே விட்டிடுக்கூடாதா தருண்? ”
“நானும்தான் மன்னிச்சிட்டேன் என்று சொல்லிட்டேனே. நீயும் இந்த விஷயத்தை இப்படியே விட்டிடு கார்த்திக். ”
சரியான கோபத்தில் இருக்கான் என்பதை புரிந்து கொண்ட கார்த்திக் அமைதியாக தனது ரூமிற்குள் நுழைந்துவிட்டான்.
தருண் கிளம்பும் முன் கார்த்திக்கின் அறைக்கதவைத் தட்டி உள்ளே நுழைந்தான்.
“கார்த்திக் நான் கிளம்புறேன். உங்க பிரச்சனை முடியட்டும். சில நேரங்களில் கொஞ்சம் தனிமை தேவைப்படும் கார்த்திக். அதான் நான் போறேன். சரியாடா? நீயும் ரொம்ப டிஸ்டர்ப் ஆகியிருக்க. அதான்! சரியாடா மச்சி? ”
கார்த்திக் எதுவும் பேசாமல் பேன்டிலிருந்து லுங்கிக்கு மாறினான்.
“டேய். நோ ரிகெரட்ஸ். சரியா? ஒரு மாசத்தில் எல்லாம் சரியாகிடும். உனக்கு இப்ப தேவை கொஞ்சம் தனிமை. நான் பிரச்சனை முடிந்ததும் உடனே வந்திடுறேன். ” என்று மீண்டும் காரணம் சொன்னான் தருண்.
கார்த்திக் அவனிடம் “கதவைத் தட்டிட்டு இப்ப நீ உள்ளே வந்த தருண்! இனிமேலும் நீ திரும்ப இங்க வந்திடுவ என்று நினைத்தால் நான் ஒரு பிக் ஃபூல். இன்றைய விஷயத்தை விடு. உனக்கே தெரியும் நானும் என் அக்காவும் எவ்வளவு கிலோஸ் என்று! உன்கிட்ட நான் சாகப் போறேன்னு சொல்லி கோபப்பட முடியும்! ஆனா என் அக்காகிட்டக்கூட இப்படி பேச முடியாதுடா! ”
தருண் வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
முகத்தில் தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தவன் கார்த்திக்கைப் பார்த்துச் சொன்னான் “ஒரே வியர்வை கார்த்திக். கண்ணுகூட வேர்த்திடுச்சுன்னா பார்த்துக்கோயேன். ரொம்ப புளுக்கமாக இருக்குல்ல? அந்த ஏ.சியை ஆன் பண்ணுடா.. நான் சொல்லிட்டே இருக்கேன். மண்ணு மாதிரி உட்கார்ந்திருக்க! இரு நானே ஆன் பண்றேன். உனக்கும் சேர்த்து எதிர் ஹோட்டலில் இட்லி சொல்லியிருக்கேன். வா சாப்பிட்டு முடிச்சிடுவோம்.. ”
“தாங்க்ஸ்டா மச்சி! ”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் இட்லி வெறும் இருபது ரூபாய்தான்! ”
Comments are closed here.