Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நாளைய விடியல் நல்லதாய் அமையட்டும்-2

                                                       என் டைரி

அன்புள்ள டைரிக்கு இன்று நான் ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறேன்.எனது மேல் படிப்பிற்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்திருக்கிறது.இதை நான் முடித்து விட்டால் வேலை நிச்சயம் வெளிநாட்டில் தான்.பிறகு என் குடும்பத்தின் அத்தனை பிரச்னையும் நிச்சயம் தீர்ந்து விடும்.தம்பி கண்ணனின் படிப்பு, தங்கை நளினியின் திருமணம், அப்பாவின் மீதி கடன்கள் இப்படி எல்லாம் மறைந்துவிடும்.நாளை தான் நேர்காணல்,இதில் நான் ஜெயித்து,இந்த படிப்பை குறைந்த ரூபாய் செலவில் முடிப்பேன்.நாளைய விடியல் நல்லதாய் விடியட்டும்

 

2

பால்கனியில் நின்று இலக்கில்லாமல் எங்கோ வெறித்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் ரகோத்தமன்.

 

லாவண்யாவை பார்த்த உடனே அவள் நிச்சயம் முகிலனை நன்றாக பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது சத்யா.நீ இல்லாமல் அவன் ரொம்பவும் துவண்டுவிட்டான். ஏ… ஏன் எங்களை விட்டுச் சென்றாய்? எப்படியெல்லாம் பாடுபட்டு முகிலனை நம் மகனாகப் பெற்றோம்.யார் செய்த பாவமோ அவனுக்கு இப்படி ஒரு நிலை.ஆனால் அதையும் கூட எத்தனை பாசிட்டிவாக நீ சொல்வாய்,” இந்த ஸ்பெஷல் சைல்டை கடவுள் நமக்காக கொடுத்திருக்கிறார் ரகு.நம்மிடம் பணமும்,நல்ல மனமும் இருப்பது அவருக்கு தெரிந்திருக்கிறது பாருங்களேன்” என்று சொன்னவுடன் ஒரு சிரிப்பு,சிரிப்பாய் பார். அதில் சோகம்,சந்தோஷம்,பொறுப்பு இப்படி எல்லாம் கலவையாய் தோன்றும். அந்த சிரிப்பை இனி நான் பார்க்கவே முடியாதா? என்னிடமிருந்தும், முகிலனிடமிருந்தும் உன்னைப் பிரித்தானே அந்த கடவுள்,இதற்கு என்ன விளக்கம் கொடுப்பாய்? விதி என்றா? அல்லது இதுவும் நன்மைக்கே என்றா?

 

ட்ரிங்… ட்ரிங்.. அவனது சிந்தனையை கலைத்தது அவனது அறை தொலைபேசி

 

விரைந்து சென்று அதை எடுத்தான் ரகோத்தமன்.தொலைபேசி என்ற பெயர்தான்,ஆனால் அழைப்பு முகிலனின் அறையிலிருந்து தான்.

 

“அய்யா! நான் முரளி பேசுறேன்,கொஞ்சம் சின்னய்யா ரூமுக்கு வாங்களேன்” தொடர்பு துண்டிக்கப்பட்டது.

 

மூளைக்குள் அலாரம் அடிக்க,முகிலனின் அறை நோக்கி விரைந்தான் ரகோத்தமன். அங்கே அவன் கண்ட காட்சி அவனை உறைய வைத்தது. நெற்றியில் வழியும் ரத்தத்துடன் லாவண்யா நின்று கொண்டிருந்தாள்..அவளது கைகள் வழியும் ரத்தத்தை கட்டுபடுத்தும் பணியில் இருந்தன.

 

முரளியோ முகிலனின் கையில் இருந்த ப்ளவர் வாஷை பிடுங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.சட்டேன சுதாரித்து கொண்ட ரகோத்தமன் முகிலனை நெருங்கினான்.

 

“முகில் கண்ணா… ப்ளீஸ் டா… அதை கொடு சொல்றேன் இல்ல”

 

முகிலனின் கண்களில் குரோதம்தான் தெரிந்தது

 

“முரளி” என்ற ரகோத்தமன் கண்களால் ஏதோ பேசினான்.அதைப் புரிந்து கொண்டவனாய் டிவிடி பிளேயரை நெருங்கினான் முரளி.ஆனால்… சிடியில் ஏதோ கோளாறு ஏற்பட்டு உள்ளேயே மாட்டிக் கொண்டு வர மறுத்தது.செய்வதறியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றான் முரளி.

“அடக்கடவுளே… இது வேறு வேலை செய்யலையே என்ன செய்ய” என்ற முரளி, ரகோத்தமனை வேதனையாய் பார்க்க அவனும் புரியாமல் விழித்தான்.

 

“என்ன தவம் செய்தனை யசோதா… எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா…” என்ற கானம் அந்த அறையை நிறைத்தது.

 

முதலில் இருவரும்டிவிடியை உற்றுப் பார்த்தனர். ஆனால் சத்தம் அதிலிருந்து வரவில்லை  என்பது உறுதிப்பட்ட பின்பு இருவரின் கண்களும் லாவண்யாவை அடைந்தன. ஆம்… அவள்தான் பாடிக் கொண்டிருந்தாள். அவளது பாடலில் எல்லோருமே மெய்மறந்து நின்றனர்.

 

சில நிமடங்கள் கரைந்தபின் ரகோத்தமனின் கைகளில் இருந்த தன் கைகளை விடுவித்துக் கொண்ட முகிலன் வேகமாக அவளை நோக்கி ஓடினான்.

 

மறுபடியும் ரசாபாசம் ஆகப் போகிறது என்றுணர்ந்த ரகோத்தமன் அவனைப் பின் தொடர்ந்து ஓடினான்.

 

ஆனால்… அங்கே முகிலன் அவளின் கால்களை கட்டிக் கொண்டு நின்றிருந்தான். அவளும் உடனே அவனைத் தூக்கி தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள். இந்தக் காட்சி இருவருக்குமே மனதில் நெகிழ்ச்சியையும் கண்களில் கண்ணீரையும் வரவழைத்தது.

 

சில நிமடங்கள் நீடித்திருந்த அந்த உணர்ச்சி வெள்ளம் முகிலனின்,

 

“ஊ…ஊ..ஊ…” என்ற விசும்பலில் கலைந்தது.

 

லாவண்யாவின் ரத்தம் வடியும் காயத்தை சுட்டிக்காட்டி “ ஊ…ஊ…” என்று விசும்பிக் கொண்டிருந்தான்.

 

உடனே செயலில் இறங்கியது ரகோத்தமன்தான்.டிராயரைத் திறந்து அதிலிருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்தவன்,வேகமாக ஒரு பஞ்சை எடுத்து டிஞ்சரில் நனைத்து அவளை நெருங்கினான். அவளது நெற்றியில் இருந்த காயத்தின் மேல் பஞ்சை வைத்து அழுந்தத் துடைத்தான். வலி தாங்காமல் கண்களை மூடிக்கொண்டாள். இதயமோ,”சத்யா! நீங்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள், எத்தகைய அன்பான கணவன்,மனைவி இறந்த மறுமாதமே புது மாப்பிளையாக துடிக்கும் ஆண்கள் மத்தியில் இவர் தனி நட்சத்திரம்தான்.மனவளர்ச்சி இல்லாமல் பிறந்த குழந்தையை,சுமை என கருதி அனாதை ஆசிரமத்து தொட்டிலில் போட்டு விடும் ஆண்கள் எத்தனை? ஏன் பெண்களும் தான் எத்தனை? ஆனால் அப்படிப்பட்ட குழந்தையையும், தன் உயிரை விட மேலாக பார்த்துக் கொள்ளும் தந்தை கிடைக்க முகிலனும் போன பிறவியில் தவம் செய்திருக்கக வேண்டும்தான்.ஆனால் என் நிலைமை!! வேண்டாம், அதை நினைக்க வேண்டாம்.நினைத்தால் அழுகை தான் வரும்.அப்படி கண்ணீரைப் பார்த்தால், சார் ஏதேனும் தவறாக நினைக்கக் கூடும்” என்று நினைத்தவள்,தன்னை கட்டுபடுத்துவதற்குள், இரண்டு சொட்டு கண்ணீர் வெளியேறி அவனது கைகளில் விழுந்தன.

 

“ரொம்பவும் வலிக்குதா லாவண்யா! இதோ முடிந்துவிட்டது.” என்றவனது குரல், அவளது இதயத்தின் வலியை சுட்டிக் காட்டுவது போலவே அவள் உணர்ந்தாள். அவளது வலி என்றைக்கேனும் முடியுமா? இந்தச் சூழ்நிலையில் முகிலனின் வளர்ப்பில் வேண்டுமானால் கொஞ்சம் குறையலாம். மற்றபடி வாழ்நாளின் முழுமைக்கும் நானே விலை வாங்கிக் கொண்டு பெற்றுக் கொண்ட வலி அல்லவா. அதனால் முடிவு என்பது கிடையாது.

 

தளிர்கரங்கள் அவளது தலையை வருடியதால் அவளது நினைவுகள் கலைந்தன.முகிலன் தான் அவளது முடியைக் கோதிக் கொண்டிருந்தான்.இதுதான் என்று இனம் காணமுடியாத ஒரு சிலிர்ப்பு உடலெங்கும் பரவுவது போல் உணர்ந்தாள்.ஒரு பாட்டு… அது இருவரையும் சேர்த்து விட்டதே! இசைக்கு அப்படி ஒரு சக்தியோ!




Comments are closed here.

You cannot copy content of this page