நிழல்நிலவு- 39
8877
0
அத்தியாயம் – 39
அனந்த்பூருக்கு அவர்கள் வந்து சேர்ந்த போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. அந்த வீட்டை பார்த்ததுமே மிருதுளாவிற்குள் சின்ன நடுக்கம் தோன்றியது. அன்று இரவு உயிர் பயத்தில் ஓடிவந்து, இந்த இடத்தில் தான் அர்ஜுனின் காரில் ஏறினாள். அன்று மட்டும் அவள் அந்த காரில் ஏறாமல் இருந்திருந்தால் இன்று இப்படி அன்னையை தேடி தவிக்காமல் இருந்திருக்கலாம் என்று என்னும் போதே அர்ஜுனையும் சந்தித்திருக்க முடியாது என்கிற எண்ணமும் கூடவே எழுந்தது. கனத்த மனதை பெருமூச்சால் சீராக்க முயன்றபடி அவன் தோளில் சாய்ந்தாள். கேரேஜில் காரைவிட்டு எஞ்சினை நிறுத்தியவன் அவள் பக்கம் திரும்பி, “என்ன ஆச்சு?” என்றான் கனிந்த குரலில். அவள் எதுவும் இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
“உள்ள போகலாமா?”
“ம்ம்ம்” என்று முணுமுணுத்தவள் மிகவும் சோர்ந்து போயிருந்தாள். நாள் கணக்காக அடிபட்டக் கையேடு தொடர்ந்து வண்டி ஒட்டிக் கொண்டிருந்தாலும் அர்ஜுனிடம் அந்த கலைப்புத் தெரியவில்லை. ஷாப்பிங் பைகளோடு அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தான்.
நவீன வசதிகளுடன் கூடிய ஒற்றை படுக்கையறை கொண்ட சின்ன வீடு. மிருதுளாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. காடுமேடெல்லாம் அலைந்தது திரிந்துவிட்டு வீடு திரும்பியது போல் மிகவும் இதமாக உணர்ந்தாள்.
“அதுதான் பெட்ரூம். உள்ளேயே ரெஸ்ட்ரூம் இருக்கு. ஃப்ரீயா இரு… இது உன்னோட வீடு. ஓகே?” – அவளுடைய உணர்வை அப்படியே பிரதிபலிப்பது போல் அவன் பேசினான்.
மிருதுளாவின் முகத்தில் மென்புன்னகை மலர்ந்தது. ஆமோதிப்பாக தலையை அசைத்துவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள்.
“மிருதுளா…” – அவன் குரல் இடையிட நின்றது திரும்பினாள். அவளைத் தொடர்ந்து அவனும் உள்ளே வந்தான். கையிலிருந்த ஷாப்பிங் பைகளை அவளிடம் கொடுத்துவிட்டு கீசரை ஆன் செய்தான். “வாட்டர் ஹீட் ஆக பத்து நிமிஷம் ஆகும்… டவல் சோப் எல்லாம் இங்க இருக்கு… வேற ஏதாவது வேணுமா?” என்று அவளுடைய தேவைகள் ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தினான்.
மனதின் நெகிழ்வை வார்த்தைகளில் வெளிப்படுத்தாமல், “இல்ல… வேற எதுவும் வேண்டாம்” என்று கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
மிருதுளா குளித்துவிட்டு வெளியே வரும் பொழுது படுக்கை படுக்கைவிரிப்பும் தலையணை உரைகளும் புதிதாக மாற்றப்பட்டிருந்தது.
அறையைவிட்டு வெளியே வந்தாள். அர்ஜுன், ஹால் சோபாவில் அமர்ந்து தன் கையில் போடப்பட்டிருந்த கட்டை பிரித்து காயத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.
“இப்போ பரவால்லையா?” – அருகில் நெருங்கி காயம் ஆறியிருக்கிறதா என்று பார்த்தாள் மிருதுளா. பயணத்தின் போது இடையில் ரெண்டு முறை, சில மணிநேரங்கள் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்கள். அப்போதெல்லாம் அர்ஜுன் தன் கைக்கு வைத்தியம் செய்துக்கொள்ள தவறவில்லை. அதனால் தானோ என்னவோ காயம்பட்ட கையேடு அவன் அவ்வளவு ஸ்ட்ரெயின் செய்தும் காயம் நன்றாகவே ஆறியிருந்தது.
“ம்ம்ம்… சின்ன காயம்… சதையில பட்டதுதானே…” – நிமிர்ந்து அவள் முகம் பார்த்துக் கூறியவன், சிகப்பேறியிருந்த அவள் கண்களைக் கண்டுவிட்டு, “ரொம்ப டயர்டா இருக்க… டைனிங் டேபிள்ள க்ரீன் டீயும் பிரெட்டும் வச்சிருக்கேன். சாப்பிட்டு போயி படு” என்றான்.
அவள் மறுத்து, “இல்ல… நா உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன். ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்றாள்.
“இனி கட்டு தேவையில்லை… சின்னதா பேண்டெய்ட் ஓட்டினா போதும். இதெல்லாம் எனக்கு பழக்கம் தான்… நா மேனேஜ் பண்ணிப்பேன். நீ சாப்பிட்டு படு… நா குளிச்சிட்டு வரேன்” என்று கூறிவிட்டு உள்ளே செல்ல எத்தனித்தவன், நின்று திரும்பி, “வெயிட் பண்ண கூடாது…” என்று கண்டித்துக் கூறிவிட்டுச் சென்றான்.
மிருதுளா ஹாஸ்ட்டலிலேயே வாழ்க்கையை கழித்தவள் இப்படிப்பட்ட அக்கறையையும் உபச்சாரத்தையும் அவள் தாயிடம் கூட அனுபவித்ததில்லை. இந்த மூன்று நாட்களில் அவள் பார்வையில் அர்ஜுன் மிகவும் உயர்ந்துவிட்டான்… மனதிற்குள் ஆழமாய் இறங்கிவிட்டான்.
மறுநாள் காலை மிருதுளா கண்விழிக்கும் போது எங்கிருக்கிறோம் என்பதை உணரவே சில நொடிகள் பிடித்தது. அந்த அளவிற்கு ஆழ்ந்து உறங்கியிருந்தாள். எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு அறையிலிருந்து அவள் வெளியேறிய போது அர்ஜுன் ஹெட்போனை மாட்டிக் கொண்டு லேப்டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தான்.
இரவு மிருதுளா உறங்கச் செல்வதற்கு முன் அவன் படுக்கவில்லையா என்று கேட்ட போது தனக்கு வேலை இருப்பதாகவும் முடித்துவிட்டு படுப்பதாகவும் கூறியவன் படுக்கவே இல்லை என்று அவன் அமர்ந்திருந்த நிலையிலேயே தெரிந்தது.
அவள் அருகில் வரும் பொழுதே, “மார்னிங்…” என்றான் நிமிர்ந்து பார்க்காமலே.
காதில் ஹெட்போன்… கண்களுக்கு லேப்டாப்… அப்படியிருந்தும் அவளுடைய வருகையை உணர்ந்துவிட்டானே! – மிருதுளாவின் புருவங்கள் மேலேறின.
“தூங்கவே இல்லையா?” – வருத்தத்துடன் கேட்டபடி அருகில் வந்து அவன் தோள் தொட்டாள்.
“ப்ச்… கொஞ்சம் வேலை…”
‘கொஞ்சம் வேலையா! இப்படி கூட ஒரு மனிதன் வேலை செய்வானா! அப்படி என்னதான் வேலை! துப்பாக்கி பிடிக்கிற கை லேப்டாப்பில் என்ன செய்துகொண்டிருக்கிறது!’ என்கிற சிந்தனையுடன் கணினி திரையைப் பார்த்தாள்.
நூற்றுக்கணக்கான ஆடியோ பைல்கள் வரிசைகட்டி நின்றன. அதை ஒவ்வொன்றாக கேட்டு ஏதோ கோட் வர்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான்.
‘இரவு முழுக்க இதைத்தான் செய்து கொண்டிருந்தானா! கடவுளே!’ – பரிதாபமாக இருந்தது. எப்படி அவனுக்கு மண்டை வெடிக்காமல் இருக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது.
“அர்ஜுன்…” – தன்னை மீறி அவள் குரல் உயர்ந்தது. ஹெட்போனையும் மீறி அது அவன் செவியை எட்டிவிட்டது போலும்.
“ம்ம்ம்” என்றபடி கணினியிலிருந்து கண்களுக்கும் காதுகளுக்கும் விடுதலை கொடுத்துவிட்டு நிமிர்ந்தான்.
வீங்கியிருந்த அவன் முகத்தையும் கோவைப்பழம் போல் சிவந்திருந்த கண்களையும் கண்டு திகைத்தாள் மிருதுளா.
“குண்டடி பட்டு ரெண்டே நாள் தான் ஆச்சு… அந்த ரெண்டு நாளும் தொடர்ந்து ட்ரைவ் பண்ணிட்டிருந்தீங்க. வீட்டுக்கு வந்த பிறகாவது ரெஸ்ட் எடுக்கக் கூடாதா? வொய் டூ யு டூ திஸ்?” – கடுமையான கோபம் வெளிப்பட்டது அவளிடம்.
உருட்டி விழிக்கும் அந்த நீள்வட்ட கண்களையும், துடிக்கும் செரிப்பழ இதழ்களையும் ரசனையுடன் பார்த்தவன், “ப்ரிட்டி..” என்றான் கிறக்கமாக.
“வாட்!” – அவளால் நம்பவே முடியவில்லை. சரியாகத்தான் கேட்டோமா என்று கூட தோன்றியது. ஆனால் அவனுடைய சிவந்த… சோர்ந்த… விழிகளில் தெரிந்த குறும்பும் நெருக்கமும் அவளுக்கு உண்மையை உறக்கக் கூறியது.
“திரும்ப கேட்கணுமா?” – தடித்த அவன் இதழ்களில் மென்புன்னகை எட்டிப்பார்த்தது.
சட்டென்று திரும்பிக் கொண்டாள் மிருதுளா. ‘பேச்சை பாரு… திருடன்… ரெஸ்ட் எடுக்கக் கூடாதான்னு கேட்டா ப்ரிட்டியாம்… மேனிப்புலேட்டர்…’ – முணுமுணுத்து கொண்டே சமையலறைக்கு சென்று பாத்திரங்களை உருட்டினாள்.
அடுத்த சில நிமிடங்களில் அர்ஜுன் தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்த போது இரண்டு கைகளிலும் பீங்கான் கப்புகளோடு அவன் முன் வந்து நின்றாள்.
“பால் இல்ல… அதான் திரும்பவும் க்ரீன் டீ… ம்ம்… குடிங்க” – தனக்கு ஒன்றை வைத்துக் கொண்டு அவனிடம் ஒன்றை நீட்டினாள்.
சட்டென்று இறுகிய அர்ஜுனின் முகம் உடனே இயல்பாக மாறியது. ஒரு நொடி தான் என்றாலும் அவனிடம் தோன்றி மறைந்த மாற்றத்தை கவனித்துவிட்டாள் மிருதுளா.
காரணத்தை அவள் யோசிப்பதற்கு முன்பே, “சா…ரி…” என்று ராகம் போட்டபடி எழுந்தவன், அவள் நெற்றியோடு நெற்றியை லேசாக முட்டி, “நாட் இன் மூட்” என்றான்.
“டீதானே! இதை குடிக்க என்ன மூட் வேணும்? நைட்டெல்லாம் தூங்கலை… தலை வலி போகுமே! ”
“தலைவலி போக, டீ குடிக்கணும்னு யார் சொன்னது? பத்து நிமிஷம் மெடிட்டேட் பண்ணினா ரெண்டு மணிநேரம் தூங்கின மாதிரி. தலைவலியெல்லாம் பறந்துடும்” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
ஒன்றும் புரியாமல் அவன் முதுகை வெறித்துக் கொண்டு நின்றவள் மனதில், ‘சமையலில் யாரையும் நம்புவதில்லை என்றானே!’ என்கிற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
‘மிராஜ்பாடாவில் டேவிட் கூட பாபிம்மாவை சமைக்க விடவில்லையே! இந்த கூட்டத்தில் எல்லோருமே இப்படித்தானா?’ என்று யோசித்த போதுதான், ‘ஐயோ! டேவிட்டிடம் சொல்லிவிட்டு வரவில்லையே! எத்தனை சிரத்தையாக நம்மை பார்த்துக் கொண்டான்! ஒரு நன்றி கூட சொல்லவில்லையே!’ என்று பதறினாள்.
உடனே அர்ஜுனை தேடி கொண்டு அவன் பின்னாலேயே ஓடி வந்தாள்.
குளிக்க செல்வதற்கு உடைகளை எடுத்துக் கொண்டிருந்தவன், “அர்ஜுன்” என்று குரல் கொடுத்தபடி அவள் வேகமாக உள்ளே வருவதைக் கண்டு, “என்ன ஆச்சு?” என்று முன்னே வந்தான்.
“அர்ஜுன், நாம டேவிட்கிட்ட சொல்லாமலே கிளம்பிட்டோம்…” – அவள் குரலில் பதட்டம் தெரிந்தது.
“நாம அங்கிருந்து கிளம்பி நாலு நாள் ஆச்சு. இன்னைக்கு என்ன திடீர்ன்னு இவ்வளவு டென்ஷன் ?”
அவள் சங்கடத்துடன் மௌனமானாள். அவ்வளவு உதவி செய்தவனை ஒருமுறை கூட நினைக்கவில்லை என்று சொல்லவே அவளுக்கு வாய் வரவில்லை.
“நாம எவ்வளவு டென்ஷன்ல இருந்தோம்… யாரோ நம்மள ஃபாலோ பண்ணி வந்து ஷூட் பண்ணிட்டாங்க… அம்மாவை காணும்… எங்க போனாங்கன்னு எதுவும் தெரியல… இவ்வளவுக்கும் நடுவுல… டேவிட்… எனக்கு நியாபகமே வரல அர்ஜுன்” – அவள் குரல் வெகுவாய் இறங்கிவிட்டது.
அவள் கூறியது அத்தனையும் உண்மை என்றாலும் முதல் நாள் முழுக்க அவளுக்கு எந்த பிரச்சனையும் தெரியாது… மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தாள். ஆனாலும் டேவிட்டின் நினைவு அவளுக்கு வரவில்லை. அந்த அளவுக்கு அவனுடைய அருகாமை அவளை பாதிக்கிறது… வாவ்… – அர்ஜுனின் மனம் துள்ளியது.
“தட்ஸ் ஓகே… அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை” – இலகுவாகக் கூறினான்.
“இல்ல அர்ஜுன்… பாபிம்மாகிட்டக் கூட எதுவும் சொல்லல… ரெண்டு பேரும் பயந்திருப்பாங்க… கண்டிப்பா தேடியிருப்பாங்க… ப்ளீஸ் அர்ஜுன்… போன் பண்ணுங்க… நாம சேஃபா இருக்கோம்னு சொல்லுங்க” – வற்புறுத்தினாள்.
“அவனை இப்போ காண்டாக்ட் பண்ண முடியாது”
“ஏன்?”
“டெல்லி போயிருக்கான். நான் விட்டுட்டு வந்த வேலையை முடிக்க”
“நாம எங்க இருக்கோம்னு தெரியுமா?”
“எங்க இருக்கோம்னு தெரியாது. சேஃபா இருக்கோம்னு தெரியும்”
“ஓ!” – அவர்கள் இருவரும் தொடர்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் நிம்மதியடைவதற்கு பதில் மனம் இன்னும் கவலைப்பட்டது. அர்ஜுன் தப்பித்துவிட்டான். மொத்த குற்றமும் இப்போது அவள் பக்கம் திரும்பிவிட்டது. அவளும் தான் இவ்வளவு நன்றிகெட்டவளாக இருந்திருக்க வேண்டாம். – மனசாட்சி குத்த முகம் வாடிப்போனாள் மிருதுளா.
Share Your Comments Here
Comments are closed here.