Share Us On
[Sassy_Social_Share]நாளைய விடியல் நல்லதாய் அமையட்டும்-1
2335
0
“ டிங் டாங்… டிங் டாங்…” காலிங் பெல் சத்தம் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.தியானம் செய்து கொண்டிருந்த ரகோத்தமனின் புருவம் முடிச்சிட்டிருந்தது.நெற்றியில் ஏகப்பட்ட சுருக்கம்.தன் தியானம் கலைந்து விட்டதே என்ற கோபத்தில் ஏற்பட்டது.: இந்த முரளி எங்கே சென்றான்?” கண்களைத் திறக்காமலே மனம் யோசித்தது. சில நிமடங்களுக்கு பிறகு மறுபடியும் “டிங் டாங்… டிங் டாங்” என்ற அலறல் கேட்டதும் ரகோத்தமன் எழுந்துவிட்டான்.வெள்ளைநிற பைஜாமா குர்தாவில் இருக்கும் அவனைப் பார்த்தால் ஹிந்திப் பட ஹீரோவை நினைவுபடுத்தியது. தன் தியான கம்பிளியை மடித்து வைத்தவன்,அருகில் இருந்த காலணியினுள் அவசரமாக தனது கால்களை நுழைத்து விட்டு,தன் அறையிலிருந்து வெளியேறினான்.கூடத்தைக் கடந்து கதவைத் திறந்தான்
வெளியே கையில் ஒரு நீல நிற பைலை தன் கைகளில் அணைத்துக் கொண்டு ஒரு நடுத்தர வயது பெண் நின்று கொண்டிருந்தாள்.
“நீங்கள்…?” என்ற கேள்வியை முன் வைத்துவிட்டு அவளை அவசரமாக அளவெடுத்தான் ரகோத்தமன்
வெள்ளை நிறப் புடவையில், வானத்தின் நீல நிற பூக்கள் இரைந்து கிடந்தன.தோளில் ஒரு கைப்பை தொங்கிக் கொண்டிருந்தது.காதுகளில் ஆடாமல் அசையாமல் ஒரு கம்மல் இடம் பெற்றிருந்தது.இரண்டு புருவத்திற்கு இடையே சிறு பொட்டு கூந்தலைத் தூக்கி கொண்டையிட்டிருந்தாள்.பார்க்க கண்ணியமாகவே தோன்றியது அவனுக்கு.
“இது…மிஸ்டர்… ரகோத்தமன் சார் வீடு தானே” அவளது சந்தேகமும்,பயமும் கலந்து வார்த்தைகளை அவனது செவி உள்வாங்கிக் கொண்டது
“ஆமாம்… நான் தான் ரகோத்தமன்”
அவனது பதிலில் அவளது முகம் சற்று பிரகாசமானது
“சார்! என்னுடைய பெயர் லாவண்யா,ஒரு நர்ஸ் வேண்டும் என்று நீங்கள் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்தேன்”
உடனே எல்லாம் புரிந்தது அவனுக்கு.
“உள்ளே வாங்க ப்ளீஸ்” கதவை நன்றாக திறந்துவிட்டு அவளுக்கு வழிகாட்டினான்
உள்ளே சென்றவள்,அவன் காட்டிய சோபாவில் அமர்ந்தாள் அவளை அமரச் சொல்லிவிட்டு அவன் உள்ளே எங்கோ சென்றுவிட்டு சில நிமடங்களில் வந்தான்.வந்தவன்,அவளின் எதிரே இருந்த சேரில் அமர்ந்து கொண்டு அவளிடம் பேசலானான்
“உங்களுடைய சர்டிபிகேட் நான் பார்க்கலாமா?” என்றவனது நீட்டிய கைகளில்,அந்த நீல நிற பைலை திணித்தாள்.
அதை வாங்கியவன்,அதில் ஒரு வரியை கூட விட்டுவிடாமல் படிக்கும் நோக்கத்தோடு முழு வீச்சாய் அதற்குள் புதைந்துவிட்டான்
சில நிமடங்களில் அவளுக்கு ஜூஸ் வழங்கப்பட்டது.ரகோத்தமநின் கண் அசைவில் கிடைத்த விருந்தோம்பலில் அதைக் குடித்து முடித்தாள்
அதற்கடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அந்த அறையை வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தாள் ரொம்பவும் மெனக்கெட்டுதான் கட்டி இருப்பார்கள் என்று தோன்றியது
ரொம்பவும் பெரிய கூடம் அது.கூடத்திலிருந்தே மாடிக்கு படிகள் கட்டப்பட்டிருந்தன.கீழிருந்து பார்த்தாலே மாடியில் இருக்கும் அறைகள் நன்றாக தெரிந்தன.எல்லா அறைக் கதவும் அடைக்கப்பட்டிருந்தது.கூடத்தின் ஒரு மூலையில் ஒரு கதவு இருந்தது.அதற்குள் சென்று விட்டு வந்தபின்தான் ரகோத்தமன் பைலை கேட்டான்.அப்படியானால் அது தான் சமையலறையாக இருக்க வேண்டும்.இந்த கூடத்தில் ஏன் ஒரு போட்டோ கூட இல்லை.அந்த பையன் முகிலனின் படம் கூட இல்லையே.அவனைப் பார்க்கும் ஆவல் அவளின் மனதினுள் எழுந்தது.அவன் தானே அவளது குடும்பக் கஷ்டத்தை தீர்ப்பவன்.அவளது சிந்தனையை கலைத்தது ரகோத்தமனின் கேள்வி
“உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?”
“ஐந்து வயதில் குழந்தையே இருக்கிறது சார்”
“ரொம்பவும் நல்லது…கணவர் என்ன செய்கிறார்?”
சொந்தமாக… தொழில் செய்கிறார் சார்”
“ஓ… சந்தோசம்! உங்களது சர்டிபிகேட்… எல்லாம் சரியாக இருக்கிறது.விளம்பரத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள் முகிலனைப் பற்றி…. வாங்களேன்.அவனறைக்கு செல்வோம்.அவன் இன்னமும் எழுந்திருக்க மாட்டான்” பேசிக்கொண்டே முன்னே சென்றவனைப் பின் தொடர்ந்தாள்.
“உங்கள் வீடு எங்கே இருக்கிறது?” என்றவனின் கேள்விக்கு
“பக்கத்தில் தான் சார் ரெண்டு பஸ் ஸ்டாப் தள்ளி”
“ஓ… ஹோ.. சரி காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் நீங்கள் இங்கே வந்து விட வேண்டும்,மாலை ஏழு மணிக்கு தான் நான் வேலையில் இருந்து வருவேன்.நான் வந்த உடனே நீங்கள் கிளம்பிவிடலாம்.சில நாள் கொஞ்சம் தாமதமும் ஆகலாம். அப்பொழுதெல்லாம் நீங்களும் தாமதிக்க நேரிடும்.இதில் உங்களுக்கு பிரச்சனையில்லையே”
“இல்லை சார்”
“உங்கள் பிள்ளையும்,கணவரையும் கூட நீங்கள் பார்க்க வேண்டுமே!”
“நான் சமாளித்துக் கொள்வேன் சார்” என்றவளின் கண்களில் சோகத்தின் சாயல் தோன்றி மறைந்தது போல் ரகோத்தமன் உணர்ந்தான் .என்னவாக இருக்கும் என்று அவன் யோசனையில் ஈடுபட்டதுமே “ச்சே… இது அவர்கள் குடும்ப விவகாரம். இதில் நாம் யோசிக்க என்ன இருக்கிறது? என் மகனைப் பற்றித்தான் நான் இப்போது யோசிக்க வேண்டும் என்ற முடிவிற்கு அவன் வருவதற்கும் முகிலனின் அறை வாயில் தென்படுவதற்கும் சரியாக இருந்தது.
பூட்டாமல் சாத்தப்பட்ட கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ரகோத்தமன். அவனைப் பின் தொடர்ந்தாள் லாவண்யா. அறை இன்னமும் இருளில் தான் இருந்தது.ரகோத்தமன் ஏதோ ஸ்விட்ச்சை போட்டதும் அந்த அறை முழுவதும் வெளிச்சத்தில் நிறைந்தது. அறையை சுற்றும்முற்றும் அளவெடுத்தவளின் கண்கள் அவள் காணத்துடிக்கும் குழந்தையை தேடியது
மூலையில் கிடந்த கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை பார்க்கையில் அவளது கண்கள் லேசாக கலங்கியது. “ அய்யோ பாவம் இந்த குழந்தைக்கா மனநலம் சரியில்லை, ஆண்டவா உனக்கு கல் நெஞ்சமா? என்றவளின் இதயப் புலம்பலை ஓரம் தள்ளி ரகோத்தமனின் பேச்சை கவனிக்க முனைந்தாள்.
“இவன் பிறந்து மூன்று வயதாக இருக்கும் பொழுதே இவனது அம்மா எங்களை பிரிந்து விட்டாள். எல்லாம் இவனை பற்றிய கவலை தான். எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு இவனைப் பெற்று வளர்த்தோம். ஆனால் இவனது மூளையில் உள்ள நரம்பில் சிறு பிரச்சனை இருப்பதால் இவனால் மற்ற குழந்தைகளைப் போல் இருக்க முடியவில்லை.அதை நினைத்து நினைத்தே என் சத்யா போய்விட்டாள். இப்போழுது இவனுக்கு தேவை எல்லாம் அன்பு மட்டும் தான் .அதற்காகத்தான் பெண் நர்ஸ் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்தோம். நல்லவேளையாய் உங்களுக்கும் இவன் வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.அதனால் நிச்சயம் இவனை உங்களால் நன்றாக புரிந்துகொள்ள முடியும். என் அம்மாவிற்கு வயதாகி விட்டதால்தான் இந்த முடிவு.”
“புரிகிறது சார்,உங்கள் மகனை நிச்சயமாய் நான் நன்றாக பார்த்துக் கொள்வேன்.”
“ரொம்பவும் நன்றி லாவண்யா மேடம், இவனைப் பற்றிய கவலையிலேயே என் பிசினஸை சரியாக கவனிக்க முடியவில்லை இனி கொஞ்சம் நிம்மதியாக இருப்பேன். உங்கள் சம்பளம் பற்றிய ஆர்டர் எல்லாம் நாளை காலை நீங்கள் வேலையில் சேரும் பொழுது ரெடியாக இருக்கும்”
“நாளை வரை ஏன் தாமதிக்க வேண்டும்? இன்றே வேலையில் சேர்ந்து விடுகிறேன் சார்” என்றவளை, ஒரு நொடி ஆச்சர்யமாக பார்த்தான். ரகோத்தமன் மனதிற்கு ரொம்பவும் நிம்மதியாக இருந்தது
“உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நீங்கள் நிச்சயம் இன்றே வேலையில் சேரலாம்”
“ரொம்பவும் நன்றி சார்”
“ஆங்… அப்புறம் இந்த வீட்டில் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.முகிலனிற்கு வேண்டிய உணவை சமையல்காரம்மாவிடம் சொல்லிவிட்டால் அவர்கள் செய்து கொடுப்பார்கள். தோட்டம், ஸ்விம்மிங் பூல்,பக்கத்தில் இருக்கும் பார்க் இப்படி எல்லா இடத்திற்கும் தாராளமாய் போகலாம், வாங்க! வீட்டில் மற்றவர்களுக்கும் உங்களை அறிமுகம் செய்து வைக்கிறேன்”
“ஒரு நிமிஷம் சார்! மணி எட்டாகுதே,இத்தனை நேரம் தூங்குவது நல்ல பழக்கம் இல்லையே.நாம் முதலில் முகிலனை எழுப்பலாமே!” சொன்னவள், அவனது அனுமதியை எதிர்பார்க்காமல் கட்டிலை நோக்கி விரைந்தாள்
அவசரமாக அவளை தொடர்ந்தவன்,
“நில்லுங்கள் மேடம், அவன் உங்களைப் பார்த்து எப்படி நடந்து கொள்வான் என்று தெரியவில்லை. அதனால் நானே எழுப்புகிறேன்”
கட்டிலில் ஒரு பொம்மையைப் போல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த முகிலனை நெருங்கியவன், அவன் நெற்றியை தொட்டு வருடினான. அவன் கண்கள் கலங்கியதோ என்ற சந்தேகம் பக்கவாட்டில் நின்ற லாவண்யாவிற்கு தோன்றியது.உடனே தலையை சிலுப்பிக் கொண்டவன்,
“முகில்… முகில்… எழுந்திரிப்பா… உனக்கு ஒரு புது ஆன்ட்டியை காட்றேன்”
இரண்டு நிமிடம் நீண்ட அவனது பேச்சாலும் தொடுகையாலும் மெல்ல கண் விழித்தான் முகிலன். உதட்டோரம் வழிந்த உமிழ்நீரை பக்கத்தில் இருந்த கைக்குட்டையை எடுத்து துடைத்துவிட்டான் ரகோத்தமன்.
“நாநா… நாநா..நாநா…” என்று முகத்தை இப்படியும் அப்படியும் திருப்பிக் கொண்டு உட்கார்ந்து கொண்டே குதித்த முகிலனைக் கட்டுப்படுத்த ரகோத்தமன் ரொம்பவும் திணறினான்.அவனுக்கு உதவும் நோக்கத்தில் லாவண்யா முகிலனின் தோள்களை பற்றினாள். அவ்வளவுதான்… உடனே அவனது கரங்கள் லாவண்யாவின் கன்னத்தில் படிந்தன.அடுத்த நொடி அவளது கையில் அவனது பல் ஆழமாக, பட்ட தடம் தெரியும் அளவிற்கு கடித்து வைத்தான்.
நடப்பது இதுதான் என்று ரகோத்தமன் புரிந்து கொண்டு முகிலனை கட்டுபடுத்துவதற்குள் இத்தனையும் நடந்து முடிந்தே விட்டது.
“ஆ” என்று அலறலுடன் கைகளை விடுவித்துக் கொண்டவள்,இரேண்டடி தள்ளி நின்றாள்”
“சா…சாரி…மேடம்…” திக்கித் திணறி லாவண்யாவிடம் மன்னிப்புக் கேட்டான்.
“வாட் இஸ் திஸ் முகிலன்,பிஹவ் யூவர் செல்ப்” என்ற வார்த்தைகளை கோபமாக வெளியேற்றினான்
“சார்.. ப்ளீஸ்… குழந்தைக்கு என்ன தெரியும்? தவறு என் மேல்தான். நீங்கள் அவனிடம் என்னை அறிமுகம் செய்யும் முன் அவனைதொட்டது என் தவறு தான் வெளியாட்கள் குழந்தைகளிடம் நெருங்கும் பொழுது இப்படிப் பட்ட பாதுகாப்பு யுக்தி தெரிந்திருப்பது நல்லது தானே” என்று சர்வ சாதரணமாக பேசும் லாவண்யாவை அதியசமாக பார்த்தான்.
எல்லாவற்றிலும் நிறை காண்பது இவளது பிறந்த குணம் போலும் என்றெண்ணியவன்,
“முகில் இந்த ஆன்ட்டிதான் உனக்கு இனிமே பிரெண்டு, இவங்க கூட தான் நீ நாள் பூரா என்ஜாய் பண்ணப் போற ஓ.கே வா?
“நா… நா… நா… நா…. நா… நா…….” என்று மறுபடியும் வேண்டாம் என்பதை அவன் மொழியில் வெளிப்படுத்தினான்
“இல்லை கண்ணா… இவங்க ரொம்பவும் நல்லவங்க பழைய கீதா மாதிரி கிடையாது.உன்னை நிச்சயமாய் அடிக்க மாட்டங்க வெளியே வாக்கிங் எல்லாம் கூட கூட்டிப்போவாங்க.உனக்கு பிடித்த பாட்டெல்லாம் டெய்லி போட்டு காட்டுவாங்க சரிதானா?” என்று கொஞ்சலாய் பேசியதற்கும் முகிலன் கட்டுப்படவில்லை
“நா… நா… நா… நா…” என்பதை தவிர வேறு எதுவும் அவன் வாயிலிருந்து வரவே இல்லை. ரகோத்தமனின் முகம் வாடிவிட்டது நல்லவ வெள்ளையாக அப்போது முரளி அங்கே வந்து சேர்ந்தான்
அடடே! சின்னய்யா! எழுந்திட்டிங்களா…? என்ன! சீக்கிரம் எழுந்தீட்டீங்க? சரி வாங்க நாம பிரஷ் பண்ணலாம்!!!
“நா… நா.. நா… நா..”
“அய்யோ! இப்படி எல்லாம் அடம்பிடிச்சா சின்னம்மாவுக்கு பிடிக்காதே! அது உங்களுக்கே தெரியும் தானே”
“…….”
“சரி இப்போ அம்மா பாட்டு போடட்டா…?”
“உ… உ…உ….” இதற்கு மட்டுமே அவனிடம் அனுமதி கிடைத்தது
உடனே டிவிடி பிளேயர் இயக்கப்பட்டு அதிலிருந்து “ என்ன தவம் செய்தனை யசோதா” என்ற ஜானகியின் பாட்டு வெளியேறியது
முகிலனின் முகத்தில் லேசாக சிரிப்பு மலர்ந்தது.
இதை எல்லாம் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு உன்னிப்பாக கவனித்துக் கொண்டு நின்றாள் லாவண்யா. அவளது கண்கள் கலங்கியிருந்தன.அவளும் ஒரு தாய் தானே.
தொடரும்….
Comments are closed here.